து.பா.பரமேஸ்வரி
டேனியல் பெரியநாயகத்தின் புல்லாங்குழல் கதையிலிருந்து தொகுப்பு ஆரம்பமாகிறது. தொகுப்பில் இடம்பிடித்துள்ள. பெரும்பாலான பாத்திரங்கள் நம்மைச் சுற்றியே வாழும் மனிதர்களை அடையாளம் காட்டும் விதமாகவே அமைந்துள்ளன.
உறவுகளின் உளவியலில் உருக்குலைந்த பெற்றோர்களின் மனவுளைச்சலைப் பேசும் கதையாக உறவு. பெற்றோர்களின் உணர்வைப் புரிந்து கொள்ளாத பிள்ளைகள் அவர்களின் சேமிப்பில் பெருக்கி வைத்த சொத்துபத்துக்காகப் போட்டி போடுகின்றனர். பெற்றோர்களின் வயோதிகத்தை அலட்சியப்படுத்திப் பணத்தை மட்டுமே குறி வைக்கும் இன்றைய தலைமுறையில் பொருள் வாத நோய்மைக்கு மருந்து இடுகிறது ”உறவு” கதை. காதல் என்பது அன்பின் சாயல் என்பதை ”பால்யசிநேகிதி” கதைநமக்குபுரியவைக்கிறது. புரியாத புதிராக நமக்கு அறிமுகமான இந்தக்கதை ஒருவித ஈர்ப்பின் ஈரத்தை மனதின் மகிழ்ச்சியை காதல் என்று அறிமுகப்படுத்துகிறது. பிள்ளைப்பருவத்தின் பசியேக்கங்கள் எதிர்காலத்தில் பல உளவியல் பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை சரசுவும் சரசுவும் கதை நமக்குப் புரிய வைக்கிறது.

“ஒரு நாள் அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவள் ஒரு நாள் கூட அந்தப் பலகாரங்களைத் தின்றதில்லை. ஏதாவது விசேஷ நாட்கள் என்றால் மட்டும் சாப்பிடக் கிடைக்கும் மற்ற நாட்களில் அக்கம் பக்கம் கேட்பவர்களுக்கு விற்று விடுவார்கள் என்று சொன்னாள். அன்று அவனுக்கு அவள் முன்னால் சாப்பிடவே முடியவில்லை.” பெரும்பாலான ஏழைபாழைகளின் அவல நிலையின் நிஜம் காணல் சரசு சரசு. வேலையில்லாத் திண்டாட்டத்தின் அவலம் குறித்து பல கதைகளில் கதைசொல்லியாக இதர பாத்திரங்களாக நின்று தமது ஆழமான அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். வேலையில்லாத பட்டதாரிக்குப் பெற்றோர் வழங்கும் அவமதிப்பும் ஏளனமும் அருவருப்பு நடத்தையும் வெறுப்பு உமிழும் செய்கைகளும் காட்சிப்படுத்திய பல கதைகளில் வாசலில் ஒரு பெட்டி கதையும் ஒன்று. “இன்னும் எவ்வளவு தூரம் போகணும் காளி..”” தெரியல…” என்றான் அவளைப் பார்க்காமல்..” தூரம் கதையின் பல இடங்களில் ஆசிரியர் கோடிட்ட வரிகள் நமக்கு நூலாசிரியரின் இயற்கை சார்ந்த ரசனை மெய்சிலிர்த்துகிறது.
ஒவ்வொரு பருவத்தையும் காலத்தையும் அவரின் வரிகள் நம்மின் காலத்தையும் பருவத்தையும் பரிணமித்துத் தரும் வலிமையான சக்தி கொண்டதாகவே தொகுப்பின் வாசிப்பு ஒவ்வொரு கதையிலும் எனக்கான சூழல் பரிணமிப்பதை உணர முடிகிறது. இதுவும் கூட ஒரு தேர்ந்த படைப்புக்கர்த்தாவின் படைப்பாக்கப்பாங்கு… “இப்போது வானம் கசங்க ஆரம்பித்திருக்கிறது. நட்சத்திரங்கள் மங்கலாகி அழுது வடிந்தன..” இரவு முடிந்து பொழுது புலர்வதை நூலாசிரியர் மறைமுகமாக வாசகருக்கு உணர்த்தும் பாங்கு ரசிக்கத்தக்கது. இப்படியான ரசனை மிகு காட்சிகள் அனேகம் கொட்டிக் கிடக்கிறது கதைகளில் நிலை கதையின் இரண்டாம் அத்யாயம் அசைவு கதை.தொகுப்பின் பெரும்பான்மையான கதைகள் ஒன்றுடன் மற்றொன்று முடிச்சிடுகின்றன. “மனிதனைப் பார்த்து வாழ்க்கையும் வாழ்க்கையைப் பார்த்து மனிதனும் பரஸ்பரம் கெக்கலி கொட்டிக் கொண்டே யாத்திரைப்பட வேண்டியதுதான்.”

தொகுப்பின் பல கதைகள் நம்மைக் கதாபாத்திரத்தின் சோகக் காட்சியிலிருந்து மீண்டுவர நேரம் எடுத்துக் கொள்கிறது. மனதிற்குள் தங்கிவிடும் உணர்வுப்பூர்வமான மாந்தர்களைக் கொண்டு கதை படைத்த நூலாசிரியர் தொகுப்பைச் சுற்றி தண்டவாள வேலிக்குள் நடமாடும் மனிதமனங்களை உலவ விட்டுள்ளார் கதாபாத்திரங்களாக. “ரயில்வே கலாச்சாரமே தனி உலகத்தோடு சம்பந்தமில்லாதது.” டேவிட் செல்லையாவின் கலைப் பயணம், சோமைய்யாவின் பாட்டு மண்ணாங்கட்டிகுமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு போன்ற கதைகளில் அறிமுகமாகும் நூலாசிரியரின் இரயில்வே அனுபவப் பாத்திரங்கள்…. கதையல்ல நிஜமான மனித நடமாட்டங்கள்..
’உறவு’ கதை போல ’அன்னியம்’ கதையும் பிள்ளைகளின் முதிர்பெற்றோர் மீதான அலட்சியத்தைப் பேசும் படைப்பாக இருக்கிறது. சின்ன சின்னப் பிரச்சனைகளுக்கு விவாகரத்து கோரும் இன்றைய பிடிவாத தாம்பத்தியத்தில் அன்பை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்த அனுசரணையான நமது மூதாதையபெற்றொரின் அன்னியோன்யமான வாழ்க்கை நமக்கான படிப்பினை. வேற்றுசாதிப் பையனைக் காதல் செய்த குற்றத்திற்காக ஆதிக்கச்சாதிக் குடும்பத்தின் அடக்குமுறையில் பாதிக்கப்பட்ட பருவப் பெண்ணின் மனவோட்டங்களை ’போர்வை’ கதைக்கிறது என்றால்; கணவனின் சந்தேக உளவியல் பாதிப்பில் அறிவாலும் திறமையாலும் பேச்சு சாதுர்யத்தாலும் நிமிர்ந்திருந்த பெண்ணின் சுதந்திரத்தை திருமணம் என்கிற ஆண்சமூகம் கட்டமைத்த வர்க்க ஒடுக்குமுறையில் விலங்கிடப்பட்டு பூட்டுகிறது. ஆணின் அடக்குமுறைவக்கிரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணின் மன இழப்பைப் பேசுகிறது ’சிந்தியது’ கதை. வீடும் வெளியும் கதை சுதந்திர இந்தியாவிற்கு மிக நெருக்கமான காலத்தைப் பதிவு செய்கிறது.
இந்த நூல்வெறும் இலக்கியம் சமூகம் கடந்து போகும் மனிதர்கள் அவர்களின் நிறங்கள் குணாதிசயங்கள் போன்றவற்றை அலசும் சாதாரணத் தொகுப்பாக நமக்குப் பரிச்சயமாகவில்லை.
’சிந்தியது’ கதையின் நாயகி போல சில பெண்கள் தற்கொலை முயற்சிக்கு ஆளாகும் அபலை நிலையில் ஒருவித மாயலோக அமானுஷ்ய மனநிலைக்கு ஆட்பட்டு வாழ்க்கையையும் இயல்பையும் இழக்கின்றனர்.சிந்தியது கதாநாயகி போலில்லை ’வாசனை’ கதைநாயகி.ஒரு கட்டத்தில் தாங்க மாட்டாது அத்துமீறுகிறாள் என்பதைக் கதை புதிராக்கி வைக்கிறது.
மதவெறியில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவித்த இரத்த சரித்திரங்களுக்காகவும் சில பக்கங்களை ஒதுக்கியுள்ளார் நூலாசிரியர்.தொகுப்பின் மிக முக்கியமான முக்காலத்தின் பிரச்சனையாக இருக்கும் நிலப்பிரிவினையில் விளைந்த மதக்கலவரம். மனித உயிர்களைப் பணயப்பொருளாக்கி சுதந்திரத்தை விலைபேசி விற்றுச் சென்றனர் ஆங்கிலேயர்.நமது தேசத்தை விட்டுப் போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் நயவஞ்சகமாக எல்லைக்கோட்டில் பிளவு ஏற்படுத்தி பிரிவினைக் கலவரத்தை மதம் வழியாகத் தோற்றுவித்தது.
“குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓர் இரவு” கதை வழியாக அறிமுகமானது வாசகருக்கு இந்நூலை அறிமுகப்படுத்தி மதவேற்றுமை பிறந்த அந்த நாட்களை அறியப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். இந்தக் கதையில் அன்வரின் படுகொலை நம்மைக் கதிகலங்கச் செய்தது என்றால் இரண்டு கண்கள் கதையில் இக்பால் மற்றும் குழந்தை நூர்ஜஹானின் துர்மரணம் மற்றொரு திகில் நிரம்பிய தருணங்களை வழங்கியது. இரக்கமுள்ள ஒவ்வொர் இந்திய இந்துவும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு. மதமும் கடவுளும் இத்தனை வல்லமை பெற்றவர்களா? அன்பையும் மனிதத்தையும் உயிர் மீதான பரிவையும் மழுங்கடித்து சக மனிதர்களைத் துச்சமாகக் கருதும் அளவிற்கு மதவெறியும் இறைவேட்கையும் அத்தனை பேராபத்தானதா? என்கின்ற வியப்பே மேலோங்குகிறது.
“இலட்சக்கணக்கான கடவுளர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் தேவ தூதர்களும் முனிவர்களும் குருக்களும் உள்ள இந்தியத் துணைக் கண்டத்தில் அதற்கு அதிகமாக இவர்களையே நம்பியிருந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டனர்.” “இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எல்லா மதக் கடவுளர்களின்,முப்பத்தி முக்கோடி தேவர்களின், தேவதூதர்களின் கையாலாகாததனத்திற்குச் சாட்சியாய் அந்தக் கண்கள்..” “தாங்கள் இதுவரை வணங்கி வந்த எந்தக் கடவுளும் தங்களது உயிர் போகும் அந்த வேளையில் கூடப் பிரசன்னமாகிக் காப்பாற்ற வரவில்லை என்பதை உயிர் பிரியும் கடைசி நொடிகளிலேயே இறந்தவர்கள் உணர்ந்தார்கள். அதைவிட ஒவ்வொருவரும் இந்தப் படுகொலைகளைத் தங்கள் கடவுளின் பெயரைச் சொல்லியே செய்தனர் என்பது ஒரு விசித்திரமான முரணாகவே மனித நாகரீக வரலாற்றில் இருந்து வருகிறது.”
“தன் வாழ்வில் தேசம் என்றால் என்னவென்றோ விடுதலை என்றால் என்னவென்றோ பிரிவினை என்றால் என்னவென்றோ அறியாத லட்சக்கணக்கான அப்பாவி இந்துக்களின் முஸ்லிம்களின் சீக்கியர்களின் உயிரைக் காப்பாற்ற எந்தக் கடவுளும் வரவில்லை.” அவரவர் அமைதியாக அவரவர் விருப்பப்பட்ட பிரதேசங்களில் இடர்ப்பாடின்றி இருக்கலாம்.விருப்பப்பட்ட கடவுளை எந்த விலக்குமின்றி வணங்கலாம். விரும்பிய மதத்தைத் தடையின்றி தழுவலாம். விரும்பிய கோட்பாடுகளை இடைமுறிவின்றிப் பின்பற்றலாம். இங்கு எல்லாமே எல்லாருக்கும் பொதுவானது தான். இந்தியா என்பது ஒற்றை மதத்தை முன்மொழியும் தேசமல்ல. இது ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு என்பதை அன்று மட்டுமல்ல இன்றும் மதப்பற்றாளர்கள் முதற்கொண்டு அரசாங்கம் வரை ஏன் புரிய மறுக்கிறது என்கிற எனது ஆதங்கத்திற்கான பதில் இக்பால் வழியாகக் கிடைத்தது. “மேடம் இன்னும் ஒரு ஆயிரம் வருடம் நீங்க இங்கே இருந்தாலும் உங்களால் இந்தியாவை புரிந்து கொள்ள முடியாது. எங்களுடைய அரசியல் தலைவர்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லையே..” ஒற்றைத் திணிப்பும் ஒன்றின் மீதான அதீத பிடித்தமும் அதை அபகரிக்கவும் கைப்பற்றிக் கொள்ளவும் போட்டி போடும் மனிதர்களை வக்கிர சிந்தனையும் செயலும் செய்யச் சொல்லி தூண்டும் மதம். December 1 கதை நெல்லை மாவட்டத்துத் தாமிரபரணி ஆற்றைச் சுற்றிய வட்டாரத்தின் சிதிலமடைந்த நிலையை காட்சிப்படுத்துகிறது .
ஸ்டேஷன் மாஸ்டராகத் தான் பணிபுரிந்த இடத்தின் தனது அனுபவங்கள் அத்தனையையும் பல கதைகளில் கதை சொல்லியாகத் தன்னை ஒப்பனை செய்து வாசகரை அமர வைத்து சுவாரஸ்யமாகக் கதை சொல்லி முடித்த நூலாசிரியர் ஒரு ரயில் பயணியாகவும் தன்னை வந்தடைந்த சக பயணி ஒருவரின் வாழ்வனுபவத்தை அதே ருசி குலையாமல் நகைப்புடன் கடத்துகிறார். அண்டாக்கா கசூம் அபூகா குசூம் கதையின் தலைப்பே நம்மின் மனத்துயரங்களைக் களைந்து மனம் விட்டு சிரிக்கவும் கதையை வாசிக்க ஒரு புதுவித சுவாரஸ்ய அனுபவத்தையும் கொண்டு வருகிறது. ஊழி சிறுகதை இலக்கணத்தின் வடிவத்தை முற்றிலுமாகத் திருப்பிப் போட்ட ஒரு மாறுபட்ட புனைவு எழுத முனைப்புக் காட்டி வரும் இளம் சிறுகதை எழுத்தாளர்களுக்கு தடங்கள் பலவற்றைத் திறந்து விட்டுள்ளது ஊழி கதை என்கிற வரையறைக்குள் அடக்க முடியாத ஒரு தளத்தில் பிறிதொரு வகைமைக்குள் தன்னை நிறுத்தி வைத்துள்ளது கதை.
தொகுப்பு மாறுபட்ட வாசிப்பனுபவத்தை நமக்கு வழங்குகிறது. ஒட்டுமொத்த மனிதர்வாழ்வையும் சமூக அவலங்களின் விளிம்பு நிலையையும் அன்பு நேசம் பாசம் பந்தம் காதல் போன்ற உணர்வு கனத்தையும் கூட நமக்கு வழங்கி வேடிக்கை பார்க்கிறது.. தொகுப்பின் வாசிப்பிற்குப் பின் எழுபது எண்பதுகாலங்களில் இலக்கியத்தில் கரை புரண்ட மூத்த ஆளுமைகளின் வரிவடிவத்தை வாசித்த திருப்தியை மகிழ்வை முழுமையாக வழங்குகிறது தொகுப்பு. மொழியும் நடையும் ஒவ்வொரு கதைச் சூழலுக்குத் தக்கவாறு.