ப.திருமாவேலன்
இலக்கியச் சனாதனத்தை அம்பலப்படுத்தும் பணி
சமூகச் சனாதனத்தை அம்பலப்படுத்துவோர் அதிகம். அரசியல் சனாதனத்தை அம்பலப்படுத்துவோர் அதைவிட அதிகம். ஆனால் இலக்கியச் சனாதனத்தை அம்பலப்படுத்துவோர் குறைவு. மிகமிகக் குறைவு. இன்னும் சொன்னால் தேடத்தான் வேண்டும். பிரமிளுக்குப் பிறகு பொதியவெற்பன் மட்டும் தான் இருக்கிறார். பிரமிள் கூடத் தினப்படி உடற்கூறாய்வைச் செய்யவில்லை. அவர் விரும்பிய போது செய்தார். பின்னர் அமைதியாகி விடுவார். ஆனால், கண்ணுக்குத் தோன்றிய போதெல்லாம் பொதியவெற்பன் அதையும் செய்து வருகிறார். பொதியவெற்பனின் பணி யாராலும் செய்ய முடியாத பணி. பெரியார் சொல்வாரே, ‘வேறு யாரும் செய்ய வராததால் இதனை நானே மேற்போட்டுக் கொண்டு செய்து வருகிறேன்’ என்று. அத்தகைய பணியைச் செய்து வருகிறார் பொதியவெற்பன்.
பொதியவெற்பன் என்றால் – எனக்கு 80களின் இறுதியில் 90களின் தொடக்கத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘சிலிக்குயில்’ பதாகைக்குக் கீழே ஸ்டீல் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் அந்த உருவம்தான் முதலில் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் நவீன அரசியல் – இலக்கிய நூல்களை வெளியிடவும் வாங்கவும் ஒன்றிரண்டு பதிப்பகங்கள்தாம் இருக்கும். கூடி நிற்கவும் ஒருசில இடங்கள்தாம் இருக்கும். அதில் ஒன்று பொதியின் கடை. அது இடதுசாரிகளின் போதிமரமாக அப்போது இருந்தது. காலப் போக்கில் சென்னைப் புத்தகச் சந்தைகளில் அவரைக் காணமுடியவில்லை. திடீரென அவர் பிரளயம் போல வெளிப்பட்டார்.
‘திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்’ என்ற நூலாயுதமாக – நூலாடைகளை அம்பலப்படுத்த
நூலாயுதமாக – வெளியில் வந்தார். ‘கருப்பு’ நீலகண்டன் அதனை வெளியிட்டார். இடதுசாரி இயக்கத்தவராக மட்டும் நான் அப்போது அறிந்திருந்த பொதியவெற்பனை வேறொரு போராளியாகக் காட்டியது அந்த நூல். தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும், வியூகத்தில் சிக்கிக் கொண்ட வீரஅபிமன்யுவின் கதை (ம.பொ.சி.பற்றியது), பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும், சமயச்சார்பின்மை ஆகிய நூல்கள் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பேசியாக வேண்டிய பொருள் பற்றியதாக அமைந்திருந்தன. சரியானதை அடையாளம் காட்டுபவராகத் தோழர் உயர்ந்து நிற்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இடதுசாரி எதிர்ப்பு – திராவிட இயக்க எதிர்ப்பு – சுயஜாதியபிமானம் ஆகிய மூன்றும் நேற்றைய இலக்கியங்களில் மெல்லிய அளவில் தொழிற்பட்டது. இன்று பாஜக ஆட்சி நடப்பதால் வெளிப்படையாகவே ஆட்டம் போடுகிறது. விருதுத் துண்டுகளுக்காக! முந்தைய காலக்கட்டத்தில் சுய அரிப்பாக மட்டும் இது இருந்தது. இன்று சுய அரிப்புக்குச் சன்மானமும் கிடைப்பதால் சுகமாகவே தொழிற்படுகிறது. இதனை இலக்கிய வெளியில் தயவுதாட்சண்யம் இல்லாமல் கண்டித்து வரும் பொதியவெற்பனைப் பாராட்டுவதற்கு இந்த அணிந்துரையைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
காந்தியத்தை எதிர்கோடல்
‘மார்க்சியத்திற்கும் அஃதே துணை’ – என்ற இந்நூல் தோழரின் நூல் வரிசையில் அடுத்ததாக வெளிவருகிறது. மார்க்சும் – காந்தியும் அம்பேத்கரிய பெரியாரியப் பார்வையில் பார்க்கப்படும் கட்டுரைகளின் தொகுப்பாகவே இதனை ஒட்டுமொத்தமாகச் சுட்டலாம்.
”மாற்று அரசியலின் வழிகாட்டிகளாக அறிவுத்தளத்தில் பெரியார்; பொருளாதாரம் சமூக அறம் ஆகியவற்றுக்குக் காந்தியார்; சமத்துவம் சமூகநீதி என்பவற்றுக்கு அம்பேத்கர் என்ற மூன்று சிந்தனையாளர்கள் நிற்கிறார்கள்” – என்று பிரேம் எழுதியதை விமர்சித்துப் பொதி எழுதுகிறார். இதில் மார்க்சு ஏன் விடுபட்டார் என்பதும், காந்தி எதனால் சேர்க்கப்படுகிறார் என்பதும் தான் இவரது கேள்விகள்.
தமிழ்நாட்டு அறிவாண்மையர் பலரும் காந்தியத்தை ஏன் ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வியைப் பொதி எழுப்புகிறார். அ.மார்க்ஸ், காந்தியத்தின் உடன்பாடான கூறுகளை ஆதரித்து எழுதி இருக்கிறார். எனது, ‘காந்தியார் சாந்தியடைய’ நூலும் காந்தியை ஒருவழியில் மட்டும் ஆதரிக்கவே செய்கிறது. இதற்குக் காரணம், கோட்சே கும்பல் பெருத்துப் போனதாலும், சாவர்க்கர் சித்தாந்தம் இன்றைய அதிகார அரசியலில் கோலோச்சுவதாலும் காந்தியின் உடன்பாடான பகுதியை ஏற்றுக் கொண்டு எதிர்த்தரப்பை எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது. வர்ணாசிரமத்தை ஏற்றுக் கொண்ட காந்தியார், மதஒற்றுமை என்பதன் மூலமாக இந்து – இசுலாமிய நட்பைப் பேணினார் என்பதும், அதனால் அவர் ஆர்எஸ்எஸ், இந்து மகாசபா ஆட்களால் எதிரியாக ஆக்கப்பட்டார் என்பதும் அனைவரும் அறிந்த வரலாறு தான். இத்தகைய சூழலில் நாமும் காந்தியின் மீது கல்வீச வேண்டுமா?
காந்தியின் தொண்டர் – காந்திக்கு எதிரி – கொல்லப்பட்டபோது காந்தியின் பக்தர் – காலப்போக்கில் காந்தியின் படத்தை எரித்தவர் எனப் பல்வேறு நிலைப்பாடுகள் தந்தை பெரியாரின் வாழ்க்கையில் உண்டு. ‘இருந்த காந்தி அவர்கள் காந்தி – இறந்த காந்தி நம்முடைய காந்தி’ என்ற பெரியாரின் இரட்டை வரிக்குள் அனைத்தும் அடங்கி இருக்கின்றன. காந்தியை ஆதரிக்கலாம், என்னவாக ஆதரிக்கிறோம் என்பது தான் முக்கியமானது.
தமிழ்ச் சனாதனிகளால் எதிர்க்கப்படும், இந்துத்துவ சக்திகளால் நிராகரிக்கப்படும் காந்தியை ஆதரிப்பது என்பது சரியானது. ஆனால் பிரேம் சொல்வதைப் போல சமூக அறம், பொருளாதாரம் என்றெல்லாம் சொல்லத் தொடங்கினால் காந்தியம் நம்மைக் கடைசி வரைக்கும் காப்பாற்றாது. ஏமாற்றும். அப்படி ஏமாந்து போனவர் தான் காந்தி என்பதே வரலாறு. இத்தகைய ‘நல் ஆபத்தாகக்’ காந்தி இருந்ததைப் பொதியின் கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன.
”காந்தியெனும் மாமனிதர் கொண்டாடப்பட வேண்டிய மகாத்மாவாகவே இருந்த போதிலும், அவர் பேணி நின்ற சனாதன ஒழுக்கப் பிரயோகமும், அதிலூன்றி நின்ற அவர் பிடிவாதமும், அதைக் கொண்டு செலுத்திய காந்திய அரசியலும் அவரது மகாத்மா எனும் ஒளிவட்டத்தினைக் கேள்விக்குரித்தாக்கி விடுகின்றன” என்றும் –
”காந்தியார் மதத்தையும் அரசியலையும் கலந்த சூழ்ச்சித்திறம், மக்களுக்குத் துறவியாகவும் பெருமுதலாளிகளுக்கு மறைமுக உறுதுணையாகவும் ஆடிய இரட்டை வேடம், காந்திய ஆற்றலின் கவர்ச்சி ரகசியம் ” – ஆகியவை குறித்தும் பொதியவெற்பன் எழுதி இருப்பவை சரியானவையே. ‘காந்தி தேசம்’ என்று பெயரிடச் சொன்ன பெரியாரின் செயலையும் பொதி கண்டிக்கிறார்.

பார்ப்பனச் சதியை இனம் காண்பதற்குக் காந்தியாருக்கு அந்திமக் காலமும், புதுமைப்பித்தனுக்கு மரணப் படுக்கையும், வள்ளலாருக்கு ஆறாம் திருமுறை வரையும் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்கிறார் பொதி. ஆமாம், அதே பொருத்தப்பாட்டுடன் இன்றைய ஆய்வாளர்களுக்காகவும் காத்திருக்கத்தான் வேண்டும்.
இணைந்தும் பிணைந்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய கோட்பாடுகளும் செயற்பாடுகளும்
இந்நூலின் இரண்டாவது பகுதி, அண்ணல் அம்பேத்கரின் ‘புத்தரா காரல் மார்க்ஸா’ என்ற நூலை முன் வைத்து எழுதப்பட்டுள்ளது. தமிழ்ச் சமுதாயத்தில் பலத்த சர்ச்சைகளை உருவாக்கும் கருத்துருக்களில் ஒன்று மார்க்சியத்தை அம்பேத்கர் நிராகரித்தார் என்பதாகும். ‘அம்பேத்கர் போதாது, புத்தம் போதாது, மார்க்ஸ் தேவை’ என்று ஒரு தரப்பு வாதிடுகிறது. மார்க்சியத்தை விமர்சிப்பது சில தலித் சிந்தனையாளர்களின் கோட்பாடாக மாறியும் வருகிறது.
இந்தச் சூழலில் மார்க்ஸ் – அம்பேத்கர் மோதல் என்பதை மிக எச்சரிக்கையோடு நடத்த வேண்டும் என்று இரண்டு தரப்பையும் கேட்டுக் கொள்கிறேன். இரண்டுமே உடன்பாடான சக்திகள் தாம். மோதல் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அளவுக்கு முரண்பாடுகள் கொண்டவை அல்ல இரண்டும். இன்னும் சொன்னால் இரண்டுமே மக்களுக்கானவை மட்டுமே. மக்களுக்காக மட்டுமே பேசுபவர்கள் இந்த இரண்டையும் எதிரெதிராக நிறுத்த மாட்டார்கள். நிறுத்தக் கூடாது.
என்னளவில் பெரியாரியம் – மார்க்சியம் – அம்பேத்கரியம் ஆகியவை இணைந்தும் பிணைந்தும் செல்ல வேண்டிய கோட்பாடுகள் ஆகும். இக்கோட்பாடுகளை முன்னிறுத்திச் செயல்படுபவர்களும் இணைந்தும் பிணைந்தும் செல்ல வேண்டியவர்களே ஆவார்கள். இன்று பீடித்துள்ள சமூக – பொருளாதார – அரசியல் நோய் என்பது மிகமிக ஆழமானது. ஒற்றை மாத்திரையில் இதனைக் குணப்படுத்த முடியாது. பல மாத்திரைகள் தேவை. இன்னும் சொன்னால் அலோபதியையும் சித்தாவையும் சேர்த்துப் பயன்படுத்தலாம் என்று சொல்லும் அளவுக்கு நோயின் தீவிரத்தன்மைகள் அதிகமாகி விட்டன. எனவே, இந்த இசமா, அந்த இசமா என்பதல்ல பிரச்சினை. நோயைக் குணப்படுத்த அனைத்துக் கோட்பாடுகளையும் ஒருமுகப்படுத்தியாக வேண்டும்.
‘இந்துவாகச் சாகமாட்டேன்’ என்ற அண்ணல், பவுத்தராக மறைந்தார். பவுத்தத்தை நவீன விடுதலைக் கருத்தியலாக மாற்றினார். இது ‘அம்பேத்கரின் பவுத்தமாக’ இருக்கிறதே தவிர, ‘பவுத்தர்களின் பவுத்தமாக’ நடைமுறையில் இல்லை. கிறித்துவ இறையியல் என்பது ‘விடுதலை இறையியல் கிறித்துவமாக’ நடைமுறையில் இல்லை. அதுவும் ஜாதிக் கிறித்துவமாகத்தான் இருக்கிறது. மதம் மாறியது மட்டுமே சம்பவமாக இருக்கிறதே தவிர, மற்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனவே, பவுத்தம் குறித்து அம்பேத்கர் எழுதியவை – அவர் எழுதிய காலத்தில் இருந்ததைப் போலவே அப்படியே புத்தகத்தில் மட்டுமே இருக்கிறதே தவிர நவீன விடுதலையியலாக நடைமுறையில் இல்லை. அப்படி ஆக்கப்படவில்லை. அதனை யாரும் செய்யவில்லை.
இலங்கையில் நடந்த கொடூரம் பவுத்தத்தின் பேரால் தான் நடந்தது. ‘ஜெயவர்த்தன உண்மையான பவுத்தராக இருந்திருந்தால் நான் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது’ என்றார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். ராஜபக்ஷேக்களுக்கு ஆதரவாகப் பவுத்த சாமியார்கள் சென்னைக்கு வந்து பேட்டி கொடுத்ததையும் நாம் பார்த்தோம். இந்நிலையில் பவுத்தம் குறித்த பார்வையை அண்ணல் காலக்கட்டத்தோடு நிறுத்திப் பார்ப்பதே தவறானது ஆகும்.
அரசு – அதிகாரம் – மதம் – தேசியம் – பண்பாடு – ஒழுக்கம் ஆகிய கருதுகோள்களை அது என்னவாகப் பொதுப்புத்தியில் செயல்படுகிறது, மற்றவர்க்குச் சொல்லப்படுகிறது என்பதை வைத்து அளவிட்டே ஆதரிக்கவும், எதிர்க்கவும் வேண்டும் என்ற புரிதலைத்தான் ஒட்டுமொத்தமாகப் பொதியவெற்பனின் கட்டுரைகள் வழங்குகின்றன. அவரது ஆழமான படிப்பையும், அகலமான அறிவையும் ஒவ்வொரு பக்கமும் நீங்கள் உணரலாம். தெளியச் சொல்லுதல் என்பதை வரிக்கு வரி அறியலாம்.
தோழர் பொதியவெற்பன் அவர்கள் நிறைய எழுத வேண்டும். குறிப்பாக, ‘நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு’ முழுமையாக அவர் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்ற எனது ஆசையையும் பதிவு செய்கிறேன்.