கமலாலயன்
காங்கிரஸ் சரித்திரம்’ எழுதிய பட்டாபி சீதாராமய்யாவின் பார்வையில், வ.உ.சி. என்றொரு பெயர் தட்டுப்படாமலேயே போனது. அந்த மாபெரும் மக்கள் தலைவர் மறைந்தபொழுது, தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் ஒன்றுகூட நினைவேந்தல் தலையங்கம் எதையும் எழுதவில்லை. சென்னையிலுள்ள ராயப்பேட்டை காங்கிரஸ் மாளிகை முன்பு, வ.உ.சி.யின் முழு உருவச்சிலையை நிறுவ வேண்டும் என்று ‘சிலம்புச் செல்வர்’ ம.பொ. சிவஞானம் முயன்றபோது, அன்றைய சென்னை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் காங்கிரஸ் நிதியில் இருந்து பணம் கொடுக்க மறுத்ததுடன், அந்த மாளிகை முன்னால் சிலை நிறுவ அனுமதியும் தரவில்லை.

விடுதலை பெற்ற பொன்விழாக் கொண்டாட்டத்தின்போது, அகில இந்திய அளவில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் பற்றிய நடமாடும் கண்காட்சி அமைக்கப்பட்ட ஒரு ரயில் வண்டி நாடு முழுக்கச் சுற்றியது. அதிலும் வ.உ.சி.யின் அருஞ்செயலோ, தமிழ்நாட்டின் வேறெந்தப் பங்களிப்போ காட்சிப்படுத்தப்படவில்லை.
வ.உ.சி. ஆய்வாளர்கள் – ம.பொ.சி. தொடங்கி இன்றைய ரெங்கையா முருகன்,
ஆ.சிவசுப்பிரமணியன், ஆ.இரா. வெங்கடாசலபதி, செ.திவான், குருசாமி, மயில்வாகனன் ஆகியோர் வரை மறைந்த ‘பெரியவர்’ வ.உ.சிக்கு உரிய இடத்தை வரலாற்று ஏடுகளில் இயன்ற அளவு உறுதி செய்ய வேண்டுமென அரும்பாடு பட்டு வருகின்றனர். இந்த முயற்சிகளுள், மிக சமீபத்திய வரவு – குருசாமி மயில்வாகனன் அவர்கள் எழுதிய ‘கப்பலோட்டிய கதை’. தலைப்பைப் படித்ததுமே நூலின் நாயகர் பற்றிய வீர நினைவுகள் அலைமோதித் ததும்புகின்றன.
‘கப்பலோட்டிய தமிழன்’ என்று ம.பொ.சி. அவர்கள் எழுதிய நூலும், திரைப்பட இயக்குநர் பீம்சிங் இயக்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படமும் தமிழ் மக்கள் நெஞ்சங்கள் எல்லாம் பெரியவரை நிலைக்கச் செய்த காவியப் படைப்புகள். பல்வேறு நூல்களிலும், கட்டுரைகளிலும் கப்பல் ஓட்டிய அருஞ்செயல் பற்றிய குறிப்புகள் வெவ்வேறு அளவில் இடம் பெற்றிருக்கின்றன; எனினும் ‘வ.உ.சி.யின் கப்பல் கம்பெனிச் செயல்பாடுகள் குறித்து முழு விவரங்களும் அடங்கிய தனியொரு நூல் எதுவும் இதுவரை வந்ததில்லை’ என்ற மனக்குறை குருசாமி அவர்களுக்கு நீண்ட காலமாக இருந்துள்ளது…
தமுஎகச மாநில அளவில் நடத்திய வ.உ.சி. வரலாறு குறித்த உரையரங்கின் முதல் நாளன்று, மூத்த மார்க்சிய ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்களும், இந்த நூல் ஆசிரியர் குருசாமி மயில்வாகனன் அவர்களும் மிக ஆழ்ந்த பொருள் பொதிந்த உரைகளை நிகழ்த்தினர். வ.உ.சி, ஒரு வழக்கறிஞர், சுதேசியத் தொழில்களை முன்னெடுத்தவர், பழந்தமிழ் இலக்கிய நூல்களை உரையுடன் பதிப்பித்தவர், திருக்குறளையும், சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தையும் உரையெழுதி விளக்கியவர், ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர், காங்கிரஸ் இயக்க எழுச்சிக்குத் தென்னாட்டில் பெருந்தலைவராய் விளங்கியவர், சமூக நீதி – மாதர் சமத்துவம் ஆகியவற்றை மிக முன்னோடியாக வலியுறுத்தியவர், தூத்துக்குடி கோரல்மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு உறுதுணையாய் நின்றவர், கப்பல்கள் ஓட்டி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்குச் சவால் விடுத்தவர், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பெற்ற ஒரே இந்தியத் தலைவர்… இப்படி இன்னும் எத்தனையோ பெருமைகளுக்குச் சொந்தக்காரர்!

தனித்தனியாக மேற்கண்ட இந்த அம்சங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஆழ்ந்து விரிந்த ஆய்வு நூல்களை எழுதிட வேண்டுமென்பது நூலாசிரியரின் கனவு. முதல் நூலாக, ‘கப்பலோட்டிய கதை’ வெளியாகி உள்ளது. ‘நீந்தும் மீன்கள்’ பதிப்பகம் இந்நூலை எளிமையாகவும், செறிவாகவும் பதிப்பித்துள்ளது.
இந்த நூலின் அமைப்பும், வாசகர்களை மிக எளிதில் ஈர்த்து வசீகரிக்கும் எளிய நடையும், சிறு சிறு வாக்கியங்களில் உண்மையும், உணர்ச்சியும் துலங்க நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கும் மிக அற்புதமானவை. ‘ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கம் உள்ளோருக்கும் பொருள் விளங்கும்’ விதத்தில் எழுத வேண்டும் என்ற மகாகவி பாரதியின் வரையறைக்கு, ஆகப் பொருத்தமான எடுத்துக்காட்டு நூலிது!
இந்தியாவும் விவேகபானுவும், இந்தியாவிற்கான விடுதலைப் போர், யாரிந்த வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள், சுதேசிக்குடி, கப்பல்கள் வந்தன, கடலில் ஒரு யுத்தம், மாலுமியில்லாத கப்பல், மக்களிடம் கையேந்திய மகாகவி, சக்தியிழந்த சர்வேசன்… உள்ளிட்ட பதினெட்டுத் தலைப்புகளில் ‘கப்பலோட்டிய கதை’யைச் சொல்லியிருக்கிறார் குருசாமி மயில்வாகனன் அவர்கள்.
‘சிறை வரைந்த சித்திரம்’ தொடங்கி, வ.உ.சி.யின் நாவாய்ச் சங்கக் கடன் கட்டளை வந்தபோது அவர் பாடிய பாக்கள் ஈறாக, மொத்தம் 21 பின் இணைப்புகள் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் தேடித்தேடிச் சேகரித்து, நூலில் முழுமையாகத் தருவதற்கு நூலாசிரியர் எந்த அளவுக்குச் சிரமங்கள் பட்டிருப்பார் என்பதை, நூலைப் படித்துக்கொண்டு வரும்போதே ஆழமாக உணர முடிகிறது.
இவர் கூறும் வரலாற்று உண்மைகளும், அவற்றுக்கான ஆதாரங்களும் மறுக்கவே முடியாதவை. இதுவரை வந்துள்ள வ.உ.சி. வரலாற்று நூல்களிலும், இணையத்திலும என்னென்ன செய்திகள் திரும்பத் திரும்பத் தவறாகக் கூறப்பட்டு, உண்மைகளாகவே நம்பவும் படுகின்றன என்றெல்லாம் தெளிவுபடுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
எடுத்துக்காட்டாக, கப்பல்களை வாங்கி வருவதற்காக வ.உ.சி. பம்பாய் போயிருந்த பொழுது, ஐந்தே வயதாகியிருந்த அவரின் மூத்த மகன் உலகநாதன் கடுமையான உடல் நலக்குறைவினால் பிழைப்பதே கடினம் என்ற நிலையில் இருந்திருக்கிறான். இதைத் குறிப்பிடும் பலரும், உலகநாதன் அந்தச் சமயத்தில் இறந்துவிட்டதாகவே குறிப்பிட்டு வருகின்றனர். உண்மையில், வ.உ.சி. சென்னையில் வாழ்ந்த காலத்தில்தான், சுமார் 20 வயதான வாலிபனாயிருந்த உலகநாதன் எதிர்பாராமல் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறான். வ.உ.சியே இதைப்பற்றி ‘தனது உயிரில் பாதியை இழந்துவிட்டதாக’ குறிப்பிட்டிருப்பதையும் நூலாசிரியர் எழுதியுள்ளார்.
வ.உ.சி.யின் துணிகரமான முயற்சிகளையும், அவர் நடத்தி வந்த தொடர் போராட்டங்களையும் உடனுக்குடன் மகாகவி பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் கருத்துப்படங்கள், கட்டுரைகள், பத்திகள் மூலம் தவறாமல் பதிவு செய்துகொண்டே வந்திருக்கிறார் என்பதையும் இந்த நூல் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.
வ.உ.சி. உயிருடனிருந்த போதே, அவருடைய உருவப்படங்கள், படம் ஒன்றுக்கு ஆறு பைசா விலையில் விற்கப்பட்டுள்ளன. ‘ஸ்ரீசிதம்பரம்பிள்ளை சரித்திரம்’ என்ற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்கள் தலா மூன்றணா, ஆறணா விலைகளில் விற்கப்பட்டன என்ற தகவலும் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில், வேறு எந்த ஒரு தலைவருக்கும் இப்பெருமை கிடைக்கவில்லை!
இதை ‘செம்மலர்’ மாத இதழில் அறிமுகம் செய்து ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய ஒரு குறிப்பு, நூலைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை கிளறிவிட்டது. அவருக்கு என் நன்றிகள். வடிவமைத்தவர் ஆ. அறிவழகன் அவர்கள். நூல் வேண்டுவோரின் தொடர்புக்கு: ‘நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்’ (M) 94885 25882
