எஸ்.வி.ராஜதுரை
லெனினின் நூற்றாண்டு நினைவு போற்றப்படும் இந்த ஆண்டில் அவரிடமிருந்து கம்யூனிஸ்டுகள் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். அவரது மிகச் சிறந்த படைப்புகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை இளம் தலைமுறைக் கம்யூனிஸ்டுகளுக்கு அறிமுகப்படுத்துவது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடமை. அவர்கள் செய்ய வேண்டிய பணிக்கு முன்னெடுத்துக்காட்டாக அவரது நூலொன்றைப் பற்றிய சிறு அறிமுகக் கட்டுரையை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

1914இல் முதல் உலகப் போர் வெடித்த நாள் லெனினின் அரசியல் வாழ்க்கையில் தீர்மானகரமான கட்டங்களிலொன்றாக இருந்தது. மேற்கு ஐரோப்பிய சோசலிச-ஜனநாயகக் கட்சிகளில் (Social-Democratic Parties) (அன்று ஐரோப்பாவில் சோசலிஸ்ட் கட்சிகள் இந்தப் பெயரால்தான் அழைக்கப்பட்டு வந்தன) மிக வலு வாய்ந்ததாகவும் பரந்துபட்ட உழைக்கும் மக்களைத் தன் சமூக அடித்தளமாகக் கொண்டிருந்ததுமான ஜெர்மன் சோசலிச-ஜனநாயகக் கட்சி, உலகைக் கொள்ளையடிப்பதில் போட்டி போட்டுக்கொண்டிருந்த ஏகாதிபத்திய நாடுகளிலொன்றாக ஜெர்மனியும் இருக்கும் வகையில் அந்த நாட்டு அரசு, முதல் உலகப் போரில் பங்கேற்பதை ஆதரித்து வாக்களித்தது.
இந்தப் பேரதிர்ச்சி தரும் செய்தி போலியானது என்று லெனின் முதலில் கருதினார். ஏனெனில் ஜெர்மன் சோசலிச ஜனநாயகக் கட்சி மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்திலிருந்தே உலகிலிருந்த சோசலிசக் கட்சிகளில் மிகப் பெரியதாக மட்டுமின்றி, அவற்றை வழிநடத்தக்கூடியதாகவும் இருந்ததுதான். மேலும், அக்கட்சித் தலைவர்கள், சர்வதேச மாநாடுகளில் போருக்கு எதிரான தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்து வந்ததுடன், போர் வெடிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்குத் தங்களால் இயன்றதனைத்தையும் செய்யப் போவதாக சூளுரைக்கவும் செய்தனர்.
எனவே, அவர்கள் இழைத்த துரோகம் (அவர்களைப் பின்பற்றிப் பெரும்பாலான ஐரோப்பிய சோசலிசக் கட்சிகளும் இத்தகைய துரோகத்தைச் செய்தன) முக்கியத்துவம் வாய்ந்த சில கேள்விகளை எழச் செய்தது. மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் புரட்சிகரச் சிந்தனைகளை விசுவாசத்துடன் பின்பற்றியவர்களாகத் தோன்றிய ஜெர்மன் சோசலிஸ்டுகள் தங்கள் சொந்த நாட்டு அரசே ஏகாதிபத்தியப் போரில் பங்கேற்பதை ஆதரித்து வாக்களித்தது ஏன்? தங்கள் அரசை எதிர்த்து நிற்பதற்குப் பதிலாக அதனுடன் தன்னை இணைத்துக் கொள்வது ஏன்? அப்படியானால் அது ‘அரசு’ என்பது பற்றிய அவர்களது புரிதலில் மிகப் பெரும் குறைபாடு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறதா?
‘அரசு’ என்ற பிரச்சினை மீது தங்கள் கவனத்தைக் குவித்த போர் – எதிர்ப்பு சோசலிஸ்டுகள், இன்றுவரை தொடர்ந்து மேலோங்கியுள்ள ஒரு கருத்தை எதிர்கொண்டனர். அதாவது, ‘அரசு’ என்பது சாராம்சத்தில் ஒரு ‘நடுநிலையான’ அமைப்பு; அதன் குறிக்கோள் தனது குடிமக்களின் ‘பொது நன்மையை’ அல்லது ‘பொது நலனை’ பாதுகாப்பதாகும். அதாவது “நாம் எல்லோரும் அதற்குள் ஒன்றிணைந்துள்ளோம்”.
இதே கருத்து சீர்திருத்தவாத சாயலுடனும் வெளிப்படுகிறது. அதாவது பொருத்தமான சீர்திருத்தங்கள் செய்யப்படுமானால், இந்த நடுநிலை அரசு, ஏதொவொரு காரணத்தினால் திசைதவறிப் போனதை சரிசெய்துகொண்டு மீண்டும் பாரபட்சமின்றி பொது நன்மைக்கு சேவை செய்யும்.
1916ஆம் ஆண்டு பிற்பகுதியில் லெனின், இந்தப் பிரச்சினையின் மீது தன் கவனத்தைக் குவித்து, 1917ஆம் ஆண்டு கோடை காலத்தில் தன் படைப்புகளின் சிகரமெனக் கருதப்படக்கூடிய ‘அரசும் புரட்சியும்’ என்ற சிறு நூலை எழுதி முடித்து வெளியிட்டார். ‘அரசு’ என்பது ஒரு நடுநிலை அமைப்பா? அது பொது நன்மைக்கு சேவை புரிகிறதா என்ற கேள்விகளை அந்த சிறு நூலில் எழுப்பினார்.
மேற்சொன்ன கருத்தைத் தகர்த்தெறிவதற்காக மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் படைப்புகளிலிலுள்ள கருத்துகளை ஏராளமாக மேற்கோள் காட்டி மூன்று முக்கிய வாதங்களை முன்வைத்தார்.
முதலாவதாக, வரலாற்றுச் சான்றுகளை எடுத்துரைத்தார். வரலாற்றில் தொன்மைக்கால, அரசு இல்லாத, இன்னும் ஓரளவு பொதுவுடைமைத்தன்மை இருந்த, சுயநிர்வாகம் கொண்டிருந்த, பழங்குடிச் சமுதாயங்களிலிருந்து ‘அரசு’ என்பது முதன் முதலாகத் தோன்றியது தற்செயலானது அல்ல; அதாவது உண்மையான, அர்த்தமுள்ள ‘பொது நன்மை’ என்பது சாத்தியப்படாமல் போன போதுதான் அரசுகள் தோன்றின. ‘பொது நன்மை’ என்பது சாத்தியப்படாமல் போனதற்கான காரணம் என்னவென்றால், அப்போதுதான் சமுதாயம் ஒன்றோடொன்று இணங்கிச் செல்ல முடியாத, ஒன்றுக்கொன்று பகையுள்ள நலன்களைக் கொண்ட வர்க்கங்களாகப் பிளவுபடத் தொடங்கியிருந்தது. அதாவது செல்வத்தை உற்பத்தி செய்யும் சாதனங்களைத் தன் உடைமையில் வைத்திருக்கும் வர்க்கம், அந்த செல்வத்தை உற்பத்தி செய்யும் பொருட்டு சுரண்டப்படுவதற்கான உழைப்பைக் கொண்டிருக்கும் வர்க்கம் என்று பிளவுபட்டுக் கொண்டிருந்தது. ஆக, சமூக உறவுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக, பகைத்தன்மை கொண்டவையாக இருக்கும்போது கணிசமான ‘பொது நன்மை’, ‘பொது நலன்’ என்பது எவ்வாறு சாத்தியம்?
மேலும், இப்படி ஆழமாகப் பிளவுபட்டுள்ள சமுதாயங்கள், ஒன்றுகொன்று பகைத்தன்மையுள்ள வர்க்கங்களிடையே நடக்கக்கூடிய இடைவிடாத உள்நாட்டுப் போர்களில் மூழ்கிவிடாமல் இருப்பதற்காக, மார்க்ஸ், எங்கெல்ஸின் சொற்களில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, ”போராடும் வர்க்கங்கள் பொது அழிவில் போய் முடிவதை”த் தடுத்து நிறுத்துவதற்காக, ஒரு சிறப்பு அதிகார அமைப்பு தேவைப்பட்டது. தம்மைத்தாமே அழித்துக்கொள்ளும் சாத்தியப்பாடுள்ள வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக இந்த சிறப்பு அதிகார அமைப்பு, ‘அரசு’ தோன்றியது. இந்த அரசு ஓர் நிலையான இராணுவத்தை வைத்திருக்க வேண்டியதாயிற்று. அந்த இராணுவத்திற்கான ஆள்கள் சமுதாயத்தின் எல்லாப் பிரிவினரிடமிருந்தும் சேர்க்கப்பட்டாலும், அது சமுதாயம் முழுவதற்குமல்ல, சமுதாயத்தின் மிகச்சிறு பிரிவினருக்கு, சலுகைபெற்ற பிரிவினருக்கு மட்டுமே உண்மையாக, விசுவாசமாக இருக்கக்கூடிய இராணுவமாகும்.
வரலாற்றுவகைப்பட்ட பகுப்பாய்வு மெய்ப்பிப்பது என்னவென்றால், ‘அரசு’ என்பது ‘பொது நன்மை’க்கு சேவை புரியக்கூடியது அல்ல; ஏனெனில் ‘அரசு’ இருப்பதற்கான முன்நிபந்தனையே, குறிப்பிட்ட சமுதாயத்திலுள்ள சமூகப் பகைமைகள் தீர்க்கப்பட முடியாதவையாக இருப்பதுதான். ஆயுதமேந்திய அரசு என்பது, ஓர் அடிப்படையான பிரச்சினையின் – வர்க்கப் பிளவுகள் உள்ள ஒரு சமுதாயத்தில் ‘பொது நன்மை’, ‘பொது நலன்’ என்பது சாத்தியமில்லை என்பதற்கான புறவயமான வெளிப்பாடுதான். லெனின் முன்வைக்கும் இரண்டாவது வாதம், வர்க்க அடிப்படையிலான கருத்தாகும். அது மட்டுமே எப்போதும் அவருடன் நெருக்கமாகத் தொடர்புபடுத்தப்படுகிறது (பல சமயம் ஒரு தலைச்சார்பாக).
வரலாற்றை மேலோட்டமாகப் பார்த்தாலும்கூட நமக்குப் புலப்படுகின்ற உண்மை என்னவென்றால், அரசுகள் எப்போதுமே பொருளாதார வகையில் ஆதிக்கம் செலுத்துகின்ற வர்க்கங்களின், செல்வத்தை உற்பத்தி செய்யும் சாதனங்களை உடைமையில் வைத்திருப்பவர்களின் அரசுகள்தான். இதை நாம் மிக வெளிப்படையாக நம் வாழ்க்கையிலேயே அடிக்கடி காண்கிறோம். பொருளாதார நெருக்கடியோ, ஆதிக்க வர்க்கங்களுக்கு எதிரான போராட்டங்களோ நடக்கும்போது அரசு தனது ‘நடுநிலை’ என்பதைத் தயக்கமின்றி தூக்கியெறிந்துவிட்டு ஒடுக்கும் சக்திகளுக்கு அப்பட்டமான ஆதரவைத் தருகின்றது. உற்பத்தி சாதனங்களை உடைமையாகக் கொண்டிருக்கும் வர்க்கங்கள், பொருளியல் வகையிலும், கருத்துநிலை வகையிலும் சமுதாயத்தில் மிக உயார்ந்த இடத்தை வகிப்பதால், அரசின் இராணுவ வீரர்கள், போலீஸ். சிறைச்சாலை, நீதித்துறை, நிர்வாக இயந்திரம், நாடாளுமன்றம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பதும் அவற்றின் விசுவாசத்தைப் பெறுவதும் மிக எளிதாக உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை சாதி அமைப்பைப் பேணிப் பாதுகாப்பதும் பெரும்பான்மையினரின் மதமான இந்து மதத்தைப் பயன்படுத்துவதும் ஆளும் வர்க்கங்களுக்கு இயல்பானதாகியுள்னன.
ஆகவே, அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் மிகச் செறிவான, ஒருமுனைப்படுத்தப்பட்ட வெளிப்பாடு ஆகும். ஆளும் வர்க்கம் தன் பொது நிர்வாகத்தை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட தனிச்சிறப்பான அமைப்பே அரசு. அது நடுநிலையானது அல்ல; ஏனெனில் அது நடுநிலையானதாக இருக்க முடியாது. தெளிவாக வரையறுத்துச் சொல்வதென்றால் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான அமைப்பே அரசு. லெனின் முன்வைக்கும் மூன்றாவது வாதம், கட்டுடைப்பு தொடர்பானது. அவரது மூன்று வாதங்களில் போதிய அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படாத அம்சமான இது, அரசு என்ற அமைப்புக்கான புரட்சிகரமான மாற்று ஏற்பாடு பற்றிய அவரது கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதது. அரசு செயல்படும் விதம், அதன் தன்மை ஆகியற்றைப் புரிந்துகொண்டால், அதை அப்படியே சோசலிஸ்டுகள் எடுத்துக்கொள்ளவோ, தொழிலாளி வர்க்கம் அதைத் தன் சுய-விடுதலைக்குப் பயன்படுத்திக்கொள்ளவோ முடியாது என்று லெனின் கூறுகிறார். இது, மார்க்ஸ் ‘பிரான்ஸில் உள்நாட்டுப் போர்’ என்னும் தலைப்பில் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தில் (முதல் அகிலம்) ஆற்றிய நீண்ட உரையிலுள்ள கருத்து. இவ்வாறு லெனின் கூறுவதற்குக் காரணம் அரசு இயந்திரத்தின் கட்டமைப்புதான். அதாவது அரசின் பல்வேறு செயல்பாடுகள் அதற்குரிய ‘தனிவகை மக்கள் அமைப்புக’ளால் (‘special bodies of people’) மேற்கொள்ளப்படுபவை. இவை சமுதாயத்தின் பிற பகுதிகளிலிருந்து பிரிந்து நிற்பவையேயன்றி சமுதாயம் முழுவதாலும் நிர்வகிக்கப்படுபவை அல்ல.

எடுத்துக்காட்டாக ‘அரசியல்’ என்பதை எடுத்துக்கொள்வோம். அதைப் பற்றிய பொதுவாக நிலவும் கருத்து என்னவென்றால் அரசியல் என்பது ‘அரசியல்வாதிகள்’ என்று சொல்லப்படுபவர்களின் பிரத்யேகமான செயல்பாடு; அது சட்டப்படியாக சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள் ஆகியவற்றில் அவற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் சட்டப்படியாக நிகழ்த்தப்படும் செயல்பாடு. இந்தக் கருத்தின்படி பார்த்தால் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்கான மாபெரும் மக்கள் இயக்கங்கள், பெண் விடுதலை இயக்கங்கள், சாதி ஒழிப்பு இயக்கங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள், சமூக நீதிக்கான இயக்கங்கள் போன்றவை எதுவுமே ‘அரசியல்’ என்பதற்குள் வராது. போனால் போகட்டும் என்பதுபோல சில இயக்கங்கள் ‘நிர்பந்தக் குழுக்கள்’ என்ற அளவுக்கு அங்கீகரிக்கப்படலாம்; ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு எதிரான இயக்கங்கள் சட்ட ரீதியானவை அல்ல என்றோ, சட்ட விரோதமானவை என்றோ அறிவிக்கப்படும். சட்டமன்றங்களுக்கு அல்லது நாடாளுமன்றங்களுக்கு வெளியே, அவற்றுக்கு அப்பால் ‘அரசியல்’ என்பது ஏதும் இருக்க முடியாது என்பதுதான் இக்கருத்துகளின் சாரம்.
இங்கு லெனின் அரசின் நடவடிக்கைகள் மீது கவனம் குவிக்கிறார். குறிப்பாக, சமுதாயத்தின் பாதுகாப்பை ‘ஆயுதமேந்திய மனிதர்ளைக் கொண்ட தனிச்சிறப்பான அமைப்பு’, இராணுவம் என்ற அமைப்பு மேற்கொள்கிறது (இதைவிடச் சிறு எண்ணிக்கையுள்ளவர்களைக் கொண்ட இன்னொரு தனிவகை மனிதர்களைக் கொண்ட அமைப்பால், அதாவது தளபதிகளால் அந்த இராணுவம் வழிநடத்தப்படுகிறது.) பாதுகாப்பு என்பது ஒரு காலத்தில் இருந்ததுபோல சமுதாயம் முழுவதன் செயல்பாடாக இருந்த நிலை மாறி, தற்போது மக்களிடமிருந்து அந்நியமான அரசின் செயல்பாடாகிவிட்டது. இவ்வாறு இராணுவம், ஆளும் வர்க்கங்களின் கைகளில் தனிச்சிறப்பான ஆயுதமாக சேவை புரிந்து, எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கு உழைக்கும் வர்க்கத்துக்கு எதிராக அனுப்பப்படும். அதனால்தான், ஒவ்வொரு புரட்சிகர சூழ்நிலையிலும் பின்வரும் கேள்விக்கு உடனடியாக பதில் கண்டறிய வேண்டியுள்ளது. அதாவது இராணுவத்தை அரசிலிருந்து முறித்துக் கொண்டு அதனுடைய விசுவாசத்தை சமுதாயத்திற்கு, மக்களுக்குத் திருப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்? உலகம் முழுவதிலும் ஆளும் வர்க்கங்களைப் பொருத்தவரை, இராணுவம் தனது தனிச்சிறப்பான தகுதியைக் கைவிட்டு கிளர்ச்சி செய்யும் மக்களுடன் சகோதரத்துவ உணர்வைக் கொள்வதைவிட பீதியூட்டக் கூடியது ஏதும் இல்லை.
அரசு செயல்படும் விதம், தனக்கு மட்டுமே உரிய தனிவகை அமைப்புகளைக் கொண்டிருத்தல் ஆகியன சில முக்கியக் கேள்விகளை எழுப்புகின்றன: ஓர் அரசால், அதை வழக்கமாக நாம் புரிந்துகொண்ட அளவில், உழைக்கும் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா? தொழிலாளர்கள் ஒரு புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வார்களேயானால், அரசின் தனி வகைப்பட்ட செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் அமைப்புகளால் அதிகாரம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருமேயானால், தொழிலாளர்களால் உண்மையிலேயே அதிகாரத்தைச் செலுத்த முடியுமா?
அரசுக்கும் தொழிலாளர் ஜனநாயகத்துக்குமுள்ள இந்த ஒத்துவராத தன்மையை – இதுதான் அடிப்படையான பிரச்சினை – முன்னிலைப்படுத்திக் காட்டுவதன் மூலம், இதற்கு ஒரு தீர்மானகரமான, தடுத்துநிறுத்த முடியாத ஓர் அரசியல் தீர்வு என்ன என்பதை லெனின் விளக்குகிறார். அதாவது தொழிலாளர்கள் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் அரசை ஒழித்துக் கட்ட வேண்டும் அல்லது அடித்து நொறுக்க வேண்டும்.
இது பிரமிப்புத் தரக்கூடிய தீர்வாக இருக்கலாம். விட்டுக்கொடுக்காத ஜனநாயகத்தன்மை கொண்டதாக இருப்பதால்தான் இது பிரமிப்பூட்டுகிறது. ஏனெனில் ‘அரசு’ என்ற பெயரல் ஒட்டுமொத்தமாக அழைக்கப்படும் தனிவகை அமைப்புகளால், முன்பு சமுதாயம் முழுவதாலும் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளை ஒரு சிலர் மட்டும் தமது பிரத்யேக செயல்பாடுகளாக மாற்றுவதற்கு முன்பு இருந்த நிலைமையை – தனிவகை அமைப்புகள் மேற்கொண்டுவரும் செயல்பாடுகளை சமுதாயம் முழுவதும் மேற்கொள்ளும் நிலைமையை – மீளக் கொணருவதுதான் இந்தத் தீர்வு.
அந்த அரசுக்கு மாற்றாக அமையப்போவது எது என்பதை லெனின் சிந்தித்து வந்தார்.
ரஷியாவில் 1917 பிப்ரவரியில் ஜார் ஆட்சி தூக்கியெறியப்பட்டது. அரசு அதிகாரத்தை மேற்கொண்ட தாற்காலிக அரசாங்கம், தனது நோக்கம் ரஷியாவின் எதேச்சதிகார அரசாங்க முறையை அகற்றிவிட்டு மேற்கு நாட்டு தாராளவாத ஜனநாயகத்தைக் கொண்டுவருவதுதான் என்று அறிவித்தது.
அதேவேளை, ரஷியாவின் தொழில் நகரங்களில் தொழிலாளர்கள் வசித்த பகுதிகளில் ‘சோவியத்துகள்’ என்ற வடிவத்தில் வேறு வகையான அரசியல் அதிகாரம் தோன்றிக்கொண்டிருந்தது. அதாவது, தொழிலாளர்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றங்களே அந்த சோவியத்துகள். அவை தொழிற்சாலைகளையும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தம் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்தன. அவை எந்த விகிதத்தில் தொழிலாளர்கள் கட்டுப்பாட்டில் வந்தனவோ, அதே விகிதத்தில் தாற்காலிக அரசங்கத்தின் அதிகாரம் சுருங்கி வரலாயிற்று.
ஜார் அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த லெனின் ரஷியாவுக்கு திரும்பி வருவதற்குச் சற்று முன்னதாக போல்ஷ்விக்குகளில் மிகப் பெரும்பான்மையினர் மிதவாத நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர்; கட்சியின் கொள்கைகளை நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் தாற்காலிக அரசாங்கத்தை அகற்றுவதற்கான அறைகூவல் விடுக்க மறுத்து வந்தனர். மாறாக அந்தத் தாற்காலிக அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவு அளித்து வந்தனர். அவர்கள் தொழிலாளர் கவுன்சில்களை (சோவியத்துகளை) மக்கள் ஆதரவு பெற புதிய வகையான, சுய ஆட்சியுள்ள அரசாங்கமாகப் பார்க்கவில்லை. மாறாக, தாற்காலிக அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது உத்தரவாதம் அளித்தபடி தாராளவாத ஜனநாயகப் பாதையிலிருந்து வழுவாமல் இருப்பதைக் கவனித்துக்கொள்ளும் அமைப்புகளாகவே அவற்றைப் பார்த்தனர்.
1917 ஏப்ரல் மாதம் லெனின், ரஷியாவுக்குத் திரும்பிவந்தது தீர்மானகரமான நிகழ்வாக இருந்தது. முதலாளிய சக்திகளுக்கு இடம் கொடுக்கும் தாராளவாதப் போக்கைக் கொண்டிருந்த தாற்காலிக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நிராகரித்த அவர், அரசை சமரசமற்ற வகையில் எதிர்த்து நிற்குமாறும், நாளடைவில் சோவியத்துகள் அந்த தாராளவாத அரசிலிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுமாறும் அறைகூவல் விடுத்தார். அந்தக் கோரிக்கை “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே” என்ற முழக்கமாக வெளிப்பட்டது.
சாராம்சத்தில் லெனினின் அறைகூவல், தாராளவாத பூர்ஷ்வா புரட்சியை சோசலிசப் புரட்சியாக மாற்றுவதும், சமுதாயத்திடமிருந்து முதன்முதலில் அபகரிப்பட்ட அதிகாரத்தையும் செயல்பாடுகளையும் சோவியத்துகள் மீண்டும் தன்வயமாக்கிக் கொள்வதும்தான். தனக்கான ஆதரவைக் குறிப்பாக போல்ஷ்விக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட லெனின் கட்சி முழுவதையும் தனது நிலைப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். அதாவது புரட்சியை அதனுடைய பூர்ஷ்வா வரம்புகளிலிருந்து மீட்டு பாட்டாளி வர்க்கத்தின் நவம்பர் புரட்சியாக வளர்த்தெடுத்தெடுப்பதில் அவரது நிலைப்பாடு முக்கியப் பாத்திரம் வகித்தது.
இந்த அனுபவத்தைத்தான், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் படைப்புகளை முழுமையாகப் படித்தறிந்த லெனின், ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலில் புரட்சிகர எழுத்துகளாக வடித்தெடுத்தார். இந்த நூலின் முக்கியச் செய்தி என்னவென்றால், ‘அரசு’ம் ‘புரட்சி’யும் ஒன்றோடொன்று நெருக்கமான உறவுடைய எதிர்மறைகள் என்பதாகும். அதாவது, ‘அரசு’ என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமல் ‘புரட்சி’ என்பதைப் புரிந்துகொள்ளவோ அந்தப் புரிதலின் அடிப்படையில் செயல்படுவதோ இயலாது.
இந்தக் கருத்து 1914இல் ஜெர்மன் சோசலிச ஜனநாயகவாதிகள் இழைத்த படுகேவலமான துரோகத்தை நினைத்துப் பார்க்க வைக்கிறது. அவர்களுடைய வரலாறு, அரசும் புரட்சியும் பற்றி லெனின் கொண்டிருந்த கருத்துகளுக்குத் தலைகீழானது; எந்த அளவுக்கு அவர்கள் ஜெர்மன் அரசுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் புரட்சிகரக் கோட்பாடுகளைக் கைவிட்டனர். 1917 ஏப்ரலில் லெனின் கட்சி விவகாரத்தில் மேற்கொண்ட தலையீடு, போல்ஷ்விக்குகளிடையேயும் வளரத் தொடங்கியிருந்த, ஜெர்மன் சோசலிஸ்டுகள் மேற்கொண்டதைப் போன்ற, அடிப்படையில் சீர்திருத்தவாதத் தன்மை கொண்டிருந்த போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
நீண்டகாலப் பார்வையில், புரட்சிக்குப் பிந்திய நோக்குநிலையிலிருந்து பார்த்தால், தொழிலாளர்களின் புரட்சியிலிருந்து தோன்றுகின்ற மக்களாதரவு பெற்ற அரசாங்கம் என்று லெனின் கருதியது ‘அரசு’ என்பதற்கு வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளில் ‘அரசு’ அல்ல. அரசுக்கு முன்பு இருந்த அதிகாரமும் செயல்பாடுகளும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களின் சோவியத்துகளின் கைகளுக்கு வந்த பிறகு அது எப்படி ‘அரசாக’ இருக்க முடியும்? எனினும், லெனின் அந்தப் புரட்சிகர சுய ஆட்சி அரசாங்கத்தை மாறுதலுக்கான இடைநிலைக் கட்ட அரசாங்கம் என்ற வகையில் ‘அரை-அரசு’ (semi-state), ‘அரசியல்சாராத அரசு’ (non-political state) அல்லது இன்னும் தெளிவாக ‘பாட்டாளி வர்க்க அரசு’ என்று அழைத்தார். இப்படி மாறுதல் கால இடைநிலைக் கட்ட அதிகார அமைப்பை அவர் மேற்சொன்னவாறு கருதியது இரு நடைமுறைக் காரணங்களினால் முக்கியத்துவம் பெற்றது.
தொழிலாளர் சோவியத்துகள் போன்ற வெகுமக்களின் ஜனநாயக அமைப்புகள் உடனடியாக அரசின் செயல்பாடுகளை (முன்பு சமுதாயத்திலிருந்து அபகரிக்கப்பட்ட செயல்பாடுகளை) மீண்டும் தன்வயமாக்கிக் கொள்வதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தபோதிலும், உழைக்கும் மக்களின் சுய அரசாங்கத்தின் அனுபவத்திலிருந்து தொழிலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்றும், அதிலிருந்து அவர்கள் பயிற்சி பெற வேண்டும் என்றும் கருதினார். எனவே, ஒழிக்கப்பட்ட வர்க்க சமுதாயதின் பின்விளைவுகளை எதிர்த்து முறியடிக்கவும் அவற்றைச் செயலிழக்க வைக்கவும் தொழிலாளர்கள் புதிய அனுபவங்களைக் கையாளப் புதிய ஆற்றல்களைப் பெறுவதற்கும் அவர்களுக்குக் கால அவகாசம் (அதாவது மாறுதல் காலகட்டம்) தேவை என்பதை ஆழமாக உணர்ந்திருந்தார். இந்தப் புரட்சிகர நிகழ்ப்போக்கின் ஊடாக, சமுதாயம் தன்னிடமிருந்து முன்பு அபகரிக்கப்பட்ட செயல்பாடுகளை அது மீண்டும் தன்வயமாக்கிக் கொள்கையில், அரசோ ஏதுமற்றதாவிடும். அது ‘வாடி உதிர்ந்துவிடும்’ என்று கருதினார் (இந்தக் கருத்தை அவர் எங்கெல்ஸின் படைப்புகளிருந்து கற்றுக்கொண்டார்).
மாறுதல் காலகட்டம் என்று அவர் பேசிவந்தது சரியானதே என்பதற்கு இன்னொரு முக்கியமான, அச்சுறுத்துகிற காரணமும் இருந்தது. வீழ்த்தப்பட்ட ஒடுக்குமுறையாளர்கள் காயமடைந்த கொடிய விலங்கைப்போல மிக அபாயகரமானவர்கள் என்பதற்கு வரலாறு ஏராளமான சான்றுகளைத் தருகிறது. அதை ரஷியப் புரட்சி மீண்டும் மெய்ப்பித்தது. ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குகின்ற கருவி என்ற வகையில் அரசின் முக்கியச் செயல்பாடு இன்னும் தேவைப்படுகிறது என்றும் ஆனால், இப்போதுள்ள வேறுபாடு என்னவென்றால், தற்போது எதிர்ப்புரட்சியை ஒடுக்குவதற்காக பாட்டாளி வர்க்கம் பூர்ஷ்வா வர்க்கத்தை தோற்கடிக்க வேண்டியுள்ளது என்பதுதான் என்பதை லெனின் சுட்டிக்காட்டினார். பூர்ஷ்வா வர்க்கத்தின் தோல்வி அரசு மறைவதற்கான கட்டியம் கூறும்.
‘அரசும் புரட்சி’யும் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்திற்கு, உழைக்கும் மக்களுக்கு மிக அவசியமாகத் தேவைப்படுகின்ற நூல். ஜெர்மன் சோசலிச ஜனநாயகவாதிகளின் துரோகம், ரஷியப் புரட்சியின் எதிர்காலப் பயணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட நூல் என்றாலும், நீடித்து நிற்கும் அதன் முக்கியத்துவத்திற்கு என்ன காரணம்? தொழிலாளர் சோவியத்துகளின் உலக – வரலாற்று முக்கியத்துவம் பற்றிய லெனின் புரிதலும், இந்த தொழிலாளர் அமைப்புகள்தான் புதிய, அரசு இல்லாத, சுய ஆட்சியுள்ள சமுதாயத்தை நிர்மாணிக்கும் வலுவான கற்கள் என்பதில் அவருக்கிருந்த அபார நம்பிக்கையும்தான். இவை மேற்சொன்ன வரலாற்றுப் பின்புலங்களைக் கடந்து நிற்பவை. அவரது புரிதலும் நம்பிக்கையும் இன்னும் பொருத்தப்பாடுடையதா என்ற கேள்விக்கான விடையைக் கண்டறிய உலகில் இன்றுள்ள அரசுகளின் செயல்பாடுகளை (கியூபாவிற்கு மட்டும் ஓரளவு விதிவிலக்கு தரலாம்) கவனித்து வந்தாலே போதும். இன்று இந்தியாவில் ஆட்சி செலுத்தும் பாசிசத்தை நாம் கடுமையாக விமர்சிக்கிறோம், எதிர்க்கிறோம். அது வீழ்த்தப்பட்டால்தான் ஓரளவு ஜனநாயக உரிமைகள் மீளக் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆனால் இந்திய அரசின் கட்டமைப்பிலேயே பாசிசத்திற்கான வேர்கள் உள்ளன என்பதையும், நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் நடத்தும் போராட்டத்தை பகைவன் விதித்துள்ள விதிகளின்படியேதான், ஒரு பகைக் களத்தில்தான் நடத்தவேண்டியுள்ளது என்பதையும் புரிந்து கொள்வது அவசியம். நாடாளுமன்ற அரசியலில் பங்கேற்பது கம்யூனிஸ்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய தந்திர உத்திகளில் ஒன்று. ஆனால் அது ஒன்று மட்டுமே ஒரே உத்தியாகிவிட முடியாது.
‘அரசும் புரட்சியும்’ நூலை மேலோட்டமாகவோ அல்லது தற்சாய்வுடனோ படிப்பவர்கள் லெனின் வன்முறையை வழிபட்டவர் அல்லது விரும்பியவர் என்று கூறுகின்றனர். பத்து நாள்களில் நடந்து முடிந்த நவம்பர் புரட்சி இரத்தம் சிந்தாத புரட்சி. அதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். பதினான்கு முதலாளிய, ஏகாதிபத்திய நாடுகள் புரட்சி என்ற குழந்தையை அதன் தொட்டிலிலேயே கழுத்தை நெரித்துக் கொன்றுவிட தங்கள் இராணுவங்களை அனுப்பி ரஷிய எதிர்ப்புரட்சி சக்திகளுக்குத் துணை நின்றதால் ஏற்பட்டதுதான் நான்காண்டுக் காலம் நடந்த உள்நாட்டுப் போர். அதில் இரு தரப்பிலும் இலட்சக்கணக்கானோர் மாண்டனர். இறுதியில் புரட்சியாளர்கள் வெற்றியடைந்தபோதிலும், உள்நாட்டுப் போரின்போது தவிர்க்க முடியமல் கடைப்பிடிக்க நேர்ந்த சில பொருளாதாரக் கொள்கைகளும் போர் முடிந்த பிறகு நாடெங்கிலும் பரவிய பஞ்சமும் பட்டினியும் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க லெனின் நடைமுறைப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கையும், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் முற்றிலுமாக அழிந்துபோன பின் பழைய அதிகாரவர்க்கத்தின் உதவியை நாட வேண்டியிருந்ததும் புரட்சியின் இலட்சியங்கள் உடனடியாக நிறைவேற முடியாமல் செய்துவிட்டன. இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் லெனினை ‘வன்முறையை வழிபட்டவர்’ என்று மார்க்ஸியத்தின் பகைவர்களும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்துகளிலிருந்து விலகிச் சென்றவர் என்று மார்க்ஸிய முகாமிலுள்ள சில கல்விப்புலம்சார் அறிவாளிகள் பேசுவதும் எழுதுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையா ?
