ஸ்ரீநிவாஸ் பிரபு
பிரதிபா சந்திரமோகனின் இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் நாவல் முற்றிலும் வித்தியாசமான ஒரு புது முயற்சி. வரலாற்றுச் செய்திகளோடு புனைவும் கலந்து படைக்கப்பட்ட நாவல். வரலாற்றை மாற்றிய காதல் கதை என்ற டேக் லைனுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

வரலாற்றின் மீது அதீத ஈடுபாடு கொண்டவர்களுக்கு மறக்க முடியாததோர் அனுபவமாக இருக்கும்.நாவலை வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க முடியாதபடி இருக்கிறது. சரளமான எழுத்து நடை.
கீழடி, கொற்கை, சிவகளை அகழாய்வுகளும், ஆதிச்ச நல்லூர் அகழாய்வு முடிவுகளும் தமிழ் மக்கள் மனங்களில் ஒரு பெருமித உணர்வையும். முந்தைய வரலாற்றைத் தேடும் ஆர்வத்தையும் ஒரு சேர கிளர்ந்தெடுக்கின்றன. அக்கிளர்ச்சி அலைகளின் மீது பயணப்பட்டு வரும் கப்பலாக இருக்கிறது இந்நாவல். இதை ஓர் அறிவியல் புனைகதையாவும் வகைப்படுத்தலாம், தொன்மங்களைத் தேடும் மாய யதார்த்தக் கதை வகையாகவும் வகைப்படுத்தலாம்.
அனன்யா ஒரு தொல்லியல் ஆய்வாளர். அவளும் அவள் தோழியும் கடற்கரையில் இருக்கும் போது அவள் கையில் ஒரு நீல நிறக்கல் கிடைக்கிறது. அதுவே இந்திர நீலம். அதைச் சாதாரணக் கல் என நினைத்து விளையாட்டாய்த் தூக்கி எரிகிறாள். அது அங்கிருந்த ஓர் இளைஞனின் நெற்றியில் படுகிறது. காயம் ஏற்படுகிறது. அந்த இளைஞன்தான் ஆதர்ஷ். கதையின் நாயகன். இருவருக்கும் மோதலில் ஆரம்பிக்கும் அறிமுகம். தொடர்ந்து அவனே இன்னார் என்பதை அறியாமல் அனன்யாவைப் பெண் பார்க்க வருகிறான். இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. தான் எடுத்துக் கொண்ட பி.எச்.டி ஆய்வை நிறைவு செய்த பின்தான் திருமணம் என்ற கொள்கையில் அனன்யா உறுதியாய் இருக்க. ஆதர்ஷ் அதற்குச் சம்மதிக்கிறான். அவள் ஆய்வுக்கு உறுதுணையாக இருக்கிறான். இவர்களோடு இந்திர நீலக்கல்லும் எவ்வாறு பயணக்கிறது, என்னென்ன மாற்றங்களை அவர்களுக்கு அனுபவங்களாகத் தருகிறது என்பதைச் சித்தரிக்கிறது, நாவல். ஒரு கடலாய்வுக் குழுவின் கப்பலில் இணைந்து ஆய்வு செய்ய அனன்யாவுக்கு அனுமதி பெற்றுத் தருகிறான். இருவரும் அந்த ஆய்வுக் கப்பலில் பயணிக்கிறார்கள். ஆதர்ஷின் நண்பன் மித்ரனும் பயணத்தில் இணைகிறான். கப்பலின் பயணத்தில் வளர்கிறது காதல்.
பௌர்ணமி நிலவொளி நாளில் அபூர்வமான இந்திரநீலக்கல்லைக் கையில் பற்றிக் கப்பலின் மேல் தளத்தில் அனன்யாயும், ஆதர்ஷும் ஜோடியாக நின்றிருக்கும் போது ஓர் ஆழிப்பேரலை வந்து தாக்குகிறது. அந்தத் தடுமாற்றத்தில் அனன்யா, ஆதர்ஷ், மித்ரன் மூவரும் தூக்கி வீசப்படுகிறார்கள். விழித்துப் பார்க்கும் போது ஆள்அரவமற்ற, பரிட்சயமற்ற கரையில் ஒதுங்கி இருப்பது தெரிகிறது. அனன்யா கையில் அதே கல். மர்மப் புன்னகையோ, மந்திரப் புன்னகையோ எனப் புரியாதபடி மின்னும் அந்த நீல நிறக் கல்லைப் பார்க்கிறார்கள். ஏதோ ஒன்று கனவில் நடந்தது போல் போல் இருக்கிறது. தொலைவில் தெரியும் நகரத்தை நோக்கி நடக்கிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமான, செழிப்பான ஊராகத் தெரிகிறது. நெருங்க நெருங்க கரையோரத்தில் பெரிய கட்டிடங்கள் மற்றும் துறைமுகம் போன்ற அமைப்பு இருப்பது தெரியவருகிறது. அங்கிருக்கும் மனிதர்கள் பார்க்க இந்தியர்கள் போல் அல்லாமல் ஐரோப்பியர்களைப் போல் தோற்றமளிக்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் கடந்த காலத்திற்கு சென்றிருப்பதை அறிகிறார்கள்.
அந்த நகரம் சோழநாட்டைச் சார்ந்த பூம்புகார் நகரம். ஊரைச் சுற்றி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் அனன்யா தன்னைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணைக் காண்கிறாள். அந்தப் பெண் சட்டென்று கடந்து விடுகிறாள். தாங்கள் அங்கு வந்ததற்கும் அந்த இந்திர நீலம் (அக்வா மரைன்) கல்லுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் என்று எண்ணுகிறார்கள். மூவரும் அங்கிருக்கும் விருந்தினர் சத்திரத்தில் ஆளுக்கு ஓர் அறை எடுத்துத் தங்குகிறார்கள். மறுநாள் காலை ஏழு மணிக்கு எழுகிறார்கள்.
அவர்கள் இருப்பதோ கடந்த காலம், அங்கு எப்படி அவர்களுக்கு நேரம் தெரியும் என்று இயல்பாய் எழும் சந்தேகத்திற்கு, ‘நீங்க நினைக்கிறது சரிதான்… கைக்கடிகாரம் மட்டும் வேலை செய்தது“ என்று கதைக்குள் எட்டிப் பார்த்து லாஜிக்கை விவரிக்கிறார் நாவலாசிரியர். (பக்கம் 76) அங்கிருக்கும் மக்களுக்கு இவர்களின் உடைகள் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லையென்றாலும் வேற்றூர் மனிதர்கள் என்று தெரியுமபடி இருக்கிறது. ஓர் ஆள் விசாரிக்கிறான். அதற்கு இவர்கள் தங்களின் நிஜப் பெயரை மறைத்து ஆதன், நல்லன் (மித்ரன்), அனிச்சமலர் என்று சொல்கிறார்கள். பசிக்கும் போது கையில் காசு இல்லை என்பதைச் சொல்லிக் கேட்ட அவர்கள் தாராளமாக உணவை இலவசமாகத் தருகிறார்கள். தன்னைப் போலவே அந்த ஊரில் இருக்கும் பெண் குறித்துக் கேட்கிறாள் அனிச்சமலர். அதற்கு அவள் குறிப்பிட்டுக் கேட்கும் பெண் அந்த நகரத்தில் பெரும் செல்வந்தருக்கும் ஆடலரசிக்கும் பிறந்த மகள். அந்தப் பெண்ணின் தாய்க்கு இல்லற வாழ்க்கை சரியாக அமையாததால் அவளும் துறவு பூண்டு தன் மகளையும் துறவியாக்க விரும்புகிறாள் என்று தெரிவிக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் என்ன என்று கேட்கும் போது, அவள் பெயர் மணிமேகலை என்று சொல்கிறாள்.

மணிமேகலைக்கு அபூர்வ சக்தி நிறைய இருப்பது குறித்து அறிந்திருப்பதால், அந்த இடத்திலிருந்து அவர்கள் விலக மணிமேகலையைச் சந்தித்து உதவி கேட்கலாம் என்று எண்ணுகிறார்கள். அதே போல் புத்த விகாரில் இருக்கும் மணிமேகலையைச் சந்திக்கிறார்கள். ஆச்சர்யம் ததும்ப மணிமேகலையையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மணிமேகலை முகத்தில் கனிவு. பொறுமை, அமைதி, சலனமில்லாத தீர்க்கமான, அதே நேரம் துணிவு பொருந்திய அகமும் மனமும் கொண்ட தன்மைகளைப் பார்த்து அதிசயித்துப் போகிறார்கள். மணிமேகலைக்கும் அந்த ஆச்சர்யம் இருக்கிறது. அனிச்சமலர் மணிமேகலையைச் சந்தித்துத் தான் அனன்யாவிலிருந்து அனிச்சமலராக மாறி இருப்பது வரையிலான கதையை முழுவதுமாய் விவரிக்கிறாள்.
மணிமேகலை தன் பெட்டகத்திலிருந்து சிறு மரப்பெட்டியொன்றை எடுத்து வந்து அனன்யாவிடம் தருகிறாள். அதனுள் இந்திர நீலக்கல் ஒன்று பளபளப்பாய்ப் பட்டை தீட்டப்பட்டு இருக்கிறது. அது அரசிளங்குமரனான உதயகுமாரன் தனக்குப் பரிசளித்தது என்றும், அவரோடு இணைய முடியாவிட்டாலும் அவர் தந்த பரிசு மட்டுமாவது இருக்கட்டும் என்று வைத்திருப்பதாக மணிமேகலை தெரிவிக்கிறாள். உதயகுமாரனை விரும்பினால் அவரையே மணந்து கொள்ளுங்கள் என்கிறாள் அனன்யா. அது மணிமேகலையின் மனதைக் கரைக்கின்றது. மணிமேகலை வைத்திருந்தது போலான இந்திரநீலக்கல் தங்களிடமும் எப்படி இருக்கிறது என்பது புரியாமல் குழம்புகிறார்கள். பயணியர் விடுதியில் வைத்திருந்த அனன்யாவின் இந்திர நீலக்கல் காணாமல் போகிறது. திடீரென்று அது மணிமேகலையின் அறை வாயிலில் இருக்கிறது. அனைவரும் புரியாமல் குழம்பியிருக்கையில், மணிமேகலை விடுதியில் வைத்திருந்தபோது அறையைச் சுத்தம் செய்ய வந்தவர்கள் அதை கஜானாவில் ஒப்படைக்க வந்திருப்பார்கள் என்றும் இரண்டு கற்களையும் அருகருகே வைத்தால் நினைத்த இடத்திற்குச் செல்ல முடியும் என்றும் தெரிவிக்கிறாள். உடனே ஆதர்ஷும் அனன்யாவும் அன்றிரவு கப்பலில் எப்படி அமர்ந்திருந்தார்களோ அதே போல் மண்டியிட்டு அமர்ந்து இருவரும் கைகளைப் பற்றிக் கொண்டு இந்திர நீலக்கல்லை நடுவில் வைக்கிறார்கள். சில நொடிகளில் மின்னல் ஒன்று வெளிப்படுகிறது.
அனன்யா கப்பலில் தனது அறையில் கண் விழிக்கிறாள். கையில் இருக்கும் இந்திர நீலக்கல்லை மிரட்சியுடன் பார்க்கிறாள். மித்ரன் தனது அனுபவத்தை ஆய்வுக்குழுவின் தலைவர் மைக்கேலிடம் விவரிக்கிறான். அவரும் ஆச்சர்யமாக இந்திர நீலக்கல்லின் மகிமையைப் பண்டைய கிரேக்கர்கள் கடல் பயணம் செய்யும் போது எவ்வாறு எடுத்துச் சென்றார்கள், அது வெற்றியைத் தரும் கல் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள் என்ற விவரத்தையும் தெரிவிக்கிறார். மீண்டும் ஆழிப்பேரலை தாக்க, அனன்யாவைக் காப்பாற்ற வருகிறான் ஆதர்ஷ். இருவரும் கப்பலின் மூன்றாவது தளத்திற்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும் போது அலை தாக்குகிறது. ஆதர்ஷ் கையில் இந்திரநீலக் கல் இருக்கிறது. இப்போது அவர்கள் மீண்டும் கடந்த காலத்திற்கு சென்றிருப்பதாக எண்ணும் போது அவர்கள் கப்பலிலேயே இருப்பது தெரிகிறது.
இந்திர நீலக்கல் ஒளிராமல் இருக்கிறது. பௌர்ணமி அன்று கல் ஒளிரும் என்று நம்புகிறார்கள். மூவரும் வட்டமாய் அமர்ந்து கைகளுக்குள் பத்திரமாகக் கல்லை வைத்திருக்கையில் கல் ஒளிர்கிறது. காந்தச் சுழல் போலான ஒன்றில் இழுபட்டு, மூவரும் கடந்த காலத்திற்கு மறுபடி செல்கிறார்கள். மணிமேகலையைச் சந்திக்கிறார்கள் மணிமேகலையிடம் உதயகுமாரன் இந்திர நீலக்கல் குறித்து, அது கோரக்கர் சித்தர் காங்கேயம் என்ற ஊரிலிருந்து எடுத்து வந்தது குறித்து, இரு வட்டம் போல் செய்து தன் தவத்தின் வலிமையால் எண்பெரும் ஆற்றலைத் (அஷ்டமா சித்திகள்) தேக்கி வைத்து, தனக்குப் பின் மக்களை நல்வழியில் ஆளும் சோழ அரசனைச் சேர வேண்டும் என்று வாக்களித்துச் சென்றதைத் தெரிவிக்கிறான்.
அனன்யா, ஆதர்ஷ், மித்ரன் மூவரும் பூம்புகார் நகரில் உலவுவதும், இந்திர நீலக்கல் குறித்தான விஷயங்களைக் கண்டறிந்து, அதன் போக்கில் பயணித்து பல்வேறு இடர்களைச் சந்தித்து அங்கிருந்து இந்திர நீலத்தின் மூலம் மீண்டும் ஆய்வுக் கப்பலுக்கு வந்து சேர்கிறார்கள். ஆனால் அந்த இந்திர நீலக்கல்லைத் தேடித்தான் அந்த ஆய்வுக் கப்பலுக்கே வந்தவனாக இருக்கிறான் நீல். யதார்த்த உலகை வந்தடைகையில் இந்திர நீலக்கல்லால் என்னென்ன சிக்கல்கள் உண்டாகின்றன, அதிலிருந்து எவ்வாறு மீள்கிறார்கள், இந்திர நீலக் கல்லுக்காக நடக்கும் களேபரங்கள் எப்படிப்பட்டவையாக இருக்கிறது (ஹாலிவுட் திரைப்படம் போல்) என்பதை ஒரு travelogue போல் பிரம்மாண்டான விவரிப்புகளுடன் விவரிக்கிறது.
அனன்யா ஆதர்ஷ் எப்படி இணைகிறார்கள், மணிமேகலையின் கதை என்ன ஆகிறது என்பதை இன்றைக்கும் அன்றைக்குமான காட்சிகளால் நீட்டித்து நாற்பத்தியேழு அத்தியாயங்களில் விவரித்து நிறைகிறது நாவல். கதை முழுக்க ஓர் இலக்கில் பயணப்பட்டாலும், ததும்பத் ததும்பக் காதல் ரசத்தைப் பிழிந்து ஊட்டியிருப்பது தனி ருசியாகவே பொருந்தியிருக்கிறது. ஆர்வமும், கட்டுக்கடங்காத காதலும் ஒன்றோடு ஒன்று போட்டி போடவே செய்கிறது. ஒரு கட்டத்தில் கதை இன்றைக்கும் அன்றைக்குமாக ஊசலாடுவது நம்பகத்தன்மையைப் பாதித்தபோதும், இதெல்லாம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்ற கேள்வியும் முன் எழவே செய்கிறது. கதையை விவரிக்கையில் ஆசிரியர் ஆங்காங்கே எட்டிப் பார்த்துக் குரல் தருவது சற்று நெருடலாகவே நிற்கிறது. “காதலே ஒரு வகைத் துறவுதான் மணிமேகலை அது உலகிலிருந்து நம்மை விடுவித்திடும், என்னோடு துறவறம் கொள்வாயா?“ என்று சொல்லி அவள் கைகளைத் தன் கன்னத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டு இளவரசர் கேட்க, “இங்கணமே எனைக் கைக்கொள்வீரா? என் மனம் உம்முடன் வரச் சித்தமாக உள்ளது“ என்று மறைத்து வைத்த காதலோடு கண்ணீரும் வார்த்தைகளும் கலந்து வெளிவந்தன மணிமேகலைக்கு என்ற இடமும், “ஒருவர் இல்லறத்தை ஆழ்ந்து அனுபவித்த பிறகே துறவறம் கொள்ள முடியும் என்பது இயற்கையின் நியதி.
உயிர்கள் படைக்கப்பட்டதே அன்புக்காகவே.. நான் படைக்கப்பட்டதன் நோக்கமும் அவர் அன்பைப் பெறவே என்று தோன்றுகிறது“ என்று மணிமேகலை தெரிவிக்கும் இடமும் நம்மை நிறுத்திக் கவனிக்க வைக்கின்றன.
இந்திர நீலக் கல்லின் ஒளி தனித்த அழகுடனும், ரம்யத்துடனும் இருக்கும். அதே போலவே இந்த இந்திர நீலமும் இமைக்கா இரவுகள் நாவலும் இருக்கிறது.
