ஸ்ரீதர்மணியன்
உலகம் கதைகளால் நிரம்பியது. மொழி அறியா தொன்மைக் காலத்திலும் மனிதன் பொருளற்ற ஓசைகள், சைகைகள் வாயிலாக தான் பார்த்ததை, நினைப்பதை பிறருக்கு கடத்தி வந்திருக்கிறான். மொழி பிறந்த பின்னர் அவன் சொல்வழி அதனைக் கூற முற்பட்டான். இவ்விதமே பிறந்த கதைகள் இன்றுவரை மனிதனுடன் ஒட்டித்திரிகின்றன. அத்தகைய பேச்சு வழக்கில், சொந்த மொழியில் அவை சொல்லப்பபடும்போது கூடுதலான கவனம் பெறுகின்றன, சுவை மிக்கவையாக உருப்பெறுகின்றன.

இவ்வகையில் கந்தர்வன் அவர்கள் தன் இயல்பில் கதையை நகர்த்திச் செல்லும் கதை சொல்லியாக விளங்குகிறார். எங்குமே அலங்கார வார்த்தைகளோ, மிகைப்படுத்துதல்களோ இன்றி கதையினை அதன் போக்கில் எதிரிலிருப்பவருடன் உரையாடுவதைப்போல கதை சொல்வது இவரது உத்தி. நாகலிங்கம் என்னும் இயற்பெயருடைய கந்தர்வன் தான் சார்ந்த இயக்கத்தின்பால் மிக்க பிடிப்புள்ளவர். அவசரநிலைக் காலத்தில் அதற்காக தனது அரசாங்கப் பதவியை இழந்து மீண்டும் போராடிப் பெற்றவர். மார்க்சீயக் கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர். மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியாக விளங்கியவர், சுற்றுச்சூழல் மாறுபாடு, பருவம் தப்பிய மழை, குறைந்த மழைப் பொழிவு உள்ளிட்ட காரணங்களால் பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரமான வேளாண்மையைத் துறந்து கண்களும், இதயமும் கசிய தங்கள் பிறந்த மண்ணைவிட்டு நீங்கிச் செல்லும் துயரக்கணங்கள் கசப்பும் கரிப்பும் நிறைந்தவை. புஞ்சை விவசாயம் பொய்த்துப் போய் நிலம் தங்களைக் கைவிட்டுவிட்ட நிலையில் அவை பாலையாக ஆவதன் சித்திரத்தைத்தான் அவர் சித்திரிக்கிறார். அந்தச் சூழ்நிலையிலும் தங்கள் அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்ள விட்டுக்கொடுக்காது இறுதிவரை போராடி அவமானமடையும் எளிய சம்சாரிகளின் பல கதைகள் கந்தர்வனின் கைவண்ணத்தில் பதிவாகியிருக்கிறன.
இப்படைப்பில், அவரது சில சிறுகதைகள் குறித்தான பார்வையினை இக்கட்டுரை வாசகனுக்குத் தருகிறது.கந்தர்வனின் ‘ஒவ்வொரு கல்லாய்‘ சிறுகதை இதுபோன்று கனவுகளைக்கொண்ட இரு மனிதர்களைப் பற்றியும், அவர்களது நடைமுறை அவலங்களையும் விரிவாகச் சித்திரிக்கின்றது. கதையில் கதை மாந்தர்கள் யாவருமே பெயரற்று உலவுகின்றனர், உரையாடுகின்றனர். இந்தக் குறியீடு, இஃது போன்று சிக்கல்களில் சிக்கித் தவித்து அல்லலுரும் மனித வர்க்கத்தினைப் பொதுவாகச் சுட்டிக்காட்டுகிறது. இக்கதையில் வீட்டின் உரிமையாளராக வரும் ஒரு பாத்திரத்திற்கு கந்தர்வன் ‘பேண்ட்காரர்’ என்னும் ஓர் அடையாளத்தினை மட்டுமே தந்திருக்கிறார்.
பறவைகளும் தங்கள் கூட்டில் வசிக்க விரும்புகின்றன. அவ்வாறே தனக்கான கூட்டினை கற்பனை செய்யாத மானுடப் பிறவி அரிது. ‘எலி வளையாயினும் தனி வளை‘ என்னும் இந்தக் கூற்று மிகையானதன்று. ஒவ்வொரு மனிதனின் கனவும், வாழ்வின் இலட்சியமும், குறிக்கோளுமாக வீடு உள்ளது. வீடு குறித்த அவனது ஏக்கங்கள், கற்பனைகள் அவனைத் தன் சொந்தக் கூட்டினை உண்டாக்கிட உந்தித் தள்ளுகின்றன. வாடகை வீட்டின் அனுபவங்கள், அவமானங்கள் கசப்பு நிறைந்தவை. அவற்றை கடந்து சென்று தனக்கான சொந்த வீட்டினை, கூட்டினை அடையத் துடிக்கும் நடுத்தரவர்க்கத்தினர் எண்ணற்றவர்.
ஒண்டுக்குடித்தனத்தில் வாழும் ஒரு குடும்பம் பல்வேறு விதங்களில் அன்றாடப் பிரச்சினைகளில் உழலுகிறது. தண்ணீர் பிடிப்பதிலிருந்து கழிவறைக்குச் செல்வது வரை வரிசையில் நிற்பது இங்கு நடைமுறை. அண்டை வீடுகளில் வசிப்போருடன் பிள்ளைகளால் சச்சரவுகள் என அன்றாடம் தொடர் நிகழ்வுகள். இந்த சூழ்நிலையில் அவர்கள் தனியாக வாழ விரும்பி ஒரு வீட்டினைத் தேட முற்படுகின்றனர். அப்போது, கட்டி முடிக்கும் தருவாயிலுள்ள ஒரு வீடு கிடைக்கிறது. அதில் மிக்க மகிழ்ச்சியுடன் குடியேறுகின்றனர். இருப்பினும் வீட்டு உரிமையாளருக்கு பணமுடை. அவரும் பல இடங்களில் கடன் பெற்றும். நகைகளை அடகு வைத்துமே வீட்டினை ஓரளவுக்கு கட்டி முடித்திருக்கின்றார். கடன் கொடுத்தவர்கள் அளிக்கும் நெருக்கடியினால் தனது வீட்டில் வசிக்கும் நபரிடம் ஒத்திக்கு பணம் கேட்கிறார். குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தினைத் திருப்பித் தந்துவிடுவதாகவும் கூறுகிறார். குடியிருப்பவர் தான் அவ்வளவு தொகையினை கண்ணால் பார்த்ததுகூடக் கிடையாது என்று பதிலளிக்கிறார்.
வீட்டு உரிமையாளர் குடியிருப்பவரிடம், “யோசித்து சொல்லுங்கள் நான் பிறகு வருகிறேன்” எனக் கூறிவிட்டுச் செல்கிறார். அப்போது அவர் மனைவி, “நாம பணத்தைத் தரலேன்னா பணம் தரவங்களா பாத்து குடி வச்சிடுவார், நம்மள காலி பண்ணச் சொல்லிடுவார்“ எனக் கூறுகிறாள். அவளுக்கு தனி வீட்டினை விட்டுச்செல்ல மனமில்லை.
ஒருவாறு தொகையினை தயார் செய்து (அவரும் அலுவலகத்தில் கடன் பெற்றும், உறவினர், நண்பர்களிடம் வாங்கியும்) பணத்தை வீட்டு உரிமையாளருக்கு கொடுக்கிறார். ஏறத்தாழ ஓர் ஆண்டு காலம் பிரச்சினைகளின்றிக் கழிகின்றது.
இந்நிலையில் தனக்குப் பணம் இரண்டு மாதத்தில் கிடைத்துவிடுமென்று வீட்டு உரிமையாளர் சொல்லிவிட்டுச் செல்கிறார். பணம் கொடுத்துவிட்டு அவரே இங்கு வசிக்க வந்துவிடலாம் என்னும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் கணவன் – மனைவி இருவருக்கும் அச்சமேற்படுகிறது.
உடனே நாமும் ஒரு வீட்டைக் கட்டி குடியேற வேண்டும் என்ற எண்ணம் உருவாகி அது மிக வலுவானதாக உருப்பெறுகிறது. மனித மனதின் போக்கினை இங்கு கவனமாக அவதானிக்க வேண்டும். இந்தக் கணம் வரை வசதியாக வாழ்ந்த வீட்டின் சிறு குறைகளும் இப்போது பெரும் குறைகளாகத் தோற்றம் கொள்கின்றன. தன் மனைவி இரவில் கழிவறைக்குச் செல்லும்போது குழந்தைகளைத் தாண்டிக்கொண்டு செல்வது சிரமமாக இருப்பதாகவும், ‘அட்டாச்டு பாத்ரும்‘ இருந்திருந்தால் இத்தகைய சூழல் உண்டாயிருக்காதெனவும் கணவன் நினைக்கிறான். அது மட்டுமன்றி பேண்ட்காரருக்கு (வீட்டு உரிமையாளர்) அவ்வளவாக ரசனை போதாது என்றும் விமர்சிக்கிறான்.
நம்முடைய சொந்த வீடானது ‘அட்டாச்டு பாத்ரூமுடன்‘தான் கட்டப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கின்றனர். அது மட்டுமன்றி கழிவறையானது டைல்ஸ் எனும் ஓடுகள் கொண்டு அமைக்கப்பட வேண்டும் எனவும் என்ஜினீயரிடம் கூற வேண்டும் என்றும் திட்டமிடுகிறார். மனம் எப்போதுமே தன் செயலுக்கான தக்க, பொருத்தமான காரணத்தினை கற்பிதம் செய்துகொள்ளும் உளவியலையும் நாம் இவ்வாக்கியங்கள் வாயிலாகக் காண முடிகிறது.
பேண்ட்காரர் அவரிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருகிறார். எனினும் அவரது கடன் தொல்லைகள் இன்னும் இருப்பதாகவும், இவர்கள் காலி செய்த பின்னர் வாடகையைக் கூட்டி வேறு யாரையாவது குடிவைக்கும் நிலைதான் தற்போதைய சூழ்நிலை என்றும் சொல்கிறார்.
இனி கதை வரிகள்,
இவன் கேட்டான்: “எவ்வளவு கூட்டுவிய?“
“அம்பது ரூபா”
“நானே அம்பதையும் சேத்து முந்நூத்தம்பதுன்னு வாடகை கொடுத்துடுறேன். நான் ஒங்க வீட்டுலயே தொடர்ந்து வாடகைக்கு இருக்கப் போறேன். நா கட்டுற வீட்டுக்கு வாடகை ஐநூறு ரூபா, பாத் அட்டாச்டு ரூமோட இருக்கற வீடு நமக்கு கட்டுப்படியாகாது.”
இவ்வாறு அந்த உரையாடல் முற்றுப் பெறுகிறது. இறுதியில், இருவருமே அரும்பாடுபட்டு பல சிரமங்களுக்கிடையில் உருவாக்கிய வீட்டில் அவர்களால் வசிக்கவியலாது, வாடகை வீட்டிலேயே தொடர்ந்து வசிக்கும் அவலச் சூழல் உண்டாகிறது. நடுத்தர வர்க்கத்தினரின் பெரும்பாலான இது போன்ற கனவுகள் இறுதியில் அவர்களுக்கு களிப்பினைத் தருவதில்லை, மாறாக ஏமாற்றத்தினை அளிப்பதுடன் மனதின் ஆழத்தில் எஞ்சுவது கசப்பும், நிராசையுமாகும். அதே போன்று, நிலவும் சமகாலச் சூழல், நுகர்வுக் கலாச்சாரம் அவர்களை ஆடம்பரத்தை நோக்கித் தள்ளுகிறது. தங்களுக்கு அடிப்படையான வசிப்பிடம் என்ற கருதுகோள் பிறழ்ந்து மற்றவர்களுக்குத் தாங்களும் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என வெளிக்காட்டிக் கொள்ளும் பகட்டாக மாறிவிடுவதும், அதன் விளைவாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து ‘பூவுக்கும் கீழே’ என்னும் இக்கதையிலும் கந்தர்வன் கதை மாந்தர்களை ‘அவன், அவள்‘ என்றே கூறுகிறார். இதனை புனைவென்று வகைப்படுத்தலாம். இயல்பாக, குழந்தைகளே பூக்களின்பால் ஈர்க்கப்பட்டு பலவிதமான செடிகளை நட்டு வளர்ப்பார்கள். இரவு முழுவதும் அச்செடியைப் பற்றிய கனவுகளுடன் உறங்குவார்கள். காலையில் முதல் வேலையாக செடியைப் பார்த்த பின்னரே அவர்களது அன்றைய நாள் தொடங்கும். ஆனால் கந்தர்வனின் இப்படைப்பில் ஒரு மனிதனே குழந்தையாக மாற்றம் பெற்று பலவகையான செடிகளை பல்வேறு இடங்களிலிருந்து கொணர்ந்து வளர்க்கிறான். காலையில் முதல் வேலையாக அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறான். தன் பிள்ளைகளைக்கூட அவன் அது போன்று கொஞ்சுவதில்லை.
படைப்பு முழுவதும் அவனும் செடியுமாகவே வியாபிக்கின்றனர். மனைவி வீட்டு வேலைகளைக் கவனிக்கும் தருணங்கள் அவனுக்கு ஆசுவாசமளிக்கின்றன. அந்த நேரம் அவனுக்கே உரித்தான தருணங்களாக முகிழ்ந்து செடிகளை எவ்வித இடையூறுமின்றி அவதானித்துக் களிக்கும் கணங்களாக உருப்பெறுகின்றன.
அவனது மனைவி, குழந்தைகள் ஊருக்குச் சென்று இருக்கும் சூழல் அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. அவன் தன் விருப்பம் போல சுதந்திரமாக அலைந்து திரிந்து செடிகளை நடுகிறான். அவன் எங்கு வேலை செய்கிறான்?, அவன் பிண்ணனி என்ன? இவனை இவ்வாறு செடிகளின்பால் ஈர்த்தது எது?- எனப் பல வினாக்கள் வாசகனுக்குள் எழலாம். ஆயினும், படைப்பாளி தன் நோக்கத்திலிருந்து பிறழாமல் கதை சொல்லிச் செல்கிறார். கந்தர்வன் ஒரு நுண்ணிய, கூர்மையான யாரும் கையாள விரும்பாத கருவைக்கொண்டு இதனைப் படைத்துள்ளார்.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி இக்கதையினை மிக சிலாகித்து “சின்னவிஷயங்களைக் கொண்டும்கூட சிறந்த படைப்பினை உருவாக்கவியலும்” என்கிறார்.
ஜெயமோகன், “தமிழின் மகத்தான சிறுகதைகளில் ஒன்று இது. சிறுகதை என்ற வடிவம் எதற்காக உள்ளதோ அதைப் பயன்படுத்திக்கொண்ட ஆக்கம்” எனப் பாராட்டுகிறார்.
கந்தர்வனின் மற்றுமொரு படைப்பான ‘பத்தினி ஓலம்‘ சிறுகதையிலும் ‘அவனும், அவளுமாகவே‘ பாத்திரப் படைப்புகள் உண்டாக்கப்பட்டுள்ளன. பேருந்து ஒன்றில் ஓர் இளம் பெண் அழைத்துச் செல்லப்படுகிறாள். அவள் மனநிலை பிறழ்ந்தவளாக காட்டப்படுகின்றாள். அவள் பேருந்துப் பயணத்தின் போது “நா உத்தமிடா, பத்தினிடா, நா அவனோட பேசக்கூட இல்லடா, அந்த வெட்டோடை காளி உங்களக் கேப்பாடா“, என்று கூக்குரலிடுகிறாள். “ஏண்டா ரூமுக்குள்ள தள்ளி என்ன அடிக்கிறீங்க?“ அந்தக் காளி உங்கள கேப்பாடா“ என்றும் சத்தமிடுகிறாள்.
அந்தப் பெண்ணின் இந்த நிலை மற்ற பயணிகளுக்கு எரிச்சலை உண்டாக்குகின்றது. அவளை அந்த ஆண் தாறுமாறாக அடிக்கும் நிலையிலும் அவள், “நீ என் கூடப்பிறந்த தம்பிடா, அடிக்காதடா” என்று கூறுகிறாள். சற்று நேரம் கழிந்த பின்னர் வேறு வழியின்றி அவர்கள் பேருந்திலிருந்து இறக்கிவிடப்படுகின்றனர்.
இப்படைப்பில் கதைசொல்லி எந்த நிகழ்வினையோ, அதற்கான காரணத்தினையோ கூறுவதில்லை, விளக்க முற்படுவதில்லை. கதையினை காட்சிப் படிகமாக்குகிறார். பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் ஒவ்வொரு ஊகங்கள், தோற்றங்கள். கதைப்பேருந்தில் பயணிக்கும் வாசகனுக்கும் அவ்வாறே. கந்தர்வனின் மாறுபட்ட, உத்தியில் இந்தச் சிறுகதை செறிவார்ந்த, ஆழமுள்ள படைப்பாகிறது.
ஆண்களுக்கான சமுதாயச் சூழலில் பெண்களுக்கான பொதுவெளி என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே உள்ளது. அவர்களை எண்ணற்ற கண்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. கரங்களால் அவள் தீண்டப்படாவிடினும் கண்களால், பார்வைகளால் அவள் தொடரப்பட்டு, தொடப்பட்டுக்கொண்டே இருக்கிறாள்.
மனிதர்கள் அவளைக் கைவிட்ட சூழ்நிலையில் அவள் தனது நிலையினை நிறுவ மனம் பிறழ்ந்த நிலையிலும் வெட்டோடை காளியை, தெய்வத்தை துணைக்கழைக்கிறாள். உயிருடனும், உணர்வுடனும், பகுத்தறிவும் கொண்டு உலவித் திரிகின்ற மனிதர்களின் சாட்சி ஏன் பலனற்று இருக்கிறது? நான் எந்த நிலையிலும் எந்தத் தவறையும் செய்யவில்லை என நிரூபணம் செய்வதே அவள் உள்ளக்கிடக்கையாகிறது. இப்போது மனப்பிறழ்வு யாருக்கு? இக்கேள்வி இப்படைப்பின் இறுதியில் தொக்கி நிற்கிறது.
நான்காவதாக ‘கொம்பன்‘ சிறுகதை தொழுவில் வளர்க்கப்படும் மாடுகளைப் பற்றியது. மந்தை அமைப்பது, மாடுகள் வளர்ப்பு, அவற்றின் உடலமைப்பு, மந்தை மாடுகளின் இயல்புகள் என பல நுண்ணிய விவரணங்களுடன் கந்தர்வன் இதனைப் படைத்துள்ளார்.
மந்தை மாடுகள் தான்தோன்றிகள். தறிகெட்ட வளர்ப்பு. பூசணிக்காய்போல மடுக்கள் சுமக்கும் பசுக்களிலிருந்து மனிதர்களுக்கு ஒரு சொட்டுப் பால் கூட பீய்ச்சக் கூடாதென்பது மந்தையின் முதல் வேத விதி. எல்லாப் பாலும் கன்றுக்கு. பசுவும் கன்றும் கழுத்தில் கட்டும் உலகக் கயிறுகள் அறியா. மந்தையிலும் மேய்ச்சல் வெளியிலும் கன்றுகள் நடப்பதில்லை. இரவு, பகலாய் எம்பிக் குதித்துத்தான் திரியும். மந்தைக் காளைகள் எல்லாமே பொலி காளைகள். நடந்து வரும்போதே ‘இந்த உலகத்தை என்ன செய்கிறேன் பார்” என்பது போல பூமியை துசி பறக்கவிட்டுத்தான் நடப்பார்கள், என மந்தையில் வளரும் இவற்றினைப் பற்றி மிக விரிவாக எழுதுகிறார்.
மந்தையிலிருந்து பிரிக்கப்பட்டு விலைக்கு வாங்கி வந்த காளைகள் வீட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. அந்தப் புதிய சூழலில் உணவும், நீரும் ஏற்க மறுக்கின்றன, பட்டினி கிடக்கின்றன. தளை என்பதனையே அறியாத அவற்றிற்கு மூக்கணாங்கயிறு இடப்படுகிறது. குருதி சிந்த அவை கண்களில் நீருடன் அமைதியாக நிற்கின்றன. பின்னர் அவற்றின் கால்களுக்கு ‘லாடம்‘ அடிக்கப்படுகிறது. இப்போது அவை மாட்டுக்காரனின் கையசைவுகளுக்கேற்ப வேலைகளைச் செய்யும் நிலைக்கு வருகின்றன. அவை படிப்படியாக பல்வேறு வேலைகளுக்கு பழக்கப்படுத்தப்படுவதை கதை விவரிக்கிறது. கதை மாடுகளை அடிமையாக்கிப் பல வேலைகளுக்குப் பழக்குவதை நேராகக் கூறினாலும், அது குறிப்பாலுணர்த்துவது மனிதனின் ஆதிக்க மனப்போக்கினையே.
மனித இனம் சுதந்திரமாக இருக்கும், சிந்திக்கும் சக மனிதன் உள்ளிட்ட எதனையுமே, பார்த்து அச்சம் கொள்கிறது. அது அவனுக்கு உறுத்தலையும், தனது அதிகாரம் குறித்த ஐயத்தினையும் உண்டாக்குகிறது. இச்சூழலில் தனது தந்திரத்தையும் சூழ்ச்சியையும்கொண்டு அதனைத் தனது கட்டுக்குள் கொண்டுவருவதே அவன் பிரதான நோக்கமாகிறது.
இக்கருத்தினையே தாகூரின் ‘குதிரை‘ என்ற சிறுகதை விவரிக்கிறது. கடவுள் பெரும்பாலான உயிர்களைப் படைத்து சற்றே ஓய்ந்திருந்த நேரம். இலகுவான கூறுகளைக்கொண்டு ஓரினத்தை உண்டாக்கலாம் என எண்ணி காற்றினையும், வேகத்தினையும்கொண்டு குதிரை இனத்தினைப் படைக்கிறார். அதற்கான நிலமாக பரந்தவெளியை ஒதுக்குகிறார். குதிரை தன் இயல்பின்படி எவ்விதமான நோக்கமுமின்றி சுதந்திரமாக ஓடித் திரிகிறது. படைத்தவன் தன் படைப்பின் இயல்பு குறித்தான பெருமிதத்துடன் ஓய்வு கொள்கிறார். தன் ஆக்கங்களிலேயே குதிரை மட்டுமே அவரைக் கவர்கிறது. இந்நிலையில் மனிதன் குதிரையைக் காண நேர்கிறது, அதன் வலிவும், வேகமும் கண்டு அவன் குதிரையை வலைவிரித்துப் பிடித்துக் கொட்டடியில் அடைக்கிறான். சுதந்திரத்தினை இழந்த குதிரை பரிதாப ஓலமிடுகிறது.
மனிதனை கடவுள் விசாரணைக்குட்படுத்துகிறார். அவன் அதற்கு தான் உணவு தந்து சிறப்பாகப் பராமரிப்பதாகவும், வெயில், மழை போன்றவற்றிலிருந்து காப்பாற்றுவதாகவும் பதிலளிப்பது மட்டுமன்றி குதிரை விருப்பப்பட்டே தன்னுடன் இருப்பதாகவும் பதிலளிக்கிறான். கடவுள் இதனை ஏற்காது குதிரையை சுதந்திரமாக வெளியே விடுமாறு பணிக்கிறார். தந்திரமிக்க மனிதன் குதிரையின் முன் கால்களைக் கட்டி குதிரையை வெளியே துரத்துகிறான். குதிரை தவளையைப்போல் தத்தித் தத்திக் குதிப்பதைக் காண சகியாது இறைவன் கோபமடைந்து மனிதனையே குதிரையைப் பராமரிக்குமாறு கூறுகிறார். சுதந்திரத்தினை இழந்த குதிரை மனிதனுடன் செல்வதாகக் கதை நிறைவுறுகிறது. இறைவன் அனைத்துமறிந்தவர், அவரை ஏமாற்ற முடியுமா? இக் கேள்விகள் இங்கு பிறந்தாலும் மனிதனின் மனப்போக்கினையே இங்கு குறியீடாகக் காணவேண்டும். தன் நோக்கத்திற்காக, சுயநலத்திற்காக அவன் எந்த நிலைக்கும் செல்லத் துணிகிறான். தான் வணங்கும் கடவுளுக்கும் இதில் விலக்கில்லை என்ற கருத்து புலப்படுகிறது.
கந்தர்வனின் மற்றுமொரு செறிவார்ந்ததொரு படைப்பாக ‘காளிப்புள்ளெ‘ சிறுகதை விளங்குகிறது. பெண்களின் துயரத்தை மட்டுமன்றி அவர்களது குடும்பம் குறித்தான பொறுப்புணர்வினையும் இது மிக்க ஆழத்துடன் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரம் தனித்துவிடப்பட்ட குடும்பங்களின் மீது நிகழ்த்தப்பெறும் ஆணின் ஆதிக்க மனப்பான்மையையும் காட்டுகிறது. தன்னால் தான் சார்ந்த சமூகத்தில் நிலை கொள்ளவியலாத சூழலில் தன் மகளைப் பல கனவுகளுடன் வளர்க்கிறாள். ஆயினும், தனது மாமனின் சதியால் மகள் ஒரு போக்கிரிக்கு இரண்டாம் தாரமாக வாழ நேர்கிறது. தன் மகளின் வாழ்வு பாழான நிலையில் தனது பேத்தியின் வாயிலாக அதனை நிறைவேற்றிக்கொள்ள முயலும் காளிப்புள்ளெயின் துடிப்பும், நோக்கமும் கவனிக்கத்தக்கது. அவள் தனது நோக்கத்தினை அடைய இயலாத சூழலில் தனது பேத்தியின் மூலமாவது அதை அடைய முயல்கிறாள்.
கந்தர்வனின் வாக்கியங்களில் இப்போது காளிப்புள்ளெயின் உழைக்கும் காட்சிகளை காண்போம். காளிப்புள்ளெ காலையில் இருள் பிரியுமுன் எழுந்து தன் வீட்டுத் தொழுவத்தைக் கூட்டிவிட்டு ஓடோடி வந்து மகள் வீட்டுத் தொழுவமும் கூட்டி மூத்த குடியாள் மக்களுக்கு மகள் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்து தன் மகளை மயங்கவிடாமல் பார்த்துக் கொண்டாள். ஆசாரி வீட்டுக்குக் காளிப்புள்ளெ ஒரு நாள் போய்த் தன் காது தண்டட்டியை கழற்றிக் கொடுத்துத் தங்கத்தை உருக்கி மகளுக்கு சங்கிலி செய்யச் சொன்னாள். பொழுது சாயும்போது தனியாக உட்கார்ந்து பசும்பாலில் எதையெல்லாமோ அரைத்துப் போட்டு குடிக்க வைத்து மகளைத் தெம்பாக்குவாள். அவளுக்கு உடனடியாக ஒரு பேத்தி வேண்டும். தான் வாழாததை, மகள் வாழாததை பேத்தி வாழ வேண்டும். இப்போது காளிப்புள்ளெக்கு பேத்தி பிறக்கிறாள்.
தன்னைப்போலவும், தன் வம்சம்போலவும் இல்லாமல் பேத்தி, பவுனில் செய்து போட்டது போல் சிவப்பாய்க் கிடந்தாள். அரைகுறையாய் விளைந்த அத்தனையையும் விற்று, பேத்திக்கு சங்கிலி செய்தாள். கொஞ்ச காலம் கழிந்த பின் பேத்திக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால், மகளைப்போலவே பேத்திக்கும் மருமகனின் தலையீட்டால் ஓர் ஆரோக்கியமற்ற வயோதிகனுக்கு மணமுடிக்கப்படுகிறாள். பேத்தியின் சீக்காளி கணவனை பராமரிக்கும் பொறுப்பும் காளிப்புள்ளெயின் தலையில் விழுகிறது. பேத்திக்கு கல்யாணம் முடிந்ததும் காளிப்புள்ளெ பலகாரம் சுட்டு விற்க ஆரம்பித்தாள். இடியாப்பம், முக்குளி இரண்டும் அதிகாலையில் சுடுவாள். முதலில் பேத்தி வீட்டிற்குப் பலகாரங்கள் போகும்.
இதன் பின்னர் மகனுக்கு திருமணமாகிறது. காளிப்புள்ளெ, அவளுடைய விதவையான மகள், பேத்தி, நோயாளியான அவள் கணவன் ஆகியோர் அடங்கிய கூட்டத்தோடு வாழ மருமகள் விரும்புவதில்லை. எனவே, மகனிடமிருந்து விலகி காளிப்புள்ளெ இவர்களுடன் தனியாக வசிக்கிறாள்.
காளிப்புள்ளெ மகளோடு தனியாக நின்று பலகாரஞ் சுட்டு விற்றுக்கொண்டிருந்தாள். பேத்திக்கு ஊட்டினாள். பேத்தி புருசனுக்கும் ஊட்டினாள். அவளுக்கு பெண் பிறப்பின் மீதே சலிப்பு வந்தது. அவளுக்கு பூட்டன் வேண்டும். அதற்காக பேத்தி புருசனுக்கு நூறு வைத்தியம் பார்த்தாள். படைப்பின் இறுதிக் காட்சி வரை அவள் தனது நோக்கத்தினை அடைந்திட போராடுவது தங்கள் குடும்பம் எவ்வாறேனும் ஏற்றம் பெற வேண்டும் என்னும் பெண்களின் முனைப்பிற்கும், மனப்போக்கிற்கும் சான்றாகிறது. காளிப்புள்ளெயின் ஓட்டம் இறுதிவரை நிற்பதேயில்லை. ஓய்வென்பதையே அறியாத, அறிய விரும்பாத அவள் உழைக்கும் சித்திரம் எவ்வித மிகைப்படுத்துதலுமின்றி இயல்பான தொனியில் படைப்பு நெடுகிலும் இழைந்தோடுகிறது. ஒரு நாள் நகரத்திலிருந்து புகைப்படம் எடுப்பவர் வருகிறார். பல குடும்பங்கள் அன்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
காளிப்புள்ளெயின் பேத்தி “நாமளும் சேந்து போட்டா எடுத்துக்கணும்” என்று கூறுகிறாள். பத்து நாட்கள் கழித்து போட்டோ வந்ததும் காளிப்புள்ளெயிடம் கொடுத்தாள் பேத்தி. கையில் வாங்கிப் பார்த்த மாத்திரத்தில் சொன்னாள் காளிப்புள்ளெ, “நான் காஞ்சு கருக்குழிச்சு இப்படியா இருக்கேன்?”.. அதுவரை கண்ணாடியே பார்த்திராத காளிப்புள்ளெயின் மனவோட்டத்தினைக் காட்டுகிறது. இவ்விதம் மூன்று தலைமுறைகளுக்காக உழைத்துக் களைத்த காளிப்புள்ளெயின் தோற்றத்தை கந்தர்வன் படைப்பின் இறுதி வாக்கியத்தில் நமக்குக் காட்டுகிறார். அதனையும் காளிப்புள்ளெயின் வார்த்தைகளில் அவளே தன்னைப் பற்றிக் கூறும் அற்புதமான தருணமாகவும், கதைசொல்லியின் வெற்றிக்கான தருணமாகவும் உருப்பெறுகிறது.
இவ்வாறாக கந்தர்வனின் பல படைப்புகள் பல்வேறு தளங்களிலும் கவனம் பெற்றவை. ‘சாசனம்’, ‘கவரி’, ‘தாத்தாவும் பாட்டியும்’, ‘தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்’, ‘அரண்மனை நாய்’, கதை போன்ற படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
கந்தர்வன் இராமநாதபுரம், சிக்கல் கிராமத்தில் 1944இல் பிறந்தவர். ‘சனிப்பிணம்’ என்னும் சிறுகதை முதல் படைப்பாக ‘தாமரை’ இதழில் வெளியாகி பரவலான கவனத்தினைப் பெற்றது. இங்கிருந்து அவரது படைப்புலகு தொடங்கியது. அறுபத்துயிரண்டு சிறுகதைகளையே அவர் படைத்தார்.
கந்தர்வன், தொடக்கத்தில் உருவான மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனால் ‘இலக்கியச் சிந்தனை’ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது ‘மைதானத்து மரங்கள்’ கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பள்ளி, பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. இக்கட்டுரை எழுதப்படும் காலத்தில் கந்தர்வன் அவர்கள் காலமெய்தி விட்டாலும், தன் கதை சொல்லும் உத்தியின் நிமித்தம் அவர் தமிழ் படைப்புலகில் என்றும் நினைவுகூரப்படுவார். இக்கட்டுரை சீர் வாசகர் வட்டம் வெளியிட்ட கந்தர்வனின் முழுத்தொகுப்பு நூல் பற்றியது. மேலும், இவரது படைப்புகளை பாரதி புத்தகாலயம், வம்சி உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்கள் பதிப்பித்துள்ளன.
