உமா ஷக்தி
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் – 9
நாம் வாசித்த எல்லாக் கதைகளும், கண்டு களித்த அனைத்துத் திரைப்படங்களும் நம் நினைவில் நிலைக்க சாத்தியமில்லை. ஆனால் அபூர்வமாக சில படைப்புக்கள் நம் மனதுக்கு நெருக்கமாகி நிரந்தரமாகத் தங்கி விடுவதுமுண்டு. நம் உறக்கத்தைக் கெடுத்த சில கதைகளை மனதின் அடியாழத்தில் ஒரு கூழாங்கல்லைப்போலச் சுமந்துகொண்டுதான் இருப்போம். கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவுடன் வாசித்த புதினமான ‘கோசலை’ அத்தகைய ஒன்று.

எழுத்தாளர் தமிழ்ப்பிரபாவின் முந்தைய நாவலான ‘பேட்டை’ மிகச் சிறந்த வாசிப்பனுபவத்தையும் சிந்தாதறிப்பேட்டையின் வீதிகளையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கோசலை அதைவிட பன்மடங்கு விரிந்து எளிமையான பெண்ணொருத்தியின் அக உலகில் பயணிக்கச் செய்து மனம் நெகிழச் செய்துவிடுகிறது. கதைநாயகி கோசலை மூன்றடி உயரமும், கூன் முதுகும் உடையவள். அவளால் மற்றவர்களைப்போல ஓடி ஆட முடியாது. அடுத்தவர்களின் கண்களுக்கு பரிதாபத்துக்குரியவளாகவும், சிலரின் கேலிக்குரியவளாகவும் வாழப் பழகியிருந்தாள். கதையில் கோசலையைப் பற்றிய வர்ணனை திருக்குறளை நினைவுபடுத்தியது.
‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து’
‘அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவதுபோல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது’ என்பது இதன் பொருள். கோசலை தன் உருவத்தை நினைத்து துயரப்பட்டாலும் எங்கேயும் தேங்கி நிற்காமல் அவள் தன் வாழ்வின் நோக்கத்தை கண்டடைகிறாள். ஊரே வியக்கும் தேர் ஆகிறாள் என்பதை இப்புதினம் மூலம் தமிழ்g்பிரபா ஒர் உன்னதமான உலகத்தை உருவாக்கியுள்ளார்.
கோசலையின் சின்னஞ்சிறிய உலகில் தந்தை, தம்பி மற்றும் சித்தி மட்டுமே இருந்தனர். தாயை இளம் வயதிலேயே இழந்த கோசலைக்கு பொறுப்பு அதிகம். எதற்கும் முகம் சுணங்காமல் குடும்பத்தை சீராக நடத்தி வந்தாள். அவளது வாழ்க்கை அன்றாடங்களில் நிரம்பி வழிபவை. செய்ததை திரும்பச் செய்து வாழ்ந்த நாட்களை மீண்டும் மீண்டும் நகலெடுத்துக்கொண்டிருக்கும் அலுப்பான வாழ்க்கை அது. தன் உருவம் காரணமாக யாரிடம் அதிகம் பேசிப் பழகாத கோசலைக்கு அவளது அன்புத் தம்பி கணேசன் மட்டுமே உலகம். அவனும் கோசலையைத் தன் பலமாகவும் பாதுகாவலராகவும் உணர்ந்தான்.
அவனுக்காகப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குடும்பப் பொறுப்பை கையில் எடுத்து தன் வீடே உலகம் என்று வாழ்ந்தாள். ஆனால் எல்லாம் சில காலம்தான். தன் உயிருக்கு மேலாக நேசித்த கணேசன் பெரியவனாகி திருமணத்துக்குப் பின் மனைவியின் சொல்பேச்சைக் கேட்டு கோசலையிடமிருந்து மெள்ள விலகிச் சென்றான். குடும்பத்துக்குள் உட்பூசல் அதிகரிக்க… கணேசன் தனிக்குடித்தனம் சென்று அவளைப் பிரிந்தான். இது கோசலையின் வாழ்க்கையில் நிகழ்ந்த முதல் பேரிடி.
தனிமையின் துயர், நம்பியவரின் அலட்சிய மனோபாவம், இனி தன் வாழ்க்கை என்னவாகுமோ என்ற கவலை எல்லாமும் சேர்ந்து கோசலை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகிறாள். சராசரிப் பெண்ணாக இருந்ததால் எளிதில் கிடைக்கக் கூடிய பாக்கியங்கள் ஏதுமற்று தன் எதிர்காலம் குறித்த பயத்துடன் வாழ்ந்தாள். பருவம் அடைந்து பல காலமாகியும் திருமண வாழ்க்கை கிடைக்காமல் அவளது உடலும் மனமும் ஏங்கின. எல்லாத் துன்பங்களுக்கும் எங்கிருந்தாவது ஆறுதல் கிடைக்கும் என்பதுதான் இயற்கையின் நியதி.

தன் வீட்டு மாடியில் இருக்கும் பால்கனியிலிருந்து வேடிக்கை பார்க்கும் பழக்கம் கோசலைக்கு உண்டு. தன் பிரச்சனைகளை கோசலை மறப்பது அங்கிருந்து அவள் காணும் காட்சிகளால்தான். இயற்கையிலேயே கற்பனா சக்தி அதிகம் உள்ள அவளுக்குப் பிடித்தமானவை வானத்தில் மிதக்கும் மேகக் கூட்டம். மேலும் தெருவில் செல்லும் மனிதர்களை வேடிக்கை -பார்ப்பது அவளுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. அப்படித்தான் ஜோதியை அவள் பார்க்க நேர்ந்தது. அவன் அறியாத வண்ணம் தினமும் பார்க்கத் தொடங்கி, அவளுக்கு அதுவொரு பழக்கமாகிவிடுகிறது. ஏதேச்சையாக அதைக் கவனித்த அவனும் அவளை தினமும் பார்க்கத் தொடங்கினான்.
தன்னுடைய குறையை அவன் அறியாததால்தான் பார்க்கிறான் என்று நினைத்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாக அவளை நன்கறிந்தவனாக இருக்கிறான் ஜோதி. கோசலையும் ஜோதியும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கி தங்களுடைய காதலை வளர்க்கத் தொடங்கினார்கள். கோசலையின் ஆசை, கனவு, ஏக்கம் எல்லாவற்றையும் தீர்க்கும் ஒரு மனிதக் கடவுளாகவே ஜோதி அவளுக்குக் தென்படுகிறான். நீண்ட காலக் காத்திருப்பின் பயனாக அவளுக்கு கிடைத்த பொக்கிஷம் போன்றவனாகிறான். மனமொத்த ஜோடியாக கோசலையும் ஜோதியும் காதலில் திளைத்தார்கள். பெற்றோர்கள் சம்மதிக்காததால் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். அவள் வாழ்ந்த சிந்தாதரிப்பேட்டையைவிட்டு எங்குமே போயிராத கோசலை ஜோதியுடன் வாழ்வதற்காக அவ்விடத்தைத் துறந்தாள். அவளது அப்பாவுக்கும் கணேசனுக்கும் அவன் மனைவிக்கும் இது பேரதிர்ச்சியாக இருந்தாலும், அவர்களால் கோசலையின் முடிவை மாற்ற இயலவில்லை.
சைதாப்பேட்டை அருகே ஒரு வாடகை வீட்டில் குடிபுகுந்த அத்தம்பதிக்கு பக்கத்து வீட்டு அக்கா உறுதுணையாகிறாள். குடும்ப வாழ்க்கையில் அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். அழகான ஒரு பெண் குழந்தையை கோசலை பெற்றெடுத்தாள். குழந்தைக்கு ரேவதி என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். ரேவதி வளர வளர, அவன் குழந்தையின் மீதே அதிகம் கவனம் செலுத்தி கோசலையை நிராகரிக்கத் தொடங்கினான். கோசலையின் வாழ்க்கையில் இந்தப் பகுதி மிக முக்கியமானது. அவள் எதிர்பார்க்காத சம்பவங்கள் அடுக்கடுக்காய் நிகழ, சித்தம் கலங்கி பித்து நிலைக்குத் தள்ளப்படுகிறாள். வாழ்க்கையில் இரண்டாம் முறையாக தோற்கடிக்கப்பட்டு மனம் செயலற்றுப் போனாள். இனி வாழ்ந்து என்ன பயன் என்ற மனநிலையில் கோசலை தத்தளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு பற்றுதல் கிடைக்கிறது. அவளது வாழ்க்கையை திசைமாற்றிய தினத்தை அடைய அவள் எத்தனை எத்தனை கடினமான நாள்களைக் கடக்க நேர்ந்தது என்பதை இக்கதையை படிப்பவர்கள் உணர முடியும். எதிர்மறை எண்ணங்களுடன், அச்சத்துடன் எதிர்காலம் என எதுவும் இல்லாதவளுமான கோசலைக்கான மிகப் பெரிய திறப்பு அவளுக்கு கையளிக்கப்பட்ட ஒரு புத்தகம். உயிரை மட்டுமே சுமக்கும் ஓர் உடலாக அவள் இருந்த காலகட்டங்களில் சமையல் வேலை செய்து வந்த வீட்டின் உரியமையாளரான சாம்பசிவமூர்த்தி அவளுக்கு அளித்த அந்தப் புத்தகம் கோசலைக்குக் கிடைத்த சாவி. அந்தப் புத்தகம் அண்ணல் அம்பேத்கரின் புத்தகம்
மனிதர்கள் யாவரும் கைவிட… அவள் வாழ்க்கையில் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது அப்புத்தகமே. பாதியில் நிறுத்திவிட்ட படிப்பைத் தொடர்ந்து படித்து நூலகராகும் பரீட்சைக்கும் படிக்கிறாள் கோசலை. கடினமான உழைப்பாலும், அவள் அனுபவித்து வந்த துயரிலிருந்து மீள்வதற்காகவும் தன்னை மறப்பதற்காகவும் கோசலை தன்னைப் பிணைத்திருந்த சங்கிலியை கல்வியெனும் வாளால் அறுத்தெறிகிறாள். படிப்பு அவள் அறிவை விசாலமாக்குகிறது. புத்தகங்களின் வெளிச்சம் அவள் இருண்ட மனதை ஒளிமயமாக்குகிறது.
சாம்பசிவமூர்த்தியின் வழிகாட்டுதலில் நகரத்தில் முக்கியமான ஒரு நூலகத்தில் நூலகராக வேலை கிடைக்கிறது. கோசலையின் வாழ்க்கையில் அதற்குப் பின் திரும்பிப் பார்க்க ஏதுமில்லை. சில காலம் அங்கு பணியாற்றி வேலையின் நுட்பங்களை கற்றுத் தேர்ந்தாள். ஆனால் மனதில் ஏதோ ஒரு குறை இருக்கவே, எதனால் என்று யோசிக்கத தொடங்கினாள். அவள் இளம் வயது முதல் வாழ்ந்த வந்த சிந்தாதறிப்பேட்டைக்குச் செல்ல அவள் ஆழ்மனம் விழைந்தது. எங்கிருந்து வெளியேறினாளோ, எந்த இடத்தில் அதிக அவமானம் அடைந்து துயரின் உச்சத்துக்குச் சென்றாளோ அதே இடமான சிந்தாதறிப்பேட்டையில் உள்ள நூலகத்தைத் தேர்ந்தெடுத்துப் பணியில் சேர்ந்தாள் கோசலை.
கோசலையின் வாழ்விடமான சிந்தாதறிப்பேட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓரிடம். 1735-ஆம் ஆண்டில் இந்தியா காலனி ஆட்சியில் இருந்தபோது, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் புத்தகம் படிப்பதற்கான பிரத்யேக அறைகள் (Reading rooms) அமைக்கப்பட்டன. அந்தக் காலத்தில் செய்தித்தாள்கள், புதினங்கள் எனப் புத்தகங்களை ஓரிடத்தில் அமர்ந்து இலவசமாக படிக்க வசதி செய்யப்பட்டது. 1925-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் ஆணையின்படி முதன்முதலில் சிந்தாதிரிப்பேட்டையில்தான் திவான் பகதூர் விஜயராகவலூ கோஷன் நூலகத்தைக் கட்டினார். சென்னை ஆளுநர் கோஷன் பிரபுவின் பெயரைத் தாங்கிய அந்நூலகம் ஆரம்ப காலத்தில் வெகு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.
15,000-க்கும், மேற்பட்ட புத்தகங்கள் நிறைந்திருக்கும் இந்நூலகத்தின் தற்போதைய நிலையைப் பார்த்துக் கலங்கினாள் கோசலை. அந்த நூலகத்துக்கு வழக்கமாக வரும் சிலரைத் தவிர புதிதாக யாரும் வருவதில்லை. இது கோசலைக்குப் பெரிய சவால். தன் வாழ்வில் மிகப் பெரிய சவால்களை எல்லாம் எதிர்கொண்ட அவளுக்கு இதுவொன்றும் புதிது இல்லை. ஆயினும் அறிவுசார் உலகில் புத்தகங்களை நேசிக்கும் மனிதர்களை எப்படித் தேடுவது. எங்கிருக்கிறார்கள் அவர்கள் என்று எண்ணி மலைத்துப் போனாள்.
கோசலை அந்த நூலகத்தில் போடப்பட்டிருந்த பழைய சாமான்களை அகற்ற வேண்டியிருந்தது. அதன் உரிமையாளன் ஒரு செல்வாக்கான அடியாள் என்பதை அறிந்தும் அவள் போராடத் துணிகிறாள். இழப்பதற்கு இனி ஏதும் இல்லாதவளான கோசலை அறம் சார்ந்த போராட்டங்களுக்கு அச்சப்படுவதில்லை. எதிர்ப்பவர் யாராக இருந்தால், என்ன தவறு என்றால் அது தவறுதான் என்ற கொள்கையினால் அப்போராட்டத்தில் வெற்றியும் பெறுகிறாள் கோசலை. இது அவளது பாதையை தீர்மானிக்க உதவிய முதல் வெற்றி. ஒரு தலைவியாய் மற்றவர்களுக்காக வாழத் தொடங்கிய ஒருத்தியாய் மாறத் தொடங்கினாள் கோசலை.
நூலகம் கவனம் பெற வேண்டும் என்பதற்காக சிந்தாதறிப்பேட்டையில் ஒவ்வொரு தெருவிற்கும் சென்று பல வீடுகள் ஏறி படிப்பின் முக்கியத்துவத்தை விளக்குகிறாள். நூலகத்துக்கு வழக்கமாக வரும் ஒரு இளம் பெண்ணின் உதவியுடன் நூலக வளாகத்தில் இலவச டியூஷன் வகுப்புகளைத் தொடங்குகிறாள். புதிய நட்புகள், புதிய ஆட்கள் என அவள் உலகம் பெரிதாகிறது.
உறுதியான நம்பிக்கை, தெளிவான திட்டமிடல், மிக விரைவான முடிவெடுக்கும் திறன் மற்றும் செயலாக்கங்களினால் கோசலையின் நூலகம் அப்பகுதியில் கவனம் பெறத் தொடங்கியது. மக்கள் வரத்தும் அதிகரிக்கிறது. பெண்களுக்கு தனது ஊதியத்திலிருந்து கோசலை சிறு உதவிகளையும் அவ்வப்போது செய்வதால். அவர்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெறுகிறாள். தன் வலிகளை மறப்பதற்கான வழியென்ன என்பதை கோசலை தன் வாழ்க்கையின் இந்தப் புதிய கட்டத்தில் உணர்ந்தாள்.
கோசலையின் சுறுசுறுப்பும், சோர்வறியாத உழைப்பும், அப்பகுதி மக்களின் மீது அவளுக்கு இருக்கும் பரிவும், நூலக வளர்ச்சியின் மீதான ஈடுபாடும் அவளுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தெருகிறது. தான், தன் குடும்பம் என்று வாழ்ந்த கோசலையின் வாழ்க்கை, நாம் நமது ஊர் என்று விலாசமானது. மன அழுத்தம் என்ற தேங்கிய குட்டையால் பாதிக்கப்பட்ட அவளது வாழ்க்கை தெள்ளத் தெளிந்த நீரோடையாகி, புதுப் பாய்ச்சலுடன் அனைவருக்கும் பயன்பட்டது. தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் தன்னுடைய ஒளியை எடுத்துச் சென்று பேரழகியாக மாறினாள் கோசலை.
அவள் சீர்திருத்தவாதியா, சமூகப் புரட்சியாளரா, மனித நேயரா என்றெல்லாம் தனியாக பிரிக்க முடியாமல், தான் வாழும் சமூகத்துக்குத் தன்னால் முடிந்த வரையில் தன் பங்களிப்பைச் செய்தாள் கோசலை. அவள் தேர்ந்தெடுத்த அந்தப் பாதை அத்தனை எளிதானதல்ல. கரடுமுரடானது. பகை நிறைந்தது. எதற்கும் அசராமல் தன்னந்தனிப் பெண்ணாக சாதித்தாள் கோசலை. அவளது கனவுகள், ஆசைகள் எல்லாம் பொதுநலனாகவே மாறிப் போக, அவளது பயணமும் அடுத்த கட்ட நகர்வும் அசாத்திய வேகத்தில் நிகழ்ந்தது. கோசலையின் உயர்வு அப்பகுதி மக்களுக்கு முன் உதாரணமாக மாறியது.
கோசலை வாயிலாக தமிழ்ப்பிரபா கேள்வி கேட்பது இந்த ஒட்டுமொத்த சமூகத்திடம்; அதன் மனசாட்சியிடம். எத்தனையோ கதைகள் இதற்கு முன் படித்திருந்தாலும் கோசலையை அவர் நம்மிடம் ஒப்படைத்துப் போனதால்தான் அவள் அங்கேயே பத்திரமாக இருக்கிறாள். கோசலைகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களை கண்டுகொள்வதில்லை. நமக்குப் பேசி, சிரிக்க, கவலைப்பட அனேக விஷயங்கள் இருக்கையில், அவர்களை நாம் புறக்கணித்தே பழகிவிட்டோம். இந்த நாவல் வாசித்தவர்கள் நிச்சயம் கோசலையை எங்கேனும் கண்டால் கைகளைப் பற்றி, அவளிடம் அன்பொழுக நலம் விசாரிப்பார்கள். மரணத்தின்பின் கல்லறையில் நிச்சயம் மலர்களைத் தூவுவார்கள். ஒரு துளி கண்ணீராவது சிந்துவார்கள்.
