ஸ்ரீநிவாஸ்பிரபு
கையில் கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் கிடப்பில் போடாமல் உடனே வாசிக்கத் தொடங்குவதைத் தவிர வேறொன்றியாத தந்தைக்குத் தனது சிறுகதைத்தொகுப்பைச் சமர்ப்பித்தவாறு தொடங்குகிறார் அல்லி உதயன்.

பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்று விளம்பரங்களில் சொல்லப்படுவதைப் போலவே தேர்ந்த படைப்புகளும் அவ்வாறே வெளிவரும். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், ஜெயந்தன், பூமணி, பா.செயப்பிரகாசம், வண்ணநிலவன், வண்ணதாசன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், ம.காமுத்துரை,சு.வேணுகோபால், சாருநிவேதிதா என்று நீளும் பட்டியலில் படைப்பாளிகளின் பெயர் ஞாபகத்திற்கு வரும்போதே அவர்களின் முத்தாய்ப்பான (முத்திரை) படைப்புகளும் நினைவுக்கு வரத் தவறுவதே இல்லை. இதுவே படைப்பு, படைப்பாளி இருவருக்குமான வெற்றி. அதே நேரம், படைப்பாளியின் அதீத உழைப்பினால் நினைவில் நிற்கும் அளவுக்கு மிளிரும் படைப்புகளும் வெளிவருவதுண்டு. அல்லி உதயனின் படைப்புகள் இரண்டாவது வகையைச் சார்ந்தவை தனது சொந்த அனுபவங்களின் வழியாக, தான் சந்தித்த மனிதர்களையே கதாபாத்திரங்களாக உருமாற்றி அவர்களுடைய அனுபவங்களின் சாரத்தைத் தனது படைப்புகளில் பிழிந்து தரும் கலைஞராக இருக்கிறார்.
துணைநலம் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பல கதைகள் வாசகர் பரப்பில் பத்திரிகைகளில் இடம் பெற்ற கதைகளாகவே இருந்தபோதும், வாழ்வாதாரங்களை இழந்து விட்டிருந்த போதும் அதீத நம்பிக்கைகளின் விளைவாக இருந்த வாழ்வாதாரங்கள் அனைத்தையும் தங்களுக்குத் தொடர்பில்லாத கடை, வியாபாரம் போன்ற முயற்சிகளில் தொலைத்துவிட்டுத் தற்கொலைதான் வழி என்று வாழ்க்கையை முடித்துக்கொள்ள கிணறு தேடி அலையும் குடும்பமொன்றின் மனநிலையைக் காட்டுகிறது ‘பிடிமானம்‘ சிறுகதை.
தங்களைப்போலவே தற்கொலை செய்து கொள்ளவரும் ஓர் இளம் காதல் ஜோடியைத் தற்செயலாகப் பார்த்துப் பேசி பரஸ்பரம் ஒருவர் இழந்த நம்பிக்கையை மற்றவரிடமிருந்து பெற்றுக் கொண்டு மீண்டும் வாழத் திரும்பும் குடும்பத்தின் கதை வாசகன் மனதில் பெருத்த நம்பிக்கையை விதைக்கச் செய்கிறது. வாழ்க்கையை முடித்துக் கொள்ள வந்த இடத்தில் வாழ்க்கை மீதான ஒரு பிடிமானம் ஏற்படும் அந்த இடம் கவனிக்கக்கூடியது. அந்தச் சரடுதான் படிப்பவர் மனதை யோசிக்க வைத்து கட்டிப்போடுகிறது. வாசகனைக் கட்டிப்போடும் எழுத்துகள் என்று பேசுவதும், நினைத்துக்கொள்வதும் தமிழ் கூறும் நல்லுலகில் நிகழ்கிற ஒன்றுதான். மனப்பரப்பில் கட்டற்ற முறையில் குவியும் சொற்களைப் பொருத்தப்பாட்டுடன் பயன்படுத்துவதில்தான் ஒரு படைப்பாளியின் வெற்றி அடங்கியிருக்கிறது. அந்த வகையில் அல்லி உதயன் வெற்றி பெறுகிறார்.
சிறுகதையின் வடிவம் என்பது படைப்பிலக்கியக்காரனுக்குத் தனியே வாய்க்கப்பட்ட ஒன்று. தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட வாசகனைத் தன்னுள் ஐக்கியப்படுத்திச் சொல்லும் கதைகள் எப்போதும் தனித்த அடையாளத்தைப் பெற்றவையாகவே இருந்து கொண்டிருக்கிறது. அப்படியான ஓர் அடையாளத்தைக் காட்டுகிறது ‘உபதேசம்‘ சிறுகதை.
பக்கத்து வீட்டு நண்பனின் மகள் சாதி விட்டு சாதி காதலித்துத் தகுதிக்குச் சற்றும் பொருத்தமில்லாதவனோடு ஓடிப் போனதை அறிந்து நண்பனுக்கு ஆறுதல் சொல்ல எத்தனிக்கையில் தன் மகளும் அதே போலதான காரியத்தில் இறங்கியதை அறிந்து அதிர்ந்து இனி எந்த முகத்துடன் ஆறுதல்/உபதேசம் செய்வது என்று கணவன் கலங்கி நிற்கும்போது, அதுவரை கேவலமாகப் பேசி வந்த மனைவி ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்குத்தான் தெரியும் என உபதேசிப்பது நடைமுறை யதார்த்தமாக நீள்கிறது, சொற்களின் பணியாள் என்கிற புரிதலுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அல்லி உதயன் கதைகளில் தனது சமுதாய மக்களின் அனுபவங்களை நேரடியாகப் பார்த்து எதிர்வினைகளாற்றியும் இணக்கமாய், எதிர்நிலை எடுத்தும் வினை புரிகிறார். சிறு சம்பவம்தான் மொய் வைத்து எடுத்து எனத் தொடரும் சடங்கு முறைதான்; அதனுள் இருக்கும் வாழ்வியல் சிக்கலைப் பேசுகிறது கதை.

ஒரு சமுதாய மக்களின் மனதில் ஊறிப் போன சம்பிரதாயம் எத்தனை ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதைச் சொல்கிறது ‘பதிலுக்குப் பதில்’ கதை. எதிர் விளைவு கதையில், தானிய மூட்டைகளைக் கிராமங்களில் அலைந்து வாங்கி கமிஷன் மண்டிக்கு அனுப்பவரும் நரேந்திரனுக்கு சோதனையாய் எழுகிறது அனுபவம். ஒரே ஒரு டீ குடிக்கவும் வழியில்லாமல் கடை கண்ணி ஏதுமில்லாத ஒரு குக்கிராமத்தில் சிக்கிக் கொள்கிறான். வேலை முடியவே மாலை ஆகிவிடுகிறது. அதற்குமேல் மறுபடி பசிக் களைப்புடன் மூன்று கிலோமீட்டர் நடந்து போய் மெயின் ரோட்டில் பஸ் பிடித்து நகரத்துக்குப் போவதற்குள் மயங்கி விழ நேருமோ என்று அஞ்சி நிற்கிறான். அந்த நேரத்தில் தானியத்தை விற்பதற்குத் தன்னைக் கிராமத்திற்கு அழைத்திருந்த விவசாயியின் வீட்டில் மதிய உணவு தயாரித்து முடித்தபின் சாப்பிடுமாறு அழைக்கிறார். ‘இந்த ஊர்லதான் டீக்கடைகூட இல்லையே? எந்த சால்ஜாப்பும் சொல்லித் தப்பிக்கமுடியாதே?’ என்று சொல்லிச் சிரிக்கிறார் விவசாயி. அந்த அன்புத் தூண்டிலில் கட்டுண்டு போகிறான் நரேந்திரன். மனிதர்களின் குணங்களும், நிறங்களும் எப்போதும் தனித்துவமானவை என்பதைப் பட்டவர்த்தனமாக்குகிறது கதை.
உரியதைச் சேர்த்துக் கலவையாய்த் தருவதில் தான் எதிலும் எப்போதும் சுவை அடங்கியிருக்கிறது என்று சொல்வதுண்டு. அப்படியான ஒரு தனிச்சுவையைக் காட்டுகிறது ‘பேரம்‘ சிறுகதை. செங்காளியப்பனுக்கும் குப்பாத்தாளுக்குமான குடும்பச் சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை நீண்டு போகிறது. குப்பாத்தாளின் தாயும் அண்ணனும் ஒரு புறம் நிற்க, செங்காளியப்பன் அவர்களைத் தெனாவட்டாக எதிர்கொள்கிறான். போலீஸ் ஸ்டேஷனில் காத்திருக்கையில் இதை முடிச்சுத் தரேன் என்று எதிர்ப் படுகிறான் ஒரு கரை வேட்டிக்காரன். அவர்கள் கையிலிருக்கும் பத்தைம்பதுடன் சம்மதிக்கிறார்கள். தங்களுக்கு உதவ வந்ததுபோலவே கரை வேட்டிக்காரன் செங்காளியப்பனுடனும் பேசுவதைக் கவனித்து மருகுகிறாள் குப்பாத்தாளின் தாய். கரை வேட்டிக்காரன் தனது ஆசை வார்த்தைகளால் நைச்சியமாகப் பேசிப் பேரத்தை நீட்டிச் செல்கிறான். எளிய மனதிர்கள்தான் எப்போதும் தாக்குதலுக்கு ஆளாகக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது கதை.
வயதான தம்பதியின் வாழ்வியலை முன்வைத்துப் பேசும் கதையாக வெளிப்படுகிறது எம்.ஜி.ஆர் பாட்டுக் கதை. எம்.ஜி.ஆரின் மேனரிசத்தைக் கடைப்பிடிக்கும் முனியப்பனும், வேலாண்டியும் ஊரில் சதா சண்டை சச்சரவு என்று கண்டபடி கைகலப்பில் இருக்கும் வயதான தம்பதிகளைப் பிரிப்பதையே தினசரி வேலையாகக் கொண்டு இருக்கிறார்கள். தினமும் கிழவனும் அவனோடு சரிசமமாய் மல்லுக்கு நிற்கும் கிழவியும் வயோதிகம் கண்டவர்களாக இருந்தாலும், ஏதோஒரு புள்ளியில் இருவரும் தினசரி சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். தெரு ஜனங்கள் வேடிக்கை பார்க்க தினசரி நடக்கும் கட்டைப் பஞ்சாயத்து அன்றாட வாடிக்கையாகவே இருக்கிறது.
கிழவனுக்கும் கிழவிக்கும் குழந்தைகள் இல்லாமல் இருப்பதும், அதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் காலம் தள்ளி வருவதும், ஒரு கட்டத்தில் ‘எசக்கத்தப் பய’ என கிழவியும், ‘ஏலாத மிண்ட’ என்று கிழவனும் விளித்துக்கொள்வது அவரது தாம்பயத்தின் ஊடுபாவாக இருக்கிறது. எத்தனை விலக்கிய போதும், மீண்டும் தொடரும் தினசரி வாடிக்கை போலான சச்சரவுகளின் தொடர்ச்சி குறித்து எவ்விதக் கவலையுமின்றித் தொடரும் அவர்களது செயல்பாடு தனித்துவமானதாகவே இருக்கிறது. தொகுப்பில் மொத்தமாகப் பதினாறு கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் அதை வாசிப்பவர்க்கு ஏதோ ஒரு புள்ளியில் அவர்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும் சாத்தியங்களுக்கு இடமளித்துக்கொண்டே இருக்கிறது. அது ஒரு நிலைக்கண்ணாடியாகப் பிரதிபலித்துக்கொண்டே இருப்பதுதான் சிறப்பு.
அல்லி உதயனின் படைப்புலகம் எளிமையானது. உழைக்கும் வர்க்க அரசியலை உள்ளீடாகக் கொண்டிருப்பது. ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி நம்பகத்தன்மை மிக்க முறையில் எளிய மக்களின் வாழ்வியலைப் பேசும் கதைகளாக இருக்கிறது. சகமனிதர்களின் மீது நிரம்பித்ததும்பும் பரிவும் அக்கறையும் தனித்துவமான பார்வையும் அவரது ஒவ்வொரு சிறுகதையிலும் முன் வைத்தபடியே இருக்கிறது. அதுவே தனித்த அழகை தந்து நிறைக்கிறது.
