சர்வதேசப் பெண்கள் தினம் என்பது ஆணாதிக்க, ஆதிக்க மதவெறி அடிமை விலங்குகளாகப் பிணைக்கப்பட்டிருக்கும். பெண்ணின் விடுதலையை நோக்கிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நாள்.
1857ல் மார்ச் 8 அன்று சமநேர வேலை, சம ஊதியம், சம உரிமை என்ற முழக்கங்களுடன் தொடங்கிய உலகளாவிய போராட்டம் அது. 1909ல் அமெரிக்க சோஷலிஸக் கட்சி எனும் பிரமாண்ட அமைப்பு பெண் தொழிலாளர்களுடன் வீதியில் இறங்கிப் போராடியபோது கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகி முதலாளியமும் மதவாதமும் இணைந்து அவர்களை களை எடுப்பது உட்பட பல சதிவேலைகளில் இறங்கினார்கள். 1910ல் சர்வதேச சோஷலிஸப் பெண்கள் மாநாட்டை கோபன்ஹேகனில் கூட்டி அதற்கு பதிலடி கொடுத்தது அமெரிக்க சோஷலிஸக் கட்சி. மே தினத்திற்கு இணையாக சர்வதேச மகளிர் தினத்தையும் கொண்டாட அறைகூவல் விடுக்கப்பட்டது.
ஆனால் 1917ல் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் போல்ஷிவிக் கட்சியும் சோஷலிஸ இயக்கமும் கூட்டாக சர்வதேச பெண் தொழிலாளர் தினம் என்று மார்ச் – 8ம் தேதியை விடுமுறையாக பொது அறிவிப்பின் மூலம் பிரமாண்ட – தொழில்துறை முடக்க கவன ஈர்ப்பை நடத்தினார்கள். சமவேலை நேரம், சம ஊதியம், சம உரிமை முழக்கம் இதன்மூலம் உலகெங்கும் பரவியது. தெரசா மால்கீ, கிளாரா ஸெட்கின், ரோசா லக்ஸம்பர்க் போன்ற மாபெரும் போராளிகள் உலகெங்கும் பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி கற்கும் உரிமை, தேர்தலில் வாக்களிக்கும் உரிமை என அடிப்படை உரிமைகளை முழக்கமாக வெளிப்படுத்தினர்.
1911 மார்ச் 25 அன்று அதிகம் பெண் தொழிலாளர்கள் பணியில் இருந்த நியூயார்க் டிரையாங்கில் பஞ்சாலை விஷமிகளால் தீயிடப்பட்டது. 146 இளம்பெண் தொழிலாளர்கள் தீக்கிரையானபோது போராட்டம் உலகெங்கிலும் தீவிரமடைந்தது. – ஜெர்மனியின் கிளாரா ஸெட்கின், காட்டே டஸ்கர், பவுலா அம்மையார், சோவியத் யூனியனின் குரூஸ்க்யா, இங்கிலாந்தின் சில்வியா பான்க்ரஸ்ட் எனப் பல போராளிகள் களத்தில் குதித்தனர். அவர்களில் சில்வியா பான்க்ரஸ்ட் சிறைபிடிக்கப்பட்டு 12 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். பின் நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரானார் சில்வியா அம்மையார்.
1936ல் ஸ்பானிய உள்நாட்டுப்போரின்போது டொலோரஸ் இபாரூரி மாட்ரிட் நகரில் பிரமாண்ட பெண் இயக்கப் பேரணி ஒன்றை நடத்தி மார்ச் எட்டாம் நாளை சர்வதேச பெண் தொழிலாளர் நாளாக்கிட அறைகூவல் விடுத்தார். இந்திய பெண் விடுதலைப் போராளிகளான ரமாபாய் ரானடே, ஜெகன்பேகம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தாராபாய் ஷிண்டே, கமலாதேவி சட்டோபாத்யாயா ஆகியோரின் தன்னிகரற்ற தியாகத்தால் 1927ல் முதல் இந்திய பெண் தொழிலாளர் மாநாடு கூட்டப்பட்டது. பெண் கல்வி, குழந்தை திருமணத் தடுப்பு, இளம் விதவைகள் மீட்பு என்று இந்திய மண்ணின் முழக்கங்கள் வேறுபட்டன. இந்தியாவின் முதல் பெண் மானுடவியல் அறிஞர் ஐராவதி கார்வே பூனாவின் பர்குசன் கல்லூரியில் நம் நாட்டின் முதல் பெண் தொழிலாளர் சங்கத்தை 1939லேயே ஏற்படுத்தியதும் வரலாறு.
இன்று பெண்களுக்கு 2030ல் இட ஒதுக்கீடு என்று மோசடி சட்டம் இயற்றிய மதவாதவெறி அரசால் இந்திய கொடுஞ்சிறைகளில் வாடும் பெண் போராளிகள் 198 பேர். கவுரிலங்கேஷ் போன்ற பெண்ணிய போர்க் குரல்களை கொலை செய்து அழிக்கும் இந்தப் பாசிச வெறியர்களிடமிருந்து நாட்டை மீட்பதன் பொருட்டு நிஜமான பெண் விடுதலையை சாதிக்க முடியும். அதற்காக இந்த சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி ஏற்போம்.
