மயிலம் இளமுருகு
தமிழ்ச் சமூகத்தின் நாகரிகம், வரலாறு, பண்பாடு, இலக்கியம், இலக்கணம், அகராதியியல், திருக்குறள், நடப்புச் செய்திகள், நாட்டார் வழக்காறு, காலநிலை மாற்றம், சமூகப் புரிதல், சொல் வழக்கு என்று பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகளை இந்த நூலில் ஆசிரியர் வெள் உவன் அவர்கள் எழுதியுள்ளார் இந்நூலில் 28 கட்டுரைகள் அமைந்துள்ளன.

பண்பாடு பற்றி அறிதலையும் புரிதலையும் பெற வாழ்ந்து அனுபவித்த பின்பே தெளிவு பெற முடியும். அதுவும் தமிழ்ச் சமூகம் போன்ற மிகத் தொன்மையான ஒன்றைப் பற்றி ஆழமாய் சிந்தித்து அப்படி சிந்தித்ததை எளிமையாக விளக்குவதற்கு அனுபவம் பெற்றவர்கள் அரிதே. குமரி கண்ட ஆய்வாகட்டும் வானயிவியலாகட்டும் கணக்கியலாகட்டும் தமிழ் அறிவுலகில் புதிய ஒளியை ஒளிரச் செய்து பண்பாட்டு ஆய்வு முறையில் தொன்மையில் புதுத் துறையைக் காட்டும் வெள் உவன் தமிழின் மிக முக்கியமான பண்பாட்டு தெளிவுரையாளரராக விளங்குகிறார்.
தமது வேரை மறந்த இனம் விரைவில் மறைந்து போகும் என்று அறிஞர்கள் பலர் சுட்டிக்காட்டும் கருத்து மறுக்க முடியாத உண்மை. பண்டைய நாள்களில் தோன்றி, மறைந்துபோன நாகரிகங்கள் சிலவற்றின் தடங்கள் இன்று அகழ்வாய்வுகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் மூலமே அறியக் கிடைக்கின்றன.
நாம் நாகரிகம் என்ற பெயரில் நம்முடைய மரபுகளைத் தொலைத்து விட்டோமே என்ற ஏக்கம் ஒவ்வொரு கட்டுரையிலும் காணப்படுகிறது. நிகழ்கால நடப்புகளால் சுற்றுச்சூழலும், உடல்நலமும் பாதிக்கப்படுவதை வெள் உவன் குறிப்பிடுகிறார். அவருடைய ஏக்கம் நியாயமானதே.
சக்கரம் மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் சக்கரத்தின் கண்டுபிடிப்பு ஒரு தாவலை உண்டாக்கியிருக்கிறது. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் சீரான மண்பாண்டங்களை வனையக் கற்றுக்கொண்டான். மண்பாண்டங்களின் உருவாக்கம் மனித நாகரிக வளர்ச்சியில் ஒரு மைல்கல். அதுபோலவே சக்கரங்களைப் பயன்படுத்தி வண்டியை உருவாக்கியதும் சிந்துவெளி நாகரிகக் காலத்திலேயே வண்டியின் பயன்பாடு இருந்தது என்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.
சக்கரம் என்று வந்துவிட்டாலே அதற்கான நுண் கணக்கியலும் உருவாக்கப்பட வேண்டிய தேவையும் ஏற்பட்டுவிடுகிறது. சக்கரம் என்று எடுத்துக் கொண்டால் அதன் ஆரம், விட்டம், மையம், சுற்றளவு போன்ற அளவுகள் பற்றிய அறிவு தேவைப்படுகின்றன. மாட்டுவண்டியின் ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள் என்று ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்.
நமது பண்பாட்டின் உண்மையான முகத்தை அறிந்துகொள்வதற்குச் செவ்வியல் கலை, இலக்கிய மரபுகள் மட்டுமே போதாது. காலம் காலமாக மக்களின் செயல்களிலும், வழக்கங்களிலும், சாதிய வட்டாரத் தளங்களில் தொடர்ந்து வரும் வழக்காறுகள், பழக்க வழக்கங்கள், கலைகள், பண்பாடு போன்ற மரபுகளின் வழியாகத்தான் பன்முகத் தன்மை கொண்ட நமது பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.
நோய் எதிர்ப்புசக்தி குறைவினால் பல்வேறு நோய்களின் தாக்குதலும் அதிகமாகி இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் நமது மரபுவழி உணவுகளை மறந்ததும் பாரம்பரிய உணவு தானியங்களைத் துறந்ததும் மட்டும் அல்ல காரணம். நாகரிகம் என்ற பெயரிலும் அர்த்தமில்லாத மேல்நாட்டு மோகத்தினாலும் பீட்சா, பர்க்கர் நூடுல்ஸ் போன்ற உணவுகளை உண்ணத் தலைப்பட்டதும் அவற்றில் கலந்திருக்கும் அளவுக்கு அதிகமான நச்சு ரசாயனப் பொருள்களும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இயந்திரச் செக்குகளின் ஆதிக்கத்தால் நமது மரபுவழி கல் செக்கின் முக்கியத்துவம் குறைந்து அதைக் கைவிடும் சூழ்நிலை இன்று உருவாகி இருக்கிறது.
மனித வாழ்விற்கு ஆதாரமாய் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுவர். உணவு, உடை, மற்றும் உறைவிடம். . நமது மரபுவழித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் சுண்ணாம்பு சாந்து கொண்டும் கட்டப்பட்ட பழைய வீடுகள் இன்றும் நல்ல வலுவுடன் இருப்பதை நாம் காண முடிகிறது. நமது மரபு வழித் தொழில்நுட்பத்தில் சுண்ணாம்புக் காரை கொண்டு கட்டப்பட்டதும் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதுமான பெரியாறு அணையின் உறுதித் தன்மையைச் சோதித்து, சமீபத்தில் மத்தியக் குழு அளித்திருக்கும் உறுதிச் சான்றிதழ் ஒன்றே போதும் எனக் கட்டிடக்கலை குறித்தும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.
ஆதிநாளில் தமிழர்கள் காலத்தை அளக்க நாழிகைக்கல், நாழிகைத்தூம்பு, நாழிகைப்பறை, நாழிகைவட்டில் என்று பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி நேரத்தை அளவிட்டு வந்தனர். இப்படி நேரத்தை அளந்து சொல்பவர் நாழிகைக் கணக்கர் என்று அழைக்கப்பட்டார். நேரத்தை அளக்க நாழிகைவட்டில் என்பதே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது என்று தெரிகிறது. 60 நாழிகை கொண்டதே ஒரு முழு நாள். இதுதான் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நடைமுறை. மேலும் இந்த நாழிகைவட்டிலை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்ற விதிமுறையினையும் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
இந்தக் காலத்தில் எந்த விதமான அலங்கார ஆடம்பர விளம்பரங்கள் ஏதும் இல்லாமலும் கடைப் பெயரைத் தாங்கிய சின்ன அளவிலான ஒரு பெயர்ப்பலகைகூட இல்லாமலும் பாரிய வியாபாரம் செய்து உலகப் புகழ்பெற்ற கடை ஒன்று உண்டென்றால் அது திருநெல்வேலி அல்வா விற்கப்படும் இருட்டுக்கடை ஒன்றாகத் தான் இருக்கும். இருட்டுக்கடையின் உண்மையான வரலாற்றை ஆசிரியர் எழுதியிருப்பது சிறப்பு.
ஆண் மற்றும் பெண்பால் கடவுளரைக் குறிக்க ஸ்ரீ என்ற ஒற்றை சமஸ்கிருதச் சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தெய்வத்துள் பால் வேற்றுமையை வேறுபடுத்திக் காட்ட இருவேறு தனிச் சொற்களைத் தமிழ் அறிஞர்கள் உருவாக்கினர். இது தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் செழுமையால் மட்டுமே சாத்தியப்பட்டது. “அருள்மிகு” என்பது ஆண் கடவுளரைக் குறிக்கவும் “அருள்தரும்” என்பது பெண் கடவுளரைக் குறிக்கவும் என்பதானது மரபாக்கப்பட்டது. அதன்படி ஆண்பால் கடவுள் ஆலயத்தை ‘அருள்மிகு’ பழனி ஆண்டவர் திருக்கோயில் என்றும் பெண்பால் கடவுள் ஆலயத்தை ‘அருள்தரும்’ கருமாரி அம்மன் திருக்கோயில் என்றும் குறிப்பிடும் வழக்கம் அரசின் இந்து அறநிலையத் துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

நூலின் தலைப்பிலான கட்டுரை குறிப்பிடத்தக்க கட்டுரை ஆகும். மாட்டுத்தாவணி என்றதொரு வகையிலும் மாடுகள் விற்பதும் வாங்குவதும் நடைபெறுவது உண்டு. மாட்டுத்தாவணிகள் வாரச்சந்தைகளை விட அளவில் பெரியது மட்டும் அல்ல; பத்து நாள்கள் இருபது நாள்கள் என்று தொடர்ச்சியாகவும் நடக்கக்கூடியவை. இந்த மாட்டுத்தாவணியில் விற்பனையும் லட்சக்கணக்கில் நடைபெறும். மாட்டுத் தாவணிகள் நடைபெற்று வந்த சில முக்கிய ஊர்களில் பொள்ளாச்சி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களும் அடங்கும். மதுரை நகரின் மிகப்பெரிய பேருந்துநிலையம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையமாகும். ஒரு காலத்தில் மிகப்பெரிய மாட்டுத்தாவணி தொடர்ந்து நடைபெற்று வந்த இந்தப் பகுதி மாட்டுத்தாவணி என்ற பெயரிலே அழைக்கப்பட்டு வந்தது. இந்த இடத்தில் மாட்டுத்தாவணி நடைபெறும் வழக்கம் நிறுத்தப்பட்ட பின் அங்கே மிகப் பெரிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்ட பின்னும் அந்தப் பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என்றே இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
சோனகம் என்பதற்கு அரபுநாடு என்றும் சோனகர் என்றால் அரேபியர் என்று தமிழ் லெக்சிகன் பொருள் சொல்கிறது. திருச்செந்தூரை ஒட்டி இன்றும் சோனகன்விளை என்ற ஊர் உண்டு. கிழக்குக் கடற்கரைத் துறைமுகத்தில் அரேபியாவில் இருந்து இறக்குமதியாகிற குதிரைகளைச் சோனகர் வளர்த்து வந்த ஊர் தான் சோனகன்விளையாகும். அவர்கள் அந்தக் குதிரைகளை மேய்த்த ஊர்தான் குதிரைமொழியாகும். குதிரைமொழித் தேரியில் செழித்து வளர்ந்த புல்வெளிகளே மேய்ச்சல் காடாக இருந்திருக்கின்றன. இந்தச் செய்தியை உறுதி செய்கிறது திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில் உள்ள சுவர் ஓவியங்கள்.
கிழக்கிந்தியக் கம்பெனியைத் தொடர்ந்து ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு இரும்பு, பருத்தி போன்ற கச்சாப்பொருட்களை இங்கு மலிவான விலைக்குக் கொள்முதல் செய்து தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தும் பின் அங்கு அவற்றைப் பண்டங்களாக மாற்றி இங்கு இறக்குமதி செய்து கொள்ளை லாபத்திற்கு விற்று நமது நாட்டைச் சுரண்டி கொள்ளை அடித்தனர்.
தமிழர்கள் சங்க காலத்திலேயே கடல் கடந்து வாணிகம் செய்து பெரும் பொருளீட்டினர். முதல் கூட்டுறவுச் சங்கம் என்பது 1844-ல் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டதாக வரலாறு பேசுகிறது. ஆனால் கி.பி.1812 வாக்கிலேயே தமிழகத்தின் தென் கோடியில் ஒரு குக்கிராமத்தில் இன்றைய கூட்டுறவுக் கோட்பாட்டின் அடிப்படைகளைக் கொண்ட ஒரு நெய் உற்பத்தி – விற்பனை நிறுவனம் ஒன்று சிறப்பாகச் செயல்பட்டு வந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமூகரெங்கபுரம் தான் இந்தச் சிறப்பைப் பெறுகிறது.
நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் மழை முன்கணிப்புக்கு ஒரு முறையைக் கையாண்டு வந்திருக்கின்றனர். அந்த முறையில் கணித்துக் கூறும் தொழில்நுட்பவாதிகள் வள்ளுவர் என்று குறிப்பிடப்பட்டனர். வள்ளுவர்கள் கணிக்கும் இந்த முறைக்கு “கருவோட்டம்” அல்லது “கர்ப்போட்டம்” என்று பெயர் சொல்லப்படுகிறது. இந்த வள்ளுவர்கள் யாரென்றால் தமிழகச் சாதிப்பிரிவில் ஒன்றான வள்ளுவச் சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். பழைய காலத்தில் மன்னனின் குருவாகவும் அவனது ஆணையை அறிவிப்புச் செய்பவராகவும் இவர்கள் இருந்திருக்கிறார்கள். பழங்கால அரச முறையில் ‘உள்படு கருமத்தலைவன்’ என்னும் பதவி ஒன்று இருந்திருக்கிறது. அது இந்த வள்ளுவர்களுக்கானது. இந்த வள்ளுவர்கள் தான் கருவோட்டம் பார்த்து மழை முன்கணிப்புச் செய்து வந்தனர். இவ்வாறு நீர் சார்ந்த கருத்துகளையும் இந்நூல் பேசுகிறது.
ஓர் இனத்தின் அடையாளமாக விளங்குவதில் தலையாய இடம் பிடிப்பது அந்த இனத்தின் மொழியே ஆகும். 3000 ஆண்டுக்கு முந்தைய தொல்காப்பியம் காலம் தொடங்கி இன்று வரை தமிழில் சொற்பொருள் கூறும் துறையானது பல்வேறு மாற்றங்களுடன் அகராதிக் கலை என்பதாக இன்று வளர்ந்து நிற்கிறது. தனி நூல் அகராதி, தனித்துறை அகராதி, கலைச்சொல் அகராதி, கலைக் களஞ்சியம், ஒப்பியல் மொழியகராதி, புலவர் அகராதி, எனப் பலவகை அகராதிகள் 20-ஆம் நூற்றாண்டில் தோன்றி தமிழ் மொழியை வளங்கொழிக்கச் செய்துகொண்டிருக்கின்றன. நிகண்டுகளின் காலத்திலேயே தனித்துறை நிகண்டுகளும் இங்கே இயற்றப்பட்டன. கணித்துறை (வானசாத்திரம்) தொடர்பான கால நிகண்டு, காரக நிகண்டு என்று இரண்டு நிகண்டுகளை தில்லைநாயகம் இயற்றி உள்ளார். அதுபோல் மருத்துவ நிகண்டுகளும் நிறையவே இயற்றப்பட்டிருந்தன.
பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் இவரது நூல் தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான ஒன்றாகும். குறிப்பாக தமிழ் ஆர்வலர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் படிப்பதற்கு ஏற்ற நூல்.
மிகச் சிறப்பாக எழுதியுள்ள ஆசிரியருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்!