நிகழ் அய்க்கண்
இந்நூலில் பா.ஜ.வை ஏன் வீழ்த்தவேண்டும்? என்பது குறித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் பாஜக அரசு மற்றும் சங் பரிவாரங்களின் வகுப்புவாத இந்துத்துவா கொள்கைகள், பாஜக அரசின் நவீன தாராளமயம் ஏற்படுத்தியுள்ள அழிப்பு போன்றவற்றை கருப்பொருளாகக்கொண்டு, எழுதியுள்ள பதினேழு கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அக்கட்டுரைகளில் கூறியுள்ள கருத்துக்கள் பற்றி சுருக்கமாகக் கீழே காணலாம்.

இந்நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறும்போது, “இன்றைக்கு இந்துத்துவமும், கார்ப்பரேட் பெரு முதலாளிகளும் அமைத்துக்கொண்டுள்ள அபாயகரமான கூட்டணியை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்தினை தேர்தல் முனையில் மட்டும் நடத்தினால் போதாது, அரசியல் களத்தோடு சமூகத்தளத்திலும், சித்தாந்தத்தளத்திலும் கலாச்சாரப் பண்பாட்டு முனைகளிலும் நடத்தவேண்டும்” என்கிறார்.
மதங்களும், அரசியலும் : – ம. சிங்காரவேலர்
2000 வருஷங்களுக்கு முந்தி நமது இந்தியாவில் அசோகர், புத்த மதத்தை தழுவிய பிறகே, புத்த மதம் நாடு முழுமையும் பரவ ஆரம்பித்தது. 1500 வருடங்களுக்கு முந்தி, ரோமாபுரியை ஆண்ட கான்ஸ்டான்டைன் அரசன் கிறிஸ்தவ மதத்தைக் கையாண்ட பிறகே, அம்மதம் ஐரோப்பா முழுக்கப் பரவியது. இந்தியாவில் முகமதிய மதமும், கிறிஸ்துவ மதமும் பரவியுள்ளதற்குக் காரணம், அந்தந்த மதத்தைத் தழுவிய அரசுகள் நமது நாட்டை ஆண்டுவந்தமையால்தான். அரசியலை நடத்துகின்றவர்களுக்கு மதங்களை ஆதரிப்பதென்பது, ஒரு பெரிய பொருளாதாரச் செல்வாக்கை அளிக்கின்றது. மதங்களை அரசியல் அதிகாரிகள் ஆதரிப்பதற்குக் காரணம், மதப்பற்றுடையோருக்கு பகுத்தறிவு அதிகமிராது என்பதால், அதனைப் பயன்படுத்தி தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்கின்றனர் என்கிறார் சிங்காரவேலர்.
முற்றுகையில் இந்திய ஜனநாயகம்; – பிரகாஷ் காரத்
இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் இருண்டதாகத்தெரிகிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பும், அரசியல் அமைப்பு நமக்கு கட்டமைத்துக் கொடுத்திருக்கிற ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் அடித்தளங்களும் மிகத்தீவிரமாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. நாடாளுமன்ற மாண்புகளை சிதைப்பது; அதிகார வர்க்கத்தினரை தனது கைப்பாவையாக மாற்றுவது; உச்ச நீதிமன்றம் ஒரு நிர்வாக நீதிமன்றமாக செயல்படுவது பற்றிக்கூறுகிறார். இதுதவிர, இவ்வளவு காலம் தேர்தல் ஜனநாயகம் நடைமுறையில் இருந்தாலும் பொருளாதார மற்றும் சமூக ஜனநாயம் தோற்றுப்போயுள்ளது என்றும், ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்த முதலாளித்துவப்பாதை இவற்றையெல்லாம் சீரழித்துவிட்டது எனவும் கூறுகிறார். மேலும், புதிய தாராளமயக் கொள்கைகள் ஜனநாயகத்தின் மாண்புகளைக் குறைத்தும், கட்டுப்படுத்தியும் வருகிறது என்றும், இந்துத்துவா – கார்ப்பரேட் கூட்டணி இரண்டும் அரசியலமைப்பு என்கிற போர்வைக்குள் இருந்துகொண்டு, ஜனநாயகத்தின் அத்தனை தூண்களையும் தகர்க்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. வரும் காலங்களில் அனைத்துத் தரப்பு மக்களும் ஜனநாயகம் காக்க, இத்தகைய தாக்குதலுக்கு எதிராகப் போரிட வேண்டும் என்கிறார்புதிய சூழலில் இந்துத்துவா எதிர்ப்பு : – பிரகாஷ் காரத்
பாஜகவானது தனது தளத்தினை விரிவுபடுத்தும் நோக்குடன் பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே ஊடுருவுவது மட்டுமின்றி, மதவிழாக்களையும் தங்களது பிரச்சாரங்களுக்கான யுக்தியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. அதுமட்டுமல்லாது, தனது கருத்தியல்களை கல்வி – ஊடகங்களின் வழியாகவும் உட்செலுத்துகிறது. இச்சூழலில் இந்துத்துவ வகுப்புவாதச் சக்திகளையும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தையும் எதிர்கொள்ள, அரசியல் தளத்திலும், சித்தாந்தத் தளத்திலும், சமூக மற்றும் பண்பாட்டுத்தளத்திலும் திட்டவட்டமான அணுகுமுறைகளை உருவாக்கி செயலாற்ற வேண்டியுள்ளது என்கிறார்.
புதிய சூழலில் இந்துத்துவா எதிர்ப்பு : – பிரகாஷ் காரத்
மதச்சார்பற்ற ஜனநாயகம், சமூக நீதி, கூட்டாட்சி, பொருளாதார ரீதியான சுயாதிபத்தியம் ஆகியவையே நமது அரசியமைப்புச் சட்டத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களாகும். ஒருபக்கம் இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது; ஏழை மக்கள் வறுமையிலும், பட்டினியால் வாடுவதையும் காணமுடிகிறது. இன்னொரு பக்கம் பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவது படுவேகமாக நடைபெற்று வருவது; மாநில அரசின் உரிமைகளை மறுக்கும் விதமாக தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்துவது; கருத்துச் சுதந்திரத்தினைப் பறித்து சிறையிலடைப்பது; தேர்தல் நிதி மற்றும் அமலாக்க முகமைகளை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலம் தேர்தல் ஆதாயம் தேடிக்கொள்வதாக இந்த அரசு இருக்கிறது. சுருக்கமாக, நாடாளுமன்றம் தொடங்கி, அரசியலமைப்புச் சட்டத்தின் தூண்களாகத் திகழும் ஒவ்வொரு நிறுவனமும் இப்போது தாக்குதலுக்குள்ளாகியுள்ளன என்கிறார்.
மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைப் பாதுகாப்போம் !; – சீத்தாராம் யெச்சூரி
அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பேற்கும்வரை ஆர்.எஸ்.எஸ்ஸும், பாஜகவும் எப்போதும் தேசியக்கொடியினை ஏற்றியதில்லை. மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த ஒன்பது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும் விடுதலைப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு பல்லாண்டுகாலம் சிறையிலிருந்தனர். 1920ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டக் காலத்திலிருந்தே விடுதலை இயக்க நிகழ்ச்சி நிரல்களை வடிவமைக்கத் தொடங்கின. நிலப்பிரச்சினை; இந்தியாவின் மொழி பன்மைத்துவத்திற்காகவும், மொழி ரீதியிலான பல்வேறு தேசிய இனக்குழுக்களை விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கச்செய்தது; மதச்சார்பின்மையை கட்டிக்காத்தது என்பதாக இருந்தது என்கிறார். தற்போதைய பாஜக ஆட்சியானது, விடுதலை இயக்கத்தில் ஆர். எஸ்.எஸ்ஸும், பாஜகவும் தங்களையும் Xu; அங்கமாகக்காட்டும் வகையில் ஒருபக்கம் வரலாற்றினை திருத்தி, பொய்யைக்கட்டமைப்பதாக இருப்பதையும் இன்னொருபக்கம் அரசியல்சாசனம் உறுதிப்படுத்தியுள்ள இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயகத்தன்மையை வீழ்த்திட அதன்மீது தாக்குதல் தொடுத்து, சிறுமைப்படுத்துவதுமாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
கூட்டாட்சியைப் பாதுகாக்கும் போராட்டம்; – தாமஸ் ஐசக்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இரண்டு போக்குகள் இருப்பதைக் காணமுடிகிறது. ஒன்று, அதிகாரத்தை மையத்தில் குவிப்பது; மற்றொன்று, அதிகாரத்தை பரவலாக்கம் செய்வதாகும். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோதே ஒன்றிய அரசின் அதிகாரம் மாநில அரசுகளைவிட கூடுதலாக இருப்பது அனைவருக்கும் புரிந்தது. இந்த ஓட்டையினை ஒன்றிய அரசானது தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மாநில அரசின் அதிகாரங்களை ஒன்றிய அரசு அத்துமீறும் போக்கும் கண்கூடாகவே தெரிகிறது. 1990களுக்குப்பிறகு இந்த இரண்டு முரண்பட்ட போக்குகளினால் இயக்கத்தில் ஒரு தடையேற்பட்டு அதிகாரம் மையத்தில் குவிக்கப்படும் போக்கு அதிகரித்து, இதன் விளைவாக இந்தியக் கூட்டாட்சி அமைப்பு முறையே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என்கிறார்.
எந்தளவுக்கு என்றால், அரசியலமைப்புச்சட்டம், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்கிறது. ஆனால், ஒன்றிய அரசு நினைத்தால் மாநில அரசுகளைக் கலைக்கமுடிகிறது. இதுதவிர, ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்கள், தொழிலாளர் சட்டத்தொகுப்புக்கள், புதியக் கல்விக்கொள்கை, மின்சாரக்கொள்கை, போக்குவரத்துக்கொள்கை, ஜி.எஸ்.டி. என அனைத்தும் மாநில அரசின் அதிகாரத்தில் மீதான வரம்பு மீறிய செயல்பால்பாடுகளே என்கிறார்.
இடதுசாரிகளால் மட்டுமே பாசிசத்தை தோற்கடிக்க முடியும்; – பேரா. பிரபாத் பட்நாயக்
இந்தியா ஒருபோதும் மக்கள் நல அரசாக இருந்ததில்லை. மக்கள் நல அரசானது ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சார்ந்தவர்களுக்குப் பதிலாக அனவருக்குமான அரசாக அது செயல்பட்டிருக்க வேண்டும். இந்தியாவின் நவீன தாராளமயத்தினை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று, அதிகமான பொருளாதார வளர்ச்சி. மற்றது, தாராளமயத்தினால் துவங்கிய பொருளாதார நெருக்கடி. நெருக்கடியினால், வேலைவாய்ப்பு என்பது குறைந்து தனிநபர் நுகர்வு குறைவது; வறுமை, பட்டினி அதிகரிப்பு; சிறு உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு விவசாயம் உயிரோட்டமாக இருக்க வேண்டும். ஆனால், நவீன தாரளமயம் விவசாயத்தினை கேள்விக்குள்ளாக்குகிறது.
முதலாளித்துவத்தின் நெருக்கடியான காலத்தில்தான் பாசிசம் உருவாகிறது. தற்போதைய நவீன தாராளமயத்தின் நெருக்கடியும் அதைப்போன்றே நவீன பாசிசம் உருவாகக் காரணமாகியுள்ளது. பாசிசத்திற்கான அத்துணை பொதுவான பண்புகளும் இந்தியாவில் ஏற்கெனவே இருந்துவருகிறது. கார்ப்பரேட் – இந்துத்துவா கூட்டணியால், நவீன தாரளமயத்திலிருந்து வெளியேறவும், நவீன பாசிசத்தை தோற்கடிக்கவுமான ஒரேவழி இடதுசாரிகள் பலமடைவதுதான். கார்ப்பரேட் இந்துத்துவா அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவோம்;- பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்று முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையில் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தக் காலகட்டம் முழுவதும் அரசியல் வர்க்கத்தன்மையில் அடிப்படை மாற்றம் எதுவும் இல்லை. முதலாளிவர்க்கமும் நிலப்பிரபு வர்க்கமும் இணைந்த வர்க்க ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த இரு வர்க்க அணிகளுக்கு தலைமை தாங்குவது பெரு முதலாளிகள். இப்பெரு முதலாளிகள் வர்க்கம் அந்நிய மூலதனத்துடன் மேலும் மேலும் அதிகமான உறவுகொண்டு செயல்படுகிறது என்கிறார்.
புனையப்படும் பொய் “வரலாறு’; – பேரா. ஆதித்யா முகர்ஜி
இந்திய தேசத்தின் விடுதலைக்குப்பிறகு, அதன் வரலாற்றைச் சரியான முறையில் கொண்டு செல்வதற்கான களம் ஓரளவுக்குக் கிட்டியது. இவ்வாறு அமைந்த அறிவியல் பூர்வமான, மதச்சார்பற்ற கல்விக்கு, வகுப்புவாதக் கண்ணோட்டத்துடனான எதிர்ப்பும், தாக்குதலும் துவக்கத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடமிருந்து உருவாகியது. சுதந்திரத்திற்குபிறகு, ‘அரசியலில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடமாட்டோம்’ எனக்கூறியவர்கள், தாங்கள் ஒரு ‘கலாச்சார அமைப்பு’ எனக் கூறிக்கொண்டு கல்வி நிறுவனங்களைத் துவக்கி, பிஞ்சு உள்ளங்களில் நஞ்சினை ஊட்டி, பாடத்திட்டங்களின் வழியாக பிரிவினை மனப்பாங்கினை விதைக்கவும், புராணக்கதைகளில் கூறப்படும் புனைவுகளை வரலாற்றுடன் அப்பட்டமாக இணைக்கவும் செய்கின்றனர்.
அதுமட்டுமல்லாது, மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில், தேசத்தந்தை மகாத்மா காந்தி ஓர் இந்து தீவிரவாதியால் படுகொலை செய்யப்பட்ட உண்மை நிகழ்வை மறைக்கவும், நேருவைப்பற்றி எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பிடவும் செய்கிறது என்கிறார்.
மோடி அரசின் பாசிசப்போக்குகள்; டோக்ளியாட்டி தரும் வெளிச்சத்தில் ஒரு பார்வை; – பேரா. சந்திரா இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களிலொருவரான பல்மிரோ டோக்ளியாட்டியின் ‘பாசிசம் குறித்த விரிவுரைகள்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளவைகளுடன் சமகால பொருத்தப்பாட்டினை விவரிக்கும்போது, “பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாதச் சர்வாதிகாரமாகும்” என ஜார்ஜ் டிமிட்ரோவ் கூறியதையும், “ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லையென்றால், பாசிசம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்துகொள்ள முடியாது” என லெனின் கூறியதையும் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், டோக்ளியாட்டி கூறியுள்ள பாசிசத்தின் அம்சங்களானது இந்தியச்சூழலுடன் பொருந்துவதை அதாவது, 2014ஆம் ஆண்டுக்குப்பிறகு, ஜனநாயக உரிமைகள் மறுப்பு; ஜனநாயக அரசு நிறுவனங்கள் அழிக்கப்படுவது; கம்யூனிஸ்டுகளை பிரதான எதிரியாக்குவது; சமூகத்தை இராணுவமயமாக்குவது; பன்முகத்தன்மை மறுக்கப்படுவது; அதீத தேசியவாதம் பேசுவதாக இருப்பது ஆகியவற்றிலிருந்து விவரிக்கிறார். இந்நூலில், மேற்கூறப்பட்டவை தவிர, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பின்பற்றும் உத்திகள் பற்றியும், கன்னியாகுமரி பகுதியில் சமய வகுப்புக்களும் இந்துத்துவ அணிதிரட்டலும் பற்றி முனைவர் கி.அருண்குமார் முழு வீச்சிலான எதேச்சதிகாரப்பாதையில் பாஜக அரசு செல்வது பற்றி உ.வாசுகி; காந்தியும் மதமும் குறித்து என்.குணசேகரன்; களப்பலியாகும் கூட்டாட்சித்தத்துவம் பற்றி வி.பா.கணேசன்; இந்தியாவில் மதச்சார்பின்மை விலகல், வரலாறு, சவால்! என்பதுபற்றி இரா.சிந்தன் ஆகியோரின் கட்டுரைகளானது இந்துத்துவ அரசியல் செயல்திட்டத்தின் பலமுகங்களை அதாவது, அரசியல் அணிதிரட்டலுக்காக மதத்தையும், மத அடையாளத்தையும் வஞ்சகமாகப் பயன்படுத்தி, சமூக வாழ்வை மதவயமாக்குவதினை அம்பலப்படுத்துவதாக இருக்கின்றன.