மஞ்சுநாத்
“மழைக்காலம் என்பது நீண்ட வாழ்க்கையின் கசடுகளை தன் உடலில் இருந்து கழுவிக்கொள்வதற்காகக் கடவுள் தெளிக்கும் புனித நீர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதில் நனைந்துவிட வேண்டும். மழையில் நனைதல் எப்போதும் குழப்பங்களில் இருந்து விடுவித்து நமக்குள் புதிய சிந்தனைகளை ஊட்டும். அது நம் வாழ்க்கைப் பாதைகளை திறக்கும்.”

ஆனால் சிலவேளைகளில் மழைக்காலம் பாதையின் தடத்தை சிறிதும் மிச்சம் வைக்காமல் அழித்துவிடவும் செய்கிறது.
“பெருமழை பெய்து ஓய்ந்திருந்தது. இலைகளில் நீர் சொட்டும் சத்தமும் யாரோ சேற்றில் கால் பதிய வேகமாக நடக்கும் சத்தமும் கேட்டவாறு இருந்தன. தன்மடியில் அழுதுகொண்டே படுத்திருந்த மகனின் தலையை கோதிவிட்டவாறு சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள் நாராயணி. அருகே சிறிய மண்ணெண்ணெய் விளக்கு. அழுதழுது சிவந்த அவளது கண்கள், லேசாகக் காற்றில் அசையும் விளக்கின் ஜுவாலையை பார்த்துக் கொண்டிருந்தன. அந்த ஜுவாலையின் ஒவ்வொரு அசைவும் அவள் ஞாபகத்தின் ஏதோ ஒரு பக்கத்துக்கு வெளிச்சம் பாய்ச்சி முழுக்க வற்றிப்போயிருக்கும் அவளது கண்களை மீண்டும் அழத் தூண்டிக் கொண்டிருந்தது. அவளது மகன் இன்னமும் அழுது கொண்டிருந்தான். அவனது கண்ணீர் துளிகளை அவளால் தன்மடியில் உணர முடிந்தது.”
சிந்தனை, அனுபவம், உணர்தல்… எல்லாமே எதிரும் புதிருமாக கலந்திருப்பது ஒன்றும் புதிதல்ல. முரண்பாடு மனிதனின் வரலாற்றுப் பழக்கத்தின் வழியே தொடர்வதால் அதனை இயல்பான குணநலனாகவே கருதுகிறோம். திறந்த மனதுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என நெஞ்சுயர்த்தினாலும் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் போன்றவற்றில் பிறமொழி பேசும் மக்களிடம் இன்முகத்தைக் காட்டுவதில் தயக்கம் இருக்கிறது. அரசியல் கரங்கள் சுய ஆதாயத்திற்காக இனவெறி மற்றும் வெறுப்பை ஊக்குவித்தாலும் திரைமறைவில் என்னவோ ஊக்கத்தொகையை உயர்த்திக் கோராத குறைந்த கூலிக்கு நீண்டநேரம் வேலை செய்யக்கூடிய பிறமாநிலத் தொழிலாளர்களையே அவர்கள் நடத்தும் பெருநிறுவனங்கள் வரவேற்கின்றன.
நாகரிகம் தோன்றுவதற்கு முன்பாகவே ஏதோவொரு காரணத்திற்காக வேறு நிலத்திற்கு மனிதன் நகர்வது காலங்காலமாகவே நடந்து வரும் ஒன்று. அப்படி புதிய மண்ணில் வேரூன்றி பல இன்னல்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து உயிர் பிழைத்து தழைத்தோங்கி சிலர் அந்த மண்ணின் ஆட்சி பீடத்தின் தலைமையிலும் அமர்ந்திருக்கிறார்கள். ‘ஆஹா பார்த்தீர்களா அவர் எங்கள் வம்சவழி!’ என்று பெருமையடைபவர்கள் சொந்த நாட்டில் வேறு மாநிலத்தில் ஏன் வேறு ஊரில் இருந்து பிழைப்புத்தேடி குடியேறியவர்களிடம் நடந்துகொள்ளும் போக்கு இருக்கிறதே? இதுதான் முரண்பாடு.
புதுச்சேரியிலும் எதிரும் புதிருமான கோடுகளாலான பிம்பங்கள் நிறைந்துள்ளன என்பதை அரிசங்கர் தனது மாகே கஃபே நாவலில் மென்மையாக முன்வைக்கிறார். அவரது மென்மையான ஆளுமை இந்நாவலை சலசலப்பை உண்டாக்கும் கிளர்ச்சிப் போக்குகளில் இருந்து விலக்கி விடியலில் வெறுமையான தனது வலையின் பாரம் தாளாது ஏமாற்றுத்துடன் பழைய தடத்தின் சுவடுகளில் கவனத்துடன் தனிமையின் உணர்வுடன் நடந்து செல்லும் மீனவனின் பிம்பத்தை நிறுத்துகிறது. பிற மாநிலத்தவர் தமிழக மக்களின் வேலைவாய்ப்புகளை பறித்துக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் தொடர்வதைப்போல் நான் புதுச்சேரி மாநிலத்தில் அரசு பணியேற்றுக் கொண்ட காலத்தில் மண்ணின் மைந்தர்கள் குரல் மற்ற மாநிலங்களைவிட அதிகமாகவே ஒலித்தது. மண்ணின் மைந்தர்களது உரிமைகளைக் காப்பதற்கும் பெறுவதற்கும் ஒவ்வொரு துறையிலும் தனித்த சங்கங்களும் இயங்கி வருகின்றன. புதுச்சேரியின் உணர்வு புதிதல்ல, வரலாற்றோடு தொடர்புடையது. புதுச்சேரி திருபுவனை வரதராசப் பெருமாள் கோயில் முன்மண்டபத்தில் இந்திய தொல்லியல் துறை கண்டறிந்த முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1113) கல்வெட்டு சாசனம் இவ்வாறு கூறுகிறது.
“உள்ளூர் காரியங்களுக்கு உள்ளூரில் இருக்கும் நல்லோர்களையே பணியமர்த்திக் கொள்ள வேண்டும். அப்படி அமர்த்தாது வெளியூர் ஆட்களை பணியமர்த்துபவர்கள் அரச ஆணையை மீறியவர்களாகவும் மறுத்தவர்களாகவும் கருதி அவர்கள் மீது மகாசபை நடவடிக்கையை மேற்கொள்ளும்.”
(கல்வெட்டு ஆவணம்: 205/1919).
ஆவணத்தின் அதிகாரத் தோரணையை நோக்குங்கால் இப்பிரச்சனைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தெரிகிறது. பழக்கமும் உரிமையும் வரலாற்றின் தொப்புள்கொடி பந்தம்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பது புதுச்சேரி மட்டுமல்ல காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய மூன்று பிராந்தியங்களையும் உள்ளடக்கியது. இப்பிணைப்பிற்குப் பின்னால் இருக்கும் காரணம் நிலத்தின் தொடர்போ, கலாச்சாரத்தின் நீட்சியோ கிடையாது, பிடியற்றுப்போன பிரெஞ்சு ஏகாதிபத்தியம் விட்டுச்சென்றுள்ள மாயக்கரம். அது முற்றிலும் செயலிழந்து போகவில்லை, 110 கி.மீ தமிழ்நாட்டின் நிலப்பரப்புக்கு அப்பால் இருக்கும் காரைக்கால், தமிழ்நாடு-கேரளா நிலப்பரப்பை கடந்து 650 கி.மீ. தூரத்தில் இருக்கும் மாகே, 850 கி.மீ. தூரத்தில் தமிழ்நாடு-ஆந்திர நிலபரப்பை கடந்துள்ள ஏனாம் ஆகிய மூன்றையும் பிடித்து வைத்திருக்கிறது.
மிகப்பெரிய நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு வசதியுடைய மாநிலமான தமிழ்நாட்டின் கடைக்கோடியில் (700 கி.மீ. தூரத்தில்) இருக்கும் கன்னியாகுமரி மற்றும் தென்மாவட்டங்களின் கோரிக்கை திருச்சி / மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்கவேண்டுமென்பது. இதற்கான தேவை எங்கிருந்து எழுகிறதென்றால் “உரிமை”. உரிமையை அழுத்தமாக கேட்பதிலும் சரி, அதைப் பெறுவதிலும் சரி, முன்வரிசையில் நிற்பவர்கள் யாரென்றால் மண்ணின் மைந்தர்கள். வரலாற்றின் பகுப்பாய்வில் நிறைய இடங்களில் மண்ணின் மைந்தர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் பூர்வக்குடிகளுக்கு கல்லறை எழுப்பியவர்களாகவே இருக்கிறார்கள்.
காலங்காலமாக நாங்கள் இங்கே வாழ்ந்திருக்கும்போது வேறொருவர் எப்படி எங்களுக்கு முன்னால் முதுகு காட்டி நிற்பதற்கு அனுமதிப்போம்? நமது அரசியலமைப்பு மற்றும் சட்டமுறைகளை அறிதல் அவசியம். இல்லாவிடில் அரசியல் விஷமிகளின் துவேஷத்தை அல்லது நாவலில் வரும் குரியன் போன்ற தனிநபர்களின் எரிச்சலை சுமந்து செல்லும் கிருமிகளாக மாறி மற்றவர்களின் அழிவோடு சேர்ந்து தானும் அழிய நேரிடும். ஆனால் வந்தேறிகள் என்கிற உணர்வு அரசு மட்டத்திலும், தொழிற்சாலைகளிலும் சில எதிர்வினைகளை ஏற்படுத்தினாலும் அதன் பாதிப்பு பெரியளவில் கிடையாது. ஆனால் அரிசங்கர் தனது நாவலில் சிறியளவில் இயங்கும் உணவு விடுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் நடக்கும் இத்தகைய மோதல் அவர்கள் வாழ்வின் அடிப்படையில் நிவர்த்திக்க முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்.
எல்லோரும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு தமது பிறந்த ஊரிலிருந்து வெளியேறுவது ஒன்றே நிவாரணமாக கருதுகிறார்கள். பரிதாபம் என்னவென்றால் புதிய சூழலானது எல்லோருக்கும் செழிப்பான வாழ்வை தந்துவிடுவதில்லை மாறாக முந்தைய வாழ்வைவிட பெரும் சிக்கலான களத்தில் அவர்களை சிக்கவைத்து விடுகிறது.
மாகே கஃபேவின் உரிமையாளரான வினயன் தன்னை பாண்டிச்சேரிக்காரன் என்பதில் உறுதியாக இருக்கிறான். பாண்டிச்சேரியில் தொழில் செய்து வாழ்வதற்கு அவனுக்கு சகல உரிமைகளும் இருக்கிறது. ஆனால் மாகே கஃபேவில் மலையாளம் பேசும் தொழிலாளர்களையும் தமிழர்களையும் வேலை வாங்கும்போது அவன் சொல்லிலும் செயலிலும் வெளிப்படும் முரண்பாடு மட்டுமே அவனை மலையாளியா, பாண்டிச்சேரிக்காரனா என்பதை முடிவு செய்யும். இல்லையென்றால் அப்புண்ணி கூறுவதுபோல் “இந்த உங்க ஆளு. உங்க மனுஷங்க, உங்க ஜாதிக்காரங்க, ஊருக்காரங்க, பாஷை பேசுறவங்க இதெல்லாம் சும்மா. அவன் அவனுக்கு அவன் அவன் பிரச்சனை தான் முக்கியம்” என்கிற எதார்த்தம் உணர்த்தும்.
பெரும் காலவெளியில் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு முன்நகரும் நாவல் புதுச்சேரி களத்தில் நிகழ்ந்தாலும் வரலாற்றுப் படிமங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஒருவேளை காலயோட்டத்தில் மாறுதலடையும் பிழைப்பின் சுருதி வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் தெளிவாக எதிரொலிப்பதற்காக தவிர்த்திருக்கலாம். அதேவேளை விலாவாரியான அத்தியாயங்கள் திடீரென அதிவிரைவுடன் காலத்தைக் கடந்து சென்று விடுவதால் எதிரொலிப்பின் நுட்பம் குறைகிறது. கூடுதல் அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். சந்திரன் மற்றும் கதிர் பாத்திரங்களின் மீதான வெளிச்சத்தைவிட வினயன் பாத்திரத்தின் மீதான வெளிச்சம் குறைவு. மனித வாழ்வில் புறச்சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தால் அகமனதில் நிகழும் உணர்வுகளை எழுத்தின் மூலம் அழகாக வெளிப்படுத்தும் அரிசங்கர் மாகே கஃபேவின் உரிமையாளர் வினயனின் பார்வையை வெகுதூரம் வரை கொண்டு சென்றிருந்தால் நான் முன்பு கூறியதுபோல் இதுவொரு கிளர்ச்சிக்கான குரலை மென்மையான முறையில் பதிவு செய்திருக்காது.
எழுத்தாளர் அரிசங்கர் புதுச்சேரிக்காரர். பதிலடி, ஏமாளி, உடல், சப்தங்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளோடு மாயப் படகு என்கிற சிறுவர் நாவலும், பக்கார்டி என்கிற குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பும் வெளிவந்துள்ளன. பாரிஸ் மற்றும் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் என இரண்டு நாவல்களோடு 2023-ல் எதிர் வெளியீடு வாயிலாக வெளிவரும் மாகே கஃபே இவரது மூன்றாவது நாவலாகும்.