ஆயிஷா இரா. நடராசன்
தமிழக அரசின் நூலகப் பாடவேளை- திட்டத்தை இரு கரம் கூப்பி வணங்கி வரவேற்கிறோம். இதன் மூலம் தமிழக கல்வியின் இன்னொரு பொற்காலம் தொடங்கி இருக்கிறது. நம் குழந்தைகளின் அன்றாட வாழ்வில் புத்தக வாசிப்பு எனும் பொக்கிஷத்தை விதைக்க அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு பாடவேளை நூலக – பாட வேளையாக அறிவித்து வாசிப்பை கட்டாயமாக்கி இருக்கிறார்கள். என்ன ஒரு அற்புதம் இந்த அரசாணையே (அரசாணை எண் 19562/பொ. நூ.2/2021-3 Dt-03:11.2021) நமது நீண்ட நாள் லட்சிய இலக்குகளின் எதிர்பார்ப்புகளின் கோரிக்கைகளின் ஒப்பற்ற திட்ட அறிக்கை போல உள்ளது.
இளம் வாசகர் வட்டம், வாரம்தோறும் நூல் அறிமுகம் நடக்கும் வகுப்பறை, வட்டார வாசிப்பு பரிசுகள், மாவட்ட மாநில விருதுகள், மாணவர்களுக்கான வாசிப்பு முகாம்கள்… ஊக்குவிக்கும் இந்த ஓசையில்லா கல்வி நாளிதழ் வாசிப்பு முதல், காவிய வாசிப்பு வரை ஊக்குவிக்கும் இந்த ஓசையில்லா கல்வி- புரட்சிக்கு நாம் ஏதாவது ஒரு விதத்தில் உதவிட வேண்டுமே என்று தோன்றியது.
பள்ளி நூலகத்தில் நம் குழந்தைகள் கையில் படும்படி இருக்க வேண்டிய மிக சிறந்த தமிழ் புத்தகங்களை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தினேன். பள்ளிதோறும் வாசிப்பை வளமாக்கி அதை ஒரு இயக்கமாக மாற்றிட நமது மொழியில் வெளிவந்துள்ள இந்த நூல்கள் பெரிதும் உதவும். பள்ளிகளின் இளம் வாசகர் வட்டத்தை மேம்படுத்த அவசியம் தேவைப்படும் புத்தகங்கள் என என் தேர்வுப்பட்டியல் இது. குழந்தைகளுக்கான மாணவர்களுக்கான வாசிப்பு முகாம்களுக்கு இந்த நூல்களை மாணவர்கள் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் மாணவர்களும், ஆசிரியர்களும் வாசிக்க இந்த புத்தகங்கள் இருந்தாலே போதும். இப்பட்டியலில் அனைத்து வகை நூல்களும் உள்ளன. இது எனது தேர்வு எனினும் நூல்களின் முக்கியத்துவம் கருதி என் நூல்களையும் இணைத்துள்ளேன். வகுப்பு-வயது அடிப்படையில் ஆசிரியர்களே இவற்றை பிரித்துத் தரலாம்.
குழந்தைகளுக்கு தலைமைப் பண்பு பயிற்சி, சிறப்பு திறன் மேம்பாடு விஞ்ஞானி ஆவது, ஐ.ஏ.எஸ். பயிற்சி என நாம் இறங்குவதைவிட அவர்களை தரமான புத்தக வாசிப்பாளர் ஆக்கினாலே போதும். அதற்கு பள்ளி நூலகத்தை பலப்படுத்த வேண்டும். பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஆர்வலர்கள் சேர்ந்தும் கூட இந்த நூல்களை மொத்தமாக வாங்கி பள்ளி நூலகத்திற்கு பரிசளிக்கலாமே. அரசின் நூலக பாட வேலை திட்டத்தை ஒவ்வொரு பள்ளியும் திறம்பட செயலாற்றுவதற்கு கல்வித்துறையோடு இணைந்து நாமும் ஒத்துழைப்போம். நன்றி.
பகுதி – 1
அக்னிச் சிறகுகள்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
தமிழில்: மு. சிவலிங்கம்
இந்தியக் கனவு நாயகரின் தலைசிறந்த மாமனிதரின் சுயசரிதை 21ம் நூற்றாண்டு குழந்தைகள் அவசியம் வாசிக்க வேண்டும்.
சத்தியசோதனை-மகாத்மாகாந்தி, த.ரா.வேங்கடராசுலு
ஒவ்வொரு இந்தியரும் வாசிக்க வேண்டிய நம் தேசப் பிதாவின் வாழ்க்கை. சுருக்கப் பட்ட வடிவத்திலும் கிடைக்கிறது.
கண்டறிந்த இந்தியா – ஜவஹர்லால் நேரு
முதல் பிரதமர் நேரு தன் மகள் பிரியதர்சினிக்கு எழுதிய கடிதங்கள் வழியே ஒரு ஒப்பற்ற சமூக சிந்தனையாளராக இந்தியாவை கண்டுணர வைத்த பொக்கிஷம்.
திருக்குறள் – மு.வ. உரை
குழந்தைகளுக்கு திருக்குறளை பாடப்புத்தகம் அறிமுகம் செய்தாலும் மு.வரதராசனாரின் உரை என்பது பொதுத் தமிழின் – மகுடம்.
கீதாஞ்சலி – தாகூர்
நோபல் விருது பெற்ற ஒரே இந்திய நூல். தமிழில் வாசிக்கும்போது இலக்கியத்தின் ஆன்மாவை குழந்தைகள் தரிசிக்கும்.
என் சரித்திரம் – உ.வெ.சா.
சுருக்கப் பட்ட வடிவத்திலும் கிடைக்கிறது. தமிழ் இலக்கியங்களை சங்கப் புதையல்களை நாம் எப்படிப் பெற்றோம் என்பதை அறிய வைக்கும் நூல்.
அலை ஓசை – கல்கி
கல்கி எனும் கதாசிரியன் இந்திய விடுதலைப் போரை பதிவிட்ட காவியம் இது. தமிழ் இலக்கிய நவீனங்களது வாசிப்பின் வாசல்.
தம்பிக்கு – அறிஞர் அண்ணா
பேரறிஞரின் தமிழ் – தமிழ்நாடு எனும் கனவை பக்கத்துக்கு பக்கம் உணரலாம். கடமை, கண்ணியம் கட்டுப்பாடு நம் அடுத்த சந்ததி உணர உத்வேகம் தரும் நூல்.
விவேகானந்தர் கல்விச் சிந்தனைகள்
பேரா. கருணானந்தம்
வீரத்துரவி விவேகானந்தரின் கல்வி குறித்த பார்வை. இந்திய பொதுக் கல்வியின் முக்கிய குரலாக ஒலித்தவர் அவர்.
பெண்ணின் பெருமை – திரு.வி.க
திரு.வி.கல்யாணசுந்தரனாரின் நூல்களில் பெண்ணின் பெருமை மிக சிறப்பானது. மாணவர் மனதில் விதைக்கப்பட வேண்டிய பாலின- சமத்துவ கருத்துக் கோவை.
பெண் ஏன் அடிமையானாள்?- தந்தை பெரியார்
சமூக விடுதலை கோணத்தில் நம் குடும்ப வாழ்வை காண குழந்தைகளைத் தூண்டும். பெண் குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கை அஞ்சாமை வளர்க்கும்.
மலரும் உள்ளம் – அழ.வள்ளியப்பா
குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மிகச் சிறப்பான சிறார் பாடல் தொகுப்பு.
பாவை விளக்கு – அகிலன்
ஞான பீட விருது பெற்ற அகிலனின் ஆகச் சிறந்த படைப்பு. மாணவர்களுக்கு இலக்கிய ஆர்வத்தை தூண்டும்.
தோன்றியது எப்படி? – வாண்டு மாமா
இன்றைய தலைமுறைக்கு வாண்டு மாமாவை அறிமுகம் செய்யும் அற்புத அறிவியல் நூல்.
குறளோவியம்- கலைஞர் மு. கருணாநிதி
கலைஞர் கருணாநிதியின் எழுச்சித் தமிழில் குறளின் மிளிர்வை ரசிக்கவும் போற்றவும் பின்பற்றவும் மாணவர்க்கு வாய்ப்பளிப்போம்.
உலகை உலுக்கிய 40 சிறுவர்கள் – ஆயிஷா. இரா. நடராசன். மாமனிதர்கள், விஞ்ஞானிகள் குழந்தையாக இருந்தபோது நடந்த சிந்திக்க வைக்கும் சம்பவங்கள்.
தமிழ் இலக்கிய வரலாறு – கி. பாலசுப்பிரமணியன்
தமிழ் இலக்கியம் கடந்து வந்த பாதையை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறது.
பெலூடா கதை வரிசை – சத்யஜித்ரே (த.வீ.பா.கணேசன்) சத்யஜித்ரே சிறார்களுக்காக எழுதிய சாகச நூல் வரிசை உயர்நிலை மாணவர்களுக்கானது.
பண்டை உலகில் பறக்கும் பாப்பா – கல்வி கோபாலகிருஷ்ணன்
கல்வி கோபாலகிருஷ்ணனை இன்றைய தலைமுறை அறியவைக்கும் அழகு சித்திரம்.
பேரன்பின் பூக்கள்- சுமங்களா (த.யூமா. வாசுகி)
மலையாள குழந்தைகள் இலக்கிய ஜாம்பவானின் சிறப்பான தொகுப்பு.
சுவாமியும் நண்பர்களும் ஆர்.கே.நாராயண் ஆர்.கே. நாராயண் வழங்கும் மால்குடி ஊர் சுவாமி எனும் சிறுவனின் சாகசம்.
குழந்தைகளுக்கு கதை சொல்வது எப்படி -ரேவதி
முதுபெரும் சிறார் இலக்கிய படைப்பாளியின் இனிய வழிகாட்டி நூல்.
சிறுவர் கலை களஞ்சியம் – மணவை முஸ்தபா (என்சிபிஎச்) தமிழ் அறிவியல் பிதாமகர் குழந்தைகளுக்காக தொகுத்த அறிவியல் களஞ்சியம்.
கானகக் கன்னி – கல்வி கோபாலகிருஷ்ணனின் மிகப் பிரபலமான சிறார் நாவல்
நெல்சன் மண்டேலா – மேக்னஸ்பெர்க்மர்
தென் ஆப்பிரிக்க போராளி நெல்சன் மண்டேலாவின் சிறை முதல் சிம்மாசனம் வரை வரலாற்று பதிவு.
சிறந்த பதிமூன்று – வல்லிக் கண்ணன் கதைகள் வல்லிக் கண்ணன் நம் குழந்தைகளுக்காக தொகுத்த கதைகள்.
குழந்தைகள் கலைக் களஞ்சியம் -பெரியசாமித்தூரன்
சிறார் எழுத்துச் சிற்பி தூரனின் ஆகச்சிறந்த படைப்பு.
யுரேகா கோர்ட் – ஆயிஷா இரா. நடராசன் அறிவியல் கண்டுபிடிப்பு வரலாறை வழக்குமன்ற உரையாடலாக முன் வைக்கிறது.
சிறுவர் இலக்கிய களஞ்சியம்- பூவண்ணன்
தன்காலத்து சிறார் இலக்கிய பதிவுகளை தொகுத்தார்.
மரப்பாச்சி சொன்ன ரகசியம் – எஸ். பாலபாரதி
வானம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகளில் இருந்து மீள நயமாக கற்றுத் தரும் விருதுபெற்ற நூல்.
பக்கத்தில் வந்த அப்பா- ச.தமிழ்ச் செல்வன்
சிறார்களுக்கான நெஞ்சை பிழிய வைக்கும் அற்புத படைப்பு.
ஜரா பாசீ- வேலு சரவணன் (உயிர்மை)
சிறார்களுக்கான நாடக விருந்து இந்நூல்.
சுண்டலி கதைகள் முதலைக் கதைகள்- ச. மாடசாமி சிறார் இலக்கிய வெளியில் கதை சொல்லிகளுக்கு ஒரு பயிற்சியாகவே அமைந்த படைப்பு.
குழந்தைகளுக்கு லெனின் கதை- ஆதிவள்ளியப்பன்
இளம் வாசகர்களுக்கு சுவையாக ரஷ்ய புரட்சியை வாசிக்க வாய்ப்பு.
பாரதியின் பூனைகள்- மருதன் (இந்து தமிழ்)
மருதனின் மிக சிறப்பான படைப்பு இது. குழந்தைகள் அவசியம் வாசிக்க வேண்டியதும்கூட.
புதிய கண்டுபிடிப்புகள்- பேரா. மோகனா
ஒவ்வொரு கண்டுபிடிப்பின் கதையும் ஒரு விதம் குழந்தைகளை கவரும்.
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வரலாறும்- எடையூர் சிவமதி. வீரத் துரவி விவேகானந்தரின் வாழ்க்கையே ஒரு பாடம்.
சாரி பெஸ்ட் பிரண்ட்- தமிழில் குமரேசன்
இந்திய அளவில் பன்மொழி கதைகள். மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு.
கணிப் பொறியின் அடிப்படை- நந்தகுமார்
இன்றைய – கணினி இயலின் அடிப்படை அறிவியலை எளிய தமிழில் விளக்கும் நூல்.
பறக்கும் பப்பிப் பூவும் அட்டைக் கத்தி ராஜாவும்
-மு.முருகேஷ் கற்பனை, கனவு உலகம், கூடவே கூர்மை சிந்தனை யாவும் விதைக்கும் முருகேசின் பேனா.
இருட்டு எனக்குப் பிடிக்கும்- ரமேஷ் வைத்யா (நீலவால் குருவி)
சிறார் இலக்கியம் சாகசம் மற்றும் கற்றல் இணைந்தது என்பதை நிறுவும் படைப்பு.
சோளக் கொல்லை பொம்மை- மா. லெ.தங்கப்பா (வானகம்)மா.லெ.தங்கப்பா எனும் சாகித்ய விருதாளரின் சிறந்த தொகுப்பு.
புதையல் தீவு – சுகுமாரன்.
மலையாளத்தில் எழுதப்பட்டு அழகு தமிழில் மொழிபெயர்ப்பான கற்கண்டு புதையல் இந்நூல்.
இளையோருக்கான இந்தியத் தொன்மக் கதைகள்- ரொமிலா தாப்பர். நாம் நமது நாட்டைப் பற்றி நம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்ல வேண்டிய கதைகள்.
டும் டும் டும் தண்டோரா- மோ. கணேசன்
குழந்தைகள் உலகின் நுட்பமான செய்திகளை உள்ளடக்கிய நூல்.
தினுசு தினுசா விளையாடலாமா – மு.முருகேஷ்
மிக சாதாரணமாக குழந்தைகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டுகளை அறிமுகம் செய்யும் நூல்.
பூமியின் கதை- ஆத்மா.கே.ரவி
(புவி தோன்றியது முதல் இன்று வரையான கதை இது)
அணு ஆற்றல்-ப.கு.ராஜன்(அணுவியலின் அறிவியல் அரசியல் என யாவும் பேசும்நூல்.)
அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு- பில் பிரைசன் (சிரிக்க சிரிக்க அறிவியலை தரும் பிரமாண்ட நூல்)
விண்வெளி 1000 வினா விடைகள் – ஏற்காடு இளங்கோ (இத்தனை தகவல்களா என்று வியக்க வைக்கும் நூல்.
கணிதத்தின் கதை- ஆயிஷா. இரா. நடராசன் (கணக்கின் வரலாறும் வரலாற்றில் கணக்கின் இடமும் சுவையாக விவரிக்கப்படுகிறது)
காலநிலை- சி. ரங்கநாதன் இன்றைய பருவநிலை மாறுபட்டுப் பிரச்சனையை குழந்தைகளுக்கு புரியவைக்கும் நூல்)
ஒளியின் சுருக்கமான வரலாறு- ஆயிஷா. இரா. நடராசன் (தமிழில் இயற்பியலின் தனித்துவமிக்க படைப்பு.
பண்டைக்கால வானவியலாளர்கள்-பேரா. மோகனா
(எந்த கருவியும் இன்றி வரலாற்றுக்கு முந்தைய வானியல் அறிஞர்கள் வேலை செய்த விதம் வியக்க வைக்கிறது)
தகவல் களஞ்சியம் – ஆத்மா.கே.ரவி
(அள்ள அள்ள தகவல்கள் குழந்தைகளால் கீழே வைக்க முடியாது)
உலகை மாற்றிய சமன்பாடுகள் – ஆயிஷா இரா. நடராசன் (சமன்பாடுகள் எப்படி இந்த உலகின் போக்கையே மாற்றின என விவரிக்கும் நூல்)
தெரிந்த கேள்வி தெரியாத அறிவியல்
-ஆதி வள்ளியப்பன் (அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களுக்கு அறிவியல் விளக்கம்)
மனித உடல் அமைப்பு மண்டலம்
அணு குப்தாகரேன் ஹெடோக் (பிரமாண்ட படைப்பு மனித உடற் கூறியலின் மிக சிறந்த விளக்கம்)
தாகூர் சிறு கதைகள்
தொ.சா. கந்தசாமி(ரவீந்திரநாத் தாகூரின் சிறந்த சிறுகதைகள்)
நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்?
ஆயிஷா இரா. நடராசன். தற்கால அறிவியலின் 13 கட்டுரைகள் விருது பெற்ற நூல்.
பிரதாப முதலியார் சரித்திரம்- மாயுரம் வேதநாயகம் பிள்ளை (தமிழ் இலக்கியத்தின் முதல் நாவல் இது. பஞ்சத்தின்போது கஞ்சிதொட்டி திறப்பதை மையமாக கொண்ட மனித நேயக் கதை.
பொழுதுபோக்கு இயற்பியல்- பெரல்மான்
(பொழுதுபோக்கு விளையாட்டாக அறிவியலை போதிக்கும் சூப்பர் புத்தகம்)
கண் தெரியாத இசைஞன் விளாதிமீர் கொரலோன் கோ (மிகப் பிரபலமான சோவியத் சிறார் நாவல். அமரகாவியம்
வனபுத்திரி- சுப்பாராவ்
(வாசிப்பின் வானலைகளை அதிரவைக்கும் சிறப்பான கதை நூல்)
முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஜத்மாதவ்
பிரபலமான நூல். ஆசிரியர்களின் அருமையை புரியவைக்கும் புதினம்.
மஹாஸ்வேதா தேவி கதைகள் -த: புவனா நடராசன்
வங்காளத்தின் மிக சிறப்பான எழுத்துச் சிற்பியை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் நூல்.
சூடாகும் பூமி – பேரா. பொ. ராஜமாணிக்கம்
(புவி சூடேற்றம் பற்றிய மிக முக்கிய அறிவியல் பதிவு இந்த நூல்)
தாகம் – கு. சின்னப்ப பாரதி
(சின்னப்ப பாரதியின் நெகிழ வைக்கும் படைப்பு. உயர்நிலை மாணவர்களுக்கானது)
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான் –
த: முகம்மது ஷெரீஃப்
மானுடவியல் எனும் அறிவியலை இவ்வளவு சுவையாக யாராலும் எழுத முடியாது.
சீவன் – கந்தர்வன் (மனித நேயம் பேசும் மிக நுண்ணிய கதை இது)
ஏழாவது அறிவு- வெ.இறையன்பு
(சிந்தனையை ஒரு நீர் ஊற்றாக சுரக்கவைக்கும் ஆற்றல் மிகு படைப்பு)
உருவாகும் உள்ளம்- வி.எஸ். ராமச்சந்திரன்
(மனித மனம் எப்படி உருவாகிறது என்பதை அறிவியல்பூர்வமாக விவரிக்கும் புதையல்)
உலகை மாற்றிய விஞ்ஞானிகள் 50/50
ஆயிஷா. இரா. நடராசன்.(உலகை- செதுக்கிய மாமனிதர்களின் வாழ்க்கை போராட்டம்)
நவரத்தின மலை- தமிழில்: ரா. கிருஷ்ணையா
(அவ்வளவும் தேன் கதைகள் தேடித் தேடி ரஸ்யமொழியில் தொகுக்கப்பட்ட அற்புதம் குழந்தைகள் விடவேமாட்டார்கள்)
உடைபடும் மவுனங்கள் – இரா.பிரேமா.(வாசிக்க வாசிக்க நம் மவுனத்தையும் உடைக்கும் சிறப்பான பதிவுகள்)
குள்ள நரி திருடக்கூடாது கன்னிகோயில் ராஜா
(சிறார் நூல் வரிசையில் முத்தாய்ப்பான படைப்பு)
தலைமை செயலகம் – சுஜாதா.
(மனித மூளையை குறித்த எழுத்தாளர் சுஜாதாவின் வெற்றிப் படைப்பு)
தாதயேவ்ஸ்கி சிறுகதைகள்- த.ரா.கிருஷ்ணையா
(இக்கதைகளை வாசிக்கும்போது வேறொரு நாட்டின் அழுத்தமான கலாச்சார அதிர்வுகளை சிறுவர்கள் பெறுவார்கள்)
அவமானம் -சதத்ஹஸன் மண்டோ (ராமாநுஜம்)
(மண்டோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள். மனித சமூக போராட்டத்தின் மாட்சிமையை முழங்கும் நூல்.
மேக்நாட் சாகா – தேவிகாபுரம் சிவா
(இந்திய வானியல் இயற்பியல் அறிஞரின் வாழ்க்கை போராட்டம் மிக முக்கிய வாழ்க்கை வரலாற்று பதிவு.
மூளைக்குள் சுற்றுலா- வெ. இறையன்பு
(மூளைக்குள் வாசிப்போரை அழைத்து சென்று எளிய தமிழில் சுவைபட அதை விவரிக்கும் அபூர்வ படைப்பு.)
இரவு வானின் வழிகாட்டி- எம்.பி. பரமேஸ்வரன்
(இரவு சானின் நட்சத்திர வழிகாட்டி நூல். மாணவர்களுக்கு மிகவும் பயன்படும்)
சர் ஐசக் நியூட்டன் – வெ.சாமிநாதசர்மா
(மிக சுவைபட விவரிக்கப்பட்ட அறிஞர் நியூட்டனின் வாழ்க்கை கதை)
ஆண்டன் செகாவ் சிறுகதைகள்- சூ.ம.ஜெயசீலன்
(சிறுகதைகள் அனைத்தும் ஒவ்வொரு விதம். மாணவர்க்கு விருந்து)
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே- சு.நாராயணி
(சூழலியல் நூல்களில் குழந்தைகளுக்கான நேசம் விதைக்கும் நூல் இது)
அறிவாளியா முட்டாளா- த.வி.வெங்கடேஸ்வரன்
(பிறக்கும் குழந்தை பற்றிய மூளை- சிந்தனை என அறிவியல்படி விவரிக்கும் பதிவு இது)
இது தான் வைரஸ் – ஹேமப்பிரியா
(கோவிட்-19) வைரஸ் கிருமி பற்றிய முழுமையான அறிவியல் நூல்)
ரசம்+ரசவாதம்= வேதியியல் ஆதி வள்ளியப்பன்
(வேதியியல் இப்படியும் சுவையாக இருக்க முடியுமா என வியக்க வைக்கும் புத்தகம்)
எனது நீலப்புவிக் கோளம் – ஹெர்மேன் தித்தோவ்
(விண்வெளியில் இருந்து பார்க்க புவி எப்படி இருக்கும்?
சார்லி சாப்ளின் – பி.பி.கே. பொதுவால்
த.யூமா வாசுகி. (சாப்ளினை பிடிக்காதவர் யார் இருக்க முடியும். அவரது வாழ்க்கையில் எத்தனை போராட்டம்)
அறிவியல் Ato Z- ஆத்மா கே. ரவி
(தமிழில் அறிவியலுக்கு என்றே ஒரு அகராதி)
தமிழர் தாவரங்களும் பண்பாடும்- கு.வி. கிருஷ்ணமூர்த்தி. (தமிழகத்தில் ஏறத்தாழ ஆயிரம் வகை தாவரங்களின் அறிமுகம்)
ஜன்ஸ்டீன் கட்டுரைகளும் உரைகளும்
தமிழாக்கம்: ஈஸ்வர, சந்தானமூர்த்தி,ஆர்.பெரியசாமி (மாமேதை ஜன்ஸ்டீனின் படைப்புகள்… நம் சிறார்களுக்கு ஏற்ற மொழியில்)
விலங்குகளின் விசித்திர உலகம்- எஸ்.சுஜாதா
(விலங்குகளது உலகின் மிக அதிசயமான செய்திகளை இந்த நூல் அள்ளித் தருகிறது.
மரபியல் 100/100 – ஆயிஷா இரா. நடராசன்
(புதிய அறிவியலை வினா விடையாக எளிமைபடுத்திய முயற்சி)
பஞ்ச தந்திரம் விஞ்ஞானி ஆக வேண்டுமா முனைவர் கு.சி. அய்யப்பன்
(சிஎஸ்ஐஆர் விஞ்ஞானியின் மாபெரும் தமிழ் சமூக அற்பணிப்பு இந்த நூல்)
சிந்தனை சிற்பி சிங்கார வேலரை பயில்வோம்- சு.பொ அகத்தியலிங்கம்
(சிங்காரவேலர் பற்றியும் அவரது கல்வி பங்களிப்பு குறித்து வாசிக்க வியப்பாக இருக்கிறது)
மனிதக் கதை- பி.பி.சான்ஸ்கிரி
(த.க.மாதவ்) (மனிதனின் கதை என்பது வனங்களில் இருந்து தன்னை மனிதன் செதுக்கிக் கொண்ட சமூகவியல் சரித்திரம்)
காந்தியடிகளும் பகத்சிங்கும்- வெ.ஜீவக்குமார்
(இரு மாபெரும் இந்திய ஆளுமைகளை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் நூல்)
அரிதாரம்- வெ.இறையன்பு
(தர்க்க நியாயங்களை நம் சிந்தனையில் விதைக்கும் பொக்கிசம்)
திருக்குறள்- புலியூர். முருகேசன் உரை
(எளிய உரை. இன்று நவீனம் கலந்த பார்வை இந்நூலின் சிறப்பு)
எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்- ஜான்ஹோல்ட்
(குழந்தைகளின் கற்றல் குறித்த முக்கிய அறிவியல் ஆவணம்)
துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு. –
ஜாஎட்டைமண்ட் த:ப்ரவாஹன்
(உலக வரலாறை இப்படியும் அணுக முடியுமா என நம்மை வியக்க வைக்கும் பிரமாண்டம்)
நேனோ தொழில்நுட்பமும் மயிலிரகின் வர்ண ஜலமும்- த.வி.வெங்கடேஸ்வரன்
(இன்றைய புதிய அறிவியலை மிக எளிய தமிழில் சொல்லித் தரும் புத்தகம் இது)
போர்த் தொழில் பழகு- வெ.இறையன்பு
(எதற்கும் அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு பீடு நடைப்போட பல தந்திரங்களை சொல்லும் நூல்)
பேசாத பேச்செல்லாம்- ச. தமிழ்ச் செல்வன்
(மனதில் இருப்பதை தயக்கம் ஏன்… மாணவர் மனசை திறக்கும் நூல்)
நலம் நலமறிய ஆவல்- எஸ்.வி. வேணுகோபாலன்
(உடல் நலம் குறித்த ஆழமாக செய்திக்குறிப்புகளை முன்வைக்கும் நூல்)
கனவு ஆசிரியர்- தொ.க.துளசிதாசன்
(தன்வாழ்வில் ஒளியேற்றிய தங்கள் ஆசிரியர்களை ஆளுமைகள் நினைவு கூறுகிறார்கள்)
எப்படி வந்தேன் தெரியுமா – ஆயிஷா இரா. நடராசன் (அன்றாட வாழ்வில் பயனாகும் கருவிகள் தோன்றிய பரிணாமம் பேசும் நூல்)
மொழி என்பது- த.பரசுராமன்
(மொழி குறித்த எளிய அதே சமயம் அறிவியல் பூர்வ பதிவு)
மலைப் பூ- விழியன் (ஒரு மலைவாழ் கிராமத்து மாணவரின் விஞ்ஞானியாவது நோக்கிய பயணம்)
பள்ளிக்கூட தேர்தல்- பேரா.ந.மணி
(யார் நல்லாசிரியர் நம் பள்ளிகளிலும் குழந்தைகளே தேர்வு செய்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்)
விண்வெளி மனிதர்கள்- சசிகுமார், அரவிந்தன்
(இஸ்ரோ விஞ்ஞானிகளின் தமிழ் அறிவியல்- மாணவர்களை வாசிக்க தூண்டும்)
ஆட்டிசம் புரிதல்கள்- எஸ்.பாலபாரதி
(இன்றைய யதார்த்தம் இந்த மனநிலை. பள்ளிகளில் அவசியம் இருக்க வேண்டிய வழிகாட்டி நூல்)
தற்கால தமிழ் சொற் சேர்க்கை அகராதி- பா.ரா.சுப்பிரமணியன்
(இன்று மொழியின் வளர்ச்சியை உள்ளடக்கிய சூப்பர் அகராதி இது)
காலம் தோறும் கல்வி – முனைவர் என். மாதவன்
(கல்வி குறித்த முக்கியமான குரல்… விவாதிக்கத் தகுந்த பல அம்சங்களுடன்)
கருவியாலஜி – ஆயிஷா இரா. நடராசன்
உபகரணங்களின் கண்டுபிடிப்பு வரலாறு இது.
தற்கால சிறார் கதைகள்- உமையவன்
(இந்த கொரனா காலத்தின் மிக சிறப்பான சிறார் கதை தொகுப்பு)
டாக்டர் டூலிட்டிலும் வினோத விலங்குகளும்- ஹூலாங்கம்)(குழந்தைகளை மிகவும் கவரும் சிறப்பான காவியம்)
பண்டைக்கால இந்தியா – டி.என்.ஜா.
(அசோகன் முத்துச்சாமி)முற்கால இந்தியா பற்றிய முழுமையான பதிவை மாணவர்கள் அறிய வேண்டும்)
தவிட்டுக் கருவியும் தங்கராஜ் மாமாவும்- மு.முருகேஷ்
சிறார்கதைகளின் நுணுக்கமான மற்றொருபதிவு.
முதல் மூன்று நிமிடங்கள் ஸ்டீவன் வெய்ன்பெர்க்
(த.மா.சிவக்குமார்) (பிரபஞ்சத்தின் தோற்றவியல் பற்றிய விரிவான கதை)
பட்டாம்பூச்சி தேவதை- கன்னிக்கோயில் ராஜா
(தேவதை உலகிற்கு சிறகு முளைக்க வைக்கும் கதையாடல்)
நெருப்புக் கோட்டை – வாண்டு மாமா
(சிறார் இலக்கிய சிற்பி வாண்டு மாமா வின் தலைசிறந்த படைப்பு)
சாக்ரடீசின் சிவப்பு நூலகம்- எஸ்.ராமகிருஷ்ணன்
(நூலக அரசியலின் நுணுக்கங்களை குழந்தை மனதில் விதைக்கும் நூல்)
பனி மனிதன் – ஜெயமோகன்.
(தமிழ் சிறார் படைப்புலகின் சிறந்த நூல்களில் ஒன்று
அறிவியல் வரலாறு- ஜே.டி.பெர்னாட்
(அறிவியலின் நீண்ட வரலாறை சுருக்கமாக பதிவு செய்யும் ஆழமான முயற்சி)
ரயிலின் கதை – பெ.நா.அப்புசாமி
(பெ.நா. அப்புசாமி எனும் அறிவியல் எழுத்தாளரை நம் அடுத்த தலைமுறை அறிய வேண்டும்)
வாசித்தாலும் வாசித்தாலும் தீராது – பேரா. எஸ்.சிவதாஸ் (புத்தகங்களின் மேல்காதலை ஏற்படுத்தும் சிறப்பான எழுத்து)
புரூணோ- ராமச்சந்திர வைத்தியநாத்
(உலக – பகுத்தறிவு உலகின் முதல் நட்சத்திரம் புரூனோ நடத்திய போராட்டம்)
சிறுவர் இலக்கிய சிந்தனைகள் – பூவண்ணன் (சிறார் இலக்கிய பிதாமகர்களில் ஒருவர் பூவண்ணன். அவரது சிந்தனை தொகுப்பு.
உனக்குப் படிக்கத் தெரியாது – கமலாலயன்
(ஒரு பிரமாண்ட போராட்டத்தின் வரலாற்று பதிவு இந்த நூல்)
கற்க கற்பிக்க மகிழ்ச்சியும் தரும் பள்ளி-வசீலி சுகம் லீஸ்கி (த.அ. வள்ளிநாயகம், அம்பிகா) மகிழ்ச்சி தரும் பள்ளிகளின் அம்சங்கள் என்னென்ன…? இதை வாசித்தால் அறியலாம்.)
ஆனி ஃபிராங்க் (எதிர் வெளியீடு)
(உலகை உலுக்கிய அற்புத படைப்பு)
தெருவிளக்கும் மரத்தடியும்- ச. மாடசாமி
வீதிகளும்பள்ளிகளே. கற்றல் பள்ளிக்கு வெளியேயும் நடக்கலாம் என்பதை உணர்த்தும் நூல்
டோட்டோ சான் ஜன்னிலில் ஒரு (த.வள்ளி நாயகம்) உலகப் பிரசித்துபெற்ற சிறார் கல்விநூல்.
இது இந்திய இலக்கிய சிற்பிகள்
அழ.வள்ளியப்பா
(குழந்தைக் கவி அழ.வள்ளியப்பாவின் வாழ்க்கை கதை)
கானகப் பள்ளி கடிதங்கள் – சித்தரஞ்சன் தாஸ்
(வனத்தில் – ஆதிவாசிகளுக்கு பள்ளி நடத்திய அனுபவ குறிப்புகள்… கடிதங்களாக)
ஆசிரியர் முகமூடி அகற்றி- பேரா. ச.மாடசாமி
(கற்றலில் இனிமையை ஏற்படுத்த ஆசிரியர்க்கு வழிகாட்டுகிறார் கல்வியாளர் மாடசாமி)
போயிட்டு வாங்க சார்- ச. மாடசாமி
(ஆசிரியர்களின் அருமையை மாணவர்கள் உணர செய்யும் நூல் இது)
முரண்பாடுகளில் இருந்து கற்றல்- பேரா.கிருஷ்ணகுமார் (த.ஜே.ஷாஜகான்) (கற்றலின் நுணுக்கங்களை ஆழமாக பேசும் அரிய புத்தகம்)
ஆசிரியரின் டைரி – ஜான் ஹோல்ட்– (கற்றலின் மிக சிக்கலான அம்சங்களை கடந்துவரும் ஒரு ஆசிரியரின் அனுபவ பகிர்வு)
குழந்தை மொழியும் ஆசிரியரும் – பேரா.கிருஷ்ணகுமார் (குழந்தைகளின் மொழியை பற்றிய கல்வியல் சார்ந்த அணுகுமுறை)
வன்முறை இல்லா வகுப்பறை – ஆயிஷா இரா.நடராசன் (ஆசிரியர் – மாணவர் உறவு பற்றிய விரிவான நூல்)
விரால் மீனின் சாகச பயணம் – உதயசங்கர் (குழந்தைகளின் படைப்பு மனங்களை ஊக்குவிக்கும் கதை நூல்)
கல்வி ஓர் அரசியல் – பேரா. வே. வசந்திதேவி (ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டிய நூல்)
குழந்தைகளைக் கொண்டாடுவோம் – ஷ. அமனஷ்வீலி (குழந்தை உளவியலை ஆசிரியர்களுக்கு புரியவைக்கும் புத்தகம்)
சக்தி பிறக்கும் கல்வி – வே.வசந்தி தேவி
(கல்விசார்ந்த ஆழமான உரையாடலை முன்வைக்கும் நூல்)
எறும்பும் புறாவும் – லியோ டால்ஸ்டாய்
(மிக பிரபலமான சிறார் கதையாட நூல்)
உலகின் மிகச் சிறிய தவளை – எஸ்.ராமகிருஷ்ணன்
(சிறார் இலக்கிய உலகின் குறிப்பிடத்தகுந்த சிறப்பு படைப்பு) – தொடரும்
