ச.சுப்பாராவ்
சில சொற்றொடர்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதால் தேய்வழக்காகி அவற்றின் அர்த்தத்தையே இழந்து, அவற்றைப் படித்தாலே எரிச்சல் வருவது போல் ஆகிவிடும். ஆனால், சில சொற்றொடா்கள் என்றென்றும் அர்த்தம் இழக்காதவை. உண்மையான காரணங்களாலேயே இன்றும் புழக்கத்தில் இருப்பவை. அப்படியான ஒரு சொற்றொடர்தான் பேனா முனை வாள்முனையை விடக் கூர்மையானது என்பது. அது எந்த அளவிற்கு உண்மை, பேனாவின் கூர்முனை என்ன செய்தது என்பதை Molly Guptill Manning When Books Went To War என்ற தனது நூலில் அழகாகச் சொல்லி இருக்கிறார். இரண்டாம் உலகப் போரின் போது கோடிக்கணக்கான புத்தகங்கள், ஆயுதங்களோடு ஆயுதங்களாகப் போர்முனைகள் அத்தனைக்கும் போயிருக்கின்றன, மனச்சோர்வுற்று, வீட்டு நினைவு வந்து, போராடும் சக்தியை இழந்த கோடிக்கணக்கான போர்வீரர்களுக்குப் புதிய உற்சாகமும், உத்வேகமும் தந்து, பாசிசத்தை வீழ்த்த உதவியிருக்கின்றன.

பேர்ல் ஹார்பர் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் குதித்து விட்டது. போரிடும் வயது உள்ள அத்தனை ஆண் பெண்களும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, உலகெங்கும் உள்ள போர் முனைக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். போர் முனை என்பது ஹாலிவுட் படக் காட்சிகளைப் போன்றதல்ல. அது மிகவும் சலிப்பூட்டுவது. திரும்பத் திரும்பப் பயிற்சி என்ற பெயரில் ஒரே வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். யாருமே இல்லாத அத்துவானக் காட்டில், ஓர் ஆற்றுப் பாலத்தில், விமான தளத்தில் நாள் கணக்கில் காவலுக்கு நிற்க வேண்டும். எப்போதுமே சலிப்புதான். அதிலும், திடீரென ராணுவத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட மருத்துவர்கள், தாதிகள், ஆடிட்டர்கள், பேராசிரியர்கள், எழுத்தர்கள், பள்ளி ஆசிரியர்கள், சிறிய, பெரிய முதலாளிகள் என ஓரளவிற்குப் படிப்பு இருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் இந்தச் சலிப்பூட்டும் ராணுவப் பணியைச் செய்ய மிகவும் சிரமப்பட்டார்கள். புத்தகங்களின் துணை இருந்தால் இவர்கள் உற்சாகமாகப் பணி செய்வார்கள் என ராணுவத் தலைமை முடிவு செய்தது.
இராணுவ வீரர்களுக்குப் புத்தகங்களை நன்கொடையாகப் பெற்று அனுப்ப முடிவானது. இதற்கென குழு அமைக்கப்பட்டுப் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. நூலகங்கள், பள்ளிகள், கடைகள், ரயில்கள் என எல்லா இடங்களிலும் ராணுவ வீரர்களுக்குப் புத்தகம் வழங்குவீர் என்ற போஸ்டா்கள் ஒட்டப்பட்டன. பஸ் டிக்கெட்டில் கூட இந்த வேண்டுகோள் அச்சிடப்பட்டது. அதிபர் ரூஸ்வெல்ட் புத்தக நன்கொடைக்கு வேண்டுகோள் விடுத்தது பெரிய விழாவாக நடந்தது. செய்தியாளர்கள், “எந்த மாதிரியான புத்தகங்களைத் தரலாம்?” என்று கேட்ட போது, ரூஸ்வெல்ட் “அல்ஜீப்ரா புத்தகங்கள் தவிர வேறு எது வேண்டுமானாலும் தரலாம்,” என்று சொன்னது அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றது. ஒரு பெரிய பதிப்பகம் ஒரு லட்சம் புத்தகங்களை நன்கொடையாகத் தந்தது. இரண்டே வாரங்களில் 4,23,655 புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. எல்லாம் பிரிக்கப்பட்டு, விமானங்கள், கப்பல்களில் போர்முனைகளுக்கு அனுப்பப்பட்டன.
இந்தப் புத்தகங்கள் போர் வீரர்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இராணுவத் தலைமையே எதிர்பார்க்காத அளவிற்கு வீரர்கள் உற்சாகம் கொண்டார்கள். எல்லாப் போர் முனைகளிலிருந்தும் இன்னும் நிறையப் புத்தகங்கள் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. புத்தக வேட்டையும் தீவிரமடைந்தது. 1942 ஜனவரியில் 4 மில்லியன் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. ஏப்ரலில் இது 9 மில்லியனாக உயர்ந்து விட்டது. ஒரே புத்தகத்தின் நிறையப் பிரதிகள், பாடப் புத்தகங்கள் நிறைய வருவது, நல்ல இலக்கியப் புத்தகங்கள் வராதது என இந்த நன்கொடைத் திட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தன. எனவே 1943ல் அமெரிக்க ராணுவம் தானே புத்தகங்களை வாங்குவது என்று முடிவு செய்து அதற்கான கமிட்டிகள் எல்லாம் போட்டு வேலையில் இறங்கியது.
அப்போது கெட்டி அட்டைப் புத்தகங்கள்தாம் நிறைய வரும். பேப்பர்பேக் குறைவு. அப்போது, பாக்கெட் புக்ஸ், பென்குயின் புக்ஸ் ஆகிய இரண்டு பதிப்பகங்கள்தாம் பேப்பர்பேக் வெளியிட்டன. இப்போது ராணுவம் செலவு, ஏற்றி இறக்குவது, வீரா்கள் எளிதாகத் தம் பையில் வைத்துக் கொள்வது என்ற பல வசதிகளைக் கருதி பேப்பர்பேக் புத்தகங்களை வாங்க முடிவு செய்தது. இது பதிப்புலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவான், பாப்புலர் லைப்ரரி, டெல், பாண்டம், பாலண்டைன் புக்ஸ், நியூ அமெரிக்கன் லைப்ரரி போன்ற பல பெரிய பதிப்பகங்கள் பேப்பர்பேக் பதிப்பில் இறங்கின. இதற்காக ராணுவம் அமைத்த கமிட்டியில் 70க்கும் மேற்பட்ட பெரிய பதிப்பகங்கள் இணைந்தன. Books Are The Weapons In The War Of Ideas என்பது இக்கமிட்டியின் கோஷம். 1939ல் அமெரிக்காவில் 2 லட்சம் பேப்பர்பேக் புத்தகங்களே விற்பனையாகின. 1943ல் இது 40 மில்லியனுக்கும் மேலாக அதிகரித்தது.. 1947ல் 95 மில்லியன். 1952ல் 270 மில்லியன் பிரதிகள். 1959ல் முதன்முறையாகக் கெட்டி அட்டைப் புத்தகங்ளை விட பேப்பர்பேக் புத்தகங்களின் விற்பனை அதிகம் என்ற நிலை வந்தது. இத்தனை பெரிய மாற்றங்களிலும் கூடக் கெட்டி அட்டைப் புத்தகங்கள் தமது நிலையை விட்டுக் கொடுக்காது களத்தில் நின்றது வியப்புதான்!
அன்றைய புத்தகங்களின் சராசரி அளவு எட்டுக்கு ஐந்து அங்குலம் என்ற அளவில் 2 அங்குல தடிமனில்தான் இருந்தது. இது போர் வீரர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வசதியாக இல்லை. எனவே ஆறுக்கு நாலரை அங்குல அளவில், முக்கால் அங்குல தடிமனில் புத்தகங்களை வெளியிடுவது என்று முடிவானது. இதற்கு Armed Services Edition – ASE என்று பெயர். பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் பர்ஸ் அளவில் கூடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த அளவில் புத்தகங்களை அச்சிடும் வகையில் அச்சு இயந்திரங்கள் இல்லை. எனவே இவை பத்திரிகைகளின் அச்சகங்களில் அடிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த புத்தகங்களின் சராசரி அடக்க விலை 7 சென்டிற்கு சற்று அதிகமாக இருந்தது. ஆனால் போகப் போக லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடித்த போது சராசரி விலை 5.9 சென்ட்டாகக் குறைந்தது. இராணுவப் பதிப்பாக மொத்தம் 1322 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொன்றும் லட்சக்கணக்கில்அச்சாகின. எழுத்தாளர்கள் நம் புத்தகமா இத்தனை விற்றிருக்கிறது? நமக்கா இவ்வளவு ராயல்டி என்று வியப்படையும் வகையில் நம்பமுடியாத அளவிற்கு விற்பனை.
இந்தப் புத்தகங்களுக்குப் பயங்கரமான வரவேற்பு இருந்தது. பனியிலும், மழையிலும், (மழை என்றால் rainனும் தான், குண்டுமழையும் தான் !) புத்தகங்களைப் படித்துக் கொண்டே தான் வீரர்கள் தம் பணிகளைச் செய்தார்கள். யு.எஸ்.எஸ். இன்டிபெண்டன்ஸ் என்ற போர்க்கப்பலில் பணி செய்த ஒரு கடற்படை வீரர், காலை அணிவகுப்பிற்குச் செல்லும் போது, புத்தகத்தை எடுத்துச் செல்ல மறந்து விட்டார். மேலதிகாரி அணிவகுப்பைப் பார்வையிட்டுக் கொண்டே வந்த போது எல்லாருடைய பேண்ட் பாக்கெட்டிலும் ஒரு புத்தகம் துருத்திக் கொண்டிருக்கிறது. இந்த வீரரின் பாக்கெட்டில் புத்தகம் இல்லை. மேலதிகாரி கோபமாக, “நீ ஏன் முழுச் சீருடையில் இல்லை? உன் பேண்ட் பாக்கெட்டில் இருக்க வேண்டிய புத்தகம் எங்கே?” என்று கோபப்பட்ட சம்பவம் அக்காலப் பத்திரிகைகளில் பெரிய செய்தியாக வந்தது. பாக்கெட்டில் புத்தகம் இருந்தால்தான் வீரர் முழுச் சீருடையில் இருப்பதாகப் பொருள் என்று ராணுவ அதிகாரிகளை நினைக்க வைத்தது எளிய போர்வீரர்களின் புத்தகக் காதல் !

இராணுவமும், கப்பற்படையும் மாதாமாதம் ஐம்பது தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பிற்கும் 50000 பிரதிகள் வேண்டும் என்று கமிட்டியிடம் வேண்டுகோள் வைத்தன. எனவே உலகப் போரின் போது ராணுவத் தளவாடங்கள் சாராத எல்லாத் தொழில்களும் மந்தமாக இருந்த போது அமெரிக்கப் பதிப்புத் துறை மட்டும் கொடிகட்டிப் பறந்தது. அதற்குப் பலனும் இருந்தது. அமெரிக்க ராணுவத்தின் மிகப் பெரிய மருத்துவர் ஒருவர் பென்சிலினுக்கு, சல்ஃபா பவுடருக்கு அடுத்தபடியாக அதிகமான உயிர்களைக் காத்த பெருமை இந்த ராணுவப் பதிப்புப் புத்தகங்களுக்குத்தான் என்று மனமாரச் சொன்னார். நேச நாட்டுப் படைகள் வெற்றி பெற ஆரம்பித்து விட்டன.
ஐரோப்பாவில் ஒவ்வொரு நாடாக ஹிட்லரின் பிடியிலிருந்து விடுதலை பெற்றன. விடுதலை பெற்ற நாடுகளின் மக்கள் நேச நாட்டுப் படைகளிடம் உணவு, உடை, அத்தியாவசியப் பொருட்களை மட்டும் கேட்கவில்லை. புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் கொடுங்களேன் என்றும் கேட்டார்கள். ஹிட்லரின் கூலிப்படைகள் எல்லா நாடுகளிலும் தலைசிறந்த நூலகங்களை அழித்து, நல்ல இலக்கியங்களைத் தடை செய்து, புத்தகங்களை எரித்து அட்டூழியம் செய்திருந்தன. மக்கள் உணவிற்கும், சுதந்திரத்திற்கும் ஏங்கியதைப் போலவே புத்தகங்களுக்கும் ஏங்கியிருக்கிறார்கள். ஐரோப்பியர்களின் அறிவுத் தாகம் அத்தகையது ! இந்த விஷயம் ராணுவ வீரர்கள் மூலம் அமெரிக்க ராணுவத் தலைமைக்குச் சென்றது. இந்த எல்லா நாடு மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளோடு புத்தகங்களையும் சேர்த்து வழங்க முடிவு செய்தார்கள். ஆனால் இதில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டது.
இந்தப் பெரும்பாலான ஐரோப்பிய நாட்டு மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே முக்கியமான புத்தகங்களைப் போர்க்கால அடிப்படையில் (நிஜமாகவே போர்க்கால அடிப்படையில்தானே !) பல முக்கிய ஐரோப்பிய மொழிகளிலும் அச்சடித்து வெளியிட்டார்கள். மொழிபெயர்ப்பாளர்களுக்கு அடித்தது யோகம். ஏதோ ஆயிரக்கணக்கில் என்று நினைக்க வேண்டாம். பிரான்ஸ், பெல்ஜியம், நார்வே, டென்மார்க், ருமேனியா, ஹாலந்து, செக்கோஸ்லோவேகியா, போலந்து, யுகோஸ்லேவியா, ஹங்கேரி, இத்தாலி, வடஆப்ரிக்கா, சிரியா, துருக்கி. ஆஸ்ட்ரியா, கிரீஸ் ஆகிய நாடுகளில் அவரவர் மொழிகளில் மொத்தம் 36, 36,074 புத்தகங்கள் இவ்வாறு மக்களுக்குத் தரப்பட்டன. இந்த நாடுகள் அனைத்திலும் சேர்த்து ஹிட்லர் அழித்த புத்தகங்கள் 100 மில்லியனுக்கு மேல் என்பதைப் பார்க்கும் போது, அமெரிக்கப் படைகள் வழங்கிய 3.6 மில்லியன் புத்தகங்கள் மிகக் குறைவுதான் என்றாலும் கூட, அவை அந்த மக்களிடம் ஏற்படுத்திய உற்சாகத்திற்கு அளவே கிடையாது. எத்தனை பணத்தாலும், பொருட்களாலும் தர முடியாத ஓர் உற்சாகம், நம்பிக்கையை அந்த 3.6 மில்லியன் புத்தகங்கள் தந்தன. போர் முடியப் போகிறது என்று உறுதியாகத் தெரிந்து விட்டது. புத்தகங்ளைப் படித்துக் கொண்டு, போரிட்டுக் கொண்டிருந்த வீரர்கள் மனதில் போர் முடிந்து ராணுவத்திலிருந்து வெளியே வந்த பிறகு என்ன செய்வது? என்ற எதிர்காலம் குறித்த அச்சவுணர்வு பெரிதாக எழுந்தது. அந்த அச்சவுணர்வைப் போக்கி எதிர்காலத்திற்கு ஒரு வெளிச்சத்தை, பாதையைக் காட்டவும் புத்தகங்கள்தாம் வந்தன. எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று வழிகாட்டும் புத்தகங்கள் நிறைய வெளியிடப்பட்டன.
Darrel And Frances Huff எழுதிய Twenty Careers of Tomorrow என்ற நூல் பிளாஸ்டிக், ஜவுளி, விமானப் போக்குவரத்து, குளிர்சாதனங்கள், பதிப்பகம், தொலைக்காட்சி, வானொலி, கல்வி, மருத்துவம், சந்தை ஆய்வு, வாகனத் தொழில் எனப் பல்வேறு தொழில்களில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி விரிவாகப் பேசியது. William G Campbell, James H Bedford இருவரும் இணைந்து எழுதிய You And Your Future என்ற புத்தகம் எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது, போரில் எந்த எந்த வகையில் ஊனமுற்றோர், எந்த எந்த மாதிரியான தொழில்களைச் செய்ய முடியும். நாற்பது வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு எந்த எந்தத் தொழில்களில் வாய்ப்புகள் கிடைக்கும், ராணுவத்தில் பணிபுரிந்த பெண்களுக்கு எந்த மாதிரியான வேலை வாய்ப்புகள் உள்ளன என்றெல்லாம் மிக விரிவாகக் கூறியது. இவை போன்ற புத்தகங்கள் போர் வீரர்களி்டம் பெரிய வரவேற்பைப் பெற்றன. பெல்லாமி பாட்ரிட்ஜின் கண்ட்ரி லாயர் புத்தகத்தைப் படித்துச் சட்டம் படிக்கச் சென்றோர் ஏராளம். அது போலவே, ஜான் ஃப்ளோஹர்ட்டியின் இன்சைட் எஃப்.பி.ஐ புத்தகத்தைப் படித்து நிறையப் பேர் போலீசில் சேர்ந்தார்களாம். மோலியின் புத்தகத்தில் வரிக்கு வரி ஒரு தகவல். வரிக்கு வரி நம்மைப் பரவசப்படுத்தும், வியப்பூட்டும் செய்திகள்.
ஹெமிங்வே, எமிலி ஜோலா, ஹெலன் கெல்லர், லியான் ட்ராட்ஸ்கி, கார்ல் மார்க்ஸ், தாமஸ் மன், ஹெச்.ஜி.வெல்ஸ், மாக்சிம் கார்க்கி, ஐன்ஸ்டீன், ஜி.கே.செஸ்டர்டன். அப்டன் சிங்க்ளர், ஜான் ரீட், ரோமன் ரோலண்ட், ரூஸோ, வால்டேர், ஃபிராய்ட், ஜாக் லண்டன், லூயி ஃபிஷர், சர்ச்சில் என உலகப் புகழ் பெற்ற சுமார் 160 மாபெரும் படைப்பாளிகளின் புத்தகங்களை, சுமார் 100 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் எரித்து அழித்த ஹிட்லர் தோற்றான். பெயர் தெரியாத எளிய படைப்பாளிகளின் புத்தகங்களைக் கூட லட்சக்கணக்கில் அச்சிட்டு, தன் வீரர்களுக்குத் தந்து, கொலை ஆயுதங்களோடு அறிவாயுதத்தையும் சேர்த்து வழங்கிய அமெரிக்கா வென்றது. புத்தகக் காதலர்களுக்குப் போரிலும் வெற்றிதான்!