ஆயிஷா. இரா. நடராசன்
கேட் மோசே எழுதிய ‘வாரியர் குவீன்ஸ் அண்டு கொயட் ரெவலூஷனரீஸ்’ 2022ல் வெளிவந்த நூல்களில் அதிக கவனம் பெற்ற தரவரிசையில் முதலிடம் பிடித்தது பெரிய ஆறுதல். உலகமே மெஸ்ஸி மெஸ்ஸி என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தபோது கால்பந்தாட்டம் பெண்களுக்கான விளையாட்டாக எப்படி வரலாற்றில் கண்டு பிடிக்கப்பட்டது என்பதை அணு அணுவாக நிரூபித்த ஒப்பற்ற பதிவு.

இந்த ஒரு புத்தகம் என்னை உறங்கவிடாதது மேற்கண்ட விஷயத்தால் அல்ல… பல லட்சம் நூலகங்களை அமைத்த மனித குலத்தின் ஈடு இணையற்ற வாசிப்பு மேதையாக ஒரு எழுச்சிப் பெண்மணி எப்படி திகழ்ந்தார் என அறிந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி அமெரிக்காவைத் தாக்கும் சூறாவளி- குண்டுகளைவிட அதிக வீர்யமிக்கது. உலக நூலகத்துறையின் தந்தை என்று யாருமில்லை… தாய்தான்.
உலக வரலாற்றைப் புரட்டும்போது பெண்கள் நூலகத்திற்குள் நுழைந்திட நிகழ்த்திய பிரமாண்ட போராட்டங்கள் பற்றி அதிகப் பதிவில்லை. எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நியூயார்க், புரூக்ளின், டெட்ரியாட், சிக்காகோ என்று பயணிக்கும் கருப்பினப் பெண்களுக்காவே பிரத்யேக பிரீ பிளாக் உமன்ஸ் லைப்ரரி (உலகில் பெண்களுக்காகவே Free Black Women Library) அதிலும் கருப்பின பெண்களுக்காவே செயல்படும் முதல் நூலகம் என்று கோவை ஜேன்சன் கல்லூரியில் மாணவர் சந்திப்பின்போது கலந்துரையாடலில் குறிப்பிட்டேன்.
வழக்கம்போல் ஓர் அதிர்ச்சி… ஜெஸ்ஸி ஸ்ட்ரீட் நூலகம் என்ற ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ளதை மாணவி ஒருவர் (பெயர் ஏதோ கேதரின் என்று முடியும்) சுட்டிக் காட்டினார். அப்புறம் தேடியபோது மொத்தம் சர்வதேச அளவில் ஒன்பது தேசிய நூலகங்கள் முழுக்க முழுக்க பெண்களின் வாசிப்புக்காவே-மகளிர் நூலகமாய் இருப்பது அறிந்து வியந்தேன். நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா… பெண்களுக்காவே ஒரு நூலகமா? பிரத்யேக
மகளிர் பேருந்துபோல.. இது தேவையா என்றுகூட உங்களுக்குத் தோன்றலாம். செத்து செத்து உயிர் பிழைத்து எழுந்த பல சந்ததிகளின் எழுச்சித் தேடல் சத்தமின்றி ரத்த யுத்தங்களால் இந்த நூலக வரலாறைப் படைத்துள்ளதே உண்மை.
நூலகம் என்கிற வாசிப்புச் சாலைக்குள் நுழைவதற்கு பெண்கள் ஏறக்குறைய ஐநூறு வருடங்கள் போராடினார்கள். பித்தாகரஸ் காலத்தில் க்ரோட்டான் பிராந்தியத்தைச் சேர்ந்த தியானோ எனும் பெண் நடத்திய ரகசிய நூலகம் பற்றிய ரத்த வாடை வீசும் கிசுகிசுக்கள் கணித வரலாற்றில் உண்டு. அதேபோல நூலகத்திலேயே வாழ்ந்த சரிப்பாஷியா நடத்திய போராட்டங்கள் ஒன்றா, இரண்டா. அவரது வாசிப்பையும் அறிவுவீச்சையும் சகித்துக் கொள்ள முடியாமல் உடலை துண்ட துண்டமாக வெட்டி சாய்ந்த வெறியர்களுக்குத் தெரியாது அவரே ஒரு நூலகம் என்பது.
ஆனால் இசுலாமியப் பெண்மணியான பாத்திமா அல்ஃபிரி கி.பி. 859ல் அமைத்த மொராக்கோவின் அல்-குவாராவியின் பல்கலைக்கழக நூலகம் என்பதுதான் பாரபட்சமின்றி அனைவருக்காகவும் திறந்துவிடப்பட்ட முதல் நூலகம் என்கிறது வரலாறு. அதுவரை அமைக்கப்பட்ட அலெக்சாந்திரியா முதல் உங்கள் நாளந்தா வரை எங்குமே பெண்களுக்கு இடம் கிடையாது. பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் குப்பனோ, சுப்பனோ நுழைய முடியாது. மேல்சாதி, மேட்டுக்குடி- கற்கும் உரிமை பெற்ற சமூகத்தினர் மட்டுமே அவற்றிற்குள் நுழைய முடியும். மொராக்கோவின் அல்-குவாரசியின் எனும் பல்கலைக் கழகமும் நூலகமும் வேறுவேறு அல்ல. இப்போதும் முழு பயன்பாட்டில் இருக்கும் நூலகம் அது. முதல் பொது நூலகம் ஓர் இசுலாமியப் பெண் அமைத்தது. அவரே அதன் நூலகராக இருந்திருக்கிறார். தாலிபான்கள் கவனத்திற்கு உலகின் முதல் பொது நூலகர் ஓர் இசுலாமிய பெண்.
ஆனால் லட்சக்கணக்கான நூலகங்களை ஸ்தாபித்து அதற்காகவே பிரமாண்டமான போராட்டத்தை நடத்தி தன் வாழ்வையே அர்ப்பணித்த நதேழ்தா குரூப்ஸ்கயாவை அறிந்தபிறகு நூலகர் என்பதே ஒரு பெண் பால்தான் என்று நான் முடிவு செய்தேன். புரட்சியாளர் லெனினின் துணைவியார் என்றும் சோவியத் புரட்சியில் பங்கெடுத்தவர் நாட்டின் துணை கல்வி அமைச்சராக இருந்தவர் என்கிற அளவுக்கு நான் அவரை அறிந்திருந்தேன். ஆனால் கல்லூரி இறுதி ஆண்டுகளில் அறிவொளி இயக்கத்தின் மூலம் பாவ்லோ பிரையரேவின் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்விமுறை எனக்கு நதேழ்தா அம்மையாரை அடிக்கோடிட்டுக் காட்டியது.

மக்கள் யாவரையும் எந்த பாரபட்சமும் இன்றி எழுத்தறிவு பெற்றவர்களாக்கிட சோஷலிச அரசுகள் பல வழிமுறைகளை கடைபிடித்தன. சீனாவின் பிரமாண்ட கலாச்சாரப் பயணமும் பாவ்லோ பிரையரே காட்டும் விமர்சனப்பூர்வ மக்கள் வகுப்புகளும் அவற்றில் அடங்கும். ஆனால் வரலாறு என்றுமே கற்பனை செய்தும் பார்க்க முடியாத வழியை தோழர் நதேழ்தா சோவியத்தில் தேர்ந்தெடுத்து துரிதமாக செயல்படுத்தி உலகையே மாற்றினார் என்பது எத்தனை பெரிய சாதனை. அது என்ன வழி… யார் இந்த தோழர் நதேழ்தா.
நதேழ்தா செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் வறுமைக்கு நடுவே பிறந்தவர். தந்தை அந்தக் கால ஜார் மன்னனின் ராணுவ அதிகாரியாக இருந்து அப்பாவி மக்களை கொடுங்கோலன் ஜார் கொலைக்கு ஏவிட, அதை மறுத்தபடியால் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர். பிறகு கூலிவேலை, தாயார் தன் கடும் வறுமைக்கு நடுவே அவரை ஓபோலென்ஸ்கி எனும் ஜிம்னேஷியப் பள்ளியில் படிக்க வைத்தார். அதிகம் பேசாத ஆனால் பல விசயங்களில் தனக்கென்று அழுத்தமான தீர்மானங்களை கொண்டிருந்த நதேழ்தாவுக்கு சக மாணவர்களைவிட தன் ஆசிரியர்களிடமே அதிக நட்பு பூத்தது.
இதன்மூலம் தன் வகுப்பு, பாட எல்லைகளைக் கடந்து பல புத்தகங்களின் ராணியாக அவர் வலம் வந்தார். வறுமையின் உச்சத்தில் தன் சக பள்ளி மாணவர்களுக்கே வீட்டில் வகுப்பெடுத்து அதன் மூலம் கல்விக்குள் நுழைந்தவர் அவர். நதேழ்தா குரூப்ஸ்கயா தன் பள்ளிப் பருவத்திலேயே கல்வி விமர்சகர் ஆனார். டால்ஸ்டாயின் கல்வி முறை எனும் அவரது இளமைக்கால கட்டுரை உங்களுக்கு இப்போதும் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது. நம்ப முடியாத அவரது கற்போர் மைய அணுகுமுறை திகைக்க வைக்கிறது.
குரூப்ஸ்கயாவை பொறுத்தவரை கற்பிப்பவர் என்று யாருமே இல்லை. அவரவர் சுயதேடல் மூலம் இலக்குகளைத் தீர்மானித்து கற்றலில் ஈடுபடுகிறார்கள். டால்ஸ்டாயின் மறுசீரமைப்பு போதாது என்பது அவரது வாதம். கற்பிப்பவர் என்று ஒருவர் கல்வியில் தொடரும் வரை எதைக் கற்பிக்க வேண்டும்… யாருக்கு எதைக் கற்பிக்கக்கூடாது என்பதையும் அதிகார வர்க்கம் முடிவு செய்யும் நிலையே தொடரும்.
கற்றலை சாத்தியமாக்கும் அமைதியான ஊக்குவிப்பாளரே தேவை. ஆனால் தனது சுய கற்றல் கோட்பாட்டை அவர் செயலில் காட்டி நினைத்தபோது பல கற்றல் குழுக்களில் இணைந்தார். இதன் மூலம் விரைவில் மார்க்சிய சித்தாந்தம் அவரை லெனினோடு இணைத்தது. தோழர் ராபர்ட் கிளாசனுடன் இணைந்து வெகுஜன கற்றல் பள்ளி எனும் ஞாயிறு தொழிலாளர் கற்றல் சாலைகளை ஏற்படுத்தினார் குரூப்ஸ்கயா. அங்கே அவருக்கு கிடைத்த அனுபவங்களே பிற்கால சோவியத் வெகுஜன கல்வியாளராக அவரை மாற்றியது.
தோழர் லெனினும் சரி, குரூப்ஸ்கயாவும் சரி தங்களது சொந்த வாழ்வின் அன்றாட அனுபவங்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளவில்லை. 1896ல் சைபீரிய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ஞாயிறு தொழிலாளர் கற்றல் சாலைகளை நடத்திய குற்றத்திற்காக ஊஃபாவுக்கு நாடு கடத்தப்படுவதாக அறிவித்தார்கள். ‘இஸ்க்ரா’ இதழும் மக்கள் இயக்கமுமாக வாழ்ந்த லெனினும் குரூப்ஸ்கயாவும் குழந்தைகூட பெற்றுக் கொள்ளவில்லை. சிறைச்சாலையை தன் கல்விச் சோதனைகளில் ஈடுபடுத்த அவர் தவறவில்லை. அது அவ்வளவு எளிதல்ல. சக சிறைவாசிகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்ததற்காக கொடூர சிறைக் காவலாளிகளால் குரூப்ஸ்கயாவின் தோழி ஷா ஷா எரித்தே கொல்லப்பட்டார்.
1905ல் முதல் புரட்சி தோல்வி கண்டபோது பிரான்ஸ் நாட்டில் ஒரு பக்கம் ரகசியமாய் வந்துகொண்டிருந்த ”இஸ்க்ரா இதழ்” பணி… மறுபுறம் கட்சிப்பணிகள். இவற்றிடையே பிரான்ஸில் பணிபுரிந்த பள்ளியில் மூன்று வகுப்பறைகளை முழுதும் நூலக வகுப்பறைகளாக மாற்றி 117 பிள்ளைகளை தனது நூலக – கற்றல் கோட்பாட்டின் வாழும் சாட்சியங்கள் ஆக்குகிறார். 1917 அக்டோபர் புரட்சியில் அனாடாலி லுனசார்ஸ்கியின் தலைமையில் ஒரு புரட்சிப் பெண்மணியாக களம் கண்ட அந்த வீராங்கனை படுகாயங்களுடன் மருத்துவமனை சென்று குணமாகி சோவியத் அரசின் துணை கல்வி அமைச்சரானபோது உலகம் எதிர்பார்த்திருக்காது, குரூப்ஸ்கயா- புரட்சி அப்போதுதான் தொடங்குகிறதென்று.
புரட்சி மூலம் அனைவருக்குமான சோஷலிச அரசு சோவியத் மண்ணில் காலூன்றியபோது அந்த நாட்டின் எழுத்தறிவு 19 சதவிகிதம் மட்டுமே. பெண்களில் ஒரு சதவிகிதம்கூட கற்றவர் இல்லை. 1918ல் மக்கள் கல்வி எனும் சட்டத்தின் மூலம் அனைத்துப் பள்ளிகளும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. லிக்பெஸ் (likbez) எனும் கல்வி இயக்கத்தை தொடங்கினார்கள். போல்ஷிவிக் கல்விக் கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டது. எட்டு வயது முதல் 50 வயது வரை உள்ள யாவரும் அவரவரது மொழியில் எழுத்தறிவை பெறுதலே கொள்கை. அதனை முழுமையாய் அடைந்திட குரூப்ஸ்கயா நூலகக் கல்வி முறையை கையிலெடுத்தார்.
முதலில் 40,000 கற்றல் நூலக மையங்களை நாடு முழுவதும் ஏற்படுத்திட அரும்பாடு பட வேண்டி இருந்தது. ஒரே ஒரு பெரிய டெண்ட் கொட்டகைதான் அது… அங்கே எப்படி வேண்டுமானாலும் அமரலாம்.. அவரவர் விரும்பிய வேகத்தில் கற்கலாம். 24 மணி நேரத்தில் எப்போது நேரம் வசதியாக உள்ளதோ வரலாம். பிறகு நூலக மையங்களின் எண்ணிக்கை 80,000 ஆனது. முதல் படி நிலையில் கற்றல் கற்பித்தலை அடைந்திருந்த பெண்கள் அடுத்த 40,000 நூலக மையங்களில் பொறுப்பாளர்கள் ஆனார்கள்.
பாக்குவில் 1920ல் உலகின் முதல் நூலகர் மாநாட்டைக் கூட்டினார் குரூப்ஸ்கயா. நார்க்ரோம் போர்ஸ் (Narkom pros) எனும் கற்றல் குழுக்களை வாசிப்பு இயக்கமாக்கி மேலும் 40,000 நூலக மையங்களை உருவாக்கி சோவியத் கல்விப் புரட்சி என்பது வெறும் கையெழுத்துப் போடுவது, பெயரை தன் மொழியில் எழுதத் தெரிவது, பெரிய எழுத்துக்கள் பொறித்த பதாகை வாசித்துக் காட்டுவது என்பதைக் கடந்து புத்தக வாசிப்பு மற்றும் நிஜமான கல்வி மேம்பாடாக்கிய பெருமை குரூப்ஸ்கயாவின் நூலகக் கல்விக் கொள்கையையே சாரும்.
நாடெங்கும் எழுச்சியோடு கிளம்பிய வாசிப்பு இயக்கங்களை ஊக்குவித்து அவற்றுக்கு ‘தீனி’ போடவே சோவியத் நாடு 1,212 பதிப்பகங்களை நடத்தியது. மக்கள் பதிப்பகம், மீர் பதிப்பகம், ராதுகா பதிப்பகம் என்பதெல்லாம் நாம் அறிந்த சிலவே ஆகும். பிற்காலத்தில் சோவியத் நாட்டிலேயே சென்று பணி செய்த நம் தொ.மு.சி.ரகுநாதன் போன்ற தோழர்களின் அனுபவங்களை வாசிக்கும்போது ஒவ்வொரு மொழிக்கும் வீதிதோறும் நூலகம் அமைத்த குரூப்ஸ்கயாவின் தீவிர கற்றல் இயக்கம் பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை. உலகெங்கும் நூலகம் ஒரு இயக்கமாக மாறியது அதனால்தான்.
குரூப்ஸ்கயா நூலகத்துறைக்கு கொடுத்தது நூலக மாநாடுகள் (Library Congress) மட்டுமல்ல, சோவியத் புத்தகங்கள் லட்சக்கணக்கில் அச்சாகி நாடு முழுதும் மக்கள் வாசிப்பிற்காக வீதி- நூலகங்களுக்கு அனுப்பப்பட்டபோது அவர் செய்த அற்புதம் ஒன்று வரலாறானது. ஒரு புத்தகம் ஒரு எண் என்பதே அது. நாட்டில் எங்கு சென்றாலும் எல்லா நூலகத்திலும் ஒரு குறிப்பிட்ட புத்தகம், ஒரு குறிப்பிட்ட எண்ணால் மட்டுமே குறிக்கப்படும். 999 என ஒரு நூல் அறியப்பட்டால் நாடு முழுதும் அதுவே. இதைத்தான் உலகம் பிற்காலத்தில் ஐ.எஸ்.பி.என். எண் என்று பொது எண் முறையாக்கிக் கொண்டது. பள்ளிகளில் அவர் நூலகம் அமைக்கவில்லை. நூலகங்களுக்கு உள்ளே அவர் பள்ளிகளை அமைத்தார். ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த கல்வி அறிவை எட்டிட முதலில் பெண்களை வாசிக்க வைப்பதே அவரது அணுகுமுறை.
பிரமாண்ட மாகாண நூலகங்கள் எங்கே தொடங்கி, எங்கே முடிகிறதென்றே கண்டுபிடிக்க முடியாது என்று பிற்காலத்தில் தனது சோவியத் விஜயம் குறித்து தோழர் சிங்காரவேலர் பதிவு செய்கிறார். அவைதான் அன்றைய சோவியத் உயர் கல்வி நிலையங்கள். வாசிப்பே கற்றல் என்று குரூப்ஸ்கயாவின் தீவிர இயக்கப்படி, 1924ல் தலைவர் லெனின் மறைவிற்குப் பிறகும் அயராது மேலும் தீவிரமடைந்த அவரது நூலகப் புரட்சி மூன்று லட்சம் நூலகர்களை கற்றல்- தேவதைகளாக சோவியத் முழுதும் பயிற்சி தந்து நியமித்து 1939 வரை தொடர்ந்தது. உலகிலேயே ஒரு நூலகத்தில் உயிர் துறந்த மேதை எனும் ஒப்பற்ற புகழோடு குரூப்ஸ்கயா மாஸ்கோ லெனின் நூலகத்தில் – நூலக தேவதைகளின் பயிற்சி வகுப்பின் இடையில் உலகைப் பிரிந்தார்.
சிறார்களின் கனவுத் தொழிற்சாலைகளாக நூலகங்களைக் கட்டமைத்து கற்றலின் புதிய விடியலைச் சாதித்த குரூப்ஸ்கயா- இன்று அவர்கள் விரும்பி ருசிக்கும் ஒரு சாக்லேட்டின் பெயரும்கூட இன்றும்கூட ரஷ்யாவில் நூலகர் என்றால் அது பெண்பாலையே குறிப்பது குரூப்ஸ்கயாவின் பிரமாண்ட பங்களிப்பினால்தான்.