கமலாலயன்
புத்தகங்கள் நிறைந்து வழியும் ஓர் அலமாரியை, அத்தகைய அலமாரிகள் நிறைந்த ஒரு நூலகத்தை, மரங்களடர்ந்த ஒரு நந்தவனமாகச் சித்தரிக்கிறார் இந்திய ஆங்கில எழத்தாளரான ஆர்.கே.நாராயண். இருபுறமும் மரங்களடர்ந்த ஒரு பெருங்காட்டினுள் நடந்து போகும் அனுபவமாக அந்தக் கற்பனைகள் சிறகு விரிக்கின்றன…

நானும் ஓரளவு விவரம் தெரிந்த நாள்களில் தொடங்கி, இன்று வரை புத்தகங்களோடுதான் என் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கிறேன். சிறார் கதைகள் வாசிப்பில் தொடங்கி, எல்லாத் தீவிர வாசகர்களையும் போலவே வாசிப்பில் தேர்ச்சியடைந்து, நா.பா., அகிலன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், பாவண்ணன், விட்டல்ராவ், ஜெயந்தன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், அம்பை, கிருத்திகா, ராஜம் கிருஷ்ணன், ஜோதிர்லதா கிரிஜா, அ.வெண்ணிலா, சிவசங்கரி, இந்துமதி, பூமணி, சோ.தர்மன், லா.ச.ரா., மௌனி, ஆ.மாதவன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன்,
ச.தமிழ்ச்செல்வன், உதயசங்கர், கந்தர்வன், சுஜாதா, மேலாண்மை பொன்னுச்சாமி,
டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி, அஸ்வகோஷ், ஜானகி காந்தன், ராமச்சந்திர வைத்தியநாத், பா.ராமச்சந்திரன், இரா.முருகவேள், தேனி.சீருடையான் – இப்படியாகப் பல்வேறு தரப்பு எழுத்தாளர்களின் எல்லா வகையான படைப்புகளையும் தேடித்தேடிப் படிக்கலானேன்.
இவை தவிர, இந்தியாவின் இருண்ட காலமாக வரலாற்றில் ஓர் இழிபெயரைச் சுமந்துகொண்டு நிற்கும் அவசரநிலைக் காலத்தில் ஏற்பட்ட ஓர் ஆர்வத்தின் காரணமாக இடதுசாரி இலக்கியங்களில், அறிவியல், அரசியல், சமூக அறிவியல், தலித்திய – பெண்ணியம் சார்ந்த கட்டுரை நூல்களிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் புத்தகங்களைப் படித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன். நானும் எழுத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கிக் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்று ஏராளமாக எழுதவும் தொடங்கினேன். அவை பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமாகவும் செய்ததால், என் ஆர்வம் பன்மடங்காகியது.
அரசியல் இயக்க ஈடுபாடு என்பது, என் வாழ்க்கையை முற்றிலும் வேறொரு திசையை நோக்கித் திருப்பியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (இப்போது த.மு.எ.க.ச.), சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி, சி.ஐ.டி.யு. மத்தியத் தொழிற்சங்க அமைப்பு, இறுதியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – என அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு, கிட்டத்தட்ட ஒரு முழு நேரக் கட்சி ஊழியன் என்ற அளவுக்கு இயக்க வேலைகளில் மூழ்கியிருந்தேன். அந்த ஈடுபாட்டின் விளைவாக, தொழிற்சங்கப் பொறுப்பேற்றிருந்த தொழிற்சாலையில் தலைமைப்பொறுப்பை ஏற்றுப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதன் தொடர்ச்சியாக வேலைநீக்கம் செய்யப்பட்டேன். அதன் பிறகு,மீண்டும் எந்த ஒரு வேலையிலும் நிரந்தரமாக ஈடுபட முடியாதபடி நெருக்கடிகளின் மத்தியிலேயே வாழ்க்கை ஓடியது. இத்தனைக்கும் நடுவே, திருமணம், அடுத்து இரு குழந்தைகள் என்று குடும்பச் சுமையும் அதிகரித்தது.

எந்தச் சூழ்நிலையிலும் படிப்பது என்ற ஆதாரமான செயல்பாட்டை நான் கைவிடவே இல்லை. எழுத்திலாவது இடைவெளி நிறைய நேர்ந்திருக்கிறது. ஆனால், படிப்பது என்றும் நிற்கவில்லை. இன்னதுதான் படிப்பது என்ற வரையறை எதையும் வைத்துக்கொள்ளாமல் படிப்பது என்பதே என் அணுகுமுறை. ஆனால், அடிப்படையான இடதுசாரிக் கருத்தோட்டத்தில் சமரசம் செய்துகொண்டதில்லை. அதில் எப்போதும் உறுதியாகக் கால் பதித்து நின்று விரிந்த அளவில் படிப்பதைத் தொடர்கிறேன்.
இந்த வாசிப்பு அனுபவங்களையே எங்கு சென்றாலும் என் உரைகளில், எழுத்துகளில், புத்தக அறிமுகங்களில் பகிர்ந்துகொண்டு வருகிறேன். சொல்லித் தீராத அனுபவங்கள் அவை. நினைக்க நினைக்க ஊற்றெடுத்துப் பொங்கும் ஜீவ ஊற்று அது! அந்த ஊற்றிலிருந்து சில கைகள் நீரெடுத்து வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டு,நானும் அசை போட்டு மகிழ்வது என்று இந்த முயற்சியில் இறங்குகிறேன். திக்குத் தெரியாத அந்தப் புத்தகப் பெருங்காட்டினுள் கால்கள் போன போக்கில் ஒரு பெரு நடை நடந்து திரும்புவது என்பது என் உத்தேசம். திரும்ப முடியாமலே போனாலும் அதில் எந்த வித இழப்புமில்லை! உடன் வருவோர் தயங்காமல் என்னுடன் இணைந்துகொள்ளலாம். சரி,நடக்கலாமா?