பா. கெஜலட்சுமி
மூடப்பட வேண்டிய மதுபானக் கடைகளும், சிறைச்சாலைகளும் கூட்டத்தால் நெருக்கடிக்குள்ளாக, அரசுப் பள்ளிகளும், மாவட்டக் கிளை நூலகங்களும் ஆளில்லாமல் அருகிப் போவதுதான் சிறந்த மாநிலமாவதன் முன்னேற்றப் படிநிலைகளுள் ஒன்றா!? சேவையில் அடக்கமாகியிருக்கும் கல்வியும், மருத்துவமும் வணிகமாகியதின் முக்கியக் காரணி, பணத்தை அளவீடாக முன்னிறுத்தித், தரத்தை நிர்ணயிக்கும் மனித மனத்தின் குணக்கேடும், அதற்கு ஊக்கமளிக்கும் அரசின் போக்கும் தான்.

‘நாம்’ எனும் மையத்தில் இணைய வழிவகுக்க வேண்டிய கல்வி, தனிப்பட்ட ‘நானை’ வலுப்படுத்துவதாகத் திரிந்ததற்குப் பல்வேறு பாடத் திட்டங்களும், அதைச் செயல்படுத்தும் தனியார் நிறுவனங்களும், ஒழுங்கமைக்க வேண்டிய அரசும் முறை தவறியதுதான். மனிதர்களோடு வாழ்பவன், முதலில் மனிதர்களைப் புரிந்து கொள்ளாமல், வாழ்வின், சமுதாயத்தின் போக்கையறியாமல் வேறெதையறிந்து வெற்றியடைய முடியும் என்ற தெளிவு ஒவ்வொரு பெற்றோருக்கும், ஒவ்வொரு குழந்தையுள்ளும் இயல்பாகவே பொதிந்திருக்கும் திறமையைக் கண்டுணர்ந்து, நெறிப்படுத்தித் தூண்டி விடவேண்டுமே தவிரப் புதிதாக புகுத்திவிடுவதல்ல கல்வி என்ற புரிதல் ஆசிரியர்களுக்கும் வாய்த்துவிட்டால், சுகமானதாகச் சுடர் விடும் கல்வி. ஐக்கிய நாடுகளின் அறிவியல் பண்பாட்டுக் கழகம், (UNESCO) 1953ஆம் ஆண்டிலிருந்தே தொடக்கநிலைப் பள்ளிக் கல்வி, தாய்மொழியில் அமைவதைத்தான் ஊக்குவிக்கிறது. 90களின் தொடக்கத்தில் புற்றீசல் போலப் பரவத் தொடங்கிய ஆங்கில வழிப் பள்ளிகளே மாயையான ஆங்கில மோகத்தைக் கிளர்த்தியவை. தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோல். கருவிலிருந்து, மூன்று வயதுவரை தாயின் ஒலியலைகளைக் கேட்டுக் குதூகலித்த குழந்தைக்கு, அம் மொழியிலேயே எழுத்துகளைக் கற்பித்தல்தானே இயல்பு. இவ்வியல்பால்தானே பல மொழிகளையும் எளிதாகக் கற்க முடியும். மொழி, வெறும் தகவல் தொடர்புச் சாதனம் மட்டுமன்று; ஓர் இனத்தின், பண்பாட்டின் அடையாளம் என்பதை உணர்ந்த அரசே, அரசுப் பள்ளிக் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்குத் தாரை வார்த்து அரசுத்தொடக்கப் பள்ளிகளுக்கு மூடு விழா நிகழ்த்துகிறது. மேற்கண்ட அம்சங்களை உள்ளடக்கியும், பெரிதும் பேசாப்பொருளான கல்விக் கொள்கைகள் குறித்துமான படைப்பே, தேனி மாவட்டக் கிராமமொன்றின், நூற்றாண்டைக் கண்ட ஈராசிரியர் பள்ளியைக் கதைக்களமாகக் கொண்ட ‘ஒரெண்டே… ரெண்டே. புதினம்.
உதாரணமாக, ஒரு கிராமத்தில் நூறு குடும்பங்கள் வசித்தால், பள்ளி வயதுக் குழந்தைகள் பதினைந்திலிருந்து இருபது வரை தான் இருப்பர். இவர்களுக்காகத் தொடங்கப்பட்டதுதான் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளி. ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கான, தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்று, திருவண்ணாமலை அரசு ஆரம்பப் பள்ளியில் பணிக்கமர்ந்து, பின் தேனி மாவட்டம், வெள்ளைத்தேவன்பட்டியில் நூற்றாண்டு விழாக் கண்ட ஈராசிரியர் பள்ளிக்கு மாற்றலாகி வரும் கவிதா டீச்சர் தான் முதன்மைக் கதாபாத்திரம். அவர் பொறுப்பேற்றதும், ஐம்பது வயதை நெருங்கும் தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஐந்து வயதிற்கும் குறைவான (அண்டர் ஏஜ்) இரு குழந்தைகளைச் சேர்த்து மொத்தம் ஆறு குழந்தைகள்தான் என அறிமுகப்படுத்தும் போது, நாற்பது குழந்தைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுத்த கவிதா டீச்சரின் அதிர்ச்சி மனநிலைதான் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
சமுதாயத்தின் வெளிச்சமான பெண்கள், எல்லாச் சூழ்நிலையிலும் தம்மைப் பொத்திக் கொள்வதோடு, பொருந்தாக் களத்திலும், மாற்றங்களைச் செய்து, தனக்கானதாக்கிக் கொள்ளும் திறனுடையவள். அவர்களின் பிம்பமான கவிதா டீச்சரைக், கதாசிரியர், குடும்பத்தில் அவருக்கான பொறுப்பிலிருந்து, வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறார். மகேஷுடனான ஐந்து வருடத் திருமண வாழ்க்கைக்குப் பின்னும் குழந்தையின்மையால் பாட்டியுடன் வளரும் சித்ராவைத் தன் கணவனுக்கு இரண்டாவதாக மணமுடிக்கும் கவிதாவை ஏற்றுக் கொள்வது சற்றுக் கடினம். ஏனெனில், பல வருடம் கழித்து இரண்டாவது மணம் குறித்து, அத்தை, தன்னிடம் பேசுகையில், ‘மகேஷ் இடத்தில் வேறொருவனா’ எனக் கலங்கும் போது, மறுமணம் செய்து வைக்க எங்ஙனம் இவள் மனம் முன்வந்ததென சிறுநெருடலுக்குள்ளாகிறது.
அண்ணனும் காதலித்துத் தனியாகச் சென்றுவிட, குழந்தை பிறந்த ஒன்பது மாதத்தில் மகேஷும் காலமாகிவிட, குழந்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சித்ராவுக்கும் மறுமணம் முடித்து வைத்து, தந்தை, குழந்தையுடன் தேனியில் வசிக்கிறாள்.”நம்ம அப்பன், பாட்டன், பூட்டன் நமக்கு இருக்கிற செல்வாக்குக்குப் பயந்து அரசாங்கம் படி அளக்குதுன்னு நெனக்கிறாங்க. நீயாச்சும் ஏதாச்சும் முயற்சி செய்யுமா, என்னால என்ன உதவி செய்ய முடியுமோ அதைக் கண்டிப்பாச் செய்றேன். “ – இதே பள்ளியில இருபத்தைந்து வருஷம் முன்னாடி, வேலை பார்த்த, எண்பத்தைந்து அகவையிலிருக்கும் இராமசாமித் தாத்தாவின், கண்முன்னே அறிவுக் கருவூலம் அழியக்கூடாதென வருந்தும் ஏக்கக் குரல். இருந்த பிள்ளைகளில் ஒன்றும் தந்தையின் பணிமாற்றத்திற்காகத் திருப்பூர் செல்வதால், பள்ளியிலிருந்து சான்றிதழ் பெற்று விடுவித்துக் கொள்ளும்போது, கவிதாவின் கையறு நிலையை ஆழமான உவமையோடு இங்ஙனம் விவரிக்கையில் மனம், வேரோடு சாய்ந்த மரம் போல் வீழ்ச்சியுறுகிறது. “போர்ச் சூழலில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஒரு தாயின் மார்பில் முட்டி முட்டிப் பால் குடித்து, பசியாறத் துடித்த ஒரு பச்சிளம் குழந்தையினைப்போல் நாம் ஆகிவிட்டோமா?
மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதை விட அரசின் நலத்திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும் என்பதை நோக்கியே கல்வித்துறை அதிகாரிகளால், அரசு பள்ளி ஆசிரியர்கள் எவ்வாறு பணிச்சுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும், அரசுக் கட்டுப்பாட்டிலிருக்கும் ‘எம்மிஸ்’ செயலியில் பதிவது, பதிவேடுகள் பராமரிப்பது, இலவசப் புத்தகங்கள், புத்தகப் பைகளை மையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்வது போன்ற நிர்வாகச் சிக்கல்களையும் இப்புதினம் முன்வைக்கிறது. அடுத்த கல்வியாண்டில், பிள்ளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கும் கவிதா டீச்சர், தலைமையாசிரியர், இராமசாமி வாத்தியாரின் கூட்டுச் சிந்தனை செயலுருவாக்கமாகிறதா! வாசித்துணருங்கள்! கதைக்கருவின் அடியாழத்தை இலகுவாக்க, இயற்கைசூழ் அரசுப் பள்ளியின் கட்டமைப்பின் விவரிப்பும், சின்னமனூர், வெள்ளைத்தேவன்பட்டி சிற்றுந்துப் பயணத்தில் கவிதாவின் கண்கள்வழி, அனுபவித்த கற்றாழைப் புதர்கள், பொத்தக்கள்ளிப் பூக்கள், குடைசாலி மரங்கள், இசைவோடு சுற்றும் காற்றாலைகள் நம் கண்ணுக்கும், மனதுக்கும் இதமளித்துக் குளிர்ச்சியூட்டுகின்றன. ஆறு குறும்படங்கள், நான்கு கவிதை நூல்கள், இரண்டு சிறுகதை நூல்கள், ஒரு நாவல் எனத் தமது இலக்கியப் பங்களிப்பாக வழங்கிய எழுத்தாளர் இதயநிலவன், கவிஞர்; நாடகவியலாளர்; உரைவீச்சாளர்; சிறுகதையாளர்; குறும்பட இயக்குநர்; நடிகர்; பாடலாசிரியர்; திரைக்கதையாசிரியர்; நாவலாசிரியர்; வசனகர்த்தா எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
