சந்திப்பு : கமலாலயன்
ஈரோடு நகரிலிருந்து சுமார் முப்பது கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பேரூர் விஜயமங்கலம். வரலாற்றுப்புகழ் வாய்ந்த, சமண மதம் வலுவாக வேரூன்றியிருந்த ஓர் ஊர். அங்கு, ஓடை.
பொ. துரை அரசன் என்ற அரசியல் செயற்பாட்டாளர், இலக்கிய ஆர்வமிக்க தீவிர வாசகர், நீண்ட காலமாகப் பழைய புத்தகங்கள், பத்திரிகைகளை ஒன்றுவிடாமல் வாங்கிச் சேகரித்துப் பாதுகாக்கும் ஒரு தனியார் நூலகப் புரவலர் வாழ்ந்து வருகிறார். கடந்த ஒன்பது வருடங்களாக ‘இடது’ என்ற அரசியல், பண்பாட்டு ஆய்வு இதழ் ஒன்றைத் தோழர்களுடன் இணைந்து நடத்திக் கொண்டிருக்கிறார். ‘இடது பதிப்பகம்’ என்பது இவரின் நூல் வெளியீட்டகத்தின் பெயர். அவரைப் ‘புதிய புத்தகம் பேசுது’ வாசகர்களுக்காக நேரில் சென்று சந்தித்தேன். பிற்பகல் ஒன்றரை மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரையில் அவரின் நூலகத்தையும், அங்குள்ள புத்தகங்கள்-பத்திரிகைகளையும் பார்வையிட்டு, அவருடன் உரையாடியும் நேரம் செலவிட்டேன். அது ஓர் அரிய அனுபவம். அந்த அனுபவத்தை முடிந்தவரை இந்த நேர்காணல் மூலம் வாசக அன்பர்களுக்குக் கடத்த முயன்றிருக்கிறேன்.
உங்கள் சொந்த ஊரே விஜயமங்கலம்தானா?
இல்லை; இங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள ஓடைக்காடு என்ற கிராமம்தான் என் சொந்த ஊர். அங்கு 1949ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதியன்று பிறந்தேன். உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் 1967-ஆம் ஆண்டு வாக்கில் கோவை நண்பர்களுடன் சேர்ந்து ‘இளைய மாதவி’ என்ற பத்திரிகையை வெளியிட்டோம். இலக்கியத்துக்கென்று தொடங்கப்பட்ட அந்தப் பத்திரிகை இரண்டே இதழ்களுடன் நின்று விட்டது. அப்போதே எங்கள் இதழில் டி.ஹெச். லாரன்ஸ் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறோம்.
எப்போதிருந்து நேரடிக் களச்செயல்பாடுகளில் ஈடுபட்டீர்கள்?
1968-இல் திருச்சி நகரில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாடு ஒன்று நடைபெற்றது. நான் அதில் நேரில் போய்ப் பங்கேற்றேன். அப்போதிலிருந்து இன்றுவரை கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாடுகளில் செயலூக்கமிக்க பங்கேற்பாளனாக இருந்து வருகிறேன். அந்த ஆண்டிலேயே (1968-மே) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகிச் சுமார் ஐந்தாண்டுகள் கிளைச் செயலாளராகவும், ஒன்றுபட்டிருந்த ஈரோடு மாவட்டக் கடசியின் பெருந்துறை வட்டத் துணைச்செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். இன்னும் நான் இந்தியக் கம்யூனிஸ்ட் கடசி உறுப்பினர்தான்.
எப்போதிருந்து தீவிர வாசிப்புப் பழக்கம் தொடங்கியது?
அறுபதுகளின் இறுதியில் டி.ஹெச். லாரன்ஸ் போன்றோரின் நாவல்களை மொழிபெயர்ப்புகள் மற்றும் ஆங்கில மொழியில் படிக்கத் தொடங்கினேன். குறிப்பாக, லேடி சாட்டர்லியின் காதலன், டாக்டர் ஷிவாகோ போன்ற நாவல்களை வாசித்தபோது அவை என்னைக் கவர்ந்தன. பின், கைக்குக் கிடைக்கும் புத்தகங்களை வாசித்துத் தள்ளினேன். எழுபதுகளில் அந்தோணியோ கிராம்சியின் ‘சிறைக்குறிப்புகள்’, சார்த்தரின் நூல்கள் போன்றவற்றைப் புரிந்தும் புரியாமலும் படிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டேன். இப்போது தத்துவம் சார்ந்த, குறிப்பாக ஹெகல், பிரடெரிக் ஜேம்சன், தெரிதா, காண்ட், அல்தூசர், பூக்கோ, Meszaros போன்றோரின் நூல்களைத் தோழர் பாலச்சந்திரனின் உதவியுடன் முடிந்தவரை மறு வாசிப்புச் செய்துகொண்டிருக்கிறேன். இலக்கியப் பிரதிகளைவிடவும் அரசியல் சார்ந்த கட்டுரை, ஆய்வு நூல்களே அன்றும் சரி, இன்றும் சரி, என் முதல் தேர்வுகளாக இருந்து வருகின்றன.
உங்கள் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டியவர்களில் குறிப்பிடத்தக்க நண்பர் யார்?
நண்பர்களில் சிலர் உண்டு;ஆனால், மறக்க முடியாத தூண்டுகோலாக இருந்து வழிகாட்டிய ஒருவர் இருந்தார். அவரைப்பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும். அப்போது எங்கள் ஊருக்கு அருகிலுள்ள பெரிய நகரமான பெருந்துறையில் இருந்த கிளை நூலகத்தின் நூலகர் திரு. கருப்பண்ணன்தான் அவர். அவர்தான் என்னுடைய ஆர்வத்தைப் பார்த்துவிட்டுச் சோவியத் இலக்கியங்கள், தமிழின் முன்னோடிப் படைப்பாளிகளின் நூல்கள் உள்பட அனைத்துவகையான புத்தகங்களையும் எனக்கு அறிமுகப்படுத்தி, வழிகாட்டியவர்.
பிறகு உங்கள் கவனம் இடதுசாரிப் புத்தகங்கள், பத்திரிகைகள் பக்கம் திரும்பியதல்லவா?
வானம்பாடி’ இதழ், ‘புதிய தலைமுறை’ என்று கோவையின் இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட்டது எனக்கு நினைவுக்கு வருகிறது.
ஆமாம், இந்தக் காலகட்டத்தில்தான் ‘புதிய தலைமுறை’ இதழைப்பற்றிக் கேள்விப்பட்டேன். கோவைக்குப் போய்ப் பேரூர் தமிழ்க் கல்லூரியில் ‘புதிய தலைமுறை’ இதழின் முக்கியப் பங்கேற்பாளரான புலவர் ஆதியைச் சந்தித்தேன். அவருடன் விவாதித்துத் தமிழில் இயங்கியல் பற்றித் தெளிவுபடுத்திக் கொண்டேன். பின் பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி மாணவனாக இருந்தபோது மு. பழநியப்பன், சொ.மி. காளிமுத்து, ஐ.எம். ஷெரீப், எல். ஜி. கீதானந்தன் போன்றவர்களுடன் எனக்கேற்பட்ட தொடர்புகளும், தோழமையும், சந்திப்புகளும் என்னை சி.பி. ஐயுடன் மேலும் நெருக்கமாக்கி, தத்துவா ர்த்த ரீதியாக நெறிப்படுத்தின. கோவை ஞசானியும் அங்கிருந்த ஒரு முக்கியமான கோட்பாட்டு அறிஞர். அவர்களோடு இணைந்து செயல்படுவதில் ஆர்வங் காட்டினேன். அதே சமயம், தீபம் நா.பார்த்தசாரதி போன்ற இலக்கியவாதிகளை எங்கள் ஊரான விஜயமங்கலத்துக்கு அழைத்து வந்து பாராட்டு நிகழ்வுகளை நடத்தினேன்.நா.பா.வுடன் வந்த கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் அண்ணனுடன் நெருக்கம் ஏற்பட்டது. ‘தாமரை’ பழைய இதழ்களின் தொகுப்பைக் கொடுத்துப் படிக்க உதவியவர் வேலாயுதம் அவர்கள்தான்.
தி. க. சிவசங்கரன், கவிஞர் முல்லை ஆதவன் போன்றோரும் இப்போது உங்களுடன் நெருக்கமானார்கள், இல்லையா?
ஆமாம்; ‘தாமரை’ இதழ் ஆசிரியராக அப்போது தி.க.சி. இருந்தார். இலங்கைத் தமிழ்ப் படைப்பாளி செ. கணேசலிங்கன் அவர்களின் ‘செவ்வானம்’ நாவல் ‘தாமரை’ நடத்திய இலக்கிய விமரிசனப்போட்டியில் தேர்வாகிப் பரவலான கவனம் பெற்ற சூழல். அப்போது எங்கள் கல்லூரியில் ஆய்வு மாணவராயிருந் தவர் (பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிற்பாடு தமிழ்த் துறைத் தலைவரானார்) இரா. சந்திரசேகரன், கவிஞர் முல்லை ஆதவன் என்ற பெயரில் கவிதைகள் படைத்துப் புகழ் பெற்றிருந்தார். அவருடனும், அதே கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்றுகொண்டிருந்த கவிஞர் அக்கினி புத்திரன் (சு.அரங்கராசன்), முப்பால் மணி போன்றோருடனும் நல்ல நட்புக் கிடைத்தது. இவர்கள் தவிர அன்றைய ஆய்வுலகில் மிகவும் புகழ் பெற்ற ஆய்வாளரான நா.வானமாமலை அவர்களின் அறிமுகமும் கிடைத்தது.
‘வானம்பாடி’களுடன் சேர்ந்து சிறகடிக்கத் தொடங்கியது எப்போது?
ஏறக்குறைய இதே காலகட்டத்தில் கோவையிலிருந்து ‘விலையிலாக் கவிமடல்’ என்ற முத்திரை வாக்கியத்துடன் ‘வானம்பாடி’ இதழ் வெளிவரத் தொடங்கியது. அப்போது நான், கோவை ஞசானி, கவிஞர் புவியரசு, ஜன. சுந்தரம், இளமுருகு போன்ற நண்பர்கள் சேர்ந்து ‘வானம்பாடி’யின் ஒன்பதாவது இதழ் வரையில் கொண்டு வந்தோம். பின்னர் இடதுசாரி அரசியல் குறித்த கருத்து வேறுபாடுகளால் கோவை ஞசானி, அக்கினிபுத்திரன், நான் ஆகியோர் தனியே பிரிந்து ‘வேள்வி’ என்ற ஓர் இதழைத் தொடங்கினோம். இரண்டு இதழ்களுடன் அதுவும் நின்று போனது. இந்தக் காலங்களில் வெரைட்டி ஹால் சாலையிலிருந்த மோகன் புக் ஸ்டால் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். என்னை வளர்த்தெடுத்ததில் இந்தக் கடைக்கும் ஒரு பெரிய பங்குண்டு. ‘ப்ரன்ட்டியர்’, ‘மெயின் ஸ்ட்ரீம்’, ‘ரெட் ஸ்டார்’, ‘தீபம்’, ‘தாமரை’, ‘செம்மலர்’ தொடங்கி கசடதபற வரையில் அநேகமாக அனைத்துப் பத்திரிகைகளும் இங்கே கிடைத்தன. அறிவுலகின் அட்சயப்பாத்திரம் என்றால், அது மோகன் புக் ஸ்டால்தான்!
1970-கள் காலம் தமிழில் சிறு பத்திரிகைகளின் காலம் என்று பொதுவாக அறியப்பட்ட காலம். அது ஒரு வகையில் உண்மையும்கூட. அதற்கு முன்போ, பின்போ எப்போதுமே அத்தனை சிறு பத்திரிகைகள் ஒரே சமயத்தில் அத்தனை வீரியத்துடன் வெளியானதாகத் தெரியவில்லை. அந்த நேரத்தில் நீங்கள் எதுவும் சிறு பத்திரிகையுடன் தொடர்பில் இருந்தீர்களா?
ஆமாம். அப்போது நாங்கள் ‘விவேக சித்தன்’ என்றோர் இதழைத் தொடங்கி நடத்தி வந்தோம். அன்று தமிழ் விமரிசனத்துறையில் முன்னணிச் செயல்பாட்டாளர்களாக இருந்த அத்தனை ஆளுமைகளும் இந்தப் பத்திரிகையுடன் தொடர்பில் இருந்தனர். பேராசிரியர் நா. வானமாமலை, தருமு சிவராமு, ஆய்வாளர் ‘இலக்கிய வெளி வட்டம்’ வெ, கிருஷ்ணமூர்த்தி, வெங்கட் சுவாமிநாதன் போன்ற ஜாம்பவான்கள் அனைவரும் இதில் பங்களிப்புச் செய்தனர். 1972-75 காலகட்டத்தில் இந்த இதழ் நல்ல வரவேற்புப் பெற்று வந்தது. என்றாலும், சிறு பத்திரிகைகளுக்கே உரிய சிக்கல்களால் எட்டு இதழ்களுடன் தனது பயணத்தை ‘விவேக சித்தன்’ பத்திரிகை நிறுத்திக் கொண்டுவிட்டது.
இந்த முயற்சிகளின்போது, கோவை ஞசானி, எஸ்.வி.ஆர்.சத்தியமங்கலம் எஸ். என். நாகராசன் ஆகியோருடனான சந்திப்புகள் மார்க்சியத்தின் இன்னொரு துணை நீரோடையான ப்ராங்பர்ட் சிந்தனைப் பள்ளி, இருத்தலியல் வாதம் ஆகிய தத்துவப் பிரிவுகளை எனக்கு அறிமுகம் செய்தன. இந்தக் காலங்களில் மறைந்த தோழர் எம்.கே.ஆர். எனக்கு நவீன மார்க்சியம் மட்டுமல்லாமல், டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ். சர்மா, சட்டோபாத்யாயா ஆகியோரை அறிமுகப்படுத்தினார். ஞசானியை இக் காலத்தில் தினமும் சந்தித்து உரையாடியதுண்டு. எங்கள் இல்லத்துக்கு அவர் வந்து விடிய விடிய மார்க்சியம், இலக்கியம் பற்றியெல்லாம் உரையாடிய நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்காத நினைவுகளாகும். குறிப்பாக, எழுபதுகள்-எண்பதுக ளில் சிற்றிதழ்கள் பெருகி வந்துகொண்டிருந்த காலம்.
‘வானம்பாடி’, ‘கார்க்கி’, ‘கண்ணதாசன்’, ‘கசடதபற’ -இப்படியான இதழ்களைக் குறிப் பிட்டுச் சொல்வேன். ‘வானம்பாடி’யின் முதலிரு இதழ்களை முல்லை ஆதவன் தன் சொந்தச் செலவில் வெளியிட்டார். நானும், அக்கினிபுத்திரனும் அவருக்குத் துணையாக நின்றோம். கோவை ஞசானியும், சிற்பியும் மூன்றாவது இதழில் இணைகிறார்கள். ஆரம்ப இதழ்களிலிருந்து இதழ் வடிவமைப்பு, அச்சாக்கம் ஆகிய அனைத்திலும் கவிஞர் புவியரசுவின் பங்கு மகத்தானது. மேலும், கவிஞர் ப.கங்கைகொண்டான், கவிஞர் மு.மேத்தா, ஜன.சுந்தரம் என எல்லாரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தியவர் கவிஞர் புவியரசு அவர்கள். சேலம் தமிழ்நாடனும் இந்தக் காலகட்டத்தில் எங்களுடன் இணைந்து கொண்டார். தவிர்க்க இயலாத அரசியற் காரணங்களால் வானம்பாடி இயக்கம் ஒன்பதாவது இதழுடன் பிளவுபடுகிறது.
சிகரம் செந்தில்நாதன் போன்றோருடனும் உங்களுக்குத் தொடர்புகள் இருந்தன, இல்லையா?
ஆமாம். ‘சிகரம்’ என்ற சிற்றிதழைச் செந்தில்நாதன் நடத்திக் கொண்டிருந்தார். 70-களில் தொடங்கப்பட்ட பல இடதுசாரி இலக்கிய இதழ்களில் இது தனி ரகமாக அமைந்தது. அவர் ஒரு வழக்குரைஞரும் கூட. எனவே, இயல்பாகவே சிகரத்தில் வெளியான கட்டுரைகள் யாவும் மிக வேகத்துடன், நக்கல் தொனியில், தர்க்க ரீதியான வாதங்களை முன்வைத்து எதிர்வாதங்களைச் சாடிக்கொண்டிருந்தன. அந்த இதழின் படைப்புகளும் மிகவும் சிறந்த கலை நயத்துடன் இருந்தன. அதே சமயம், மிக ஆரம்பகட்ட எழுத்தாளரின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் கலை நயம் குன்றியவையாக இருந்தாலும்கூடப் பிரசுரிக்கப்பட்டன. பல தொடக்கநிலைப் படைப்பாளிகள் இந்தப் பத்திரிகை மூலம் கவனம் பெற்றனர்.
ஆம்; நானே ‘சிகரம்’ மூலம் மிகுந்த உத்வேகம் பெற்றவன்தான். என்னுடைய ‘குருவி’ கதை அதில்தான் வந்தது. பிற்பாடு பலராலும் பாராட்டப்பெற்ற கதை அது. என்போல் பலரும் ‘சிகரம்’ இதழினால் உத்வேகம் அடைந்து நிறைய எழதினார்கள். . அவரே மக்கள் எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பையும் உருவாக்கிக் கொஞ்சகாலம் சிறப்பாக வழிநடத்தி வந்தார்தானே?
ஆமாம்; அதைத்தான் சொல்ல வந்தேன். அந்த அமைப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்புக்கு முன்னோடியாக இருந்தது. நானும், நாவலாசிரியர் பொன்னிலன் அவர்களும் மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் மாநில அமைப்புக்குழுவில் இருந்து செயல்பட்டிருக்கிறோம். இந்த அமைப்பும் கொஞ்ச காலத்துக்குப்பின் செயல் இழந்தது. அமைப்பு மாநாடு ஒன்று மட்டும் சிறப்பாக நடந்தது.
பின்னர் ‘நிறப்பிரிகை’ இதழ் மற்றும் ‘விடியல் பதிப்பகம்’ ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்தீர்கள் என்று நினைக்கிறேன்?
ஆம். ‘நிறப்பிரிகை’யின் வருகை எங்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்தது. அதேபோல விடியல் சிவாவின் பதிப்பு முயற்சிகள் இடதுசாரிப் புத்தகப் பண்பாட்டில் ஒரு பெரிய வெளிச்சக்கீற்றாக அமைந்தன. நாங்கள் சிவா இறக்கும்வரை அவருடன் இணைந்து செயல்பட்டோம். பின் 2005-ஆம் ஆண்டில் ‘அநிச்ச’ என்ற இதழைத் தொடங்கினோம். அதுவும் இரண்டே இதழ்களுடன் நின்று போனது.
அடுத்து வேறு எந்தெந்தப் பத்திரிகைகளில் எல்லாம் எழுதி இருக்கிறீர்கள்?
‘புதிய புத்தகம் பேசுது’ இதழில் நிறைய நூல் அறிமுகக் கட்டுரைகள்; ‘ஜனசக்தி’, ‘தாமரை’, ‘உங்கள் நூலகம்’ போன்ற இடதுசாரிப் பத்திரிகைகள்தாம் என்னைப் போன்றவர்களுக்குத் தாராளமாக இடமளித்து எங்களை ஊக்குவித்து வந்தன.
நிறையப் புத்தகங்களின் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறீர்கள் அல்லவா?
ஆமாம். குறிப்பாகப் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுடன் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகப் புத்தகப் பதிப்பு, பத்திரிகை, வெளியீட்டு முயற்சிகளில் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்திருக்கிறேன். அவர் பல்வேறு பத்திரிகைகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன். அ. மார்க்ஸ்-ஒரு மதிப்பீடு என்ற பொருளில் நாங்கள் நடத்திய கருத்தரங்கக் கட்டுரைகளையும் தோழியர் மீனா அவர்களுடன் சேர்ந்து தொகுத்து நூல் வடிவில் தந்தோம்.
தவிர, அடிப்படையில் தமிழ்த் தேசியவாதியாக இருந்தாலும், சாதி-வர்க்கம் போன்ற பிரச்னைகளில் மார்க்சியக் கண்ணோட்டத்துடன் (அவரது பார்வை யில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்) எழுத்தாளர் கருணா மனோகரனின் எல்லா எழுத்துகளையும் ‘சாதி-வர்க்கம்-தேசியம்’ என்ற தலைப்பில் காலஞ்சென்ற தோழர் செ. நடேசனுடன் இணைந்து வெளியிட்டுள்ளோம். தோழர் கருணா மனோகரன், தோழர் விடியல் சிவாவுடன் சேர்ந்து அம்பேத்கரின் முக்கியமான நூல்கள் சிலவற்றைத் தமிழில் வெளிக்கொணர்ந்தவர்.
இவை தவிர நீங்கள் தொகுத்து வெளியிட்ட அல்லது மற்றவர்கள் வெளியிட உதவிய வேறு ஏதேனும் முக்கியமான புத்தகங்கள் உண்டா?
தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் படைத்த சிறுகதைகள் அனைத்தையும் வாசித்து அவற்றுள் சிறந்த பத்துக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளேன். அவர் இயக்கப்பணிகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கிய பின், அவருடைய படைப்புப்பணி சற்றுப் பின்தங்கியிருப்பதைக்கண்டு மனம் வருந்துகிறேன். அவரிடமே இது பற்றிச் சொல்லியும் இருக்கிறேன்.
நீங்கள் சொல்வது சரிதான். எனக்கும் இந்த வருத்தம் உண்டு. ஆதவன் அவர்களின் பல கதைகள் மிகவும் அற்புதமானவை. பகடியில் மன்னன் அவர். பகத்சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து அவர் எழுதிய ‘இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய் விடுவதில்லை’ கதையைப் படித்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு இந்த ஏக்கம் இருக்கும். அப்படியான கதை அது.இப்போதெல்லாம் அவரின் கதைகளே வருவதில் லையே? நாமெல்லாரும் அவரிடம் தனது படைப்புப்பணிகளையும் சற்றுக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்வோம்.
இங்கே உங்கள் நூலகத்தில் நீங்கள் சேகரித்து வைத்துள்ள புத்தகங்கள், பத்திரிகைகளின் எண்ணிக்கையையும், அவற்றின் தன்மைகளையும் பார்த்தபோது மிகவும் பிரமிப்பாக இருந்தது. பெரியாரியம், மார்க்சியம், பெண்ணியம், தத்துவ இயல், விமரிசன இயல், மொழியியல், ஒப்பியல் என்று மிக முக்கியமான பொருண்மைகளில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. ஆங்கிலத்திலும் கணிசமான நூல்கள் இருக்கின்றன. எப்படி இந்த மாதிரிப் புத்தகச் சேகரிப்பாளராக ஆனீர்கள்?
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் உரத்துச் சொல்ல விரும்புகிறேன். பல நண்பர்களும், நேர்காணல் செய்பவர்களும் என்னை ஒரு புத்தகச் சேகரிப்பாளர் என்றே வகைப்படுத்தி விடுகிறார்கள். அது தவறு. நான் ஒரு தீவிரப் புத்தக வாசிப்பாளர்தானே தவிர, சேகரிப்பாளர் அல்லர். படிக்க விரும்பித்தான் நான் ஒவ்வொரு பத்திரிகையையும், புத்தகத்தையும் சிறு வயதிலிருந்தே காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஓரளவு படித்து முடிப்பதற்குள் இன்னும் நாலு புத்தகங்களும், இரண்டு இதழ்களும் வந்து விடுகின்றன. சரியென்று அவற்றை வாங்கிப் படிக்கத் தொடங்குகிறேன். இன்னும் சிலவற்றின் வருகை நிகழ்கிறது. அவை என் நூலகத்துக்குள் வந்து விடுகின்றன. இப்படித் தான் இங்கிருக்கிற அத்தனை புத்தகங்களும். பத்திரிகைகளும் வந்திருக்கின்றன. சேமிப்பு என் நோக்கமே இல்லை. அது ஓர் இயல்பான வளர்ச்சிப்போக்கு; அவ்வளவுதான்.
இங்கே என்னென்ன இதழ்கள், புத்தகங்கள் இருக்கின்றன?
நீங்கள் கொஞ்சம் முன்பு சொன்னவைதாம்.பெரியாரியம், மார்க்சியம் சார்ந்தவையே அறுபது சதவிகித நூல்கள்; இதழ்கள். பின், மற்ற தத்துவ இயல் சார்ந்த புத்தகங்கள். தமிழில் இதுவரை வெளியான அத்தனை சிற்றிதழ்களும் அநேகமாக முதல் இதழிலிருந்து இன்று வரை அல்லது அவற்றில் எத்தனை வெளிவந்தனவோ அத்தனை இதழ்கள் இங்குள்ளன. அவற்றை அட்டைப்பெட்டி களில் அடுக்கி மேலே போட்டிருக்கிறேன். புத்தகங்கள் ஒவ்வோர் அலமாரியிலும் மூன்று மூன்று வரிசைகளில் அடுக்கியிருக்கிறேன். முடிந்த வரை பொருள்வாரியாகப் பிரித்து அடுக்கியுள்ளேன். இரவல் கொடுப்பதில்லை என்ற கொள்கையைக் கொஞ்சகாலம் முன்புதான் எடுத்தேன். ஏனென்றால், இரவல் போகும் எந்தப் புத்தகமும் ஒன்றுகூடத் திரும்பக் கிடைத்ததே இல்லை.
சிறு வயதிலிருந்தே புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கியதாகக் கூறினீர்கள், இல்லையா? அந்த வயதில் காசு ஏது?
அதுவா, எல்லாம் செல்லம்தான். நான் எங்கள் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. என் மீது அவர்கள் மிகவும் பிரியமாக இருப்பார்கள். பிற்பாடு நான் கிராம நிர்வாக அலுவலர் வேலை பார்த்தேன். எனக்குக் கிடைத்த சம்பளமே போதுமானதாயி ருந்தது. என் செலவுகளில் பெரும்பகுதி இந்தப் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வாங்குவதற்கான செலவுகள்தாம். இங்குள்ள ஆங்கில இதழ்களில் மிகப் பழையது என்று பார்த்தால், ‘என்கவுன்ட்டர்’ பத்திரிகையைச் சொல்லலாம். அது இலண்டனில் இருந்து வெளியானது. என்னிடம் அதன் பதினெட்டு இதழ்கள் உள்ளன. அடுத்து ‘ப்ரண்ட்டியர்’ இதழ். இது வாரப் பத்திரிகை. அவர்கள் ஆண்டுதோறும் வெளியிடும் ஆண்டு மலர்களை ஆரம்பத்திலிருந்து இன்று வரை வைத்திருக்கிறேன்.
சரி, நானும் இதுபோல் புத்தகங்கள், பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்கிக் குவித்து விட்டு அவற்றைப் பாதுகாப்பதற்கு முடியாமல் நண்பர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடுத்துக் கொன்டிருக்கிறேன். நீண்ட காலமாக எனக்கொரு சந்தேகம் இருக்கிறது. நாம் இப்படி வாங்கிக் குவிப்பவற்றைக் காப்பாற்ற முடிவதில்லை. வீட்டில் இருப்பவர்களே பெரிய ஆர்வம் காட்டாத நிலையில், அவற்றை என்ன செய்வது என்றே தெரியாமல் ஒரு கட்டத்தில் திகைத்து நிற்கிறோம். இது அவசியமா? இப்படியெல்லாம் பொருளையும், நேரத்தையும், உழைப்பையும் செலவழித்து நாம் சேகரிப்பவற்றினால் என்ன பயன்? இவை நமது இலட்சிய ஈடேற்றங்களுக்கு எந்த வகையில் பயன்படப்போகின்றன?
நமது எதிர்பார்ப்புகள் மிகவும் பிரமாண்டமானவையாக இருக்கின்றன. இந்த மாதிரிப் பத்திரிகை, புத்தகம் சேகரிப்பதால் மட்டும் நமது இலட்சியங்கள் ஈடேறிவிடா. இவற்றைப் பலரும் படிப்பதற்குத்தான் நாம் பாடுபட வேண்டும். அது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமில்லை. நமது காலம் வரை, நாம் கண்களை மூடும்வரை பாதுகாப்போம். இனி நம்மால் முடியாது என்றொரு நிலை வரும்போது, அவற்றை நாமே ஒரு நூலக வடிவில் இருப்பு வைக்க முடிந்தால் செய்து வைத்து விட்டுப் போகலாம் அல்லது கன்னிமாரா பொது நூலகம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், பேராசிரியர் அன்பழகன் நூலகம் போன்ற நூலகங்களுக்குத் தானமாக வழங்கிவிட்டுப் போக வேண்டியதுதான். என்ன, ஒரு வருந்த வேண்டிய நிலை என்றால் இடதுசாரி இயக்கங்களேகூட இம்மாதிரியான அறிவுக்களஞ்சியங்களைப் பாதுகாக்க முன்வருவதில்லை. மாநாடுகள், கூட்டங்களுக்குச் செலவழிக்கும் பெருந்தொகைகளில் ஒரு சிறு பகுதியை இந்த மாதிரி ஆவணங்களைப் பாதுகாப்பதற்குச் செலவு செய்தாலே போதும். ஆனால், அந்தப் பார்வையே இல்லை. என்ன செய்ய முடியும்?
உங்கள் பெற்றோர் உங்களின் இந்தப் புத்தகம்-பத்திரிகை சேகரிப்புக்கும், வாசிப்புக்கும் தடையாக இல்லையென்று சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ் கிறேன். இப்போது உங்கள் இணையரின் ஒத்துழைப்பும் அதேபோலக் கிடைக்கிறதா?
ஆஹா, மிகவும் அதிகமாய்க் கிடைக்கிறது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக என்னுடன், பொதுப்புத்தியிலிருந்து வெகு தூரம் விலகி நடக்கிற, நிலவுகிற சமூகத்துடன் முரண்பட்டு, அதை மாற்றியமைக்கப் போராடிக்கொண்டுள்ள என் உணர்வுகளைப் புரிந்துகொண்டுள்ள எனது இணையர் ராஜம் அவர்களை பற்றிச் சொல்ல வேண்டும். அவர்கள் இல்லையென்றால் என் செயல்பாடுகள் எவையும் இல்லையென்றுதான் சொல்வேன்.
உங்கள் புத்தக, பத்திரிகைச் சேகரிப்புகளின் பின்னால் இருக்கும் உந்துசக்தி எது? வெறுமனே தீவிர வாசிப்பு ஆர்வம் மட்டுமா அல்லது அதைத்தாண்டிய ஆற்றல் ஏதேனும் உண்டா?
என்னைப்பற்றிய பொதுப்புத்தியின் கணிப்பு, நான் ஒரு தீவிர புத்தக, பத்திரிகைச் சேமிப்பாளன் என்பதுதான். இதை நான் முற்றிலும் மறுக்க விரும்புகிறேன். முதல் நோக்கம், அதுவும் தொடக்க நிலையில் வெறும் வாசிப்பு மட்டுமாக இருந்தது. ஆனால், என்றைக்கு எனக்கு ஒரு தெளிவு பிறந்ததோ அப்போதிருந்து எனது அரசியல் நிலைப்பாட்டிற்காகவும், செயல்பாட்டுக்காகவுமே இவை எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறேன். அரை நூற்றாண்டு காலச் சேகரிப்புகள் இங்கே இருக்கின்றன. என் வாசிப்பிலும் சரி, சேமிப்புகளிலும் சரி, ஒரு தெளிவான அரசியல் செயல்பாடு இருக்கிறது. மார்க்சிய அரசியல் வழிப்பட்ட இயக்கங்கள், கோட்பாடுகள், வரலாறுகள், தத்துவங்கள் இன்ன பிறவற்றைக்கொண்ட ஆய்வு நுலகம்தான் இங்கேயுள்ள நூலகம்.
இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?
நானும், மறைந்த மருத்துவர் ஈரோடு வெ. ஜீவானந்தமும், மற்ற சில தோழர்களுடன் இணைந்து ‘இடது’ என்ற ஓர் இடதுசாரி அரசியல், தத்துவ ஆய்வேடு ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறோம். காலாண்டு இதழ் இது. இதுவரை இருபத்தியொரு இதழ்கள் வெளியாகியுள்ளன. காலப்போக்கில் கருத்து வேறுபாடுகள், நடைமுறைச் சிக்கல்களால் நண்பர்கள் விலகிக்கொண்டார்கள். இப்போது நண்பர் கண.குறிஞ்சி ஆசிரியப் பொறுப்பு வகிக்கிறார். நான் வெளியிடுகிறேன். பல ஆங்கில இதழ்களில் இருந்து மார்க்சிய அரசியல் விமரிசனக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். இன்றைய காலகட்டத்தின் தேவை ‘ஒன்றிணைந்த அரசியல்’ (கோ-ஆர்டினேட்டட் பாலிடிக்ஸ்) என்று நம்பும், அந்தக் கருத்தியலை முன்னெடுத்துப் போகிற இதழ் அது. அதன் செயலூக்கத்தை, சமீபத்தில் மறைந்த வே.ஜீவானந்தம், செ.நடேசன் போன்றோரின் இழப்பு குறைத்துச் சற்றுப் பின்னடைவைத் தந்துள்ளது. இப்போது இருபத்தியிரண்டாவது இதழ் வெளியாகியுள்ளது. இது தொடருமென்ற நம்பிக்கையுள்ளது.
இங்குள்ள இதழ்களில் மிகப்பழைமையானது எது?
இலண்டனில் இருந்து வெளிவந்த ‘என்கவுன்ட்டர்’ இதழ்தான். அதில் பதினெட்டு இதழ்கள் உள்ளன. இன்னொரு பழைய இதழ் -‘பிரண்ட்டியர்’ -அதுவும் ஆங்கிலம்தான். மற்றபடி, ‘சோஷியல் சயின்டிஸ்ட்’ என்ற மார்க்சியத் தத்துவ இதழ்கள் முதல் இதழில் இருந்து சமீபத்தில் வந்த 601-வது இதழ் வரை ஒன்றுகூட விட்டுப்போகாமல் உள்ளன. அதே போல, ‘பிரண்ட்லைன்’, ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’, ‘மன்த்லி ரெவியூ’, ‘எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி’, ‘நியூ ஏஜ்’, ‘மார்க்சிஸ்ட்’, ‘லிங்க்’, ‘அவுட்லுக்’ போன்ற பல ஆங்கிலப் பத்திரிகைகள் உள்ளன. தமிழில் வெளியான முக்கியமான அனைத்துச் சிற்றிதழ்களுமே என்னிடம் உள்ளன.
குறிப்பாக, ‘வானம்பாடி’, ‘சிகரம்’, ‘தாமரை’, ‘நடை’, ‘கசடதபற’, ‘சரஸ்வதி’, ‘காலச்சுவடு’, ‘கணையாழி’, ‘ஆராய்ச்சி’, ‘செம்மலர்’, ‘ஜனசக்தி’, ‘மன ஓசை’, ‘யாத்ரா’, ‘கொல்லிப் பாவை’, ‘இலக்கு’, ‘சுபமங்களா’, அ%க், ‘கவிதாசரண்’, ‘புது எழத்து’, ‘ஞானரதம்’, ‘மீட்சி’, ‘பிரக்ஞை’, ‘புதிய பார்வை’, மேலும், ‘சிதைவு’, ‘எழத்து’, ‘களம் புதிது’ –இப்படியாக எத்தனையோ பத்திரிகைகள் முதல் இதழிலிருந்து உள்ளன. ஆங்கில இதழ்களில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டவை தவிர, ‘நியூ லெஃப்ட்’, ‘எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி’, ‘இந்தியன் லெஃப்ட் ரெவியூ’, ‘மார்க்சிஸ்ட் மிஸலேனி’, ‘சொசைட்டி அண்ட் சோஷியல் சேஞ்ச்’, ‘சோவியத் லிட்டெரேச்சர்’, ‘சைனீஸ் லிட்டரேச்சர்’, ‘ஆர்ட் அண்ட் ஐடியாஸ்’, ‘ரேடிக்கல் ரெவியூ’ – இப்படியாக அறுபதுகளுக்குப் பிறகு தமிழில் வெளிவந்திருக்கிற அத்தனை இலக்கியப் பத்திரிகைகளும், அரசியல் தத்துவார்த்த ஆய்விதழ்களும் இங்குள்ளன. எனக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இவற்றையெல்லாம் பாதுகாக்க முடியுமென்றுதான் தெரியவில்லை. பார்க்கலாம். இவை எல்லாவற்றையும் சும்மா படித்து முடிப்பதற்கும்கூட ஒரு வாழ்நாள் போதாதே? (சிரிக்கிறார்).
இடதுசாரிப் பதிப்பகங்கள், இயக்கங்கள் இந்தத்துறை சார்ந்து மேலும் செய்ய வேண்டியவை என்னென்ன என்பது குறித்து உங்கள் ஆலோசனைகள் எவையேனும் உண்டா?
மறுபதிப்புகளாகவும், புதிய வெளியீடுகளாகவும் வர வேண்டிய மிக முக்கியமான ஆய்வு நூல்கள் நிறைய உள்ளன. என் நினைவுக்கு உடனே தோன்றியவற்றைக் குறிப்பிடுகிறேன்: தத்துவம் சார்ந்த தொடக்கநிலைப் புத்தகங்கள்; ‘சப்ஜெக்ட்-ஆப்ஜெக்ட் காக்நிஷன்’ என்ற ஆங்கில நூலைப் பேராசிரியர் எஸ். தோத்தாத்ரி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து என்சிபிஹெச் நிறுவனம் அதை வெளியிட்டிருந்தது. இதை மறுபதிப்புக் கொண்டு வர வேண்டும்.
மொழியாக்கம் செய்யப்பட வேண்டிய நூல்கள்:
Making of the Marxist Philosophy by
T. I. OIZERMAN
Dialectical logic by E. V. ILYENKOV
Right Wing Revisionism To-Day by Soviet and Czchoslovak Authors
History Of Realism By Boris Suchkov
Philosophical Traditions To Day By M. Iovchur
Main Currents of Marxism By Leszek Kolakowski
Indian Thought
Man and Society in Indian Life Both by
K. Damodaran
The Indian Society By R. P. Sarief
இறுதியாக, இந்த நேர்காணலின் மூலம் வாசகர்களுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
நமது எதிரிகள் இன்று ஆட்சியிலிருக்கிறார்கள். இந்த நிதர்சனத்தை நாம் பல சமயங்களில் மறந்தே விடுகிறோம். எல்லாரும் ஒரே இலக்கை நோக்கித்தான் பயணிக்கிறோம். பாதைகள் வேண்டுமானால் வேறுபடலாம். பயண முறைகள் வேறுபடலாம். ஆனால், சென்று சேர வேண்டிய இடம் ஒன்றுதான். அது முற்றான கம்யூனிச சமுதாய அமைப்பை நோக்கித்தான்.
ஆனால், நட்பு ரீதியான நமது கருத்து முரண்களை, வேறுபாடுகளை, தத்துவத்தை நடைமுறையிலிருக்கும் சமூக அமைப்பை மாற்றியமைக்கப் பிரயோகிக்கும்போது ஏற்படும் முரண்களை பகையாகப் பார்க்கிறோம். இது முற்றாகக் களையப்பட வேண்டும். பாலிமிக்ஸ் என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இணக்கமாக இருக்க வேண்டும். வானுக்கும், பூமிக்கும் இடையில் இருக்கிற எதுவாயினும் அதை விமர்சிக்கலாம். ஆனால், அது அறிவியல் பூர்வமான வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும்.