பிரேமா இரவிச்சந்திரன்
“கற்றல் என்பது யாது?” இந்தக் கேள்வியானது மூன்று சொற்களைக் கொண்டு மிகச் சிறியதாக தோன்றினாலும், 2020ஆம் ஆண்டில் கொரோனா நோய்த் தொற்றின்போது ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், இந்த நூலின் ஆசிரியரை விடாமல் துரத்தி இருந்திருக்க வேண்டும். அதன் உந்துதலாலேயே உலகளாவிய அளவில் தனது தேடலின் களத்தை விரிவாக்கியவராக தொடர்ந்து முயன்று விடைகளை அறிந்து தெளிந்தவராக இந்த நூல் முழுவதும் பரவலான தகவல்களை நிறைய கொடுத்திருக்க இயன்றிருக்கும். நூலின் தலைப்பில் உள்ள, ‘யாதெனில்’ என்னும் சொல்லைத் தொடர்ந்து நூல் முழுவதும் வாசித்து, ‘யாது’ என்பதற்கான பதிலை நூலின் நிறைவில் பெற்று விடுகிறோம்.

கல்வி 4.0 என்பதற்குக் கொடுத்திருக்கும் விளக்கம் அற்புதமானது. அறிந்துகொள்ள வேண்டியது. மொத்த உலகமும் சந்தித்த தொழில் புரட்சியை நான்காகப் பிரித்து, பதினெட்டாம் நூற்றாண்டில் உலகில் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வேலைப் பளு குறைந்து பயன் அதிகமாக விளைந்த காலமே முதல் தொழில் புரட்சி எனக் கொண்டால், இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் பயன்பாடு பெருகியதே இரண்டாம் தொழில் புரட்சியாகக் கொள்ளப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 1980களில் கணினி மயமாக்கல் மூன்றாம் தொழில்புரட்சியென்றால், தற்பொழுது செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், செயற்கை மரபணுவியல், குவாண்டம் கணினியியல், தடையற்ற தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதை நான்காம் தொழில் புரட்சி என்கிறோம். நெருப்பைப் பயன்படுத்தத் தெரிந்த ஆதிகால மனிதனுக்கு விதைகளை ஊன்றி விளைச்சல் பெருக்கவும் முடிந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து முதல் புரட்சியின் நீட்சியாக வளர்ந்து வரும் தொழில்புரட்சிக்கு ஏற்றவாறு இளையோருக்கு வழங்க வேண்டிய இன்றைய கல்வியைத்தான் கல்வி 4.0 என்கிறோம்.
கல்வி என்பதை இந்திய அளவில் மட்டும் காணாமல் உலகின் பல்வேறு நாடுகளில் அறிஞர்கள் எழுதிய நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எண்ணிலடங்காத அளவில் அதிகமாக வாசித்து, அவர்கள் வகுத்துப் பிரித்துஆய்ந்திருக்கும் பல்வேறு கருத்துகளையும் விதிகளையும் அறிந்தவராக, அவற்றில் குறைந்த அளவு இந்த நூலில் பகிர்ந்து கொண்டதோடு, அரசியலும் அறிவியலும் பின்புலமாக என்றுமே இருந்து வருகின்ற கல்வியானது, இதுவரை தான் கடந்து வந்த பாதையிலிருந்து எதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதையும் மிகத் தெளிவாக இந்த நூலில் விளக்கமளித்து இருக்கிறார். ஓர் ஆசிரியரது நோக்கிலிருந்தோ அல்லது ஒரு மாணவரது பார்வையிலிருந்தோ இல்லாமல் நடுவுநிலைமையில் நின்று எழுதப்பட்டிருந்தாலும் வகுப்பறையில் வாசிக்கப்பட வேண்டிய நூல் போலவே இந்தப் புத்தகம் பரிணமித்திருக்கிறது எனலாம்.
தேவையற்ற சொற்கள், அலங்காரங்கள், அழகிய வர்ணனைகள் போன்ற எவற்றையும் கொண்டிராமல் வரிக்கு வரி தகவல்களை மட்டுமே கொண்டு உலகளாவிய அளவில் கல்வி குறித்த ஒரு பருந்துப் பார்வையை வாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தகம் கொடுத்து விடுகிறது. இந்திய மண்ணின் குருகுலக் கல்வியும், திண்ணைப் பள்ளிகளும், ஆங்கிலமும் அறிவியலும் கற்கும் பள்ளிக்கூடங்களாக மத போதகர்களால் மாறியதையும், மதக்கோட்பாடுகளுக்கும் சட்டங்களுக்கும் பின்னால் பல்வேறு நாட்டு மன்னர்களும் இயங்கி வந்ததைச் சொல்லி இருப்பதோடு, புனித நூலான குர்ரானை முல்லாக்கள் போதித்ததையும் வரலாறாக இந்த நூலில் காண முடிகிறது.
இது மட்டுமல்லாமல் எகிப்து முழுவதும் பரவியிருந்த யூதர்களின் கல்வி, சைனாவின் புத்த விகாராவில் கல்வி போதனை, கிரேக்கர்களின் மதம் சார்ந்த கல்வி, இந்தியாவில் சைவம் வைணவம் சமணம் என வகை வகையாக வாழ்ந்திருந்த கல்வி என பலவற்றையும் இந்த நூல் பேசியிருக்கிறது. நான்காம் தொழில்புரட்சியில் மனிதர்கள் இடும் கட்டளைகளை ஏற்றுப் பணி செய்வதற்கு தானியங்கிகளும், தேடுகின்ற தகவல்களைத் திரட்டி வந்து கண் முன்னால் கொடுப்பதற்கு இணைய வசதிகளும் வந்துவிட்ட பிறகு, கணினிகளின் செயற்கை நுண்ணறிவு என்கிற ஒன்றை ஆள்வதற்கு மனிதர்களின் சமூக நுண்ணறிவு என்பதையே தற்பொழுது வகுப்பறைகளில் பாடமாகச் சொல்லித் தர வேண்டிய நிலையில் இருக்கிறது என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

இன்றைய சமூகத்திடம் அதிகம் பரவுகின்ற தற்கொலை, மண வாழ்க்கை முறிவு, பெற்றோர் முதியோர் இல்லச் சிக்கல் என பலவற்றின் மனிதநேய தலையீடாக பள்ளிக்கல்வியில் பல நாடுகளில் சமூகநுண்ணறிவு ஒரு பாடமாக இடம்பெற்றுள்ளது என்பதையும், தன்னை உணர்தலின் வழியே தனது உடனடி சுற்றத்தாரையும் அவர்களது வழியே சமூகத்தையும் அறியும் அறிவு வளர்ச்சிக்கு சமூக நுண்ணறிவு என்பதாக இந்த நூலில் குறிப்பிட்டு இருக்கும்பொழுது, தன்னை உணர்தலின் அவசியமாக கல்வியைக் கருத வேண்டியிருக்கிறது. இந்நிலையில் மனப்பாடம் செய்வதை அறிவு என்று பாடப்பொருள் குறிப்பிடுவதை பக்கம் பக்கமாக ஞாபகம் வைத்து, அதைத் தேர்வாக எழுதுவதைத்தான் இன்றும் கல்வி என்று நம் நாடு அழைக்கிறது.
பள்ளித் தேர்வுகள் அனைத்தையும் முடித்துவிட்ட பிறகும், கல்லூரிக்கு நுழைவதற்கென மற்றுமொரு தேர்வு நடத்துகின்ற இந்தியக் கல்வியின் அவலமான நிலை, நான்காம் தொழில்புரட்சிக்கு அவசியமானது அல்ல என்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போபால் விஷவாயு கசிந்த விபத்தின்போது கண் மூக்கு, வாய் போன்ற பகுதிகளை ஈரமான துணியால் கட்டி இருந்தாலே உயிர் பிழைத்திருக்கலாம் என்கிற அடிப்படை அறிவு அங்கு வாழ்ந்து வந்த மக்களுக்கு கொடுக்காத கல்வியையும், சுனாமி எனும் பேரலையை இந்திய நாட்டின் கடற்கரை ஓரங்கள் சந்தித்தபோது அதன் பேரைக்கூட இதுவரை எங்குமே சொல்லித் தராத கல்வியையும் இந்த நூலில் சுட்டிக்காட்டி இருக்கும்பொழுது, உயிரை காத்துக்கொள்ள கற்றுக்கொடுக்காத கல்வி இருந்தும் என்ன பயன் என்கிற கேள்வியில் மாற்றமடைய வேண்டிய கல்வித் திட்டங்களை மக்களது மனதிலும் இந்த நூல் எடுத்துச் செல்கிறது.
தனி மனிதனின் நுண்ணறிவுத் திறனை மேம்படுத்துகின்ற தேவையையும், கூட்டு நுண்ணறிவு குறித்து ஐசக் ஆஸிமவ் எழுதிய பவுண்டேஷன் எனும் அறிவியல் புனைகதை நாவலிலிருந்து மேற்கோள் எடுத்து மிக அற்புதமாக விளக்கம் கொடுத்தும் இந்த புத்தகம் யாவருக்கும் புரிய வைக்கிறது. ஆபத்து நிகழ்கின்ற காலத்திலேயே நமக்குத் தேவையாக இருக்கின்ற யாவற்றையும் அறிந்து கொள்கின்றோம். கொரோனா ஊரடங்கு காலத்தில் பணம் புரளுகின்ற தனியார் பள்ளிகளில் கொடுக்க முடிந்த இணையவழிக் கல்வியை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க இயலாமல் போனதைக் குறிப்பிட்டு, சமமற்ற கல்வியையும் இந்த நூல் சிந்திக்க வைக்கிறது. உணவு மருத்துவம் கல்வி இவை யாவும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.
அவற்றை வியாபாரமாக்கி அடித்தட்டு மக்களை அண்ணார்ந்து பார்க்க வைக்கின்ற அரசியல் யாவருக்குமானது அல்ல. அந்நியரின் ஆட்சியின்போது நம் நாட்டு மக்கள் ஒன்றிணைந்து இந்தியராகப் போராடி விடுதலை அடைந்ததைப்போல நெருக்கடி நேரங்களில் மனிதர்கள் ஒன்றிணைவது இயல்பாக இருக்க கொரோனா ஊரடங்கு நேரத்தில் உலகமே அடங்கி இருந்த காலத்தில் உருவான இந்த நூல் அன்றைய காலகட்டத்தின் பதிவாகஎன்றுமே பேசப்படுமென்றாலும், கல்வியானது மாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கவேண்டுமென்பதால் மற்றுமொரு இடைவெளியில் அடுத்த தொகுதியாக எழுதப்பட வேண்டிய அவசியமுள்ள நூல் இது.
எண்பதுகளில் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து வந்த சிறுவர்களுக்கு கிட்டிய அனுபவமாக எப்படி பல் துலக்குவது என்பதை முறையாக தாத்தா சொல்லிக் கொடுத்திருப்பார். தரையில் சம்மணமிட்டு விரல்களைத் தாண்டி உள்ளங்கைக்கு உணவு படாமல் வயிறு அழுந்த குனிந்து உண்ணுவதை பெரியப்பா சொல்லிக் கொடுத்திருப்பார். வெளிச்சம் வரும் திசைக்கு ஏற்றவாறு எந்த இடத்தில் அமர்ந்து புத்தகத்தை படிக்க வேண்டும் என்பதையும், கண்களிலிருந்து எவ்வளவு தொலைவு மற்றும் எந்தக் கோணத்தில் புத்தகம் இருக்க வேண்டும் என்பதையும் மாமா சொல்லிக் கொடுத்திருப்பார். எத்தனை மணிக்கு உறங்க வேண்டும் எப்பொழுது எழ வேண்டும் என்பதையெல்லாம் குடும்பங்கள் கற்றுக் கொடுத்தன.
இன்றைய சூழ்நிலையில் வாழ்வாதாரத்திற்கே பொருளீட்ட வேண்டிய தேவை மிகுந்து இருப்பதால் நேரங்களை முழுவதுமாக பணயம் வைத்து தங்களுக்கே உறங்குவதற்கு கூட நேரமில்லாமல் நகரத்தில் தனித்து வாழும் பெற்றோர்கள் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, பிள்ளைகளுக்கு கணினிகளும் கை பேசிகளும் மட்டுமே உடன் இருக்கின்ற நிலையில், அவற்றை எப்படிக் கையாளுவது, எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம், அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்ன போன்றவற்றையெல்லாம் நூலின் இறுதியில் ஆசிரியர் மிகச் சிறப்பாகப் பேசியிருக்கிறார். சுயமாகக் கற்றலில் தேர்ந்தவர்களே இக்காலத்தில் உயர்ந்தவராக மிளிர முடியும் என்பதே அஸ்திவாரமாக நமக்குத் தோன்றினாலும், வளர்ந்து வருகின்ற இன்றைய டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்றவாறு கற்பிக்கும் ஆசிரியர்களும் தங்களை டிஜிட்டல் ஆசிரியர்களாக மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையே இன்றைய மாணவர்களின் நலனுக்கு அவசியமாக இருக்கிறது.
இரண்டு வயதில் கடவுச்சொல்லாக இருக்கும் எண்களைத் தொட்டு கைப்பேசியை பயன்படுத்தத் தெரிகின்ற குழந்தைக்கு ஐந்து வயதில்தான் எண்களையும் எழுத்தையும் அழுத்தமாகச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கின்றோம். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்ற நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது என்றாலும், கற்பிக்கும் முறைகளிலும் பாடப்புத்தகங்களை மேம்படுத்துகின்ற செயல்களிலும் இன்றைய வளரும் இளம் தலைமுறைகளுக்குத் தேவைப்படுகின்ற சமமான அளவில் நாம் இல்லை என்பதைத்தான் இந்த நூல் உணர்த்துகிறது. கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய ஏராளமான தகவல்களைக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகம் பலராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.
