ச.சுப்பாராவ்
ஒரு புத்தகக் காதலியின் அடையாளங்கள் எவையெவை? அவளிடம் சொந்தமாக ஒரு நூலகம் இருக்க வேண்டும். ஒன்றரையடிக்கும் மேல் நீளமான வார்த்தைக்கும் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். (Sesquipedalian என்றால் என்ன என்று அகராதியிலோ அல்லது கூகுளிலோ தேடிப் பாருங்கள்!) புத்தகத்தை கைக் குழந்தையைக் கையாள்வதைப் போல் கையாள வேண்டும். பழைய புத்தகங்கள் வாங்க வேண்டும். எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை ஆகியவற்றைக் கண்டால் நெற்றிக் கண்ணைத் திறக்க வேண்டும். இப்படி எத்தனை எத்தனையோ. இந்த எத்தனை எத்தனையோக்களில் அத்தனை கல்யாண குணங்களையும் கொண்டவரான ஆனி ஃபாடிமன் (Anne Fadiman) எழுதியிருக்கும் Ex Libris – Confessions of a Common Reader என்ற அற்புதமான புத்தகத்தைப் படித்த அனுபவமே இந்தக் கட்டுரை.

பல இடங்களிலும் மீ டூ என்று சொல்ல வைக்கும் இந்த புத்தகம் அளவில் மிகச் சிறியது. 116 பக்கங்கள்தான். அமெரிக்காவின் தேசிய நூலகமாகக் கருதப்படும் லைப்ரரி ஆஃப் காங்கிரஸின் ஊழியரான ஆனி, அந்த நூலகம் நடத்திய சிவிலைசேஷன் என்ற பத்திரிகையில் அவ்வப்போது புத்தகங்கள் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
குழந்தைகளை வாசிக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? அவர்கள் கண்களில் படும்படியாக பெற்றோர்கள் அவர்கள் கண் எதிரே வாசிக்க வேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா? அது உண்மைதான். ஆனியின் தந்தை அமெரிக்காவின் மிகப் புகழ் பெற்ற பதிப்பாளரான சைமன் அண்ட் செஷ்டரில் மிக நீண்ட காலம் மெய்ப்புப் பார்த்தவர். தாயார் எழுத்தாளர். இருவருமே எங்கு எழுத்துப் பிழைகளைக் கண்டாலும் உடனே அவற்றைச் சுட்டிக் காட்டி திருத்தச் சொல்லி வம்பு செய்பவர்கள். அவர்களுடைய சொந்த ஊரின் உள்ளூர் பத்திரிகையான ஃபோர்ட் மையர்ஸ் நியூஸ் பிரஸில் வரக் கூடிய பிழைகளை எல்லாம் கத்தரித்து வைத்து அவ்வப்போது பத்திரிகைக்கு அனுப்பி வைப்பாராம் ஆனியின் அம்மா.
ஆனி தன் அம்மா வீட்டிற்குப் போகும் போது ஒரு முறை அம்மா கத்தரித்து வைத்திருந்த பத்திரிகைப் பக்கங்களை எடுத்துப் பார்க்கிறாள். மொத்தம் 394 கட்டிங்குகள். அவற்றை அவரது தாயார் ரகம் பிரித்தும் வைத்திருந்தார். 56 ஒருமை – பன்மை மயக்கங்கள், மூன்று இரட்டை எதிர்மறைச் சொற்கள், it’sக்கு பதிலாக its பயன்படுத்துவது, itsக்கு பதிலாக it’s பயன்படுத்துவது, there, their மயக்கம், என விதம் விதமான தவறுகள். அப்பாவிற்கும், அம்மாவிற்கும் என்று வீட்டில் தனித்தனி நூலகங்கள் ஆளுக்கு 7000 – 8000 புத்தகங்கள், என்ற சூழலில் வளர்ந்தவர் ஆனி. எழுத்தாளர் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். புத்தகங்களுடனான அவரது தொடர்பு – தொடர்பு என்று சொல்வது மிக எளிய வார்த்தை – நெருக்கம், காதல், நேசம் எல்லாம்தான் இந்தப் புத்தகம்.

தனது நூலகத்தையும், கணவனின் நூலகத்தையும் ஒன்று சேர்த்து ஒரு புத்தகத்திற்கு இரண்டு பிரதிகள் இருந்தால் ஒன்றுக் கழித்துக் கட்டியது பற்றிய கட்டுரைதான் முதல் கட்டுரை. நூலகங்களின் திருமணம் என்பது அதன் தலைப்பு. பத்து வருட பழக்கம், ஆறு வருடம் சேர்ந்து வாழ்ந்த அனுபவம், அதில் திருமணமாகி ஐந்தாண்டுகள், ஒருவரின் காப்பிக் கோப்பையில் மற்றவர் குடிப்பது, ஒருவரின் டீ சர்ட்டை மற்றவர் போடுவது, ஒருவரின் சாக்ஸை மற்றவர் போடுவது என்று அந்நியோன்னியமாக இருந்தாலும், நூலகங்களை இணைக்கவில்லை. பிரிய நேரிட்டால், என்ன செய்வது? என்ற பயம்தான் காரணம். பிறகுதான் வீட்டில் இடப் பற்றாக்குறை எனும் நடைமுறைச் சிக்கல் வரும் போது இணைக்கிறார்கள். இருவரிடமும் பிரதிகள் இருக்கும் புத்தகத்தில் எவர் பிரதியைக் கடாசுவது? என்பதில் சண்டை. எப்படி அடுக்கி வைப்பது என்றொரு சண்டை.
ஆனியின் கணவன் என்னைப் போன்றவன் போல. சகலவிதமான புத்தகங்களையும் இலக்கியம் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, வகைதொகையில்லாமல் வரிசையாய் அடுக்குபவன். ஆனி அதற்கு நேர்மாறாக, இயற்கை, பயணம், கதை, கவிதை, உளவியல் என்றெல்லாம் பிரித்து அடுக்க விரும்புபவள். நல்ல புத்தகக் காதலர்கள் புத்தகங்களைப் பிரித்து அடுக்கும் போது என்ன நடக்கும்? எப்போதோ படித்த ஒரு பழைய புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதுதான் ஆனியின் வீட்டிலும்.
ஒவ்வொரு புத்தகப் புழுவின் நூலகத்திலும் அவருக்கே உரித்தான ஒரு சேகரிப்புத் தொகுப்பு இருக்கும். அது போன்று பல பிரபலங்களின் சேகரிப்புகள் பற்றி ஒரு கட்டுரை. ஜார்ஜ் ஆர்வெல் 1860களில் வெளிவந்த பெண்கள் பத்திரிகைகளை சேகரித்து பைண்ட் செய்து வைத்திருந்தாராம். நான் இர்விங் வாலஸின் அத்தனை படைப்புகளையும் வைத்திருக்கிறேன். அது போல ஆனி துருவப் பகுதிகளுக்கு பயணித்தவர்களின் அனுபவங்கள் குறித்த புத்தகங்களை சேகரித்தது பற்றி எழுதியிருக்கிறார். புத்தகக் காதலர்கள் உலகெங்கும் என்னென்னவோ, தொழில் செய்து கொண்டு சத்தமில்லாமல் இருக்கிறார்கள். மற்ற புத்தகக் காதலர்களுக்கு புத்தகங்கள் பற்றி ஏதேனும் கற்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். பள்ளிப் பருவத்தில் ஆனியும், அவரது சகோதரரும் சுற்றுலா செல்லும் போது கோபன்ஹேகனில் ஒரு அறையில் தங்குகிறார்கள். சகோதரன் இரவு வெகு நேரம் படித்துக் கொண்டிருந்து விட்டு, புத்தகத்தை அப்படியே குப்புற வைத்து விட்டு தூங்கி விடுகிறான். காலையில் அறையை சுத்தம் செய்ய வந்த பெண்மணி, கூடாரம் போல் கவிழ்ந்து கிடக்கும் புத்தகத்தை எடுத்து, அவன் படித்த பக்கத்தில் ஒரு புக்மார்க்கை (புக்மார்க்கிற்கு தமிழில் என்ன?) வைத்து மூடி வைக்கிறார். பின்னர், மேஜையில் இருந்த ஒரு தாளில், “Never Do this to a book” என்று எழுதி வைத்து விட்டுப் போகிறார்.
வாழ்க்கையின் ஒரு பெரிய பாடத்தை ஒரு எளிய பெண்ணிடமிருந்து கற்றது பற்றிய அந்தக் கட்டுரை நமக்கும் பெரிய பாடம். புத்தகத்தில் பென்சிலில் குறிப்புகள் எழுதுங்கள். அதுவும் 3ம் நம்பர் பென்சிலில் எழுதினால்தான் அழித்தால் கரை விழாது என்கிறார் ஆனி. ஆனியின் நண்பர் ஒருவர் எட்டாயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம் ஒன்றை தன் வீட்டில் வைத்திருக்கிறாராம். அவர் அதிக வெயில் அடிக்கும் நாட்களில் நூலகத்தின் ஜன்னல்களைத் திறக்க மாட்டாராம். வெயில் பட்டு புத்தகங்களின் முதுகு கறுத்துப் போய்விட்டால் என்ன செய்வது? குழந்தையின் முதுகில் வெயில் சுள்ளென்று பட விடுவோமா என்ன? ஒரு புத்தகத்தை எடுத்துப் படிப்பதைத் தவிர அதை வைத்து வேறொன்றும் செய்யக் கூடாது என்பது ஆனியின் கொள்கை.
பரிசாகக் தரும் புத்தகத்தில் எழுதித் தருபவை, நூலாசிரியரிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்குவது பற்றியெல்லாம் ஆனி மாதிரி தேர்ந்த வாசகர்களால் மட்டுமே எழுத முடியும். அவரைப் போன்ற தேர்ந்த வாசகர்களால் மட்டுமே படித்து ரசிக்கவும் முடியும். மற்ற எல்லாப் பரிசுகளிலும் இன்னாருக்கு அன்புடன் இன்னார் என்று எழுதித் தருவதைக் கிழித்துத்தான் அந்த பரிசையே பார்க்க முடியும். ஆனால், புத்தகம் ஒன்றில் மட்டும்தான் பரிசிற்கான வாசகத்தைப் பிரிக்கவே முடியாது என்கிறார் ஆனி. எழுத்தாளர் வாசகர்களுக்கு புத்தகத்தில் கையெழுத்திட்டுத் தரும் வழக்கம் மேலைநாடுகளில் பல ஆண்டுகளாக உள்ளது. நேரில் வாங்க இயலாத வாசகர்கள் எழுத்தாளருக்கு இந்தப் புத்தகத்தில் தங்கள் கையெழுத்து வேண்டும் என்று கடிதம் வைத்து புத்தகத்தை அவருக்கு அனுப்புவார்கள். திரும்பி வந்தால்தான் உண்டு.
கவிஞர் ஈட்ஸ், தாமஸ் ஹார்டியிடம் இப்படியான வேண்டுகோள்களை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்ட போது, தரையிலிருந்து கூரை வரை அலமாரிகளில் நெருக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைக் காட்டி, “எல்லாம் நம்ம கையெழுத்து கேட்டு வந்த புத்தகங்கள் தான்” என்றாராம். இது மாதிரி என் நண்பனுக்கு, என் காதலனுக்கு என்று எழுதி கையெழுத்திடப்பட்ட புத்தகங்களை பழைய புத்தகக் கடையில் பார்த்தால் ஆனி ரத்தக் கண்ணீர் வடிப்பார். அது எத்தனை பெரிய துரோகம்? இப்படித்தான் ஒரு முறை என் அருமை நண்பர் எக்ஸுக்கு… மரியாதையுடன் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா என்று கையெழுத்துப் போட்டுத் தந்த புத்தகத்தை ஷா பழைய புத்தகக் கடையில் பார்த்தாராம். அதை வாங்கி, என் அருமை நண்பர் எக்ஸுக்கு… புதுப்பிக்கப்பட்ட மரியாதையுடன் மீண்டும் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா என்று அதே பக்கத்தில் எழுதிக் கொண்டு போய்த் தந்தாராம்.
ஒரு பிரபல நாவலில் காட்டப்படும் இடங்களுக்கு பயணித்து இங்கு தான் இது நடந்தது, இந்த வசனத்தை இங்கு தான் சொல்வார்கள் என்று மகிழும் வாசகர்கள் ஒரு ரகம். பொன்னியின் செல்வன், மோகமுள் போன்ற நாவல்களுக்கு இப்படியான ரசிகர்கள் இங்கே உண்டு. இதற்கு அடுத்தபடியான வெறி பிடித்த வாசகர்கள் அந்த இடத்திற்குச் சென்றதும், அங்கேயே ஓரிடத்தில் உட்கார்ந்து, பையிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்து, குறிப்பிட்ட அந்த இடம் வரும் பக்கத்தை எடுத்துப் படிப்பவர்கள். எனக்கே அந்த அனுபவம் உண்டு. தன்னடக்கம் கருதி இங்கு அது பற்றிச் சொல்லவில்லை. நண்பர்கள், எனது சில இடங்கள்… சில புத்தகங்கள்… நூலைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இவ்விஷயத்தில் என்னைப் போல பலரும் இருந்திருக்கிறார்கள் என்று ஆனி சொல்லும் போது மகிழ்ச்சி பொங்கியது.
நம்மிடம் எப்போதும் திட்டு வாங்கிக் கொண்டே இருக்கும் மெக்காலே பிரபு இந்த மாதிரியான வாசகர்தானாம். எந்த நாட்டின் எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊர் பற்றிய புகழ் பெற்ற புத்தகம் இருந்தால், அதை அதில் வர்ணிக்கப்படும் தெருவில் நின்று படித்து ரசிப்பாராம். அவர் போலவே, கிராண்ட் கான்யானில் கொலராடோ நதிக் கரையில் ஒரு கூடாரத்தில் தங்கி, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கொலராடோ நதி பற்றி The exploration of the Colorado River and Its Canyons-ல் பாவெல் வர்ணிப்பதைப் படித்து உள்ளம் பொங்குகிறார் ஆனி.
புத்தகத்தில் வரும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். E என்ற எழுத்தே இன்றி ஜார்ஜ் பெரக் எழுதிய 311 பக்க நாவல், எழுத்தாளர்கள் பயன்படுத்திய எழுது பொருட்கள் பற்றி… (சர் வால்டர் ஸ்காட் வேட்டைக்குச் சென்ற போது திடீரென மனதில் ஒரு வாக்கியம் தோன்றியதாம். எழுத கையில் மைக்கூடு, இறகு எதுவும் இல்லை. துப்பாக்கியை எடுத்து ஒரு காக்காயை சுட்டாராம். ஒரு இறகைப் பிடுங்கி, அதன் ரத்தத்திலேயே தோய்த்து, அந்த வரியை ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொண்டாராம்!) மௌன வாசிப்பு.
உரக்க வாசித்தல் பற்றிய சுவையான தகவல்கள் (மௌன வாசிப்பில் எழுத்தாளன் மட்டுமே இருக்கிறான். உரக்க வாசிக்கும் போது, அவனது வார்த்தைகளுக்கு ஒரு லயம் தருவதால் நீங்கள் அவனது பங்குதாரர் ஆகிறீர்கள்), புத்தகங்களை அடுக்கி வைப்பது பற்றி மட்டுமே மிக விரிவாக பிரிட்டிஷ் பிரதமர் கிளாட்ஸ்டோன் எழுதியிருக்கும் On books and the Housing of them என்ற புத்தகம், பழைய புத்தகக் கடைகள், அவற்றில் கிடைக்கும் புத்தகங்கள்.. என்று அவர் சொல்வது அனைத்துமே புதிது. புத்தகக் காதலர், காதலிகள் படித்துப் படித்து இன்புற வேண்டியவை. எஸ்.ரா. வீடற்ற புத்தகங்கள் என்று சொன்னதை இவரும் சொல்கிறார். பழைய புத்தகக் கடையிலிருந்து ஒரு புத்தகத்தை வாங்கி வருவது அனாதை இல்லத்திலிருந்து ஒரு குழந்தையை அழைத்து வந்து அதற்கு ஒரு வீட்டைத் தந்து, நம் குடும்ப உறுப்பினராக்குவதற்கு ஒப்பானது என்கிறார்.
புத்தகத்தைப் படித்து முடித்து அலமாரியில் வைக்கும் போது என்னையறியாமல் என் அலமாரியைப் பார்க்கிறேன். எத்தனையோ அனாதை புத்தகங்கள் என் வீட்டில் பத்திரமாக இருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.