ஸ்ரீதர் மணியன்
வந்தாரை வாழ வைக்கும் நகரம் சென்னை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுதந்திரப் போராட்டம், வர்க்கப் போராட்டம், மொழிப் போராட்டம் என பல போராட்டங்களைக் கண்ட நகரம் இது. பல மொழிகள், பல மாநில மக்கள், பலவித கலாச்சாரங்கள் சார்ந்த மண்ணாக சென்னை விளங்கிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க. மத்தியில் ஆட்சியிலிருந்தாலும் மதவாத சக்திகள் வாலட்ட முடியாத பெருநகரங்களில் ஒன்று (நூலிலிருந்து)…

வழமையாக நாம் புறக்கண்களால் பார்க்கும் காட்சிகளுக்கும் எதார்த்த நிலைகளுக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. தோழர் பாக்கியம் எழுதியிருக்கும் ‘சென்னையின் மறுபக்கம்‘ என்ற நூல் அத்தகையதொரு உண்மையான பார்வையினை வாசகனுக்கு அளிக்கிறது. நூறு பக்கங்களில் பன்னிரண்டு கட்டுரைகள் வாயிலாக அவர் சிங்காரச் சென்னை என்ற அடைமொழியினைக் கொண்டிருக்கும் நகரத்தின் அலங்கோலங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். எண்ணற்ற மக்களுக்கு வண்ணக் கனவுகளை உண்டாக்கி தன்னை நோக்கி ஈர்த்த வண்ணமிருக்கும் இந்நகரை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் பங்கு போட்டுக்கொண்டு சிதைத்துக்கொண்டிருக்கும் அவலம் இந்நூலில் விளங்குகிறது.
முதன்முதலில் என்ற பல சிறப்புகள் இம்மாநகருக்கு உண்டு.
பிரிட்டனுக்கு வெளியே உருவாக்கப்பட்ட முதல் நகராட்சி (1688) சென்னை, முதல் மேற்கத்திய பாணி மருத்துவமனை, இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் (1918ஆம் ஆண்டு) சென்னையில் தொடங்கப்பட்டது மற்றும் நாட்டில் முதன்முறையாக 1923ஆம் ஆண்டு மேதினக் கொடியினை தோழர். சிங்காரவேலர் சென்னையில் ஏற்றியது, இந்தியாவின் முதல் சிமெண்ட் தொழிற்சாலை, இலண்டன் மாநகருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே டிராம் என்னும் தொடர் வண்டி இயக்கப்பட்டது உள்ளிட்ட பல பெருமைகள் சென்னைக்கு உண்டு. இருப்பினும் இவற்றைக் கடந்து சாமானிய மக்களின் வசிப்பிடம், குடிநீர், மருத்துவ வசதிகள், போக்குவரத்து ஆகிய அடிப்படை வாழ்வாதாரங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என பாக்கியம் தனது கட்டுரைகளில் விரிவாகப் பேசுகிறார்.
சென்னை மாநகரின் வரலாற்றினை அது உருவாக்கப்பட்ட நாளிலிருந்து பாக்கியம் துவக்குகிறார்.. ‘‘முதலாளித்துவம் எங்கிருந்தாலும் அதன் இயல்பு சுரண்டல். மூலதனத்தின் மயிர்க்கால்கள் அனைத்தும் உழைப்பாளிகளின் இரத்தத்தை உறிஞ்சும் சக்தியுடையது“ என்னும் மார்க்ஸின் கருத்தை ஒட்டி 1850களில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் அல்லலுற்ற தொழிலாளர்களின் நிலைமை, முதலாளித்துவத்தின் ஏய்ப்புகள் என இப்பகுதி பேசுகிறது. பணிபுரிந்த ஆலைகளுக்கேற்ப அவர்களது பணிநேரம் 22 மணி நேரம் வரை நீண்டது குறித்தும், அவர்களது வசிப்பிடங்கள், வழங்கப்பட்ட குடிநீரின் அளவு வரை தோழர் பாக்கியம் குறிப்பிடுகிறார். இத்தகைய நெருக்கடிகள் தங்கள் பிறப்பிடத்தைத் துறந்து நகரத்தைத் தங்கள் வாழ்வாதரத்திற்காக தெரிவு செய்த உழைக்கும் வர்க்கத்தினருக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்தது. தங்களது அடிப்படை உரிமைகளுக்கான போராட்டம் 1873இல் முதலில் தொடங்கியது என நூல் பதிவு செய்கிறது.
சிம்சன் நிறுவன முதலாளியின் தந்திரமான நிபந்தனை, அதனை முறியடித்திட கம்யூனிஸ்ட் தலைவர்கள் நடத்திய பிரச்சாரங்கள் ஆகியவற்றையும் நூல் குறிப்பிடுகிறது. தோழர் வி.பி.சிந்தன் சிந்திய இரத்தம் தொழிலாளர்களின் மத்தியில் முக்கிய திருப்பத்தினை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தொழிற்சங்கங்களின் மேம்பாடு, தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் பொறுப்பேற்றல் ஆகியன குறித்தும் தோழர் பாக்கியம் தனது புத்தகத்தில் கூறுகிறார். சென்னை மாநகரின் பரப்பளவு கடந்த பத்து ஆண்டுகளில் 150 விழுக்காடு (179 ச.கி.மீலிருந்து 426 ச.கி.மீ) அதிகரித்து பிழைப்புக்காக வழித்தேடிச் செல்வோரின் எண்ணிக்கை 24 விழுக்காடு உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1929ஆம் ஆண்டின் ராயல் கமிசன் அறிக்கை அளித்த விவரத்தின்படி குடிசைவாழ் மக்களின் விழுக்காடு 33 ஆகும். இன்று அது 40 சதவீதமாக இருக்கிறது. 375 ஆண்டுகள் கடந்த போதிலும் எவ்வித மாறுபாடும், முன்னேறமுமின்றி அது நிலைத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் குறைந்த ஊதியத்திற்குப் பணியாற்றி வரும் எண்ணற்றோரும் நிறைந்து காணப்படும் அவலத்தினையும் பாக்கியம் பதிவு செய்துள்ளார்.

இக்கட்டுரையின் முதல் பக்கத்தில் சுட்டிக்காட்டப்ட்ட நாட்டின் முதலிடப்பட்டியல் சிறப்புகளில் பின்வரும் ‘பெருமையும்‘ சென்னை நகரம் பெற்றுள்ளது. அது எதுவெனில் உலகின் 47 பெருநகரங்களில் நடைபெறும் சாலை விபத்துகளில் மரணமடைவோரின் எண்ணிக்கையில் நமது சென்னை நகரமே முதலிடம் வகிக்கிறது என்பதே அது. இந்தப் புள்ளிவிவரத்தினை GLOBAL REPORT OF URBAN HEALTH – UN தருகிறது. சாலை விபத்துகளில் மரணிப்போர் அதனை விதி என்று கூறித் தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் அவை விதிமீறல்கள் மற்றும் நிர்வாகம் விதிமுறைகளை முறைப்படி நடைமுறைப்படுத்தாதன் விளைவே.
மேலை நாடுகளில் நடைமேடையில் நடப்போர் சாலையைக் கடக்க இறங்கிய தருணம் போக்குவரத்து நிறுத்தப்படுவதைக் காணலாம். பொதுமக்களின் உயிருக்கு அத்தகையதொரு மதிப்பு அங்கு தரப்படுகிறது. நம் நாட்டில் போக்குவரத்தின் அடர்த்தி அதிகம், போக்குவரத்தினை நிறுத்த நடைமுறை சாத்தியங்கள் குறைவு. இருப்பினும் வேகத்தின் அளவினை நிர்ணயித்து மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம். இந்நூலில் தி.நகரின் பேருந்து நிலையம் குறித்த கட்டுரை மிக்க அச்சத்தினை மட்டுமல்லாது வேதனையையும் உண்டாக்குவதாக உள்ளது.
நாற்பது பேருந்துகளை நிறுத்த மட்டுமே பரப்பு கொண்ட இந்நிலையத்தில் 84 பேருந்துகள் உள்ளன. கூடுதலாக வந்து செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை 400. இப்பேருந்துகள் 2290 முறை செல்கின்றன என்னும் விவரமே அச்சத்தினை உண்டாக்குகிறது. இவை தவிர பயணம் செய்ய வந்து செல்வோரின் எண்ணிக்கையினையும் கவனத்தில் கொள்ளவேண்டும். போக்குவரத்து நிர்வாகம் ஓட்டுநர்களுக்கு டீசல் சிக்கனத்திற்காக 5.5 கி.மீ. அளவீடாக நிர்ணயம் செய்து அளிக்கும் கடும் அழுத்தமும் மட்டுமல்லாது பேருந்துகளின் பிரேக் பிடிக்கும் திறனை 70 விழுக்காட்டிலிருந்து 30 – 35 விழுக்காடு அளவிற்கு குறைத்து வைத்திருப்பதும் இத்தகைய விபத்துகளுக்கு காரணமாவதையும் கட்டுரை கூறுகிறது. கடும் இடப்பற்றாக்குறையும் மக்களுக்குப் பெரும் தீங்காக மாறுவதுடன் தி.நகர் நிலையத்தின் விபத்துப் பட்டியலையும் இக்கட்டுரை கூறுகிறது. “ஏதோ ஆக்சிடென்ட்டாம்‘ என்ற வாக்கியங்களுடன் அது கடந்து போய் மறைந்திடும் எதார்த்தத்தினையும் தோழர் பாக்கியம் பதிவாக்கியுள்ளார்.
அடுத்ததாக சென்னை மாநகராட்சியின் பசுமைப் புரட்சி குறித்து பல தகவல்களை முன்வைக்கிறார் பாக்கியம். காற்று மாசு, வெப்பமயமாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பூங்காக்களை நிர்வாகம் அமைத்தது. இருப்பினும் இவற்றுடன் இணைந்த நடைமேடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதனால் இவற்றை எளிய மக்கள் பயன்படுத்தவியலாத நிலை உள்ளது. நகரின் 554 பூங்காக்களை தனியாருக்குத் தாரை வார்க்க நகராட்சி கூறும் காரணம் ஊழியர்கள் பற்றாக்குறை என்பதாக உள்ளது. இவற்றை பற்றி இப்பகுதியில் காணலாம்..
மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட இவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதால் மக்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவற்றைப் பயன்படுத்த முடியும். மேலும், குறிப்பிட்ட ஒருவருக்கே இந்த ஒப்பந்தத்தை அளித்துள்ளது பல வினாக்களை எழுப்புவதாக உள்ளது. கூடுதலாக OSR – OPEN SPACE RESERVED எனப்படும் இடங்கள் குறித்தும் பாக்கியம் இப்பகுதியில் குறிப்பிடுகிறார். இது குறித்த செய்திகள் எளிய மக்கள் அறிய வாய்ப்பற்றவை. இவை எவ்வாறு பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகின்றன என்ற தகவல்கள் உள்ளன. மேலும், மாடம்பாக்கம் பேரூராட்சியின் தகிடுதத்தங்கள் குறித்த கட்டுரையும் முக்கியமானது.
பொதுப்பணித் துறையும், பேரூராட்சியும் இணைந்து இத்திட்டத்திற்கான தீர்மானம் இயற்றியதனை இரகசியமாக வைத்துக் கொண்டு பணிகளைத் துவங்கியுள்ளன என பாக்கியம் தெரிவிக்கிறார். இக்கட்டுரை தண்ணீர் வியாபாரம், மண் வியாபாரம், நில ஆக்ரமிப்பு என மும்முனை ஆதாயங்களைக் கொண்டே துவக்கப்பட்டுள்ளதனை அப்பட்டமாக பல புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மிக விரிவாக வாசகனின் பார்வைக்கு ஆசிரியர் வைக்கிறார்.
அது மட்டுமல்லாது பெருநிறுவனங்களின் மருத்துவமனைகளின் அலட்சியம், பணம் பறிக்கும் போக்கு, அரசு மருத்துவமனைகளில் காணப்படும் கவனமின்மை, ரியல் எஸ்டேட் மாபியாக்கள், குடிநீர் லாரிகளின் கண்மூடித்தனமான வேகம், அதன் விளைவுகள், பெருநிறுவனங்களின் நில அபகரிப்பு, அதற்கான குதிரை பேரங்கள் என பன்முகப்பட்ட கட்டுரைகளை நூலாசிரியர் இணைத்துள்ளார். அரசின் பல கனவுத்திட்டங்களும், கவர்ச்சிமிக்க அறிவிப்புகளும் எவ்வாறு மக்களுக்குப் பயனாகாது தோல்வியுற்றன என்பதும் அதன் பின்ணணியில் உள்ள அரசியலையும் ஒருங்கே இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. எவ்வாறிருப்பினும் இயக்கமும், இயக்கத் தோழர்களும், மகளிர் அமைப்புகளும் சோர்வடையாது தொடர்ந்து மேற்கொண்டுவரும் தொடர் நடவடிக்கைகள், போராட்டங்கள் குறித்தும் இதில் காணலாம்.
தோழர் பாக்கியம் இந்நூலில் அளித்துள்ள தரவுகள் வாசிப்போரை மலைக்க வைப்பதுடன் பிரமிப்பினையும் அளிக்கவல்லதாக உள்ளது.. புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட இவற்றை அவர் எங்ஙனம் பெற்றிருக்கக்கூடும் என்பதும் கட்டாயம் இங்கு குறிப்பிடப்படவேண்டிய கூறாகிறது. அதற்காக அவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது உறுதி. கட்டுரை நூல் என்பதாக பொத்தாம் போக்காக இதனை ஒதுக்கிக் கடந்து சென்றுவிட இயலாது. சென்னை மாநகரின் வரலாறு, தகவல்கள், இயக்கத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், தொண்டர்கள் மற்றும் இயக்கம் முன்னெடுத்துச் சென்ற போராட்டங்கள் என இப்புத்தகம் பரந்துபட்ட பார்வையினைத் தந்துள்ளது திண்ணம். இந்நூலினை, பாரதி புத்தகாலயம் பதிப்பித்து பொதுவுடமை இயக்கத்திற்கும் தனக்கும் பெருமை தேடிக்கொண்டுள்ளது.