புவனா சந்திரசேகரன்
இமயவரம்பன் காதலி என்ற வரலாற்றுப் புதினம் சேரமான் நெடுஞ்சேரலாதனைக் குறித்து எழுதப்பட்டது. இவர் சேரன் செங்குட்டுவன் மற்றும் இளங்கோ அடிகளாரின் தந்தை. இமயம் வரை படையெடுத்துச் சென்று தன்னை எதிர்த்த வடநாட்டு மன்னர்களை அடக்கி இமயத்தில் வில் இலச்சினையைப் பொறித்துவிட்டு வெற்றியுடன் திரும்பியவர். இமயத்தை வரம்பாக வைத்த காரணத்தால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மனைவி நற்சோணை. இவர் கரிகாற் சோழனின் மகனான மணக்கிள்ளியின் மகள். நற்சோணைக்கும் நெடுஞ்சேரலாதனுக்கும் இடையிலுள்ள காதலைக் குறித்தும் நெடுஞ்சேரலாதனின் வீரத்தைக் குறித்தும் எழுதப்பட்டுள்ள வரலாற்றுப் புதினம்தான் இமயவரம்பன் காதலி- நற்சோணை.
கரிகாற் சோழனைப்போலவே சேரலாதனும் இமயம் வரை சென்று வட இந்திய மன்னர்களை வென்றவர். சேர மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். சோழர்களைப் பற்றிய சரித்திர நாவல்கள் ஏராளம். ஆனால், சேர மன்னர்கள் பற்றிய புதினங்கள் குறைச்சலாக இருப்பதாலேயே இதனை நான் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன்.
அழகான நடை, சொல்வளம், வர்ணனைத் திறன், சொல்வதைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் எழுத்து வன்மை, சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் அழகு இவை அனைத்துமே இந்த நாவலுக்கு அணிகலன்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற சேர மன்னன், இளவரசனாக இருக்கும் பருவத்தில் ஆரம்பித்து, திக்கெட்டும் சென்று வெற்றிக்கொடி நாட்டி வில்லின் பெருமையை இமயம் வரை கொண்டு சென்ற பின்னர் தனது உறவினரான சோழமன்னர் பெருவிறற்கிள்ளியுடன் போர் புரிந்து வீரமரணத்தைத் தழுவும் வரை கதை பயணிக்கிறது.

கதைக்கான வரலாற்றுச் சான்றுகள், அகநானூறு, புறநானூற்றுப் பாடல்கள் இவற்றை ஆங்காங்கே பொருத்தியிருந்தது ஆசிரியரின் மகத்தான உழைப்பைக் காட்டுகிறது. குறிப்பாகப் போர் பற்றிய பகுதிகளிலும், காதல் வர்ணனைகளிலும் மிகவும் பொருத்தமாகவும் நேர்த்தியாகவும் இவற்றைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். கதையின் நாயகி நற்சோணை, கதையின் ஆரம்பத்திலேயே வந்து விடுகிறார். சேரலாதனின் கதையோடு சேர்ந்து நற்சோணையின் காதலும், பின்னர் திருமண வாழ்க்கையும் அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றன. கவிதைகள் எழுதுவதிலும் தேர்ந்தவராகத் திகழும் ஆசிரியர் ஆங்காங்கே கொடுத்திருக்கும் காதல் கவிதைகள் அழகு.
முதலில் பெண்மையை மிகவும் உயர்வாகக் காட்டிய ஆசிரியருக்கு நன்றி! பழங்காலத்திலும் பெண்களை மிகவும் அறிவாற்றல் மிகுந்தவர்களாகவும், அரசியலில் ஆலோசனைகள் தரும் அளவிற்கு அரசியல் ஞானம் கொண்டவர்களாகவும் காட்டியிருப்பது என்னைக் கவர்ந்தது. நிறைய வரலாற்று நாவல்களில் பெண்களை வெறும் அழகுப்பெட்டகங்களாகக் காட்டுவதற்காகத் தரப்படும் அங்க வர்ணனைகளும், கதைக்குத் தேவையில்லாமல் இடைச் செருகல்களாக வரும் காதல் காட்சிகளும் முகத்தைச் சுளிக்க வைக்கும். இந்தக் கதையில் வர்ணனைகளும், காதலும் எல்லைக் கோட்டுக்குள்ளேயே உலவுவது மனதிற்கு இதம் அளிக்கிறது.
இரண்டாவதாக தமிழ்ப் புலவர்கள் அரசியலில் ஆற்றிய பணியையும், அவர்களுடைய உன்னதமான செயல்களையும் அழகாகக் காட்டியிருக்கும் விதம் மனதைக் கவர்ந்தது. முதல் அத்தியாயத்திலேயே முரிஞ்சியூர் முடிநாகனார் தலை காட்டி விடுகிறார். போர்க்கால அறிவுரைகளை வழங்கும் அளவு ஞானமும் அரசர் அவருக்கு அளிக்கும் மதிப்பும் சிறப்பு. அதன் பின்னர் புலவர் குமட்டூர் கண்ணனார், பாணர், கழாத்தலையார், கோவூர்க்கிழார், ஆலந்தூர் கிழார் போன்ற பல்வேறு தமிழ் அறிஞர்கள் தங்கள் பணிகளைச் செவ்வனே ஆற்றுகிறார்கள். அதுவும் கோவூர்க்கிழார் நெடுங்கிள்ளியிடம் பேசி இளந்தத்தனைச் சிறையிலிட்டது தவறு எனப் புரிய வைத்து விடுவிப்பதும் பின்னர் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளிக்கு நடுவில் நடக்கவிருக்கும் பெரும் போரின் அழிவைத் தடுப்பதும் எவ்வளவு உயர்ந்த செயல்கள்!
தமிழ்ப் புலவர்களுக்கு அன்றைய அரசர்களின் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. கவிஞர்களின் அரசியல் அறிவும், ஈடுபாடும், நற்சிந்தனையுடன் நாட்டு நலனைக் காக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் போற்றத்தக்கவை. புலவர்களை மதித்துப் போரை நிறுத்தும் அளவு மன்னர்கள் சிந்திப்பது எவ்வளவு நல்ல செயல்! மூன்றாவதாக நற்சோணை, பதுமன் தேவியின் உறவு அழகாகக் காட்டப்பட்டுள்ளது. நற்சோணையின் மீது பொறாமை கொள்ளும்படியாக எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வரும் பதுமன் தேவியின் பாத்திரப் படைப்பு மிகவும் கவர்ந்தது. ஒரு புறம் அழகிலும், அறிவிலும், வீரத்திலும் சிறந்த நற்சோணை! இன்னொரு பக்கம் அழகில் நற்சோணைக்கு எந்த விதத்திலும்குறைவில்லாத பதுமன் தேவி தன் மனதில் தேக்கி வைத்திருக்கும் எல்லையற்ற அன்பாலும், அப்பாவித்தனத்தாலும் என் மனதை வென்று விட்டாள்!
அடுத்ததாகப் பல புதிய தகவல்களைக் கற்றுக் கொண்டேன். எடுத்துக்காட்டாக, கூபகம்- கோவா, பொதினி- பழனி, நெல்வேலி- திருநெல்வேலி,பழையன்கோட்டை- பாளையங்கோட்டை, வேணாடு- திருவிதாங்கூர் போன்ற பழைய, புதிய பெயர்கள். இவற்றைத் தவிர, குடநாடு, குட்டநாடு , இவற்றை ஆளும் குடக்கோ, குட்டுவன் போன்ற பெயர்க் காரணங்கள் சிறப்பு. கதையின் ஊடே வந்த ஆதிமந்தி, ஆட்டனத்தி கதை சிலிர்க்க வைக்கிறது. அவர்களுடைய காதலும், சோழவஞ்சியைக் கைப்பற்ற கிள்ளிவளவன் தொடுக்கும் போரில் கரூர் கோட்டையைக் காப்பாற்ற ஆட்டனத்தி செய்யும் முயற்சிகளும், இறுதியில் வீரமரணம் எய்வதும் அரசரைத் தொடர்ந்து அரசியும் இறப்பதும் கண்களில் கண்ணீரை வரவழைத்தன.
ஆதிமந்தி, ஆட்டனத்தி இருவரின் அற்புதமான காதல் பற்றித் தனியாக ஒரு சரித்திரப் புதினம் எழுதவேண்டும் என்ற கோரிக்கையை நான் ஏற்கெனவே ஆசிரியரிடம் வைத்திருக்கிறேன். தான் எழுதிக்கொண்டிருக்கும் கதைகளை முடித்துவிட்டு ஆசிரியர் இந்தக் காதல் காவியத்தை விரைவில் படைப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். காதலைத் தன் எழுத்தில் சிறப்பாகக் கொண்டு வரும் ஆசிரியர், இதனையும் சிறப்பாகவே எழுதி முடிப்பார்.
கரணம் தப்பினால் மரணம் பற்றிய புதிய விளக்கம் சிறப்பு என்றால், ஆரைவாய்க் கோட்டையில் உழக்காழாக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம் என்ற சொல்லாடலும், அதன் உச்சரிப்பை வைத்து கோட்டை மக்கள் யாரென்று எடை போடுவதும் சுவாரஸ்யமாக இருந்தது. கதையின் ஊடே அமைந்திருந்த வர்ணனைகள் ஆசிரியரின் எழுத்து வன்மை சிறப்பாக மிளிர்கிறது. இயற்கைக் காட்சிகளின் வர்ணனைகள், கதாபாத்திரங்களின் வர்ணனைகள், போர்க்கள வர்ணனைகள் அனைத்துமே சிறப்பு. அவை பொருத்தமான காட்சிகளில் தேவையான அளவு கையாளப்பட்டிருக்கின்றன.

சரித்திர நாவல்களில் வர்ணனைகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. அத்தகைய வர்ணனைகளின் ஊடே அன்றைய காலகட்டத்துடன் நாம் ஒன்றி விடுகிறோம். அன்றைய மக்களின் வாழ்க்கை முறை, அவர்களுடைய நாகரிகம், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுடைய பண்புகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக இந்த வர்ணனைகள் நமக்கு வழங்கி விடுகின்றன. வர்ணனைகளுக்குப் பொருத்தமான சங்க இலக்கியப் பாடல்களும் அழகாக எடுத்தாளப்பட்டுள்ள விதம், ஆசிரியரின் தமிழ் ஆர்வத்தையும், இலக்கிய ஆளுமையையும் ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கின்றன. சேரன் நெடுஞ்சேரலாதன் நகர்வலம் செல்லும்போது அவனைக் கண்டு மகிழும் சிறுவனின் கண்களுக்கு அவன் ஆண் சிங்கமாகக் காட்சி தருவதாக ஆசிரியர் வர்ணித்து எழுதியிருந்தது மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும் இருந்தது. போர்க் காட்சிகள் பல கதையின் ஊடே அந்தக் காலப் போர் முறைகளைத் தெளிவாகக் கண்முன்னே காட்டின. யவனர்களுடன் வணிகம், கடம்பரின் கடற்கொள்ளை, சேரன் அவர்களை வெற்றி கொள்வது சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.
மாவலி மன்னனின் மைந்தர்கள்தான் சேரர், சோழர், பாண்டியர், கன்னடர், தெலுங்கர் என்ற ஐவேந்தர்கள் என்று சொல்லப்பட்ட குறிப்பும், குமரி முனை பற்றிய புராணக்கதை, திருப்பாற்கடல் கடைந்து அமிர்தம் எடுக்கும் தருணத்தில் ராகு, கேது தோன்றும் கதையும் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன. மண உறுதி அழகான சொல். அதுவும் காலணியான கழலைச் சீதனமாகத் தருவதன் தாத்பர்யமும் அழகாக விளக்கப்பட்டிருந்தது. மண உறுதி, திருமணம், வளைகாப்பு, வீரக்கல் நாட்டுதல் போன்ற சடங்குகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ள விதம் என்னைக் கவர்ந்தது. சடங்குகளும், சம்பிரதாயங்களும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ள சமாசாரங்கள் என்பதால் என்னால் அவற்றை இரசிக்க முடிந்தது. உறவுகளுக்குள்தான் எத்தனை சிக்கல்கள்! சோழர் குல வாரிசுகளுக்குள் போட்டி, பொறாமை! பெண் கொடுத்து உறவு கொண்ட பின்னரும் சேர மன்னன் மீது பொறாமை கொள்வது, ஆதிமந்திக்குச் சீதனமாகக் கொடுத்த வஞ்சியைப் போர் செய்து கவர நினைப்பது என்று மண்ணாசை பேரழிவுகளை உருவாக்குகிறது என்றால் பெண்ணாசை கொண்டு திரியும் குணசேகர பாண்டியன் இறுதிவரை வில்லனாகவே பயணிக்கிறான்.
மகதை நாட்டு மன்னன் சிங்க தேவனின் மகள் சீர்த்தியின் சுயம்வரம், பெண்களுக்குத் திருமணம் பற்றி முடிவெடுக்கும் கருத்து சுதந்திரத்தைக் காட்டுகிறது. மற்றும் உடன்கட்டை ஏறக்கூடாது என்று சேர அரசர்கள் தங்களது மனைவியரிடம் உறுதிமொழி பெறுவதுபோலக் காட்டியிருப்பதும் அன்றைய கால ஆண்கள் பற்றிய நல்லெண்ணத்தை விதைக்கிறது. எனக்குப் பிடித்த விஷயங்களில் நினைவில் நின்றவைகளை ஓரளவு பட்டியல் இட்டிருக்கிறேன். சில விஷயங்கள் விட்டுப் போயிருக்கலாம். இளங்கோ துறவறம் ஏற்கும் நிகழ்வைக் காட்டியுள்ள ஆசிரியர் இதைத் தொடர்ந்து சேரன் செங்குட்டுவனின் கதையையும் எழுதவேண்டுமென்று ஆசிரியரை வேண்டிக் கொள்கிறேன்.
வரலாற்றுக் கதை எழுதுவதற்குத் தனித்திறமை வேண்டும். பொறுமை, தூய தமிழ்நடை, நிறைய வாசிப்பு, கடின உழைப்பு, இலக்கிய ஞானம் இவற்றோடு சேர்த்து நல்ல கற்பனை வளமும் தேவை. இவை அனைத்தும் இந்த ஆசிரியரிடம் கொட்டிக் கிடக்கின்றன. வீரகூச்சவர்மன், மஹா சத்திரபதி ருத்ரதாமன், குட்ட நாட்டுக் குட்டுவன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கலிங்காதிபதி காரவேலன் ஆகிய வரலாற்றுப் புதினங்களை இந்த நூலின் ஆசிரியர் திரு. ஜெயக்குமார் சுந்தரம் அவர்கள் ஏற்கெனவே படைத்துள்ளார். இவை அனைத்தும் வானதி பதிப்பகத்தின் வெளியீடுகள். இவற்றைத் தவிர கள்வர் கோமான் புள்ளி என்கிற வரலாற்றுக் குறுநாவல் குவிகம் இலக்கிய இதழின் வெளியீடாக வந்துள்ளது.
நல்லதொரு வரலாற்றுக் கதையை நிறைவாகப் படைத்த ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! மேன்மேலும் நிறைய வரலாற்றுப் புதினங்கள் படைத்து எழுத்துலகில் வெற்றிநடை போட இவருக்கு என்னுடைய வாழ்த்துகள்! இந்தப் புதினத்தைத் தவறாமல் படித்து வரலாற்றுப் புதினங்களை ஆதரியுங்கள். நமது இல்லத்தில் வாங்கி வைக்க வேண்டிய நூல் என்று பரிந்துரை செய்கிறேன்.
