‘புத்தக வாசிப்பு ஓர் அரசியல் செயல்பாடு’ என்றார் சேகுவாரா. உலகப் புத்தக தினம் அத்தகைய அரசியல் எழுச்சிக்கு வழிகோலட்டும். ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று சர்வதேசப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் ஐ.நா. சபையின் வழிகாட்டுதலுக்கு இணங்க உலகப் புத்தக தினம் அனுசரிக்கப்படுவது நாம் அறிந்ததே. இந்தியாவின் தமிழ்நாட்டில் அத்தகைய ஓர் எழுச்சிநாளை ‘புதிய புத்தகம் பேசுது’ இதழ் பாரதி புத்தகாலயத்தின் சார்பாகப் புத்தக மாரத்தான் ஓட்டம், புத்தகப் பகிர்வுக் கூட்டம் மாநாடு என்று மெரினா கடற்கரையில் அறிமுகம் செய்து பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாக நடத்துகிறது. புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பு நாளாக சிறார் நூல்களை வாசித்து மாணவர்களை நூல்- அறிமுக ஒலி – ஒளிப் பதிவுகளை அனுப்புதல், புத்தக விமர்சனம் எழுதுதல், தான் வாசித்த புத்தகத்தோடு செல்ஃபி எடுத்து அனுப்புதல் என்று பல்வேறு வாசிப்பு ஊக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
சர்வதேசப் புத்தகத் திருவிழாக்களை ஊக்குவிக்கும் உலகப் புத்தக தின யுனெஸ்கோ செயல்பாட்டுக் குழுமம் 2022, 2023 பத்தாண்டுகள் அவரவர் பிராந்திய மொழி வாசிப்பிற்கான பத்தாண்டுகள் என அறிவித்தது. உலகில் தற்போது பயன்பாட்டில் உள்ள 7000 மொழிகளிலும் வாசிப்பு குறித்த விழி்ப்புணர்வை ஏற்படுத்திட ஐ.நா.சபை அறைகூவல் விடுத்தது. உலகப் புத்தக தினத் தலைநகரக் குழுமம் ‘புத்தகம்’ என்பதற்கான விவரிப்பில், இணைய வெளியீடுகள், ஒலிப்புத்தகம் என அதன் அனைத்து வகைப்பாடுகளை இணைக்கவும் உலகப் பதிப்பாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. புத்தக வாசிப்பைக் கலாச்சாரத்தின் அங்கமாக்கிட பலவகையான நிகழ்வுகளை நாம் ஆண்டுதோறும் நடத்தவேண்டியிருக்கிறது.
புத்தக வாசிப்பு என்ன செய்யும் என்பதை நாம் சரியாகப் புரியவைத்தால் அந்தச் சமூக விழிப்புணர்வு பெற்றோர்கள் ஆசிரியர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட அடுத்த சந்ததியை வாசிப்பை நோக்கி எடுத்துச் செல்ல ஊக்கப்படுத்தும், புத்தக வாசிப்பு குழந்தைகளின் கற்பனைத்திறனை அதிகரித்துப் படைப்பாளிகளாக மாற்றுகிறது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வாசிப்பு அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாறும்போது குழந்தைகளின் கவனச் சிதறல் குறைந்து ஒருமுகப்படுத்தல் இயல்யூக்கம் பெறுகிறது. சமூக அக்கறை, தலைமைப் பண்பு, பிறர் வலி அறிந்து செயல்படுதல் எனப் பல வகை நற்பண்புகளைப் புத்தக வாசிப்பு மட்டுமே தர முடியும். புத்தக வாசிப்பாளர்களின் நட்பு வட்டம் ஆழமானது. மனித- மேலாண்மை ஓர் இயல்பாகவே கட்டமைப்புப் பெறுவதால், இன்றைய புத்தக வாசிப்பாளர் நாளைய தலைவர் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
எத்தனையோ வகை சமூக மாற்றங்களைப் புரட்சி விதைகளைப் புத்தகங்கள் சாதித்து உள்ளன. வால்டேரின் புத்தகங்கள் பிரெஞ்சுப் புரட்சியைச் சாதித்தது முதல் டார்வினின் உயிரிகளின் தோற்றம் நூல் உலக அறிவியல் சிந்தனைப் போக்கையே மாற்றியது வரை பல முன் உதாரணங்களை அடுக்கலாம். ஹென்றி டேவிட் தோரோவின் “சிவில் ஒத்துழையாமை” என்ற ஒரு நூல் காந்தியை மகாத்மா ஆக்கியது. எல்.லோனி எழுதிய “பிளெயின் திரிகோண மதி” எனும் ஒரு புத்தகம் சீனிவாச ராமானுஜனைக் கணிதமேதை ஆக்கியது. இப்படிப் பல உதாரணங்களை வரலாறு நமக்கு வழங்குகிறது. லண்டன் சர்வதேச நூலகத்தின் பெரும்பான்மை நூல்களை வாசித்தோர் காரல் மார்க்ஸ் முதல் அண்ணல் அம்பேத்கர் வரை மாமனிதர்களான சிறப்பு தனி. சென்னை கன்னிமரா நூலகத்தின் காலநேரம் பார்க்காத தீவிர வாசகராகப் பேரறிஞர் அண்ணா பெயர் பெற்றதும் வரலாறு. புத்தக வாசிப்பை நம் தமிழ்ச் சமூகத்தில் விதைத்து வளர்த்திடச் சூளுரைப்போம்.
உலகப் புத்தக தினத்தில் புத்தெழுச்சி கொள்வோம். இந்தக் கோடை விடுமுறையை அர்த்தமுள்ளதாக்கிட குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை புத்தகங்களை வாங்கிப் பரிசளித்து வாசிப்பை ஊக்கப்படுத்துவோம்.
