அன்பாதவன்
இவ்வுலகில் பிறந்த எவருக்கும் வேர்களையும் தம் விழுமியங்களையும் மாற்றிக்கொள்ளச் சம்மதமில்லை, ஆனால் ஈழத்தில் பிறந்து, இலங்கைப் படைகளின் அட்டூழியங்களுக்கு அஞ்சி, ‘உயிர் பிழைத்தால் போதுமடா சாமி!’ என வாழ்தலின் பொருட்டல்ல… இருத்தலின் (Existence) தேவை கருதி புகலிடம் தேடி, ஐரோப்பா, இந்தியா, ஆஸ்திரேலியா என பல கண்டங்களுக்கும் செல்லத் துணிந்தவர்கள் வாழ்விலே நிகழ்ந்ததென்ன?

“ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்” – எனும் முனைவர் இரா. செங்கொடியின் ஆய்வு நூலை வாசிக்க, உண்மை துலங்கும்.
“ஈழ விடுதலைப் போர் வரலாற்றில் கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் ஜூலை 1983 தொடங்கி 2009–லில் முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களப் பேரினவாதத்தின் பேய்த்தனத்தினால், பிறந்து வளர்ந்த தாய் நாட்டில் வாழ முடியாமல் உயிரைப் பிடித்துக் கொண்டு உலகப் பரப்பு முழுவதும் தஞ்சம் கோரித் தவித்த தமிழ்க் குடிகளின் வாழ்க்கைப்பாடுகளும் துக்கங்களும் ஈழத்தமிழரின் எழுத்துகளில் எவ்வாறு ஆவணமாக, வரலாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பனவற்றையெல்லாம் ஒன்றையும் விட்டுவிடக் கூடாது என்கிற கவனத்தோடு தொகுத்தும் பகுத்தும் இந்த நூலில் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார் என அணிந்துரையில் குறிப்பிடும் பேரா. க. பஞ்சாங்கத்தின் முன்குறிப்பு, நூலில் நுழைவதற்கு ஏதுவாய், புத்தகக் கதவைத் திறந்து வைக்கிறது.
இலக்கியங்களில் அகம், புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு களவொழுக்கமும், கற்பொழுக்கமும் அகமென மகிழ்ந்து, ஆண்ட மன்னர்களின் போர்ப் பெருமையை சிலாகித்துக் கிடந்த மறத் தமிழர் கூட்டத்துக்கு ‘புகலிட இலக்கியம்’ என்பது புதிது! அயலக வாழ்க்கை, அகதியின் அவலம் புதிது. 22 தலைப்புகளில் ஈழ மக்களின் கண்ணீர் மற்றும் செந்நீர் வரலாற்றை, ஒலியற்ற குரலின் பெருவலியைக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார், முனைவர் செங்கொடி.
எண்பதுகளின் தொடக்கத்தில், இலக்கிய உலகில் நுழையும்போது அதிர்வான வரவேற்பைத் தந்தது ஈழப் போராட்டமும் அது சார்ந்த இலக்கியங்களும்தான்! அதுவரை ‘மஹாகவி’கள் ’குறும்பா’ எழுதிக் குதூகலித்துக் கொண்டிருக்க, குமரனுக்கும் குந்தவிக்கும் கடிதங்கள் எழுதிய செ. கணேசலிங்கன், செ.யோகநாதன் போன்றோர் புதினங்களாக… சேரன், எம்.எ.நுஃமான், வ.ஐ.ச. ஜெயபாலன், வண்ணச் சிறகு சங்கரி, கௌரி போன்றோர் கவிதைகளாகவும் போரை, வெகு மக்களின் துயரங்களை, போராட்ட வரலாற்றை சொல்லாத சேதிகளாக எழுதினர்.
‘உயிர் பிழைத்தால் போதும்’- எனச் சில படைப்பாளிகள் பல தேசங்களுக்கும் பறந்துபோக ‘புகலிட இலக்கியம்’ எனும் புதுவகைப் படைப்புகள் அறிமுகமாயின.
அ.முத்துலிங்கம், ஆழியாள், நோயல் நடேசன், நளாயினி தாமரைச்செல்வன், ஷோபாசக்தி, றஞ்சி, ரவி, புஸ்பராஜா,–எனப் புதுப்பட்டாளம் எனில் இஃதோர் புதூ… அனுபவம், கசப்பும் துவர்ப்புமான வாழ்வியல் பதிவு!
தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பிற நாடுகளுக்குச் செல்லும் முயற்சிகளினூடாக, தரைப்பயணம், கடல்பயணம் அனைத்திலும் பல கணக்கற்ற கஷ்டங்களைச் சந்திப்பதை துயர்மிகு சொற்களால் விவரிக்கிறது ‘பயணநிலை அவலம்’ அத்தியாயம்.
“போரில் முதலில் பாதிக்கப்படுவதும், இறுதியாக பாதிக்கப்படுவதும் பெண்தான். புலம் பெயர்விலும், ஆண்கள் சந்திக்கும் அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளும் பெண்கள் கூடுதலாகத் தங்கள் உடல் சார்ந்த உபாதைகளுக்கும், வன்முறைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்” (ப.27) எனச் செங்கொடி குறிப்பிடுவது பல பெண் படைப்பாளிகளின் எழுத்தில் பதிவாகி இருப்பதென்னவோ நிஜம்.

‘யாதூம் ஊரே யாவரும் கேளிர்’ தேசத்துக்கு செல்ல அல்லல் படுவதை, ‘அகதி தஞ்சக் கோரிக்கை, குடியுரிமை, கடவுச் சீட்டுச் சிக்கல்கள்’ – கட்டுரை விரிவாய் அலசுகிறது. கொடுந்துயரச் சரிதத்தைக் குறைந்த வரிகளில் சொல்லிட ஏலுமா?
போரின், விடுதலைப் போராட்டத்தின் காரணங்களினால் தாய்மண் விலகி, உறவு, உடைமை இழந்து இருத்தலுக்கான ஏக்கத்தினால் முழுவதும் அந்நிய நாடுகளுடன் அல்லல்களை ஈழத்தமிழர் நித்தம் சந்திப்பதை ‘வசிப்பிடச் சிக்கல்’ எனும் கட்டுரை வலி நிறைந்த வரிகளால் விவரிக்கிறது.
சொந்த மண்ணில் வறுமையின் நிழலுமின்றி வாழ்ந்தவர், புகலிடத் தேசத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே சம்பாதிப்பது, அதன் பகுதியை ஈழத்தில் இருக்கும் உறவுகளுக்கு அனுப்புவது என்றாகிவிட்டனர் என்பதை ‘புகலிடத் தொழிலாளர் நிலை’ கட்டுரை துயர்படச் சொல்கிறது.
“1983- இனக்கலவரத்தின் உச்சகட்டமாகச் சொந்த மண்ணிலேயே வாழ முடியாத நிலையில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வசதிகளாகப் புலம் பெயர்ந்தனர். வரலாற்று நிர்பந்தத்தால் உலகெங்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் சென்ற இடமெல்லாம் தங்களுடைய இருப்பினை நிலைநாட்டும் நோக்கில் கலை இலக்கியப் பாரம்பரியத்தை நிலைநாட்டினர் என புகலிடச் சிற்றிதழ் அறிமுகம் (ப.185) கட்டுரையில் பேரா. செங்கொடி குறிப்பிடுவது மாபெரும் வரலாற்றுண்மை. புலம்பெயர் மக்கள் படைத்த எழுத்துகள் உலகெங்கிலும் பரவிட, இலக்கிய வளர்ச்சி ஏற்பட, புகலிட தேசங்களில் இருந்து தொடங்கி நடத்தப்பட்ட தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு முக்கியப் பங்கிருப்பதை எவரும் ஏற்பர்.
‘எக்ஸில், தூண்டில், சுவடுகள், காலம், மண், சிந்தனை, பூவரசு, கிளங்காற்று, நிழல், தேடல், கூர், ழகரம், தாயகம், அறிதுயில் அற்றம், மண்வாசம், நுட்பம், நான்காவது பரிணாமம், அக்கினிக்குஞ்சு, அசை, பள்ளம், உயிர்நிழல், பாலம், பறை, அம்மா, அஆஇ, சக்தி, உயிர்மெய், ஊதா, கண்’– போன்ற பல சிற்றிதழ்கள், அச்சிதழ்களாகவும், மின்னிதழ்களாகவும் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, நெதர்லாந்து போன்ற பல நாடுகளில் இருந்து வெளிவந்து சாதனை படைத்ததையும் பேரா. செங்கொடி, விரிவான பட்டியலாய் வழங்கி இருப்பது வரலாற்றுப் பதிவு.
“புகலிட நாடுகளிலிருந்து வெளியாகும் அரசியல் தன்மையை இரு நிலைகளில் நோக்க முடியும்.
1.கண்ணை மூடிக்கொண்டு இயக்கங்களைத் துதிபாடுபவை.
2.அனைத்தையும் விமர்சனத்திற்குட்படுத்தி, தேடலை நோக்கியவை” என மு. நாகேந்திரன் அவர்களின் மேற்கோளை, பேரா. செங்கொடி சுட்டுவது கவனிக்கத்தக்கது. காரணம் ஈழப்போராட்டத்தையும், புகலிட வாழ்வின் விளைவுகளையும் இயக்கங்களின் பங்களிப்பு மற்றும் திசைவழியோடும் செயல்பாடுகளோடும் மட்டுமே அணுகமுடியும்.
தாய்மண்ணான ஈழத்தில் எழுத்து, பேச்சு என பெண்ணுக்கு மறுக்கப்பட்டவை யாவும், புகலிடத் தேசங்களில் இருந்து சுதந்திரச் சிந்தனையோடு செயல்பட புலம் பெயர் வாழ்க்கை வாய்ப்பளித்ததை ‘பெண் தனித்துவத்தைக் கட்டமைத்தல்’ கட்டுரை விரிவாகப் பேசுகிறது.
‘உடலை எழுதுதல்’ என்னும் ஜூலியா கிறிஸ்தெவா போன்றவர்களின் பெண்ணியத் திறனாய்வுக் கோட்பாடுகளுக்கேற்ப, தாய் தேசம் மறுத்த பேச்சுரிமை, எழுத்துரிமை, மறுக்கப்பட்ட, அடக்கப்பட்ட உணர்வுகள் யாவும் புலம்பெயர்ச் சூழலில் சுதந்திரமாக பெண் படைப்பாளிகளால் வெளிப்படுத்த முடிந்தது எனக் குறிப்பிடும் பேரா. செங்கொடி, கூடுதலாக “பெண்ணின் பலவீனமான உடற்கூறையும், பெண் சார்ந்த மரபுகளையும் தமக்கு சாதகமாக்கிக்கொண்டு பாலியல் ரீதியாகவும், உழைப்பு ரீதியாகவும், அவளைச் சுரண்ட முற்படும் ஆதிக்கச் சக்திகளுக்கு அறைகூவல் விடுக்கும் தன்மையையும், அவ்வாறான எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் பெண்ணினத்துக்கு ஊட்ட முற்படும் வீரியமும் உண்மையான பெண்ணிய எழுத்துக்கு உண்டு” என்னும் ஆய்வு வரிகள் ஈழ இலக்கியர் மட்டுமல்ல, தமிழ்நாட்டுப் படைப்பாளிகளுக்கும் பொருந்துபவை.
புலம்பெயர் வாழ்வு துயர்மிகுந்தது, கொடியது. அதிலும் புகலிடப் பெண்டிர் நிலையோ எழுத்தில் சொல்லவியலா வலி வாழ்வு.
‘புலம்பெயர் வாழ்வில் பெண்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள்’எனும் கட்டுரை பின்வருமாறு பட்டியலிடுகிறது.
புதிய சூழல், அகதி அடையாளம், பால் அடையாளம், ஆணாதிக்கம், குடும்ப அமைப்பு, பண்பாட்டு மாற்றம், மொழிப் பரிமாற்றம், உணவுச் சிக்கல், உறவுச் சிக்கல், சுற்றங்களின் அரவணைப்பின்மை, மணக்கொடையெனும் வரதட்சணை, தற்கொலைச் சிந்தனை, திருமண வாழ்வின் நெருக்கடி, இறுக்கமான குடும்ப அமைப்பு .
எனினும் நூலாசிரியர் குறிப்பிடும் மேற்சொன்ன பிரச்சினைகள் யாவும், புகலிடம் தேடிய ஈழச் சகோதரிகளுக்கு மட்டுமானதல்ல… உலகெங்குமுள்ள பெரும்பாலான பெண்களுக்கானவை.
சரி, புலம்பெயர்ந்தோரின் அயலிட வாழ்வு, சற்றேறக்குறைய அரை நூற்றாண்டைத் தொட்டுவிட்டதெனில், அவர்தம் எதிர்காலம் எப்படி இருக்கும்? பெருவினா ஒன்றினை எழுப்புகிறார் நூலாசிரியர்.
அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளோடே, மொழி, பண்பாடு போன்ற தம் அடையாளத்தைத் தக்கவைப்பதற்குப் பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளதாகக் குறிப்பிடும் பேரா. செங்கொடி என்றாவது ஒரு நாள் ஈழம் மலரும், வசந்தம் வரும், உதிர்ந்த மலர்கள் தோரணமாகும், மலர்ச் செடிகள் புத்துயிர் பெறும், கரைந்த வாழ்வு திரும்ப வரக்கூடும் – என்றெல்லாம் கனவு வார்த்தைகளால் பூசி மெழுகாமல், ‘இத்தகு சூழலில் சிங்கள இராணுவ மேலாதிக்கத்தால் உலகம் முழுதும் அதிகமாகச் சிதறிவாழும் ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறையினரின் வாழ்வு எவ்வாறு அமையும் என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும்” என நிதர்சனத்தைப் பதிவு செய்வது நூலாசிரியரின் நேர்மைக்குச் சான்று.
மொழியும், பண்பாடும், உணவு முறைகளும், புகலிட வாழ்வின் பெரும் சிக்கலை ஏற்படுத்துவன. பெற்றோர் – குழந்தைகளிடையே இணக்க உறவுகள் இல்லாததை, கீழ்க்கண்ட அழகுக்கோனின் கவிதை வரிகள் வழியாக… வாசகரின் மனதில் கடத்தி விடுகிறார் இரா. செங்கொடி,
“குழந்தைகள் ஊரை, உறவை மறந்துவிட்டன
மொழி, ஆங்கிலச் சமுத்திரத்தில் அழிந்துவிட்டது.
உறவுகள் பல்லினச் சேர்கையில் கவர்ந்து விட்டன.”
இயற்கையின் பருவமாற்றங்கள், தட்ப வெப்ப மாறுதல், உணவு வகைகள் போன்றவை உடலில் ஏற்படுத்தும் அயர்ச்சி ஒருபுறமெனில், அந்நியமாதல் எனும் மனப்பிரிதல் மற்றொரு புறம். இதன் பக்கவிளைவாக, போதைப் பழக்கம், குற்றங்களில் ஈடுபடுதல், தற்கொலை முயற்சிகள் என (Negative) எதிர்மறைகள் ஒரு தட்டினில் எனில், மறுதட்டிலோ போர் எதிர்ப்பு, தாய்மண் விடுதலை, மொழி காத்தல் என நேர்மறைகள் (Possitive) – அனைத்தையும் காய்தல் உவத்தலின்றிப் பதிவு செய்திருப்பது முனைவர் செங்கொடியின் கல்விப் புல நேர்மை.
புலம்பெயர் வாழ்வில் புகலிட தேசங்களில் ஈழப்பெண்டிர் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளில், பண்பாட்டுக்கலப்பு, மொழிக்கலப்பு என்பவை ஒரு புறமெனில், பாலியல் சமனின்மை, பாலியல் வன்கொடுமை போன்றவை எழுத்தில் சொல்ல முடியாதவை. தமிழ் மொழியை, மின்மொழியாய் மாற்றியது புலம்பெயர்த் தமிழரின் சாதனையெனில், உலகமெல்லாம் தமிழ் பரவிட டிஜிடல் தமிழாய் மாற்றியது பெரும் சாதனையெனலாம். ஈழத்தமிழரின் புலம்பெயர் இலக்கியம் – என்கிற இந்நூல் சமகாலத்தைப் பிரதிபலிப்பது, பதிவு செய்வது. சமகாலத்தை எழுதுதல் என்பது எந்த ஒரு படைப்பாளிக்கும் பெரும் சவால்! அந்த சவாலில் போராடி வெற்றியும் பெற்றிருக்கிறார் செங்கொடி! பட்டொளி வீசிப் பறக்கிறது செங்கொடியின் ஜெயக்கொடி.
கண்ணீரின்றி வாசிப்பதுதான் வாசகருக்கான வாசக சவால் !