மயிலம் இளமுருகு
இந்தியாவில் நெருக்கடிநிலை, தகவல் பெறும் உரிமை, குடும்ப வன்முறைத் தடைச்சட்டம், ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?, பெரியாரின் போர்க்களங்கள் என பல புத்தகங்களை எழுதியவர்தான் இரா. சுப்பிரமணி, ஆய்வியல் நோக்கில் இவர் தமிழுலகிற்குத் தந்த பங்களிப்பு கவனத்திற்குரியது. இவர் எழுதிய ‘மெக்காலே’ என்ற நூல் கல்வி வரிசை நூல்களில் மிகவும் வரவேற்கத்தக்கது. இந்நூல் மிக முக்கியமான நூலாக உள்ளது. மெக்காலேவின் வாழ்க்கை வரலாறும் அவர் எதற்காக இந்தியா வந்தார் என்பதையும் இந்நூல் மூலம் அறியலாம். அவரது இரண்டு முக்கியப் பணிகள் என்னென்ன என்பதை மிக விரிவாகப் பதிவு செய்துள்ளது இந்நூல். அறிவுத்திறம் கொண்ட அவரது பணி, வாழ்க்கை அனுபவங்களையும் அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும் மிக நேர்த்தியாக நூலாசிரியர் விளக்கி இருக்கிறார். இந்தியாவில் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை மிகத் தெளிவாக இந்நூல் எடுத்துக் கூறுகின்றது.

மெக்காலே மட்டும் வரவில்லை என்றால் இங்கே இருக்கின்ற அனைத்து சமூகங்களைச் சார்ந்தவர்கள் கல்வி அறிவு பெற்றிருக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்திருக்கும். ஆங்கிலேயரின் வருகை நமக்கு எத்தனை நன்மைகளைக் கொடுத்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது. மெக்காலே குறித்து விமர்சனம் செய்பவர்கள் இந்நூலைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன். தாய்மொழி மீதும் அறிவில் சார்ந்த கருத்துகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் மெக்காலே கொண்டு வந்த இந்தக் கல்வி முறையானது மிகவும் வரவேற்கத்தக்கது. கல்வி முறையின் சாதக பாதங்கள் மிக விரிவாக அலசப்பட்டுள்ளது. இத்தகைய நூலைச் தமிழ்ச் சமூகத்திற்குக் கொடுத்த இவரது பணி பாராட்டத்தக்கது.
மெக்காலே உருவாக்கித்தந்த கல்விமுறையானது அன்றைக்கு இந்தியாவிலிருந்த ‘திண்ணைப் பள்ளிக்கூட’ கல்விமுறையைத் தூக்கியெறிந்தது. சமூக விழிப்புணர்வுக்கும் மறுமலர்ச்சிக்கும் அந்தக் கல்விமுறை வித்திட்டது. ஆனால் மெக்காலே வாழ்ந்தபோதும், வாழ்ந்து மறைந்து இருநூற்றாண்டுகள் ஆன பின்னரும்கூட விவாதத்திற்குரியவராகவே இருக்கிறார். ஏன் இவ்வாறு விவாதப் பொருளாக இருக்கிறார் என்ற நெடுங்கால வினாவுக்கு இந்நூல் வழிகாட்டலாம் என்று வைகறை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்தியாவின் கல்விமுறையில் மிக மோசமான மாற்றங்களைக் கொண்டுவந்தவர்; இந்தியாவில் தழைத்திருந்த கல்வி என்னும் அழகிய மரத்தைச் சிதைத்தவர்; இந்திய நாட்டின் பாரம்பரிய அறிவு, புராண மொழிகள், புராதனக் கலைகள், வேதநெறிகளை எல்லாம் ஒழித்தவர்; குமாஸ்தாக்களை உருவாக்குகின்ற கல்விமுறையை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தை அழித்தவர்’ என இன்றைக்கும் உணர்ச்சிபூர்வமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவருபவர் தாமஸ் பாபிங்டன் மெக்காலே எனப்படும் மெக்காலே.
இந்தியாவின் கல்வி நிலையும், அறிவு நிலையும், கல்வியில் நிலவும் சமத்துவமும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் கல்வியால் உருவான மாற்றங்களும் உலக மக்களுடன் போட்டிபோடும் வண்ணம் உள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாகக் கல்வி கற்கும் உரிமையே மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகம் இருநூறு ஆண்டுகளில் எட்டியிருக்கும் வளர்ச்சி எங்ஙனம் சாத்தியமானது என்பதனை ஆய்ந்தறிவது அவசியமாகும். அது மெக்காலேவின் கல்வி முன்னெடுப்புகளால்தான் சாத்தியமானது என்ற வாதமும் வலுவாக முன்வைக்கப்படுகிறது. இதில் எது உண்மை? என்பதனை ஆய்ந்தறிய வேண்டியது நமது கடமையாக உள்ளது.
இந்த நாட்டுத் தாய்மொழிகளைச் செழுமைப்படுத்தி அவர்களுக்குக் கையளிப்போம். மேல்நாட்டுப் பெயரீட்டு முறைகளிலிருந்து அறிவியல் சொற்களைக் கடன்பெற்று நாம் இம்மக்களுக்கு வழங்கும்போது அது, அவர்களின் மொழிகளின் ஊடாக வளமான அறிவைக் கொண்டுசேர்க்கும் ஊர்தியாக மாறும். படிப்படியாக மாபெரும் மக்கள்திரளுக்கு அறிவைக் கொண்டுசெலுத்தும் பொருத்தமான வாகனமாக அதை அவர்கள் பயன்படுத்தட்டும். (To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population).
ஆங்கில அரசாங்கத்தால் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியருக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள நூல்கள் அனைத்தையும் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்ப்பதும் கடினமான செயல்களாகும். ஆங்கிலேயர்களுக்கு, இந்தியர்களின் மொழிகளைப் புரிந்துகொள்ளவும் ஆளும் தங்களின் நோக்கங்களை மக்களிடம் அவர்களது மொழியிலேயே கொண்டுசெல்லவும் தகுதியான ஆட்கள் உடனடியாகத் தேவைப்பட்டனர்.
இதனால் இந்தியாவில் உள்ள ஒரு சிலருக்கு முதலில் ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுத்து அவர்கள் மூலம், ஆங்கிலத்தில் உள்ள நூல்கள் எல்லாவற்றையும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்வதும் அவற்றை இந்தியர் அனைவரிடமும் கொண்டுசெல்வதுமே மெக்காலே போன்றவர்களின் செயல்திட்டமாக இருந்தது. இங்கிலாந்து அரசால் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்விக்கொள்கை ஏன் எதிர்க்கப்படுகிறது? என்பதற்கான விரிவான விளக்கத்தை இந்நூல்வழி அறியலாம்.

மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரியைக் கொண்டாடவேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் உருவாக்கப்படவில்லை. இந்திய தேசத்தின் கல்வி வரலாறு என்பது விருப்பு, வெறுப்பற்ற நிலையில் வாசிக்கப்பட வேண்டும் என்பதனை எடுத்துரைக்கவே இந்நூல் வெளிவருகிறது. வரலாற்றில் வாதங்களை முன்வைக்கவும், விவாதங்களை நடத்தவும் சான்றாவணங்களே முதன்மை ஆதாரங்கள் ஆகும்.
பழம்பெருமைகளை எவ்விதச் சான்றுகளுமின்றித் தொடர்ந்து உரக்கப் பேசிவருவது மக்களை மீண்டும் அறியாமை இருளில் மூழ்கச் செய்யும். சான்றுகளற்ற ‘தேசப்பற்று’ முழக்கங்கள் அறிவின் வெளிச்சம் நோக்கி ஒருபோதும் நம்மை முன்நகர்த்திச் செல்லாது. இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பக் கல்வியில் உலக அறிவை உட்செலுத்திக் கல்வியை முன்னெடுப்பதே நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்நூல் பின்வரும் தலைப்புகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி, தாமஸ் பாபிங்டன் மெக்காலே, இந்தியாவில் மெக்காலே, மெக்காலே கல்விக்குறிப்பு, மெக்காலேவுக்கு ஆதரவும் எதிர்ப்பும், மெக்காலே கல்வியின் உள்ளீடுகள், மெக்காலேவின் இந்தியத் தண்டனைச் சட்டம் என்பனவாகும்.
இந்தியாவில் ஆங்கில வழிக்கல்வி என்ற கருத்து முன்வைக்கப்பட்டதும், அது செயல்படுத்தப்பட்டதும் சார்லஸ் கிராண்டால் மட்டுமே என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவர், சைமன், வென்ஸ், டொர்ன்டோ, வில்லியம் வில்பர் போர்ஸ் போன்றோரின் ஆதரவுடன் இந்தியாவில் ஆங்கிலவழிக் கல்வியிலான பாடத்திட்டம் மட்டுமே கற்பிக்கப்படவேண்டும் என வாதிட்டார். இந்திய மக்களின் அறியாமையையும், மூடநம்பிக்கையையும், போக்கவேண்டுமெனில் அவர்களுக்குக் கல்வி அளித்தாக வேண்டுமென்ற மையக்கருத்தை முன்வைத்து கிராண்ட் நீண்டதொரு அறிக்கையைத் தயார்செய்தார். பொதுமக்களின் பார்வைக்கு கிராண்ட் அவர்களின் அறிக்கை வைக்கப்படவில்லை.
சர் சார்லஸ் கிராண்டின் இந்த நீண்ட அறிக்கை இந்திய மக்களுக்கு வெறுமனே ஆங்கிலமொழிக் கற்பித்தல் என்ற நோக்கத்தை மட்டும் முன்னிறுத்தும் வண்ணமில்லாமல் மக்களின் அறிவு மற்றும் பொருளாதாரம் சார்ந்த முன்னேற்றம் போன்றவற்றை மிக விரிவாகப் பேசி இருப்பதனைக் காணமுடிகிறது. மக்களின் அறிவுநிலை, வேளாண்மை, மண்ணின் வளங்கள், அறிவியலின் தேவை, இயந்திரங்களின் பயன்பாடு போன்றவற்றை ஐரோப்பாவில் உள்ளதுபோல இம்மக்களுக்கும் தரப்பட வேண்டும் என்பதனைக் கிராண்ட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதனைக் காணமுடிகிறது.
இந்திய மக்களுக்கு ஆங்கிலேயர் பாடமுறைதான், அதுவும் ஆங்கில வழியில்தான் பயிற்றுவிக்கப்படும் என்ற கொள்கை முடிவு மெக்காலேவின் இந்திய வரவிற்குப் பின்னரே முழுவீச்சில் நடைமுறைக்கு வந்தது என்றாலும், அதற்கு முன்னரே ஆங்கில வழிக்கல்வி என்னும் கருத்து முன்மொழியப்பட்டு வலியுறுத்தப்பட்டு வந்ததென்பதனை இந்தியாவில் ஆங்கில வழிக்கல்வி உருவான வரலாற்றைத் தொகுத்தளித்துள்ள சர் சார்லஸ் டிரைவாலையனும் சையத் முகமதுவும் தங்களது நூல்களில் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் மெக்காலேவுக்கு முன்னரே ஆங்கிலக் கல்விக்கான மூலவிதை ஊன்றப்பட்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.
ராஜாராம் மோகன்ராய், இந்தியர்களுக்கு ஆங்கில வழியிலேயே கல்வி அளிக்க வேண்டுமென்பதனை வலியுறுத்தி மிக நீண்டதொரு கடிதத்தைக் கவர்னர் ஜெனரலான லாட் அம்ரெஸ்டுக்கு அனுப்பினார். அந்தக் கடிதத்தில் ஆங்கிலக் கல்வி அளிக்க வேண்டியதன் அவசியத்தையும், தேவையையும் விளக்கி இருந்தார். ஆங்கிலவழிக் கல்வியும், மேலைநாட்டு அறிவுமே இந்தியர்களை மேம்படுத்தும் என அவர் உறுதியாக நம்பினார். இவையே மெக்காலே பிற்காலத்தில் ஆங்கிலவழிக் கல்வியை நடைமுறைப்படுத்த காரணமாக அமைந்தது.
மக்கள் நலம் சார்ந்த சமூக அரசியல் பின்னணி கொண்ட ஜாஜ்சாரி மெக்காலேவின் மூத்த மகனாகப் பிறந்தவர்தான் தாமஸ் பாபிங்டன் மெக்காலே. இங்கிலாந்தின் மையப்பகுதியான லெயஸெடர்ஸ்ரைனின் ரோத்லெ டெம்பிள் என்னும் பகுதிதான் மெக்காலே பிறந்த இடமாகும். 1800ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் பிறந்த தாமஸ் பாபிங்டன் மெக்காலே குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்பட்ட குழந்தையாக வளர்க்கப்பட்டார். தாய் ஷெலினா மில்ஸ், சகோதரிகள் மார்கரெட், அன்னாவ் மற்றும் சகோதரன் மீது அளவற்ற பாசம் கொண்டவராக இருந்தார் மெக்காலே. ஜாஜ்சாரி மெக்காலேவின் பன்முகப்பட்ட அறிமுகம் காரணமாக தாமஸ் பாபிங்டன் மெக்காலேவின் குழந்தைப் பருவம் அறிவார்ந்த சூழலிலேயே தொடங்கியது.
மூன்று வயது முடிவடையும் முன்னரே தனது அறிவு சார்ந்த தேடலைத் தொடங்கி விட்டார் மெக்காலே என மெக்காலேவின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்துள்ள சர் ஜார்ஜ் ஹோட்டோ டிரைவாலையன் குறிப்பிடுகிறார். மெக்காலேவின் இலக்கிய ஆர்வத்திற்கும், எழுத்தாற்றலுக்குமான முதல் அங்கீகாரமும், பாராட்டும் 1819ஆம் ஆண்டு கிடைத்தது. அவர் எழுதிய பொம்பி என்னும் கவிதை அந்த ஆண்டின் மிகச்சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு வேந்தர் பதக்கம் எனப்படும் சான்சிலர் விருது அளிக்கப்பட்டது. மெக்காலேவின் கவிதைக்கு வழங்கப்பட்ட அந்த விருது அவரின் படைப்புத்தளத்தை மேலும் விரிவாக்கியது. முன்பைவிட அதிக நேரத்தைப் படிப்பதற்காகவும், எழுதுவதற்காகவுமே செலவிட்டார்.
மெக்காலேவின் எழுத்துலக வாழ்க்கைக்குரிய திருப்புமுனையாக அமைந்தது ‘ஈடன்பர்க் ரிவியூ’ பத்திரிகையுடனான தொடர்பு ஆகும். அந்தப் பத்திரிகையின் ஆசிரியரான பிரான்சிஸ் ஜெப்ரி, ஒரு சமயம் தன்னுடைய லண்டன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில், தனது கருத்துகளுக்கு ஏற்புடைய உதவியாளரைத் தேடிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அப்போது தான் மெக்காலே ‘ஈடன்பர்க் ரிவியூ’வுடனான முதல்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இங்கிலாந்து அரசியல் தளத்தில் முக்கியப் பத்திரிகையாகவும், விடுதலை உணர்வுகளுக்கு ஆதரவாகவும் வெளிவந்த ‘ஈடன்பர்க் ரிவியூ’வில் எழுதுமாறு மெக்காலேவுக்கு அதன் ஆசிரியரால் அழைப்பு விடுக்கப்பட்டது. காலனி ஆதிக்கம் மற்றும் அடிமைமுறைக்கு எதிரான மெக்காலேவின் கட்டுரை ‘ஈடன்பர்க் ரிவியூ’வில் வெளிவந்தது. தனது வாழ்நாளில் ‘ஈடன்பர்க் ரிவியூ’வில் மட்டும் 39 கட்டுரைகள் எழுதிய மெக்காலேவுக்கு முதல் கட்டுரையே வாசகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அடிமைத்தனம், மூடநம்பிக்கை, வேற்றுமை கடைப்பிடித்தல் போன்றவற்றை மெக்காலே மிகக் கடுமையாகவே எதிர்த்து வந்துள்ளார் என்பதனை அவரது நாடாளுமன்றப் பேச்சுகள் மூலமாகவும், கட்டுரைகளில் இருந்தும் அறிய முடிகிறது.
மெக்காலே இறுதிவரை படிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டுள்ளார். கையில் ஒரு புத்தகத்துடனேயே காட்சியளிப்பாராம். அந்தப் புத்தகத்தில் படிக்க வேண்டிய பக்கத்தில் ஒரு விரலை வைத்தபடியேதான் அவர் பொதுஇடங்களில் கூட காணப்படுவாராம். புத்தகம் மட்டும்தான் அவருக்கு மகிழ்ச்சி, பொழுதுபோக்கு என்றே சொல்லலாம். அதனால்தான் அவர் இந்தியா பயணப்பட நேர்ந்த போதுகூட உடை, உணவு, மருந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆறு பெட்டிகளில் புத்தகங்கள் மட்டுமே எடுத்து வந்தார்.
நூலகங்களில் அமர்ந்திருப்பது, படிப்பது, எழுதுவது ஆகியவற்றைத் தாண்டி அவரின் பொழுதுபோக்கென்பது புத்தகக் கடைகளுக்குச் செல்வது, தங்கை மற்றும் பெற்றோருக்குக் கடிதம் எழுதுவது மட்டும்தான். தங்கை, அம்மா, அப்பா மற்றும் உறவினர்களைத் தாண்டி வேறு எவருக்கும் கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததில்லை. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதனால் உறவு வட்டமும் பெரிதாக இல்லை.
உலகின் புகழ்பெற்ற நூலான இங்கிலாந்தின் வரலாற்றை மெக்காலே 1839ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் லண்டனிலுள்ள விகோ தெருவிற்கும் பிகாடிலாக்கும் இடைப்பட்ட அல்பெனி என்னும் விடுதியின் இரண்டாம் மாடியில் எழுதத் தொடங்கினார். ‘சூட்’ எனப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பில் தான் அவர் தனது புகழ்பெற்ற பணியைத் தொடங்கினார். அறைகளின் அனைத்து திசைகளிலும் புத்தகங்களே நிரம்பிக் கிடந்தன.. என்று நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மெக்காலேவின் வரலாற்று நூல் உண்மைகளை மிகச் சரியாகப் பதிவு செய்துள்ள ஆவணமாகும். இலக்கிய உலகிலும், அறிவுத் தளத்திலும் மெக்காலேவின் இந்தப் பணி தனிச் சிறப்பிற்குரிய படைப்பாகும். வரலாற்று விவரிப்புத் தளத்திலும் மெக்காலேவின் இந்தப் படைப்பு முன்னர் எவராலும் செய்திட முடியாத படைப்பாகும். நூல்களில் தொடக்கம் முதல் முடிவு வரையில் பரந்துபட்ட வரலாற்றுத் தகவல்கள் நிரம்பிக் கிடக்கின்றன. சொல்லாட்சியும் தங்கு தடையற்ற விவரிப்பும் சிற்றோடைகள் ஆயிரம் இணைந்து பேராற்று வெள்ளத்தில் கலப்பதுபோல, நம்மை வரலாற்றின் மைய இழையில் கொண்டு சேர்க்கின்றன
மெக்காலே தனது பதினைந்தாவது வயதிலேயே ஐரோப்பாவின் எந்தவொரு அறிஞரைவிடவும் அதிகமான புத்தகங்களைப் படித்து முடித்து விட்டாரென மெக்காலேவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஐரோப்பா அறிஞர்களான கிப்பன் மற்றும் நெய்போருக்கு அடுத்ததாக மிகப்பெரிய அறிவாளியாகத் திகழ்ந்தவர் மெக்காலே என அவர்கள் கூறுகின்றனர். லத்தீன் மற்றும் கிரேக்க இலக்கியங்களை மெக்காலே மிக விரும்பிப் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். புத்தகங்களைத் தகவல் தேடுவதற்காக மட்டும் பயன்படுத்தாமல் அந்த இலக்கியங்களில் ஒன்றி வாழ்வதற்காகவும் பயன்படுத்தியுள்ளார்.
மெக்காலே சென்னையிலிருந்து பெங்களூர், மைசூர் வழியாக உதகமண்டலம் சென்றடைந்தார். தொடக்கம் முதலே மெக்காலேவுக்கு இந்தியர்கள் குறித்து நல்லதொரு கருத்து இருந்ததில்லை. இந்தியர்களின் கலை, அறிவியல், சமயம் போன்றவை மூடநம்பிக்கைகளையும், பிற்போக்குத் தனங்களையும் கொண்டவை என்ற ஆழமான கருத்து மெக்காலேவிடம் காணப்பட்டது. மெக்காலே கிறித்துவராக இருந்தபோதும் பொதுப்பணிகளிலும், அரசுப்பணிகளிலும் மதம் கலக்கக்கூடாது என்ற குறிக்கோள் கொண்டவராகவே இருந்தார். இந்தியர்களால் அரசு நிர்வாகத்தை நடத்த முடியாது; அவர்களிடம் அறிவு சார்ந்த நூல்கள் எதுவுமில்லை. அவர்களின் மொழி அறிவார்ந்த விஷயங்களைக் கொண்டதல்ல என்பதும் மெக்காலேவின் ஆழமான கருத்துகளாக இருந்தன. இதனால்தான் இந்தியர்களுக்கு ஐரோப்பியக் கல்வியைக் கற்பிக்க வேண்டுமென வலியுறுத்தினார். மெக்காலே இந்தியா வந்தபோது வில்லியம் பெண்டிங் பிரபு கவர்னர் பொறுப்பை வகித்து வந்தார். அவர் அடிப்படையிலேயே ஆங்கிலவழிக் கல்விக்கு ஆதரவானவராவார். 1806ஆம் ஆண்டே தனது கட்டுப்பாட்டின்கீழ் இருந்த மெட்ராஸ் ராஜதானியில் ஆங்கிலப் பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தவர். லண்டனைச் சேர்ந்த மத அமைப்பான கெர் ஆங்கிலப் பள்ளிகள் ஆரம்பிக்க விண்ணப்பித்தபோது, அதனைப் பெண்டிங் உடனடியாக அனுமதித்தார். இதனைத் தொடர்ந்து பெண்டிங் ஆங்கிலப் பள்ளிகளை அதிக அளவில் திறக்கத் திட்டமிட்டிருந்தார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 1813ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பட்டயச் சட்டம், இந்திய மக்களுக்குக் கல்வி அளிப்பதற்கென ஒரு இலட்ச ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்தது. அத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை இந்தியாவின் கவர்னர் ஜெனரலே இறுதி செய்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டது. இந்திய மக்களுக்குக் கல்வி அளிப்பது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொதுக்கற்பித்தல் குழு அமைக்கப்பட்டது.
பொதுக்கற்பித்தல் குழுவின் தலைவரான மெக்காலே, கல்விக் கொள்கை குறித்த தனது குறிப்பைக் குழுவின் முன்பு விவாதிக்காமலும், குழு உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு அறியாமலும் தன்னிச்சையாகவே தயாரித்துள்ளார். அந்தக் குழுவில் பொதுக்கருத்து எதனையும் எட்டமுடியவில்லை. பத்து உறுப்பினர்களில் சரிபாதி ஆதரவு ஆங்கிலத்திற்கும், எஞ்சியவர்களின் ஆதரவு இந்திய மொழிகளுக்குமாக இருந்தது. இதனால் குழுவால் பொதுக்கருத்து எதனையும் கவர்னர் ஜெனரல் முன்வைக்க முடியவில்லை. ஆனாலும் மெக்காலேவின் கல்விக் குறிப்பு பெண்டிங் பிரபுவால் ஏற்கப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலவழிக் கல்வியும், பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு முழுக்க முழுக்க மெக்காலேதான் காரணம் என்பது போன்று உருவாக்கப்பட்டிருக்கும் கருத்து ஏற்கத்தக்கதல்ல என வாதிடுகிறார் ஹாங்காங் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் ஸ்டீபன் ஈவான்ஸ்!
“மெக்காலே தன்னுடைய குறிப்பை எழுதத் தொடங்கும் முன்னரே ஆங்கிலவழிக் கல்வியை இந்தியாவில் வளர்ப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே பெண்டிங் பிரபுவால் முடிவு செய்யப்பட்ட ஆங்கில வழிக் கல்வி என்ற திட்டக் கொள்கையை நியாயப்படுத்த வேண்டியது மட்டும்தான் மெக்காலேவின் வேலையாக இருந்தது” என ஸ்டீபன் ஈவான்ஸ், குறிப்பிட்டுள்ளார்.
மெக்காலேவின் கல்விக் குறிப்பு வெளிவந்த காலகட்டத்தில் இந்தியாவில் இந்து மற்றும் முகமதிய சமூக மக்கள் மட்டுமே பெருமளவில் வாழ்ந்து வந்தனர். அவர்களிடையே பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வந்தன. அவற்றில் அரபி, சமஸ்கிருதம், பாரசீகம் போன்ற மூன்று மொழிகளும் செம்மொழிகளென அழைக்கப்பட்டன. கல்வி என்பது சமயவழிப்பட்டு, மூடநம்பிக்கையை நயமாக வைத்து, பாகுபாடுகளை உருவாக்கும் வண்ணமும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் படிக்கவே அனுமதிக்காத வண்ணமும் இருந்தது. அதனை உடைத்தெறிந்து அனைவருக்குமான கல்வி வாசலைத் திறந்த வைத்த ஆவணம் மெக்காலே ஆவணம் என்று சொல்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை.
பிராமணர்களின் குருகுலக் கல்விக்கும் சமஸ்கிருதத்திற்கும் முடிவுரை எழுதியவர் மெக்காலே என்பதனால்தான் இன்றளவும் அவர் மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். மெக்காலேவின் வலிமையான கல்விக்குறிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இந்தியக் கல்வியின் நிலைமையும், இந்தியாவிலுள்ள மொழிகளின் தன்னுரிமையும் என்னவாகி இருக்கும் என்பதனைச் சற்றே யோசித்தால் மெக்காலேவின் கல்விக்குறிப்பு உருவாக்கிய மாற்றங்கள் எத்தகையது என்பதனை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
ஒவ்வொரு மாகாணத் தலைநகரங்களிலும் உச்ச நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நீதிமன்ற நீதிபதிகள், தங்கள் நீதி அதிகாரத்திற்குட்பட்ட நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமனம் செய்தனர். இங்கிலாந்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் கூடுதலாக அனுபவம் பெற்ற சட்ட வல்லுநர்கள் அந்த நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் இந்தியா குறித்தும் இந்தியச் சமூகம் குறித்தும் போதுமான அறிவைக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும், மாகாணத் தலைநகரங்களில் அமைந்திருந்த உச்ச நீதிமன்றம் அந்த மாகாணம் முழுவதற்குமான நீதி அதிகாரத்தைக் கொண்டதாகவிருந்தது.
மெக்காலே தனது சட்டத்தொகுப்பேட்டில் இங்கிலாந்தின் கசையடித் தண்டனையைத் தவிர்த்து விட்டார். கசையடி அல்லது சாட்டையடி தண்டனை என்பது மிகக்கொடுமையான தண்டனை என மெக்காலே கருதினார். அதோடு இந்தத் தண்டனை எந்த வகையிலும் குற்றவாளியின் குணங்களைச் சீர்திருத்த பயன்படாது எனவும் கருதினார். மெக்காலே இவ்வாறு தனது சட்டத்தொகுப்பேட்டை தனித்துவம் கொண்டதாக நிறுவ முயன்றாலும் மொத்தமுள்ள இருபத்து நான்கு அத்தியாயங்களில் பதினாறு அத்தியாயங்கள் இங்கிலாந்தின் சட்டத்தொகுப்பேட்டின் வடிவம் போலவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1859ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே மெக்காலேவின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. தனக்குப் பிடித்தமான வெஸ்ட்ரன் மலைப்பகுதி போன்ற பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பது, புத்தகங்களைப் படிப்பதென நாள்களை நகர்த்தினார் மெக்காலே. டிசம்பர் மாத வாக்கில் மெக்காலேவால் நாள்குறிப்புக்கூட எழுதமுடியவில்லை.
அந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்களின்போது அவர் படுத்த படுக்கையாகவே இருந்தார். அன்று மாலை ஏழு மணியளவில் சாய்வு நாற்காலியில் படித்த வண்ணமே மெக்காலேவின் உயிர் பிரிந்தது. மெக்காலே மாரடைப்பால் இறந்திருக்கலாமென்றும், வலிப்பு நோய் காரணமாக இறந்திருக்கலாமெனவும் கூறப்படுகிறது. இந்நூல் மெக்காலேவின் மிக முக்கியமான கல்வி மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் என்பதை மிக விளக்கமாக ஆய்ந்து விளக்கியவிதம் மிக நன்று… மெக்காலேவின் மிகச்சிறந்த ஆவண நூலாக இந்நூல் திகழ்கிறது. இத்தகு நூலை எழுதிய இரா. சுப்பிரமணி அவர்களுக்கும் மிகச் சிறப்பாக பதிப்பித்த சாளரம் பதிப்பகத்திற்கும் நன்றியும் வாழ்த்துகளும்.