அன்பாதவன்
சமகாலக் கவிதை வெளிப்பாட்டுக்கு அடித்தளமாகவும், தூண்டுதலாகவும் சங்க இலக்கியங்களே இருக்கின்றன என்பதை எந்தப் படைப்பாளியும் மறுக்கவியலாது. ஒன்றரை வரியில் செறிவாகச் சொல்லப்பட்ட ‘குறுகத் தரித்த குறள்’ ஒருவருக்கு கவிதை தருமா? பெருவினாவுக்கு விடையாக வந்திருக்கிறது, ந.பெரியசாமியின் ‘அகப்பிளவு’ நூலின் தலைப்பே, உளவியல் மற்றும் சமூகவியல் சார்ந்து இயங்குகிறது. எனினும், தொகுப்பின்
பெரும்பாலான கவிதைகள் அகம் சார்ந்தவை. புறம் சார்ந்த சில சமூகச் செய்திகளுமுண்டு.‘அகப்பிளவு’ – கவிதைத் தொகுப்பு இரண்டு பகுதிகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவனின் காமத்துப்பாலிலிருந்து சில அதிகாரங்களின் சாற்றினை, தன் கவிமொழியில் கவிதையாக்கி தந்திருப்பதோடு மட்டுமின்றி, தன் மனம் புகுந்த சொற்களால் அகவியக் கவிதைகளாக்கி இரண்டாம் பகுதியில் தந்துள்ளார் பெரியசாமி.பெரியசாமியின் கவிதை மொழி, வசீகரமானது, வாசகனைத் தன் பக்கம் ஈர்த்து, தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

‘மிளகு அளவு சொல்/கடலளவு வலியானது’ (ப.16)-போன்ற சின்னஞ்சிறு வரிகள் மூலம் பெரியதொரு காட்சியை வரைந்து விடுவதில் வல்லவராய் பெரியசாமி!
விலகச் சுட்டு நெருங்கக் குளிர்மை தரும் அதி அதிசயத் தீயை எங்ஙனம் கைக்கொண்டிருப்பாளோ..? (ப.17) – என்கிற வரிகளில் அதி ‘அதிசயம்’ என்ற சொல்லாடல் இது குறள் பின்னணியில் உருவான கவிதை எனினும், கவிஞரின் தனித்த அடையாளத்தைத் தக்கவைக்கிறது.
‘விழும் சூரியனால்/குளத்து நீர் நெருப்பாகிவிடாது’ (ப.19) -என்ற வரிகள் காட்டும் காட்சி காமத்துப்பாலைத் தாண்டி, கவிஞரின் அடையாள வரிகளாகிறது.

சுவையான, புதிய சொல்லாடல்களைக் கவிஞன் வாசகனுக்காகத் தவமிருந்து வரமாக வாங்கி, படைக்கையில், வாசகனும் அதனோடு இசைந்து பயணப்படுதலே படைப்பை முழுமையாக்கும். ”தமிழின் நவீன கவிதை அதன் தோற்றுவாயிலிருந்தே பெரிதும் அகச்சார்பு கொண்டதாகவே இருந்து வருகிறது. அதன் உள்முகத்தேடலும், அந்தரங்கத் தொனியும், தன் உரையாடலும், இறுகிய மொழியும் தமிழ்க் கவிதைகளின் தவிர்க்க முடியாத பண்புகளாகவே தனி அடையாளம் பெற்று விட்டன” என்பார்.
க.மோகனரங்கன் (‘சொல் பொருள் மௌனம்’ – பக். 226)
‘நதியாளான்…/ சுகித்தலை வேண்டி/மீனானான்’ (ப.57)- சுருக்கமான இப்படிமம் சொல்லாதன சொல்லி பூடகத்தால் வாசகனைக் கவ்விக் கொள்கிறது.
படிகள்/‘புடைத்துத் தொங்கும்/நெல்மணிகள்/ மாடியில் உருள/மருண்டோடிய அணிலோடு/லயித்திருந்த அந்தியில்/செங்குத்தாக நிற்கும்/சுழல் படிக்கட்டுகளில்/கொலுசை இசைத்தபடி/மறைந்து மறைந்து/தாவி ஏறிய நைட்டி/அன்பில் தேவதையாக/பேரன்பின் சாத்தானாகஇறங்கும் போது/அநாயசமான செங்குத்து’ (ப.37) – கொலுசு, நைட்டி என்ற இரு சொற்கள் வழியாக வாசகனுக்கு இன்பத்து பாலின் இன்சுவை ஊட்டி, வெற்றியும் காண்கிறார் கவிஞர். ந.பெரியசாமியின் பலமாக நான் உணர்வது சில காட்சிகளும் கொஞ்சம் சுவைச் சொற்களும் கொண்டு ஒரு கவிதா மாளிகையை கட்டிவிட ஏலுகிறது..
வன தேவதை (ப.42) கவிதை, காதலின் வழியாக சூழலியல் பேசுகிறது.
‘வாசலின் வெக்கை தணிக்க/நதியைத் தெளித்தாள்….’/மாடியிலிருந்து ரசித்தவன்/இன்னும் மரக்கன்றுகளை/நட்டு வைக்கத் தீர்மானித்தான்’/
எலுமிச்சை ‘மாயக்காரி’ கவிதையில், மாய யதார்த்த மணமெனில் ‘வடிகால்’ கவிதையில் சமகாலத்தின் ஒரு விகாரம்.இதிகாசப் பாத்திரங்கள் மீதான பெரியசாமி-யின் பார்வை மிக வித்தியாசச் சுவை.
குந்தி/‘அன்று உலகத்தார்க் கண்ட/ இரண்டு சூரியன்கள் /மகாபாரதம் சொல்ல முடியாதது’ (ப.67)
பாரதப் பாத்திரம் ஒரு புறமெனில் இராமாயணத்திலிருந்தும் ஒரு துளி.
சூர்ப்பனகை/ ‘வண்டுகள் ஏமாறும் பொய்ப்பூ/காண்போரை பெருமூச்சில்/கரைந்திடச் செய்யும் மெய்மலர்’ (ப. 73).
‘ஊடல் மரமேறும் வேதாளம்’ எனும் கவிதை, பக்.34 மற்றும் 72ல் பதிவாகியுள்ளது. எதிர்வரும் பதிப்பில் திருத்தளம்.
தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் ‘தாபப் பித்து!’
பின் உறக்கம்/‘மௌனித்திருக்கும் நிசியில்/ நா மீட்டிட பற்றும் சுடர்/கனற்று விரவும் வெப்பத்தில்/சுழிதல் கொள்ளும்/இசையின் ததும்பலில்/நிறைவு கொள்ளும் விழிப்பு. பிணைகளின் உறக்கமாக’ (ப.43).
‘நா மீட்டிட பற்றும் சுடர்…’ ஒரு சொற்றொடர் தீ மூட்டுமா…?
ந.பெரியசாமியின் குளிர் காமம் தூவும் கூதல் மொழிக் கவிதைகளை வாசிக்க தீ பரவும்; காமத்தீ!
நூலின் வடிவமைப்புக்காக ‘சொற்களுக்கு’ ஒரு பூங்கொத்துக் கோட்டோவியங்கள் கவிதையின் கன பரிமாணம் கூட்டுவன. காமமெனும் பாற்கடலை முடிக்க விழையும் பூனையாய் இக்கவிதைகள்.அகப்பிளவு சுகக் கிளர்ச்சி.