பிரியா ஜெயகாந்த்
தமிழ் இலக்கியம் வழி இந்திய ஆட்சிப்பணித் தேர்வெழுதிப் பயின்ற முதல் ஐ ஏ எஸ் அதிகாரி என்ற பெருமையைக் கொண்ட ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் ஆய்வுப் பணியிலும் எழுத்துப்பணியிலும் ஆட்சிப்பணியிலும் சிறந்து விளங்கியவர். மாவட்ட நிர்வாகம், தொழில், நிதித்துறை, சுற்றுலா, பண்பாட்டுத்துறை, சமூக நீதி, பேரிடர் மேலாண்மை என்று பல துறைகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஈர்ப்புவிசை மீறி எழத்தெரிந்த பறவைக்கு, சிறகே வானம். ஒரு தொடக்கம் ஒரு முடிவு என இயங்கும் புதினமாய் இல்லாமல், பல சிறுகதைகளின் தொகுப்பாகவே இயங்குகிறது வாழ்க்கை என்று கூறும் ஆசிரியர், பதினான்கு வயதில் பெருந்தலைவர் காமராசர் அவர்களால் விதைக்கப்பட்ட ஐ ஏ எஸ் என்ற விதை உணர்வுகளுக்குள் புதையுண்டு விருட்சமாக வளர்ந்ததற்கான அடையாளம் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றது என்று கூறுகிறார்.
உலக அரங்கில் மிக வேகமாக வளர்கிற இரு பெரும் நாடுகளாகச் சீனாவும் இந்தியாவும் இருந்தபோதும் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி என்ற பெருமை மிக்க முகவரிச் சீட்டு இந்தியாவிற்கு இருந்தது என்பதில் பெருமிதம் கொள்கிறார். நாவல், சிறுகதை கவிதை போன்றவற்றைக் குறித்த மதிப்புரை என்பது எளிதில் எழுதப்படக்கூடியது. ஒரு கட்டுரை நூலினை வாசித்து அது குறித்து விமர்சனம் எழுதுவது அந்த நூலின் சாரத்தைக் கடத்துவதே ஆகும். அந்த வகையில் “விழித்திருக்கும் போது காணும் கனவிற்கு வேறொரு பெயர்தான் நம்பிக்கை” என்பதை முன்னுரையாகக் கொண்ட “சிறகுக்குள் வானம்” என்ற தன்னம்பிக்கைக் கட்டுரையினைப் படித்து எனக்குள் ஏற்பட்ட மனதிடத்தினைப் பிறரும் பெறவேண்டும் என்ற ஆவலில் எழுந்த முயற்சிதான் இந்த நூல் அறிமுகம்.
தமிழாசிரியராய்ப் பணியாற்றுவதையே குறிக்கோளாய்க் கொண்டு இளங்கலையும், முதுகலையும் படித்துவிட்டுத் தினமணி நாளிதழில் பணியாற்ற ஒப்புக்கொண்ட அந்த மணித்துளி அவரது வாழ்வின் திசைகளைத் தீர்மானித்தது என்று கூறுகிறார். பலருக்கு வார்த்தைகள் கூடக் காதில் விழாதபோது சிலர் கண்களைப் படித்துக் கதவுகளைத் திறந்து விடுகிறார்கள் என்று நன்றியுணர்வின் வெளிப்பாடாகத் தனது முன்னேற்றத்திற்கு வழிகோலிய தனது ஆசிரியர்கள் மற்றும் மூத்த ஆளுமைகளான ஏ. என். சிவராமன், புலவர் மு. சோமநாதன், பேராசிரியர் தமிழ்க்குடிமகன், ஐராவதம் மகாதேவன் ஆகியோரை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தமை அவரது நீங்கா நினைவில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் அன்பை வெளிப்படுத்துகிறது.
“தமிழ் பிடித்திருந்தது. தமிழ்க் கவிதைகள் பிடித்திருந்தன. அதனால் தமிழ் மாணவனாய் ஆனேன்” என்று கூறுகையில் தனக்கு விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுப்பது நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஆற்றல் கொண்டது என்பதை “கனவு மெய்யாகப் பாடுபட வேண்டும். கனவு மெய்ப்படும் என்ற கணிதம் புரிந்தவர்க்கே கனவு மெய்ப்படும். மறந்தும் சுமக்காதீர்கள் மற்றவர்களின் கனவை. பிடித்ததை விடாதீர்கள், பிடிக்காததைத் தொடாதீர்கள்” என்ற அவரது வரிகள் வெளிப்படுத்துகின்றன.

அறிவுத்துறை, அரசியல், தொழில், வணிகம், கலை என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சாதித்தவர்களின் வாழ்க்கை போதிக்கிற ஓர் எளிய உண்மை, இலக்கு வேண்டும் என்பதுதான் இலக்கு இல்லாமல் பாய்கிற அம்பு எதையோ தொடும். ஆய்வுக்கூடங்களிலும் அறிவியல் அரங்கங்களிலும் இருந்து விஞ்ஞானியாக வளர்ச்சி அடைந்திருக்கவேண்டிய ஒரு நண்பன் சாதாரணப் பணியில் இருந்ததையும், படிப்பில் அதிக நாட்டம் இல்லாத நண்பன் தையல் கடைத் தொழிலை தொடங்கி இளம் வயதிலேயே நகரின் முக்கியமான தையலகங்களில் ஒன்றாகத் தனது நிறுவனத்தை வளர்த்தெடுத்துப் பலருக்கு வேலை வாய்ப்பை அளித்துச் சீரும் சிறப்புமாக வாழ்வதையும் ஒப்பிடுகையில் தனக்கு பிடித்த இலக்கினை நோக்கிப் பயணித்தால் மட்டுமே வெற்றியை எட்ட முடியும் என்பதைப் புலப்படுத்துகிறார்.
“இலக்கு இருந்தால்தான் திட்டமிடுதலிலும் செயல்படுத்தலிலும் தெளிவு பிறக்கிறது. எலிகளை விடுங்கள். எவரெஸ்ட்டைத் தொடுங்கள்”
களைப்புத் தோன்றிய பின்னால் ஓடும் ஒட்டம்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது. திறமையின்மையை விடத் தீர்மானமின்மையே தோல்விக்குக் காரணம். வாழ்க்கையும் ஒரு நெடுந்தூர ஓட்டம் போன்றதுதான். விரைவாக ஓடுதல் என்பதைவிடத் தொடர்ந்து ஓடுதல் என்பதைப் பொறுத்துத்தான் வெற்றி இருக்கிறது என்பதைக் கூறிவிட்டு, “தொடர்ந்து ஓடுங்கள். போட்டியின் தொடக்கப் புள்ளிதான் நிரம்பி வழிகிறது. நிறைவுப் புள்ளி காலியாகத்தான் இருக்கிறது. வியர்வை உப்புச் சேரும் போதுதான் வெற்றி சுவைக்கிறது” என்று விடாமுயற்சி வெற்றி தரும் என்பதனை உணர்த்துகிறார்.
கணக்கில், அறிவியலில் நூற்றுக்கு நூறு வாங்குகிற, கராத்தே கற்ற, ஓடத்தெரிந்த, பாடத்தெரிந்த, வீணை வாசிக்கத்தெரிந்த, விநாடி வினாவில் பரிசு வாங்குகிற ஆல் இன் ஒன் குழந்தைகளையே பெற்றோர்கள் வார்த்தெடுக்க முயல்வதால் இரண்டாம் பரிசுகளே ஏமாற்றம் அளிக்கத் தொடங்கிவிட்டன என்ற அவர் கூற்றின் மூலம், நம் குழந்தைகளைத் தோல்வியையும் ஏற்கும் விதமாக வழிநடத்திச் செல்வதே பெற்றோரின் கடமை. அதற்குப் பெற்றோருக்கு அந்தப் புரிதல் ஏற்படவேண்டும் என்றும் பாடம் புகட்டுகிறார். “வெற்றியின் அருமையை விளங்கிக் கொள்வதற்குத் தோல்வியின் துணை கொஞ்சம் தேவைப்படுகிறது. திசைகளைத் தீர்மானிப்பது திறமையும் தீர்க்கமும்தான்.”
அறிதலுக்கும் செய்தலுக்கும் உள்ள இடை வெளியின் புரிதல்தான் வெற்றியிலிருந்து வெறும் பேச்சை வேறுபடுத்துகிறது. திட்டமிடப்பட்ட தாமதம் என்பது தீண்டத்தகாத கேவலம். நேரம் தவறாமை என்பது காத்திருப்பவர்களுக்குக் காட்டும் கரிசனம் அல்ல, சுய ஒழுக்கம். தவறிக் கூட யாரும் தழுவக் கூடாத மதம் தாமதம்.
“நான் அதிர்ஷ்டத்தில் அசையாத நம்பிக்கை உள்ளவன். நான் அதிகமாக உழைக்க, உழைக்க எனது அதிர்ஷ்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது” எனும் தாமஸ் ஜெபர்ஸனின் வார்த்தைகளில்’ அதிர்ஷ்டம் என்று ஒன்று இல்லை; அது நம் அயராத உழைப்பே’ என்ற உண்மை பொதிந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார்.
“காத்திருக்கத் தெரிந்தவர்களுக்காகக் காத்துக் கிடக்கிறது காலம். காத்திருப்பது என்பது அதிர்ஷ்டம் வந்து ஆரத்தி எடுக்கும் என்று அயர்ந்திருப்பதல்ல. ஊன்றிய விதை முளைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடு விழித்திருப்பது. சில்லரை வெற்றிகளைவிடச் சிறப்பானது மகத்தான தோல்வி.”
மிருனாள் சென் உலகின் பார்வையில் இந்தியத் திரைப்படங்களின் தரத்தை உயர்த்திய மிகச்சிலரில் ஒருவர். அவரது அயராத உழைப்பும் தொண்ணூறு வயதிலும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் நமக்கும் ஏற்படவேண்டும்.
“நேசிப்பவர்களிடமே நெருக்கம் காட்டுகிறது வாழ்க்கை. வேட்கை இல்லாத மனம் வெறுமையின் களம். ஈடுபாடின்மை இறப்புக்குச் சமம்.”
ஏற்றத் தாழ்வுகளால் விதியை வியர்வையால் வெல்லும் தனிமனித முயற்சிகளைத் தடுக்கவோ தளர்த்தவோ இயலாது. உழைப்புக்கு முன் அனைவரும் சமமே என்பதாகப் பொருள் படுகிறது.
“பணிக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு பக்குவமான சமன்பாட்டைக் கண்டறிந்து கடைப்பிடிக்க வேண்டும். கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில் நினைவுக்கு வருபவை கணக்குப் பார்த்து நடந்த ஆண்டுகளும், மாதங்களும், வாரங்களும், நாட்களும், நிமிடங்களும் இல்லை. கூடுதல் மைல் நடந்த கணங்களே” நமது இலக்கை மட்டுமே மனதில் கொண்டு வாழ்க்கையின் மறுபக்கத்தை அனுபவிக்க மறந்துவிடக் கூடாது.
தனக்குக்கீழ் பணியாற்றுபவர்களை அரவணைத்து, அன்பு காட்டி வேலை வாங்குவதென்பது தலைமைப் பண்புகளில் ஒன்றாகும். வறுமையும் போராட்டமுமான வாழ்க்கைச் சூழலும் கொண்ட மாணவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து படிப்பில் முழுக் கவனத்துடன் இருந்து நல்ல மதிப்பெண்கள் பெறுவது அவர்களின் தீர்மானத்தை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையில் இனாமாகக் கிடைக்கிற எல்லாவற்றிற்கும் எங்கோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு வகையில் ஒளிந்திருக்கிறது ஒரு விலை. பொற்கூண்டுக் கிளிகளுக்கும் புரிந்துதான் இருக்கிறது, ஒப்பனையில்லாத வானம் எவ்வளவு உயர்ந்ததென்று.
“வாழ்வில் உயர் பதவி, உயர் புகழ், மிகு செல்வம் என்று உச்ச நிலைகளைத் தொடுகிற பலருக்கும் ஒருவகையான உயர்மட்ட வியாதி ஒட்டிக் கொள்கிறது. எப்படிக் கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்திற்குப் போனதும் ஒருவகையான மூச்சுத் திணறல் ஏற்படுகிறதோ அதைப் போலவே, கை தொடும் உயரத்தைக் கணக்கிடும் போது உங்கள் காலிருக்கும் இடத்தைக் கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்கள்.”
“நிறைவும் குறைவும் நெஞ்சில் இருக்கிறது. எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ, அதுவே மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உலகைச் செலுத்தும் உந்து விசை எது? கனவுகள்தாமே? இரு கைகளும் இரு கால்களும் இல்லாத பிலிப் குரோய்சோன் என்ற பிரெஞ்சுக்காரர் இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்தவர். யார் சொன்னது, கால்கள் மட்டும்தான் நடக்கும், சிறகுகள் மட்டும்தான் பறக்கும் என்று.
வானம் மிகப் பெரிது. சிறகு மிகச் சிறிது. அதனால் என்ன? அவரவர் வானம், அவரவர் சிறகு.” என்று நம்மை ஊக்கப்படுத்தும் வரிகள் பல உள்ளன இந்த நூலில். நூல் முழுதும் ஒவ்வோர் அத்தியாயத்திலும், தமது அனுபவங்களை மட்டுமே கூறாமல் ஒவ்வோர் அனுபவத்தையும் தனது வாழ்வில் சந்தித்த தருணங்களை நினைவு கூர்ந்து அதனைக் கவிதை நடையில் அளித்து வாசிப்பதற்குச் சிறந்த நூலாக வடிவமளித்திருப்பது சிறப்பு. கட்டுரையின் நிறைவாகப், பத்துத் திருக்குறள்களை நமக்கு வழிகாட்டுதல்களாக மேற்கோள் காட்டுகிறார். சிறகுகள் பாரமில்லை, சிகரங்கள் தூரமில்லை. வாருங்கள், சிறகை விரித்து வானை வசப்படுத்துவோம்.