நிகழ் அய்க்கண்
‘புக்டே டாட். காமில்’’ போர் சிதைத்த நிலத்தின் கதை எனும் தலைப்பில் தொடராக எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே “போருக்கும் அப்பால்” எனும் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலானது, நம் காலத்தின் பெரும் துயரமான ஈழத்தின் வரலாற்றுக்கால நிஜத்தை கதைகளின் வழியாகவும், கலைகளின் வழியாகவும் கண்டுணர முயற்சி செய்கிறதென ஆசிரியர் கூறுகிறார்.
முன்னுரை வழங்கியுள்ள கவிஞர் கருணாகரன் கூறும்போது, ‘‘ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய தமிழ்ப்பொது மனநிலையின் ஒடுங்கிய சித்திரத்தை இந்நூல் நெகிழ்த்த முற்படுவது மட்டுமின்றி, புதிய பன்மையப்பட்ட, மாற்றுப் பார்வைக்கோணத்தையும் உருவாக்க விரும்புகிறது. இதுதவிர, சாதிய ஒடுக்குமுறையும், இன ஒடுக்குமுறையும் தீவிரமடைந்த களமாகவும் இருக்கிறது. இலங்கைத் தமிழ்ச்சூழலில் உள்ள அடித்தளச்சாதிகளைச் சேர்ந்தோர், சாதியம் மற்றும் இனம் எனும் இரட்டை ஒடுக்குமுறைகளை முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது.

பெண்கள் எனும்போது, இவற்றோடு சேர்ந்து பெண் ஒடுக்குமுறைக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. ஆனால், ஆதிக்கச் சாதியினரைப் பொறுத்தமட்டில் இன ஒடுக்குமுறையை மட்டுமே எதிர்கொள்கின்றனர். விளிம்புநிலையினர்கள் மீது, ஆதிக்கச் சாதியினர்களானவர்கள் மேற்கொள்கிற ஒடுக்குமுறைகளை, அநீதிகளையெல்லாம் மறைத்து, இன ஒடுக்குமுறைகளை மட்டும் பிரதானப்படுத்துவதாக இருக்கின்றனர் என்கிறார்.
விளிம்புநிலையில் வாழும் மலையக மக்கள், இஸ்லாமியர், பெண்கள், தலித்துகள் உள்ளிட்டவர்களின் அரசியலைக் குறித்தும், இனப்பிரச்சனை, புலம்பெயர்வு, அகதிகள் குறித்தும், இலங்கை எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரை, ஆய்வுகள் உள்ளிட்ட 24 பிரதிகளை எடுத்துக்கொண்டு, அவற்றினைக் கூர்மையாக நூலாசிரியர் ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறார். விரிவஞ்சி, அவற்றினைச் சுருக்கமாகவும், மிகச்சுருக்கமாகவும் கீழே காணலாம்.
கே. டானியலின் ‘‘பஞ்சமர்’’ நாவல் குறித்த மதிப்புரையில், இதுவரை எழுதப்பட்ட இலக்கிய வரலாற்றுக்கட்டுரைகளை படித்துப் பார்க்கிறபொழுது, புறக்கணிப்பும், விடுபடல்களும் இருப்பதை உணர முடிகிறது. ஈழத்தின் பொதுஇலக்கிய விவாதங்களில், டேனியல் எனும் பெயரே இடம்பெறவில்லை. மிகக்காத்திரமான பங்களிப்பை ஈழ இலக்கியத்திற்கு வழங்கியிருக்கும் டேனியலை புறக்கணிப்பதிலுள்ள அரசியல் எளிமையானது. ஈழத்தில் மட்டுமல்ல, இந்திய நிலத்திலும் இறுகிப்போயிருக்கும் சாதி குறித்த தர்க்கங்கள், அரசையும், அதிகார நிழல் தாதாக்களையும் தனது ‘‘பஞ்சமர்’’ நாவலின் மூலம் கேள்விக்குட்படுத்தியவர்தான் டேனியல்.
எழுபதுகளின் ஈழ நிலத்தின் சாட்சியாக விளங்கும் இந்நாவலில் ஐந்து சேவைச்சாதிகளை உள்ளடக்கிய பஞ்சமர் என்பவர்கள் யாரென விளக்குவது மட்டுமல்லாது, சாதியும் வர்க்கமும் ஊடாடிக்கிடக்கும் காட்சிப்பகுதிகளை புனைவெங்கும் உருவாக்கியுள்ளார். பஞ்சமர்கள் எல்லோரும் வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டு, நில ஆதிக்கக்காரர்களால் சுமத்தப்பட்டிருக்கும் நுகத்தடியை உடைத்தெறிய வேண்டும் என்கிற வேட்கை, நாவலுக்குள் பீறிட்டு நிற்பதாக நூலாசிரியர் கூறுகிறார்.

ஸர்மிளா செய்யித்தின் “பணிக்கர் பேத்தி” நாவல் குறித்த மதிப்புரையில், யானை மக்காரின் பேத்தியான சகர்வான் என்பவர், தன்னுடைய நாடோடித் தந்தையையும், தாயையும் இழந்தபோது தவழும் குழந்தையாக இருந்திருக்கிறார். போரும் அரசியலும் நிகழ்த்தும் அலைக்கழிப்புக்கள், மத நம்பிக்கைகள் தரும் மனநெருக்கடிகளை எல்லாம் சமாளித்து, மாற்றுச்சமயத்தவருடன் இயைந்து வாழ்ந்து, தனது உழைப்பினால் எப்படி ஊர்மெச்ச வாழ்ந்தாள் என்பதுதான் இந்நாவலின் சுருக்கம். கதைகளினூடாக நாவலாசிரியர் விவரித்துச்சொல்லும்போது, அது, அந்த நிலத்தின் கதையாகவும், தமிழ் இஸ்லாமியச் சமூகத்தின் ஆவணமாகவும் உருப்பெறுகிறது என்கிறார்.
ஈழத்தின் சாதிமறுப்பு இலக்கியமும், தலித் இலக்கியமும் 1950-களிலேயே துவக்கம் பெற்று, பதிவாகி வந்தவற்றினையெல்லாம், “ தீண்டத்தகாதவன்” முதலான ‘‘ஈழத்து தலித் சிறுகதைகள்” எனும் தலைப்பில் ஈழப்படைப்பிலக்கியத்தின் முக்கியமான பங்களிப்பாக சுகன் தொகுத்திருக்கிறார். இதற்கான மதிப்புரையில், சாதியை ஒழிக்க வழிதேடிய அல்லது குறைந்தபட்ச சமரசத்திற்கு உட்படுத்திய மூன்று கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று காந்தியம் குறித்ததாகவும், மற்றவையிரண்டும் மார்க்சிய இயக்கங்கள் சாதியை ஒழிப்பதற்கான வழியை எழுதிச்செல்கின்றன. இதுதவிர, யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்திடம் நீண்ட காலமாக இருந்துவருகிற சாதித்துவேஷத்தையும், அதற்கு எதிரான போராட்டங்களையும் பதிவு செய்கின்றன. எல்லா முனைகளிலும் சாதியும், சாதிசார் நடவடிக்கைகளும் இந்த நிலத்தில் எப்படி நடந்தேறியிருக்கின்றன என்பதை இத்தொகுப்பு சுட்டிக்காட்டிடத் தவறவில்லை என்கிறார்.
ஜே.கே.வின் ‘சமாதானத்தின் கதை’ சிறுகதைத் தொகுப்பிற்கான மதிப்புரையில், இந்நூலானது இருவேறு புத்தகங்களால் சேர்த்துத் தைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிற்குள் அச்சமும், அதிர்ச்சியுமாக உலகின் எல்லா நிலங்களிலும் வாழ நேர்ந்த வாழ்க்கையைப் பழுதின்றி வாழ முயற்சி செய்த மனிதர்களின் கதை. ஒருவிதத்தில் இது அகதிகளாக வாழ நேர்ந்திட்ட தமிழர்களின் கதைத் தொகுதி. மற்றொன்று, மனிதர்களின் அகவாழ்க்கையின் சிக்கல்களை நிலம், மொழி கடந்து பேசிய கதைகளின் தொகுப்புதான் இதுவாகும்.
மு.சி. கந்தையா எழுதியிருக்கும் ‘குறு நதிக்கரையில்’ எனும் நாவலை முன்வைத்து எழுதப்பட்ட மதிப்புரையில், கடந்த ஆறு ஏழு தலைமுறைகளாக தேயிலை, காபி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தென்பகுதி மலையக மக்களின் வாழ்க்கைப்பாடுகள் இதுநாள்வரையிலும் குறைவாகவே பதிவாகியிருக்கின்றது. அதனை வெளிக்கொணரும் விதமாக, மலையக மக்களின் நான்காம் தலைமுறை துவங்கி ஐம்பது வருட வாழ்க்கைப் பகுதியை இந்நாவலில் வடித்தெடுத்திருப்பதாகக் கூறுகிறார்.
டொமினிக் ஜீவாவின், ’பாதுகை’ எனும் சிறுகதைத் தொகுப்பினை முன்வைத்து எழுதப்பட்ட மதிப்புரையில், சாதி குறித்தும், அதன் மூர்க்க வன்மம் குறித்தும் தமிழ் நிலத்தில் கதைகள் எழுதத் துவங்கியிருக்காத நாட்களில், அப்படியான கதைகளை எழுதியவர்தான் ஜீவா. வாசகனை சொற்களோடு பின்தொடர்ந்து வரச்செய்யும் வலிமையான கதை நகர்வு, ஜீவாவின் பதினோரு கதைகளுக்குள்ளும் இருக்கிறது. ரோட்டோரத்து துண்டுப்பீடியின் அணையாத கங்கில் கால் வைத்ததைப்போன்ற எரிச்சல் ஏற்படும் வாழ்க்கையை வாழும் மனிதர்களின் கதையே பாதுகை என்கிறார்.
மு. நித்தியானந்தன் எழுதிய ‘கூலித்தமிழ்’ எனும் ஆவணத்திற்கு எழுதப்பட்ட மதிப்புரையில், 1800களில், துவங்கி மலையகத்தின் குரலாக, இசையாக ஒலித்ததெல்லாம் அங்கிருந்த கண்டக்டர்களும், கங்காணிகளும், தோட்டத்து துரைமார்களான பிரிட்டிஷாரின் விருப்பத்தை, ஆசையை எழுதிச் சேர்த்தவையாகும். இவற்றினையெல்லாம் தேடிக் கண்டு பிடித்து, அதனில் எழுதாத பக்கங்களையும், இடைவெளிகளையும் ஆய்வாளர் ‘கூலித்தமிழ்’ எனும் ஆவணமாக உருவாக்கியிருக்கிறார்.
இலங்கையின் இடதுசாரி ஆய்வாளரும் மலையகத் தமிழருமான சதிஸ் செல்வராஜ் எழுதிய’ ‘‘குளிரும் தேசத்துக் கம்பளிகள்’’ எனும் கட்டுரை நூலுக்கு எழுதப்பட்ட ம,திப்புரையில், இந்நூலிலுள்ள எட்டுக் கட்டுரைகளும், 150 வருட மலையக மக்களின் வாழ்க்கையில் இன்றுவரையிலும் நீடித்துவரும் நிச்சயமின்மை குறித்தும், அதை நிகழ்த்திய அரசியல் சூழ்ச்சி குறித்தும் ஆதாரங்களுடன் விவாதிக்கிறது மலையக மக்கள் இவ்வளவு வருடமும் உழைத்து வருகின்றபொழுதும், அவர்களுக்கு நிலமும், போதிய வருமானமும் உறுதியளிக்கப்படவில்லை. இலங்கையில் எழுபதுக்குப்பிறகு, இடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சியதிகாரம் வந்ததின் காரணமாக, மிகப் பெரிய அளவில் நிலப்பகிர்வும், நிர்மாணத் திட்டங்களும் உருவாகின.
எஸ்.பொ. வின் ‘தீ’ எனும் நாவலுக்கு எழுதப்பட்ட மதிப்புரையில், இலங்கை நிலத்தில் நடக்கும் கதையாயினும், அது உலக மாந்தர்களுக்கான கதையுலகமாக விரிகிறது. உடலானது வெறும் அவஸ்தையின்பாற்பட்டதல்ல. உடலின் மொழியும், அதன் பிரத்தியேகச் செயலும் எந்த எல்லை வரையிலும் நகரும் என எஸ்.பொ. கூறியதை எடுத்துக்கூறுகிறார்.
இதுதவிர, போரும் ஆயுதங்களும் மனித மனங்களை எப்படியெல்லாம் நிர்மூலமாக்கிவிடுகின்றன என்பதனை விவரிக்கும் முஸ்டினின் ‘ஹராங்குட்டி’ சிறுகதைத் தொகுப்பு; முகாம்களின் சித்திரவதை பற்றி யதார்த்தனின் ‘மெடுசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் கதைத்தொகுப்பு; புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து மக்கள் கடைபிடித்துவரும் சாதியப் பாகுபாட்டினை விவரிக்கும் ஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ நாவல்; அகதி முகாம்களில் வாழும் ஈழமக்களின் வாழ்நிலை மற்றும் உளச்சிக்கல்கள் பற்றிய விஜிதரனின் ‘ஏதிலி’ மற்றும் தேவகாந்தனின் ‘விதி’ நாவல்; பசித்த வயிரோடும், உழைத்துச் சலித்த உடலோடும் வீழ்ந்து கிடக்கும் வடகிழக்குப் பிராந்திய மலையக மக்களின் வாழ்நிலைப் பற்றிய கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப்பச்சை’ நாவல்.
1828களில் கங்காணிகளால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மக்கள் தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களின் தனித்த கதைப்பாடல்களின் வழியே, அதன் வரலாற்றை அறிந்துகொள்ளும் விதமாக ஆய்வாளர் சாரல் நாடானின் ‘மலையக வாய்மொழி இலக்கியம்’ நூல் ; ஊரையே வெளுப்பாக்கிடும் வண்ணார் குடிகளின் கதைக்குள் படிந்திருக்கும் துயரங்களை விவரிக்கும் விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’ எனும் வட்டார வழக்காற்று நாவல்.
1960-1990களுக்கிடையே இஸ்லாமிய வாழ்க்கையையும், அதன் பாடுகளையும் துளித்துளியாக வெளிப்படுத்துகிற ஹனிபா எழுதிய ‘மக்கத்து சால்வை’ சிறுகதைத் தொகுப்பு; வன்னிநிலத்தின் முன் வரலாற்றினையும் அதன் சூழ்ச்சியினையும் கதையாக கடத்தப்படுவதும், இரண்டாம் பாகம் எனும் பகுதிக்குள் தீராத்துயரமாக
1990களில் நீடித்திருந்த முஸ்லிம் அழித்தொழிப்புக் கொடுமைகளை வெளிப்படுத்தும் சக்கரவர்த்தி எழுதிய ‘யுத்தத்தின் இரண்டாம் பாகம்’ சிறுகதைத் தொகுப்பு.
நான்கு இஸ்லாமியப் பெண்கள் ஒன்றுசேர்ந்து ஊருக்குச் செய்யும் நற்காரியங்களையும், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் எடுத்துச்சொல்லும் திக்குவல்லை கமால் எழுதிய ‘ஊருக்கு நாலுபேர்’ நாவல்; ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய இளைஞர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை முன்வைத்து எழுதப்பட்டுள்ள ஹஸினின் ‘பூனை அனைத்தும் உண்ணும்’ சிறுகதைத் தொகுப்பு; விளிம்பிற்கும் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் அகதிகளின் வாழ்க்கைப்பாடுகளையும், கொடுந் துயரங்களையும் காட்சிப்படுத்தும் பத்திநாதனின் ‘போரின் மறுபக்கம்’ தன் வரலாற்று நாவல்.
யாழ்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகள், கனடாவிற்கும் அலைந்த மக்களின் கதையைச் சொல்லும் செல்வம் அருளானந்தத்தின் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’ நூல்; மிகப்பெரும் வாசகப் பரவசத்தை எவருக்கும் தரக் காத்திருக்கும் ஒட்டமாவடி அறாபத் எழுதியிருக்கும் ‘புத்தரின் நிழலில்’ சிறுகதைத் தொகுப்புகளும் அடங்கியிருக்கிறது.
