சந்திப்பு: ஆயிஷா. இரா. நடராசன்

பன்னாட்டு புத்தகக் காட்சி சென்னை புத்தகக் காட்சியின் ஓர் அங்கமாக ஜனவரி 16, 17 மற்றும் 18 தேதிகளில் நடந்து முடிந்தது. தமிழை உலகிற்கு கொண்டுசெல்வதும் உலக இலக்கியங்களை தமிழுக்கு எடுத்து வருவதும் அதன் நோக்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ நாற்பது நாடுகளின் இலக்கியப் படைப்பாளிகளும் பதிப்பாளர்களும் ஒரே இடத்தில் சந்தித்தது அரிதான நிகழ்வு. ‘புதிய புத்தகம் பேசுது’ இதழ் சார்பாக சில இடது சாரி இலக்கியப் பன்னாட்டு முகங்களை சந்தித்து உரையாடினோம்.
முபாரக் அடக்குமுறைக்கு எதிரான
சிவப்பு அட்டைகள்
டினா காபில், எகிப்து
இன்று எகிப்திய இலக்கியத்தின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?
2004ஆம் ஆண்டு எகிப்திய இலக்கியத்தின் முகம் முற்றிலும் மாறியது. அரசுப்படைகள் இடது சாரி எழுத்தாளர் அப்டல் ஹலிம் குவாண்டில் எழுதிய ‘அதிபருக்கு சிவப்பு அட்டைகள்’ (Red card for the President) நாவலை தடை செய்ததோடு அவரை கைது செய்து கடும் ஒடுக்குமுறைத் தாக்குதல்களுக்கு உட்படுத்தி பாலைவனத்தில் கை, கால்களை கட்டி வீசின. முபாரக்கிற்கு எதிரான புரட்சி வென்றபோது ‘அதிபருக்கு சிவப்பு அட்டைகள்’ நூல் மீண்டும் வெளிவந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது வரலாறு.
ஏனைய எழுத்தாளர்கள், தற்போதைய இலக்கிய அலை எப்படியாக உள்ளது?
இன்று கிராஃபிக் நாவல்கள் அதிகமாக வெளிவருவதைக் காணலாம். மாக் டி.எல்.சஃபியின் ‘மெட்ரோ’ அதற்கு ஓர் உதாரணம். அதுவும் முபாரக் ஒடுக்குமுறை காலத்தில் வெளிவந்ததுதான். ஆனால் விடுதலை ஜனநாயக சிந்தனைகளை உள்ளடக்கிய எதுவும் நாகரிகமற்ற தீவிரவாத சிவப்பிலக்கியமாகவே பார்க்கப்பட்டது. மெட்ரோவின் வெற்றியால் நாங்கள் பல கிராஃபிக் நாவல்களை இன்று வெளியிட்டு வருகிறோம்.
இந்த கைபேசி, இணைய யுகத்தில் அச்சாக்கப் புத்தகங்களின் வரவேற்பு அங்கு எப்படி உள்ளது?
எந்த நூலாக இருந்தாலும் குறைந்த பட்சம் 2000 பிரதிகள் அச்சிட முடிகிறது. இன்று நாங்கள் இலக்கிய தேசிய விருதுகளை கொண்டாடுகிறோம். புரட்சிக்கு முன்பு முபாரக் விருது என்று இருந்ததை இன்று நைல் இலக்கிய விருதாக மாற்றி இருக்கிறோம். புக்கர் விருதுபெற்ற பஹாதாஹர் எழுதிய ‘சன்செட் ஒயேஸிஸ்’ போன்ற நூல்கள் லட்சக்கணக்கில் அச்சாகி விற்பனை ஆகிறதே. எனவே எகிப்தைப் பொருத்தவரை அச்சாக்கப் புத்தகங்கள் மீதான ஈர்ப்பு குறைந்துவிடவில்லை.
பெண் பதிப்பாளர்கள் இன்று
ஈரானில் அதிகம்
பெடரிக் காலாத்பரி, ஈரான்
பெர்சிய இலக்கியம் எனப்படும் ஈரானிய வகைப்பாடு என்பது ஈரான் தேசத்தைக் கடந்த ஒன்று அல்லவா?
பெர்சிய இலக்கியம் என்பது உங்கள் தமிழ் இலக்கியம்போலவே 2000 ஆண்டு பழைமையானது. அது ஈரான், ஈராக், ககாசஸ், துருக்கி, தஜிகிஸ்தான் என்று பரந்துபட்டது. ஆப்கானிஸ்தானைக்கூட இதில் இணைக்க முடியும். எனவே பெர்சிய மொழியில் ஒரு நூல் வெளிவரும்போது 2 நாடுகளை அது சென்று அடைகிறது. மெசபடோமியா, அஸர்பைஜான், பால்கன் குடியரசு என்பன பெர்சிய மொழியின் தாக்கம் உள்ள பகுதிகளே.
உமர்கயலம், ரூமி போன்றவர்களை நாங்கள் அறிவோம். இன்று ஈரானின் முன்னணி எழுத்தாளர்கள் யார்?
நீங்கள் ஷாஹிரியார் மன்டானிப்பூர் பற்றி அறிந்திருப்பீர்கள். அவரது தணிக்கை செய்யப்படும் ஈரானிய காதல் கதை (Censoringan Iravian Love story) மிகப் பிரபலமான நாவல். உண்மையில் அது ஈரானில் தடை செய்யப்பட்ட நூல். ஈரானில் ஓர் எழுத்தாளராக வாழ்வது எத்தனை பெரிய போராட்டம் என்பதை இந்த நாவல் முன்வைக்கிறது. வலது சாரி தீவிரவாத அரசியலுக்கு எதிரான ஆகச் சிறந்த பிரதி அதேபோல சாடேக் ஹெடயாட் அவர் எழுதிய ‘தி பிளைண்டு அவுல்’ (The Blind Owl) ஈரானிய இலக்கியத்தின் திருப்புமுனை இந்த நாவல்.
ஈரானில் பெண் சமத்துவ இயக்கம் பற்றி, அதற்கும் இலக்கியத்திற்குமான தொடர்பு பற்றி சொல்லுங்கள்.
நீங்கள் டினா நயேரியின் ‘எ டீஸ்பூன் ஆஃப் எர்த் அண்டு சீ’ (A Teaspoon of Earth and sea) வாசிக்க வேண்டும். கடும் பெண் அடிமைத் சட்டங்கள் வலதுசாரி மதவாத வெறிக்கு எதிராக ஒரு பதினொரு வயதுப் பெண்ணின் மண உலகப் போராட்டங்களை விவரிக்கும் ஈரானிய போராட்ட நாவல். அதேபோல (Azar Nafisi) அஸார் நஃபிசி எழுதிய ‘ரீடிங் லொலிட்டா இன் டெஹ்ரான்’ (Reading Lolita in Tehran) ஈரானிய பெண்ணிய அரசியல் நாவல். நொபோக்கோவ் எழுதிய ரஷ்ய நாவல் ‘லொலிட்டா’வை ஏழு பள்ளி இறுதி ஆண்டு மாணவிகள் ரகசியமாக வாசிக்கிறார்கள். மதவெறி அரசு பெண்களை நடத்தும் யதார்த்தத்தை உணர்ந்து நம்மைக் கொதிக்க வைக்கும் எழுத்து.
2006ல் இசுலாமியப் பெண்ணிய அமைப்புகள் மதச்சார்பற்ற அமைப்புகள் மற்றும் இடதுசாரி பெண் அமைப்புகளுடன் இணைந்து ஹிஜாபுக்கு எதிரான வலதுசாரி வெறிச் சட்டங்களுக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் (One million resignature campation) தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு அடக்குமுறைகளுக்கு நடுவே பெண்ணியவாத எழுத்துக்கள் ஈரானில் அதிகரித்ததே உண்மை. இன்று எத்தனை தடை வந்தாலும் ஈரானில் பெண் புத்தகப் பதிப்பாளர்களே அதிகம். உலக நிர்பந்தங்களுக்கு அஞ்சி ஈரானிய அரசு. எங்களை இந்த அளவிற்கு (அயல்- பன்னாட்டு புத்தகச் சந்தையில் விட்டுவைத்திருப்பதே எங்கள் போராட்டத்தின் வெற்றிதான்.
புலம் பெயர்ந்தவர்களால்
மிளிரும் நவீன ஆங்கில இலக்கியம்
மவுரோ ஸ்பாக்நோல், இங்கிலாந்து.
2017ல் இலக்கிய நோபல் பரிசுபெற்ற கஸுவோ இஷிகுரோ (Kazuw Ishiquro) பிரித்தானிய இலக்கியவாதி என்றாலும் ஜப்பானியர் அல்லவா?
இன்றைய பிரித்தானிய ஆங்கில இலக்கியத்தில் பெரும்பாலான வெற்றிப் படைப்புகள் புலம் பெயர்ந்தவர்களால் எழுதப்படும் தன் அனுபவ எழுத்துக்கள். 1989இல் கஸுவோ தனது ‘திரிமெய்ன்ஸ் ஆஃப்த டே’ நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றார். இன்று சல்மான் ரூஷ்டி, நெய்ப்பால், டேவிட் மிச்செல் என புலம் பெயர்ந்தோர் பட்டியல் நீளம். பெண் எழுத்துக்களில் சாடி ஸ்மித் இவரது வொய்ட் டீத் (2000) புக்கர் பரிசு பெற்றது – ஜமாய்க்கா காரர்.
நோபல் இலக்கியப் பரிசு பெற்ற இலக்கியங்கள் பற்றி சொல்லுங்கள். அதிலும் 2000க்குப் பிறகு அதிக அளவில் பிரித்தானிய எழுத்தாளர்கள் நோபல் பெறுகிறார்களே?
2000மாம் ஆண்டுக்குப் பிறகு, வி.எஸ். நெய்ப்பால் (2001) ஹெரால்டு பிண்டர் (2005), டோரிஸ் லெஸ்ஸிங் (2007) மற்றும் கஸுவோ இஷிகுரோ (2017) என நான்கு பேர் பிரித்தானிய மண்ணில் இருந்து நோபல் பரிசை வென்றுள்ளனர். ஆனால் 2000க்கு முன் 1900 முதல் 1999 வரையில் நூறு வருடங்கள் ஆறு பேர்தான். இதற்கு காரணம் இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்ட இரண்டு ஆகச் சிறந்த மாற்றங்கள். வெறும் மேல்குடிகளின் சொகுசு இலக்கியப் பாதை தகர்க்கப்பட்டு சாதாரண மக்கள் கூலிகள் பெண்கள் குறித்த பிரதிநிதித்துவம் அதிகரித்தது. வெகுஜன வாசிப்பும் அதற்கான ஒட்டுமொத்த சமூக அக்கறையும் இணைந்தது. கூடவே ஆங்கிலம் என்பது அறுபதுக்கும் மேலான மூன்றாம் உலக நாடுகளின் இலக்கிய அடையாளமானது.

பிரித்தானிய புத்தகப் பதிப்பு என்பது விருதுகளை குறிவைத்து வெளிவருவதாக சொல்கிறார்களே?
இதை மறுப்பதற்கில்லை. காமன் வெல்த் எழுத்தாளர் விருது, சர்வதேச டப்ளின் இலக்கிய விருது, கார்னகியா விருது, கோஸ்டா அல்லது விட்-பிரட் விருது, ஆரஞ்சு பிரைஸ், குவீன்ஸ் கோல்டு மெடல் (கவிதை) மற்றும் புக்கர் பரிசு என்று ஆண்டு முழுதும் விருதுத் திருவிழாக்கள் உள்ளன. ஒரு பதிப்பாளர் இது போன்ற ஒன்றைப் பெற்றால் போதும், உலக கவனத்தை ஈர்த்துவிட முடிகிறது. புதியனவற்றை ஆதரிக்கும் பிரிஸிடல் பெஸ்டிவல் ஆஃப் ஐடியாஸ் புக் பிரைஸ் ஜனவரியில் தொடங்கும் சோமர்செட் மவுகன் (somerset Mougan) விருதுகள் வழங்கப்படுவதால் பதிப்பாளர்கள் நூலக ஆர்டர்கள் சந்தை என்பதோடு கூடுதலாக விருது அடிப்படையிலும் இயங்க வேண்டி வருகிறது. இது சிலசமயம் ஒரு சடங்காகி கேலிக் கூத்தாவது வேறு விஷயம்.
நவீன அராபிய இலக்கியம்
இடதுசாரி இலக்கியமே
ரானா கிட்ரிஸ், லெபனான்
லெபனானின் உள்நாட்டுப் போர்கள் 1975ல் தொடங்கி 1990 வரை தொடர்ந்தது. லெபனான் இலக்கியம் பலமொழிகளின் இலக்கியக் கொத்தாக மாறியதற்கு அது ஒரு காரணமா?
உண்மைதான். லெபனானின் மக்கள் இலக்கியம் பன்மொழித் தன்மை கொண்டது. 1923ல் ஆட்மன் அரசாட்சி வீழ்கிறது. லெபனான் பிரெஞ்சு மொழி நுழைகிறது. உதாரணமாக இடால் அட்னன், அற்புத நவீன நாவலாசிரியை தனது நூல்களை பிரெஞ்சு மொழியில்தான் எழுதினார். லெபனிய உள்நாட்டு யுத்தத்தின் அவலங்களை அவரது ‘சிட் மேரி ரோஸ்’ (sitt marie Rose) பேசியது.
பலமொழி கலப்பு எப்படி ஏற்பட்டது? இன்று மீண்டும் அராபிய மொழி மறுமலர்ச்சி பற்றிப் பேசுகிறார்களே?
சிரியா, துருக்கி என்று பல நாடுகளில் இன்று லெபனானின் குரல் ஒலிக்கிறது. சிந்துபாத் கதாபாத்திரம் சென்று அடையாத நாடு என்று ஒன்று இருக்க முடியுமா? எங்கள் நாட்டின் சிவில் யுத்தம் பல லட்சம் பேரை அகதிகளாக்கி நாட்டைவிட்டு வெளியேற்றியது. அவர்கள் சிவில் யுத்த சந்ததி (civil war generation) என்றே அழைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் பிரான்ஸ் முதல் இங்கிலாந்து வரை சென்று அகதிகளாக தங்கிவிட்டவர்கள். அவர்களது குழந்தைகள் பிரான்சிலோ, அயர்லாந்திலோ பள்ளிக் கல்வி தரப்பட்டவர்கள். எனவே அந்த சந்ததி எழுத வந்தபோது லெபனானின் இலக்கியம் அராபிய பிரெஞ்சு ஆங்கில இலக்கியமாக மாறிப் போனது.
நாற்பது சதவிகித மக்கள் நாட்டைவிட்டு பிறநாடுகளுக்கு குடியேறும்போது இப்படி நடப்பது இயற்கையானதே. இன்று நவீன எழுத்தாளர்கள் பலர் பிரெஞ்சு மொழியும் ஆங்கில மொழி வல்லமையும் நிறைந்தவர்கள். ஆனால் அவர்கள் அராபிய மொழியிலேயே பிடிவாதமாக எழுதுகிறார்கள். பெய்ரூட் மட்டுமல்ல, லெபனான் முழுவதுமே. இலக்கியக் குழுக்கள் உருவாகி இன்று கதை மேடை (Story Stand) நடத்துகிறார்கள். அராபிய மொழியில் கதைசொல்லல் ஓர் அரசியல் சித்தாந்த வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
கலீல் கிப்ரானை நாங்கள் அறிவோம். லெபனானின் ஏனைய இலக்கிய ஜாம்பவான்கள் பற்றிக் கூறுங்கள்.
கலீல் கிப்ரானின் ‘தி பிராஃபட்’ The Prophat உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. அதேசமயம் லெபனானின் எலியாஸ் கவுரி, அமீன் மாலோஃப் என்று பலரை குறிப்பிடலாம். அல்-ஷாயிக் போன்றவர்களும் உண்டு. அல்ஷாயிக் முக்கிய லெபனிய எழுத்தாளர். அவரது ‘தி ஸ்டோரி ஆஃப் ஸாரா’ (The story of Zara) முதலில் 1980இல் அராபிய மொழியில் எழுதப்பட்டது. பிறகு 1980ல் ஆங்கிலத்தில் வெளியானது. ஆனால் அல்ஷாயிக் லண்டனில்தான் வசித்துவருகிறார். இப்படியும் பலர் உண்டு.
லெபனானில் நாடக இலக்கியம் தனித்துவமான ஒன்றாகப் பேசப்படுகிறதே?
பாசிஸ, சிபோனிய எதிர்ப்பு அரசியலுக்குள் லெபனானின் மனித நேய சிந்தனையாளர்கள் தள்ளப்பட்டபோது பாசிசவெறி அடக்குமுறைக்கு எதிராக உருவான இடது சாரி அரசியலின் அடையாளமே லெபனானின் நாடக இலக்கியப் பாய்ச்சல். அராபிய விடுதலை இயக்கங்களின் குரலை வீதிக்கு எடுத்துச் சென்ற எழுச்சிகர மக்கள் பங்களிப்பு என்று லெபனான் நாடக இயக்கம் போற்றப்படுகிறது.
இடதுசாரி சிந்தனையாளர் தோழர் உமர் ஃபக்குரியால் லெபனானின் அல்-டாரிக் இடது இதழ் இரண்டாம் உலக யுத்த காலத்தில் துவங்கப்பட்டு இன்றுவரை வெளிவருகிறது. சிரியன் லெபனீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, 1964ல் லெபனான் கம்யூனிஸ்ட் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டபோது சோஷலிஸ்ட் நாடக இயக்கம் வலுவடைந்தது.
சிரியா லெபனானை ஆக்கிரமிக்க முயன்ற 2005ல் செடார் புரட்சியை அரங்கேற்றியவர்கள் இடதுசாரிகள். இன்றைய உலகச் சூழல் பெரும் அச்சுறுத்தல்களைக் கொண்டது. பாசிச வலது பலபெரும் கொடிய இன்றைய சூழலில் சிவப்பிலக்கியமே உலக விடுதலை இலக்கியம் என்பதே உண்மை.