தமிழன்பிரபாகரன்
சென்னையைப் பூர்வீமாகக் கொண்ட, சினிமா கலை இயக்குனரான மு.து.பிரபாகரன் அவர்களின் முதல் நாவல் தான் அடையாற்றுக்கரை. சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்றவர் பிரபாகரன். பதினைந்து வயதிலே இடதுசாரி அமைப்பில் இணைந்து செயல்பட்டவர். அவரின் பல வருட உழைப்பைக் கொட்டியிருக்கிறார் அடையாற்றுக்கரை புத்தகத்தில்.

1977 களில் அடையாற்றில் ஏற்பட்ட ஒரு புயலில் ஆரம்பிக்கிறது கதை. புயலில் தத்தளிக்கும் மக்கள், அங்கே மாட்டித் தவிக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண், அனைவரையும் காப்பாற்றத் துடிக்கும் அம்பேத்குமார் என்ற இளைஞன் என்று விரிகிறது கதை. வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் பேசுவது போன்று ஒரு வரி வரும், “ஆத்த ஒட்டி மண்ண அபகரிச்ச பாவிங்களால உண்டான வலி ஆத்துல ரணமா கொட்டியிருக்கு”.
எழுத்தாளர் போற போக்கில் ஆரம்ப அத்தியாயத்திலே மிக அழகாக, ஓர் ஆழமான அரசியலைப் பேசத் தொடங்கினார். முதல் அத்தியாயத்தில் எழுத்தாளர் பேசிய அரசியல், கட்சி அரசியல் அல்ல, மத அரசியல் அல்ல, ஜாதி அரசியல் அல்ல, அடித்தட்டு மக்களின் அரசியல், மக்களை ஆண்டாண்டு காலமாக ஒடுக்கி வைத்திருக்கும் நில அரசியல்.
அடையாற்றுக் கரை, அங்கு வாழும் மக்கள் என்று ஆரம்ப அத்தியாயத்திலே கதைக்களம் நம்மை இறுகப்பற்றிக் கொண்டது. அதுவும் வெள்ளம் வருவதை விவரிக்கும் காட்சி மிக நேர்த்தி. எழுத்தாளர் சினிமா துறையில் கலை இயக்குனராக பணிபுரிவதாலோ என்னவோ, வெள்ளத்தில் தத்தளிக்கும் நாய்க் குட்டி, அங்கே உள்ள குடிசைகள் எல்லாம் நம் கண்முன்னே காட்சிப்படுத்தப்பட்டது, சிறு சிறு டீட்டயிலிங் நம்மை பிரமிக்க வைக்கிறது. தசாவதாரம் படத்தில் இறுதிக் காட்சியில் வரும் சுனாமி எந்த அளவுக்கு ஒரு பிரமாண்டத்தைக் கொடுத்ததோ, அதே அளவிற்கு நாவலில் வரும் வெள்ளக் காட்சி எனக்கு ஒரு பிரமாண்டத்தைக் கொடுத்தது. காட்சியை எழுத்தில் கொண்டு வருவது மிகவும் சிரமம், அதை மிக எளிதாகக் கையாண்டிருக்கிறார் எழுத்தாளர். கதையின் இரண்டாம் அத்தியாயத்தில் கதை நிகழ் காலத்திற்கு வருகிறது. அதே அடையாற்றுக் கரையில் குடிசைப் பகுதிகளில் வாழும் கதையின் முக்கிய கதாபாத்திரமான முனுசாமி என்ற குப்பை அள்ளும் இளைஞன் அறிமுகப்படுத்தப்படுகிறான். முனுசாமிக்கும் அவள் மனைவி பஞ்சவர்ணத்திற்கும் இடையேயான காதல் அழகாக ஆரம்பம் ஆகிறது.
முனுசாமிக்கும், அவள் மனைவிக்கும் இடையேயான காதலின் பின்கதையைச் (பிளாஸ்பேக்) சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்லலாம்? சரி, ஒரு கிளியின் வாயிலாகச் சொல்லுவோம். கேட்பதற்கு வினோதமாக இருக்கிறதல்லவா? அந்த வினோதத்தைத்தான் கையில் எடுத்து அழகாகக் கையாண்டிருக்கிறார் எழுத்தாளர்.முனுசாமிக்கும், அவன் வளர்க்கும் மீனாட்சி என்ற கிளிக்கும் இடையே நடக்கும் உரையாடலாக முனுசாமியின் காதல் பின்கதை நகர்கிறது. முனுசாமிக்கும், பஞ்சவர்ணத்திற்கும் இடையே மலரும் காதல், ஒரு கவிதையைப் போன்று விவரிக்கப்படுகிறது. அந்த அடையாற்றுக்கரையில் கைகோர்த்து இருவரும் காதல் வளர்க்கும் பொழுது, அந்த அடையாற்றின் வாசனையை நம் நெஞ்சோடு பூசிக்கொள்ள முடிகிறது.
வழக்கமான காதல் எதிரிதான் இவர்களுக்கும். வேலை, அந்தஸ்து என்று பஞ்சவர்ணத்தின் தாய் திருமணத்திற்கு மறுக்கிறாள். தாய் மட்டும் அல்ல, பஞ்சவர்ணத்தின் மொத்தக் குடும்பமும், முனுசாமியை வெறுக்கிறது. அந்த இடத்தில் ஒரு காட்சி வரும், புத்தகத்தில் மிக அழகான காட்சி என்று அதைச் சொல்லலாம். சுற்றி அனைவரும் உட்கார்ந்து, பஞ்சவர்ணத்தின் மனதை மாற்ற பேசிக் கொண்டிருப்பார்கள். பஞ்சவர்ணம் தனி ஆளாக, தன் முனுசாமிக்காக அங்கே வாதாடுவாள். ஒரு நீதிமன்றக் காட்சி போன்று இருக்கும் அந்த இடம். வாதத்தின் நடுவே, பஞ்சவர்ணத்தின் தாயான சம்பாங்கி, முனுசாமியை திருநங்கையான சுகன்யாவுடன் தொடர்புபடுத்திப் பேசுவாள். வெடித்து எழுவாள் பஞ்சவர்ணம், “சுகன்யா அக்காவைப் பத்தி உங்களுக்கென்ன தெரியும், என் மாமாவைப் பத்தி, உங்களுக்கென்ன தெரியும்?” என்று கொக்கரிப்பாள்.
சுகன்யா என்ற ஒரு திருநங்கைக் கதாபாத்திரம் அவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நாவலில். ஆணாய்ப் பிறந்து, பெண்ணாய் மாறிய சுகன்யா, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டிருப்பாள். எல்லோரின் கண்களுக்கும் சுகன்யா தவறானவளாகவே தெரிந்தாள், ஒருவனின் கண்களைத் தவிர, முனுசாமியின் கண்களுக்கு. முனுசாமி, சுகன்யாவை எப்படியாவது அந்த நரக வாழ்க்கையில் இருந்து காப்பற்ற வேண்டும் என்று நினைத்தான். காப்பாற்ற மட்டும் செய்யவில்லை, படிப்பின் முக்கியத்துவத்தை சுகன்யாவிற்கு சொல்லிக் கொடுப்பான். சுகன்யாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த பெரும்பாடு படுவான். சுகன்யாவை எஸ்.ஐ. பரீட்சை எழுத வைப்பான். சுகன்யாவும் பரீட்சையில் பாஸாகி எஸ்.ஐ ஆவாள். சுகன்யாவைப் பொருத்தவரை, முனுசாமி அவளுக்கு அண்ணனோ, அப்பவோ, நண்பனோ இல்லை, அவளுக்கு முனுசாமிதான் சாமி
இதை அனைத்தையும் பஞ்சவர்ணம் சொல்லி முடிக்கும்பொழுது, சம்பாங்கியின் கண்கள் கலங்கி இருக்கும். முனுசாமிதான் தன் மருமகன் என்று அந்த நொடியிலே மனதார முடிவெடுத்து விடுவாள். தன் மருமகனை நினைத்து கர்வம் கொள்வாள் சம்பாங்கி. அடித்தட்டு மக்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு மனிதநேயத்திலே அடங்கி விடும் என்பதை அழகாக விவரித்து இருப்பார் எழுத்தாளர்.
கதையின் அடுத்த ஒரு திருப்பமாக மரச்சட்டம் போட்ட ஒரு பழையப் புகைப்படம் ஒன்று முனுசாமியின் கைகளுக்குக் கிடைக்கும். அந்தப் புகைப்படத்தில் கோர்ட், டை கட்டிக்கொண்ட ஒரு வாலிபனின் புகைப்படம் இருக்கும். அந்த வாலிபனின் பெயர் மாரிமுத்து. இதே அடையாற்றுக் கரையில் பிறந்து, வளர்ந்து, படித்து, பெரிய அரசு பதவியில் பணியாற்றி, தன் இறுதிக் காலத்தில் தன் பிள்ளைகளுடன் அமெரிக்காவில் போய் குடி பெயர்ந்தவர்.
தன் இறுதி நாட்களை எண்ணி, அங்கே அமெரிக்காவில் ஏதோ ஒரு மருத்துவமனையின் படுக்கையில் இறுதி மூச்சை இறுகப்பற்றிக் கொண்டு, பல எண்ணங்களில் நீந்திக் கொண்டிருக்கிறார் மாரிமுத்து. அந்த எண்ணங்கள் உயிர் பெற்றனவோ என்னவோ, முனுசாமியின் கையில் கிடைத்த புகைப்படத்தில் மாரிமுத்துவின் ஆன்மா நுழைந்து முனுசாமியுடன் உரையாடத் தொடங்கும். ஒரு கவிதையைப் போன்ற அழகான அறிமுகத்துடன் புகைப்படம் வாயிலாக மாரிமுத்து பேசத் தொடங்குவார். வாசிக்கும் நாமும் கண்களை அகல விரித்துக் கொண்டு, ஆச்சர்யமாக வாசிக்கத் தொடங்குவோம் இந்த இடத்தில்.
மாரிமுத்துவின் கதை கண்டிப்பாக பேசப்பட வேண்டிய ஒரு கதையாக இருக்கும். அடையாற்றுக் கரையில் ஒரு ரிக் ஷா ஓட்டிக்கு மகனாகப் பிறக்கிறார் மாரிமுத்து. ஆரம்பத்தில் இருந்தே படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். அதனாலே மாரிமுத்துவின் தந்தையான தர்மனுக்கு தன் மகனை எப்படியாவது நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. வெறும் கனவு மட்டும் போதுமா, அனைத்து கதவுகளையும் திறக்க பணம் வேண்டுமே? தர்மனின் உடன் பிறந்த தங்கையான சின்னப் பொண்ணு, தன் மருமகனைப் படிக்க வைக்க உதவுகிறாள். தன் அத்தையின் தயவில் மென்மேலும் படிக்கிறான் மாரிமுத்து. மாரிமுத்து படித்து ஒரு பெரிய நிலைக்கு வருவான், அன்று தன் மகளான பொம்மியை மணந்துகொண்டால், நம் குடும்ப நிலை முற்றிலும் மாறி விடும் என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள் சின்னப்பொண்ணு. பொம்மியையும், மாரிமுத்துவையும் காதல் அணைத்துக்கொள்கிறது.
மாரிமுத்து படித்து ஓர் அரசு உயர் அதிகாரியாக பதவியில் அமர்கிறான். மனிதனுக்குள் இருக்கும் வன்மத்தை இந்த இடத்தில் பதிவு செய்யத் தொடங்குகிறார் எழுத்தாளர். பொம்மியை அதுவரை மனதார மருமகளாக ஏற்றுக் கொண்டிருந்த மாரிமுத்துவின் தாயான பச்சையம்மாள், தன் மகன் நல்ல உத்தியோகத்திற்குச் சென்றதும் வேறு ஒரு பெண்ணைத் தன் மகனுக்காகத் தேடத் தொடங்கினாள். உடைந்து அழுகிறாள் பொம்மி. மாரிமுத்து எவ்வளவோ மறுத்தும், பல கலவரங்களுக்கு நடுவே மாரிமுத்து வேறு ஒரு பெண்ணை மணக்கிறான். சின்னப்பொண்ணு புத்தி பேதளித்துப் போகிறாள், பொம்மி மாரிமுத்துவின் நினைவாகவே திருமணம் செய்துகொள்ளாமல் வாழத் தொடங்குகிறாள்.

அடையாற்றின் துர்நாற்றத்தில் இருந்து ஓடிவிட வேண்டும் என்று நினைத்த மாரிமுத்துவின் கதை, அவன் ஒருவனின் கதையல்ல, கீழே இருந்து மேலே செல்லும் பல பேரின் கதை, தான் வளர்ந்தால் போதும், தன் இனமும், தன் மக்களும் எக்கேடு கெட்டால் என்ன என்று நினைக்கும் பல குடிமகன்களின் கதை.
மாரிமுத்து மரணப்படுக்கையில் கிடக்கும் பொழுது, அவனின் எண்ணங்கள் பொம்மியைப் பார்க்க வேண்டும், அடையாற்றில் தன் காலை ஒருமுறையாவது நனைத்திட வேண்டும் என்று துடிக்க ஆரம்பித்தது. புகைப்படத்தில் இருக்கும் மாரிமுத்துவின் ஆன்மா, முனுசாமியை இறுதியாக பொம்மியின் வீட்டிற்குத் தன்னை அழைத்துச் செல்லச் சொல்லும். பொம்மியின் வீட்டருகே செல்லும்பொழுது, அங்கே ஒரு சிறு கூட்டம் கூடி இருக்கும்,
“பொம்மிக் கிழவி செத்துப் போச்சுப்பா!” என்று அங்கே கூட்டத்தில் இருந்த வந்த யாரோ ஒருவரின் குரல், மாரிமுத்துவின் ஆன்மாவை அடித்து நொறுக்கி விடும். அதேவேளையில் அங்கே அமெரிக்காவில் மரணப்படுக்கையில் இருந்த மாரிமுத்துவின் உயிரும் பிரிந்து விடும். இப்படியாக இந்த நாவல் முடிகிறது.
நாவலில் இன்னும் என்னை ஈர்த்த ஒரு விசயம், நாவல் முழுக்க வரும் சென்னை வட்டார வழக்கு. வட்டார வழக்குமொழியை எழுத்தில் கொண்டு வருவது மிகவும் சிரமமான காரியம். கோபத்தில் மனிதன் கொக்கரிக்கும்பொழுது, காதல் பித்து பிடித்த மனிதன் கவிதையாய் காதல் செய்யும் பொழுது, துரோகத்தின்பொழுது, உடைந்து அழுகும்பொழுது என்று மனிதனின் அனைத்து பரிணாமத்திலும் அவ்வளவு அழகாக சென்னை வட்டார மொழியை கையாண்டிருப்பார் எழுத்தாளர். அந்த வட்டார வழக்கு நம்மை இன்னும் வெகுவாக நாவலோடு ஒன்ற வைத்தது என்று சொல்லலாம். அடையாற்றின் ஓரம் இருக்கும் சேற்றில் காலை புதைத்துக்கொண்டு, அங்கு வீசும் வாசத்தை சுவாசித்துக்கொண்டே கதை கேட்டது போல் இருந்தது.
ஆங்கிலத்தில் “ஐ ஓப்பனர்” என்ற ஒரு பதம் உண்டு. ஒரு விசயத்தை உலகம் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்துக்கொண்டிருக்கும், குதிரைக்குக் கடிவாளம் கட்டியதுபோல், அப்பொழுது ஏதோ ஒரு புரட்சியாளன் புதுக் கண்ணோட்டத்தை, உண்மையை உலகிற்குக் காட்டுவான். அப்படிப்பட்ட புரட்சியாளனாகத் தான் எழுத்தாளர் மு.து.பிரபாகரன் அவர்களை நான் பார்க்கிறேன். சென்னையின் பூர்வகுடி மக்கள் என்றால், வடசென்னை மக்கள்தான் என்று பல எழுத்தாளர்களும், சினிமாக்காரர்களும் சொல்லிக் கொண்டு இருக்க… இல்லை சென்னை அடையாற்றுக் கரையில் வளர்ந்த ஒரு நதிக்கரை நாகரிகம் என்று ஆதாரப்பூர்வமாக ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் எழுத்தாளர். அடையாற்றுக்கரை மக்களின் வாழ்வியல், அவர்களின் பேச்சு, நடை எப்படி இருக்கும் என்பதை இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் பதிவு செய்ததில்லை என்பதை உறுதியாகச் சொல்லுவேன். சென்னை ஓர் அதிசய நகரம். இரண்டு ஆறுகள், கடல், சதுப்புநிலக் காடு, மலை என்று இயற்கையின் அதிசயங்கள் நிறைந்திருக்கும் ஒரு ஹை-டெக் மாநகரம். இந்த சென்னையின் ஆதி வரலாற்றை, பூர்வகுடி மக்களைப் புரிந்துகொள்ள அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
