பிரேமா இரவிச்சந்திரன்
ஆங்கிலேயர் ஆட்சியில் மக்களது உடல் உழைப்பானது உறிஞ்சப்பட்டு, அவர்களுக்கு உண்ண உணவின்றி ஏழைகளாகப் போராடி வந்த போது, அதற்கான தீர்வைப் பெற சில கோரிக்கைகளை முன்வைத்து 1886ஆம் காங்கிரஸ்காரர்களால் கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக கோயம்புத்தூரில் வாழ்ந்து வந்த ‘கலாநிதி’ பத்திரிகையின் ஆசிரியரான சேலம் பகடால நரசிம்மலு நாயுடு உட்பட முக்கியமான போராளிகளான ஆளுமைகளுக்கு இந்திய நாடு முழுவதிலிருந்தும் அழைப்பு விடுவிக்கப்பட்டது.

நாயுடு அவர்கள் உட்பட இன்னும் சிலரும் வட இந்தியாவைக் குறித்து ஏதும் முழுமையாக அறிந்திருக்காதவர்களாக இருந்த பட்சத்தில், அங்கு நிலவிய தட்பவெப்ப நிலை, போக்குவரத்தில் இருக்கும் சிக்கல்கள், மாறுபட்ட உணவுப் பழக்கங்கள், பரவும் வியாதிகள் ஆகியவற்றைக் குறித்து அச்சம் கொண்டு பலரும் பின்வாங்கிய பொழுது, தான் முக்கியமா? அல்லது தனது நாடு முக்கியமா? என்று தனக்குள் எழுப்பிக்கொண்ட கேள்வியில், தனது நாட்டிற்கே முதலிடம் கொடுத்து கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள முடிவெடுத்து மேற்கொண்ட பயணத்தில் வழியில் ஆங்காங்கே நதிகளின் ஓரம் எழுப்பப்பட்டிருந்த கோவில்களையும் தரிசித்து, கல்கத்தா சென்றடைந்து, மாநாடு முடிந்த பிறகு வட இந்தியாவில் உள்ள வேறு தேசங்களுக்கும் தனது பயணத்தை மேற்கொண்டு அவ்விடத்தின் வரலாறுகளையும், புள்ளிவிவரங்களையும், புராணக் கதைகளையும், அன்றைய நிலையையும் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்தவராக தனது ‘கலாநிதி’ பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வழங்கி வந்திருக்கிறார். பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவற்றைத் தொகுத்து 1888ஆம் ஆண்டு, ‘ஆரியர் திவ்ய தேச யாத்திரையின் சரித்திரம்’ எனும் பெயரில் நூலாக வெளியிட்டிருக்கிறார். தஞ்சாவூர் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட நூலகத்தில் இந்த நூல் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான ஆன்மிகத் தகவல்களுக்கு இடையே, அவர் சென்ற ஊர்களையும் கண்டு வியந்தவராக கல்கத்தா மாநகரையும், தலைநகர் டெல்லியையும், மும்பை பட்டணத்தையும் பார்த்து தனது எண்ணத்தை விரிவடையச் செய்திருக்கிறார். ஆங்கிலேயர்கள் எளிதில் வந்தடையும் இடமாக உள்ள அரபிக் கடலோர மும்பையின் துறைமுகமும், வங்காள விரிகுடாவின் கரையோரம் அமைந்திருக்கும் கல்கத்தாவின் துறைமுகமும், அங்கு நடக்கும் வர்த்தகத்திற்கு காரணமாக அமைந்து, பெரும் சந்தைகளில் வியாபாரம் செழித்திருந்திருக்கிறது. அவ்விடங்களில் ஆங்கிலேயர்கள் வாழும் பகுதிகளின் சாலைகள் நேர்த்தியாக பலகைக் கற்களால் அமைந்தும், பல வண்ண மின்சார விளக்குகளைக்கொண்டு இரவு நேரமும் விண்ணுலகம்போல மின்னுவதைக்கண்டு வியந்தவராக, இவ்வாறான செல்வச் செழிப்பிற்கு காரணமாக இங்கு வாழும் மக்களது கைத்தொழிலும் வர்த்தகமும் அவர்களது விடாமுயற்சியும் உண்மையும் உழைப்புமே இருக்க முடியும் என்பதை கருத்தாகக்கொண்டு தன் இருப்பிடம் திரும்பியிருக்கிறார்.

இந்த நூலுக்கு முன்பு முன்னோடியாக எந்த நூலும் இல்லாத பட்சத்தில், இதுவே தமிழகத்தின் முதல் பயண நூலாக இருக்கிறது. அன்றைய நாளில் அவர்கள் செல்லும் வழியில் ஆங்காங்கே இருக்கும் சத்திரங்களையும் சாவடிகளையும் பயன்படுத்தி உணவை சமைத்து, உண்டு உறங்கி, தங்களது சுமைகளை தாங்களே சுமந்துகொண்டு பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இன்றைய உணவகங்களோ, விடுதிகளோ, பேருந்து வசதிகளோ அக்காலங்களில் இல்லை. எருது வண்டிகளும், ஜட்கா வண்டிகளும், இரட்டைக் குதிரை கோச்சு வண்டிகளும், மணிக்கு சுமார் 20லிருந்து 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும் ரயில் வண்டிகளும் உதவியாக இருந்திருக்கின்றன.
இந்திய வரைபடத்தை கையில் கொண்டு ஆங்காங்கே வழிகளைக் கண்டுபிடித்து, சிந்து, கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா போன்ற வற்றாத நதிகளின் கரைகளில் அமைந்திருக்கும் புண்ணிய ஸ்தலங்களையும், அதனைச் சுற்றி அமைந்திருக்கும் நகரங்களையும் கண்டு களித்திருக்கிறார், அப்போது அவர் சந்தித்த அரசின் முக்கிய அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மொழி தெரியாத நாட்டில் தனக்கு உதவிக்கென அமர்த்திக்கொண்ட நபர்கள் போன்றோரின் மூலமாகவும் மற்றும் அரசு அலுவலகங்களிலிருந்து பெற்ற புள்ளிவிவரங்கள் மூலமாகவும் தகவல்களைத் திரட்டி இந்த நூலினை ஆசிரியர் அளித்திருக்கிறார்.
அவர் சென்ற பயணத்தில் தகவல் பரிமாற்றத்திற்காக தொடர்புகொள்ளும் ஒரே துறையாக அன்று தபால் அலுவலகம் மட்டுமே இருந்திருக்கிறது. திரட்டிய தகவல்களை கடிதங்களின் மூலம் அனுப்புவதற்கும், தினசரிப் பத்திரிகைகள், மணியார்டரின் மூலம் பணங்கள் போன்றவற்றைப் பெறுவதற்கும், தபால் துறை மட்டுமே செயலில் இருந்திருக்கிறது. தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத அக்காலத்தில் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும்பொழுது, தனது உடல் நிலையையும் கவனித்துக்கொள்ள உதவியாக எடுத்துக்கொள்ளும் பொருள்களிலிருந்து, காணும் இடங்களில் எச்சில் துப்புவது, மலம் கழிப்பது போன்றவற்றைத் தவிர்த்து கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும் குறிப்பிட்டு, பயணத்திற்குப் பயன்படும் அனைத்து முக்கியக் குறிப்புகளையும் குறிப்பிட்டு, ஒரு கையேடாக இந்த நூலினைக் கொடுத்திருக்கிறார்.
இந்த நூலில் அவர் கண்ட அனைத்து இடங்களைப் பற்றியும், அங்கு நடந்த வரலாற்று நிகழ்வுகளைக் குறித்தும் அயல்நாட்டு யாத்திரிகர்கள் எழுதி வைத்த குறிப்பிலிருந்து அறிந்தவையாக, தான் பெற்ற தகவல்களையும் என அனைத்தையும் பதிய வைத்து ஒரு வரலாற்று நூலையே. உருவாக்கியிருக்கிறார். இதனோடு புராணக் கதைகளும், தல வரலாறுகளும் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
கோகுல கிராமம் அமைந்திருக்கும் யமுனை ஆற்றங்கரையில் அவர் சென்றிருந்தபோது அறிந்தவையாக, அந்தக் கிராமத்தின் மக்களது பூர்வ கால வழக்கப்படி, பெண்கள் தங்களது ஆடைகளை ஆற்றங்கரையில் களைந்துவிட்டு, வெறும் உடலால் நடந்து சென்று குளித்து, தங்களது மிதமிஞ்சிய பக்தியைக் காட்டும் சகித்துக்கொள்ள முடியாத வழக்கங்களும் இருந்திருக்கின்றன. மற்றுமொரு சம்பவமாக, அனேக சிற்பிகளைக் கொண்டு 14 ஆண்டுகளாகக் கட்டிய ஜெகநாதர் கோவிலில் ஆவணி மாதத்தில் நடக்கும் ரத உற்சவத்தில் 16 சக்கரங்களைக் கொண்டு 4200 பேர் இழுக்கும் தேரினடியில் விழுந்து இறந்தால் நேரே வைகுண்டம் போவதாக நம்பும் ஆசை கொண்ட மூட பக்தியும் இருந்திருக்கிறது. அதே சமயத்தில் அன்றைய மதுராபுரியில் ஒரு வருடத்தில் நடக்கும் பல விசேஷமான காலங்களைக் குறிப்பிட்டு, அவற்றில் ஒன்றான ஆனி மாதம் பத்தாம் தேதியன்று வீட்டு மாடிகளிலும்,கோகர்னேசுவரர் மலையின் மீதும், காற்றாடியை பறக்க விட்டு, பட்டமானது வடக்கே வீசினால் அவ்வாண்டு நல்ல மழை பெய்யும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். பிற நாட்களில் நடக்கும் விசேஷங்களுக்கான அறிவியல் காரணங்களோ சமூக நோக்கங்களோவென வேறு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இமயமலையைப் பற்றிய குறிப்பில், ‘இந்திய விவசாயிகள் பயிரிடுவதற்கு விதைகளாகப் பயன்படும் நெல், கோதுமை மற்றும் தானியங்களானது இங்கு இயற்கையாக விளைந்து இந்நாட்டு மக்களுக்கு இவ்விடம் தாய் வீடாக விளங்குகிறது’ என்று குறிப்பிடுகிறார். ‘இந்தியாவின் வடக்கு எல்லையான இமயமலையானது திபெத் போன்ற நாடுகளிலிருந்து கடுங்குளிரை இந்திய தேசத்திற்கு வராமல் தடுத்தும், சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற வற்றாத ஜீவநதிகளின் பிறப்பிடமாக இருந்தும், தரைமட்டத்திலிருந்து மலையின் உயரத்திற்கேற்ப உயிரினங்களைக் கொண்டும் விளங்குகிறது’ என்கிறார். இந்த நூலிலிருந்து பெற்ற தகவலாக, மலையின் அடிவாரத்தில் சதுப்பு நிலங்களும், 3000 அடிகளுக்கு மேலே இருக்கும் காடுகளில் பிரமாண்டமாக பெருத்து வளர்ந்திருக்கும் விலையுயர்ந்த மரங்களும், அதற்கும் மேலே இன்னும் உயரே செல்லும்போது ஐரோப்பிய நாடுகளுக்கேயுரிய பைன், சிடார் போன்றவையும், நீர் பாய்ச்சலில் உள்ள நிலங்களில் நெல் முதலான பற்பல தானியங்களும், தேயிலையும் விளைகின்றன. 11000 முதல் 12000 அடிகள் உயரத்தில் புல் பூண்டுகள் விளைவதால் அங்கு ஆடு, மாடுகள் மேய்வதும், சிறுத்தை, புலி முதலான மிருகங்களின் விருத்தியும் இயற்கையாக அமைந்துள்ளது.
20 ஆயிரம் அடிகளுக்குமேல் திபெத் போன்ற தேசங்களுக்கு போய் வர வழிகளாக அங்கு கணவாய்கள் இருக்கின்றன. அதற்கும் மேலே இருக்கும் காற்றில் பிராண வாயு மிகவும் குறைந்திருப்பதால், நடப்பவர்களுக்கு அடிக்கடி மயக்கமும் தலைவலியும் உண்டாகிறது. இமயமலையிலுள்ள பல உயரமான சிகரங்களில் ஒன்றாக இருக்கும் எவரெஸ்ட் சிகரமானது, பூமி மட்டத்திலிருந்து சுமார் ஐந்து மைல்கள் உயரத்தில் அமைந்து, உலகிலேயே உயரமான சிகரமாக இருப்பதால், இம்மலையில் ஆதி முதல் விளைந்த நெல் முதலான தானியப் பயிர்களும், காய்கனி வகைகளும், மூலிகை வகைகளும் இயற்கையாகவே உள்ளன. விவசாயிகள் இவ் விதைகளையே நாட்டிற்குக் கொண்டுவந்து பயிரிட்டு உணவு உற்பத்தி செய்கிறார்கள் என்றெல்லாம் இருக்கும் குறிப்பிலிருந்து இமயமலையானது தாய் வீடாக விளங்குவதையும், பூமி மட்டத்திலிருந்து மலைகளின் உயரத்திற்கேற்ப அங்கு வாழும் உயிரிகளின் வகைகளும் அமைந்திருக்கின்றன என்கிற அறிவியலையும் உணரலாம்.
இந்த நூலினை வாசிப்பவர்களது பார்வையில், பெண்களின் நிலையைப் பற்றி சிந்தித்தால் அவர்கள் சிறப்பாக வாழ்ந்ததுபோல் தெரியவில்லை. கணவனை இழந்த கைம்பெண்கள் குடும்பத்தினரிடம் ஆதரவு கிட்டாமல் காசி போன்ற இடங்களைத் தேடி வந்து அங்கு வேசிகளாகி வீணாகிப் போவதும் நடந்திருக்கிறது. அவர்கள் சோபாவின் மீது அமர்ந்திருப்பதை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கும்பொழுது, குடும்பப் பெண்களுக்கு அவ்வாறு அக்காலங்களில் அமர்வதற்கு உரிமையில்லை என்பதையும் உணர முடிகிறது.
இன்றைய தலைநகரமான டெல்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகரமாக விளங்கிய கல்கத்தாவினைக் குறித்து பல தகவல்கள் பதிவாகி இருக்கின்றன. 11ஆம் நூற்றாண்டில் சதுப்பு நிலங்களைக்கொண்டு வனங்களாகக் காட்சியளித்த இப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. வாரன் ஹேஸ்டிங் பிரபு அவற்றையெல்லாம் பெரும் எண்ணிக்கையில் சுட்டுக்கொன்று, நிலத்தை சுத்தப்படுத்தி, காடுகளை வெட்டி சமதளமாக்கி, நகரமாக்கியிருக்கிறார். ஹூக்லி நதி பாய்ந்து வளமான விளைச்சல்களையும் அதிக விகிதத்தில் வியாபாரங்களையும் கொண்டு பெருநகரமான விளங்கி வந்த கல்கத்தாவானது அன்றைய இந்தியாவின் தலைநகரமாக விளங்கிய போதிலும், நாளடைவில் இங்கு நிலவும் வெப்பத்தைக் காரணமாகக்கொண்டும், மற்ற மாகாணங்களைச் சேர்ந்த மன்னர்களின் சமஸ்தானங்களுக்கு கல்கத்தாவானது நெடுந்தொலைவில் இருப்பதையும் மையமாக வைத்து, குளிர் வாசஸ்தலமான சிம்லா அருகில் இருக்கிறது என்பதையும் மற்ற மாகாணங்களுக்கு மத்தியப் பகுதியில் இருக்கிறது என்பதையும் காரணமாகக்கொண்டு டெல்லியை தலைநகரமாக மாற்றியதை இந்த நூலின் வாயிலாக அறிய முடிகிறது.
முதன்முதலில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்களது அடையாளங்களைப் பதிய வைக்கும் வாய்ப்பாக இங்கு ஆண்ட அரசர்களுக்கு அவர்கள் அளித்த மருத்துவமே காரணமாக இருந்திருக்கிறது. அதற்குப் பிரதிபலனாக அவர்களுக்கு என்ன வேண்டும் என்கிற கேள்வியில், ஏற்கெனவே பிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர்களும் வர்த்தகம் செய்துகொண்டிருக்கும் வங்காள விரிகுடா கடலின் ஓரமாக உள்ள கல்கத்தா பகுதியில், ஆங்கிலேயர்களான தங்களுக்கும் வியாபாரம் செய்வதற்கான அனுமதி வேண்டுமென்று கேட்டுப் பெற்றிருக்கிறார்கள். அவ்வியாபாரம் பெருகிய நிலையில் கிழக்கிந்திய கம்பெனியாக வளர்ந்து, பிறகு இந்தியாவானது இங்கிலாந்து அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சிகளெல்லாம் திட்டமிட்டு எதுவும் நடக்காமல் அதன் போக்கில் சம்பவங்கள் நடைபெற்று நம் நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டதாக தகவல்கள் அமைந்திருக்கின்றன.
இன்றைய நாட்களில் சில வரலாற்று நிகழ்வுகளைக் குறித்து, அவை உண்மையாக நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று நாம் எண்ணுகின்ற நிலையில், அவை அவ்வாறு நடந்தது உண்மை என்பதற்கு அடையாளமாக நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டதொரு நிகழ்ச்சியாக, 146 ஆங்கிலேயர்களை இருட்டு அறையில் அடைத்து வைத்து, அவர்களில் 23 பேரைத் தவிர அனைவரும் மடிந்து போன சம்பவம் இந்த நூலில் பதிவில் இருக்கிறது. பிரசிடெண்ட் கர்நூக் என்பவரால் மேன்மை பெற்று விளங்கி வந்த கல்கத்தா நகரமானது 17ஆம் நூற்றாண்டில் அவுரங்கசீப்பின் மகனான அஜீம் என்பவரால் கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமாகி இருக்கிறது. அப்பொழுது ஆங்கில தேசத்தில் ராஜாவாக இருந்த வில்லியம் என்பவரது பெயரால் இங்கு ஒரு கோட்டையைக் கட்டி இருந்திருக்கிறார்கள். 1756ஆம் ஆண்டு சுராஜ்டௌலா என்பவர் காசிம் பஜாரில் ஆங்கிலேயர்களுக்காக இருந்த வர்த்தக சாலைகளை பிடித்து வைத்துக்கொண்டு அவர்களை கைதிகளாக்கி வருத்தியிருக்கிறார். இந்த வர்த்தக சாலையிலிருந்த இருட்டு அறையிலேயே மேலே குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றிருக்கிறது. 1757 ஆம் ஆண்டு கிளைவ் என்பவர் இந்த நிகழ்ச்சியில் இறந்தவர்களுக்காக வாதாடி வென்றிருக்கிறார். 1765 ஆம் ஆண்டு டெல்லியை ஆண்ட அரசன், வங்காளம், பீகார், ஒரிசா போன்ற மாகாணங்களை வருவாய்த் துறையின் காரணமாக ஆங்கிலேயருக்குக் கொடுத்திருந்து, நாளடைவில் அப்பகுதிகள் அவர்களுக்கே சொந்தமாகியிருக்கின்றன. இதற்கு முன்பு 1707ஆம் ஆண்டு வரை கல்கத்தாவானது சென்னை ராஜதானி அதிகாரத்திற்குள் இருந்திருக்கிறது. இதுபோன்ற வரலாற்றுத் தகவல்கள் இந்நூலில் நிறைய இடம்பெற்றிருக்கின்றன.
இந்தியர்களின் மீது பேரன்பைக்கொண்ட ஆங்கிலேயரான ஹியூம் என்பவர் பல ஆண்டுகளாக இந்திய அரசின் செகரட்டிரியாக பணிபுரிந்தவர். அச்சமயம் 60 வயதில் இருந்த அவர், இந்திய தேசத்தில் பல ஆண்டுகளாக தங்கியிருந்து, இந்திய மக்களின் நலனுக்காக அவர்களுக்கு உதவி செய்வதையே கருத்தாகக்கொண்டு, அல்லும் பகலும் அயராது உழைத்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களையும், வர்த்தகர்களையும், நாட்டு நலத்தில் அக்கறை கொண்டவர்களையும், துணையாகக்கொண்டு காங்கிரஸ் சபையை உருவாக்கத் தூண்டியவர். இவரைப் பற்றி நாயுடு அவர்கள் குறிப்பிடும்பொழுது மகாத்மா என்கிறார். பின்னாளில் நமது நாட்டின் மகாத்மாவான காந்தியடிகளுக்கு அன்று வயது பதினேழு.
அன்றைய தினத்தில் இந்திய ஜனாதிபதியாக இருந்த தாதாபாய் நௌரோஜி அவர்கள் அவ்வாண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைமைப் பொறுப்பினை வகித்தார். அவர் தனது ஆங்கிலம் பேசும் சாமர்த்தியத்தைக்கொண்டு, ஆறு முறை தனது செலவில் அயலகத்திற்குச் சென்று, அங்குள்ள அதிகாரிகளிடம் சண்டையிட்டு, இந்திய ஏழை மக்களுக்காக கண்ணீர் விட்ட மகரிஷி என்கிறார் நாயுடு அவர்கள். கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த இந்நூலின் ஆசிரியர் சேலம் வரதராஜுலு நாயுடு அவர்கள், மாநாட்டின் மீது கொண்டிருந்த கவனத்தோடு, அவ்வூரில் நடக்கும் தொழில்களைப் பற்றியும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில், கல்கத்தாவில் நிறுவப்பட்டிருந்த, சணல் பைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று, 2000 குதிரைகள் வேக பலத்தைக்கொண்டு இயங்கும் இயந்திரங்கள், சணல் நார்களைப் பிரித்துப் பின்னலிட்டு, கோணிப்பைகளாக உருவாக்கி, அவற்றை மலையென அடுக்கி வைத்திருந்த வினோதத்தைப் பார்த்து வியந்திருக்கிறார்.
1886ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்கள் வெற்றியடைந்து, பயணத்தால் பெற்ற அனுபவங்களால் தனது விரிந்த பார்வையில் கோயம்புத்தூருக்குத் திரும்பிய வரதராஜுலு நாயுடு அவர்கள் அங்கு ஒரு கூட்டத்தினைக் கூட்டி 2 மணி நேரத்திற்கும் மேலாக தனது அனுபவங்களை பகிர்ந்து சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். வானம் பொய்த்து விளைச்சல் பாதிக்கப்படும்பொழுது, விவசாயிகள் வருமானமின்மையால் அவதிப்படுவதை தவிர்ப்பதற்காக அங்கு நூற்பாலைகள் நிறுவப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தார். பருத்தியும் நல்ல விலைக்கு விற்கப்பட்டு வேலை வாய்ப்பும் மக்களுக்கு கிட்டும் எனும் அக்கறையில் அவர் கருத்தினைப் பகிர்ந்தபொழுது, ஆலையை நிறுவ தேவைப்படும் ஆறு லட்சம் ரூபாயை சேகரிக்க, சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனது பங்காக பண மதிப்பினைக் கொடுத்து நூற்பாலை நிறுவுவதற்கு தாங்களும் ஒரு பங்காக வருவதற்கு சம்மதித்தார்கள். இதனைத் தொடர்ந்து சர்க்கரை ஆலைகள், காகிதங்களைத் தயாரிக்கும் எந்திரங்கள் போன்றவை கோயம்புத்தூர் வாசிகளுக்கு வேலை வாய்ப்பைக் கொடுத்திருந்தன. இவ்வாறான வாய்ப்புகளையும் பயணங்களே பெற்றுக் கொடுத்திருக்கின்றன. திரை கடலோடி திரவியங்களைத் தேடி சுகமாக வாழ்வதற்கு வாய்ப்பாக பயணங்களே அமைந்திருக்கின்றன.
