தேனி சுந்தர்
பாரதி புத்தகாலயத்தின் அதிரடி முயற்சியில் சுடச்சுட வெளிவந்து உடனுடக்குடன் கடந்த குழந்தைகள் தினத்தன்று தேனி மாவட்டம் கூடலூரில் வெளியீடு மற்றும் நூல் ஆய்வரங்கம் இரண்டும் ஒரு சேர நடைபெற்றது. ஆம், உள்ளூர் மக்கள் நிரம்பிய அரங்கில் தமுஎகச மதிப்புறு தலைவர் தோழர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுப் பேசினார். நூலின் பல்வேறு அம்சங்கள் குறித்து தோழர்கள் பலரும் பேசினர்.

இந்த கொரானா தொற்று காலத்தில் கல்விப் புலம் சார்ந்து வெளிவந்த முக்கியமான நூல்களில் இரண்டு சக.முத்துக் கண்ணன் எழுதியது. முதல் நூல், சிலேட்டுக் குச்சி.. இரண்டாவது, ரெட் இங்க். சிலேட்டுக்குச்சி குழந்தைகள் கையில் இருப்பது. ரெட் இங்க் ஆசிரியர் கையில் இருப்பது. ஆனாலும் இந்த இரண்டு நூல்களையும் எழுதும் போது முத்துக் கண்ணன் மனம் முழுதும் நிரம்பி இருப்பது குழந்தைகளே.!
முதல் நூல் கட்டுரைத் தொகுப்பு. ரெட் இங்க் நூல் சிறுகதைத் தொகுப்பு. இருந்த போதும் முந்தைய தொகுப்பின் தொடர்ச்சி போல தான் உணர முடிகிறது. எனவே இரண்டும் இரட்டை நூல்கள் என்று சொல்லலாம். விரைவிலேயே இரண்டாம் பதிப்பு காணும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இந்த நூல் முழுவதும் புனைவும் அல்ல. முழுவதும் உண்மையும் அல்ல. இந்த நூலிலேயே ஒரு வரி இருக்கிறது. நிஜத்தைவிட கற்பனை இன்னும் அழகானது! அந்த அடிப்படையில் பள்ளியில் குழந்தைகள் மீது மிகுந்த அக்கறையோடும் சமூகத்தில் மக்கள் மீது மிகுந்த அன்போடும் சிந்திக்கவும் செயல்படவும் கூடிய ஒரு பள்ளி ஆசிரியர் தன்னுடைய முற்போக்கு பார்வை கொண்டு கல்விக்கூட அனுபவங்களை அசைபோடுவதும் அதை அனைவரும் உணரச் செய்யும் விதமாக அழகிய ஒரு படைப்பாக, இலக்கியமாக முன்வைப்பதும் அரிதிலும் அரிதான ஒரு சந்தர்ப்பம்- நமக்கு..!

கல்விக்கூட அனுபவங்களை இந்தப் பார்வையில், இந்த மொழியில், இந்த நடையில் எழுதும் முன்னோடிகள் இருக்கின்றனர். இந்த தலைமுறைக்கு நம்ம முத்துக் கண்ணன்.. என்று நம்பிக்கையூட்டும் எழுத்து!
ஒவ்வொரு கதையும் கல்வி சார்ந்து, குழந்தைகள் சார்ந்து, குழந்தைமை சார்ந்து ஏதாவது ஒன்றைப் பேசுகிறது. வெளியில் நின்று பேசாமல் நம் மனதோடு, மனதின் உள்ளிருந்து கேட்கும் குரலாக இருக்கிறது. சிரிக்க வைக்கிறது. கலங்க வைக்கிறது. சிந்திக்க வைக்கிறது.
கல்வியில் என்னென்னவோ விஷயங்கள் முக்கியம் என்று சொல்லப்படுகிறது. எல்லாத்தையும்விட குழந்தைகள் முக்கியம் என்று சொல்கிறோம். ஒரு ஆசிரியர் குழந்தைகளை அதிகம் நேசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். குழந்தைகளை மட்டுமல்ல.. குழந்தைகளின் குடும்பத்தையும்.. தனக்கும் தன் பணிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத சாமானிய மக்கள் மீதும் அக்கறை கொண்ட ஒரு ஆசிரியரின் படைப்பு இது..! அவர் அக்கறையோடு பார்க்கும் மாணவரும் மக்களும்தான் இந்த படைப்பின் ஆதாரம்..!
கதைகளுக்குள் நான் போகவே இல்லை. ஒன்றே ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால் அவனே சொல்லட்டும் கதையில் வரும் முருகேஷ் தன் வாத்தியாருக்கு கதை சொல்லும் அழகை மீண்டும் மீண்டும் படித்தேன்.. ‘குளத்தை அழகு செய்யும் ஏற்பாடுகளில் குழந்தைகள் ஆய் இருப்பதும் அடங்கும்’ என்று முத்துக்கண்ணன் எழுதியிருப்பதை நான் மீண்டும் மீண்டும் ரசித்தேன், சிரித்தேன்..! நீங்களும் அவசியம் படிங்க.. சீக்கிரம் படிங்க.. கதைகள் குறித்து எழுதுங்க..!