ப்ரதிபா ஜெயசந்திரன்
மொத்தம் 22 சிறுகதைகளை உள்ளடக்கிய சமகாலத் திபெத்தியக் கதைகள் பேராசிரியர் கயல்விழி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பின் சிறப்பம்சமே, இது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் என்னும் தடயமே இன்றி அசலாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழை, அதன் இலக்கணம், மரபு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் உள்வாங்கிக்கொண்ட ஒருவரால்தான் இப்படிப்பட்ட மொழிபெயர்ப்பு சாத்தியமாகும்.

பொதுவாக ஒரு சிறுகதைத் தொகுப்புக்குத் தலைப்பு வைக்கும்போது, தொகுப்பிலுள்ள ஒரு மிகச் சிறந்த சிறுகதையின் தலைப்பையோ அல்லது பொதுவான தற்காலச் சிறுகதைகள் என்னும் தலைப்பையோ வைப்பது வழக்கம். ஆனால் மாறாக, இத்தொகுப்பிலுள்ள ஒட்டுமொத்த சாராம்சத்தையும் உள்வாங்கிக்கொண்டு அதற்கு இயல்பான ஒரு தலைப்பைச் சரியாகச் சூட்டுவது பெரும்பாலும் நிகழுவது இல்லை. ஆனால் இந்தத் தொகுப்புக்கு, வைக்கப்பட்டுள்ள தலைப்பு, நம்மைப் புருவம் உயர்த்த வைக்கிறது.
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளைத் தொகுத்தவர்: தென்சின் டிகி “திபெத்திலுள்ள புனித மேகன் போம்ரா மலையில் கோராவில் தொடங்கி நியூயார்க் நகரின் சைனா டவுனில் இருக்கும் சட்ட விரோதமான விபச்சார விடுதிகள் தொடங்கி நியூயார்க் நகரின் கிராமப் புறங்களில் அமைந்துள்ள புத்த சமய நோன்புக் கூடங்கள் வரை நாம் திபெத்திய ஆண்களை, பெண்களை, இளையவர்களை, முதியவர்களை இக்கதைகளின் வழியே பார்க்கிறோம். அவர்கள் நேசிப்பதை, ரகசியத் திட்டங்கள் தீட்டுவதை, ஆசை கொள்வதை, தோற்பதை, சகித்துக்கொள்வதை, இவற்றோடு அவர்கள் உயிருடன் இருப்பதைப் பார்க்கிறோம். ஆம். உயிர் மட்டும் சுமந்துகொண்டு இருப்பதை. மூச்சு மட்டும் விட்டுக்கொண்டு, தங்கள் எண்ணங்களுக்கு உரிய இடம் தரப்படவேண்டும் என்று உரிமைகளைக் கோரிக்கொண்டு, அவர்கள் மீதான உங்களின் சிறிதளவு கவனத்தை எதிர்பார்த்துக்கொண்டு உயிருடன் இருக்கிறார்கள். இதுதான் எங்கள் திபெத்தியர்களின் வாழ்க்கை. இப்படித்தான் நாங்கள் இப்போது வாழ்கிறோம்” என்னும் வரிகள், இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துச் சிறுகதைகளையும் வாசிக்கத் தூண்டுகின்றன.
மனிதர்களின் வாழ்க்கையை மனிதர்கள் ஒவ்வொரு கணமும் வாசித்துக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர்களின் வலி நிறைந்த வாழ்வை நாம் வாசிக்கும்போது, அதற்கு இணையான நமது வாழ்வின் துயரங்களை எளிதில் கடந்து செல்ல முயற்சிக்கிறோம். இலக்கியத்தின் மிகச் சிறந்த கருதுகோளாக, முடிபாக, வாழ்வின் பயணமாக, வலிகளுகளுக்கான ஒத்தடங்களாக, கடந்துசெல்லும் திராணியாக, நம்பிக்கைகளுக்கான சிறு அடையாளங்களாக, வாழவைக்கும் கிரியாவூக்கியாக இம் முயற்சிகள் இருந்துகொண்டே இருக்கின்றன.
திபெத்தியர்களின் கற்பனைகள் வேறுமாதிரியாக இருக்கின்றன. இயற்கையோடு இணைந்த அவர்களின் சிந்தனை ஓட்டம் நம்மை மலைக்க வைக்கிறது. கண்சிமிட்டல் என்னும் ஒரு சிறுகதை இப்படி ஆரம்பிக்கிறது: ’டென்பாவுடைய வீட்டுக் கூரையின் மரக் கழிமீதமர்ந்து இருந்த பறவைக் குஞ்சுகள்கூட மழையில் களைப்படைந்துவிட்டது போலக் காட்சியளித்தன. வரிசையாக உத்தரத்தின் மேலமர்ந்து மழைத் தூறலைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சிறு பறவைகள் தங்களுடைய தலையை இடம் வலமாகத் திருப்பியபடி மென்மையான குரலில் பாடின. வீட்டுக் கூரையின் கீழ்ப்பகுதியில் இருந்து நீர்த்தாரைகள் நிதானமாகத் தொடர்ந்து விழுந்து அவ்வோசையை வீட்டின் முற்றம் முழுமைக்கும் கொண்டுசேர்த்தது’. இந்த மனிதர்களோடு பறவைகளும்
வீட்டு மிருகங்களும் ஒன்றாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இயற்கையோடு இணைந்த வாழ்வு என்றால் அது இவர்கள் வாழும் வாழ்க்கைதான். இந்த மனிதர்கள் மிகவும் எளிமையானவர்கள். வன்மம் இந்த மனிதர்களின் வாழ்வில் இல்லை, அவ்வாறான மனம் கொண்ட வாழ்வே அவர்களின் வாழ்வியலாக இருக்கின்றது.
கண்சிமிட்டல்’ என்னும் இக்கதை, ஒரு சிறுகுழந்தையின் சுபாவமான அசைவுகளை முன்னிறுத்தி, நாடுகடத்தப்படுவோமோ என்ற பயத்திலிருக்கும், அக்குழந்தையின் நாடோடிப் பெற்றோரை அங்கே நிரந்தரக் குடிமக்களாக்கி, அதே குழந்தையின் வேறு செயல்கள் மூலம் சீன அதிபர் மா சே துங் –கையே நையாண்டிப் பொருளாக மாற்றிவிடுகிறது. இக்கதை ஒரு தரமான அரசியல் நையாண்டி.
சக்கரம் கண்டுபிடித்தது, மனித நாகரிகத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது நாம் வரலாறுகளில் படிக்கிறோம், ஆனால் இந்தச் சிறுகதைகளில் ஒன்றான ‘புதுச் சாலையின் சர்ச்சை’ யில், அந்த கிராமத்திலுள்ள கிழவர் ஒருவர், தன் கிராமத்திற்குச் சாலை நிர்மாணிப்பதைப் பலமாக எதிர்க்கிறார். ‘நம்முடைய தந்தையருக்கோ, மூதாதையருக்கோ சாலை என்ற ஒன்று இருந்ததில்லை. நமக்கும் இப்போது அது அவசியமில்லை. வலிமை வாய்ந்த இருநூறு குடும்பங்கள் நக்சார் கிராமத்தில் இருக்கிறோம். அவர்களுடைய கொடியை இங்கு நடுவதற்கு இதுவரை வாய்ப்பின்றி இருந்தது. இந்தச் சாலை அமைப்பதன் மூலம் அதைச் செய்வதை நாங்கள் அனைவரும் உறுதியாக எதிர்க்கிறோம்’ சாலை அமைப்பதை அவர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக எண்ணாமல், ‘அவர்கள் நம் மூதாதையருடைய நிலத்தின் சாரத்தையே கசக்கிப் பிழிகிறார்கள்’ என்று எண்ணுகிறார்கள். இப்படி எண்ணும் அந்த மனிதர்கள், சாலை அமைக்க விடாமல் சாலை அமைக்க இருக்கும் அந்த நிலத்தில் படுத்துக் கொள்கிறார்கள். மண்ணைச் சமன்படுத்தும் கருவியில் இணைக்கப்பட்டிருந்த மண் அள்ளும் கருவியை நிலத்தில் ஆழமாக ஊன்றி அகு யோண்டன் படுத்துக் கிடந்த இடத்தின் வெகு அருகே இருந்த மண்ணோடு சேர்த்து அகு யோன்டனையும் தூக்க முயற்சித்ததும் அவர் பயந்துவிட்டார். தன் சூபாவைத் (நீண்ட அங்கி) தூக்கியெறிந்து, பல முறைகள் உருண்டு தன்னுடைய காலணியைப் போட்டுக்கொள்ளக்கூட மறந்துபோய் அங்கிருந்து ஓட்டமெடுத்தார்’
அந்தக் கதை இவ்வாறு முடிகிறது: ‘அந்தச் சாலைக் கட்டுமானப் பணி நிறைவுற்றபிறகு கம்பளியையும், இன்னபிற பொருட்களின் சுமையையும் ஏற்றிக்கொண்டு நிறைய டிரக்குகள் அடிக்கடி அந்தச் சாலை வழியே பயணிக்கின்றன. கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’. எந்தப் புதுமையான விஷயமும் தங்களின் அமைதியான வாழ்வைச் சீர்குலைத்து விடும் என்கிற அச்சம் அவர்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது.
’வேட்டையாடியின் நிலவு’ என்னும் சிறுகதை, ஒரு வேட்டையாடியின் இரவுநேரப் பயணத்தை வெகு அழகாகச் சித்தரிக்கிறது. அவனைப்போலவே அந்த நிலவும் நோயுண்டு தட்டுத் தடுமாறி அவனோடு பயணிப்பதாகச் சித்தரிக்கிறது. சீனப்படைகளின் தாக்குதலுக்குத் தப்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டிருந்தான். கடைசியாகக் களைப்புடன் ஓர் இடத்தில் வந்து குண்டடிபட்டு விழுந்துகிடக்கிறான். இரவு கழிந்து விடியலின் நிறம் படிப்படியாக வானத்தில் பரவியது. தன் பயண இலக்கை அதிவிரைவில் அடைய கிழக்குத் திசையிலிருந்து ஒரு கொக்கு சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கியது. தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்த கிழவன் கண்களை மூடிக்கொண்டான்…. அது தன்னைக் கொண்டுபோகவே வந்திருக்கிறது என்பதை அவன் அறிந்திருந்தான் என்ற வரிகளில் அந்தப் பறவையின் துணை உடனிருப்பதை அவன் உணர்ந்திருப்பதை அறியமுடிகிறது.
தென்சின் சண்டியூ எழுதிய சும்கியின் பனிச்சிங்கம் மிக அற்புதமான கதை. திபெத்திலுள்ள காட்டுப் பகுதியில் பனிச்சிங்கம் இருப்பதாகவும், அதை, கருணையான தூய்மையான உள்ளத்தால் மட்டுமே பார்க்க முடியும் என்னும் நம்பிக்கை இருக்கிறது. டாஷி, தன் மகள் சும்கியை அழைத்துக்கொண்டு நித்தியப் பனி உறைகோடு காணப்படும் ஐலேகா மலையில் ஏறுகிறான், அது அவர்களுக்கு ஓர் இன்பச் சுற்றுலா. போகும் வழியில் ஒரு கூடாரமடித்து ஓய்வெடுக்கிறார்கள். அந்த இடத்திற்குமேல் சிறுமியால் நடக்க முடியாது போய்விடுகிறது. எனவே, சிறுமியைக், கூடாரத்திலேயே தங்கவைத்துவிட்டு அவன் ஐலேகா மலையில் ஏறுகிறான். அவன் சென்று திரும்புவதற்கு முன் சிறுமி கூடாரத்தை விட்டு வெளியே வருகிறாள். அங்கே ஒரு பனிச்சிங்கம் வருகிறது. அந்தப் பனிச்சிங்கத்தோடு விளையாடுகிறாள். பின்னர் பனிச்சிங்கம் மறைந்துவிடுகிறது. டாஷி திரும்பிவந்தவுடன், தான் பனிச்சிங்கத்துடன் இவ்வளவு நேரம் விளையாடிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறாள், அவனால் நம்ப முடியவில்லை. சிறுமி தான் சிங்கத்தோடு விளையாடினதற்கான அடையாளமாக அந்தப் பனிச்சிங்கத்தின் மயிர்க்கற்றை ஒன்றைக் காட்டுகிறாள். டாஷி, ஆச்சரியத்துடன், தன் மகளின் முன்னே மண்டியிட்டு, “ ஆமாம், மிகக் கருணையான, தூய்மையான உள்ளத்தால் மட்டுமே பனிச் சிங்கத்தைப் பார்க்க முடியும் “ என உறுதிபடச் சொல்கிறார்.

‘காற்றுக் குதிரையின் பயணம்’ என்னும் ஒரு சிறுகதை ஒருவிதமான சினிமாத்தனமாக இருந்தாலும், ‘ஓ. ஹென்றி’ கதைகளில் முடிவு வாக்கியம் தரும் ட்விஸ்ட் போல இந்தக் கதையிலும் வந்து நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறவில்லை. லங்க்டா என்றழைக்கப்படும் பிரார்த்தனைக் கொடிகளைத் திபெத்தியர்கள் பறக்கவிடுவதென்பது ஆதிகாலம் முதல் அவர்களுக்கிடையே இருக்கும் ஒரு தனித்துவமான பழக்கம். லங்க்டா என்பதன் பொருள் ‘காற்றுக் குதிரை’ என்பதாகும். திபெத்தின் தலைநகரான லாசாவில், டேம்டினின் மகள் லாடொன் தனது பதின்மூன்றாவது பிறந்தநாளை அதி விமரிசையாகக் கொண்டாடுகிறாள். அப்போது அவள், “என் பெயர் லாடொன், இந்தப் பலூன் யாருக்குக் கிடைக்கிறதோ அவர்கள் கீழ்க்காணும் முகவரியில் என்னைச் சந்திக்கலாம்” என்று ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனில் தன் முகவரியையும் எழுதிப் பறக்க விடுகிறாள்.
அதே வேளையில் கிழக்கு திபெத்தின் ஒரு நாடோடிக் கிராமமான விதாங்கில் டென்மாவின் மனைவி டோல்மாவின் வீட்டில் ஒரு பலூன் வந்து விழுகிறது. அதை அவர்களின் மகள் லாடொன் எடுக்கிறாள். அவளுக்கு ஆச்சரியம்! அந்தப் பலூனில் எழுதப்பட்டிருந்த வாசகம்தான் அவளின் ஆச்சரியத்திற்குக் காரணம். “என் பெயர் லாடொன். இந்த பலூன் யாருக்குக் கிடைக்கிறதோ அவர்கள் கீழ்க்காணும் முகவரியில் என்னைச் சந்திக்கலாம்” என்ற தகவல் இருக்கிறது. அந்தப் பலூனில் லாசாவின் முகவரி எழுதப்பட்டிருக்கிறது. என் பெயர் கொண்ட ஒருத்தி லாசாவிலிருந்து இந்தப் பலூனைப் பறக்கவிட்டிருக்கிறாள். உடனே அந்த முகவரிக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள்: தன் பெயரும் லாடொன் என்றும், தான் கிழக்கு திபெத்திலுள்ள விதாங்கில் வசிப்பதாகவும், இருவரும் இனிக் கடிதம் மூலம் நம் நட்பை வளர்த்துக்கொள்ளலாம் என்றும் எழுதுகிறாள். லாசாவிலுள்ள லாடொன் அந்தக் கடிதத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாள். இருவரின் நட்பும் வளர்கிறது. நட்பு தொடங்கி மூன்று வருடத்தில், இருவரும் தங்கள் குடும்பத்தாருடன் சந்திக்கலாம் என்றும் ஏற்பாடாகிறது. இரு குடும்பத்தவர்களும் லாசாவில் ஒரு நாள் சந்திக்கின்றனர்.
அவர்களுக்கு நேர்ந்த பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இரு லாடொன்களுக்கிடையே இருந்த உருவ ஒற்றுமைதான். உயரம், முக அமைப்பு, தோலின் நிறம், தலைமுடியின் நிறம், குணாதிசயங்கள், அங்க அசைவுகள், குரல் எல்லாம் இருவருக்கும் ஒரே போல இருக்கின்றன. இருவரும் ஆச்சரியத்தில் கட்டித் தழுவிக்கொள்கின்றனர். இந்தக் கதையின் கடைசி வரி இப்படி முடிகிறது: லாசாவில் வசித்த லாடொனின் தந்தை டேம்டினும், விதாங்கில் வசித்த லாடொனின் தாய் டோல்மாவும் வெகுநேரம் பேச்சற்று, ஒருவரை ஒருவர் பார்த்தபடி, தங்கள் கடந்த காலத்தை நினைத்துக்கொண்டனர். இந்தக் கடைசி வரிகள் ஒட்டுமொத்தக் கதையின் போக்கையே மாற்றி, லாடொன்களின் உருவ ஒற்றுமைக்கான ஆச்சரியத்தையும் மிஞ்சி, இந்த இருவருக்கிடையேயான கடந்தகாலக் காதலைச் சொல்கின்றன.
பொதுவாகவே, திபெத்தியக் கதைகளில் ஒருவிதமான புராணிகத் தன்மை நிறைந்து காணப்படுகிறது. இந்தக் கதைகளில் பயணிக்கும் கதைமாந்தர்களுக்கு விதம் விதமாகக் கனவுகள் வருகின்றன. கனவுகளில், ஆறுகளும் நதிகளும் மலர்களும் குளிரும் நிலவும் பறவைகளும் உடன் பயணிக்கின்றன. மொத்தக் கதைகளையும் படித்து முடித்தபின் நாமே திபெத்தின் பிரஜைகளாகி, அந்த மழையையும், குளிரையும், அனுபவித்து, அந்த உடைகளையும் அணிந்து, நாடோடிகளாகத் திரிவது போன்ற ஒரு பிரமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்தக் கதைகளை இயல்பான தமிழில் மொழிபெயர்த்துத் தந்த பேராசிரியர் கயல்விழிக்கு மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.