சந்திப்பு : சம்சுதீன் ஹீரா
வணக்கம் தோழர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று முக்கிய அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறீர்கள். தன்னறம் இலக்கிய விருது, கலைஞர் பொற்கிழி விருது, இப்போது சாகித்ய அகாடமி விருது என்று மூன்று முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறீர்கள் வாழ்த்துகள். என்னுடைய முதல் கேள்வி, நீங்கள் 1980 களிலிருந்து உங்கள் கலை இலக்கியப் பயணத்தைத் தொடங்கி விட்டீர்கள். தொடர்ச்சியாகச் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தீர்கள் அவை வாசகப் பரப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவையாகவும் இருந்தன ஆனால் உங்களுடைய முதல் நாவலை 2011ல் தான் வெளியிட்டீர்கள் இந்த இடைவெளிக்குக் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?

நான் ஆரம்பத்தில் தொடர்ச்சியாகச் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். கட்டுரைகள், கலை இலக்கிய விமர்சனங்கள் போன்ற பரப்பில் தொடர்ச்சியாக இயங்கி வந்தேன் அதன் பிறகு ஓர் ஐந்து ஆண்டுகள் என்னை வாசிப்பில் நிலை நிறுத்திக் கொண்டேன் தஸ்தயோவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய் இருவரையும் ஆழமாக வாசித்தேன். அந்தக் காலகட்டத்தில் என் எழுத்துச் செயல்பாட்டை முழுமையாக நிறுத்தி இருந்தேன் அதற்குப் பிறகு வாழ்க்கை குறித்த மறு பரிசீலனைகளை நான் செய்யத் தொடங்கியிருந்தேன் அது என்னுடைய சிந்தனையை இன்னொரு திசை நோக்கி நகர்த்தியது.
டால்ஸ்டாயும் தஸ்தயோவ்ஸ்கியும் என்னை வேறொரு புதிய மனிதனாக உருவாக்கினார்கள்.
அதன் பிறகு மீண்டும் என் எழுத்துச் செயல்பாட்டைத் தொடங்கினேன் நாடகங்களை எழுதினேன்; மீண்டும் சிறுகதைகளின் பக்கம் கவனம் செலுத்தினேன். அரசியல் கட்டுரைகள் எழுதினேன்.
அந்தக் காலகட்டத்தில் 2010-11 இல் அமெரிக்காவில் எனக்கு ஓர் உறைவிடச் செயலூக்க முகாம் அமைந்தது. அதற்குப் போய் வந்தேன். எனக்கு அவர்களின் மொழி தெரியாது. தனியாகத்தான் போனேன். அங்கு நான் ஒரு மாத காலம் இருக்க வேண்டியதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தான் என்னுடைய முதல் நாவலான நிழலின் தனிமையை எழுதி முடித்தேன். அந்த நாவல் நீண்ட காலமாக என் மனதில் இருந்து அசைபோட்டுக் கொண்டிருந்த கதைக்களம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதை எழுதி முடித்தேன்.
அடுத்தடுத்த காலகட்டங்களில் என்னுடைய வாழ்க்கைப் போராட்டங்கள், என்னுடைய எழுத்துச் செயல்பாடுகளில் சிரமங்களை ஏற்படுத்தின. அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளன். அதுதான் என் அடையாளம் ஆனாலும் வாழ்வதற்கான தேவைகள் அதற்குப் புறத்தில் இருந்து ஈடு செய்து கொள்ளக் கூடியவையாக இருந்தன.
அந்தப் போராட்டங்கள் இன்று வரையிலும் கூட எனக்குத் தீர்ந்தபாடில்லை. வி.ஆர்.எஸ் கொடுப்பதற்கு முடிவு எடுத்திருந்தேன். சென்னை போக வேண்டும், அங்கு தங்கியிருந்து எழுத்துப் பணிகளைத் தொடர வேண்டும் என்பதுதான் எனது திட்டமாக இருந்தது.
முழு நேரமாக எழுத்து சார்ந்த வாழ்க்கையில் என்னை அர்ப்பணித்துக் கொள்வது என்று முடிவு செய்திருந்தேன். அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலச்சுவடில் இருந்தும் வெளியேறினேன். எழுத்தைத் தவிர வேறு எந்த விஷயங்களிலும் என் கவனம் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக முடிவெடுத்தேன். புதிய தலைமுறையின் கலை இலக்கிய அங்கமான புதுயுகம் என்கிற ஒரு சேனலில் ஒரு முக்கியப் பொறுப்பில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
அந்த வேலையையும் விட்டுவிட்டு முழு நேர எழுத்துப் பணிக்காக முடிவு செய்து ஊருக்குத் திரும்பினேன். அப்போதுதான் என் வாழ்வின் மிக மோசமான ஒரு காலகட்டத்தைச் சந்தித்தேன். ஒரு விபத்து என் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது அதிலிருந்து என்னை மீட்டெடுத்துக் கொள்வதற்கு மிகுந்த காலத்தையும் பொருளையும் நான் இழக்க வேண்டியதுதாகத்தான் இருந்தது.
முழுமையாக என் உடல் நலன் தேறாத போதும் நான் என் எழுத்துப் பணியைத் தொடங்கினேன். அப்போதுதான் நடராஜ் மஹராஜ் என்கிற நாவலை இரண்டு ஆண்டுகள் உழைப்பில் எழுதி முடித்திருந்தேன். குளுக்கோஸ் பவுடரைச் சாப்பிட்டுக் கொண்டே இரவு பகலாக அமர்ந்து அதை எழுதி முடித்தேன். உடல் நலமும் பொருளாதார அழுத்தங்களும் கடும் பாதிப்பைக் கொடுத்திருந்த போதும் ஒரு சவாலாக அவற்றை எதிர்கொண்டு அந்த நாவலை எழுதி முடித்தேன்.
அந்த நாவலே சாகித்ய அகாடமி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது ஆனால் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு 2020இல் நீர் வெளிப்படூஉம் நாவலை எழுதத் தொடங்கியிருந்தேன் அதை முடித்துக் கொண்டு எனக்குள் நீண்ட நாட்களாக ஊறிக்கிடந்த எனது கனவுப் படைப்பான நொய்யலை எழுதி முடிக்க திட்டமிட்டு இருந்தேன்.
என்னால் தெளிவாகப் பேச முடியாது. பேசினால் வாய் உளறும். என்னுடைய பேச்சுகள் கேட்பவருக்குப் புரியாத அளவுக்குத் தடுமாற்றங்கள் இருந்தன. அதையெல்லாம் மீறித்தான் நொய்யல் நாவலை எழுதி முடித்தேன். என் நாவலின் பயணம் இப்படித்தான் துவங்கியது.
ஐயா, அடுத்த கேள்வி. 2011 இல் இருந்து இன்று வரை உங்களுடைய நிழலின் தனிமை, நடராஜ் மகராஜ், நீர் வழிப்படூஉம், நொய்யல் என்கிற நான்கு நாவல்களுமே பரவலான வாசகப் பரப்பை அடைந்திருக்கின்றன. பொதுவாகவே ஒரு வெற்றி படைப்பைக் கொடுத்த ஒரு படைப்பாளி அடுத்தடுத்தப் படைப்புகளில் தடுமாற்றம் அடைவது இயல்புதான். ஆனால் உங்களின் நான்கு நாவல்களும் தொடர்ச்சியான கவனத்தை ஈர்த்தன. அது குறித்துச் சொல்லுங்களேன்.
எவனொருவன் தன் வாழ்க்கை குறித்த ஆழமான வேர்களை நினைவில் கொண்டுள்ளானோ அவனால் உயிரோட்டமுள்ள நல்ல படைப்புகளைக் கொடுக்கமுடியும். நான் என் வேர்களிலிருந்தே படைப்புகளைத் தேடி எடுக்கிறேன். எனக்கு எழுதுவதற்கு நிறைய இருந்தது. அதற்குப் பெருமளவுக்கு என்னுடைய வாழ்க்கைப் பின்னணி எனக்கு உதவியது. நான் வாழ்ந்த இந்தப் பெருவாழ்வை எழுதித் தீர்க்க வேண்டும் என்கிற வேட்கை எனக்குள் இருந்து கொண்டிருந்தது.
நொய்யலுக்காக மட்டும் 14 ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன்: திரும்பத் திரும்ப அதை எழுதி, மொழியைச் செப்பனிட்டு ஒரு முழு வடிவத்தைக் கொண்டு வந்தேன். நான் பொதுவாக இரவுகளில் எழுதக்கூடியவன். இந்த அறையில் நான் தனிமையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன். (அறையைக் கை காட்டுகிறார்) இந்தத் தனிமை எனக்கு ஒரு வகையில் கை கொடுத்தது. யாருடைய தொந்தரவுகளும் இல்லாமல் என்னால் எழுத முடிந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்தத் தனிமை எனக்கு மனப்பிறழ்வைக் கூட ஏற்படுத்தியது.
நீங்கள் நொய்யல் நாவலை வாசித்தீர்கள் என்றால் அதில் பல பகுதிகள் மனப்பிறழ்வை ஏற்படுத்தும் தன்மையுடையவையாக இருக்கும். அவையெல்லாம் எனக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
ஆனால், நொய்யல் முழுக்க முழுக்க நொய்யலைச் சுற்றியுள்ள பகுதிகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்தான். இது எழுதப்பட்ட காலங்களில் இந்த ஊரைத் தாண்டி வெளியே ஒன்று இரண்டு முறைதான் நான் சென்றிருக்கிறேன்.

சங்கீத நாடக சபா சார்பில் உங்களுக்கு ஒரு விருது கொடுக்கப்பட்டது. அது குறித்துக் கொஞ்சம் கூறுங்களேன்.
அதுவும் கூடத் தற்செயலாக நிகழ்ந்த விஷயம்தான். அப்போது கோவை ஞானி இருந்தார். நாடகப் பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கமைத்திருந்தார். அந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அப்போது எனக்கு இருந்த பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு அந்தத் தொகை எனக்கு மிகப்பெரியதாக இருந்தது. அதற்காகவே நான் அதில் பங்குபெற்றேன். அந்த நாடகத்தை எழுதிய போதும் அப்படித்தான். நான் எனது பள்ளி அறையில் தனிமையில் அமர்ந்து கொண்டு குளுக்கோசைச் சப்பிக் கொண்டே எழுதி முடித்தேன். அதுவும் வெறித்தனமாக உழைப்பைச் செலுத்தி உருவாக்கிய ஒரு நாடகம்தான். அதற்கு விருது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கிடைத்தாக வேண்டும் என்கிற தேவையும் இல்லை. எல்லாப் படைப்புகளுக்குமே விருது கிடைக்கும் என்பதற்கான அடிப்படையும் இல்லை அல்லவா? அதையெல்லாம் தாண்டி எழுதுவது தான் முக்கியம். அந்த நாடகத்திற்குப் பிறகு நிறையப் போட்டியாளர்களில் இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். அதற்காகப் பாண்டிச்சேரி போயிருந்தேன் அந்த நேரங்களில் கடுமையான அல்சர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தேன். தொடர்ச்சியாக வாந்தி எடுத்துக் கொண்டிருந்த காலம் அது. பாண்டிச்சேரியில் 40 நாட்கள் இருந்தேன். அது ஒரு நல்ல அனுபவம். எனக்கு நாடகம் மிகவும் பிடித்த ஒரு விஷயம். காந்தியைக் குறித்து ஒரு நாடகம்எழுதத் திட்டமிட்டிருந்தேன். அது துரதிஷ்டவசமாகப் பாதியில் நின்று விட்டது. அடிப்படையில் என்னை ஒரு நாடகக்காரன் என்று கூடச் சொல்லலாம். எப்படி என்றால் எங்கள் குடும்பமே நாடகம் சார்ந்த குடும்பம். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பல பேர் பாட்டுக்காரர்கள். கொங்கு மண்டலத்தில் பொன்னர் சங்கர் கதையைப் படிக்கிற பாட்டுக்காரர்கள். நாவிதர்கள்தாம் பாட்டுக்காரர்களாக இருந்தார்கள். அதுதான் எனக்குப் பயிற்சியாக இருந்தது. நான் சிறுகதைகள் பெரிதாக எழுதவில்லை. மொத்தமாகக் கணக்குப் பார்த்தால் ஒரு நாற்பது கதைகள்தாம் இருக்கும். ஆனால் அந்த நாற்பதில் 25 கதைகள் பெரும்பாலும் கொண்டாடப்பட்டவையாக இருந்தன.
நீங்கள் ஒரு நேர்காணலில் மூன்று நாவல்களை உங்கள் வாழ்வின் லட்சியம் என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தீர்கள் விரோதி, நொய்யல், ஆதியாகமம். இதில் நொய்யல் முடித்து விட்டீர்கள். மற்ற இரண்டு நாவல்களை எப்போது எதிர்பார்க்கலாம்?
அடிப்படையாகச் சொல்லப்போனால் நொய்யலுக்கு முன்பாகவே ‘விரோதி’யைத் தான் முடிக்கத் திட்டமிட்டு இருந்தேன். அதை ஏறத்தாழ ஓராண்டுக்கு மேல் எழுதிக்கொண்டிருந்தேன். அது ஓர் அரசியல் நாவலாகவும் இருந்தது. விரோதி, மக்களுக்கும் மனித சமூகத்திற்கும் எதிரான அதிகாரத்தைக் கேள்வி எழுப்பும் நாவலாக அதைப் படைத்திருந்தேன்.
இப்போது நொய்யல் நாவலை எழுதி முடித்து விட்டேன். விரோதிக்கு முன்பாகவே ஆதியாகமம் நாவல் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. இன்னும் ஒன்று இரண்டு ஆண்டுகளுக்குள் அவை உங்களுக்கு வாசிக்கக் கிடைக்கும்.
90 க்குப் பிறகு தி ஜானகிராமன், பூமணி, ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகளும், அதற்கு அடுத்தபடியாக எஸ்ரா, தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, ஜெயமோகன், நீங்கள் போன்றோர் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றீர்கள். இப்போது உங்களுக்குப் பின்னால் ஒரு புத்தம் புதிய இளம் தலைமுறை எழுத வந்திருக்கிறது இந்தக் கால வேறுபாடுகளில் இலக்கியம் சந்தித்த மாற்றங்கள் குறித்தும் அதன் தன்மைகள் குறித்தும் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
இப்போதைய பார்வையை உடனடியாகச் சொல்ல முடியாது. இப்போது எழுத வந்திருப்பவர்கள் எந்த அளவுக்கு எழுத்தைப் பயின்று இருக்கிறார்கள் என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும். ஆனாலும் இப்போது நிறைய எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தீவிரத் தன்மை பெற்று விட்டார்களா என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. அந்தத் தீவிரத்தன்மையை எட்டாமல் படைப்பு நிறைவேறாது என்பது என் கருத்து.
புதுமைப்பித்தன் காலங்களில் இலக்கியம் என்பது வாழ்வின் முக்கியமான விஷயமாக இருந்தது தி.ஜானகிராமன் எவ்வளவு பெரிய எழுத்தாளர்? அசோகமித்திரன்..? அந்தக் காலகட்டம் என்பது தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்பது போல இருந்தது.
அந்தக் காலகட்டத்தில்தான் இடதுசாரி இலக்கியங்களும் வெளிவந்தன. செம்மலர், தாமரை போன்ற இதழ்கள் கவனம் பெற்றன. நான் தாமரையில் எழுதி இருக்கிறேன். நான் தாமரையில் இருந்து கற்றுக் கொண்டேன்.
செம்மலரில் இருந்து கற்றுக் கொண்டேன். நான் அடிப்படையில் ஓர் இடதுசாரி. என்னுடைய வாழ்க்கைப் போராட்டங்களை இந்த இலக்கியங்களின் மூலமாகக் கடந்து வெளியேற வேண்டும் என்று நான் முடிவு செய்தேன்.
நான் அடிப்படையில் ஒரு போராளி. நான் இலக்கியப் பாதையைத் தேர்ந்தெடுத்த போது என்னுடைய போராட்டப் பாதையைக் கைவிடவில்லை அதை வேறொரு வடிவத்தில், இலக்கிய வடிவத்தில் முன்னெடுப்பதாகவே நினைத்தேன். என்னுடைய நடராஜ் மஹராஜ், நிழலின் தனிமை போன்ற நாவல்கள் எல்லாம் அரசியல் பேசுகிற நாவல்கள்தாம்.
உங்களுடைய அரசியல் அமைப்புச் செயல்பாடுகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.
எண்பதுகளில் நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அரசியலை ஏற்றுக் கொண்டு அதில் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். மிகவும் தீவிரமாக அதில் இயங்கிக் கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மாவோ எனக்கு அறிமுகம் ஆகிறார். வேறொரு கண்ணோட்டம் எனக்குப் பிறக்கிறது. அதன் பிறகு நக்சல்பாரி இயக்கங்களோடு சேர்ந்து பயணிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட ஒரு மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாகவே எனக்கு டால்ஸ்டாய் அறிமுகம் ஆகிறார். இலக்கியம் அறிமுகம் ஆகிறது. அப்போது அரசியலைக் கடந்து எனக்குச் செயல்படுவதற்கு இன்னொரு தளம் இருக்கிறது என்று கண்டு கொண்டேன். டால்ஸ்டாய் இல்லாமல், தஸ்தயோவ்ஸ்கி இல்லாமல், செகாவ் இல்லாமல், இலக்கியம் இல்லை.
இலக்கியம் என்பது வேறொன்றுமல்ல. தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிற விஷயம். அப்படித்தான் தஸ்தயோவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் தங்களுடைய வாழ்க்கையைத் தங்கள் இலக்கியங்களின் மூலமாக எதிர்கொண்டார்கள்.அவர்களைப் போலவே நானும் எனது வாழ்க்கையை இலக்கியங்களின் மூலமாக எதிர்கொள்வது என்று முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். அது என்னில் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றமான ஒரு காலகட்டம்.
உங்களுடைய ஒரு நேர்காணலில் நானும் எனது குடும்பத்தாரும் நிறைய வன்முறைகளை எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால் என் நோக்கம் என் படைப்புகளில் வன்முறையைப் பேசுவது அல்ல; என் நோக்கம் வன்முறையை எதிர்கொள்வது, வன்முறையைப் பரிசீலிப்பது, என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள். அதேபோலப் புரட்சிகர அரசியலில் உங்களுடைய வாழ்க்கைப் பயணம் தொடங்கியது ஆனால் ஒரு கட்டத்தில் நீங்கள் காந்தியைத் தேடிய பயணத்தில் ஈடுபட்டு இருந்தீர்கள். இந்த மாற்றம் உங்களுக்குள் எப்படி நிகழ்ந்தது? அது குறித்துக் கொஞ்சம் சொல்லலாமே
இதில் புரட்சிகர அரசியல், புரட்சிகரமில்லாத அரசியல் என்றெல்லாம் எதுவும் இல்லை மனிதகுலம் தன்னுடைய வாழ்நாளில் பல்வேறு சோதனைகள் செய்து பார்த்துக் கொண்டே இருக்கிறது. அப்படி வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான போராட்டத்தில் வெவ்வேறு விதமான முயற்சிகளில் சில முயற்சிகள் வெற்றி அடைகின்றன. சில முயற்சிகள் தோல்வியடைகின்றன. ஆனாலும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதாம் இருக்கின்றன. சிலர் இந்த முயற்சிகளில் சலிப்படைந்து பின்வாங்கவும் செய்கிறார்கள். ஆனால் மனித குலம் தொடர்ந்து புதுப்புது முயற்சிகளை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இயேசுநாதர் கூட அப்படித்தான்.
அரசியல் என்பது மனிதனிடமிருந்து பிரிக்கவே முடியாத ஓர் அங்கம். நீங்கள் இயேசுவை எடுத்துக் கொண்டால் இயேசுவின் செயல்பாடுகள் ஒரு வகையான அரசியல். காந்தியை எடுத்துக் கொண்டால், காந்தியின் செயல்பாடுகள் ஒருவித அரசியல். புத்தரை எடுத்துக் கொண்டால், புத்தரின் செயல்பாடுகளும் ஒருவித அரசியல்தான். அவர்களெல்லாரும் தங்கள் அரசியல் பயணத்தின் மூலமாக மனித குல விடுதலைக்கான ஒரு தீர்வைக் கண்டறிய முயற்சி செய்தார்கள்.
காந்தியையும் சரி, புத்தரையும் சரி, இயேசுவையும் சரி, ஏன், இடதுசாரிகளையும் கூடச் சேர்த்துச் சொல்வேன். இவர்கள் அனைவருமே மனித குல விடுதலைக்கான ஏதாவது ஒரு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை அப்படித்தான் பார்க்க வேண்டுமே தவிரப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. இந்தத் தேடலில் இந்தப் போராட்டங்களில் ஏதோ ஒரு புள்ளியில் மனித குலம் தனக்கான ஒரு பாதையைக் கண்டறிந்து கொள்ளும். இப்படிக் கண்டறிந்து கொள்ளும் வரை மனிதகுலம் மீண்டும் மீண்டும் போராடித் தன்னைச் சரிப்படுத்திக் கொள்ளும். அப்படிச் சரிப்படுத்திக் கொள்ளும் வரை நாம் போராடித்தான் ஆக வேண்டும்.
நான் எம் எல் அரசியலில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் ’ஒரு சோனிக் கிழவன் உப்புக் காய்ச்சியதால்தான் நமக்குச் சுதந்திரம் கிடைத்ததா?’ என்று நானும் காந்தியை இழிவாகப் பேசியிருந்திருக்கிறேன். ஆனால் காலம் எனக்கு வேறு ஒரு பார்வையைக் கொண்டு வந்து சேர்த்தது. ஓர் அறம் சார்ந்த அரசியலைத் தேடி எனது பயணம் நகர்ந்தது. அந்த நகர்வில்தான் காந்தியை நான் மீண்டும் கண்டறிந்தேன். தேடித்தேடி வாசித்தேன். உள்வாங்கினேன். பற்றிக் கொண்டேன்.
காந்தியை வாசிக்க வாசிக்க அவர் குறித்த வேறொரு புதிய புரிதலுக்கு நான் வந்து சேர்ந்திருந்தேன். நான் தேடிச் சென்ற அறம் சார்ந்த அரசியல் காந்தியிடம் இருப்பதாகவே நான் கண்டுணர்ந்தேன். தஸ்தயோவ்ஸ்கியிடமிருந்து நான் பெற்றுக் கொண்ட அறத்தைப் போலவே காந்தியிடமிருந்தும் நான் அறத்தைப் பெற்றுக் கொண்டேன்.
இதன் தொடர்ச்சியாகத்தான் “பிறகொரு இரவு” என்கிற படைப்பு உங்களிடமிருந்து வெளி வந்ததாகப் புரிந்து கொள்ளலாமா ?
ஆமாம். பிறகு ஒரு இரவைப் பொறுத்தவரையில் நான் மிக விரிவாக எழுதவே முதலில் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதன் போக்கில் இதற்கு மேல் இந்தச் சிறுகதை வளர வேண்டாம் என்று முடிவு செய்து அதை முடித்தேன். அது ஒரு முக்கியமான சிறுகதையாகப் பேசப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு நிகழ்ந்த ஒரு மிகப்பெரிய ஒரு விபத்து, அது உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய மிகப் பெரிய பாதிப்பு, இப்போது வரையும் கூட உங்களுடைய பேச்சில் அந்தத் தடுமாற்றம் இருப்பதைக் காண முடிகிறது. அவ்வளவு பெரிய ஒரு பாதிப்பிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்?
நான் முழுதாக மீண்டு விட்டேன் என்று சொல்ல முடியாது இன்னும் நெருக்கடியில்தான் இருந்து கொண்டிருக்கிறேன். பலவிதமான நெருக்கடிகளை எல்லாம் தாண்டி நான் எழுத ஆரம்பிக்கும் போது நான் வேறு ஒருவனாக மாறிப் போய் விடுகிறேன். என்னுடைய எழுத்துச் செயல்பாடுதான் என்னை இந்த நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்தது ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு செய்தி என்று காந்தி சொல்லுவார். அதுபோல என்னுடைய வாழ்க்கைச்செய்தியை என் எழுத்துகளைக்கொண்டே பிரதிபலிக்க முயல்கிறேன்.
உங்களுடைய இந்த நீர்வழிப்படூ உம் நாவலில் ஆகட்டும் அல்லது நொய்யல் நாவலில் ஆகட்டும் நில உடமைச் சமூகத்துக்கும், குறிப்பாகப் பண்ணையார்களுக்கும் கொடுமைச் சமூகத்துக்குமான உறவைப் பேசுகிறீர்கள். அதில் சில இடங்களில் பண்ணையார்களைக் கருணை மிக்கவர்களாகக் காட்டும்படியான ஒரு ரொமாண்டிசைஸ் பார்வை இருப்பது போலத் தெரிகிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?
பண்ணையார்கள் இரக்க குணமுடையவர்கள். அவர்களிடம் கேட்டால் கேட்கும் போதெல்லாம் கொடுப்பார்கள் என்றெல்லாம் யார் பேசுகிறார்கள் என்று நீங்கள் கவனித்தீர்களேயானால் அந்த நாவலில் வருகிற கதாபாத்திரங்கள் பேசியிருக்கும். அது அந்தக் கதாபாத்திரங்களின் தன்மை. ஒரு கதாபாத்திரத்தினுடைய கருத்தை எழுத்தாளரின் கருத்தாகப் பார்க்கக் கூடாது. அதை அந்தக் கதைகளுக்குள் நிகழ்கிற அந்தக் கதாபாத்திரத்தின் கருத்தாக மட்டுமே பார்க்க வேண்டும். அதுதான் சரியாகவும் இருக்கும்.
உதாரணமாக நொய்யல் நாவலில் குமாரப்ப பண்டிதர் என்கிற ஒரு பாத்திரம் பண்ணையார்களை எஜமான்களே என்றுதான் அழைப்பதாக எழுதி இருப்பேன். ஆனால் நாவலில் அந்தக் குமாரப்ப பண்டிதருடைய அறம் சார்ந்த வாழ்க்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
அந்த நாவித சமூகம், இப்போது இருக்கிற சமூக அமைப்பு போன்ற சமூக வாழ்க்கையைப் போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கவில்லை. சாதிய ஒடுக்குமுறையும் ஆதிக்கமும் நிறைந்த கிராமியச் சூழலில் தான் என்னுடைய கதைக்களம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அடிப்படையில் அந்தச் சமூகம் நிலத்தின் மீது அதிகாரம் கொண்டிருந்த பண்ணையார்களைச் சார்ந்து இயங்க வேண்டிய நிலைமை இருந்ததையும் நான் பதிவு செய்திருக்கிறேன்.
அப்படியானால் நீங்கள் அப்போது நிலவிய சமூகச் சூழலை அப்படியே பதிவு செய்திருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாமா?
அப்படிப் புரிந்து கொள்ளக் கூடாது. ஓர் உதாரணம் சொல்கிறேன். நொய்யல் நாவலில் வருகிற கதாபாத்திரங்களில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் காரிச்சி. அவள் அடிப்படையில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண். இறுதியில் அவள், ஆதிக்க சமூகத்திற்கு எதிராகப் பழிவாங்குபவளாக அந்தப் பாத்திரம் அமைந்திருக்கும்.
நீர்வழிப்படூஉம்க்கும் நொய்யலுக்கும் எழுத்து முறையில் கொஞ்சம் மாற்றம் இருப்பதாக நான் கவனித்தேன். நீர் வெளியில் நீளமான வாக்கிய அமைப்புகள் அதிகம் இருந்தன. நொய்யலில் கொஞ்சம் துண்டு துண்டான வாக்கிய அமைப்புகள் இருந்ததாகவும் நான் கவனித்தேன். இந்த மாற்றம் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டதா அல்லது எழுத்தின் போக்கில் அமைந்ததா?
அப்படித் திட்டமிட்டு எல்லாம் செய்யப்படவில்லை அந்த நாவலுக்குத் தேவையான வடிவத்தில் அந்த வாக்கிய அமைப்புகள் அமைந்திருக்கும். சில இடங்களில் நீளமான வாக்கிய அமைப்புகளும், சில இடங்களில் துண்டு துண்டாக வாக்கிய அமைப்புகளும், அந்த நாவல், அந்தக் குறிப்பிட்ட காட்சியில் கோருகிற தன்மைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும்.
என்னுடைய படைப்புகளில் மனிதர்கள் மட்டும் கதாபாத்திரங்கள் அல்லர். அந்த மனிதர்களோடு பறவைகள் பேசும். மீன்கள் பேசும். மரங்கள் பேசும். இந்த மீன்களும் பறவைகளும் நாவலின் முக்கியமான பகுதிகளாக இருக்கின்றன.
பாதம் என்கிற அமைப்பு ஏற்படுத்திக் கூத்துக் கலை ஆளுமைகளை ஒருங்கிணைத்துக் கலையிலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தீர்கள். அது குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்.
பாதம் உருவானது 2002 ஆம் ஆண்டு. அடிப்படையில் நான் கலை இலக்கியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவன். .பொன்னர் சங்கர் கதை, காத்தவராயன் கதை போன்ற கதைகளை ஒருங்கிணைத்துப் பயிலரங்கம் நடத்துவதாகத் திட்டம். பல ஆளுமைகளை இணைத்து அந்த முயற்சியை மேற்கொண்டேன். நான் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்புப் பெற்றது. அந்த நிகழ்வு மிக விரிவாக நடந்தது. நல்ல கூட்டம் வந்திருந்தது. உண்மையில் சொல்லப்போனால் அப்போது வருகிற அனைவருக்கும் உணவு கொடுக்கும் திட்டமெல்லாம் இல்லை. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் கூட்டம் வந்ததால் முதலில் தடுமாறினோம். பிறகு எப்படியோ சமாளித்தோம் அதில் ஏற்பட்ட கடன் கூட வெகு காலம் நான் கட்டிக் கொண்டிருந்தேன்.
பாதம் நிகழ்வுக்குப் பிறகுதான் காலச்சுவடு அது போன்ற ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள். கலைஞர் தொலைக்காட்சியில், கோவையில், சென்னையில், நடந்த சங்கமம் நிகழ்வுக்கெல்லாம் பாதம் தான் முன்னோடியாக இருந்தது.
நீர் வழிப்படூஉம் நாவலில் பாட்டுக்கார நாசுவர் ஒருவர் மரணம் அடைந்து விடுகிற செய்தியைக் கேள்விப்பட்டு ஊர்ப் பெண்கள் கூடி ஒப்பாரி வைத்து அழுவது போல ஒரு காட்சி இருக்கும். அதேபோல இன்னொரு காட்சியில் ஒரு மரணத்தில் கலந்து கொள்கிற அந்தப் பண்ணையார் இரண்டு நாட்கள் கூடவே தங்கியிருந்து எல்லாச் சடங்குகளிலும் பங்கெடுத்துக் கடைசி வரை அதாவது அந்த உடலை அடக்கி விட்டு திரும்பி வரும் வரையிலும் கூட இருப்பதாக அந்தக் காட்சிகளை நீங்கள் பதிவு பண்ணியிருந்தீர்கள். இதெல்லாம் இப்போதைய காலகட்டத்தில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு மாதிரி நெகிழ்ச்சியாக இருந்தாலும் கூட இப்படி எல்லாம் சமூகங்கள் உண்மையில் நிகழ்ந்தனவா? அதற்கான வாய்ப்புகள் அந்தச் சமூகத்தில் அந்தக் காலகட்டத்தில் இருந்தனவா? இந்த இணக்கம் செயற்கையா இருப்பதாக ஒரு கேள்வியும் முன்வருகிறது. அதைப்பற்றிச் சொல்லுங்கள்.
அந்தக் கிராமத்தில் சாதிகள் இருக்கும். அதைத் தாண்டி இழவு சார்ந்த நிகழ்வுகளில் பங்கெடுப்பதைப் பண்ணையார்கள் கடமையாக வைத்திருந்தார்கள். காரு மாமா என்கிற ஒரு கேரக்டர் நீங்க ஒரு நாவலில் பார்த்திருக்கலாம். எல்லாப் பண்ணையாருக்குமே பிடித்த ஒரு நபராக அவர் இருந்தார். பண்ணையார்கள் அவரை நேசித்தார்கள். அந்த நேசத்தைப் பதிவுசெய்ய நினைத்தேன். அதுதான் காரு மாமா என்கிற ஒரு கேரக்டர் உருவாகவே காரணம். அவர் என் சொந்தத் தாய் மாமா. உடையாம்பாளையத்தில்தான் நாங்க வாழ்ந்து வந்தோம்.
அந்தக் கிராமத்தில் தான் காரு மாமா, என்னுடைய பெரியம்மா ரெண்டு பேருமே இருந்தார்கள். அவங்களுடைய வாழ்வு அனுபவத்திலிருந்து ஒரு துளியை மட்டும்தான் எடுத்து இந்த நாவலில் பயன்படுத்தி இருக்கிறேன்.
இப்போது புதிதாக எழுத வருகிற இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் ஒரு முன்னோடியாக எதையாவது சொல்ல விரும்பினால் என்ன சொல்வீர்கள்?
என்னை முன்னோடி என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நான் அப்படிச் சொல்லிக் கொள்ள மாட்டேன். பெரிய எழுத்து முன்னோடிகள் வாழ்ந்த சமூகம் இது. சங்க இலக்கிய எழுத்தாளர்களை விட முன்னோடிகள் இருக்க முடியுமா? சங்க இலக்கியத்தைக் காட்டிலும் மிகப்பெரிய ஓர் இலக்கியம் எந்த மொழியிலும் இல்லை. சங்க இலக்கியத்தினுடைய சாராம்சங்களை எடுத்துக் கொண்டுதான் நவீன இலக்கியம் வளர்ச்சி அடைந்தது. ஐரோப்பிய இலக்கியங்களும் நம்முடைய நவீன இலக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தன.
புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்ற பல இலக்கிய ஆளுமைகள் அதை முன்னெடுத்துச் சென்றார்கள் நான் பாரதியையும் சொல்லுவேன். பாரதி மிக முக்கியமான ஓர் இலக்கியவாதி. சு.ராவைப் பொறுத்தவரையில் அவர் தன்னுடைய வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே மிகப்பெரிய போராட்டத்தைச் சந்தித்தவராக இருந்தார். ஆனால் அவரால் விரிவாக எழுத முடிந்ததில்லை. அவர் மொத்த வாழ்நாளில் மூன்று நாவல்களை மட்டுமே எழுதி இருந்தார். பிறகு அசோகமித்திரன்.
அசோகமித்திரனைக் காட்டிலும் தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த வேறு யாரையும் நாம் குறிப்பிட்டுச் சொல்லி விட முடியாது. தன்னுடைய வாழ்நாளின் இறுதிநாள் வரைக்கும் எழுதிக் கொண்டே இருந்த ஒரு படைப்பாளி அவர் தான். அவரைப் போன்ற ஆளுமைகளால் தான் தமிழ் இலக்கியம் செழித்து வளர்ந்தது. அசோகமித்திரனும் மிகப் பெரிய போராட்டங்களைத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டவர் தான்.அப்படி ஏன் எதிர்கொள்ள வேண்டும்? ஏதாவது ஒரு வேலைக்குப் போய் இருக்கலாமே. அப்படியல்ல. அதை அவர் விரும்பவில்லை. அவர் தமிழ் இலக்கியத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார். இலக்கியம் என்பது மனிதகுலம் கண்டறிந்த மிக முக்கியமான அம்சம். அதை ஜானகிராமன் தன்னுடைய இறுதி நாள் வரை சமூகத்திற்குச் செய்து கொண்டே இருந்தார். அப்புறம் ஜெயகாந்தன். அவரைக் காட்டிலும் ஓர் ஆளுமையை நாம் காட்ட முடியுமா? அவருடைய இலக்கியப் பங்களிப்புகள் என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியவை. அந்தக் காலகட்டம் அப்படித்தான் இருந்தது.ஆனால் இப்போது வந்திருக்கக் கூடிய இளைய தலைமுறை தாங்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதை அவர்கள்தாம் கண்டறிய வேண்டும்.
அப்படி வருகிற புதிய படைப்பாளிகளுக்கு நீங்கள் என்ன ஆலோசனை சொல்வீர்கள் அல்லது என்ன வழிகாட்டுதலைக் கொடுப்பீர்கள்?
புதிய படைப்பாளிகளின் படைப்புகளை நான் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் அவர்களுக்குச் சொல்வதென்றால், அவசரப்படாதீர்கள். ஒரு படைப்பு அது தன்னளவில் முழுமை அடைவதற்கு உண்டான நேரத்தை அதற்கு வழங்குங்கள். ஒரு சிறுகதைக்காக ஒரு முழு ஆண்டு போராடிய படைப்பாளிகள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட எழுத்துதான் இலக்கியமாக மலரும். அந்த வளர்ச்சிதான் அந்தப் படைப்பாளிகளை அடையாளப்படுத்தும். அதற்காக அவர்கள் காத்திருக்க வேண்டும்; இப்போதைய சமகாலமும் கூட இலக்கியச் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்யக்கூடிய நிறைய புதிய எழுத்தாளர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த இலக்கியத்தை இப்போதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சொல்லக்கூடிய ஆளுமை உடைய அல்லது திறனுடைய படைப்பாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்; இனியும் வருவார்கள்.
நல்ல படைப்பை வழங்கக்கூடிய திறன் உள்ள எழுத்தாளர்களும் கூட அவசரத் தன்மையால் அந்தப் படைப்பு இலக்கியமாக வளர்வதற்கு முன்பாகவே வெளிப்படுத்தி விடுகிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் facebook இலக்கியம் என்றொரு புதிய வகையை இப்போது பரவலாகப் பார்க்க முடிகிறது.
பேஸ்புக்கில் எழுதுகிற அந்த இலக்கியத்தின் ஆயுள், அதோடு முடிந்து விடுகிறது. அப்படி முடிந்து விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. பேஸ்புக்கில் பதிவிடும் போது கிடைக்கிற உடனடி அங்கீகாரங்களுக்காகத் தங்களுடைய படைப்பின் ஆயுளைச் சிதைத்து விடுகிறார்கள். இதிலிருந்து கவனமாகத் தப்பித்துக் கொள்வது தான் இப்போதைய எழுத்தாளர்கள் முன்னிருக்கக்கூடிய மிகப்பெரிய சவால்.
இந்த கதைக்குள் இரண்டு பெண்கள் சண்டையிடுவது போல ஒரு காட்சி அமைத்திருப்பீர்கள். பலரும் அதை விலக்கி விட முயற்சி செய்வார்கள். அப்போது இடதுசாரிகளுடைய ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கும். ஓர் இடதுசாரித் தோழர் வந்து அந்தச் சண்டையை விலக்கி விட முயற்சிப்பார். அவரால் முடியாது. அவர் கொண்டு வந்திருந்த கொடியைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு போவது போல் எழுதி இருந்தீர்கள். இது இடதுசாரிகளைப் பகடி செய்யவேண்டி வலிந்து திணிக்கப்பட்டது போல இருக்கிறது. இதை எழுதுவதற்கான காரணம்?
அடிப்படையில் நானும் ஓர் இடதுசாரி தான். ஒரு விளையாட்டுத்தனமாக ஒரு கிண்டலுக்காக அப்படி ஒரு காட்சியை நான் எழுதியிருந்தேன். வேறு எந்த உள்நோக்கமும் அதில் இல்லை.
இப்போது பார்க்கும்போதே இந்தப் பகுதி, வளர்ச்சி அடையாத ஒரு பின் தங்கிய பகுதியாகக் காணப்படுகிறது. நீங்கள் எழுத வந்த காலகட்டத்தில் இன்னும் பின்தங்கிய பகுதியாக இருந்திருக்கும். அப்படிப்பட்ட சூழலில் உங்களுடைய படைப்புகளை வெளி உலகத்திற்குக் கொண்டு சேர்ப்பதற்கு யாராவது உங்களுக்கு உதவினார்களா?
நான் 1980 களில் எழுத்தாளர் பூமணி அவர்களைச் சந்திக்க விரும்பி அவரை காணச் சென்றேன். அப்போதெல்லாம் தொலைபேசிகள் இல்லை. நான் முதன்முதலாக அப்போதுதான் சென்னைக்குப் போனேன். ஒரு மாநாட்டு நிகழ்வு என்று நினைக்கிறேன். கத்தார் கலந்து கொள்கிற ஒரு நிகழ்வு என்பது என் நினைவு. அந்த மாநாட்டுக்குப் பூமணி, ஜெயப்பிரகாசம் போன்ற பல எழுத்தாளர்கள் வருவார்கள், அவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆவலில்தான் நான் சென்றேன்.
அந்த நிகழ்வில் பூமணியை நான் சந்தித்த அனுபவம் மறக்க முடியாது. அவரது அறிமுகம் கிடைத்த உடனே மிகவும் நெருக்கமாகப் பழகினோம். அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இரண்டு நாட்கள் அவரது வீட்டில் நான் தங்கியிருந்தேன். பொதுவாகவே பூமணி நிறைய பேசக் கூடியவர். அரசியல், இலக்கியம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.அதன் பிறகு வண்ண நிலவனைப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆரம்பத்தில் நான் நடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையில் வண்ண நிலவன் ஜெயப்பிரகாசம் போன்றவர்களெல்லாரும் எழுதி இருக்கிறார்கள்
ஜெயப்பிரகாசத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் அப்போது ஊரில் இல்லை. வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று சொன்னார்கள். ஆனாலும் ஜெயப்பிரகாசத்தைப் பார்க்காமல் ஊர் திரும்புவதில்லை என்பதை நான் முடிவு செய்து இருந்தேன். என்னுடைய சின்னம்மா மகன் ஒருவர் சென்னையில் சலூன் வைத்திருந்தார். அவருடன் தங்கி ஒரு வாரம் காத்திருந்து ஜெயப்பிரகாசத்தைச் சந்தித்துப் பேசிவிட்டுத் தான் திரும்பினேன். அவரைப் பார்த்த பிறகு எனக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைத்தது. என்னைச் சுற்றி அனைத்துக் கதவுகளும் திறந்து விட்டதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.
உங்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய இந்த அங்கீகாரங்கள் காலம் தாழ்ந்து கிடைத்திருப்பதாகவும், உங்களுடைய படைப்பிலக்கியங்கள் சிற்றிலக்கிய வாசகர்களைத் தாண்டிப் பொதுவான பரப்பிற்குப் போய்ச் சேரவில்லை என்றும் ஒரு பார்வை இருக்கிறது அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. என்னுடைய படைப்புச் செயல்பாடுகளில் இடைக்காலங்களில் ஒரு தடங்கல் ஏற்பட்டது உண்மைதான். பொருளாதாரக் காரணங்கள், பணியைக் கைவிட்டது, விபத்து என்று பல காரணங்கள் சொல்ல முடியும்.ஆனாலும் கூட கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தகும்படியான என்னுடைய பங்களிப்பைக் கலை இலக்கியத்திற்கு வழங்கியிருப்பதாகவே நான் நம்புகிறேன். நான் எழுதுவதற்கு இன்னும் நிறைய இருக்கின்றது. என்னுடைய வாழ்க்கையை, என்னுடைய வேர்களை நான் எழுதி தீர்த்துவிட வேண்டும் என்கிற ஆவலும் வேட்கையும் எனக்குள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.
விபத்தில் சிக்கி வைத்தியத்தில் இருந்தபோது மருத்துவரிடமும் என் உறவினர்களிடமும், ’ நான் நான்கு நாவல்கள் எழுத வேண்டி இருக்கிறது. என்னுடைய உடல்நிலை அந்த நான்கு நாவல்கள் எழுதி முடிக்கும் வரைக்கும் எனக்கு ஒத்துழைத்தால் போதும்.’ என்பதைத்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். அந்த வேட்கையில் நான் இரண்டு நாவல்கள் எழுதி முடித்துவிட்டேன். அடுத்தடுத்த படைப்புகளையும் விரைவாக முடிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.
சமகால எழுத்தாளர்கள் அல்லது புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை நீங்கள் வாசிப்பது உண்டா?
வாசிப்பதுண்டு. இப்போது எழுத வந்திருக்கிற புதிய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துகளையும் நான் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
இப்போது எழுத்தாளர்களில் நம்பிக்கை அளிக்கக்கூடிய எழுத்தாளராக யாரையாவது நீங்கள் சொல்ல வேண்டும் என்றால் யாரைச் சொல்வீர்கள்?
இந்தச் சூழலில் அப்படி யாரையாவது குறிப்பிட்டுச் சொல்வது பொருத்தமாக இருக்காது என்று கருதுகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் வாசிப்பு குறைந்து இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையா? அல்லது இப்போது புதிதாக வந்திருக்கிற தலைமுறை யின் வாசிப்பு உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படி இருக்கிறதா?
வாசிப்புக் குறைந்து இருக்கிறது என்று சொல்வதை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஆனால் இந்த facebook என்கிற ஒரு வடிவம் நிறைய அதற்குத் தடங்கலை ஏற்படுத்துவதாக நினைக்கிறேன். பேஸ்புக் எழுத்து என்கிற ஒரு வகை இப்போது மேல் இருந்து வந்திருக்கிறது. தான் நினைப்பதை எழுதி உடனே அதில் பதிவிட்டு விடுகிறார்கள். அதற்கு உடனடியான பதிலோ அங்கீகாரமோ கிடைத்து விடுகிறது. ஆனால் இது பொருத்தமானது அல்ல. ஓர் எழுத்து அது தன்னை முதிர்ச்சி அடைந்து கொள்வதற்கு உண்டான காலத்தைக் கோரி நிற்கும். அந்தக் காலத்தை வழங்க வேண்டும். அப்படி முதிர்ச்சி அடையாத எழுத்துகளை facebook போன்ற ஊடகங்களில் பதிவிடுவதன் மூலமாக அதனுடைய இலக்கியத் தன்மை இல்லாமல் போய்விடுகிறது என்று நான் நினைக்கிறேன். ஓர் எழுத்தாளனுக்கு முதிர்ச்சி என்பது மிகவும் முக்கியம். அந்த முதிர்ச்சியைக் கைவரப் பெறும் வரையில் அவனுக்கு இலக்கியம் கை வராது: நான் அந்த முயற்சியை இப்போது எட்டியிருப்பதாக நம்புகிறேன். ஆனாலும் நான் சொல்ல வேண்டிய விஷயங்களும், எழுத வேண்டிய விஷயங்களும் இன்னும் நிறைய இருக்கின்றன.
உங்களுடைய அடுத்த கட்டக் கலை இலக்கியப் பயணத்தை எப்படித் திட்டமிட்டு இருக்கிறீர்கள்?
நான் உடனடியாகச் செய்து முடிக்க வேண்டிய வேலையாக மூன்று நாவல்களை நிர்ணயித்திருக்கிறேன். முதலாவது விரோதி, நொய்யல் இரண்டாம் பாகம், ஆதியாகமம். இந்த மூன்று படைப்புகளை முடித்துவிட்ட பிறகு நான் மரணம் அடைந்து விடலாம். அதன் பிறகு எனக்கு எதுவும் தேவையில்லை.
இதற்கு முன்பும் ஒரு பேட்டியில் நீங்கள் மரணத்தைப் பற்றிப் பேசியிருந்தீர்கள். என்னுடைய இந்த படைப்பு நோக்கங்களை நிறைவேற்றிய பிறகு நான் மரணமடைந்து விடுவேன் என்பது போலப் பேசி இருந்தீர்கள். இப்படிப் பேச வேண்டிய தேவை இருக்கிறதா? ஏனென்றால் உங்களைப் போன்ற படைப்பாளிகளிடமிருந்து இன்னும் நிறையப் படைப்புகள் தமிழ் இலக்கிய சமூகத்திற்கு வர வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இது போன்ற ஓர் அவநம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் ஒரு படைப்பாளி பேசுவது வினோதமாக இருக்கிறதே?
அது அப்படி அல்ல. வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லாருக்கும்தானே இருக்கும்? ஆனால் என்னுடைய உடல்நிலை அதற்கு ஒத்துழைக்குமா என்பதுதான் கேள்வி. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே சிறிது நேரத்திலேயே எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது போலப் பேச முடியாத அளவுக்குத் தடங்கல் ஏற்படலாம். இப்படி எனக்குள் உடல் ரீதியாக நிறையப் பிரச்சனைகள் இருக்கின்றன. என்னுடைய உடல் தன்மையை கருத்தில் கொண்டு நான் என்னுடைய மரணத்திற்கு முன்பாக இந்தப் பணிகளைச் செய்து முடித்து விட வேண்டும் என்கிற அந்தக் குறிக்கோளை எனக்கு நானே மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வளவு கடுமையான உடல்நிலைப் பாதிப்பிலும் கூட நீங்கள் தமிழ் இலக்கியப் பரப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். தரமான படைப்புகளைச் சமூகத்துக்குக் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுடைய இந்த படைப்புச் செயல்பாடுகளுக்கு உந்துதலாக இருப்பது எது?
நான் படைப்புகளைக் கொடுத்து இருக்கிறேன் என்பது உண்மைதான். அது நல்ல படைப்பா இல்லையா என்பதை வாசகர்களும் தமிழ்ச் சமூகமும்தான் தீர்மானிக்க வேண்டும். அதை நான் சமூகத்திடம் ஒப்படைத்து விட்டேன். அது எப்படிப்பட்ட படைப்பு என்பதைச் சமூகமும் அதை வாசிக்கிற வாசகர்களும் மட்டுமே தீர்மானிக்க முடியும். எழுத்து என்பதும் ஒருவகையான சமூகச் செயல்பாடு தான். இந்தச் சமூகச் செயல்பாட்டின் மூலமாக மனித சமூகத்தின் உளவியலோடு ஒரு படைப்பாளி தொடர்பு கொள்கிறான். தன்னுடைய படைப்பிலக்கியத்தில் சமூகத்தின் படிமங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறான். மற்ற அனைத்து அரசியல் செயல்பாடுகளைப் போலவே படைப்பிலக்கியச் செயல்பாடும் ஒரு சமூகச் செயல்பாடுதான். செயல்படவேண்டும் என்கிற ஆர்வமே என்னை இயக்குகிறது.
உங்களுக்கு எதிராகவும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த விருதுக்கு எதிராகவும் சில எதிர்ப்புக் குரல்களும் மாற்றுக் குரல்களும் வரத்தான் செய்திருக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் நீங்கள் ஏதாவது பதில் சொல்ல விரும்புகிறீர்களா?
எந்தப் பதிலும் நான் சொல்லப் போவதில்லை. சொல்ல வேண்டிய தேவையும் இல்லை என்று நினைக்கிறேன். எந்த விமர்சனமும் வராமல் எப்படி இருக்கும்? சமூகத்தில் இருந்து விமர்சனங்கள் வரத்தானே செய்யும்.
ஒரு மனிதன் எப்படி எந்த விமர்சனங்களுக்கும் உட்படாமல் இருக்க முடியும்? அதற்கு வாய்ப்பில்லை அல்லவா? விமர்சனங்கள் வரத்தான் செய்யும்? அதை நான் அனுமதிக்கிறேன். வரவேற்கிறேன்.அந்த விமர்சனங்கள் ஒரு கட்டத்தில் ஒரு காழ்ப்புணர்வைப் போல உங்களுக்குத் தோன்றியது உண்டா?
அது அவர்களுடைய தேர்வு. இலக்கியத்தை விமர்சிக்கலாம், கருத்தியலாகத் தாக்கலாம், அதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இருக்கின்றன. புத்தகம் எழுதி முடிக்கும் வரையில்தான் அது என்னுடையது. எழுதி முடித்துச் சமூகத்திடம் நான் ஒப்படைத்த பிறகு அது வேறொன்றாக மாறிவிடுகிறது.
என்னுடைய எழுத்தில் எனக்கே கூட விமர்சனம் உண்டு. நானே பல இடங்களில் தோல்வி அடைந்தவனாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய எழுத்தில் நான் எங்கு தோல்வியடைந்தேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். உங்களுக்குத் தெரியாது. அந்தத் தோல்விகளையும் மீறித் தொடர்ந்து இயங்க வேண்டும் என்கிற ஆசையும் வேட்கையும் உந்துலும் எனக்கு இருக்கின்றன. இந்தச் சமூகம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளின் கூட்டமைப்பாக இருக்கிறது. இந்தப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குப் பல்லாயிரக்கணக்கான தேர்வுகளும் ரசனைகளும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட மக்களிடமிருந்து மாற்றுக் கருத்துகளும் விமர்சனங்களும் வரத்தான் செய்யும். ஒரு படைப்பாளன் அதற்கெல்லாம் தயாராகத்தான் இருக்க வேண்டும்.
விமர்சனங்கள் அல்லது மாற்றுக்கருத்துகள் காலங்காலமாக இருந்து கொண்டுதான் இருக்கின்றன. புதுமைப்பித்தன் மீதும் சுந்தர ராமசாமியின் மீதும் ஜெயகாந்தன் மீதும் இன்னும் பல முன்னோடி ஆளுமைகளின் மீதும் இது போன்ற விமர்சனங்கள் இருந்து கொண்டுதான் இருந்தன. அது இப்போதும் இருக்கும். இனியும் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டே நான் பயணிக்கிறேன்.