சந்திப்பு : நர்மதா தேவி
புகைப்படம் – நன்றி: கவாஸ்கர், தீக்கதிர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான,
தோழர் உ.வாசுகி, மகளிர் தினத்தின் பாரம்பரியம் குறித்தும், இன்றைய இந்தியாவில் பெண்கள் நிலை குறித்தும், குடும்பத்தையும், சமூகத்தையும் ஜனநாயகப்படுத்தும் முயற்சிகளில் இந்தியாவின் பெண்கள் இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்.
மகளிர் தினப் பாரம்பரியத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மகளிர் தினத்துக்கு சோஷலிச பின்புலம் இருக்கிறது என்கிற முக்கியமான வரலாற்றை மறந்து, பொதுவாகக் கொண்டாட வேண்டிய ஒரு தினமாக மட்டும் அணுகும் ஒரு சராசரியான போக்கைத்தான் நாம் இன்றைக்கு கூடுதலாகப் பார்க்கிறோம்.
எல்லா அலுவலகங்களிலும், கல்லூரிகளிலும் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளில் பேசப்படக்கூடிய எல்லா அம்சங்களுமே ‘வீண்’ என நான் முற்றிலும் நிராகரிக்க மாட்டேன். ஆனால், நாம் எதைப் பேச வேண்டுமோ, அந்த அரசியல் உள்ளடக்கம் மகளிர் தினக் கொண்டாட்டங்களில் இருப்பதில்லை. அதனால், இடதுசாரி மற்றும் முற்போக்கு பெண்கள் அமைப்புகள், ஜனநாயக இயக்கங்கள் மகளிர் தினத்தின் சோஷலிசப் பின்னணியை திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டியுள்ளது.
பெண் என்ற பரிமாணத்தில் பெண் தொழிலாளர்கள் எப்படிக் கூடுதலான சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் அனுபவிக்கிறார்கள், ஒட்டுமொத்தமாக சமூகத்தில் பெண்கள் எத்தகைய ஒடுக்குமுறைகளை சந்திக்கிறார்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெண்கள் ஏன் சோஷலிசப் புரட்சிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை, சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தின் பெண் கம்யூனிஸ்ட்கள் உலகெங்கிலும் முன்னெடுத்தார்கள். வர்க்கப் போராட்டத்தில் பெண்கள் பிரச்சனைகளை உள்ளடக்கிப் போராடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கில், இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பெண்கள் மாநாடு ஒன்றில், சர்வதேச அளவில் மகளிர் தினத்தை ஆண்டுதோறும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றினார்கள்.
பெண்களையும் உள்ளடக்கி அனைத்து வயது வந்தோருக்கான வாக்குரிமை, போர்கள் இல்லாத அமைதியான வாழ்க்கை, உணவு உத்தரவாதம், எட்டு மணிநேர வேலை, ஊதியத்துடனான மகப்பேறு விடுப்பு உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மகளிர் தினத்தைப் பல்வேறு நாடுகளில், பல்வேறு தினங்களில் சோஷலிசப் பெண்கள் இயக்கங்கள் கடைப்பிடித்தன. 1890-களில் ரஷ்யாவின் தொழிலாளி வர்க்கம் மிகப் பெரும் விழிப்புணர்வை பெற்றுவந்தது. ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிய லெனின் தலைமையிலான போல்ஷெவிக்குகள் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.
இந்தக் காலகட்டத்தில் ரஷ்யப் பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் மிக முக்கியமானவை. நாங்கள் முறையான ஊதியம் இல்லாமல், தொழிற்சாலைகளில் வெந்து மடிகிறோம், எங்கள் குழந்தைகளுக்கு சாப்பிட ரொட்டிகூட இல்லை, நிலப்பிரபுக்கள் விவசாயிகளை ஒட்டச் சுரண்டுகிறார்கள், ஆனால், நீங்களோ உலகப் போர் என்ற பெயரில், சந்தையைப் பிடித்து உலக நாடுகளின் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்காகப் போர் நடத்துகிறீர்கள், உங்கள் போரில் படைவீரர்களாக இருக்கும் எங்கள் குழந்தைகளுக்கு சவக்குழி தோண்டுகிறீர்கள் என்று ரஷ்ய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத செயல்பாடுகளை அம்பலப்படுத்தி பெண் தொழிலாளர்கள் அன்றைக்கு ரஷ்யாவில் போராடினார்கள். 1917 ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரில் பெண்கள் தலைமையில் ஒரு மாபெரும் போராட்டம் வெடித்தது. அன்றைய தினத்தில், போரை நிறுத்து! மன்னாராட்சி ஒழிக! என ரஷ்யப் பெண் தொழிலாளர்கள் எழுப்பிய கோஷம், 1917 நவம்பர் 7 ரஷ்யப் புரட்சிக்கான பயணத்தில் முக்கிய மைல்கல்.
புரட்சிக்குப் பின்னர் லெனின் தலைமையிலான சோவியத் அரசு, 1917 மார்ச் 8 அன்று ரஷ்யப் பெண்கள் முன்னெடுத்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இனி ரஷ்யாவில் மார்ச் 8 மகளிர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது. 1920 முதல் சோவியத் ரஷ்யாவில் மார்ச் 8-க்கு விடுமுறை வழங்கப்பட்டது. உலகெங்கிலும் கம்யூனிஸ்டுகள் மகளிர் தினத்தைக் கடைப்பிடித்து பெண்கள் மேம்பாட்டுக்கான கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்கள். 1970-களில் ஐக்கிய நாடுகள் சபையில் முக்கியப் பங்காற்றிய சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெண் பிரதிநிதிகளின் முன்னெடுப்புகளால், 1975-ஆம் ஆண்டில் ஐ.நா. சபை, ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தை மார்ச் 8 ஆம் தேதி கடைப்பிடிக்க வேண்டும் என்கிற பிரகடனத்தை நிறைவேற்றியது. ‘இதுதான் வரலாறு!’ என்று மகளிர் தினத்தின் சோஷலிசப் பாரம்பரியத்தை, பின்னணியை நாம் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேச வேண்டி இருக்கிறது.
மகளிர் தினம் தொடக்க காலத்தில் முன்வைத்த கோரிக்கைகள் பற்றி சற்று விரிவாகச் சொல்லுங்கள்?
சோஷலிசப் பெண்களால் உலகளவில் மகளிர் தினம் முன்னெடுக்கப்பட்டபோது வைக்கப்பட்ட கோரிக்கைகளை நாம் பார்த்தால், இன்றைக்கும் அந்தக் கோரிக்கைகள் பொருத்தமானவையாக இருக்கின்றன என்பதை உணரலாம். வாக்குரிமை, அமைதி, எட்டுமணிநேர வேலை என்கிற, தொடக்க காலத்தில் மகளிர்தினம் முன்வைத்த கோரிக்கைகளின் பின்புலம், இன்றைய சூழலில் மாறி இருக்கலாம். ஆனால், இந்தக் கோரிக்கைகளின் பொருத்தப்பாடு இன்றைக்கும் நீடிக்கிறது.
உதாரணமாக, ‘அமைதி’ என்கிற அம்சத்தை எடுத்துக்கொண்டால், இன்றைக்கு உலகில் நிறைய போர்கள் நடைபெறுகின்றன. போர்களுக்குப் பின்புலமாக ஏகாதிபத்தியம் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். போர் நடக்கும் பகுதிகளில் பெண்கள் படக்கூடிய துயரங்கள், அகதிகளாகும்போது பெண்களின் நிலைமை பற்றிய அவசியமான புரிதல் பெண்களுக்கு வரவேண்டும். தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது தொடுத்து வருகிற போரில்கூட, கொல்லப்படுபவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களும் குழந்தைகளும் என்ற நிலையைக் காண்கிறோம். பாலஸ்தீனத்தின் தற்போதைய முகாம்கள் மிகவும் சிறிய இடங்களில் நிறுவப்பட்டிருக்கின்றன. ஏராளமான மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். பெண்கள் பிரத்யேகமான தேவைகள் உள்ளவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்களின் பிரத்யேக தேவைகளை இந்த முகாம்களில் கவனிக்க முடிவதில்லை. இந்த மாதிரியான சூழல்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதும் கடினமாக இருக்கிறது. எனவே, போர் நடக்கும் பகுதிகள், கலவரங்கள் நடக்கும் பகுதிகள் அனைத்து மக்களுக்கும் இன்னல்களை ஏற்படுத்துகின்றன என்றாலும், இந்த சூழல்களில் பெண்கள் கூடுதலான வேதனையை அனுபவிக்கிறார்கள் என்ற கோணத்தில் நாம் பார்க்கத் தவறிவிடக்கூடாது. போர்கள் நடைபெறாத அமைதியான சூழல் என்பது அனைவருக்கும் தேவையான நிலை என்றாலும், ஒட்டுமொத்த மக்கள் சமூகத்திலும் பெண்களைப் பொருத்தவரையில் மிக அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.
‘அமைதி’ பற்றிப் பேசும்போது, ஒரு நாடு இன்னொரு நாட்டின்மீது தொடுக்கும் போரால்தான் அமைதி பாதிக்கப்படுகிறது என்று மட்டுமே நாம் பொருள்கொள்ள முடியாது. நாட்டிற்குள்ளும் அமைதியற்ற சூழலை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துவதைக் காண்கிறோம். நம்முடைய நாட்டின் தற்போதைய பாஜக ஆட்சியாளர்கள் பட்டியலினத்தவர், பழங்குடி மக்களுக்கு எதிராக செய்கிற வன்கொடுமைகள், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடத்தக்கூடிய தாக்குதல்கள், வன்கொடுமைகளில் பெண்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். பாஜக அரசு கடைப்பிடிக்கக் கூடிய மனுவாத சித்தாந்தம், மக்களில் மிகக் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரானதாக இருக்கிறது.
பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள், தனிமனிதர்களால் மட்டும் உருவாக்கப் படுவதில்லை, சித்தாந்த அடிப்படையில், திட்டமிட்ட முறையில், அரசியல் ஆயுதமாக ஆர்.எஸ்.எஸ் வழிநடத்துகிற பாஜக ஒன்றிய அரசாங்கத்தால் பெண்கள் மீது ஏவப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். தனிமனித அளவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறுகிற குற்றங்களை நாம் சட்டரீதியாக எதிர்கொள்ள முடியும். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற ஒரு கட்சி, குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது. பில்கிஸ் பானு வழக்கு தொடங்கி பல வழக்குகளை நாம் பார்க்கிறோம்.
இந்தியாவில் சமூகம் ஆணாதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது என்ற போதிலும், இன்றைய பாஜக ஆட்சியாளர்களின் ஆதரவினால், சிறுபான்மையினப் பெண்களுக்கு எதிராக, பட்டியலின, பழங்குடியினப் பெண்களுக்கு எதிராக குற்றம் இழைப்பவர்கள், அரசியல் காரணங்களுக்காகக் குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள் மீது வன்கொடுமைகள் ஏவக்கூடியவர்களுக்கு, ‘இந்த அரசாங்கம் நமக்கு அரணாக இருந்து நம்மைப் பாதுகாக்கும்’ என்ற நம்பிக்கையும், மன தைரியமும் ஏற்பட்டுள்ளது. ‘நாம் செய்வதைக் குற்றமாக இந்த அரசாங்கம் பார்க்காது. ஏனென்றால், நாம் இந்த அரசாங்கத்துடைய சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் செயல்படுகிறோம். நம்முடைய செயல்பாடுகள் ஆளுகிறவர்களுக்கு எதிரானதல்ல. எனவே, உங்களுடைய இந்திய பீனல் கோர்ட், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்ன சொன்னாலும் எங்களுக்குக் கவலை இல்லை. ஆட்சியாளர்களின் சித்தாந்தத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்படுவதால் நாங்கள் காப்பற்றப்படுவோம்’ என்கிற தைரியமும், துணிச்சலும் அவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த துணிச்சலின் உதாரணங்களாக, காஷ்மீரின் கத்துவாவில் இஸ்லாமிய சிறுமி மீது இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்திய வன்முறை, உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸில் தலித் சிறுமி மீதான பாலியல் வன்முறை, மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தின் மீதான தாக்குதல்களில் பெண்கள் சந்தித்த கொடுமைகள் உள்ளன.
எனவே ‘அமைதி’ என்ற கோரிக்கை அன்றைய காலகட்டத்தின் போர்ச்சூழல் பின்னணியில் முன்வைக்கப்பட்டிருந்தாலும், இன்றைக்கும் சர்வதேச அளவில் போர்களும், மோதல்களும் நடைபெறுகிற சூழலில் பொருத்தமாக இருக்கிறது. அதேபோல, இந்தியாவில் மத்தியில் ஆளுகிற பாஜகவின் சித்தாந்தம், அந்த சித்தாந்தத்தின் அடிப்படையிலான அதனுடைய செயல்பாடுகள் அமைதிக்கு எதிராக இருக்கிறது என்ற அடிப்படையில் ‘அமைதி’ என்ற கோரிக்கை இந்தியாவிற்கும் பொருத்தமாக இருக்கிறது.
அடுத்தது 8 மணிநேர வேலை கோரிக்கை. இன்றைக்கு இந்தியாவில் வேலையின்மை உச்சத்தில் உள்ளது. உலக அளவிலேயே பொருளாதார வளர்ச்சி என்பது மந்தமாகத்தான் இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில்கூட கோவிட் தொற்றுக்கு முந்தைய காலகட்ட வளர்ச்சி விகிதத்தை நம்மால் இன்னும் எட்டமுடியவில்லை. பாஜக அரசாங்கம் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி 6.5%, 7% எனச் சொல்கிறது. வளர்ச்சி யாருக்கானது? வளர்ச்சி என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கானதா? அல்லது பெரும்பாலான உழைப்பாளி மக்களுக்கானதா? அதில் பெண்களுக்கு கிடைக்கிறதா என்ற கேள்வியை நாம் தொடர்ச்சியாக முன்வைக்கிறோம்.
ஆக்ஸ்பாம் அமைப்பின் சமத்துவமின்மை அறிக்கை இந்தியாவின் 40% சதவிகித வளங்கள் இந்தியாவின் பெரும்பணக்காரர்களாக இருக்கிற முதல் ஒரு சதவிகிதத்தினரிடம் உள்ளது என்று குறிப்பிடுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஐந்து பெருமுதலாளிகள் தங்களுடைய சொத்துகள் மதிப்பைப் பலமடங்கு உயர்த்திக் கொண்டார்கள் என்பதை அறிகிறோம். இந்தப் புள்ளிவிவரங்களில் இருந்து மோடி ஆட்சியில் பின்பற்றக்கூடிய கொள்கைகள் யாருக்கு சாதகமாக இருக்கின்றன, அரசு சொல்லக்கூடிய வளர்ச்சி என்பது யாருடைய வளர்ச்சியாக இருக்கிறது என்பதை அறிகிறோம். பெண்கள் உட்பட பெரும்பாலான மக்கள் மேன்மேலும் வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதே எதார்த்த நிலை. வளர்ச்சியின் தன்மை வேலைவாய்ப்புகளைப் பறிக்கப்படுக்கூடிய வளர்ச்சியாக இருக்கிறது. வேலை என்பது அனைவருக்கும் தேவை என்றாலும், பெண்விடுதலைக்கு பொருளாதார சுதந்திரம் முன்நிபந்தனை என்பதால் பெண்களின் வேலையின்மைக்குக் கூடுதல் பரிமாணங்கள் உள்ளன. எனவே, எட்டு மணிநேர வேலை என்பதோடு, ‘வேலை வேண்டும்’ என்ற அடிப்படையான கோரிக்கையையே நாம் முன்வைக்க வேண்டிய அளவிற்கு நிலைமை இருக்கிறது. மோடி அரசின் வேலைவாய்ப்பு பற்றிய வாய்ப் பந்தலை அம்பலப்படுத்தும் பணி பெண்களுக்கு அதிகம்.
மூன்றாவது வாக்குரிமை கோரிக்கை. அன்றைக்கு உலக அளவில் பெண் சோஷலிஸ்ட்கள் இந்தக் கோரிக்கையைப் பல நாடுகளில் முன்வைத்தபோதும், ‘அமெரிக்கா நான்தான் உலகின் பழமையான ஜனநாயக நாடு’ என சொல்லிக்கொண்டாலும், பெண்களையும் உள்ளடக்கி அனைவருக்குமான வாக்குரிமையை முதன்முதலாக வழங்கிய நாடு சோஷலிச சோவியத் யூனியன்தான். ‘இன்றைய சூழலில் வாக்குரிமைதான் பெண்கள் உட்பட நாட்டில் எல்லாருக்கும் உள்ளதே!’ என்ற கேள்வி எழலாம்.
இந்தக் கோரிக்கைக்கான பொருத்தப்பாட்டை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், இன்றைக்கு வாக்கு என்பது பணம் கொடுத்து வாங்கக்கூடிய நிலைக்குத் தாழ்த்தப்பட்டுள்ளது. தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கான ஒரு கருவி என்பதைவிடப் பணநாயகம் கூடுதலாக செயல்படக்கூடிய அம்சமாகவே இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேற்றத்திற்கு உதவும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக இருந்தாலும், இன்றைக்கு எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து முடிவுகளையே மாற்றக்கூடிய நிலை உள்ளதாக அழுத்தமான கருத்துகள் வருகின்றன.
சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டு முறைதான் இருந்தது. என்றாலும், முடிவுகள் எப்படி வந்தன என்பதை நாம் பார்த்தோம்.
அதேபோல, நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிற அரசாங்கம், பதவியில் நீடிக்குமா என்பதற்கும் இன்றைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தப் பிரச்சனைகள் எல்லாமே நம்முடைய வாக்குரிமையைப் பாதிக்கும் அம்சங்கள்தான். நாம் விரும்புகிற கட்சி, ஆட்சி அமைக்க வேண்டும் என நாம் ஓட்டுப் போடுகிறோம். அதில் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கிறது. ஆனால், பாஜக மாதிரியான கட்சி ஒரு கட்சியின் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிவிட முடியும் அல்லது அமலாக்கத் துறையை ஏவி எம்.எல்.ஏக்களை மிரட்டிப் பணிய வைக்க முடியும் என்ற சூழல்தான் இன்றைக்கு இருக்கிறது.
ஒரு வாக்காளர் ஒரு வேட்பாளரை அவருடைய தனிப்பட்ட குணாம்சங்கள் காரணமாகவோ அல்லது அவர் ஆற்றிய முக்கியமான பணிகளின் காரணமாகவோ அல்லது தனக்குப் பிடித்த அரசியல் கட்சியில் அவர் இருக்கிறார் என்ற காரணத்திற்காகவோ அவருக்கு வாக்களித்திருக்கலாம். ஆனால், வாக்காளர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த ஓர் உறுப்பினர் அந்தக் கட்சியில் இருக்க மாட்டார், இன்னொரு கட்சிக்குப் போய்விடுவார் என்றால், மக்களுடைய வாக்குரிமைக்குப் பொருள் என்ன? ஹிமாச்சல் பிரதேசத்தின் மொத்த 68 எம்.எல்.ஏக்களில், 40 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இருக்கிறார்கள். என்றாலும், மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவின் வேட்பாளரால் பெற்றிபெற முடிந்துள்ளது.
பணத்தால் வாக்குகள் விலைக்கு வாங்கப்படுவது, வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படுவது, வாக்கு எண்ணிக்கையில், வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து வெற்றி அறிவிப்பது, கள்ள ஓட்டு போடப்படுவது, எம்.எல்.ஏக்கள் மிரட்டப்படுவது, விலைக்கு வாங்கப்படுவது எல்லாம் தேர்தல் நடைமுறைகளுக்கு மட்டும் எதிரானது என நாம் பார்க்கக் கூடாது, மிகப் பெரிய ஜனநாயக உரிமையாக நாம் போராடிப் பெற்ற வாக்குரிமை என்பது, இத்தகைய ஜனநாயக விரோத செயல்களால் பொருளற்றதாகி விடுகிறது, மதிப்பிழக்கிறது என்பதை உணர வேண்டும்.
எனவே, அன்றைக்கு சர்வதேச சோஷலிசப் பெண்கள் இயக்கம் முன்வைத்த மகளிர் தினக் கோரிக்கைகள் எல்லாமே, வெவ்வேறு விதங்களில், வெவ்வேறு பரிமாணங்களில் இன்றைக்கும் முன்னுக்கு வரக்கூடிய கோரிக்கைகளாகவே உள்ளன எனக் கருதுகிறேன்.

நவீன காலத்தில் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளைப் பற்றிக் குறிப்பாக சொல்லுங்கள்?
விலைவாசி, வேலையின்மை போன்ற அனைவரையும் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் பெண்களைக் கூடுதலாகப் பாதிப்பவை. பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. கும்பல் பாலியல் வல்லுறவு பரவலாகிக் கொண்டுள்ளது. சாதிய, மதவெறி தாக்குதல்களில் பெண்கள் குறி வைக்கப்படுகிறார்கள். ஏனெனில் சாதி மதத்தின் பெருமைக்கு பாதுகாவலராக பெண்கள் நிறுவப்பட்டுள்ளனர். இவை தவிர, இன்றைய தகவல்தொழில்நுட்பக் காலத்தில் வலைத்தள வன்முறை பெண்கள் மீது கூடுதலாக ஏவப்படுவதைக் காண்கிறோம். சமூகவலைதளம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகும் போது, நாம் இருக்கும் இடத்தில் இருந்தே கையகல செல்போன்கள் மூலமாகவே நம்முடைய கருத்துகளைத் தராளாமாக முன்வைக்க முடியும் என்கிற சூழல் இருக்கிறது. அந்தக் கருத்துகள் குறிப்பிட்ட இயக்கத்திற்கோ, நபர்களுக்கோ பிடிக்காத கருத்துகள் என்றால், அந்தக் கருத்தைத் தெரிவித்தவரை மிகத் தரக்குறைவாகப் பேசுதல் என்பது நடக்கிறது. அதுவும் பெண்கள் என்றால், அவர்களை நடத்தையோடு தொடர்புபடுத்தி அவமானப்படுத்தும் செயல்கள் நிறைய நடக்கின்றன.
பெண்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து, வலைதளங்களில் வெளியிடும் குற்றங்கள் நடைபெறுகின்றன. இதனால், பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதும் நிகழ்கிறது. தமிழ்நாட்டிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன. பொதுவாக, பெண்களை ஆணாதிக்க சமூகம் போகப்பொருளாகப் பார்க்கிறது என்ற நிலை இருக்கும்போது, சமூகவலைதளம் மாதிரியான முன்னேற்றம் பழமைவாதத்தைக் களைவதற்குப் பதிலாக, ஆணாதிக்கப் பிற்போக்கு மதிப்பீடூகள், கருத்துகளை வலுப்படுத்தும் வகையில் சமூகவலைதளம் தவறாகப் படுத்தப்படுகிறது. இந்த அம்சம் முக்கியமான தாக்குதலாக முன்னுக்கு வருகிறது.
இந்தக் காலக்கட்டத்தில் முதலாளித்துவ வளர்ச்சியில், நவீன தாராளமயக் கொள்கை அமலில் உள்ள நிலையில் எல்லாமே விற்பனைக்குத்தான் என்ற நிலை உள்ளது. வாடகைத்தாய் முறையில் பெண்களின் கருப்பையை வாடகைக்கு விடுவது, கருமுட்டைகளை விற்பனை செய்வது போன்ற வணிகங்கள் நடக்கின்றன. பெண் உடலின் கருப்பை உட்பட எல்லா அங்கங்களையும் வணிகத்துக்கான விஷயங்களாக மாற்றும் போக்கு இருக்கிறது. முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் பெண்கள் மீது கூடுதலாக நடத்தப்படுகிற தாக்குதல்களாக இவை இருக்கின்றன.
இந்தப் பிரச்சனைகளை எதிர்த்த பெண்களின் போராட்டம் எப்படி இருக்கிறது?
உலகத்தில் மிகப்பெரும் அளவில் பெண்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் தேச விடுதலைப் போராட்ட காலத்தில் பெண்கள் பெருவாரியாக போராட்டக்களத்தில் நின்றார்கள். நமது பாடப்புத்தங்களில் போதிக்கப்பட்ட பெண் தலைவர்களை, போராளிகளைத் தாண்டி எண்ணற்ற சாதாரணப் பெண்கள், உழைப்பாளிப் பெண்கள் போராடி இருக்கிறார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்ற ஆறு நபர்களில் ஒருவர் பெண்ணாக இருந்துள்ளார்.
இன்றைக்கு போராட்டம் என்று சொன்னால், எல்லா விதமான போராட்டங்களிலும் பெண்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். கூலிக்கான போராட்டம், நிலத்துக்கான போராட்டம் உள்ளிட்ட வர்க்கப் பிரச்சனைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். அரசியல் இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். சமூக சீர்திருத்த இயக்கங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். சிப்கோ இயக்கம் போன்ற சுற்றுச்சூழல் இயக்கங்களில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்கள். சாராய எதிர்ப்பு இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்ட இயக்கங்களில் பங்கேற்றிருக்கிறார்கள்.
பெண்களுடைய போராட்டம் எனும்போது, தனிப்பட்ட அளவிலும் அவர்கள் போராடுகிறார்கள்; இயக்கங்களின் போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார்கள். போராட்டங்களில் பங்கெடுக்கக்கூடிய பெண்கள் இன்றைக்கு வரையிலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிகவும் முக்கியமான நேர்மறையான அம்சமாக நான் பார்க்கிறேன். எனவே, பெண் என்று சொன்னாலே அவர்களை மென்மைத்தன்மை கொண்ட மனிதர்களாக, எதுவும் செய்ய இயலாத பாதிக்கப்படக்கூடிய நபர்களாகப் பார்க்கத் தேவையில்லை.
இடதுசாரி இயக்கங்கள் தலையிட்டு நீதிக்கான போராட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து பயணப்படும்போது, பாதிக்கப்பட்டவர் – பிழைத்தவர் – போராளி என்ற வளர்ச்சியைப் பெண்களிடம் பார்க்க முடிகிறது. இந்த மாதிரியான மாற்றங்கள் முற்போக்கு இயக்கங்கள் உடன்நிற்கும் போது நிகழ்கிறது. இதையெல்லாம் சர்வதேசப் பெண்கள் தினத்தை ஒட்டி கூடுதல் அழுத்தம்கொண்ட அம்சங்களாக நாம் பார்க்கலாம்.
அதேபோல் சுய-உதவிக்குழு இயக்கம். இந்த இயக்கத்தின் வளர்ச்சி இன்றைக்கு நுண்நிதி நிறுவனங்களின் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது. பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் முக்கியமானதாக நுண்நிதி நிறுவனங்களின் பிரச்சனை இருக்கிறது. ஒரு நிறுவனம்தான் விரும்புகிற வட்டி விகிதத்தை விதிக்கலாம் என்கிற நிலை, நாட்டில் சட்டதிட்டங்கள் எல்லாம் இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஒன்றிய அரசாங்கம் ரிசர்வ் வங்கியின் மூலமாக, நுண்நிதி நிறுவனங்களின் வட்டிவிகித உச்சவரம்பை நீக்கிவிட்டது. எனவே, அந்த நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வட்டி விகிதத்தை வைத்துக்கொள்ளலாம் என்ற சூழல் அரசாங்கத்தின் கொள்கை காரணமாக ஏற்பட்டிருக்கிறது. அதைப்போல கோவிட் காலகட்டத்தில் எல்லா கடன்களுக்கும் தவணை கட்டுவதற்கான கால-அவகாசம் தரப்பட்டபோது, நுண்நிதி நிறுவனங்கள் வசூல் செய்ய அனுமதிக்கப்பட்டன.
பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட சம்பவங்களைக்கூட நாம் கண்டோம். இன்றைக்கு எல்லாமே நுண்நிதி நிறுவனங்களுக்குள் சென்றுவிட்டது. ஆனால், தொடக்கத்தில் பெண்கள் சுய-உதவிக்குழு இயக்கம் பெண்களுடைய ஒரு முற்போக்கான வளர்ச்சியாகப் பரிணமித்தது. பெண்களை பெருமளவில் வீட்டுக்கு வெளியே கொண்டுவந்தது. பெண்களை ஒன்றிணைத்தது. பெண்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. வங்கிகளுடன், அரசு அதிகாரிகளுடன் அறிமுகம். மாவட்டக் கலக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேருக்கு நேர் உரையாடக்கூடிய அளவிற்குக்கூட பெண்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், இப்போது அந்த இயக்கம் திசை திருப்பப்பட்டு பெண்களை மோசமான சுரண்டலுக்கு உட்படுத்தும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல அறிவொளி இயக்கம். ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அறிவொளி இயக்கத்தில் கூடுதலாகப் பங்கேற்றார்கள். இன்றும் அரசு ஊழியர், ஆசிரியர் துவங்கி, அங்கன்வாடி சத்துணவு ஊழியர் வரை போராட்டங்களில் பெருந்திரளாக பெண்களின் பங்கேற்பு உள்ளது. ஊரக வேலை உறுதித் திட்ட போராட்டமும் அப்படித்தான். பொதுவாக, எல்லா இயக்கங்களிலும் பெண்கள் முக்கியப் பங்கு வகித்தார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு இந்தியாவில் பெண்களின் குறிப்பான நிலைமைகள் என்ன?
இவ்வளவு காலமாக இந்தியாவில் பெண்கள் போராடிப் போராடித்தான் தங்களுடைய உரிமைகளைப் பெற்றார்கள். ஆனால், இன்றைக்கு அந்த உரிமைகள் எல்லாம் படிப்படியாக அழிக்கப்படுகின்றன, பறிக்கப்படுகின்றன. அதனால், இன்றைக்கு இந்தியப் பெண்கள் முன்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்பது, பெற்ற உரிமைகளைப் பாதுகாப்பது, புதிய உரிமைகளுக்காகப் போராடுவது, இதற்குத் தடையாக இருக்கக்கூடிய விஷயங்களை எல்லாம் எதிர்ப்பது என்பதுதான்.
தடை என்று சொன்னால் நிச்சயம் ஆணாதிக்கம் என்கிற அம்சம் உள்ளது. அடுத்து, பாஜக அரசாங்கம் கடைப்பிடிக்கக்கூடிய மனுவாத சித்தாந்தம் இருக்கிறது, இந்த சித்தாந்தம் பெண்களை, பட்டியலினப் பழங்குடியின மக்களை, உழைக்கும் மக்களை எப்படிப் பார்க்கிறது என்பதை விளக்கி, இந்த சித்தாந்தத்துக்கு எதிரான கருத்தியல் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக இப்படிப்பட்ட சித்தாந்தத்தை வைத்திருப்பவர்களுடைய அரசு இன்னும் ஐந்தாண்டு காலம் நீடிக்கும் என்று சொன்னால், இப்போது நாம் வென்றெடுத்த உரிமைகளைத் தக்கவைப்பது, புதிய உரிமைகளைப் போராடிப் பெறுவது என்பதற்கெல்லாம் இடமே இருக்காது என்பதை உணர்த்திட வேண்டும்.
வாயைத் திறந்தாலே தாக்குதல் என்ற நிலைக்குத் தள்ளும் கருப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவை எல்லாம் ஒட்டுமொத்தமாக ஜனநாயக அம்சங்களைப் பறிக்கக்கூடிய விஷயங்களாக இருந்தாலும், ஏற்கெவே இரண்டாம் நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காக மேலெழுவதை இந்த நடவடிக்கைகள் தடை செய்கின்றன. நமக்கு முன்னால் இருக்கும் பெரிய யுத்தம் என்பது, தேர்தல்தான். அதில் தமிழகப் பெண்கள் நிச்சயமாக இந்த ஆட்சியை அகற்றுவதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள். இந்தியப் பெண்கள் எல்லாரும் ஈடுபட வேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு.
இந்தியாவின் பெண்கள் இயக்கங்களின் புரிதல் எப்படி இருக்கிறது?
பெண்கள் இயக்கத்தைப் பொருத்தவரைக்கும், ‘எல்லாப் பெண்கள் இயக்கங்களும் பெண்கள் சந்திக்கக்கூடிய அனைத்துவிதமான பிரச்சனைகளையும் சரியாக புரிந்திருப்பார்கள், அந்தப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவார்கள்’ என நாம் குறிப்பிட முடியாது.
எங்களுடைய வலுவுக்கு ஏற்றவகையில் எங்களால் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு எதிராக மட்டுமே போராட முடியும் என்ற நிலை அமைப்புகளுக்கு இருக்கலாம். அது தவறல்ல. உதாரணமாக, நுண்நிதி நிறுவனங்கள் பிரச்சனைகளை மட்டும்தான் நாங்கள் முன்னெடுக்க முடியும் என ஓர் இயக்கம் சொன்னால் அதில் தவறில்லை. ஆனால், அந்த இயக்கத்தின் கண்ணோட்டம் என்னவாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்தப் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது? இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள்தான் காரணம் என்ற அரசியல் புரிதல் இல்லாமல், ‘பாவம்! பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு உதவி செய்கிறோம்!’ என்ற அளவில்மட்டும் ஒரு இயக்கத்தின் புரிதல் இருந்தால், அதன் தலையீடுகள் தற்காலிகமாக ஒரு சில நிவாரணங்களைத் தரும். ஆனால் எதை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற தெளிவில்லாமல் ஓர் இயக்கம் இருப்பது பயனளிக்காது.
ஓர் ஊரில் இயங்குகிற ஒரு நுண்நிதி நிறுவனத்தை மட்டும் எதிர்த்த போராட்டமாக, இந்த போராட்டத்தை நடத்தினால் தீர்வு கிட்டுமா? அந்த நிறுவனங்கள் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, உள்ளூர் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அது அரசியல், மாவட்ட ஆட்சியாளர் கண்டுகொள்ளவில்லை என்றால் அது அரசியல், வட்டிவிகிதம் எவ்வளவு வேண்டுமானால் விதிக்கலாம் என ஒன்றிய அரசு சொல்கிறதென்றால், கார்ப்பரேட்களின் நலனை மட்டும் முன்னிறுத்தி, மக்களை சுரண்ட வழிசெய்யும் அரசியல் என்பதை அந்த இயக்கம் உணர வேண்டும்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பெண்களைக் கடுமையாக சுரண்டி, வட்டிக்கு மேல் வட்டி வாங்கி மூலதனத்தைப் பெருக்கி இன்னும் அதிகமாக கடன்களை இந்த நுண்நிதி நிறுவனங்கள் வழங்கின. எனவே, இந்த நிறுவனங்களின் மூலதனப் பெருக்கம் எப்படி நடைபெறுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டியது முக்கியம் அல்லவா? உழைப்பாளிப் பெண்களை சுரண்டி, திரட்டக்கூடிய வட்டியின் மூலமாக, மூலதனம் பெருகி, மேலும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு கடன் வழங்கும் முறையாக இது இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்குள் உழைப்புச் சுரண்டல் உள்ளது, மூலதனப் பெருக்கம் உள்ளது, எனவே, நுண்நிதி நிறுவனங்களை சாதாரணக் கண்ணோட்டத்தில் நாம் பார்க்க முடியாது.
பொதுவாக, சரியான அரசியல் பார்வையோடு அனைத்துப் பெண்கள் இயக்கங்களும் இருக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. இன்றைக்கும் பெண்களுக்கு ஆண்கள்தான் எதிரிகள் என்று முன்வைக்கும் சில இயக்கங்கள் இருக்கின்றன. பெண்கள் மட்டும் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. எதிரி யார் என்பதை முறையாக, சரியாக அடையாளம் காணவில்லை என்றாலும் பிரச்சனை, தப்பாகக் கணித்தாலும் பிரச்சனை. எனவே, பிரச்சனைகளை அரசியலோடு சரியாகக் கணிக்கும் பார்வை இயக்கங்களுக்கு அவசியமாகிறது.
சமூக ஒடுக்குமுறையின் ஒரு பகுதி பாலின ஒடுக்குமுறை. பாலின ஒடுக்குமுறைக்கு தேவையான அழுத்தம் கொடுப்பதில் பொதுவான அமைப்புகள் மத்தியில் போதாமை உள்ளது. பெண்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே பார்க்கும் அணுகுமுறை இடதுசாரிக் கட்சிகளைத் தவிர பல அரசியல் கட்சிகளிடம் இருக்கின்றன. ‘பெண்களை தரக்குறைவாகப் பேசுவது அல்லது கண்ணியமற்ற முறையில் பேசுவது என்பது குற்றம். இந்தக் குற்றத்தை யார் செய்தாலும் தட்டிக்கேட்க வேண்டும்’ என்ற நிலையை நாம் ஏற்படுத்திட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக ஒரு பெண் இருந்தால், பெண் என்ற அடிப்படையில் அவரை இழிவுபடுத்திப் பேசுவதைக் காண்கிறோம். சொல்வது நட்புக் கட்சியாக இருந்தாலும் இந்த நடவடிக்கை சரியல்ல என்று சுட்டிக்காட்டிட வேண்டும். பெண்களை வாக்குவங்கியாக மட்டும் அரசியல் கட்சிகள் பார்க்கும் நிலையை நாம் மாற்றிட வேண்டும்.
பெண்கள் இயக்கங்கள் ஒட்டுமொத்த புரிதல் உடையவர்களாக இருந்துகொண்டு, ‘ஆனால், எங்களால் இந்தப் பிரச்சனையின் இந்த அம்சத்தைத்தான் தொடமுடிகிறது’ என்றால் பரவாயில்லை. ஆனால், நிலைமை அப்படி இல்லை. தோழர் மைதிலி சிவராமன் அவர்கள் இருந்தபோது, அனைத்துப் பெண்கள் அமைப்புகளையும் அழைத்து சென்னையில் ஒரு கூட்டம் நடத்தினோம். அந்த நிகழ்ச்சியில் சாதிய வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண்கள் தங்கள் துயரங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்கள். அந்தப் பெண்கள் பேசி முடித்தபிறகு, சில பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், ‘எங்களுக்கு இந்த மாதிரியான சாதியக் கொடுமைகள் இன்றைக்கும் தொடர்கின்றன என்ற விவரமே தெரியாது’ என்றார்கள். ‘தீண்டாமை எதோ ஒரு காலத்தில் இருந்தது என்றுதான் நாங்கள் நினைத்தோம். இப்போதும், அது தொடர்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரைக்கும் ஜனநாயக மாதர் சங்கத்தின் பங்கு என்பது சரியான அரசியல் பார்வையை ஊட்டி பெண்களை அணிதிரட்டியது மட்டுமல்ல, பிற அமைப்புகளிடமும் நாங்கள் அந்தப் பார்வையை உருவாக்கினோம். அதேபோல, ஒரு காலத்தில் கல்லூரிகளில் ஜனநாயக மாதர் சங்கத்தை அழைக்க மாட்டார்கள். அரசியல்வாத சங்கம் என்று ஜனநாயக மாதர் சங்கத்திற்குப் பெயர் வைத்திருந்தார்கள். ஏனெனில், விலைவாசி உயர்வு, பெண்கள் மீதான வன்முறை, காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து உடனடியாகக் கூடி கோஷம் போட்டுப் போராடுவதால், மறியல் செய்வதால், அந்தப் பெயரை எங்களுக்கு சூட்டினார்கள். சர்வதேச அளவிலேயே பெண்கள் இயக்கங்களிடையே, ‘வெறும் வன்முறை எதிர்ப்பு என்பது மட்டுமே பலன் தராது, வறுமை என்பது மிக மோசமான வன்முறை’ என்ற புரிதல் 80-களில் வரத்தொடங்கியது. வறுமை ஒழிப்பு எனும்போது அதில் பொருளாதாரம் வருகிறது, பொருளாதாரக் கொள்கை, அந்தக் கொள்கையைப் பின்பற்றக்கூடிய அரசாங்கம் வருகிறது- இவற்றை எதிர்த்துப் போராடாமல் நம்மால் பெண்களுக்கான சம-உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்ற புரிதல் இயக்கங்களுக்கு ஏற்படத் தொடங்கியது. இது இந்தியாவிலும், தமிழகத்திலும் பிரதிபலித்தது. இன்றைக்கு ஜனநாயக மாதர் சங்கத்தை அழைக்காத கல்லூரிகள் மிகவும் குறைவு எனச் சொல்லலாம். எனவே, அந்தப் புரிதலை உருவாக்கியதில் ஜனநாயக மாதர் சங்கத்துக்கு முக்கியப் பங்கு இருந்தது.
அடுத்ததாக, சோஷலிசம் பெண்களுக்கு உறுதிசெய்துள்ள அம்சங்களை நாம் பார்க்க வேண்டும். பெண்களின் நிலை மாறுவதற்கு பொருளியல் சூழல் (material conditions) மாறவேண்டும். பொருளியல் சூழலை மாற்றக்கூடிய திறன் சோஷலிச சமூகத்திற்குத்தான் இருக்கிறது. எனவே, சோஷலிச சமூகத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்றால், கருத்தியல் தளத்தில் சோஷலிச முறைமைக்கு எதிராக முன்வைக்கப்படுகிற பொய்யான வாதங்களைத் தோலுரிப்பதிலும் பெண்கள் இயக்கங்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உள்ளது. சோஷலிசத்திற்கு நேரெதிரானது ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியத்தைப் பற்றிப் பார்வைத் தெளிவு இல்லாத ஒரு பெண்கள் இயக்கத்திற்கு, சரியான புரிதல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏகாதிபத்தியத்தைப் பற்றிப் பேசினால் அரசியல், சோஷலிசத்தைப் பற்றிப் பேசினால் அரசியல், முதலாளித்துவ முறைக்குள்தான் நாம் இருக்கிறோம் என்றாலும், அந்த முறையை பற்றிப் பேசினால் அரசியல் என்கிற கருத்தைக் கொண்டிருக்கிற இயக்கங்களும் இருக்கின்றன. இப்படி எதைப் பற்றியும் பேசாமல், பெண்கள் தனியாக, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பகுதியினராக இருந்து என்ன செய்ய முடியும் என்ற புரிதலைக் கூடுதலாக நாம் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
அரசியலில், பாடப்புத்தகங்களில், விளம்பரங்களில், ஊடகங்களில், எல்லாத் தளங்களிலும் பெண்கள் பற்றிய கருத்தை செம்மைப்படுத்த நாம் உழைக்க வேண்டியிருக்கிறது. பெண்களைக் குறித்த பார்வைத்தெளிவு எல்லா துறைகளிலும், தளங்களிலும் தேவைப்படுகிறது. குடும்பக் கட்டமைப்பிலும் இந்தப் பணியைத் தொடங்க வேண்டியிருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தின் அலகு என்ற முறையில், குடும்பமும் ஆணாதிக்க அமைப்பாகவே இருக்கிறது.
இடதுசாரி அரசியலைப் பொருத்தவரையில், குடும்பம் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் நாம் முன்னெடுக்கிறோம். சர்வதேசப் பெண்கள் தினத்தை ஒட்டி, குடும்பத்தை, சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் செயல்பாடுகளுக்கு நேர்மாறான பாஜகவின் மனுவாத சித்தாந்தத்திற்கு எதிராக நம்முடைய போராட்டத்தை நாம் கூர்மைப்படுத்த வேண்டும். அதேபோல, நவீனதாராளமயக் கொள்கைகளை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். அதற்கு மகளிர் தினத்தை நாம் பயன்படுத்த வேண்டும் எனக் கருதுகிறேன்.

பாஜக-வைத் தகர்க்கும் பணிகளில் பெண்கள் இயக்கங்கள் எவ்வாறு செயலாற்றிட வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
பாஜக முன்னெடுக்கும் இந்துத்துவ வகுப்புவாத அரசியலோடு, பெண்கள் மூன்று நிலைகளில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். முதலாவதாக, வகுப்புவாதத்தில் ஈடுபடுபவர்களாக, இரண்டாவதாக, பாதிக்கப்படுபவர்களாக, மூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்களை மீட்பவர்கள் என்ற மூன்று நிலைகளில் பெண்கள் இருக்கிறார்கள். பாதிக்கப்படுபவர்களை மீட்பவர்கள் எண்ணிக்கையை நாம் பெண்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டியுள்ளது.
இந்துத்துவ வகுப்புவாதம் என்பது சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே பிரச்சனையாக இருக்கிறது, எனவே மதச்சார்பின்மை தேவை என்ற கருத்து இருக்கிறது. ஒருவேளை இந்தியாவில் வேறு மதங்களே இல்லை, இந்து மதம் மட்டுமே உள்ளது என்றால்கூட, மதச்சார்பின்மை என்பது முக்கிய ஜனநாயகக் கோட்பாடாக இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது. பொது சிவில் சட்டம் போன்ற அம்சங்களைப் பாஜக அறிமுகப்படுத்தத் திட்டமிடுகிறது. ‘இந்துப் பெண்கள் எல்லாரும் சமத்துவ நிலையில் இருக்கிறார்கள்; பிற மதத்துப் பெண்கள் சமத்துவ நிலையில் இல்லை’ என்ற தோற்றத்தை பாஜக ஏற்படுத்த முயல்கிறது. இந்துப் பெண்கள் அனுபவிக்கும் சமத்துவமின்மையை கண்டுகொள்ளாமல் விடுகிறது. இதனால்தான், ஜனநாயக மாதர் சங்கம் நீண்ட காலமாக, ‘சம-உரிமை அடிப்படையில் சம சட்டங்கள்’ என்ற கருத்தை (Equal laws based on Equal rights) முன்வைத்தது. சீரானதும் சமமானதும் ஒன்றல்ல.
சட்டப்படி ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம-உரிமைகள் இருக்க வேண்டும். பாலின சமத்துவம் இருக்க வேண்டும். எல்லா மதங்களிலும் பாகுபாட்டு வழக்கங்கள் உள்ளன. எனவே, பொது சிவில் சட்டம் என்ற பெயரில் பாஜக அரசாங்கம், பாகுபாடுகள் மிகுந்த இந்துமதம் சார்ந்த சட்டங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, சிறுபான்மை மக்களுடைய தனிநபர் சட்டங்களில் ஓரிரு அம்சங்கள் முற்போக்காக இருந்தாலும் அவற்றை நொறுக்கிவிட்டு, இந்துமதம் சார்ந்த பாகுபாடான சட்டங்களை அனைவருக்கும் பொதுவான சட்டமாகக் கொண்டுவர முயல்கிறது. உத்தரகாண்ட் சட்டசபை நிறைவேற்றியிருக்கும் பொது சிவில் சட்டம் ஏராளமான இந்துமதப் பாகுபாடுகளை முன்னிறுத்துகிறது. ஜீவனாம்சம் சம்பந்தப்பட்ட அம்சங்களில்கூட, கணவனின் வருமான விவரங்களை மனைவிதான் சேகரித்து வழங்கிட வேண்டும் என்பது போன்ற பல்வேறு பாகுபாடுகளைக் கொண்டிருக்கிறது.
எனவே, வகுப்புவாதம் எந்த நிலையிலும் பெண்களுக்கு உகந்ததல்ல என்பதை நாம் பெண்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். வகுப்புவாதத்தில் பாதிக்கப்படுபவர்களை மீட்கும் பொறுப்புடைய பெண்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க வேண்டி இருக்கிறது. நாம் சாதாரணமாகப் புழங்குகிற இடங்களில், குடியிருப்புப் பகுதிகளில் சிறுபான்மையினரைப் பாகுபடுத்தும், இழிவுபடுத்தும் நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும், அது சரியில்லை என்று நாம் குரல் கொடுக்க வேண்டும் என்ற புரிதலை நாம் ஏற்படுத்த வேண்டும். நாம் பொதுவாக, இந்துத்துவ வகுப்புவாதத்தை, மனுவாத சித்தாந்தத்தை ஏற்கவில்லை என்று பிரகடனப்படுத்தினால் மட்டும் போதாது, அன்றாட வாழ்க்கையில் இந்தப் பிரச்சனைகள் எழுகிறபோது, இதற்கெதிராக உரக்கப் பேசுபவர்களாகவும் நாம் செயல்பட வேண்டும்.