குஜராத்தில் உள்ள சூரத் நகரில் 67 லட்சம் சதுர அடியில் ஏழைகளால் நெருங்கமுடியாத வைர வியாபார வளாகம் ஒன்றைக் கட்டியுள்ளது மோடி அரசு. உலகிலேயே மிகப் பெரிய கட்டிட வளாகமான அமெரிக்காவின் பெண்டகன் ராணுவ வளாகத்தைவிடப் பெரிது என்று மத்திய கார்ப்பரேட் காவி அரசு மார் தட்டுகிறது. நமது சென்னைப் புத்தகக் காட்சியும் சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சியும் பெருமையோடு நடத்தப்படும் இன்றைய சூழலில் நம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட இருக்கும் கலைஞர் நூற்றாண்டுப் புத்தகப் பூங்கா உலகிலேயே மிகப் பெரிய கட்டிட வளாகமாகக் கட்டப்பட்டு நம் வாசிப்புச் சாதனையை உலகம் அறிய வைக்க வேண்டும் என்று மனது துடிக்கிறது.
தமிழக அரசு புத்தக வாசிப்பைத் தமிழ்ச் சமூகத்தில் விதைத்திட மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. நம் தமிழ் நூல்கள் அயல்மொழிகளுக்கு மொழியாக்கம் பெறவும், பிற மொழி நூல்கள் தமிழுக்கு வரவும் முதன் முறையாகச் சர்வதேசப் புத்தக முகவர்களை நியமித்து வரும் ஜனவரி 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்க இருக்கும் சர்வதேசப் புத்தகத் திருவிழா புதிய சாதனையையும் படைக்க இருக்கிறது.
நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த புத்தகப் பூங்காத் திட்டம் கலைஞர் நூற்றாண்டுப் புத்தகப் பூங்காவாக மலர வேண்டும் எனும் கோரிக்கை தற்போது வலுப்பெறுகிறது. கொல்கத்தாவின் கல்லூரிச் சாலைப் புத்தகச் சந்தைபோல நிரந்தரப் புத்தகச் சந்தை தமிழகத்தில் இல்லை. அதற்காக உலகிலேயே மிகப் பெரிய பரந்துபட்ட ஒரு வளாகத்தைக் கட்டி நமக்குப் பொன்னும், வைரமும், சொத்தும் புத்தக வாசிப்பின் மூலம் நாம் சேர்க்கும் அறிவுச் செல்வமே என்கிற கலைஞரின் வரிகளை மெய்ப்பிக்கலாமே என்று மனம் ஏங்குகிறது.
இந்த முறை சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கொல்கத்தா சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (பிப்ரவரியில் நடக்க உள்ளது) பற்றிய இரண்டு செய்திக் குறிப்புகள் நம்மைச் சிந்திக்க வைப்பவையாக உள்ளன.
முதலாவதாக உள்ளூர்த் தொடக்கநிலைச் சிறு புத்தக வெளியீட்டாளர்களுக்காக மினி- ஸ்டால்கள் நூறு அமைக்கப்பட உள்ளன. அவர்களுக்கு வாடகை ஒரு நாளைக்கு நூறு ரூபாய் என மிகக் குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போன்று சென்னையிலும் நடைமுறைப்படுத்துவது புதிய மற்றும் சிறிய புத்தக வெளியீட்டாளர்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.
கொல்கத்தா புத்தகக் கண்காட்சி குறித்த இரண்டாவது செய்திக் குறிப்பு டெலிகிராஃப் இதழில் வெளிவந்துள்ளது. மேற்கு வங்க அரசு புத்தக உதவித் தொகை (Book Allowance) வழங்க முன்வர வேண்டும் என்கிற கோரிக்கை. முதலமைச்சர் ஜோதிபாசு காலத்தில் அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களுக்குக் கல்கத்தா புத்தகக் கண்காட்சியில் செலவு செய்ய அப்போதைய அரசு புத்தக உதவித் தொகை ரூ.500 (1980களில் வழங்கி அதை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது.) அதை நடுவில் நிறுத்தி இருக்கிறார்கள். இந்த ஆண்டுமுதல் திரும்ப வழங்கலாம் என்றும் ரூபாய் 1000 மாகத் தொகையை உயர்த்தலாம் என்றும் புத்தக கண்காட்சி ரசீதுகளைக் கணக்கு வைக்க ஒரு தணிக்கை முறையையும் அறிமுகம் செய்யக் கல்கத்தா வெளியீட்டாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைபோல இந்த அரசு புத்தக உதவித்தொகையும் வழங்க முன்வர வேண்டும்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அரசு புத்தக வாசிப்பிற்காகப் பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டு ஒரு முன்மாதிரி அரசாக இருந்தாலும் ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நூலக ஆணை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது ஒரு குறையாகத் தமிழ்ப் பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. அனைவருக்கும் அனைத்தும் என முழங்கும் இந்தத் திராவிட மாடல் அரசு தமிழ்ப் பதிப்புலகின் மீதும் கவனம் செலுத்தி நிலுவையில் உள்ள பாக்கிகளை வழங்கி புதிய நூலக ஆணையை முறையாக வெளியிட்டு, இந்த 2024 புத்தாண்டில் கடன் நிதிச்சுமையால் திணறிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பதிப்பாளர்களின் வயிற்றில் பால்வார்த்து மகிழ்ச்சிப் பொங்கலுக்கு வழி செய்ய வேண்டும்.
சென்னை புத்தக கண்காட்சி வெல்லட்டும்.
