ஸ்ரீதர் மணியன்
எழுத்தாளன் சமூகத்தில் உள்ள மற்ற மனிதர்களிலிருந்து மாறுபடுகிறான். தனது படைப்புகளின் வாயிலாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்திற்கு ஏதேனும் ஒன்றைத் தெரிவிக்க விழைகிறான், அது பல கூறுகளையும், கூற்றுகளையும் உள்ளடக்கி பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது. அவ்வாறே அன்பாதவன் தனது ‘வேதாளம் விளம்பிய சூதாட்டச் சருக்கம் என்ற தனது நூலில் சமகால அவலங்களை, இந்த இருபதாம் நூற்றாண்டிலும்கூட மாற்றமடையாது பல்வேறு வடிவம் கொண்டு செழித்துக் கொண்டிருப்பவற்றை வேதனையுடன் பதிவாக்கியுள்ளார்.
கதைகள், வரலாறு, ஊடகங்கள் என இதுகாறும் நாமறிந்த செய்திகளைத் தனது நூலில் அன்பாதவன் கதைகளாக உருவாக்கியுள்ளார். ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டத்தினை எவரும் விளையாடலாம். ஆனால் 3 சீட்டுகளை வைத்து மங்காத்தா விளையாடுவது குற்றம் என இதனைத் தடை செய்துள்ளது. மங்காத்தா மட்டுமே சூதாட்டத்தின் கீழ் வரும். 13 சீட்டுகளை வைத்து ஆடப்படும் ரம்மி சூதாட்டம் அல்ல, மாறாக அது தனி மனிதனின் திறமைகளை வளர்த்தெடுப்பது என்ற தீர்ப்பினை நூலாசிரியர் கட்டமிட்டுக் காட்டியிருப்பது இக்கதைக்குக் கூடுதல் வலு சேர்க்கிறது. பன்னாட்டு ஊடகங்கள் நம் வீட்டின் அறைக்குள்ளேயே கால் மேல் கால் போட்டவாறு அமர்ந்துகொண்டு எண்ணற்ற குடும்பங்களின் கண்ணீருக்கும், சீரழிவிற்கும் காரணமாய் விளங்குவதை அன்பாதவன் பகடியுடன் கூடிய வேதனையுடன் கூறுகிறார்.
கட்டச் செய்தியாகக் காவல்துறை பாலத்தின்கீழ் சீட்டு விளையாடியதாகச் சிலரைக் கைது செய்து அவர்களிடமிருந்து 350 ரூபாயைக் கைப்பற்றியதாக அறிவித்தது என்னும் செய்தி நகை முரணாவது சிறப்பு, பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாக அதிகார வர்க்கம் செயல்படுகிறது என்னும் கூற்றிற்கு ரம்மி விளையாட்டுக் கதை வலுச்சேர்க்கிறது, குடி குடியைக் கெடுக்கும். புகைப்பது உயிரைக் கொல்லும் என எதுகை மோனையாக விளம்பரம் செய்துவிட்டு மறுபுறம் அந்த வருவாயில் நிர்வாகத்தினை நடத்தும் அவலத்தினையும் நம் நாட்டில் ஒருங்கே காணலாம். பசி என்னும் புனைவு இந்த நூலில் மாறுபட்டதாக இருப்பது கவனிக்கத்தக்கது. இக்கதையில் வரும் கதை நாயகிக்குப் பெயரேதுமில்லை. அவள் ஒட்டுமொத்தப் பெண்ணினத்திற்குப் பிரதியாகிறாள். கலாச்சாரக் காவலர்களுக்கு இப்புனைவு மிக்க அதிர்ச்சியினை அளிக்கக்கூடும். பெண்களுக்கான வரையறைகளும், எல்லைக்கோடுகளும் ஆண்களாலேயே பன்நெடுங்காலமாக வகுக்கப்படுகின்றன.

பெண் என்பவளை முறையாகக் கையாளத் தெரியாத ஆணினம் அவளைக் கடவுளாக்கி, புனிதம் என்னும் விலங்கிட்டு வைத்திருப்பதே எதார்த்தம், நடைமுறை. அத்தகைய கையாலாகாத நிலையில் அவள் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கக்கூடுமென்ற அச்சமே இதற்கான அடிப்படைக் காரணமாகிறது. இக்கதை குறித்துத் தோழர் அம்பிகா குமரனின் அணிந்துரை சிறப்பானது. பல இடங்களில் நூலாசிரியர் பாரதி தொடங்கி சமகாலக் கவிஞர் வரை பலரது கவிதைகளைப் பொருத்தமாக புகுத்தியுள்ளார். இவ்வாறே பெட்டிச் செய்திகள் கட்டமிடப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.. இலக்கியவாதிகள் இலக்கிய வியாதிகளாக்கப்பட்டுள்ளது சுவையினையும், வேதனையையும் தரவல்லதாக அமையப் பெற்றுள்ளது.ராணிப்பேட்டை என்னும் பெயர்க்காரணம் பொதுவில் முகலாய அரசிகளுக்கானது என்பதே பரவலாக அறியப்பட்டது. ஆனால், அன்பாதவன் வாசகனுக்கு அதன் வரலாற்றுப் பின்னணியினை அற்புதமாக விளக்கிக் கூறுகிறார்.
ராஜா தேசிங்கு என நாம் கூறி வரும் அவனது பெயர் தேசிங் எனப் பிரித்தறிய வேண்டும் என்னும் செய்தியும் புதுமையானது. ஆற்காடு நவாபின் முன்னிலையில் போரின் கொடுமைகள் குறித்த அவளது கருத்து எக்காலத்திற்கும் பொருத்தமுள்ளது. “ராஜாக்களே, இனியாவது கேட்பீரா? உயிர்கள் பலவற்றை எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அழிப்பதே யுத்தம். உலக மகா போர்கள். இவற்றால் யாருக்கு லாபம், ஆயுத வியாபாரிகளுக்கல்லவா…சாமானியனுக்கு, எளியவனுக்கு எதிர்காலம் பெருவினாக் குறியல்லவா… தங்களது ஆயுதங்களைச் சந்தைப்படுத்தச் சண்டைகளைத் தூண்டி வளர்க்கும் வல்லரசுகளையும், வியாபாரப் பெருமுதலைகளையுமே நோக்கி அவள் இவ்வினாக்களைத் தொடுக்கிறாள். வெற்றி பெற்ற வீரர்களின் வெறிக்கு முதல் பலி எக்காலத்திலும் பெண்களே. நாங்கள் உயிர் வாழ்ந்து தகப்பனறியா மகவுகளை வளர்த்தெடுக்க வேண்டுமா? என வினாவும் அவளது குரலுக்கு இக்கணம் வரை விடையில்லை என்பதே கசப்பான உண்மை.

அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படும் அரசியல் சாணக்கியர்களையும், அவர்களுக்குத் துதிபாடித் திரியும் அதிகார வர்க்கத்தினரையும் பஞ்சபூதங்களாக்கி, அவற்றிற்குப் பொருத்தமான ஐந்து நிகழ்வுகளையும் இணைத்து கட்டுரையா? கதையா? என வினாவினை எழுப்பவொட்டாது வாசகனுக்கு அளித்திருக்கிறார் அன்பாதவன். நாற்காலியினைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பதே அரசியல் பிழைப்போருக்கு அறம் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டும் நிகழ்வுகளை இதில் காணலாம்.
2015ம் ஆண்டு சென்னை மாநகரைப் புரட்டிப் போட்டு மாநரகமாக்கிய இயற்கைப் பேரிடர் குறித்த பகுதியாக பஞ்சபூதங்களில் நீர் என்னும் தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல ஓவியரான புகழேந்தியின் நேர்காணலாக இது நூலில் உள்ளது. இயற்கைப் பேரிடர் என்பது இயற்கையால் ஏற்பட்டது அல்ல, மனிதர்களால் ஏற்பட்ட பேரழிவு. மனிதனின் மிதமிஞ்சிய தன்னலமும், பேராசையும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் போதாமையுமே இந்தப் பேரிடருக்கு அடிப்படைக் காரணம் என்பதைப் புகழேந்தியின் பார்வையாக அன்பாதவன் பதிந்துள்ளார்.
போபால் பேரழிவு, மும்பைத் தாக்குதல் என நிகழ்வுகள் இப்பகுதி விரிவடைகிறது. குத்துவிளக்கு குத்தும் விளக்காகப் பரிணாமம் பெற்று மூடநம்பிக்கையினை வளர்த்தெடுக்கும் மூடர்களை வதைப்பதை இங்கு காணலாம். ஆறு குழந்தைகளை விட்டுச் சென்ற மனைவியின் நிலையைப் புரிந்து கொள்ளாத கணவன் பிரசன்னம் பார்ப்பது நகைப்புக்குரியது. கல்வியறிவு மேம்பட்டுக் காணப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தன் பகுத்தறிவின் வாயிலாகத் தனது பிரச்சினைகளுக்குத் தீர்வினைத் தேடாது பேயோட்டி ஏய்த்துப் பிழைக்கும் மந்திரவாதியிடம் தீர்வுள்ளது என எண்ணுவது எத்துணை மூடத்தனம் என்பதனை இக்கதையின் நாயகி போட்டுடைக்கிறாள். இன்னும் பெண்களின் வீரத்திற்குச் சிறப்புச் செய்யும் ஒபாவ்வா, ஜான்சி ராணி உள்ளிட்ட புனைவுகளும் சிறப்பாக அமைந்துள்ளன.
குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த வக்கிர மனங்கள் பகுதியில் வைர மோதிரத்தை மலத்திலிருந்து எடுக்கும் பெண் தனது கணவரிடம் கூறும் சொற்கள் உற்று நோக்கத்தக்கவை. சாதி தழுவிய நிகழ்வுகளை அன்பாதவன் படைப்புகளாக்கியுள்ளார். இத்தகையவை புனைவுகளாக்கும் தருணம் அவற்றின் லயம் சற்று தவறினாலும் அவை சாரமற்ற கட்டுரைகளாகிவிடும். படைப்பாளியின் அவலக்குரலாகவே இந்த நூலைப் பார்க்க வேண்டும். படைப்பாளியின் ஆழ்மனத் துயரங்களை இந்நூல் பிரதிபலிக்கிறது என்பது கண்கூடு. சமூக அவலங்களே இதன் அடியோட்டம், எளிய மனிதர்களின் நடைமுறை வாழ்வும், அவர்களின் மீதான வலிவுள்ளோரின் அடக்குமுறையையும் சமூகப் பிரக்ஞையுடன், நூலில் வேதாளர் குறிப்பிட்டதுபோல் இலக்கியவாதியாக அணுகியுள்ளார் அன்பாதவன். தனது படைப்புகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவரது இந்நூலை வேரல் பதிப்பகம் பதிப்பித்துள்ளது.
