தொகுப்பு: து.பா. பரமேஸ்வரி
புக்டே இணையதளத்தில் பதிவாக்கம் பெற்ற படைப்புகள் 50 இலட்சம் பார்வையாளர்களின் கவனம் பெற்று சாதனை நிகழ்த்தியதைக் கொண்டாடும் வகையில் புக்டே படைப்பளிகளை உற்சாகப்படுத்தும் விதமாக புக்டே மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து படைப்பாளிகளுக்கு பரிசு வழங்கும் விழா நிகழ்த்தியது. இணையதள இதழ்களில் வெகுஜன மதிப்பையும் பாராட்டையும் ஆதரவையும் பெற்று சில வருடங்களிலேயே ஜனரஞ்சக சாதனை புரிந்த புக்டே இணையதள இதழின் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் உற்சாகப்படுத்தும் நோக்கில் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் படைப்பாளிகளை ஒன்று திரட்டி அங்கீகரிக்கவும் புக்டே குடும்ப உறுப்பினர் என்று தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து பரஸ்பர நட்பு பாராட்டவும் ஏற்பாடு செய்யப்பட்ட புக்டே எழுத்தாளர்கள் கவிஞர்களின் சந்திப்பு சென்ற சனிக்கிழமை (20.01.2024) அன்று புத்தகக் காட்சியின் சிற்றரங்கில் அழகிய கலை வடிவம் கொண்ட விருதும் ஆங்கில மருத்துவத்துறையில் நிகழ்ந்த குரூரங்கள் படுகொலைகளைப் பற்றிப் பேசும் ‘கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம்’ என்கிற நூல் பரிசுடன் புத்தகக் கூப்பன் கொண்ட அன்பளிப்புடன் படைப்பாளர்களைப் பாராட்டியது புக்டே குழு.
எழுத்தாளர் பாக்கியம், கவிஞர் இந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. இராமகிருஷ்ணன்,எழுத்தாளர் ரமேஷ், எழுத்தாளர் எஸ்.பி.வேணுகோபால், ‘புதிய புத்தகம் பேசுது’ ஆசிரியர் நாகராஜன், கவிஞர் நா.வே. அருள் போன்ற இலக்கிய ஆளுமைகள் தங்களின் சொற்பொழிவுகளின் ஊடாக, அனுபவ உரையின் வழியாக மேடையை அலங்கரிக்க புக்டே படைப்பாளிகளுக்கு பரிசு வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது. எழுத்தாளர் தோழர் பாக்கியம் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
தமிழ்த்தாய் வாழ்த்தும் கவிஞர் நா. வே.அருள் அவர்களின் வரவேற்புரையும்
எழுத்தாளர் பிரியா ஜெயகாந்த் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. கவிஞர் நா.வே அருள் அவர்களின் வரவேற்புரையுடன் விருந்தினர்களின் அறிமுகமும் அடையாளமும் பார்வையாளர்களுக்குப் புதிய உற்சாகத்தைத் தந்தது. புக்டே இணையதள பதிவிறக்கம் செய்யும் பணியை ‘புதிய புத்தகம் பேசுது’ இதழ் குழுவின் செயல்பாட்டாளர் தோழர் ஜெயசீலி அவர்களும் தூத்துக்குடி வெள்ள நிவாரணப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தீவிரமாக செயல்பட்டு பேரிடர் கால மீட்பு உதவி செய்த சமூக ஆர்வலத் தம்பதியான திரு.சுரேஷ் மற்றும் திருமதி.டயானா இம்மூவரும் படைப்பாளிகள் அனுப்பிவைக்கும் படைப்புகளை ஒருங்கிணைத்து புக்டே இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உலக அளவில் வெளிச்சப்படுத்தியும் இணைய வழியாக மக்களிடம் கொண்டுசேர்க்கும் இலக்கியப் பணிகளைச் செய்தும் வருகிறார்கள் என்று பாராட்டிய தோழர் அருள், “இவர்களின் உதவியும் படைப்பாளிகளின் ஆதரவரும் ஒன்று சேர்ந்து அனைவரின் பார்வையையும் புக்டேவின் பக்கம் பதித்து வருகிறது” என்பதை பெருமிதத்துடன் பகிர்ந்தார்.
எழுத்தாளர் ரமேஷ் அவர்களின் உரை
அடுத்ததாக புக் டே ஆசிரியர் குழுவிலிருந்து தோழர் ரமேஷ் அவர்கள் உரையாற்றினார். படைப்பாளிகள் அனைவரையும் இங்கு ஒன்று சேர்த்து படைப்புகளை நிகழ்த்த வேண்டும் என்று அழுத்தமாகப் பதிவு செய்த தோழர் ரமேஷ் அவர்கள்.. புக்டே குழு படைப்பாளிகளை சம நோக்கில் அணுகி அவர்களின் படைப்புகளை இணைய தளத்தில் சமமாக பதிவுவிறக்கம் செய்து வருவதை தோழரின் உரை நமக்கு புலப்படுத்தியது.
படைப்பாளிகளின் அறிமுக நிகழ்வு
தோழர் ரமேஷ் அவர்களின் உற்சாகமான உரைக்குப் பின் ‘புதிய புத்தகம் பேசுது’ இதழ் ஆசிரியர் மற்றும் பாரதி புத்தகாலயம் பதிப்பகப் பொறுப்பாளர் தோழர் நாகராஜன் அவர்கள் பரிசு பெற வந்திருந்த புக்டே படைப்பாளிகள் அனைவரையும் தங்களை அறிமுகம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். தோழரின் அறிவுறுத்தலில் இளம் படைப்பாளிகள் பேராசிரியர்கள், முனைவர்கள் என சாமான்யர் முதல் பல்வேறு பெருந்துறை சார்ந்த அறிஞர்கள் வரை தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். புக்டே படைப்பாளிகளின் அறிமுகம் பிற படைப்பாளிகளையும் பார்வையாளர்களையும் வியக்க வைக்கும் வண்ணம் அவர்களின் அடையாளங்களும் தனித்துவத் திறன்களும் அமைந்திருந்தன. இந்த அறிமுகம் பார்வையாளர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியது. புக்டேவில் தொடர்ந்து படைப்புகள் படைத்து வரும், தொடர்கள் எழுதி வரும் படைப்பாளிகளின் எழுத்துக்களை நூல்களாக அச்சிட புக்டே உதவியதையும் ஊக்கப்படுத்தியதையும் படைப்பாளிகளின் வழியாக அறிய முடிந்ததில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க புக்டே எடுத்துக்கொண்டு வரும் சிரத்தை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. முதிர்ந்த படைப்பாளிகளின் படைப்புகளையே பதிப்பிடும் பதிப்பகத்தார் மத்தியில் இளம் எழுத்தாளர்களின் படைப்புக்களும் மக்கள் மத்தியில் அறியப்பட வேண்டும்; அவர்களின் எழுத்துக்கள் நூல்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வரும் புக்டே இதழின் ஆசிரியக் குழு உறுப்பினர்களை இந்தத் தருணத்தில் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
எழுத்தாளர் வேணுகோபால் அவர்களின் உரை
படைப்பாளிகளின் அறிமுக உரைக்குப் பின் சிறுகதை எழுத்தாளர் தோழர் வேணுகோபால் அவர்கள் இலக்கியம் குறித்த தனது ஆழமான கருத்துக்களை அவையோரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
“இலக்கியம் எப்போதும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்” என்கிற இலக்கிய சமூகத்தின் பொதுவெளிக் கருத்தை மேடையில் பதிவு செய்தார். புக்டே இணைய இதழின் வாசக பார்வையாளர்களின் எழுத்துத் திறமைகளை வியந்து பேசிய தோழரின் உரை படைப்பாளிகளை புளகாங்கிதம் கொள்ளச்செய்தது. மனித வாழ்க்கையே தத்துவம் என்கிற கருத்தை முன் வைத்து தனது உரையை அடுத்தகட்ட நகர்வுக்கு அழைத்துச் சென்றார். பசி, பிணி, மூப்பு, துன்பம் இந்த நான்கும் கொண்டதே யாவருக்குமான வாழ்க்கை என்கிற பௌத்த சித்தாந்தத்தின் அடிப்படையில் வாழ்தத்துவத்தின் சாரத்தைப் பார்வையாளர்களுக்கு ஊட்டினார்.
மேலும் புக்டே இணையதளத்தின் சிறுகதைப் படைப்புகளில் 350க்கும் மேற்பட்ட கதைகளை வாசித்துள்ளதாகக் குறிப்பிட்ட தோழர் புக்டே வில் வெளிவந்த கதைகளை பிறிதொரு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டால் அவற்றை அடையாளங்காணும் அளவிற்கு புக்டே வாசிப்புப் பிரியராக, தான் இருந்து வருவதை பெருமையுடன் பகிர்ந்து கொண்டார். ‘பிரியாணி’ சிறுகதை பிரியாணி விற்கும் வியாபாரிகளின் பாடு வாழ்க்கையைக் கண்கூடாகக் காட்சிப்படுத்துவதாகத் தனது புக்டே சிறுகதை வாசிப்பின் ஒரு துளி அனுபவத்தைப் பகிர்ந்து படைப்பாளிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். ‘விமர்சனம் மட்டுமே படைப்பாளியை உருவாக்கும் என்பது இலக்கியதளத்தின் எழுதப்படாத விதி. அது நேர்மறையோ, எதிர்மறையோ… அதேபோல் நாம் எழுதுவதை, வாசிப்பதைவிட அடுத்தவர் எழுத்தை வாசிப்பதே புதிய உத்வேகத்தை உண்டு பண்ணும்’ என்பதைச் சுட்டிக்காட்டிய தோழர் வேணுகோபால் பிற படைப்பாளிகளின் எழுத்தையும் வாசிக்க அறிவுறுத்தி புக்டே வாசிப்பின் தனது ஆதரவைத் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.
எழுத்தாளர் பாக்கியம்
புக்டே ஊடகம் குறித்தும் இணைய அச்சு ஊடகங்களின் செயற்கரிய பங்கு குறித்தும் பேசிய எழுத்தாளர் பாக்கியம், “படைப்புகள் புத்தகமாக அச்சிடப்படுவதும் இணையதளத்தின் அச்சு ஊடகத்தில் பதிவாவதும் எழுத்துப் பிரதியாவதும் சாமான்யமல்ல, மிகப் பெரிய சாதனை. இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் இணைய வழியான பத்திரிகைகள் வெளி வருவதும் அதற்கான வாசிப்பாளர்கள் தொடர்வதும் இணையவழி வாசிப்பு பெருகி வருவதும் இணைய வழி எழுத்தாளர்கள் உருவாகிக்கொண்டு இருப்பதும் இலக்கியத்துறையின் நல்ல முன்னேற்றம் என்றும் சாதாரண மக்கள், எளிமையான பின்னணியில் வந்தவர்கள் மெத்தப் படித்த அறிஞர்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி எழுத வைப்பதும் அதற்கான ஊக்கத்தைத் தந்து அவர்களை எழுதத் தூண்டியும் வருகிறார்கள் இணையவழி இதழாசிரியர்கள். தயக்கமின்றி எழுதும் ஆர்வத்தை ஊக்குவித்தும் எழுத அச்சப்படும் இளம் எழுத்தாளர்களை எழுத வைக்கும் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றன இணையவழி அச்சு ஊடகங்கள்” என்கிற ஊடகப் படைப்பு பதிவிறக்கங்களின் மேன்மையை பாராட்டிப் பேசினார் தோழர் பாக்கியம்.
இதுபோன்ற சந்திப்புகள் அவ்வப்போது நடத்துவதினால் ஒரு குடும்ப உறவுகளாக இணைந்து எழுத வைக்கும் முயற்சியாகவே பார்ப்பதாகக் குறிப்பிட்டார். கதை, கவிதை கட்டுரை என அனைத்துத் தளங்களிலும் படைப்பாளிகள் பங்கேற்று அவர்களை எழுத வைக்கும் களமாக, மிகப்பெரிய பொக்கிஷமாக புக்டே இருப்பதைf் குறிப்பிட்டுக் கூறினார். முனைவர் முதற்கொண்டு சாதாரணத் தொழிலாளி வரை அனைத்து எழுத்தாளர்களுக்குமான எளிமையானவர்களின் தளமாக புக்டே இருக்கிறது. குரலற்றவர்களின் குரலாக புக்டே செயல்பட்டு வருகிறது என்பதை பார்வையாளர்களுக்குக் கவனப்படுத்தினார் தோழர் பாக்கியம். “ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்களின் நூல் அறிமுகம் என்கிற முன்னெடுப்பின் வழியாக ஆயிரம் எழுத்தாளர்கள் உருவாக வேண்டும் போலவே ஆயிரம் நபர்கள் எழுதக் கூடிய தளமாகவும் புக்டே மாற வேண்டும்.அனைவரையும் ஒரு புள்ளியில் இணைக்கும் தளமாக புக்டே இருந்து வருவதும் புக்டே வழியாக ஏராளமான முற்போக்குப் படைப்புகளும் படைக்கப்பட்ட வேண்டும்” என்கிற விருப்பத்தையும் மேடையில் பதிவு செய்தார்.
ஏதோவொரு தளத்தில் மட்டுமே புத்தகமாக பத்திரிகைப் படைப்புகளாக பொதுவெளியில் வெளிச்சப்படும் சூழ்நிலையில் இந்த இணைய வழிதளம் படைப்பாளிகளை அனைத்துத் தளங்களையும் தொட்டுப்பார்க்க வைக்கிறது. நமது சாதாரண படைப்புகள் மக்கள் மத்தியில் கவனப்படுமா என்கிற தயக்கத்தை நீக்கி, அனைவரின் படைப்புக்களும் பாரபட்சமின்றி வெளிவர உதவும் நோக்கமே புக்டே வின் முக்கிய நோக்கு என்பது விளங்குகிறது. இன்று புத்தகம் போடும் அளவிற்கு இளம் எழுத்தாளர்கள் உருவாகி, தங்களுக்கான ஒரு தடத்தை இலக்கியதளத்தில் உருவாக்கியுள்ளார்கள் என்பதே புக்டே விற்கு கிடைத்த வெற்றி என்பேன் நான்”.
தோழர் நாகராஜன் அவர்களின் உரை
‘ஐம்பது லட்சம் வாசகர்களைத் தொட்டு விட்டது புக்டே’ என்பதை மகிழ்ச்சி பொங்க பகிர்ந்த தோழர் நாகராஜன் புக்டே படைப்பாளிகளில் ஐம்பது சதவிகிதம் பெண் படைப்பாளிகள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள் என்றும் பெண் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் நூல்கள் அதிக அளவில் வெளியிடப்படுவதையும் அதிலும் POD முறையில் பத்தைம்பது நூல்கள் மட்டும் போடுவதில் விருப்பமில்லாமல் அச்சு பிரதியாகவே நூல்களைக் கொண்டுவருவதாகவும் பகிர்ந்தார் தோழர் நாகராஜன்.
தொடர்ந்து அவரின் உரை வாசிப்பின் மகத்துவத்தை நோக்கி நகர சத்தியமங்கலம் போகும் வழியில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் வாசிப்பு முகாம் நடத்தப்பட்டதும் அதில் 60% சுற்று வட்டார ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றதையும் குறிப்பிட்டிருந்தார், “வாசிப்பு என்கிற இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் அதற்கு அனைவரும் ஒன்றுகூடி வாசிக்க வேண்டும். மேலும் புக்டேவின் வாசகராகிய நாம் எதை வாசித்தாலும் அந்தப் படைப்பு குறித்து நமது கருத்தை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்” என்பதையும் வலியுறுத்தினார் தோழர். “வாசிப்பு இயக்கத்தை புக்டே வழியாகக் கட்டமைப்போம்” என்று உரத்துக் குரல் கொடுத்துச் சென்றார் திரு.நாகராஜன் அவர்கள்.
ஜனரஞ்சகக் கவிஞர் இந்திரன் அவர்களின் உரை
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட கவிஞர் இந்திரன் “அவர்கள் இந்த அரங்கத்திற்கு சிற்றரங்கம் என்று பொதுவாகப் பெயர் வைத்து விட்டார்களே தவிர, இதுவொரு பேரரங்கம் என்று மனம் திறந்து நிகழ்வின் ஏற்பாட்டைப் பாராட்டிப் பேசினார். காரணம் இந்த அரங்கத்தில் அதிகப்படியான படைப்பாளிகள் பரிசு பெற வந்திருப்பதால் சிற்றரங்கம் பேரரங்கமாகி இலக்கிய மணம் கமழ்வதைச் சுட்டிக்காட்டி அவ்வாறாக குறிப்பிட்டார் கவிஞர் என்று உணரமுடிகிறது. மேலும் ரிக் வேதம் குறித்து பல கருத்துக்களைப் பகிர்ந்த தோழர் இந்திரன் அவர்கள் ரிக் வேதம் குறிப்பிட்ட கடவுள்கள் நமது வழிப்பாட்டில் இன்று இல்லை” என்பதை அறுதியிட்டுக் கூறினார்.
‘NOBLE THOUGHTS COME FROM EVERYSIDE’ என்கிற மார்க்சிம் கார்க்கி அவர்கள் பதிவு செய்த வாசகத்தைக் கோடிட்டு ‘நற்சிந்தனை வாசிப்பின் வழியாக மட்டுமே துளிர்க்கும்’ என்று உறுதியாகக் கூறினார். தனது புத்தக வாசிப்பு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு பலவிதங்களில் கடத்தினார்.சுமேரிய நாகரிகத்தை அடையாளப்படுத்தி புத்தக வாசிப்பின் அத்தியாவசியத்தை விளக்கிய கவிஞர் சுமேரிய நாகரிக காலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்தான் அதிகாரத்தைக் கைகொண்டார்கள். ஆக, புத்தக அறிவு ஆட்சிபீடத்திற்கு மட்டுமின்றி சாமான்ய மனிதர் வாழ்விற்கும் மிக மிக அவசியமாகிறது என்பதை ஆணி அடித்தாற்போல பறைசாற்றினார்.
“புத்தக வாசிப்பு அறத்தை உணர்ந்து கொண்டு இன்றைய அடக்குமுறை அதிகார வர்க்கம் கேள்விக்கேட்கும் சாமான்யன் குரல்வளையை இறுக்க அதிகாரத் தடை செய்ய வாசிப்பை தடை செய்து வருகின்றனர்” என்கிற சமகாலப் பேரிடரை பார்வையாளர்களுக்கு புரியும்படி எடுத்துக் கூறினார். ஆக, வாசிப்பே சமூகத்தை மாற்றும் அருமருந்து, அறப்பணி என்பதை தோழரின் உரை உணர்த்தியது.
கார்ல் மார்க்ஸும் வாசிப்பும்
அதேபோல் வாசிப்பில் உருவாகிய மார்க்சிய போராளி கார்ல் மார்க்ஸ் புத்தக வாசிப்பின் வழியாகவே உலக அவலத்தை கண்ணுறும் கவனம் பெற்றார். உலகத்தின் சுயநலச் சிந்தனையை பொதுப்பார்வையாக்கிய பெருமைக்குரிய மார்க்ஸ் வாசிப்பில் கரை கண்டவர் என்பது மார்க்சின் வாழ்க்கை வரலாற்றின் குறிப்பிலிருந்து இந்திரன் அவர்கள் சுட்டிக்காட்டிப் பேசியதில் அறியமுடிந்தது. வாசகனிடமிருந்து வழிகாட்டப்பட்டவன்தான் கார்ல் மார்க்ஸ், புத்தகத்தைச் சாப்பிடும் ஒரு இயந்திரம் கார்ல் மார்க்ஸ் என்பதையும் பிரிட்டிஷ் நூலகத்தில் 38 ஆண்டுகள் இருந்து வாசிப்பின் வழியாக அறிவுக்கூர்மையும் உலகப் பொதுவுடைமைத் தெளிவும் பெற்றவர் என்பதையும் கவிஞரின் உரை அறியப்படுத்தியது.
சிறு பத்திரிகையின் முக்கியத்துவம்
ஆரம்ப காலங்களில் வெளிவந்த சிறு பத்திரிகைகள் குறித்த பல விஷயங்களை தனது உரை வழியாகப் பகிர்ந்தார், எழுத்தாளர் சுந்தர இராமசாமி. இலக்கியதளத்தில் இருந்துவந்த காலங்களில் சிறு பத்திரிகைகளின் ஜனரஞ்சக முன்னேற்றம் என்பது கெட்ட வார்த்தை என்று சிறு பத்திரிகை குறித்து பகிரங்கமாக பதிவு செய்த எதிர் கருத்திற்கு தனது வருத்தத்தை இந்த உரை வழியாகத் தெரிவித்தார். சிறு பத்திரிகையின் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
புக்டே என்பது நாளொன்றின் வாசிப்பு
“எழுத்து என்பது கடைசி மனிதனைத் தொடுவது” என்று வலியுறுத்திய தோழர் “புக்டே என்றால் படிக்கக்கூடிய நாள். ஆக, ஒவ்வொரு தினமும் புக்டேவாக இருக்க வேண்டும்” என்று விளக்கிய போது இதுவரை புக் டே என்கிற பெயர் தலைப்பு குறித்த பிரக்ஞையற்ற படைப்பாளிகளுக்கு இந்திரன் அவர்களின் விளக்கம் புதுமையானது. புக்டே உலகத்தை நோக்கிப் பயணப்படுகிறது, பிற பத்திரிகை வாசிப்பதற்காக வெளிவரும் போது புக்டே இளம் எழுத்தாளர்கள் முதல் மூத்த எழுத்தளர்கள் வரை எழுத வைக்கிறது. மற்றவர்களை எழுத வைக்க பத்திரிகை நடத்துகிறார் நாகராஜன் தோழர்” என்று மனம் திறந்து பாராட்டினார் கவிஞர்.
வாசிப்பு என்பது கலகச் செயல்பாடு
“எழுத்தாளன் என்பவன் மக்களிடமிருந்து புறப்பட்டு வருபவன். வரலாறுகளுடன் பயணப்படப் போகிறவன்தான் எழுத்தாளன்” என்ற எழுத்தாளர் குறித்த இந்திரன் அவர்களின் ஆழமான நம்பிக்கையும் கருதுகோளும் அங்கீகரிக்கப்படாத பல அறிமுக எழுத்தளர்களுக்கும் கூட புதிய உத்வேகத்தை ஊட்டியது.
“பெண்கள் வாசிக்கக் கூடாது என்று ஆங்காரம் காட்டும் இலக்கிய சமூக விலக்கம் கொண்ட நபர்களுக்கு வாசிப்பு என்பது கலகச் செயல்பாடு, எழுதுவது என்பது சமூகச் செயல்பாடு” என்று சம்பட்டி அடித்தாற்போல பதிலடி கொடுத்தார்..
கவிஞர் நா.வே அருள் அவர்களின் அரசியல் கவிதை
கவிஞர் நா.வே. அருள் அவர்களின் படைப்புகள் குறித்தும் சில வார்த்தைகள் பகிர்ந்த தோழர் “அரசியல் கவிதைகள் என்றாலே கவிதைப் புலத்திலிருந்து விலகி அணுக வைக்கும். ஆனால் கவிஞர் நா.வெ. அருள் அவர்கள் தனது கவிதைகளில் அரசியலை இணைத்தவர்” என்று பாராட்டி அருள் தோழரின் கவிதையொன்றை மேடையில் சுட்டிக்காட்டிப் பேசினார்.
வாசிப்பும் எழுத்தும்
சமூகத்தின் வாசிப்பு குறித்தும் எழுத்து குறித்தும் நிகழ்ந்து வரும் பல சர்ச்சைகள் பற்றி குறிப்பிட்டுப் பேசிய இந்திரன் அவர்கள், சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற ஓர் எழுத்தாளனை ANTIBIOLOGICAL ACTIVITIST என்று குற்றம் சாட்டப்பட்டதைக் கண்டித்துப் பேசினார். “BIOLOGICAL ACTIVITY இல் அறிவுத் தேடலும் முக்கியம். வாசிப்பும் எழுத்தும்கூட BIOLOGICAL ACTIVITY” தான் என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார்.
வாசகனின் மாறுபட்ட பார்வை படைப்பின் வளம்
வாசிப்பு மூன்று தளங்களில் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட இந்திரன் அவர்கள் வாசக மைய செய்பாடுகளைச் செய்பவனே எழுத்தாளன் என்கிற புரிதலை கவிஞரின் உரை ஏற்படுத்தியது. மேலும் ஒவ்வொரு நூல் குறித்த வாசகரின் மாறுபட்ட பார்வை மிக முக்கியம். ஒரேபோல ஒரு படைப்பை அணுகுவதைவிட பல கோணங்களில் படைப்புகள் பரிணமிப்பதே அந்தப்படைப்பு வளர்ச்சி பெறும். பன்முக அர்த்த உற்பத்திகளைச் செய்பவன்தான் வாசகன். செய்தும் வருகிறான் என்று வாசகனின் வாசிப்புக் கலை நுட்பத்தை பார்வையாளர்களுக்கு எடுத்துக்கூறிய விதம் கதவடைத்துக் கிடக்கும் பல மனங்களை வாசிப்பின் பக்கம் நிச்சயம் நிற்க வைக்கும் என்கிற நன்னம்பிக்கையை துளிர்த்தது.
‘தார்சாலை’ என்ற தனது கவிதையொன்றை மேற்கோடல் செய்த தோழர் சிவனையும் தார்சாலையையும் ஒப்பிட்டு நகைச்சுவையாக எழுதப்பட்ட கவிதை என்றும் அதற்குப் பின்பாக பல அரசியல் புரிதல் உள்ளதையும் சுட்டிக்காட்டினார். இந்தக் கவிதையை மூன்று ஆளுமைகளிடம் வாசித்து கருத்து தெரிவிக்க வழங்கிய போது இந்தக் கவிதை குறித்த மூன்று ஆளுமைகளின் பார்வை முற்றிலுமாக வித்தியாசப்பட்டதும் கவிதையின் உட்கருத்தைத் தாண்டி வெவ்வேறு புரிதல்களை ஒவ்வொரு வாசகருக்குள்ளும் உண்டாக்கியதைக் கண்டு வியந்ததாகத் தெரிவித்தார்.
“ஒரு படைப்பாளனின் படைப்பின் வளர்ச்சி பல தரப்பட்ட பார்வையின் அணுமுறையிலிருந்து கூடுதல் செறிவைப் பெறுகிறது என்பதும் படைப்பாளி தனது படைப்புகள் வெளிவருவதைக் காட்டிலும் தனது படைப்புகள் குறித்த வாசகப் பார்வைக்கும் கருத்திற்கும் தான் அகமகிழ்கிறான் என்பதும் விற்பனையைவிட வாசக கவனம் மற்றும் மாறுபட்ட கோணங்கள் படைப்பாளியையே உற்சாகப்படுத்தும், வாழ்நாள் முழுக்க அவர் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும் என்பதையும் இந்திரன் அவர்களின் உரை நமக்கு உணர்த்தியது. அவ்வாறாக பன்முகங் கண்ட வாசிப்பு அனுபவமே வாசிப்பின் தளத்தை விரிவடையச் செய்யும்” என்பதையும் இறுதியாக வலியுறுத்தினார் கவிஞர்.
இலக்கியத்தில் கூகுளின் நன்மை தீமை
அடுத்து இன்றைய 2K kids இன் கதாநாயகனான கூகுள் குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி நேர்மறை நிலையையும் சில நேரங்களில் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துவதை இலக்கியம் எதிர்கொள்ளும் விளைவுகள் சார்ந்த தனது கருதுகோள்களை முன்வைத்தார். “கூகுள் என்கிற இணையவழித் தேடல் இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமாகிறது. இருந்தும் இலக்கியத்தைப் பொருத்தவரை கூகுள் பயன்பாடு ஆசிரியர்களின் மரணத்தை நிகழ்த்தும் வேளையில் வாசகரின் உயிர்ப்பும் அங்கு நிகழ்ந்து வருகிறது. ஆக, கூகுள் பயன்பாடு எழுத்தாளர்களுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தியும் கற்றல் தேடலில் ஈடுபடும் வாசகருக்கு வாசிப்பை எளிமைப்படுத்தியும் இரண்டு விதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் சாதனமாக இருந்து வருகிறது.
ஒரு நூலாசிரியர் எழுதிய நூல்களை வாசகன் எந்தவித சிரத்தையுமின்றி கூகுளின் வழியாக வாசித்து விடுகிறான். நூல் பயன்பாடும் நூலாசிரியரின் உழைப்பும் அங்கு மரணிக்கிறது” என்பதையே இந்திரன் அவர்கள் சுட்டிக்காட்டி வருந்திக் கூறிய போது எழுத்தாளரின் இடத்திலிருந்து கூகுள் பயன்பாட்டின் விளைவுகளை யோசிக்க வைத்தது.
எழுத்து என்பது சமூக நடவடிக்கை என்கிற தனது கருதுகோளுக்கான விரிவாக்கத்தை எடுத்துக் கூறிய கவிஞர் அண்ணல் அம்பேத்கரின் வரியொன்றை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
‘EDUCATE ORGANISE AGITATE’ என்று முழங்கும் அம்பேத்கர் கல்வி கிளர்ச்சி முறைப்படுத்தலின் அவசியத்தை விளக்கிக் கூறி தனது இலக்கியம் சார்ந்த புரிதலையும் கருதுகோள்களையும் சிந்தனைகளையும் பார்வையாளர்களிடம் பகிர்ந்தது வாசிப்பு குறித்த பன்முகப் பார்வையின் சமூக விளைவுகளை அறிய உதவியது.
மிகச் சிறந்த தகவல்சார் பேருரையாகவே கவிஞர் இந்திரன் அவர்களின் உரை பரிசு விழாவின் முக்கிய மணித்துளிகளை இட்டுத் தந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்களின் உரை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சிறந்த வாசிப்பாளர், களச்செயல்பாட்டாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் வாசிப்பின் வழியாக உலகத்தையே புரட்டிப் போட்ட ஆளுமைகளின் சரிதையுடன் அடுத்ததாக களம் இறங்கி தனது உரையை மேடையேற்றினார்.
பாரதி புத்தகாலயம் துவங்கிய காலத்தின் நினைவுக் கமழ்தலில் தனது உரையை ஆற்றிய இராமகிருஷ்ணன் அவர்கள் “புக்டேவுடன் இணைந்து பாரதி புத்தகாலயம் துவக்கி வைத்த இந்த வாசிப்பு இலக்கை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று முழங்கினார். தன்னை எழுத்தாளர் என்று குறிப்பிட்ட தோழர் பாக்கியம் அவர்களின் அறிமுக உரையைச் சுட்டிக்காட்டி “தான் ஓர் எழுத்தாளன் அல்ல, திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் விமர்சகர் மற்றும் அமைப்பு சார்ந்த விஷயங்களை செயல்முறைப்படுத்தும் கட்சியின் களச்செயல்பாட்டாளர்” என்று தெரிவித்தார்.
எழுத்தாளர்களை உருவாக்கும் தளமாக புக்டே இருந்து வருவதைக் குறிப்பிட்ட தலைவர், எழுத்தாளர்கள் எதிர்கால உலகை சிருஷ்டிப்பவர்கள் என்றும் எழுத்தாளர்களை படைப்பின் பிரம்மாவாக உருவகப்படுத்தியது இந்த உலகை ஆட்டிப்படைக்கும் தீய சக்திகளுக்கு எதிராக ஏந்தப்படும் ஆயுதங்களாக எழுத்தாளனின் பேனாவும் புரட்சிக் குரலும் உள்ளன என்பதையுணம் அறிய முடிகிறது.
வாசிப்பின் வழிவந்த ஆளுமைகள்
லெனின் வாசிப்பு இலக்கியம் குறித்த தனது கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த தோழர், லெனின் நூற்றாண்டு குறித்து பல விஷயங்களைப் பார்வையாளர்களிடம் பகிர்ந்தார். “லெனின் வாழ்ந்த காலங்களில் வாசிப்பிற்கு அவர் அளித்து வந்த முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். 15 படைப்பாளிகளின் நூல்களை வாசித்ததன் விளைவாகவே ஜோர்டனுக்காகப் போராட வேண்டும் என்கிற எண்ணத்தை லெனின் மனதில் தோற்றுவித்தது, அன்று அவர் அந்த 15 படைப்பாளிகளின் நூல்களைப் படிக்கவில்லையென்றால் இன்று நமக்கு லெனின் என்கிற ஒருவர் கிடைத்திருக்க மாட்டார்” என்று உணர்ச்சிவசப்பட்டு கோஷமிட்டார் தலைவர்.
மகாத்மா காந்தியின் ‘MIRACLE OF A BOOK’
அதேபோல் நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் வாசிப்பு குறித்தும் பேசிய தோழர், தேசத் தந்தை தனது சுயசரிதையில் வாசிப்பின் மகத்துவத்தைப் பற்றி எழுதியுள்ளதாகவும், MIRACLE OF A BOOK. (வாசிப்பின் மந்திரசக்தி) என்கிற அவரது நூலில் ஒரு முழு அத்தியாயத்தையே புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ‘UNTO HIS LAST BY JOHN RUSKIN’ என்கிற புத்தகத்தின் கருத்துகளில் என்னை நான் மாற்றிக் கொண்டேன் என்று மகாத்மா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப் பகிர்ந்த தோழர், “அந்தப் புத்தகம் மட்டும் இல்லையென்றால் இன்று காந்தி நமக்கு கிடைத்திருக்க மாட்டார்” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.
பிற ஆளுமைகள்
“அதுமட்டுமின்றி ஜோதி பாஸ்கர், அண்ணா, நேரு, கலைஞர், அம்பேத்கர் என அத்தனை மகான்களும் புத்தக வாசிப்பைக் கைகொண்டே தங்களுக்கான சமூக அக்கறையை வலுப் பெறச் செய்தனர்” என்று அறுதியிட்டுக் கூறினார்.
“ஆக, புத்தக வாசிப்பின் வழியாகவே நமக்கு ஆளுமைகள் கிடைக்கப் பெற்றதும் வாசிப்பு தனிமனித மாற்றத்தை மட்டுமல்ல ஒரு தேசத்தை, ஏன் உலகத்தையே திருத்தி அமைக்கும் பேர்வல்லமை கொண்ட சாசனம்” என்று கூறிய தோழரின் உரை சில கணங்கள் ஸ்தம்பிக்க வைத்தது. எத்தனை எத்தனை ஆளுமைகளின் வாழ்வையும் சிந்தனையையும் புத்தக வாசிப்பு சலவை செய்துள்ளது என்பது பல ஆளுமைகளின் வழியாக நிரூபணமாகியது. இறுதியாக தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள்,
‘IF YOU STOP LEARNING YOU WILL START DIEING – ALBERT EINSTIEN’ வரிகளை சுட்டிக்காட்டி தனது உரையை நிறைவு செய்தார். வாசிப்பின் வசீகரத்தை மெய்புலன்கள் உறிஞ்சிக்கொண்ட நிகழ்வாகவே அன்றைய நிகழ்வு ஒவ்வோரு வாசகரையும் மௌனப் புத்தகத்திற்குள் வசிக்க வைத்தது.
நிகழ்வின் இறுதிக் கட்டமாக தோழர் ஜெயசீலி பரிசு பெறும் புக்டே படைப்பாளிகளை அறிவிக்க… தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் புத்தக வடிவில் உருவாக்கப்பட்ட புக்டே ஸ்பெஷல் விருதை வழங்கியும் தோழர் எழுத்தாளர் அ. உமர் பாரூக் அவர்கள் ‘கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம்’ என்கிற புத்தகத்தைப் பரிசாக வழங்கியும் படைப்பாளிகளை கௌரவித்தனர்.
அன்றைய நிகழ்வு ஒரு மாபெரும் இலக்கிய விருது விழாவைப்போல இலக்கிய கர்த்தாக்களின் ஒன்றுகூடல்போல இளம் படைப்பாளிகளின் உற்சாகக் குரல்களுடன் விமரிசையாக நிறைவு பெற்றது.