வந்துவிட்டது சென்னை அறிவுத் திருவிழா! நமக்கான வாசிப்புப் புரட்சியின் முதன்மைப் பெருவிழா! இம்முறை நாம் அதை சர்வதேச புத்தகத் திருவிழாவாக தரம் உயர்த்தி இருப்பதால் நம் எதிர்பார்ப்புகள் ஏராளம். பிராஸ்க்ரட்டில் சாண்டியாகோவில் கொடலஜாராவில், சியோலில், லீஸ்பெக்கில், பியூனஸ் ஆரஸில் நடப்பதுபோல என்றென்றும் உலக சாதனை என்பதே நம் இலக்காக இருக்க வேண்டும்.
நாம் அதை எப்படி நடத்தப் போகிறோம்? பாரீஸில் நடப்பதைப்போல நகர் முழுவதையும் புத்தக வாசகங்களால் ஜொலிக்கச் செய்யப் போகிறோமா… லண்டனில் நடக்கிறதே அதுபோல எழுச்சிமிகு வாசிப்பு மாரத்தான்களை இணைக்கப் போகிறோமா… அல்லது பேங்காக்போல யானைகள் மீது புத்தக வெற்றியாளர்களை அமர வைத்து ஊரெல்லாம் சுற்றி வந்து கொண்டாடப் போகிறோமா… ஜெனிவா சர்வதேச புத்தகக் காட்சிபோல 600 கவிஞர்களை நாள்தோறும் மேடையேற்றி – தமிழ் முழக்கம் செய்வோமா… இத்தாலியில் பொலொக்னா புத்தகத் திருவிழாபோல 10 லட்சம் குழந்தைகளை புத்தக பரிசால் அலங்கரிப்போமா அல்லது அதற்கும் ஒரு படி மேலே சென்று. கியூபாவின் ஹவானா புத்தகப் பெருவிழா போல 1000 நாவல்களை வாசிக்கும் வாசிப்பு மாரத்தானாக மாற்றலாமா…
இஸ்டான்புல் – துருக்கிபோல லட்சம் வாசகர்களை, லட்சம் புத்தகங்கள் வாங்க வைப்போமா.. குழந்தைகளைக் கொண்டாடும் சவுதி புத்தக திருவிழாபோல கப்பல், விமானம், ரயில் என சென்று புத்தகப் பயணத்தை அரங்கிலேயே அமைத்து அசத்தப் போகிறோமா…
நம் இதயங்களின் உயிர்ப்பாய் என்றென்றும் துளிர்க்கும் நம் சென்னை புத்தகக் காட்சியின் 46வது ஆண்டு இதை எல்லாம் தாண்டி வரலாறு படைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் எண்ணமாகும்.
வாசிப்பை நம் தமிழ் மண்ணின் அன்றாட வாழ்வின் அங்கமாக்கிட புத்தகங்களால் நம் ஒவ்வொருவர் வீட்டையும் அலங்கரித்து இல்லத்து நூலகங்களை கட்டமைத்திட – வீதி தோறும் – நகர்தோறும் வாசிப்புத் திருவிழாக்களை நடத்திட – பள்ளிகளில் – கல்லூரிகளில் – பல்கலைக்கழங்களில் – நூல்களை மறுமலர்ச்சி அடைந்த பயன்பாட்டு அமைப்புகளாக்கி சந்ததிகளை உயர்த்திட இந்தப் புத்தகக் காட்சியைப் பயன்படுத்த வேண்டும்.
பொங்கிடும் தமிழ்ப் பொங்கல் புத்தகப் பொங்கலாய் புத்தெழுச்சிப் பெற்று என்றென்றும் இனித்திட 46வது சென்னை புத்தகக் காட்சியினை நோக்கி பீடுநடை போடுவோம்… வாசிப்புப் புரட்சி மூலம் வாகை சூடுவோம்.