இருண்ட பொழுதுகளை ஒளி ஊட்டச் செய்யவும், உறை பனியில் விறைத்த மனதிற்கு வெப்பம் ஊட்டுவதும், கொடுமழைக்கு ஒதுங்கவும், கடும் வெப்பத்திற்கு நிழலாகவும் மற்றும் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாகவும் எனக்கு உதவியவை புத்தகங்களே.
அருட்தந்தை டெஸ்மண்ட் டு ட்டு
(Desamond and the very mean word)
நம் தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் வாரம் ஒரு பாடவேளையை ‘நூலகப் பாடவேளை’யாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது நமது நீண்டகால கோரிக்கையாகும். எத்தனையோ அரசாணைகள் இப்படியாக வெளிவந்து சுவடில்லாமல் கோப்புகளிலேயே உறங்குவது உண்மைதான். வெறும் அரசாணை எதையும் சாதித்து விடுவதில்லை என்பதும் கூட உண்மைதான். ஆனால், புத்தக வாசிப்பை குழந்தைகளிடம் எடுத்துச் சென்று நூல் வாசிக்கும் பழக்கத்தை அவர்களின் பிஞ்சு மனங்களில் அக்னிக் குஞ்சாய் விதைக்க நினைத்த பள்ளிக்கல்வி அமைச்சர், ஆணையர் உட்பட அனைவரையும் நாம் பாராட்டத்தான் வேண்டும். வாசிப்பை பள்ளிகளின் அங்கமாக்கும் முயற்சியை மனதார வரவேற்போம்.
பள்ளிப்பருவத்தில் வாசித்த ஒரே ஒரு புத்தகம்தான் மாமனிதர்களை வரலாற்றில் உருவாக்கியது. தனது பள்ளிப்பருவத்தில் ஹெகலை வாசித்தவர் காரல் மார்க்ஸ்; கார்வைலின் புவியமைப்பு நூலால் புரட்டிப்போடப்பட்டவர் சார்லஸ் டார்வின்; தன் ஆசிரியர் மாக்ஸல் மோல்ட் என்பவர் அறிமுகம் செய்த காண்ட் எழுதிய “தி க்ரிட்டிக் ஆஃப் ப்யூர் ரீசன்” நூல் ஒன்று ஐன்ஸ்டீனின் குழந்தை மனதில் மேதமையை விதைத்தது என்கிறது வரலாறு.
ஹென்றி ஸ்போக்ஸ் எனும் தன் பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் தான் கண்டெடுத்த கலீலியோவின் ‘டூ வேர்ல்டு சிஸ்டம்ஸ்’ எனும் நூலால், தான் செதுக்கப்பட்டதாக அறிவித்தார் ஐசக் நியூட்டன். நமது இந்திய உதாரணங்களும் பள்ளிப் பருவத்து வாசிப்பே மாமனிதர்களை படைக்கும் என்பதை ஆணித்தரமாக நிறுவுகின்றன.
தனது எட்டு வயதில்தான் தந்தையால் புத்தக அலமாரியில் இருந்து எடுத்த ஹெர்மன் ஹேல்ட்ஸ் எழுதிய ‘தி சென்சேஷன் ஆஃப் டோன்’ புத்தகத்தால் இயற்பியல் மீது தீரா காதல் கொண்டவர்தான் நோபல் அறிஞர் சர்.சி.வி.ராமன்.
மைக்கேல் மதுசூதன் தத் எழுதிய ‘மேக்நாத்வதன்’ எனும் காவியத்தை பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து பத்து வயதில் வாசித்து தன்னையே கண்டடைந்ததாக அறிவித்தார் மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா.
தன் வீட்டு உணவுக் கலையை தேடிவந்த கல்லூரி ‘அண்ணா’க்களிடம் தன் பதிமூன்று வயதில் வாங்கிப் படித்த எஸ்.எல்.லோனி எழுதிய ‘அட்வான்ஸ்டு ட்ரிக்னா மெட்ரி’ எனும் ஒரு புத்தகத்தால் நமக்குக் கிடைத்தவர் கணிதமேதை ராமானுஜம்.
அறிவியல் அறிஞர்கள் மட்டுமல்ல, இந்திய தத்துவ ஞானத்தை தான் படித்த பள்ளி நூலகத்தில் நுழைந்து ஒரு வாரம் பிடிவாதமாக தேடித்தேடி வாசித்தே வீரத்துறவி ஆனவர் சுவாமி விவேகானந்தர்.
படுத்து உறங்க ஒருவருக்கே இடம் இருந்த ஒரே அறையில் தந்தையோடு வாழ்ந்தபோது அதிகாலை ஒருமணி வரை தன் தந்தையை உறங்கச் சொல்லி பிறகு அவர் எழுந்ததும், தான் உறங்க முடிந்த கொடிய வறுமையிலும், பள்ளி நூலகம் தந்த புத்தகங்களினால் வீதி விளக்கின் கீழ் தஞ்சம் புகுந்தவர்தான் சட்டமேதையான உலகமே கண்டு வியந்த அண்ணல் அம்பேத்கர்.
பள்ளி நூலகங்களைப் பலப்படுத்துவோம். செய்தித்தாள் வாசிப்பு முதல் புத்தக வாசிப்பு, புத்தக விமர்சனம், சாரணர் முகாம்கள் போல புத்தக வாசிப்பு முகாம், தமிழகம் முழுதும் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலகங்களுக்குச் சென்று மாணவர் சுற்றுலா, புத்தக வாசிப்பு குறித்த இதழ்களைப் பள்ளிக்கு வாங்கி வைத்தல், வகுப்பிற்கும் வயதிற்கும் தகுந்தாற்போல புத்தக – வங்கிகளை பள்ளிதோறும் உருவாக்குதல், நூலாசிரியர்கள் விருது பெற்ற எழுத்தாளர் வாசகர் சந்திப்பை பள்ளிதோறும் நடத்துதல், வகுப்பறை வாசகர் வட்டம் அமைத்தல் என பள்ளித்தளமனைத்தும் வாசிப்பை விதைப்போம். அறிவுப் பேரொளி வீசும் சந்ததிகளை படைப்போம்.