மயிலம் இளமுருகு
மானிட வாழ்வைப் பேசுகின்ற நாட்டுப்புறவியலும், மானிடவியலும் கள ஆய்வு சார்ந்த துறைகளாகும். இவ்விரண்டிலும் கள ஆய்வு முக்கியமானதாகும். ஏனெனில் கதைகள், பாடல்கள், கதைப்பாடல்கள், பழமொழி, விடுகதை, நாட்டுப்புறக்கலை, தெய்வங்கள், நம்பிக்கை, பழக்கவழக்கங்கள் இவையனைத்தும் தொன்றுதொட்டு வாழையடி வாழையாக இருந்து வருகின்றன. இவைகளைச் சேகரித்தால்தான் இத்துறையில் ஆய்வு மேற்கொள்ள முடியும்.

எந்தக் களப்பணியும் துவங்குவதற்கு முன்பு திட்டக்களப்பணி செல்லக்கூடிய இடங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பதற்கிணங்க ஜே.ஆர்.இலட்சுமி அவர்களது ஜவ்வாது மலைக்கிராமங்களில் உள்ள புதூர் நாடு உள்ளிட்ட 32 கிராமங்களை உள்ளடக்கியதாக தன்னுடைய ஆய்வு எல்லையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு ஆய்வினை மேற்கொண்டுள்ளார். இக்கட்டுரை அவர் எழுதியுள்ள “ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியினர் மக்களின் வாழ்வும் மொழியும்” என்ற நூலைப் பேசுவதாக அமைகிறது.
மலையாளி
மலையாளிப் பழங்குடி மக்கள் தமிழகத்தில் சேலம், வேலூர், கடலூர், திருச்சி, மாவட்டங்களில் சேர்வராயன் மலை, கொல்லிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் பழங்குடியினர் மலையாளிகள் ஆவர். ஆய்விற்கு எடுத்துக்கொண்ட 32 கிராமங்களிலும் வாழ்பவர்களில் 100% பேரும் மலையாளிகளாகவே உள்ளனர். வெளிநபர் யாரையும் அங்கு நிலம் வாங்கி குடியிருக்க அனுமதிப்பதில்லை. இவர்கள் இம்மலைகளின் பூர்வகுடிகள் அல்லர். பாதியில் வந்தவர்களாகவே சொல்லப்படுகின்றனர். ஜவ்வாது மலை மலையாளிகளின் பூர்வீகம் பற்றி பல்வேறுபட்ட கதைகள் உள்ளன. அதனுள் பழைமையான காஞ்சிபுரம் கதையினை விளக்கி பக்கம் 24- 25 இல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
ஊர் அமைப்பு
இந்நூலாசிரியர் கள ஆய்வு மேற்கொண்டு கூறியுள்ள செய்திகளின் மூலமாக ஊரின் அமைப்பினை அறிய முடிகின்றது. கீழுரில் கோயில் வீடுபோல அமைக்கப்பட்டு பல வண்ணங்களும் பூசி அழகிய கலைநயத்துடன் காணப்படுகின்றது. கோம்பை கிராமம் மிகுந்த பசுமை நிறைந்த பகுதியாகும். இது வயல்வெளியால் சூழப்பட்டுள்ளது. நெல்லிவாசல் என்னும் கிராமம் செழிப்பான மலைப்பகுதியென்றும் எங்கும் பச்சைப்பசேல் என்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நெல்லிவாசல், நெல்லிப்பட்டு இரண்டு ஊர்களும் ஒரே மாதிரியாகக் காணப்படுகின்றன. சுற்றிலும் வாழை, பலா, மா மரங்களுடன் பிற மரங்களும் அடர்ந்து நடுவில் வீடுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. சேம்பறை என்னும் கிராமம் வளம் நிறைந்த தோட்டங்களுடன் முக்கனிகளும் சூழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நெல்லிப்பட்டு என்னும் கிராமத்திற்குச் செல்லும் வழி, கற்களால் அமைந்துள்ளது. இவ்வூருக்குச் செல்ல பேருந்து வசதியோ, வாகன வசதியோ கிடையாது. கிளானூரில் நல்ல பயிர் வளமுள்ளது என இவ்வாறாக ஊரின் அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.
வீடுகள்
இம்மலைப்பகுதியில் வீடுகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன, வீட்டில் என்னென்ன பொருட்களை வைத்திருந்தார்கள் என்று பார்க்கும்போது கீழுர் வீடுகளில் தானியங்களைச் சேமித்து வைப்பதற்கென தொம்பை வைக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு முன்பாக நிலத்திலிருந்து கொண்டுவந்த கடுக்காய் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மலையாண்டிப்பட்டி என்னும் கிராமத்தில் ஓடு, தகரம், குடிசை வீடுகள் அமைந்துள்ளன. இவர்கள் வீட்டைச் சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்கின்றனர்.
சின்னவாட்டானூர் கிராம மக்கள் தங்களுடைய புழங்குப் பொருட்களை, கூடை, துடைப்பம் என்பனவற்றை வைக்க வசதியாக பரண் அமைத்து வீட்டினைக் கட்டியுள்ளனர். தங்களுடைய வயலின் அருகிலேயே வீட்டினை அமைத்துள்ளனர். சேர்க்கானூர், கோவிலூர் கிராமங்களில் குடிசை, கல் கட்டிட வீடுகளும் உள்ளன. கம்புக்குடி என்னும் கிராமத்தில் உள்ள வீடுகளில் அழகான தூண்கள் அமைக்கப்பட்டு கதவுகள் நல்ல உரத்துடனும் சமையலறை தனியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி
மலைக்கிராமங்களில் பள்ளி செயல்படுகின்ற விதம் ஆய்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. புதூர், நாடு என்னும் கிராமத்தில் வனத்துறை மேல்நிலைப்பள்ளி உள்ளதென்றும் அதன் வளர்ச்சி பற்றியும் கூறப்பட்டுள்ளது. பள்ளியின் கட்டிடத்திற்குப் பெயர் வைத்துள்ளவிதமும் இப்பள்ளி குறித்தும் விரிவாக இந்நூல் எடுத்துரைக்கின்றது.
ஆரம்பப்பள்ளி கொண்ட ஊர்களாக சித்தூர், மேலூர், மலையாண்டிப்பட்டி, பழைய பாளையம், ரங்கசமுத்திரம் போன்றவை உள்ளன. இங்கு இரு வகுப்பறை கொண்ட கட்டிடங்கள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளன. நடுநிலைப்பள்ளிகள் மேல்பட்டு, தகரக்குப்பம், போன்ற இடங்களில் அமைந்துள்ளன. வசந்தபுரம் என்னும் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி உண்டுஉறைவிடப் பள்ளியாக செயல்படுகின்றது. உயர்நிலைப் பள்ளிகள் புலியூர், நெல்லிவாசலிலும் அமைந்துள்ளன. நடுவூரில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது.
அரசுத் திட்டங்கள்

இவ்வூர்களில் அரசுத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்ற நிலை குறித்து நூலாசிரியர் விளக்கியுள்ளார். எல்லாக் கிராமங்களிலும் காடு வளர்ப்புத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், குழந்தைகள் வளர்ப்புத்திட்டம், குழந்தைகள் மையம், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, பட்டுப்பூச்சிப் பண்ணை, நியாய விலைக்கடை, புது வாழ்வுத் திட்டம், ஊராட்சி அலுவலகம், கிராமக் குடிநீர்த் திட்டம், நூறூ நாள் வேலைத் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் என வளர்ச்சிக்கான திட்டங்கள் அனைத்தும் உள்ளன.
நெல்லிவாசல் என்னும் கிராமத்தில் தமிழ்நாடு அரசு வனத்துறை, சுற்றுச்சூழல் துறை இணைந்து அமைக்கும் பிளாஸ்டிக் தார்ச்சாலைப் பணித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சின்னவட்டானுரில் சமுதாயக்கூடம் விரிவாக்கம், அங்கன்வாடி கட்டிடம், கிராம வளர்ச்சி பல்நோக்குக் கட்டிடம், நாடக அரங்கம், ஒருங்கிணைந்த மகளிர், சுகாதார வளாகம் போன்றவை உள்ளன. சேர்க்கானூரில் தாய் திட்டம் செயல்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. நடுவூர், வசந்தபுரம் கிராமங்களில் தபால் நிலையமும், புதூர்நாட்டில் கூட்டுறவுச் சங்கமும் உள்ளன.
உணவு
ஜவ்வாது மலைக்கிராம மக்கள் மாமிச உணவை உண்டபோதிலும் மாட்டிறைச்சியை உண்பதில்லை. இவர்கள் நிலத்தில் விளையும் உணவுப்பொருட்களையும், காடுபடு பொருட்களையும் உணவாக உட்கொள்கின்றனர். வலசை என்னும் ஊரின் விழாவில் மண்பானைகளில் “கொத்தரெக்கரி’’ சாம்பாரும், முந்தைச்சோறு என பலவற்றைத் தெய்வத்திற்கு படைத்து ஊர்மக்கள் அனைவரும் ஒற்றுமையாகப் பரிமாறி உண்கின்றனர். ராகி, அரிசி, சாமை, கொல்லு, சோளம் போன்றவற்றையும் அம்மக்கள் உண்கின்றனர். சேம்பறை மலைக்கோயிலில் அனுமன் வழிபாட்டில் இறைவனுக்காகச் செலுத்தப்படும் ‘‘மொத்தை” என்னும் சோற்று உருண்டையை அனைவரும் ஒன்றாகச் சாப்பிடுகின்றனர்.
பழையபாளையம் என்னும் ஊரில் காலையில் கூழ் மலையாளிகளுடைய உணவாக உள்ளது.மதியம் சோறு அல்லது களி உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மலையாளி மக்கள் பல்வேறு பழக்கவழக்கங்களை மேற்கொள்கின்றனர். இவர்களது திருமணத்தில் மணப்பெண்ணிற்கு மணமகன் பணம் கட்டுதல் வேண்டும். அதன்பின்பு திருமணம் நடைபெறும். இங்குள்ள மக்கள் இறந்தவர்களுக்காக மொட்டை அடித்துக் கொள்ளும் பழக்கம் இல்லாதவர்களாக உள்ளனர். உடல்நலம் சரியில்லாமல் வெளியிடங்களில் மருத்துவம் பார்த்து இறந்து விட்டால் அங்கிருந்து அவர்களை ஊருக்குள் கொண்டு வரும்போது பலவிதமான சடங்குகளைச் செய்துகொண்டே வருவதாகக் கூறுகின்றனர். மேலூர் என்னும் கிராமத்தில் ஒவ்வொரு நிலத்திலும் ‘‘கொல்லைமுனி” என்பது உள்ளதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதனைப் பயபக்தியுடன் மக்கள் வணங்குகின்றனர்.
நெல்லிப்பட்டு கிராமத்திலுள்ள வேடியப்பன் சாமிகுறித்து கூறும்போது கொள்ளையடிக்க வந்த பாளையக்காரர்களைத் தெய்வமாக நின்று வேடியப்பன் காட்டுக்குள் விரட்டி அடித்தததாகவும் அவர்கள் திரும்ப வராமலிருக்க காவல் காக்கவே அந்தத் திசை நோக்கியே அமர்ந்துள்ளதாகவும் கூறுகின்றனர். பழைய பாளையம் பகுதி மக்கள் இவர்களைச் சார்ந்த வேறு மலையின மக்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்வதில்லை. ‘‘காளி” என்று இருபாலருக்கும் பெயர் வைக்கின்றனர். ‘‘குல்லூ” என்று ஆண்களுக்கு மட்டும் பெயர் வைக்கின்றனர். வசந்தபுரம் கிராம மக்கள் எங்கு வேண்டுமென்றாலும் பெண் கொடுத்து பெண் எடுத்துக் கொள்ளலாம் என்ற முறையைப் பின்பற்றுகின்றனர்.
கோயில்
‘‘கோயில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’’ என்ற பழமொழி தமிழகத்தில் வழங்கி வருகின்றது. நல்லது நடந்தால் தெய்வத்தின் செயல் என்றும் அல்லது நடந்தால் தெய்வத்தின் கோபம் என்றும் நம்புகின்றனர். எனவே மக்கள் தெய்வத்தை வணங்கி வந்ததை, வருகின்றதை நாம் பார்க்க முடிகின்றது. இயற்கையின் ஆற்றலைக்கண்டு பயந்த மனிதன் அவற்றை வணங்க முற்பட்டான். இயற்கை வழிபாடுகளும் விழாக்களும் தோன்றிய வரலாறு குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ள தெய்வம் மற்றும் சார்ந்த கோயில்கள் குறித்தும் அறிய முடிகின்றது.
மேலூர் என்னும் கிராமம் குறித்து கூறும்போது கோயில் அமைப்பினை ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்: ஜவ்வாது மலையில் உள்ள கோயில்கள் அனைத்திற்கும் வருடந்தோறும் வர்ணம் பூசுகின்றனர். கோயில் வீடுபோல அமைக்கப்பட்டு, கருவறைக்கு மேலே விமானம் எழுப்பப்பட்டுள்ளது. விமானத்தின்மேல் மண் சுதையால் ஆன பூதகணங்கள் என்னும் சிற்பங்கள் எழுப்பப்பட்டுள்ளன. திருமால் வடிவத்தை சுவரில் ஓவியமாகவும் தீட்டியுள்ளனர்.
இவ்வூர்களில் உள்ள கோயில்கள் ஒவ்வொன்றும் வீடுபோன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஊரின் தெருவிலும் ஒரு வீடுபோல் அமைக்கப்பட்டுள்ள கட்டித்திற்குள், அவ்வூர்க் கோயிலின் பூசைப்பொருட்கள், இறைவர்களின் நகைகள் அனைத்தையும் வைத்துப் பாதுகாக்கின்றனர் . இதற்கு பஜனைக்கோயில் என்று கூறுகின்றனர். மொழலை என்னும் ஊரில் மொட்டை ஈஸ்வரே அதாவது சிவலிங்கம் காணப்படுகிறது. சண்டிகேஸ்வரர், மார்க்கண்டேயன் சிலைகள் பல உள்ளன. சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. வேடியப்பன் கோயிலும் இவ்வூரில் உள்ளது. புதூர் நாட்டில் மாரியம்மன், திக்கியம்மன் கோயில்கள் உள்ளது. இங்கு இறைவி ஊர்வலம் செல்லும்போது இளைப்பாற அலங்கார மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது. நவகிரகங்கள், விநாயகர் கோயில் எனப் பலவற்றினை நூலாசிரியர் விளக்கிச்செல்வதைக் காணமுடிகின்றன. அரும்பல்பட்டு என்னும் கிராமத்தில் விநாயகர் கோயில், கங்கை நாச்சியம்மன் கோயில் உள்ளன.
சித்தூரில் புற்றுக்கோயிலைப் பெருமாள் என்று வழிபடுகின்றனர். இவர்கள் அந்த இடத்தில் மாடு ஓட்டிச்சென்றபோது மாட்டின் காலடியில் ரத்தம் வந்ததாகவும் அங்கிருந்த ஒருவருக்கு அருள் வந்து ‘‘நான் பெருமாள் தோன்றியிருக்கிறேன். எனக்கு கோயில் கட்டுங்கள்’’ என்று கூறிய. பின் கோயில் கட்டியுள்ளச் செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சின்னவாட்டானூர், சேர்க்கானூர், கல்லாவூர் போன்ற கிராமங்களில் விநாயகர் கோயில்களும், மலைத்திருப்பத்தூர், சேம்பறை போன்ற கிராமங்களில் ஆஞ்சநேயர் கோயிலும், நெல்லிப்பட்டு, மலைத்திருப்பத்தூர், வசந்தபுரம் கிராமங்களில் மாரியம்மன் கோயிலும், கீழுரில் சிவன் கோயிலும் வழுதல்பட்டு என்னும் கிராமத்தில் காளி கோயிலும், கோவிலூர் என்னும் கிராமத்தில் பெருமாள் கோயிலும், பேளூர் கிராமத்தில் நாச்சியம்மன் கோயிலும், கீழுரில் மஞ்சி நறைமுருகன் கோயிலும் சிறப்பாக வேந்தியப்பன் கோயிலும் அமைக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர். கோயில் குறித்து ஆசிரியர் பக்கம் 46- 47 இல் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலைகள்
ஜவ்வாது மலையிலுள்ள மக்கள் எத்தகைய கலைகளை நிகழ்த்துகின்றனர் என்றும் அவர்களுடைய திறங்களையும் நாம் அறிகின்றோம். இம்மலைக் கிராமங்களில் நிகழ்த்துக் கலைகளைத் தொடர்ந்து நடத்துகின்றனர். ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கின்றனர். வள்ளித்திருமணம், கர்ணமோட்சம், இராமாயணம், அரிச்சந்திரன் புராணம், மார்க்கண்டேய புராணம், வெங்கடேச பெருமாள் நாடகம், பெருமாள் நாடகம், கந்த புராணம், விஷ்ணு புராணம், மகா புராணம் எனப் பல நாடகங்களை நிகழ்த்தி வருகின்றனர். ஆபராசட்டை என்ற நாடக ஆடைகளை அணிந்து நடிப்பதாகச் சொல்லப்படுகின்றது. கொத்தனூரில் நாடகப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மலைத்திருப்பத்தூரில் திருவிழாவின்போது பெண்கள் சிவப்புநிற ஆடைகளை உடுத்திக்கொள்ள ஆண்களில் இளையவர்களும், பெரியவர்களும் சுமார் 20 பேர் அடங்கிய குழுவினர் ‘சேவடியாட்டம்’ ஆடுகின்றனர். மேலும் கடவுள் கதைகளை நாடகமாக நடத்துகின்றனர். இதில் அவர்கள் கற்பனைத்திறனைக் கலந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமையையும் காண முடிகின்றது.
தொழில்
இக்கிராமங்களில் விவசாயம் அடிப்படைத் தொழிலாக உள்ளது. இங்குள்ள பெண்கள், விவசாய வேலைகள், கால்நடைப் பராமரிப்பு, எரிபொருள் சேகரித்தல், தண்ணீர் கொண்டு வருதல் ஆகியவற்றுடன் மற்ற பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். அரும்பல்பட்டு, கீழுர், தகரக்குப்பம் போன்ற ஊர்களில் விவசாயம் பின்பற்றப்படுவதையும், புனை ஓட்டுவதையும் பார்க்க முடிகின்றது. பெரும்பள்ளி என்னும் ஊரில் அரவை மில் உள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சின்னவாட்டானூரில் ஆடு, மாடு, பன்றியும் வளர்த்து தங்கள் பொருளாதரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். பெரும்பாலான மலைக்கிராமங்களில் பன்றிகள் வளர்ப்பது என்பது மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. அவ்வகையில் பன்றிகளை வீட்டில் தீனி போட்டு தனியாக வளர்த்து வருகின்றனர்.
மொழி நடை
ஜவ்வாது மலைவாழ் மக்களின் மொழி நடைகளை ஆய்வு செய்து பக். 131- முதல் 168 வரை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இதன்வழியாக உறவுமுறைச் சொற்கள், உடலுறுப்புகள், அவைகளின் அடைவுச் சொற்களும் குறைபாடுகளும், இயற்கை உணர்வுகள், மருந்துகளும் மருத்துவமும், மனிதர்களின் தனிக்குணங்கள், சிறப்புத் தொழில்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தளவாடச் சாமான்கள், தானியமும் பயறுகளும், காய்கறி, கிழங்கு வகைகள், பல்வேறு உணவுகள், சுவைகள், நிறங்கள், ஆடை, நகைகள், காலம், இயற்கைவாழ் உயிரினங்கள், மன்னர், நிர்வாகம், மக்கள் பயன்படுத்துகின்ற பெயர்களைக் குறிப்பிட்டு விரிவாக ஆசிரியர் விளக்கிச் சென்றுள்ளார். இப்பகுதியில் மொழியின் ஆவணத்தன்மையைக் காணமுடிகின்றது.
இந்நூல் ஜவ்வாது மலைவாழ் மலையாளிகளின் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவருகின்றது. அதோடு மட்டுமின்றி மொழிசார்ந்த ஆய்வு என பல்வேறு பொருண்மைகளில் கருத்துகளைக் கூறி மற்ற ஆய்வாளருக்கும் வழிகாட்டுதலை ஜே.ஆர்.இலட்சுமி அவர்கள் ஏற்படுத்தியுள்ளமை இவண் சுட்டத்தக்கது. இந்நூலைப் படிப்பவர்கள் நாம் எப்படி வாழ்கின்றோம் என்றும் மற்ற இடங்களின் வாழ்முறை குறித்த தேடுதலைத் தோற்றுவிப்பதாக ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. நாட்டுப்புறவியல் சார்ந்த கள ஆய்வில் நல்ல ஓர் ஆவணமாக இந்நூல் விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.