புவனா சந்திரசேகரன்
சாதாரணமாக வன்முறைகள் அதிகம் இருக்கும் கதைகளை நான் விரும்புவதில்லை. ஆனால், இந்தக் கதையை வாசிக்கும்போது, வன்முறைகளை மீறிக் கதை என்னைத் தன்னுள்ளே இழுத்துப் போட்டுக்கொண்டது. வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து படித்து முடிக்கும் வரை என்னால் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை. நேற்று இரவு வாசித்து முடித்தேன். இன்னமும் என் மனதில் கதாபாத்திரங்கள் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்றுகொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நான் வாசித்த கதைகளில் என் மனதில் இவ்வளவு பாதிப்பை வேறு எந்தக் கதையும் உருவாக்கவில்லை. ஆசிரியரின் எழுத்து வன்மை அவ்வளவு தூரம் ஆழமாகத் தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. தூத்துக்குடித் துறைமுகத்தில் 1980களில் நடக்கும் கதையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. உப்பு மனிதர்களின் பகையும் கதையும் என்று தலைப்பிலேயே கொடுத்து தூத்துக்குடியையும், அதன் துறைமுகத்தையும் கதைக்களனாகக் காட்டி மனதளவில் நம்மைத் தயார் செய்கிறார் ஆசிரியர்.
கதை நடக்கும் காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் வகையில் முதலமைச்சராக எம். ஜி. ஆர். ஆட்சி, மதுவிலக்கு பற்றிய தகவல், தியேட்டரில் ஓடும் ‘உயிருள்ள வரை உஷா’ திரைப்படம் என்று அன்றைய தகவல்கள் அழகாகக் கதையில் புகுத்தப்பட்டுள்ளன. பெரிய பர்லாந்து, சின்ன பர்லாந்து இருவரும் தூத்துக்குடித் துறைமுகத்தின் முடிசூடா மன்னர்கள். ஒரே தந்தை என்றாலும் வேறு வேறு தாய் வயிற்றில் பிறந்த மக்கள் என்பதால் அதிகாரம், பண வெறி, செல்வாக்கு என்று எல்லாவற்றிலும் போட்டி. கடற்பரப்பைத் தான் மட்டுமே தனியாக ஆளத் துடிக்கும் வெறி. சொத்து பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த வீடுகளில் வசித்தாலும் இருவருக்கும் இடையே மனக்கசப்பின் காரணமாக மிகப்பெரிய சுவர் நிற்கிறது. கன்னியாஸ்திரியாகிவிட்ட ஸ்டெல்லா சிஸ்டர், சின்ன பர்லாந்தின் தாயின் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பாக இருந்தாலும் பெரிய பர்லாந்து மீது அன்பும், பாசமும் வைத்திருக்கிறார். அவரையும் தன் அண்ணனாகவே கருதி, தன் இரண்டு சகோதரர்களையும் இணைக்க முயற்சி செய்கிறார். இரண்டு வீடுகளுக்கும் உரிமையுடன் அடிக்கடிவந்து போகும் அவருடைய நடவடிக்கைகளால் பயனில்லாமல் போகிறது. பர்லாந்து சகோதரர்கள் இருவரும் இரண்டு வேட்டைக்காரர்கள். இவர்களுடைய வேட்டை நாய்களாகச் சமுத்திரம், கொடிமரம் என்று இருவர். இந்த நால்வரைச் சுற்றியே கதை நகர்கிறது. பகையுணர்ச்சியுடன் வளைய வரும் வேட்டை நாய்கள் இரண்டும் ஒன்றையொன்று தாக்கிக் குதறித் தள்ளத் துடிக்கின்றன.
ஒவ்வொரு காட்சியிலும் சிந்தும் இரத்தம், பழி வாங்குதல், கொலை முயற்சிகள், கடத்தல் என்று மிகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது கதை. தொடராக வந்ததால், வாசகர்களுக்கு ஒவ்வோர் அத்தியாயம் முடியும்போதும், எவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று என்னால் கணிக்க முடிகிறது.பர்லாந்து சகோதரர்களின் பாதுகாப்பிற்கான அடியாட்கள் குழுக்கள் தலைவர்களாகச் சமுத்திரம், கொடிமரம் இரண்டு பேரும் நிற்கிறார்கள். சமுத்திரம், ரோசம்மாவிற்கு நடுவிலான காதல், அந்த உறவினால் ரோசம்மாவின் குடும்பத்தில் ஏற்படும் சலசலப்பு, முரண்பாடுகள் கதையில் வரும் கிளைக் கதை. ரோசம்மாவின் கையாலாகாத கணவன் மரியதாஸ் மனதுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறான். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வதற்கேற்ப, அவனுடைய மனதில் தளதளவென்று கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலை ஒருநாள் வெடித்துச் சிதறும்போது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ரோசம்மாவின் பக்கம் இருக்கும் நியாயம், குடும்பப் பொறுப்பை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஓடி மறைந்து தவிக்கவிட்ட கணவனின் நடவடிக்கைகளைச் சார்ந்து அமைகிறது. ரோசம்மாவின் மகன் ஜான், குடும்பத்தை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் சமுத்திரத்தையே தந்தையாக எண்ணி மதிப்பும், அன்பும் காட்டுகிறான். ரோசம்மாவின் மகள் பனிமலர் சமுத்திரத்தை வெறுக்கிறாள். தன்னுடைய பயலாஜிகல் தந்தையான மரியதாஸ் மீதுதான் அவளுக்குப் பாசம். ஆனால், பனிமலருமே ஒரு கட்டத்தில் சமுத்திரத்தின் மீது அன்பு செலுத்த ஆரம்பிக்கிறாள். அதற்கேற்ப கதாசிரியர் கதையில் நிகழ்ச்சிகளைச் சேர்த்து நியாயம் கற்பிக்கிறார்.
கிளாரினெட் வாசிக்கும் இசைக் கலைஞனான மரியதாஸ் வாசிக்கும் கிளாரினெட் இசை, கதையினூடே பயணித்து நமது செவிகளையும் நிச்சயமாக நிரப்புகிறது. பைத்தியக்காரனைப் போல நடந்துகொள்ளும் இவனுடைய செயல்கள் கதையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. சமுத்திரத்தின் மீது அவர் கொண்டுள்ள வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக, பலூனில் சேர்த்து வைக்கப்பட்ட காற்றாக ஒரு நாள் பலூனையே வெடிக்க வைத்துச் சீற்றத்துடன் வெளிவருகிறது. பர்லாந்து சகோதரர்களுடன் துறைமுகத்தில் அதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கும் மூன்றாவது தலைவராகக் காசி அண்ணாச்சி. மூன்று பேருக்கும் நடுவில் போராட்டம், சதி வேலைகள் ஒவ்வோர் அத்தியாயத்திலும் எட்டிப் பார்க்கின்றன.
காசி அண்ணாச்சியின் இரண்டாம் மனைவியாக வரும் பத்மாவின் கதை பரிதாபம். காசி அண்ணாச்சியின் மகளின் பள்ளித் தோழியான பத்மாவின் வாழ்க்கையில் அவர் விளையாடும் விளையாட்டால் அவரையே மணந்துகொண்டு அவருடன் வாழ்கிறாள் அந்தப் பெண். இளம் பெண்ணான அவளுடைய மனக்குமுறல் வெடித்து ஒருநாள் வெளிவரலாம். இரண்டாம் பாகத்தில் பத்மாவின் கதை தொடருமென்று நினைக்கிறேன். காசி அண்ணாச்சியைப் பிடிக்கவில்லை என்றாலும் இரண்டு சகோதரர்களும் பொறுத்துக்கொண்டு போவதன் காரணம் அவருடைய ஜாதி மக்கள் துறைமுகத்தில் அதிக அளவில் வேலை பார்ப்பதால் மட்டுமே. அவரைப் பகைத்துக் கொண்டால் துறைமுகத் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது என்கிற பயத்தால் மட்டுமே. இந்த மூன்று சக்திகளும் ஒன்றாக, தூத்துக்குடி கடற்கரையில் ஒன்றாக நின்றாலும் எல்லாமே ஆதாயத்தை எதிர்பார்த்துத்தான் என்பதைக் கதையின் போக்கில் நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், உள்ளுக்குள் மூன்று பேருமே மற்ற இருவரையும் அடியோடு ஒழித்துவிட்டுத் தாங்கள் மட்டுமே கடலின் அரசராகத் திகழவேண்டும் என்கிற ஆசையோடுதான் நடமாடுகிறார்கள்.
துறைமுகத் தேர்தல் வரும்போது காசி அண்ணாச்சி தன்னுடைய பாதுகாப்புக்காகக் கூட்டி வரும் வஸ்தாவி மாஸ்டர், சமுத்திரத்தைக் கண்டு பொங்கி எழுகிறார். அவருக்கும் சமுத்திரத்திற்கும் நடுவில் தீர்க்கப்படாத பழைய கணக்கு ஒன்று இருப்பதாகக் கூறி, அவனைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறார். அவருடைய தம்பி மகள் காளீஸ்வரியின் சாவு நிகழ்ந்ததென்னவோ இவர்கள் இருவருக்கும் நடுவில் உருவான பகையால் என்பதால் இருவராலும் அவளுடைய சாவை மறக்க முடியவில்லை. அதற்குக் காரணமான எதிராளியை மன்னிக்கவும் முடியவில்லை. அதுவும் சமுத்திரத்தின் முன்னாள் காதலி அந்தப் பெண் என்பதால் அவனும் தவிக்கிறான். புலி வேஷம் கட்டி ஆடுவதைப் பற்றிய தகவல்கள் இந்தப் பழைய கதையின் ஊடே சொல்லப்படுகின்றன. புலிக்கு வைக்கப்படும் வாலின் எண்ணிக்கையில்கூட அர்த்தம் இருந்தது புதுமையாக இருந்தது எனக்கு.

பம்பாய் ஹார்பரில் இருந்து தங்களுடைய வசதிக்காக தூத்துக்குடித் துறைமுகத் தேர்தலில் குறுக்கிடுகிறார்கள் கடத்தல் மன்னர்களான மஸ்தானும், திரவியம் அண்ணாச்சியும். பம்பாயில் வேலை பார்க்கும் பஞ்சாபி கஸ்டம்ஸ் அதிகாரியின் கெடுபிடியால் தங்களுடைய பிஸினஸை அப்படியே தூத்துக்குடி பக்கம் திசை திருப்பி விட்டு எளிதாகக் கடத்தல் வேலையை முடிக்க எண்ணி மூன்று பிரிவுகளுக்கும் நடுவில் சமரசம் செய்து வைத்து, பெரிய பர்லாந்தின் தலைமையில் தங்கள் தொழிலைக் கவனமாக நடத்திக் கொள்கிறார்கள். சமுத்திரத்தின் புத்திசாலித்தனமான திட்டங்களால், தொழிலும் வெற்றிகரமாக நடக்கிறது. பணமழை கொட்டுகிறது. இதனால் கொடிமரத்துக்குச் சமுத்திரத்தின் மேல் இருக்கும் வெறுப்பு இன்னமும் கூடுகிறது. பர்லாந்து சகோதரர்கள் நடுவில் சமரசம் பேச உதவும் ஜவுளி வியாபாரி காக்காவும் தன்னுடைய ஆதாயத்தை மனதில் வைத்தே செயல்படுகிறார்.
கொடிமரத்தின் மனதில் ஓடும் வன்முறைச் சிந்தனைகளுக்கு ஏற்ப அவன் பன்றிகளைக் கொல்லும் வன்முறைக் காட்சிகளும் அமைந்துள்ளன. அவனுடைய கொடூரமான மனம் இதில்தான் திருப்தி அடைகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதுவும் கடாப்பாண்டி, கொடிமரத்திடம் தன்னந்தனியாக மாட்டி உயிரை விடும் சம்பவம், மிகவும் கொடூரமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. ஒரு பன்றியைக் கொல்வதுபோலவே அந்த இளைஞனும் கொல்லப்படும் காட்சி வர்ணிக்கப்பட்ட விதத்தால் நம் கண் முன்னே நிகழ்வதுபோலவே இருக்கிறது. கண்டதுண்டமாக வெட்டப்பட்டு, அவனுடைய உடல் கூறுகள் பன்றிக் கறியோடு கலக்கப்பட்டு விநியோகிக்கப் படுவது கொடூரத்தின் உச்சம். அதுவும் கடாப் பாண்டியின் காதலி ஜெசிந்தாவின் வீட்டில் அந்தக் கறி சமைக்கப்படும்போது நமது மனமும் பதைபதைக்கிறது. ஆனால், ஜெசிந்தா, சமைக்கப்படும் உணவிலிருந்து மனிதக் கண்ணை அடையாளம் கண்டுபிடித்து எடுத்துப் பத்திரப்படுத்தி மனப்பிறழ்வு அடையும் தருணம், நம்மையும் வருத்தத்திற்கு ஆளாக்கத் தவறுவதில்லை.
கடாப்பாண்டியின் தந்தை, ஜெசிந்தாவிற்கு ஆதரவு தர முன்வந்து தன் வியாபாரத்தைத் தொடரும் நிகழ்வு என் மனதை நெகிழ வைத்தது. இந்தக் கதையுடன் வரும் கிளைக் கதைகளாக ரோசம்மாவின் மகன் ஜான், மகள் பனிமலர் இவர்களுடைய காதல் கதைகள் வருகின்றன. ஜான் காதலிப்பது பெரிய இடத்துப் பெண்ணான அமலியை. பெரிய பர்லாந்தின் ஒரே வாரிசு அமலி. திருட்டுத்தனமாக இவர்களுடைய காதல் ஒருபக்கம். இன்னொரு பக்கம் பனிமலர் காதலிப்பது ஜானின் நண்பனான ராமை. தன்னை விட வயதில் இளையவனைக் காதலிக்கும் கட்டாயத்திற்கு ராமால் தள்ளப்படும் பனிமலர், ஒரு கட்டத்தில் தந்தை மரியதாஸுக்காகக் காதலைத் துறந்து வேறொரு திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிப்பதும் கதையின் திருப்பம்.
ராமின் தந்தையும் கஸ்டம்ஸ் அதிகாரியுமான ஞானவேல், தனது குடும்பத்திற்குத் தரும் தொந்தரவுகளால்தான் பனிமலர் இந்த முடிவுக்குத் தள்ளப்படுகிறாளா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பனிமலரின் தாய் ரோசம்மா மீது கஞ்சா விற்பதாகப் பொய்க் கேஸ் போட வைத்துவிட்டுப் பின்னர் வருந்தும் கதாபாத்திரமாக ஞானவேலின் நடவடிக்கைகள் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி பகுதிக்கே உரிய வட்டார வழக்கு, கிறித்தவர்களின் வாழ்க்கை முறை, பன்றிக்கறி உணவு சமைக்கப்படும் விதம், சிறுவர்களின் கூலிப்படையின் கொலை முயற்சிகள், மக்ரோன் தயாரிக்கப்படும் விதம், பனிமய மாதா தேவாலயத்தின் வர்ணனை, உயர்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை முறைகள், வக்கீல் சுப்பிரமணியத்தின் கயமை அனைத்துமே கதைக்குப் பொருத்தமாகக் கதை முழுவதும் ஆங்காங்கே தூவப்பட்டுள்ள விதம் கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
பெரிய பர்லாந்தின் மனைவி ரஞ்சிதக்கனி கொல்லப்படும் காட்சி நமது கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது. அதேபோல கடாப் பாண்டியின் தந்தை மாடசாமியின் சாவும் மனதைப் பாதிக்கிறது. குரூஸ், பின்புறத்தில் வெட்டு வாங்கி, வலியில் துடிதுடித்துச் சாவதும் கொடூரத்தின் உச்சம். சாதாரணமாக அதிக வன்முறை கலந்த கதைகளைத் தவிர்க்கும் நான், இந்தக் கதையை எப்படிப் படித்தேன், அதுவும் தொடர்ந்து எப்படிப் படித்தேன் என்று புரியவில்லை. எழுத்தாளரின் எழுத்து வன்மை, என்னைக் கதைக்குள் இழுத்துப்போட்டுப் படிக்க வைத்ததென்று எண்ணுகிறேன். இதோ, அடுத்த பாகத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். “நீ வேட்டையாட முடிவு செய்துவிட்ட விலங்கின் மீது அன்பை வளர்க்காதே” “காதலும் காமமும் பகையை அணைக்கும், சில நேரம் பகையை அழைக்கும்” இவைபோன்ற மூர்க்கர்களின் கருத்துகள், ஒவ்வோர் அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளன. இவ்வளவு அதீத வன்முறைக் காட்சிகள் கதைக்குத் தேவையா என்பதை ஆசிரியரே முடிவு செய்து கொள்ளட்டும். ஆனால், இந்த வன்முறைக் காட்சிகளே, இந்தக் கதை ஒரு நல்ல வெப்சீரீஸாக வரும் வாய்ப்பை உருவாக்குகின்றன. தமிழில் ஒரு நல்ல வெப்சீரீஸாக இந்த நாவல் வெளிவரும் என்று நம்புகிறேன்.
அடுத்ததாகக் காமம். இதைப்பற்றி என்ன எழுதுவதென்று புரியவில்லை. கதைக்களத்துக்குத் தேவையாக இருக்கிறது என்கிற வாதத்தை வைத்தாலும், கதையில் வரும் பெரும்பான்மைப் பெண்கள், நடத்தை தவறுபவர்களாகக் காட்டப்படும் விதம் சற்றே மனதை நெருடுகிறது. பணத்திற்காகவும், குடும்ப சூழ்நிலைக்காகவும் தவறு செய்யும் அளவு பலவீனமான பெண்களைக் காட்டிய ஆசிரியர் அடுத்த பாகத்தில் ஒரு நல்ல உறுதியான பண்புகள் உள்ள பெண்ணைக் காட்டி என் மனக்குறையைத் தீர்ப்பாரென்று நம்புகிறேன்.
ஆங்காங்கே சொற்களின் அமைப்பில் பிழைகள் தென்படுகின்றன. ஒரே சொல் உடைந்தும், இரண்டு மூன்று சொற்கள் சேர்ந்து ஒரே சொல்லாகவும் வருகின்றன. அடுத்த பதிப்பில் இந்தப் பிழைகள் திருத்தப்படும் என்று எதிர்பார்க்கிறேன். விறுவிறுப்பான கடற்கரைப் பகுதிக் கதையை சுவாரஸ்யமாகப் படைத்த ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது போன்ற யதார்த்தமான கதைகளைத் தொடர்ந்து படைத்துப் பேரும், புகழும் பெற வாழ்த்துகிறேன்.