நிகழ் அய்க்கண்
அறுபதுக்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச செய்திசேகரிப்பு விருதுகளையும், மானியங்களையும் வென்றுள்ள பத்திரிகையாளரான பி. சாய்நாத், 42 ஆண்டுகளாக செய்திசேகரிக்கும் பணியிலிருக்கிறார். அதிலும் 30 வருடங்களாக இந்திய கிராமப்புறங்களின் செய்திகளை சேகரிப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். இப்பணியினை மையமாகவைத்து 2014ஆம் ஆண்டு கிராமப்புற இந்திய மக்களின் பெட்டகம் (PARI) எனும் நிறுவனத்தினைத் தொடங்கியுள்ளார்.14 மொழிகளில் பிரசுரிக்கப்படும் இந்த டிஜிட்டல் தளமானது, இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் உள்ளடக்கி, செய்தி சேகரிக்கப்படவேண்டும் என்கிற தீர்மானத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்நூலில், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அதேசமயம் மறக்கடிக்கப்பட்ட, பதினாறு ஆளுமைகளின் வீரம் பற்றிய வாய்மொழிப்பதிவினையும், அப்போராட்டத்தில் இடம்பெற்றிருந்த பன்முகத்தன்மை மற்றும் பல சித்தாந்த இழைகளைப்பற்றியும் ஆசிரியர் வெளிக்கொணர்ந்திருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் அவ்வாளுமைகள் செலுத்திய பங்களிப்புக்களைப்பற்றி சுருக்கமாகக் கீழே காணலாம்.
இந்தியச் சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டில், இந்நாட்டை உருவாக்கியவர்களாக சிலரைமட்டும்தான் பாடப்புத்தகங்கள் தெரிவுசெய்து பேசுகின்றன. இன்னும் சொல்லப்போனால், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில்கூட பலரது பெயர்கள் பலவேறு காரணங்களினால் விடுபட்டிருக்கின்றன. அவ்வாறிருந்தபோதிலும், சுதந்திரத்திற்காகப் போரிட்டு உரிய அங்கீகாரமற்றிருக்கும் வீரர்களைப்பற்றி அந்தந்தப்பகுதிகளில் இன்னும் நினைவுகூரப்பட்டுவருவதை ஆசிரியர் தனது ஆய்வின் வழியாகக் காண்கிறார்.
மகாராஷ்ட்ரா மாநிலம், சங்கிலி மாவட்டம் விடாவில் பிப்ரவரி 1926-ல் ஹெளசாபாய் பிறந்தார். இவரது தந்தை நானா பாடில் ஒரு சுதந்திரப் போராட்டவீரர். 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் கொடுத்த ஏமாற்றத்தினைத் தொடர்ந்து, இவர் பிரதி சர்க்கார் எனும் அமைப்பையும், டூஃபான் சேனா எனும் தலைமறைவு இராணுவப்படையையும் தொடங்கி, கிட்டத்தட்ட 600 கிராமங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு, 1943ல் அப்பகுதியினை பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலைபெற்றுவிட்டதாக அறிவித்தவர். ஹெளசாபாய் தனது 17வது வயதில், கைக்குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு ஆங்கிலேயருக்கு எதிரான போரில் கலந்துகொண்டு, காவல் நிலையத்தில் இருந்த காவலர்களை திசைதிருப்பி அங்கிருந்த ஆயுதங்களை கொள்ளையடித்திருக்கிறார். இதுமட்டுமல்லாது 1943-46 காலகட்டத்தில் பிரிட்டிஷ் ரயில்களைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்ததும், பிரிட்டிஷார் தங்கும் டாக் (DAK) பங்களாக்களைத் தீயிட்டுக் கொளுத்தவும் செய்திருக்கின்றார்.
1930ஆம் வருடம் ஒரிஸாவின் நுவாபடா பகுதியில் சாலிஹார் பகுதியில் விடுதலைக்கு ஆதரவான போராட்டங்களை பிரிட்டிஷார் ஒடுக்கிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில், 16 வயது நிரம்பிய சபர் பழங்குடியைச்சேர்ந்த தெமத்தி தனது தந்தை போலீஸாரால் தாக்கப்பட்டதைக் கேள்வியுற்று பிற பெண்கள் 40 பேருடன் சாலிஹாவிற்கு ஓடினார். அப்போது தனது தந்தையின் காலில் தோட்டா பாய்ந்து தரையில் கிடந்ததைக்கண்ட தெமத்தி தெய், தன்னிலை இழந்தவராய், கையில் வைத்திருந்த லத்தியைக்கொண்டு அருகில் நின்றிருந்த போலீஸைத் தாக்கினார். உடன் வந்த நாற்பது பெண்களும் இவ்வாறாக, தத்தம் லத்திகளைக்கொண்டு போலீஸ் படைககளின் மீது தாக்கி விரட்டியடித்திருக்கின்றனர்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியர்பூர் மாவட்டம், ராம்கர் கிராமத்தில் 1939ஆம் வருடம் 11 வயது நிரம்பிய பகத்சிங் ஜுக்கியான் 3ஆம் வகுப்பு மாணவர். வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றிருந்ததால், அவருக்கு பரிசு வழங்க வந்திருந்த பள்ளியின் மூத்த அதிகாரி அம்மாணவரை “பிரித்தானியா வாழ்க, ஹிட்லர் ஒழிக” என முழக்கமிடும்படி கூறியிருக்கிறார். அவரோ “பிரித்தானியா ஒழிக, இந்துஸ்தான் வாழ்க” என முழங்கிவிட்டார். இதன்காரணமாக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பிறகான காலங்களில் கதார் கட்சின் தலைமறைவுக் கிளையான “ கீர்த்தி” கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, தலைமறைவுப் புரட்சிக்கான தூதுவராகச் செயல்பட்டிருக்கிறார்.
ஷோபாராம் கெஹெர்வர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வசித்தவர். ஐந்துவயது முதலே சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இவர் கூறும்போது, அஜ்மீர் அருகே, ஒருமுறை நாங்கள் குண்டுகள் செய்துகொண்டிருந்த இடத்தை பிரிட்டிஷார் சுற்றி வளைத்தனர். அப்பகுதியானது புலி நீரருந்த வரும் ஓடைக்கருகே இருந்தது. நாங்கள் குண்டுகளை வெடித்தோம். அச்சமயத்தில் புலியும் நீரருந்த வந்துவிட்டது. புலி நீரருந்துவதை விட்டுவிட்டு போலீஸாரைத் துரத்தியது. அதன்பிறகு அப்பகுதிக்கு போலீஸார் வருவதில்லை. 1930 -31ஆம் ஆண்டில் ஒருமுறை, பகத்சிங்குடன் இணைந்து செயல்பட்ட சந்திரசேகர் ஆசாத்தை அவ்விடத்திற்கு அழைத்துவந்தோம். அப்போது, திறன்மிகுந்த வெடிகுண்டுகளை எவ்வாறு தயாரிப்பது என்பதுபற்றிய நுட்பங்களை விளக்கினார். 1942 ஆம் ஆண்டு எனது 16 வயதில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது போலீஸார் எனது காலில் சுட்டு காயம் ஏற்பட்டுவிட்டது என்கிறார். இதுதவிர, சுதந்திரப் போராட்டத்திற்காக தயாரித்த வெடிகுண்டுகளை தேவைப்பட்ட பகுதிகளுக்கு ரகசியமாகக் கொண்டு சென்றது; மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோரைச் சந்தித்தது பற்றியும் நினைவுகூர்கிறார்.
1930 அல்லது 1931ல் பிறந்த மல்லு ஸ்வராஜ்யம், தெலுங்கானா பகுதியில் நிஜாம் மற்றும் நிலப்பிரபுக்களின் கொடுமைகளை எதிர்த்து தனது 11 வயதிலிருந்தே போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திவந்திருக்கிறார். அப்போது, கவண் வில்லும், துப்பாக்கியையும் பயன்படுத்தி நிஜாமின் ரஜாக்கர்களையும், மலபார் போலீஸ்படையையும் தனது குழுவினருடன் சேர்ந்து விரட்டியிருக்கின்றனர். அடிமைத்தனத்தை உடைத்து, நீதியை வெல்வதற்கான 1943-1951 வீரத்தெலுங்கானா போராட்டமானது, 5000 கிராமங்கள்; 25000 சதுர கி.மீ. பரப்பளவு; 30 லட்சம் மக்களைக்கொண்டது. மக்கள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கிராமங்களில் இணை அரசாங்கத்தையும் அதன்வழியாக, கிராமக்குழுமங்கள் உருவாக்கப்பட்டு, கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கர் நிலம் ஏழைமக்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டது. இதுதவிர, கொத்தடிமை ஒழிப்புப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

1942ஆம் ஆண்டின் ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்குப்பிறகு மகாராஷ்ட்ரா மாநிலம் சத்தாரா பகுதியில் உருவாக்கப்பட்ட பிரதி சர்க்காரின் ஆயுதக்குழுதான் டூஃபான் சேனா. இத்தலைமறைவு இயக்கத்திற்கு தலைமைதாங்கியவர்கள்தான் கேப்டன் பாவுவும் சேனாவின் தளபதி பாப்பு லாதுவும். இந்த அமைப்புக்கு துணையாக ஏராளமான விவசாயிகளும், தொழிலாளர்களும் துணைநின்றிருக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை திரும்பக் கைப்பற்றும் நோக்குடன், ஆயுதங்களைக்கொண்டு இரயிலை நிறுத்தி பணத்தை கொள்ளையடித்திருக்கின்றனர். இதேபோல கருவூலப்பணத்தை பேரூந்தில் கொண்டுசென்றபோதும் டூஃபான் சேனையினர் வழிமறித்து கொள்ளையடித்திருக்கின்றனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணம் சேனாவின் கட்டுப்பாட்டிலிருந்த கிராமப்பகுதியிலுள்ள இடைக்கால அரசாங்கத்திற்குப்போய் சேர்ந்திருக்கிறது.
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட மரண தண்டனையின் தாக்கமானது, தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. அப்போது சங்கரய்யாவிற்கு வயது ஒன்பது. அவ்வயதுமுதலே சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். 1941ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வரலாறு முடிக்கும் நிலையிலிருந்தார். அச்சமயத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப்போராடியதற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் மீனாட்சி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் சங்கரய்யாவும் அவரது நண்பரும் துண்டுப்பிரசுரம் கொடுத்துக்கொண்டிருந்தனர். பின்னர் விடுதி அறையில் நடந்த போலீஸார் சோதனையின்போது துண்டுப்பிரசுரம் இருந்ததற்காக அவரது நண்பர் கைது செய்யப்படுகிறார். நண்பருடைய கைதினைக் கண்டித்தும் போராட்டம் நடத்தியதினால் சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார். அப்போது இறுதித்தேர்வுகள் நடக்கவிருந்த சமயம். அதன்பிறகு அவரால் இளங்கலைப்படிப்பை முடிக்கவேயில்லை. பகத்சிங் கொல்லப்பட்டது; 1945ல் தொடங்கிய இந்திய தேசிய இராணுவத்தின் மீதான விசாரணை; 1946 – நடந்த ராயல் இந்திய கடற்படையின் கலகமும்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உத்வேகம் தந்தது என்கிறார்.
ஒடிசா மாநிலத்தின் கொராபுட் மாவட்டத்தில் நபராங்பூரைச் சேர்ந்தவர். மெட்ரிக் படிப்பை நபராங்பூரில் முடித்துக்கொண்டு மேற்படிப்பிற்காக 40 கி.மீ. தொலைவிலுள்ள ஜெய்போரிலுள்ள பள்ளியில் சேருகிறார். இவரது ஆசிரியர் சதாசிவ் திரிபாதி தான் விடுதலை உணர்வினை பாஜிக்கு ஊட்டினார். மக்கள் பலரும் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொள்ள கொராபுட்டை நோக்கி அணிவகுத்துச்சென்றபோது, இவரும் இவரது நண்பரும் 350 கி.மீ. தொலைவிலுள்ள ராய்ப்பூருக்கு சைக்கிளில் சென்று, பின்னர் அங்கிருந்து ரயிலிலேறி வார்தாவிலுள்ள காந்தி ஆசிரமத்துக்குச்சென்று காந்தியை சந்தித்திருக்கின்றனர். காந்தியும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு அறிவுரை வழங்க அதன்படி ஊர் திரும்பி போராட்டத்தில் பங்குகொண்டார்.
ஒடிசாவின் கொராபுட் மாவட்டத்திலுள்ள ஜெய்போரின் டவுனிலுள்ள ஒரு குப்பத்திற்குள் லஷ்மி பாண்டா வசித்துவருகிறார். நாட்டின் சுதந்திரத்திற்காகப்போராடிய எண்ணற்ற கிராமப்புற இந்தியர்களில் லஷ்மியும் ஒருவர். தனது வாழ்வின் பெரும்பங்கை பிரிட்டிஷாரை எதிர்த்த போராட்டத்திற்காக தியாகம் செய்துவிட்டு, பின்பு வழக்கம்போல் தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியவர். இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தில் 13 வயது முதல் இணைந்து முகாமிலிருந்து உணவு சமைத்துப்போட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அம்முகாமில் லெப்டினண்ட் ஜானகியைச் சந்தித்திருக்கிறார். அதன்பின்னராரான போரின் பிற்பகுதியில் சிங்கப்பூருக்கும் சென்றிருக்கிறார்.
ஒடிசாவின் பர்கர் மாவட்டத்திலுள்ள பனிமொரா கிராமமானது மிக ஆச்சரியகரமான எண்ணிக்கையில் தனது மகன்களையும், மகள்களையும் பிரிட்டிஷாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்திற்கு அனுப்பிவைத்தது. 1942ல் மட்டும் 32 பேர் சிறைக்குச்சென்றதாக தரவுகள் உள்ளன. இப்போராட்டங்களுக்கு முன்னணி வகித்தவர்களுள் முக்கியமானவர் சமாரு ஆவார். 1942 ஆகஸ்ட்டில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது, சமாரு மற்றும் தோழர்கள் சம்பல்பூரிலுள்ள நீதிமன்றத்தை கைப்பற்றிவிட்டனர். அதன்பின்னர், சமாரு நீதிபதியாகவும், அவரது தோழர் ஜிதேந்திர பிரதான் ஆர்டர்லியாகவும், பூர்ணச்சந்திர பிரதான் குமாஸ்தாவாகவும் அறிவித்துக்கொண்டனர்.
1920-ல் மகாராஷ்ட்ரா மாநிலம், சங்க்லி அருகேயுள்ள ராமாபூர் கிராமத்தில், பிறந்த கணபதி யாதவ், டூஃபான் சேனாவில் இணைத்துக்கொண்ட சுதந்திரப் போராட்ட வீரராவார். இவர் கூறும்போது, “நான் அதிகமாக தகவலைப் பரிமாறும் வேலையையோ அல்லது காடுகளில் ஒளிந்துகொண்டிருந்த புரட்சியாளர்களுக்கு உணவு எடுத்துச்செல்லும் வேலையையோதான் பார்த்தேன்” என்கிறார். நீண்ட ஆபத்தான பயணங்களை நடந்து அல்லது சைக்கிளின் மூலம் மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, அப்பகுதியிலுள்ள சந்தாராவின் ஷெனோலியில் நடத்திய ரயில் கொள்ளையில் இவரது பங்களிப்புமுண்டு.
இவர்களைத்தவிர, மேற்குவங்க மாநிலம், புரூலியா அருகேயுள்ள செப்புவா கிராமத்திலிருந்த பபானி மஹாதோ வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராடங்களுக்கு சோறு சமைத்து வழங்கியுள்ளார். மேற்குவங்கம், புருலியாவின் மன்பஜாரில் தெலுமஹாதோவும், லோக்கிமஹதோவும் சேர்ந்து வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் ஒருபகுதியாக மக்களைத்திரட்டி அப்பகுதியைச் சுற்றியுள்ள 12 காவல் நிலையங்களை முற்றுகையிட்டிருக்கின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலுள்ள H.S.துரைசாமி ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களில் செய்தித்தாள்கள் நடத்தி அதன் வழியாக சுதந்திரப் போராட்ட கருத்தியல்களை மக்களுக்கு கொண்டு சென்றுள்ளார். தமிழகத்தின் ஆர்.நல்லக்கண்ணு, தனது சிறுவயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவராகவும், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து 1940-1960 காலகட்டங்களில் சீனிவாசராவுடன் சேர்ந்து, விவசாய சங்கத்தினை துவக்கி, விவசாயிகளின் போராட்டங்களை காலனியாதிக்க இயக்கத்துடன் இணைத்தவராகவும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டங்களையும் நடத்தியிருக்கிறார்.