ஜோஸ்ஃபின் பாபா
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வசித்து வரும் எழுத்தாளர் தேவிபாரதிக்கு ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக 2023-ம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்டவரான எழுத்தாளர் தேவிபாரதி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 40 ஆண்டு காலமாக எழுத்துலகில் இயங்கி வரும் இவரது படைப்புகள், எளிய மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பவை ஆக இருந்துள்ளன. உடையாம்பாளையத்தின் பிணமாகக் கிடத்தப்பட்டிருக்கும் காரு மாமாவின் வீட்டில் இருந்து நாவல் தொடங்குகிறது. ஒரு மரண வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், உரையாடல்கள், கவலைகள் ஒப்பாரிகள், இன மரணச் சடங்குகள் என நாவல் நகர ஆரம்பிக்கிறது. காரு மாமாவின் இளைய சகோதரியின் மகன் சண்முகம் பார்வையில் கதை செல்கிறது. நாவலின் பிரதானப் பாத்திரம் காரு மாமா, அவரின் இரு சகோதரிகள், அவர்கள் பிள்ளைகள், அவர் சுற்றத்தார், உறவினர்கள் அடங்கிய நாவிதர் இன மக்களின் இனவரைவியல் போன்று துவங்கும் கதை இது. ஆனால் இது காரு மாமா என்ற ஒரு தனி நபரின் கதை அல்ல. ஒப்பாரிப் பாடல்களைப் பயிற்றுவிக்கும் லிங்க நாவிதர், ஆம்பராந்துக் கரைப் பெண்கள், அவர்கள் சார்ந்த வாழ்வியல், அவர்களுக்கு பண்ணையார்களுக்கும் மற்றைய இனக்குழுவிற்குமாக உறவு என கதை விரிந்து செல்கிறது.
காரு மாமாவின் வாழ்வின் ஊடாகக் குடிநாவிதச் சமூக மக்களின் துயரத்தைப் பேசுகிறது. வாழ்வின் அத்தனைப் படிநிலைகளிலும் வறுமையும் துயரும் நிழல்போல அவர்களைத் தொடர்கின்றன. மீளாத் துயருக்கு நடுவிலும் தங்களை ஆற்றுப்படுத்துவதற்கான தமிழ்த் திரைப்படங்கள், திரைப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்களைக் கேட்டு ரசித்து வாழும் மக்களாக உள்ளனர். காரு மாமாவின் குடும்பத் தொழில், அவருடைய மூன்று சகோதரிகள் அடங்கிய குடும்பம், சவுந்தரம் பெரியம்மா, பெரியப்பா, சண்முகம், சுந்தரம், ஈஸ்வரி இவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்னியம், அன்பு, நேசம் ஒரு கட்டத்தில் மரணத்தில்கூட பங்கு எடுக்க மனம் கொள்ளாவிதம் பிரியும் உறவுகள் என கதை நகர்கிறது. எத்தனைதான் கருத்துப்பிரச்சினைகள் இருந்தாலும் துக்கங்களில், துன்பங்களில், மரணங்களில் அவர்கள் ஒன்று கூடுவதும், ஒருவர் இன்னொருவர்மேல் பாராட்டும் அன்பை எடுத்துச் சொல்லும் கதையும்கூட இது.
அண்ணன், தங்கை பாசத்தை வாசகர்கள் மனதில் பதிய வைக்க, எழுத்தாளர், ‘பாசமலர்’ திரைப்படம், சிவாஜிகணேசன் மற்றும் எம்ஜிஆர் மேல் அன்பு பாராட்டும் பெண்கள், ஜெமினி, சாவித்திரி என கதை நடந்த காலத்தை சினிமாவுடன் எடுத்துச் செல்கிறார். அவ்வகையில் கதை நடந்த காலயளவாக 1960ஆம் ஆண்டை மனதில் கொள்ளலாம். கால வெளி மாற்றங்களை டிரான்சிஸ்டர், தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பொருட்கள் மற்றும் வெளியான சினிமா, சினிமா பாடல்கள்வழி வாசகர்களிடம் ஊடாக கொண்டு சேர்க்கிறார் கதாசிரியர். தன் பிள்ளைகள், மனைவியை மறுபடியும் கண்டுபிடித்து அழைத்து வர காரு மாமா தயாராகவே உள்ளார். அதற்காக முயன்றும், தான் மரணப்படும் வரை, அவர்களை சந்திக்க இயலாதே ஏங்கி மனம் பேதலித்து இறந்தும் போகிறார்.
தன் கணவன் காரு மாமா இறந்த பின்பு, ராசம்மா தன் மகளுடன் தாலி அறுக்கும் சடங்கிற்காக வந்து சேர்கிறாள். தன் சகோதரன் உயிரோடு இருக்கும்போது வராத மனைவி, காரு மாமாவின் மனைவியின் செயலால் குழந்தைகளை இழந்து பட்ட துன்பம் அனைத்தையும் கண்ட பின்னரும்கூட காரு மாமாவின் சகோதரிகள் மற்றும் உறவினர்கள் ராசம்மாவை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது பழைய தலைமுறையின் மனித நேயத்தைச் சொல்லும் பகுதியாகவே உள்ளது. மரண வீட்டில் கதைசொல்லியுடன் காதல் வயப்படும் முறைப்பெண்ணான சாவித்திரி இதமாக வந்து செல்கிறாள். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவத்துடன் படைக்கப்பட்டிருக்கின்றது என்பது சிறப்பாகும்.

பொதுவாக சமீப திரைப்படங்கள் மற்றும் எழுத்துக்கள் ஜாதிய வன்மத்தை கக்கிக்கொண்டு மக்கள் மனதில் ஜாதி வன்மம் விதைத்து வந்த நிலையில்; நாவிதர்கள் மற்றைய ஜாதிப் பிரிவினரின் மத்தியில் எந்த முக்கிய இடத்தில் இருந்தனர் பண்ணையார்களுக்கும் நாவிதர்களுக்கும் ஒருவர் இன்னொருவரை சார்ந்து ஒரு சமூக அமைப்பு இருந்ததையும், ஒரு ஜாதி இன்னொரு ஜாதியை தங்கி இருக்கவேண்டிய சமூகக் கட்டாயம் பற்றி சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் சில சம்பவங்கள், தகப்பனுக்காக நாடார்கள் கொண்டு வைத்து விட்டுப் போன பனங்கள், நாடார்களுடன் எலி கௌதாரி, அனலாங்குருவிகள், முயல்கள் வேட்டையாடுவதும், பண்ணையார்களுக்கு பன்றிக்கறி வறுத்துக் கொடுப்பதிலும், கவுண்டர், பண்டாரம், நாடார் இனப் பிள்ளைகள் கூட்டாளிகளுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து விளையாடி உண்பது போன்ற சம்பவங்கள் சேர்க்கப்பட்டுள்ளது சுவாரசியம் ஆகும். வயதானவர்களிலும் காரு மாமா, பெரியப்பா , குப்பண ஆசாரி சேர்ந்து இருந்து உரையாடுவது போன்ற சம்பவங்கள் ஜாதித் துவேசங்களுக்கு அப்பாற்பட்டு மனித நேயத்தைப் போற்றிய ஒரு காலத்தை நினைவுபடுத்துகிறது.
மூடநம்பிக்கைகள் செட்டியோடு ஓடிப்போன பிறகு நாவிதர்களைச் சாபம் சூழ்ந்து விட்டது என்று நம்பத் தொடங்கினார்கள் பண்ணையார்கள், புற்றுநோய் கட்டி வளர்ந்து இருந்தால் சந்திரிகா பெரியம்மா ஆயிசு முடிந்தது என்று மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளிகள் சொன்னதை நம்பினார்களாம் போன்ற எழுத்து, ஒரு வகை மூட நம்பிக்கைகளை பரப்புவதாகவே உள்ளது. உயிரோடு சகோதரன் இருந்தபோது வாழாத, மனைவி ராசம்மாவைவிட தாலியறுக்க பொண்டாட்டி இல்லையே என்று காரு மாமா சகோதரிகள் வருந்துவது சவுந்திரா பெரியம்மா சாபம்தான் ராசம்மா செட்டியோடு ஓடிப்போக என உடையாம்பாளையத்துவாசிகள் நம்பிக்கை; வெள்ளைச் சேலை உடுத்திய ஒரு குடிநாசுவத்தியும் போன்ற சொல் பிரோயகங்கள் எந்த வகையில் வாசகர்களை சென்றடைய வேண்டும் என எழுத்தாளர் விரும்புகிறார் என்று தெரிந்துகொள்ள இயலவில்லை. வெள்ளைச்சேலை உடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் சட்டம் இல்லை என்கிறபோது 1970-80 காலகட்டத்தை எதற்காக எழுத்தாளர் 1940களுக்கு இழுத்துச் செல்ல வேண்டும் என்ற கேள்வி இல்லாதும் இல்லை. பக்கம் 162 இரண்டாம் பாராவில் எழுத்துப்பிழை (துயரத்தையும்) தவிர்த்து இருக்கலாம். தன் இரு பிள்ளைகளுடன் செட்டி என்பவனை நம்பி தன் கணவர் மற்றும் குடும்பத்தைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறும் காரு மாமாவின் மனைவி ராசம்மா, பெருவாரி பக்கங்களில் வந்து செல்கிறாள்.
பெரியாரின் உரையாடல்கள் உச்சத்தில் இருந்த காலவெளி அது. பிடிக்காத கணவனைவிட்டு ராசம்மா போனாள் என்பதை காரணகாரியம் அற்று தொடர்ந்து சொல்லவேண்டிய அவசியம்தான் என்ன! ராசம்மா ஓடிப்போன சம்பவம் 221 பக்கப் புத்தகத்தில் அத்தையால் மாமா வலுவிழந்தார், நோயாளி ஆனார் மனப்பிறழ்வு கொண்டார், குழந்தைகளோடு ஓடிப் போகும்வரை நன்றாக இருந்தார், அதன் பின் அழுதார், பரதேசியாக ஊர் ஊராகச் சுற்றினார் என ராசம்மா என்ற கதாபாத்திரம் பற்றி தொடர்ந்து பழிச் சொல்கொண்ட உரையாடல்கள் வந்த வண்ணமே உள்ளன. இருப்பினும் ராசம்மா என்ற பெண்ணின் பக்கம் இருந்த குரல் ஒலிக்கப்படவில்லை. நாவலின் பெரும் பின்னடைவு ராசம்மா எதற்காக காருவைவிட்டுப் போனாள் என்ற வாசகர்களின் கேள்விக்கு கடைசி வரை விடை தரவில்லை என்பதாகும்.
போனவள் ஆறுமாதங்கள் செட்டியோடு வாழ்ந்துவிட்டு தனித்து இருந்தவள் எதனால் பிள்ளைகளைக்கூட கணவனிடம் சேர்க்கவில்லை, அப்படி வைராக்கியமாக இருந்தவள் தாலியறுக்க எதனால் ஓடி வந்தாள்? தன் மனைவி செட்டியுடன் ஓடிப்போகப்போவதை தெரிந்தே காரு மாமா தெரியாதது மாதிரி இருப்பது அக்கதாபாத்திரத்தின் வலுவைக் குறைக்கிறது.பக்கம் 91ல் கிராம நிர்வாக அலுவலகத்தின் அதிகாரபூர்வமற்ற உதவியாளராகக் கொஞ்ச காலம் வேலை பார்த்து வந்த ஒன்றுவிட்ட சகோதரர்; அதே பாராவில் மின் வாரியத்தின் உதவிப் பொறியாளராக இருந்த அவருக்கு ஆட்சியர் அலுவலகப் பிரிவு எழுத்தர்கள் சிலரிடம் தொடர்பு இருந்ததால் என வாசகர்களை என்ன வேலையில் இருந்தார் என்ற கேள்விக்கு குழப்புகின்றனர். கதை சொல்லியின் தகப்பனார் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்தும் அவர் இறந்துபோனதும் பிள்ளைகள் கல்வியில் தொடரும் சூழல் இல்லை என்பதுபோல ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் ஐந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார் என்பதும் நம்பகத்தன்மையைக் கெடுக்குகிறது. இனவரைவியல் போன்று துவங்கப்பாட்டாலும் சோகக் காவியமாக முடிக்கப்பட்டது ஒரு குறைதான்.