நிகழ் அய்க்கண்
வைக்கம் போராட்டத்தின் 100 வது ஆண்டு நிறைவையொட்டி கேரள இடது முன்னணி அரசு 2023 மார்ச் 30 அன்று தொடங்கித் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. வைக்கம் போராட்டத்தின் வெளிச்சத்திலிருந்து இன்றைக்கும் பின்பற்றவேண்டிய வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பாக இந்நூல் வடிவம் பெற்றுள்ளது. பல்வேறு தலைப்புகளின் கீழ் கூறப்பட்டுள்ள ஆசிரியரின் கருத்துகளைச் சுருக்கமாக்கிக் கீழே தரப்பட்டுள்ளது

தீண்டாமையையும் சாதிக்கொடுமையையும் எதிர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக நடைபெற்ற அறப்போராட்டம் என்ற தகுதியினை வரலாற்றில் பெற்றுள்ளது வைக்கம்போராட்டம். 1855 இல் ஈழவர் குடும்பத்தில் பிறந்து துறவறம் பூண்ட நாராயணகுரு 1888இல் அருவிபுரத்திற்கு வந்து ஒரு கல்லைச் சிவலிங்கமாக ஆக்கி, அங்கே ஈழவர்களைப் பூசை செய்யவைத்தார். சாதிபேதம், மதபேதம் இல்லாமல் அனைவரும் வாழும் இடம் எனத் தனது ஆசிரமத்தை அமைத்தார். நாராயணகுருவை முன்னிறுத்தி டாக்டர் பல்பு ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (SNDP) எனும் சமூகச்சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கினார். அப்போது, வைக்கம் கோயிலைச்சுற்றி உள்ள தெருக்களில் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த இயக்கத்தின் தலைவராக இருந்த என்.குமரன் செயலராகவும், காங்கிரஸ் கட்சியிலுமிருந்த டி.கே. மாதவன் இருவரும்தான் வைக்கம் போராட்டத்தைத் திட்டமிட்டனர்.
1921 செப்டம்பரில் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற டி.கே.மாதவன் காந்தியைச்சந்தித்து வைக்கம் போராட்டம் குறித்து விவாதித்தார். மீண்டும், 1923 இல் காக்கிநாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இப்பிரச்சினையை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, திருவாங்கூர் காங்கிரஸ் இப்போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுமாறு காந்தி கேட்டுக்கொண்டார். அதன்பிறகு, 1924 ஜனவரி 24 இல் தீண்டாமை ஒழிப்புப் போராட்ட அமைப்பைக் காங்கிரஸ் தொடங்கியது, டி.கே. மாதவன் தலைமையில் பிரச்சாரக்குழுவும் அமைக்கப்பட்டுப், பிப்ரவரியில் வைக்கத்தில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. 1924 மார்ச் 30 இல், ஒரு புலையர், ஓர் ஈழவர், ஒரு நாயர் என ஒவ்வொரு சத்தியாகிரகக் குழுவிலும் இருக்கச்செய்து தடைசெய்யப்பட்ட வீதியில் நடக்க முயற்சித்தனர். போலீசார் நாயரை மட்டும் உள்ளேவிட அனுமதித்தனர். அதனை ஏற்காமல் மூவரும் உள்ளே சென்றபோது கைதாகினர். இப்படியாக ஒவ்வொருமுறையும் நடந்தது.
வைக்கம் போராட்டக்குழுவானது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான தந்தை பெரியாரை அழைப்பது என முடிவுசெய்து பெரியாருக்குக் கடிதம் எழுதியது. அப்போது பெரியார் மதுரை மாவட்டத்தில் இருந்தார். தகவல் அறிந்ததும், கோவை அய்யாமுத்து, சேலம் இராமநாதனையும் அழைத்துக்கொண்டு வைக்கம் பயணமானார். வைக்கம் வந்த பெரியார் பல இடங்களுக்குச்சென்று பிரச்சாரம் செய்தார். பெரியார் கூட்டத்திற்கு ஆதரவு பெருகுவதைக்கண்ட மகாராஜா தடைஉத்தரவுபோட்டார். அதனையும் பெரியார் மீறியபோது கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில் நாராயணகுருவும் நேரடியாகப் போராட்டக்களத்திற்கு வந்து ஆதரவு தந்தார். காந்தியின் அணுகுமுறையால் ஆதிக்கச்சாதியைச்சர்ந்த அமைப்புகளும் இப்போரட்டத்திற்கு ஆதரவு தந்ததுடன் 27,000 வாக்காளர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றையும் மகாராணியிடம் அளித்தனர். வைக்கம் போராட்டத்திற்கு முடிவு காணும் எண்ணத்துடன் மகாராணி சட்டப்பேரவையைக் கூட்டி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார்.
பழமைவாதிகள் ஓர் ஒட்டில் அத்தீர்மானத்தைத் தோற்கடித்துவிட்டனர். இருப்பினும் மகாராணி போராட்டக்காரர்களோடு உடன்பாடு கொள்ளவிரும்பினார். எனினும் பெரியாரோடு உடன்பாடு காணவிரும்பாத திவான், ராஜாஜி மூலம் காந்தி அங்கு வரவழைக்கப்பட்டார் அவரின் வழியாகக் கோயிலைச்சுற்றியுள்ள வீதிகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் நுழையவும், நடக்கவும் உடன்பாடு ஏற்பட்டது. வைக்கம் போராட்டத்தில் காந்தியின் பங்கு என்பது 1922 இல் திருநெல்வேலியிலும், 1924 இல் காக்கி நாடாவிலும் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தனது ஆதரவு மட்டுமன்றி ஒவ்வொருமுறையும் வழிகாட்டவும் செய்தார். இறுதியில் 1925 மார்ச் 9-ல் வைக்கம் வந்தடைந்த காந்தி அங்குள்ள வைதீகர்கள், வர்க்கலையிலிருந்த மகாராணி, சிவகிரியிலிருந்த ஸ்ரீ நாராயணகுரு, பெரியார் ஆகியோரைச்சந்தித்தார், நிறைவாக, அரசாங்கமானது இரண்டு சிறிய சந்துகள் தவிர, நான்கில் மூன்று தெருக்களில் எல்லாரும் நடக்கலாம். கிழக்குப்புறம் கோபுரத்திற்குச் சற்றுத்தொலைவில் வழிபாட்டுக்கு வரும் மக்களுக்கு மட்டும் அது திறந்துவிடப்படும் என்கிற சமாதானத்தைச் சத்தியாகிரகிகள் மீது திணித்துப் போராட்டத்தை முடித்துவைத்தது.
மார்ச் 30, 1924 இல் தொடங்கிய வைக்கம் போராட்டத்தில் ஏப்ரல் 10 க்குள் தலைவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் அரசு கைதுசெய்துவிட்டது. சத்தியாகிரகத்தினைக் தொடர்ந்து நடத்தத் தலைவர்களை அனுப்பக்கோரி காந்தியிடம் போராட்டக்குழுத் தலைவர்கள் வேண்டினர். இயக்கத்தினைத் தொடர்ந்து நடத்திட சென்னை மாகாணக் காங்கிரஸ் தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள் எனக் காந்தி கூறிவிட்டார். போராட்டக்குழு உறுப்பினர்களின் ஆலோசனையின்படி சென்னை மாகாணக் காங்கிரஸ் தலைவரான தந்தை பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பினை ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார் கோவை அய்யாமுத்து, சேலம் இராமநாதன் ஆகியோரை அழைத்துக்கொண்டு, போராட்டம் தொடங்கிய 15 வது நாளில் வைக்கம் சென்றடைந்தார்.

திருவிதாங்கூர் அரசு பெரியாரின் பேச்சுக்கு ஏற்பட்ட தாக்கத்தைக்கண்டு அரண்டுபோய் அவரது பேச்சுக்குத் தடைவிதித்தது. இதனைத்தொடர்ந்து கோட்டயம் மாவட்டமும் தடைவிதித்துவிட்டது. மே -18 இல் தடையை மீறி வைக்கத்தில் பேசியதினால் பெரியார் கைதுசெய்யப்பட்டுப் பிறகு ஜூன் 21 இல் நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலையானார். விடுதலையானதும் பெரியார் மற்றும் கேசவமேனன் விடுத்த அறிக்கையில் “வைக்கம் உட்பட எல்லா இடங்களிலும் எல்லாரும் நடமாடலாம் என்று அரசாங்கம் அனுமதிக்கும் அறிகுறியாகவே எங்கள் விடுதலையைக் கருதுகிறோம் இல்லையேல் வைக்கம் போராட்டம் மீண்டும் தொடரும்” என்றனர். ஜார்ஜ் ஜோசப், மேற்படிப்பிற்காக லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் முடித்து இந்தியா திரும்பியவர். அவருக்கு நீதிபதி பதவியை ஆங்கிலேய அரசு தரமுன்வந்தும் அதனை அவர் ஏற்கவில்லை. பின்னர், மதுரையைத்தேர்வு செய்து அங்கு வழக்கறிஞர் தொழிலைத்தொடங்கினார். குற்றப்பரம்பரைச்சட்டத்தில் 1911 இல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, அச்சட்டத்தின் ஒரு பிரிவு அரசுக்கு எந்தக்குழுவையும், மக்கள் வகுப்பையும் குற்றப்பிரிவாக அறிவிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தது. கள்ளர், மறவர் உள்ளிட்ட குற்றப்பரம்பரையாக வரையறுக்கப்பட்ட சமூகத்தவரை அச்சட்டத்தின் கொடுமையிலிருந்து காப்பாற்றக் கடுமையாக உழைத்தார்..
மதுரைத் தொழிலாளர் சங்கத்தில் கள்ளரும், மறவரும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக இருந்துவந்தனர். 1918 ஜூலை 21 ந்தேதி சம்பள உயர்வு, வேலை நேரம் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென ஆலைத்தொழிலாளர்களின் போராட்டம் வெடித்தது. சங்கத்தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி ஜார்ஜ் ஜோசப்பைச் சங்கம் கேட்டுக்கொண்டது. அவரோ, காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான டாக்டர்.பி.வரதராஜுலு நாயுடுவைப் பரிந்துரைத்தார். அவரும் மதுரை வந்து 12.5% சம்பள உயர்வு ; 12 மணியிலிருந்து 10 மணியாக வேலை நேரம் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆலை நிர்வாகம் அதனை மறுக்கவே நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்குமான உரசல் மோதலாக வெடித்தது. நாயுடு கைதுசெய்யப்பட்டார். அதன்பின்னர் ஜார்ஜ் ஜோசப் அப்பொறுப்பினை ஏற்றுச் சங்கத்தினை வழிநடத்தினார்.
ஜார்ஜ்ஜோசப் வைக்கம் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவராவார். அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ரெளலட் சட்டத்தை எதிர்ப்பதற்காக மதுரை வந்த காந்தி, ஜோசப்பின் பங்களாவில் தங்கி அச்சட்டத்திற்கு எதிராகத் தம்பதியினரிடம் கையெழுத்தினையும் பெற்றார். மேலும் கிலாபத் இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் காந்தியையும், செளகத் அலியையும் கேரளாவுக்கு அழைத்துச்சென்றார். பின்னர், காந்தியின் விருப்பத்தை ஏற்று வழக்கறிஞர் தொழிலைத் துறந்து தனது மனைவியுடன் சபர்மதி ஆசிரமம் சென்று எளிய வாழ்வு நடத்தினர். இந்நிலையில் மோதிலால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க அவர் நடத்திய “இண்டிப்பெண்டண்ட்” பத்திரிக்கையின் ஆசிரியராக மாறினார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தீவிரமாகப் பத்திரிகையில் எழுதியதினால் ஜோசப்பிற்கு 18 மாதம் தண்டனை விதிக்கப்பட்டது. காந்தி சிறையில் இருந்த காலத்தில் “யங் இந்தியா” இதழுக்கும் ஆசிரியராகவும் இருந்தார்.
கேரளத்தில் நடக்கும் சத்தியாகிரகப் போரைத் தொடங்கியவர்கள் கேரளக்காங்கிரஸ் கமிட்டியாக இருந்தாலும் அப்போரின் பின் நிகழ்வுகளில் தமிழ்நாட்டாரே பெரும் பங்குவகித்தனர். போராட்டம் தளர்ந்திருந்த நேரத்தில் தலைமையேற்று நடத்தியது; போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைப்பட்டது இப்படியாக நிறையச் சம்பவங்கள் உண்டு. இப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் கோவை அய்யாமுத்து, சேலம் இராமநாதன், சுசீந்திரம் கோயில் நுழைவுப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய எம். பெருமாள் நாயுடு உள்ளிட்டவர்களுடன் நூற்றுக்கணக்கானோர் வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.
வைக்கத்தைத்தொடர்ந்து டி.கே. மாதவன் மற்ற இடங்களில் நீடிக்கும் தீண்டாமைக்கொடுமைகளை நீக்க முயற்சிகளை மேற்கொண்டு, அம்பழப்புழை, கன்னல் குளங்கரா, திருவார்ப்பு ஆகிய இடங்களில் ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தினார். எம்.பெருமாள் நாயுடு தலைமையில் நடந்த சுசீந்திரம் ஆலய நுழைவுப்போராட்டத்தில் தோழர் ப. ஜீவானந்தமும் தனது 17 வயதில் கலந்துகொண்டார். கேரளாவில் நடைபெற்ற ஏராளமான தனித்தனிப் போராட்டங்களும் இணைந்து பெரிய போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன. வைக்கம் அளவுக்கு முக்கியமான போராட்டம் குருவாயூர் ஆலய நுழைவுப்போராட்டமாகும். இப்போராட்டத்திற்கு அமைக்கப்பட்ட குழுவில் ஏ.கே கோபாலனும் ஒருவர். 1931 நவம்பர் 1-ந்தேதி போராட்டம் துவங்கியது. இவ்வியக்கத்திற்கு ஆதரவாக ஏராளமான மக்கள் குருவாயூரில் குவிந்தனர். சத்தியாகிரகப்போராட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் ஏ.கே கோபாலன் கைதுசெய்யப்பட்டு அவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. உடல் பலவீனமான நிலையில் சிறையிலிருந்து வெளிவந்த ஏ.கே கோபாலன் மீண்டும் பல்வேறு அரசியல் கூட்டங்களில் பங்கேற்றதுடன், மீண்டும் குருவாயூர் போராட்டத்தில் குதித்தார்.
குருவாயூர் ஆலய நுழைவுப்போராட்டத்தை விளக்கிக் கேரளா முழுவதும் பிரச்சாரம் செய்வதென்று முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஏ.கே. கோபாலன் கண்ணனூரில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கே அவர் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுப் பெல்லாரி சிறைக்கு அணுப்பப்பட்டார். அங்கே அவருக்கு நேர்ந்த சித்திரவதைக்கொடுமையால் பலவித இன்னலுக்கு ஆளானார். நடந்த கொடுமைகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோது காய்ச்சல் ஏற்பட்டு உணர்விழந்து போனார். பின்னர் சிறை அதிகாரிகள் அவரை வேலூர் சிறைக்கு மாற்றினர். அச்சிறையிலிருந்து 1933 ஆம் ஆண்டு விடுதலையானார். அப்போது தோழர். கிருஷ்ணப்பிள்ளை கேரளத்தில் கம்யூனிஸ்ட்கட்சி நிறுவனர்களில் ஒருவராகவும், தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முன்னோடியாகவும் இருந்தார். அவருடன் சேர்ந்து ஏ.கே.கோபாலன் குருவாயூர் போராட்டக்களத்துக்குச்சென்றார். தடையைமீறிக் கோயிலுக்குள் நுழைந்து, அங்கு புனிதமாகக்கருதப்பட்ட கோயில் மணியைப் பிராமணரல்லாத கிருஷ்ணப்பிள்ளை அடித்தார்.
