பிரேமா இரவிச்சந்திரன்
பெய்யும் மழையின் ஓசையை ரசிப்பவர்களுக்கு அது இசையாகி விடுகிறது. இசையை ஆராதிப்பவர்களுக்கு ஆட்டம் தானாக வந்து விடுகிறது. அவ்வாட்டத்தோடு கதைகளை இணைத்துக் காட்சியாக்கினால் அதுவே கூத்து எனப்படுகிறது. திருவிழாக் காலங்களில் மக்கள் கூடுவதற்கு வசதியான முச்சந்தியில், இயல், இசை, நாடகம் என மூன்றையும் இணைத்தவாறு இசையோடு கூடிய புராணக் கதைகளை இரவு முழுவதும் நடத்துகின்ற ஆடலும் பாடலும் இணைந்த கலையே தெருக்கூத்து என வளர்ந்து வந்தது. தாய் மொழியான தமிழிலிருந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகள் பிரிந்ததைப் போலத் தெருக்கூத்திலிருந்தே இயல், இசை, நாடகமென கலைகள் பிரிந்து வளர்ந்திருக்க வேண்டுமென்பது அறிஞர்களின் கூற்று.

மண்ணில் களை பறித்து விதை விதைத்து உழைத்துக் களைத்துப் போகும் ஊர் மக்களுக்கு, குறிப்பிட்டகால இடைவெளிகளில் கொண்டாட்டங்கள் தேவைப்பட்டன. அதற்காகத்
திருவிழாக்களை ஏற்படுத்தித் தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். நன்றாக வாழ்ந்து வயது மூப்பின் காரணமாக மறையும் ஊர்ப் பெரியவர்களது இறுதி ஊர்வலத்தைத் துக்கமாக எண்ணாமல் அவர் வாழ்ந்ததின் வெற்றியாக எண்ணிக் கொண்டாடி வழியனுப்பி வைத்தார்கள். அதற்காகத் தெருக்கூத்துக் கலைஞர்கள் நகைச்சுவையோடு கூடிய நாடகங்களையோ கதைகளையோ இயற்றி இரவு முழுவதும் கூத்து நடத்தி உறவுகளோடு கூடியிருந்த மக்களை மகிழ்வித்தார்கள். அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வுகளை தெருக்கூத்தின் மூலமாக அறியச் செய்தார்கள். துன்பங்களைக் களைவதற்கு ஏற்ற நிகழ்ச்சியாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் தெருக்கூத்துகள் விளங்கின.
“கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளித் தற்று”
திருக்குறள்- 332
சேர்த்து வைத்த ஒருவரது பணமும் சொத்தும் அவரை விட்டுப் போவதென்பது கூத்து முடிந்தவுடன் மக்கள் கலைந்து செல்வதைப் போன்றதாகும் என்கிற வள்ளுவரது கருத்திலிருந்து, மக்கள் கூட்டமாக இணைந்து விரும்பி ரசித்த கலையாக கூத்து இருந்திருக்கிறது என்பதோடு, 2000 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்த கலை தெருக்கூத்து என்பதையும் அறிய முடிகிறது.
இப்படியெல்லாம் இருந்த கலை இப்பொழுது எப்படி இருக்கிறது என்கிற கேள்வி மனதில் இருந்த வண்ணம் இருக்க, தெருக்கூத்துக் கலைஞரை அட்டைப்படமாகக் கொண்ட படுகளம் என்ற நாவல் அதனை வாசிக்கத் தூண்டியது. பரிணாம வளர்ச்சி என்பது மொழிக்கும் உண்டு எனும் பொழுது அது கலைக்கும் பொருந்தும்தானே? படிப்படியாக வளர்ந்து வந்த இக்கலையில் மிருதங்கம், ஆர்மோனியம், புல்லாங்குழல், குழித்தாளம் போன்ற இசைக் கருவிகளையும் பயன்படுத்தினர். இராமாயணம், மகாபாரதம், பாஞ்சாலி சபதம், அர்ஜுனன் தபசு, போன்ற கதைகளோடு நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் நாடகம், நளாயினியின் கதை போன்றவையும் நடத்தப்பட்டன. சுதந்திரப் போராட்டத்தின் பொழுது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் தெருக்கூத்திற்கும் முக்கியப் பங்குண்டு. அரிதாரம் எனும் முக ஒப்பனைக்கு அக்காலங்களில் தாவரங்களிலிருந்து நிறங்களைப் பெற்றாலும் பிற்காலங்களில் மஞ்சள், குங்குமம், சந்தனம், செந்தூரம், காக்காப் பொன் எனும் ஒருவகைப் பளபளப்பான பொடி போன்றவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு அணியும் ஆடைகளில் இடம்பெறுகின்ற கிரீடம், புஜம், கன்னக்கதுப்பு, கண்ணாடிகள் பதித்த ஆடையென அணிந்தவை யாவும் மொத்தம் நாற்பத்தி ஆறு கட்டுகளைக் கொண்டிருந்தன. கனமான அவற்றை அணிந்து கழற்றுவதையே ஒரு கலை எனலாம். ஓசையிலிருந்து பிறந்து வளர்ந்த தெருக்கூத்துக் கலையானது இன்று அவர்கள் வைத்திருக்கும் ஆடைகளை எடுத்துச் செல்கின்ற போக்குவரத்துச் செலவிற்குக் கூட சிரமப்படுகின்ற நிலையில் அரசிடம் கோரிக்கை வைத்து இலவசமாக அரசுப் பேருந்துகளில் எடுத்துச் செல்வதற்கான அனுமதியைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்கள். இக்கலையை மட்டுமே நம்பி இருக்கின்ற இவர்கள், வாழ்வாதாரத்திற்கு என்ன செய்கிறார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கும் பொழுது, உடலில் வலுவிழந்த பிறகு தம் இறுதிக் காலங்களில் எப்படி இருக்கப் போகிறார்கள் என்பதற்கு எந்த ஒரு பதிலும் அவர்களுக்கு இல்லை.

இன்றைக்குக் கலையின் மீது மக்களுடைய ஆர்வமும் தெருக்கூத்துக் கலைஞர்களது பொருளாதாரமும் எவ்வாறு இருக்கிறது என்பதை ஓரளவிற்கு இந்த நாவல் பேசுகிறது. தொடர்ந்து எடுத்துச் செல்வதற்கு எப்படியான மாற்றங்களைச் செய்யலாம் என்பதை இந்த நாவல் நன்கு அலசி இருக்கிறது. படுகளம் என்பது மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன், அநீதி இழைத்த துரியோதனனை வதம் செய்யும் நிகழ்விடமாகும். போராடிப் பெற வேண்டிய தேவைகளை மக்களுக்கு உணர்த்தும் விதமாகப் புராணக் கதைகளைக் கொண்டு தெருக்கூத்தினை நடத்திய கலைஞர்கள் இன்று தங்களது வாழ்வாதாரத்திற்கே போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நாவலில் தெருக்கூத்துக் கலைஞனின் மகன் கல்வி பயின்று அரசு வேலையினைப் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அதனைத் தவிர்த்து விட்டுத் தெருக்கூத்தினையே தனது தொழிலாகக் கையில் எடுக்கிறான். தன்னுடன் படித்த தனது நேசத்திற்கு உரியவள் அரசு வேலையைப் பெற்றுப் பலரோடு பழகுகின்ற சூழலில் வேறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தாலும் ஆழமான அன்பின் காரணமாக நாயகனையே தொடர்ந்து விரும்புகிறாள். தெருக்கூத்துக் கலையில் எவ்விதமான மாற்றங்களைக் கொண்டு வந்து வாழ்வாதாரத்தைப் பெற்று வாழ்க்கையோடு தொடர்ந்து பயணிக்கிறார்கள் என்பது தான் கதை.
ஒரு கலையானது எப்பொழுது காப்பாற்றப்படும் என்ற கேள்வியில், அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். மகிழ்விக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு வளர்ந்து வரும் சமூகத்தோடு பயணித்துப் பரிணமிக்க வேண்டும். பழமையை விலக்கும் போது அதன் வேர்கள் விலகி விடாதவாறு உறுதியாக ஆழமாக இருக்க வேண்டும். இப்படி இல்லாவிட்டால் உயிரை உதிர்த்த உடலைப் போல மண்ணுக்குள் புதைய வேண்டி வரும். உயிர்ப்போடு வைத்திருக்க மாற்றங்களோடு மாறி வர வேண்டும். இந்த நூலில் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தொடர்ந்து தெருக்கூத்தில் இயக்கி வந்த கலைஞர்கள் மக்களிடம் சலிப்பினைக் காணும் பொழுது, கதைகளைக் கேள்விகளுக்கு உட்படுத்துகிறார்கள். “மகாபாரதத்தில் கௌரவர்களின் பிரதிநிதியாகச் சூதாட்டத்தில் சிறந்தவனான சகுனியைப் பகடைக்காயை உருட்டி விளையாடக் கேட்டுக்கொண்ட பொழுது, பஞ்சபாண்டவர்கள் ஏன் சாதுரியத்தில் சிறந்தவனான கண்ணனை முன்னிறுத்தவில்லை? சூதாட்டம் கூடாதெனப் பஞ்சபாண்டவர்களின் அன்னையான குந்தி தேவி ஏன் அறிவுறுத்தவில்லை?” போன்ற கேள்விகளை இளைய தலைமுறையினர் எழுப்புவதாக இந்த நாவல் அமைந்திருக்கிறது.
இன்றைய எழுத்தாளர்கள் படைக்கின்ற சிறப்பான சில நாவல்கள் மட்டுமே திரைப்படங்களாக மாறிவரும் பொழுது, இன்ன பிற நல்ல நாவல்களைத் தெருக்கூத்துக் கலைஞர்கள் ஏன் நாடகமாக நடித்து மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடாது போன்ற புதுமையான சிந்தனைகள், தெருக்கூத்துக் கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மக்களுக்குமென புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. மறைக்கப்பட்ட வரலாறுகளையும் இக்கலையின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்பது போன்ற யோசனைகளும் இந்த நூலில் உள்ளன. அருகி வருகின்ற தெருக்கூத்துக் கலையையும் அதனை நம்பி வாழ்கின்ற வெகு சில கலைஞர்களையும் எப்படி வளர வைப்பது என்ற கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் விதமாக இவ்வாறு இந்நாவல் பயணிக்கிறது. தனது வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் உத்தரவாதம் கொடுக்கின்ற எந்த ஒரு தொழிலையும் மக்கள் விரும்புவார்கள். வாய்க்கும் வயிற்றுக்குமே பிரச்சனை எனும் பொழுது வாழ்க்கையை அளிக்காத கலையை வளர்ப்பதால் தனி மனிதனுக்கு என்ன பயன்? அரசு அதற்கான உத்தரவாதத்தை அளித்தால் விளிம்பு நிலையில் இருக்கும் பல கலைகள் காப்பாற்றப்படலாம்.
அடுத்த கட்ட நகர்வு, முன்னேற்றம், புதுமைகளைப் புகுத்துவது என்றாலே இடப்பெயர்வு என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. வெளி மாநிலங்கள் வெளிநாடுகள் என மேற்கொள்ளும் பயணமே எந்த ஒரு தொழிலையும் இயக்கத்தையும் சமுதாயத்தையும் தனி மனிதனையும் விழிப்படையச் செய்து வளரச் செய்யும் என்பதை உணர வைப்பதாக இந்த நாவல் உள்ளது. நாயகியின் விருப்பமாக நாயகனை நோக்கிய அவளது உரையாடல்கள், அவனை வெளிநாடுகளுக்கும் பயணம் செய்ய ஆலோசனை கொடுப்பதாக அமைந்திருக்கின்றன. எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்து நம் நாட்டில் சேர்க்கச் சொன்ன பாரதியின் வரிகள் நினைவிற்கு வந்து, அழிவின் விளிம்பில் நிற்கும் நமது நாட்டின் கலைகளையும் தீவிரமாக முயன்று பல கண்டங்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமென்கிற எண்ணத்தை இந்த நூல் உருவாக்குகிறது. முக்கியக் கருத்துகளை ஆங்காங்கே சொல்கின்ற இந்த நூல் 360 பக்கங்களைக் கொண்டு, கதையின் மையக் கருவைப் பிடிப்பதற்கு அதிகப்படியான பக்கங்களைக் கடந்து வந்தே அடைய முடிகிறது.
இயல்பான நிகழ்வுகளில் அதிகப்படியான விவரிப்புகளைக் கொண்டிருக்கிறது.
நாயகன், நாயகி இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கும் நாளுக்கு முன்தினம் இறந்த பெரியவரின் துக்க நிகழ்ச்சியில் மணமாக இருக்கும் மணமக்களே கலந்து கொண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு உறுதுணையாக நிற்பதாகக் காட்சிகளை ஏற்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர். முன்னேறுவதற்கான வழியாகவும், தெருக்கூத்துக் கலைஞர்களின் பாதுகாப்பிற்காகவும் அரசின் சலுகைகளைப் பயன்படுத்துதல், நலவாரியம் அமைத்தல், உறுப்பினர்களை இணைத்தல் போன்றவற்றோடு புத்தக வாசிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, திருமணத்தில் விரயமாகும் செலவுகளைத் தவிர்த்தல் போன்ற பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் இந்நூல் பேசியிருக்கிறது.
இன்றளவும் எஞ்சியிருக்கும் தெருக்கூத்துக் கலைஞர்கள் மக்களின் சேவையாகக் கொரோனா நோய்த் தொற்றில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் வரை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் தங்களது ஆதாயத்திற்காகத் தேர்தல் பிரச்சாரத்திற்கும் அவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓயாது அலையடித்தாலும், அசராது புயல் காற்று வீசினாலும் தொடர்ந்து இயங்கிப் பதினாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடகங்களை நிகழ்த்திய தருமபுரி மாவட்டத்தின் பால்வாடி கிராமத்தைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞர் கந்தசாமி(75) அவர்கள் மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதினை ஜனாதிபதியின் கையால் சமீபத்தில் பெற்றுள்ளார். வேறு வாய்ப்புகள் பல இருந்தாலும் இக்கலையின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக இதனை இன்றும் நடத்திக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவியாக இன்னும் பல சலுகைகளை அளித்து, இன்றைய திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் இணையதள நிகழ்ச்சிகள் போன்ற யாவற்றிற்கும் அடிப்படையான இக்கலையை அரசு இன்று சுடர்விடச் செய்திருக்கிறது என்றாலும் அதன் ஒளி உலகம் முழுவதும் பரவுவதற்கு இன்னும் முயற்சிகள் வேண்டும் என்பதையே மனம் வாழ்த்துகிறது. வாசிக்க வேண்டிய நூல்.