புவனா சந்திரசேகரன்
டாக்டர். அகிலாண்டபாரதி கண் மருத்துவர் என்பதோடு தேர்ந்த எழுத்தாளர். ஒரு மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே தனது அனைத்துக் கடமைகளையும் செவ்வனே செய்து முடிக்கும் அற்புதமான திறமை கொண்டவர்.

கண்மணி இதழில் தொடர்ந்து வெளியான கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் வசிக்கும் ஒப்பற்ற கவிஞரான திரு. கலாப்ரியா அவர்களின் எழுத்துலக வாரிசு இவர். தந்தை போலவே கவிதைகள் எழுதவேண்டும் என்று எண்ணாமல், தனி வழியில் சென்று கதைகள், கட்டுரைகள் என்று தன்னுடைய தனித்துவமான முத்திரைகளைப் பதித்து வருகிறார்.
மருத்துவரான இவர் பல்வேறு நோயாளிகளை நித்தமும் சந்திக்கிறார். நோயாளிகளிடம் பொறுமையாகப் பேசி அவர்களுடைய பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு தன்னால் முடிந்த வரை தீர்வுகளையும் தருவது இவருடைய சிறப்பு. உடல்நலத்தைப் பேணுவதோடு மனநலத்தையும் பேணுவதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் என்பதை நன்குணர்ந்து அதற்கேற்ப செயல்படுகிறார். ஒரு மருத்துவராக இவருக்குக் கிடைக்கும் எண்ணற்ற அனுபவங்களையே இந்தக் கட்டுரைத் தொகுப்பில் வழங்கியிருக்கிறார். தன்னுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களுக்கும் வழிகாட்டுகிறார். இந்தக் கட்டுரைகளை வாசிப்பதன் மூலம், நமக்குப் பல்வேறு நோய்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அதுவும் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழியில் கொடுத்துள்ளார்.
ஒரு நல்ல ஆலோசகராக மூட நம்பிக்கைகள், குருட்டுத்தனமாகக் காலம் காலமாகக் கடைப்பிடித்து வரும் தவறான வழிமுறைகள், கொள்கைகள் இவற்றை அறவே விடுத்து நோய்கள் பற்றிய விழிப்புணர்வோடும், நமக்கு குணமாகிவிடும் என்கிற நேர்மறைச் சிந்தனையோடும் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.
முதல் கட்டுரையிலேயே தீபாவளிப் பண்டிகை அன்று கவனக்குறைவால் பட்டுக்கொண்ட தீக்காயங்களுடன் ஓடிவரும் நோயாளிகளைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறது. பட்டாசுகள் பற்றி மட்டும் பேசாமல், அளவுக்கு அதிகமாக இனிப்புகள் உண்பதைப் பற்றியும், பழைய பலகாரங்களைச் சேர்த்து வைத்து உண்பதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள் பற்றியும் எடுத்துச் சொல்கிறார். இவற்றின் ஊடே வருகின்ற ரதிதேவியைப் பற்றிய தகவல்கள்தான் சாட்டையடிகளாக நம் மனதில் இறங்குகின்றன. குழந்தைப் பருவத்தில் இருந்து அந்தப் பெண் அனுபவிக்கும் துன்பங்களுக்கு அளவில்லை. படிக்கும் வாசகர்களின் மனங்களிலும் கருணை சுரக்கிறது. தன் மீது அபாண்டமாக விழும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க அவள் எடுக்கும் அபாயகரமான முடிவுகள்தான் அவளுடைய வேதனைகளுக்கு அடிப்படைக் காரணம் என்று அறிந்துகொள்ளும்போது நம்முடைய மனங்களிலும் அவளுடைய வலியை உணர முடிகிறது. இறுதியில் ரதிதேவி, தனக்கு வந்த அத்தனை பிரச்சினைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலுடன் எதிர்நீச்சல் போட்டு இன்று கணவர், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பற்றித் தெரிந்துகொண்டதும் மனதுக்கு மகிழ்வளித்தது.
அடுத்து வந்த கட்டுரையில் குழந்தை வளர்ப்பு பற்றிய முக்கியமான கருத்துகள் கூறப்பட்டிருக்கின்றன. குழந்தைகளின் மூலமாக வருமானத்தை அதிகரித்துக் கொள்ள எண்ணி வேலைக்கு அனுப்பும் பெற்றோர், கையில் பணம் சம்பாதிக்கும் சிறுவர்கள் பதின்பருவத்தில் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகித் தங்கள் எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கும் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். குடி, குடியைக் கெடுக்கும் என்பது தெரிந்த விஷயம். இன்று சிறுவர்கள், இளைஞர்கள் அனைவரும் சகட்டுமேனிக்கு, குடி மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளாவதை சமுதாயத்திற்கு ஏற்படும் மிகப் பெரிய அவமானமாக நான் கருதுகிறேன்.
அடுத்ததாக தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வு தரும் கட்டுரை. ஹெர்டு இம்யூனிட்டி பற்றிய தகவலைப் புதிதாகத் தெரிந்துகொண்டேன். இப்படிப்பட்ட கம்யூனிட்டி உருவாவதற்கும் தடுப்பூசிகள்தான் மறைமுகக் காரணம் என்பது ஆச்சர்யமான தகவல். நாய்க்கடி பற்றியும், ரேபிஸ் நோய்த் தாக்குதல் பற்றியும் பல்வேறு அரிய தகவல்களை உள்ளடக்கிய அடுத்த கட்டுரையும் பிரமிக்க வைத்தன. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை கவனித்துக் கூறும் சில கருத்துகளை நாம் காது கொடுத்துக் கேட்டால், வருமுன் காப்பானாக பல்வேறு நோய்களைத் தடுக்கமுடியும் என்பதை அடுத்த கட்டுரை விளக்குகிறது. ஹேண்டில் பார் இஞ்சுரி பற்றித் தெரிந்துகொண்டபோது எனக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது.

அவசரத்தில் வாகனங்களின் ஊடே புகுந்து நடப்பது நாம் எல்லோரும் சாதாரணமாகச் செய்கின்ற செயல்தானே? அதனால்கூட இத்தகைய பின்விளைவுகள் ஏற்படுமா? இதனைப் படித்தவர்கள் நிச்சயமாக அந்தத் தவறை இனி செய்யமாட்டார்கள். விளையாட்டாக செய்வது வினையாக முடிவது இதைப்போன்ற செயல்களால் தான். இதே கட்டுரையில் புதிதாக ஸ்டெதஸ்கோப் உபயோகிக்க ஆரம்பித்த மாணவன், சக மாணவனுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதைக் கண்டுபிடித்தது, கண் மருத்துவம் பயின்று கொண்டிருந்த இன்னொரு மாணவி, தன் தோழிக்கு குளுகோமா என்கிற பாதிப்பு இருப்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்தது இவையெல்லாம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. மருத்துவ மாணவியாக இருந்த காலத்தில், தான் பெற்ற அனுபவங்களை நினைவு வைத்துக்கொண்டு நம்முடனும் பகிர்ந்துகொண்டு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுகிறார் ஆசிரியர்.
ஒவ்வொரு கட்டுரையும் தகவல்களின் களஞ்சியமாக உள்ளன. பிழையில்லாத தமிழ், அழகான சொல் பிரயோகங்கள், எளிமையான நடை . மொத்தம் 53 கட்டுரைகள். அனைத்துமே சிறப்பு .
முதலில், மனநலம் பாதிக்கப்பட்ட சேச்சியின் கதை. ஒரு மலையாளத் திரைப்படத்தை உட்கார்ந்து பார்த்ததுபோல. அவரைக் காப்பாற்ற மருத்துவ நண்பர்களுடன் சேர்ந்து இவர் எடுத்த முயற்சிகள் போற்றத்தக்கவை. எவ்வளவோ கஷ்டப்பட்டு ஏமாற்றி அவரை மனநலக் காப்பகத்தில் சேர்த்த பின்னரும், இதயக் கோளாறால் அவர் இறந்துபோன செய்தியைப் படித்தபோது என் மனமும் வருந்தியது.
தலைமுடியைப் பற்றிய கருத்துகள் பயனுள்ளவை. தலைமுடி உதிர்வதன் காரணங்களைச் சிறப்பாக விளக்கியுள்ளார். குமாரியின் பரிதாபமான கதையைப் படிக்கும் போது அவளுடைய குடும்பத்தினர் மீது கோபம் வந்தது. ஆண் குழந்தை வேண்டும் என்று ஒரு சிறு பெண்ணை எப்படி வதைத்திருக்கிறார்கள். அதே போல, கனவுகள் பற்றிய கட்டுரையில், கனவுகளின் பின்னணியில் ஒளிந்திருக்கும் காரணங்கள் பற்றிய விளக்கங்கள் மிகவும் அழகாக மனதில் பதிந்தன. நிறக்குருடு பற்றிய கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது.
அகதா கிறிஸ்டியின் சிறுகதை ஒன்றில் நிறக்குருடு பிரச்சினை எப்படி மரபணு வழியாக வம்சத்தில் தொடர்கிறது என்கிற அறிவியல் உண்மையைப் பயன்படுத்தி ஒரு குற்றவாளியைக் கையும், களவுமாகப் பிடிக்கிறார்கள் என்று கதையைத் தெளிவாக எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு விளக்கியுள்ளார் ஆசிரியர். கூடவே நிறக்குருடு பற்றிய அனைத்துத் தகவல்களையும் தந்து நம்முடைய அறிவியல் ஞானத்தைக் கூட்டுகிறார்.
அடுத்ததாக ஆர்வக் கோளாறுடைய, ஒரு சமூக ஆர்வலரைப் பற்றிய பதிவு. இது முதலில் சிரிக்க வைத்தாலும் வேதனை தந்த பதிவு. செய்திகளை முந்தித் தரும் ஆர்வக்கோளாறுடன், அவசரக்குடுக்கைகளாகச் செயல்பட்டு வதந்திகளை உருவாக்கிப் பரப்புகின்ற இவர்களுடைய செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என்பது உண்மையே. இதயநோய், காசநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல், உண்மையை மூடி மறைத்து அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைத்துத் தன் கடமையைச் செய்யத் தவறி, கை கழுவும் பொறுப்பில்லாத பெற்றோரைப் பற்றி நினைக்கும்போது நெஞ்சு பொறுப்பதில்லை.
இவற்றை அடுத்து மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் பற்றிய கட்டுரை என்னை மிகவும் பாதித்தது. ஆசிரியர் கொடுத்துள்ள பல்வேறு தகவல்கள், இவருடைய பரந்த வாசிப்பையும், அறிவையும் படம் பிடித்துக் காட்டின. Hermaphrodite என்ற சொல்தான் முதலில் இவர்களைக் குறிப்பிட உபயோகப்படுத்தப்பட்டது என்கிற தகவல் எனக்குப் புதிதாக இருந்தது. கிரேக்க புராணத்தில் இருந்து அந்தச் சொல் எப்படி உருவானது என்று விளக்கியுள்ளார்.பண்டைய சுமேரிய நாகரிகம், புராணக் கதைகள், அர்த்தநாரீசுவரர் தத்துவம் போன்ற விஷயங்களை வைத்து இவர் இந்த மூன்றாம் பாலினம் பற்றி அலசியிருந்தது என்னை பிரமிக்க வைத்தது.
தவறான வார்த்தைகளை உபயோகித்து இந்த மூன்றாம் பாலினத்தை இழிவுபடுத்திய அதே சமூகம், இன்று திரு என்கிற அடைமொழியுடன் அழைப்பது வரவேற்கத் தகுந்த மாற்றம்தான். இருந்தாலும் இன்னும் அவர்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதும் அப்பட்டமான உண்மை. பிறந்ததும் ஆணா, பெண்ணா என்று கணிக்கமுடியாமல் பல்வேறு பரிசோதனைகளுக்கு ஆளாகிய பெண் குழந்தை பற்றிய தகவல் பரிதாபமாக இருந்தது. தொடர் சிகிச்சைகள் செய்துகொள்ள வேண்டிய அவசியமும், அவற்றை நிறுத்தினால் அந்தப் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துகின்றன.
இதைப்பற்றிப் பேசவே தயங்குகின்ற மக்களும், ஏன் மருத்துவரும் கூட நம்மிடையே வாழ்வது எவ்வளவு வருத்தம் தரும் நிதர்சனம்! அரசாங்கமும், சமூக அக்கறை கொண்ட பொதுநல அமைப்புகளும் ஏதாவது செய்தால் இந்த அவலத்தை மாற்றலாம். எத்தனை எத்தனை விழிப்புணர்வுப் பதிவுகள், சமூக அக்கறை கொண்ட அலசல்கள் என்று என்னை வியக்க வைத்த அற்புதமான கட்டுரைகள். நிறைய புதிய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். அரைகுறை மருத்துவ ஞானம் ஆபத்து என்பதையும் உணர்ந்துகொண்டேன். வெறும் மருத்துவராக மட்டும் இல்லாமல் ஒரு நண்பராக, சமூக ஆர்வலராக, மனிதநேயம் மிகுந்தவராக, சீர்திருத்தவாதியாக, ஒரு சிறந்த எழுத்தாளராக என்முன்னே காட்சி அளிக்கும் டாக்டர். அகிலாண்டபாரதி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்!
நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி எதை வேண்டுமானலும் எழுதுவேன் என்று குவிந்து கிடக்கும் இன்றைய எழுத்தாளர் மத்தியில், இதைத்தான் எழுதுவேன், இப்படித்தான் என் வாசகர்களை வழிநடத்துவேன் என்று புரட்சிக்கொடி தூக்கியுள்ள எழுத்தாளரின் இந்த மகத்தான முயற்சிக்குத் தலைவணங்குகிறேன்.
நல்ல எழுத்தை வாசிப்போம். தேர்ந்த எழுத்தாளர்களை நேசிப்போம்.