ஒரு சமூகத்தின் கண்களைக் குருடாக்கிட அந்த சமூக அமைப்பின் அறிவியல் வளர்ச்சியை முடக்கினால் போதும். – கார்ல்சாகன்
நூறு வருடங்களாக தங்குத் தடையின்றி நடந்து வந்த இந்திய அறிவியல் மாநாடு எனும் பிரமாண்ட அறிவியல் அடையாளம் முற்றிலும் சிதைக்கப்பட்டு முடக்கப்பட்டுவிட்டது. மக்களிடையே நிலவிய சாதி, மதவெறி, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, கொடிய மூட நம்பிக்கைகளுக்கு எதிராக 1914ல் இந்திய அறிவியல் மாநாட்டுக் கழகம் (Indian Science Congress Association) தொடங்கப்பட்டது. பிரித்தானிய விஞ்ஞானிகளான பேராசிரியர் ஜெ.எல்.சிமான்சன், பேராசிரியர் பி.எஸ்.மக்மோகன் ஆகியோர் இந்திய அறிவியலின் ஜாம்பவான்களான அசுடோஷ் முகர்ஜி, வேதியியலாளர் பி.சி.ரே உட்பட பலரது பங்களிப்போடு ISCA தொடங்கப்பட்டு, 1914 முதல் 1947 வரை ஆண்டுதோறும் இந்திய அறிவியல் மாநாடுகள் நடத்தப்பட்டன.
அறிஞர்களான டாக்டர் விஸ்வேஷ்வரய்யா, ஜெகதீஷ் சந்திரபோஸ், சத்யேந்திரநாத் போஸ், மேக்நாத் சாஹா உட்பட ஆண்டுதோறும் ஓர் இந்திய நல்லறிஞர் தலைமையில் மாநாடு ஒரு சிறந்த நகரில் அறிவியல் அறிஞர்களை உலகெங்கிலுமிருந்து வரவழைத்து சிறப்பாக கூட்டப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை நம்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப அறிவை விஸ்தரிக்க ஒருவாரகாலம் நடக்கும் திருவிழாவாக அதை அவர் திட்டமிட்டு மாற்றினார். 1976 முதல் இந்திய அறிவியல் மாநாட்டின் நடைமுறையை அதன் அப்போதைய தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் லேசாக மாற்றி ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு பொதுக் கருபொருளை மையமாக வைத்து பலதுறை வல்லுனர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றுகூடி விவாதிக்கும் அரங்கமாக அதை மாற்றினார். உலகெங்கும் இந்திய அறிவியல் மாநாட்டை முன்உதாரணமாகக்கொண்டு பல நாடுகள் அதைப் பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.
2014ல் மத்திய இந்துவெறி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு இந்திய அறிவியல் மாநாடும் கேலிக் கூத்தாக்கப்பட்டது. பசுவின் மூத்திரம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பதும், ஸ்டீபன் ஹாக்கிங் வேதம் படித்தவர் என்று பேசுவதும். சிவபெருமான்தான் முதல் சூழலியல் சாதி என்று பினாத்துவதும், விண் ஊர்தி இயலையே உலகிற்கு வழங்கியது வேத-இதிகாச காலத்து முனிவர்கள்தான் என்று பேட்டி அளிப்பதுமாக முற்றிலும் அறிவில் சிந்தனைப் போக்கிற்கே எதிரான சனாதன பிற்போக்குவாத மேடையாக அதை மாற்றின.
மோடி அரசு 2015-ல் இந்தியா-சர்வதேச அறிவியல் உச்சிமாநாடு எனும் போலி அறிவியல் மாநாட்டை நடத்தத் தொடங்கியது. விஞ்ஞானப் பிரதி (விபா) எனும் 2 காவி-அறிவியல் குஜராத் அமைப்பிற்கு பல நூறு கோடி ரூபாய் பணம் ஒதுக்கி போலி அறிவியலைப் பரப்புகிறது. இந்தியா சர்வதேச அறிவியல் உச்சிமாநாடு ஆண்டுதோறும் 35 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. இந்திய அறிவியல் மாநாடு எனும் உண்மையான அறிவியல் மாநாட்டின் மொத்தச் செலவு இரண்டு கோடி ரூபாய்கூட கிடையாது அந்தப் பணம்கூட இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டதால் 2024 இந்திய அறிவியல் மாநாடு நடக்காது என்ற அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்திய அறிவியல் மாநாட்டுக் கழகம் இன்னமும் தனது முயற்சியை கைவிடவில்லை. ஏனைய பல அறிவியல் ஆர்வலர்களிடம் அது நிதி உதவி கோரி உள்ளது. தற்போது கேரள அரசு முன் நின்று நடத்தும் உலக அறிவியல் திருவிழா (lobal Science Festival) போல நம் தமிழகமும் ஓர் அறிவியல் திருவிழாவை நடத்த வேண்டும். இந்திய அறிவியல் மாநாட்டுக் கழகத்தோடு இணைந்து நாம் அதை நடத்தலாம். கேரளா 25 ஏக்கர் நிலத்தில் ஐந்தாயிரம் அறிவியல் ஆய்வாளர்கள், பங்கேற்பாளர்கள் துணையோடு, உயிரியல் பூங்காக்ககள் முதல் நிலா அருங்காட்சியகம் வரை பல அற்புதங்களுடன் அறிவியல் விழிப்புணர்வு, அறிவியல் தொழில்நுட்ப வெகுஜனப் பங்களிப்பை நோக்கி நடைபோடுவதுதான் இந்திய அறிவியலை மீட்டெடுக்கும் ஒரேவழி.
உண்மையான அறிவியல் ஆய்வுகள், தட்பவெப்ப மாறுபாடு ஆராய்ச்சி என யாவற்றுக்குமான நிதி உதவியை மத்திய அரசு நிறுத்திவிட்டதோடு 300க்கும் மேற்பட்ட அறிவியல் விருதுகளையும் முடக்கியது. குழந்தைகளின் பாடப்புத்தகங்களிலிருந்து டார்வினையும் தன் வேதி அட்டவணையைக்கூட நீக்கிவிட்டு வேதகால அறிவியல் எனும் காவி அபத்தத்தை திணிக்கும் அரசைத் தூக்கி எறிவது ஒன்றுதான் இந்திய அறிவியலின் இருண்ட காலத்தை ஒளியேற்றிட ஒரே வழி. அதற்கு ஒன்றுபட்டு பாடுபட தேசிய அறிவியல் தினத்தில் உறுதி ஏற்போம்.
