வீ. பா. கணேசன்
கடந்த இரு பத்தாண்டுகளாக சின்னஞ்சிறியதொரு நூல் தமிழ் அறிவுலகத்தை உலுக்கியெடுத்து வருகிறது. அறிவூட்டும் ஆசிரியர்கள், அறிவைத் தேடும் மாணவர்களின் உலகம் அதைத் திகைப்போடும், அதிர்ச்சியோடும் படித்து வந்துள்ளது. உலகெங்குமுள்ள தமிழ் பேசும் மக்களிடையே 2 லட்சம் பிரதிகள் விற்பனையைத் தாண்டி முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த நூல், எனக்கு பத்தாண்டுகளுக்கு முன்புதான் அறிமுகமானது. கல்விப் புலத்தைவிட்டு வெகுநாட்களுக்கு முன்பே வெளிவந்துவிட்ட எனக்கு இன்றைய கல்வியுலகின் வெறுமையை, வேதனையை அதுதான் எடுத்துக்காட்டியது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பாரதி புத்தகாலயம் நாகராஜன் ‘‘அதை வங்காளியில் மொழியாக்கம் செய்து வெளியிட உதவ முடியுமா?’’ என்று கேட்டார். ஏற்கனவே சத்யஜித் ரேயின் ‘ஃபெலுடா கதை வரிசை’, ஜோதிபாசுவின் ‘நினைவிற்கு எட்டியவரை’ ஆகிய நூல்களை வங்காளியில் இருந்து மொழிபெயர்த்திருந்தபோதிலும், தமிழிலிருந்து வங்காளிக்கு மொழிபெயர்ப்பதில் உள்ள சிரமம் என்னை மலைக்கச் செய்தது.
பாரதியிலிருந்து தொடங்கி வங்காளி மொழியின் மிகச்சிறந்த எழுத்துக்கள் தமிழில் வெளிவந்துள்ளன. 1950-60களில் அது உச்சம் தொட்டது. அப்போது நேரடியாக வங்காளியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர்களில் த.நா. குமாரசாமி, த.நா. சேனாபதி சகோதரர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பின்பு 1980களில் கல்கத்தா
சு. கிருஷ்ணமூர்த்தி, 1990களில் புவனா நடராஜன் ஆகியோரும் முக்கியமானவர்கள். இந்த இருவருமே கல்கத்தாவில் நீண்ட நாள் வாழ்ந்தவர்கள்.
இவர்களில் சு. கிருஷ்ணமூர்த்தி தனித்துவமானவர். மற்ற மொழி பெயர்ப்பாளர்களைப்போல் அல்லாமல், அத்துறையில் நுழைவதற்கு வெகுநாட்களுக்கு முன்பே, தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுகதைகளை எழுதி, சில தொகுப்புகளையும் வெளியிட்டிருந்த அவர், வங்காளியிலிருந்து பெயர் சொல்லும் பல படைப்புகளை தமிழுக்குக் கொண்டுவந்ததோடு, தமிழில் இருந்து வங்காளிக்கு திருக்குறள் தொடங்கி நவீன இலக்கியத்தின் பல எழுத்துக்கள் வரை பல்வேறு இலக்கிய வடிவங்களை வங்காளி மொழிக்கு அறிமுகம் செய்த ஒரே எழுத்தாளர் ஆவார். இதற்காக வங்காளி இலக்கிய உலகில் பெரும் மதிப்பைப் பெற்றவராகவும் அவர் இருந்தார்.
என்னைப் பொறுத்தவரையில் இலக்கண ரீதியாக வங்காளி மொழியை கற்றவனல்ல; எனது தொழில்முறை அனுபவத்தில் அம்மொழியைப் பேச, படிக்க, எழுதக் கற்றிருந்தேன். அதிலும்கூட, தாகூர், சரத்சந்திரர், பங்கிம் சந்திரர், மாணிக், விபூதி பூஷண், சமரேஷ் பாசு போன்றவர்களின் மகோன்னதப் படைப்புகளை சிறுவயதில் தமிழிலும் பின்னர் ஆங்கிலத்திலும் படித்திருந்தேனே தவிர, மூல மொழியில் அல்ல. செய்தித்தாள்கள், துண்டுப் பிரசுரங்கள், சிறு வெளியீடுகள் போன்றவற்றைத் தாண்டி உயரிலக்கியத்தை நேரடியாக வங்காளி மொழியில் படிக்கவில்லை என்பதே உண்மை. அதுவே எனது நீண்ட கால வருத்தமும்கூட. எனது சுற்றுச்சூழலே இதற்குக் காரணம்.
வங்காளி மொழியில் இரண்டு வகை உண்டு. சாது பாஷா (பண்டித மொழி), சலித் பாஷா (பாமரர் மொழி). இதில் நான் மொழிபெயர்த்த சத்யஜித் ரே சிறுவர்களுக்காக எழுதிய கதைகள் மிக எளிய நடையில் பாமரர் மொழியில் இருந்ததால், என்னால் அவற்றை உள்வாங்கி தமிழில் கொண்டுவர முடிந்தது. அதேபோன்று, ஜோதிபாசுவின் ‘நினைவிற்கு எட்டியவரை’ நூலும், அவர் சொல்லச் சொல்ல வாரா வாரம் நாளிதழில் வெளியாகி பின்னர் நூலாக வெளிவந்த ஒன்றாகும். அவ்வகையில் அதுவும் பேச்சு மொழியில் இருந்ததால், என்னால் தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது.
ஆனால் தமிழிலிருந்து வங்காளியில் மொழிபெயர்க்க வேண்டுமெனில், அந்த மொழியில் இலக்கண ரீதியான பயிற்சியோடு, ஆழ்ந்த இலக்கியப் பரிச்சயமும் அவசியம் என்பதையும், இந்த விஷயத்தில் எனது பலவீனத்தையும் உணர்ந்திருந்தேன். எனவேதான் தமிழ்நாட்டிலிருந்து முனைவர் பட்ட ஆய்விற்காக விஸ்வபாரதி (சாந்திநிகேதன்) பல்கலைக்கழகத்திற்குச் சென்று, அங்கு வங்காளி மொழியில் சான்றிதழ் படிப்பை முடித்து, தற்போது டிப்ளமோ படித்து வரும் என் அருமை நண்பர் சத்தீஸ்வரன் ஞானசேகரனை இந்தப் பணியை ஏற்கவேண்டுமென கோரினேன். அவரும் என்னைப்போலவே முதலில் தயங்கினார். எனினும் வங்காளி மொழியின் அடிப்படையை இலக்கண ரீதியாகக் கற்றிருந்த அனுபவத்தோடு, அங்கு தனக்கு அறிமுகமாயிருந்த வங்காளி ஒருவரோடு இணைந்து அப்பணியை அவர் மேற்கொண்டார்.

அவரோடு இப்பணியில் இணைந்து கொண்ட ஷீர்ஷா, சாந்திநிகேதனில் பிறந்து வளர்ந்து, படித்து, தற்போது மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஓர் அரசுக் கல்லூரியில் விலங்கியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர். சாந்திநிகேதனில் தமிழ்த்துறையில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்பு மட்டுமின்றி, தமிழ்க்கல்வெட்டுத் துறையில் சான்றிதழ் படிப்பும் முடித்துள்ள வங்காளிப் பெண்ணான ஷீர்ஷா இந்நூலை மொழியாக்கம் செய்வதில் பெரும்பங்கு வகித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயமும் ஆகும். இவர்கள் இருவரும் இணைந்து வேறுபல இலக்கியப் பரிமாற்ற முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஷிர்ஷா, கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகளை வங்காளியில் மொழிபெயர்த்துள்ளார். சத்தீஸ்வரன் மல்லிகா, சென்குப்தாவின் சீதாயணம் என்ற மீள்நோக்கு நாவலை தற்போது தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மேற்கு வங்க அரசின் பங்க்ளா அகாதெமி இந்த நாவலை தமிழில் வெளியிட முன்வந்துள்ளது எனவும் அறிந்தேன்.
இவர்கள் இருவரின் மொழிபெயர்ப்புப் பிரதியை சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரான நடராஜனிடம் ஒப்பிட்டுப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர் பார்த்தது மட்டுமின்றி, சாந்திநிகேதனில் அவரது சக மாணவரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான வங்காளி நண்பரிடம் அந்தப் பிரதியைக் கொடுத்து மேலும் சரிபார்த்துக் கொடுத்தார்.
இத்தகைய முயற்சிகளுடன் இறுதிப்படுத்தப்பட்ட இந்தப் பிரதியே இப்போது கொல்கத்தாவின் புகழ்பெற்ற நூல்வெளியீட்டு நிறுவனமான நேஷனல் புக் ஏஜென்சியின் மூலம் 2023 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 15 வரை நடைபெறவுள்ள கொல்கத்தா புத்தகக் காட்சியில் வெளியாகவுள்ளது. ‘‘ஆயிஷா’’வின் தமிழ் -ஆங்கில வெளியீடுகளில் உள்ள சித்திரங்களுக்குப் பதிலாக, வங்காளி கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய ஓவியங்களைக் கொண்டதாக அது வெளிவருகிறது.
தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது, இன்றைய வங்காள சமூகத்திற்கு ‘‘ஆயிஷா’’ மிக அதிகமாகவே தேவைப்படுகிறாள் என்றே நான் கருதுகிறேன். அங்குள்ள வலுவான ஆசிரியர், மாணவர் இயக்கங்கள் இந்தப் புதிய ஆயுதத்தை எவ்வாறு பயன்படுத்தப் போகின்றன என்பதைக் காண்பதில் நானும் ஆவலாக இருக்கிறேன்.