சிவசு
கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலை ஆகியோர், தம் பார்வையில் மார்க்சியச் சிந்தனைகளைத் துணையாக்கித் திறனாய்வில் ஈடுபட்டவர்கள், சி.சு.செல்லப்பா, அலசல் அணுகுமுறையில் அபிப்பிராயம் கூறியவர் மு.வரதராசன், அ.ச. ஞானசம்பந்தன் போன்ற கல்விப்புலத்தோரும் பிராட்லி, ஆபர்கிராம்பியை வழிமொழிந்தவர்கள். இருபத்தொன்றின் கால்பகுதியிலும், மார்க்சியம், பிராய்டியம், பெண்ணியம், தலித்தியம், சூழலியம் எனத் தமிழிலக்கிய ஆய்வாளர்கள் படிதாண்டாப் பத்தினிகள்தாம். அமைப்பியல், பின் அமைப்பியல், சிந்தனைகளை உள்வாங்கி, தாண்டி தத்துவம், உளவியல் மார்க்சியம் பெண்ணியக் கருத்துகளை வெளிப்படுத்திய யூலியா கிறிஸ்தேவா, நாவலாசிரியர், கலகச் செயல்பாட்டாளர். அவருக்கும், தனக்குமான, தொடரும் பல நிகழ்வுகளைப் பதிவிடுகிறார், நாவல், சிறுகதை, விமர்சன, ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய தமிழவன். தன்னை, யூலியாவின் வாழ்வுச் சம்பவங்களோடு, ஒன்றுபடும், வேறுபடும் இடங்களையும், ஒன்றி நின்றும் தள்ளி நின்றும், முன் வைப்பது தமிழவனின் தனித்தன்மை.

சசூர், லெவிஸ்ட்ராஸ், ரோலாண்ட் பார்த், தெரிதா பூக்கோ இவர்களை நினைக்காமல், அமைப்பியலைப் பேச முடியாது. யூலியா எழுதிய நூல், சீன நாட்டுப் பெண்களை, அவரனுப்பப் பெறுகிற தமிழவன், கணவர் செலின், பார்த் ஆகியோருடன் சீன தேசத்திற்கு யூலியா பயணப்பட்டு மக்களைச் சந்தித்ததை ஞாபகத்தில் கொள்கிறார். தானும் பார்த்தின் ‘ஆசிரியன் இறந்து போனான்’ எனும் கருத்தைக் கூறியதை, இருவருக்குமான ஆரம்பப்புள்ளி எனலாம்.
பல்கேரியாவிலிருந்து பிரான்ஸிற்கு நாவல் பற்றிய பிஎச்.டி ஆய்விற்குப் போகிறார். பிரான்ஸில் புரட்சியில் பங்கேற்கிறார். யூலியா, தான் பிறந்த தேசத்திலிருந்து, அந்நியராகப் பிரான்ஸ் போவதைப்போல, தமிழவனும், பாளையங்கோட்டையிலிருந்து, பெங்களூரு, வார்ஸா, ஆந்திரா என்று தமிழ்ப் பூமியிலிருந்து விலகி அந்நியராகவே இன்றும் வாழ்வதை இந்த நூல் கூறுகிறது. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் சரித்திரத்தில் படித்த நிழல்கள், ஜி.கே. எழுதிய மர்மநாவல், முஸல்பனி, வார்ஸாவில் ஒரு கடவுள், ஆடிப்பாவைபோல, ஷம்பாலா, ஏழு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், விமரிசன நூல்கள் என்று பல தளங்களில், மௌனி, புதுமைப்பித்தன் போல, புதிய புதிய சோதனைகளில் செயல்பட்டவர்.
தத்துவம், மொழியியல், உளவியல், பெண்ணியம் இப்படிப் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டவர் யூலியா. தமிழவன், 1970-களில் ‘ஸ்ட்ரக்சுரலிஸம்’ என்ற நூலை வெளியிடுகிறார். மொழியியலின் புதுப்பரிமாணத்துடன் மானிடவியலில் லெவிஸ்ட்ராஸ், இலக்கியத்திறனாய்வில் பார்த், மார்க்சியத்தில் அல்துஸ்ஸர் என்னும் பரப்பில், ‘ஸ்ட்ரக்சுரலிஸம்’ அமைந்திருந்தது. தெரிதா, லெக்கான், ஸிஸெய்க், பூக்கோ, சிந்தனைகளை விரித்து ‘அமைப்பியலும் அதன்பிறகும்’ நூலை எழுதியவர் தமிழவன்.
உலக இலக்கியப் படைப்புகள், விமர்சனங்களில் தோன்றிய மாற்றங்களை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. சீனப் பெண்களிடம் உரையாடியதால் ‘கலாச்சாரப் பெண்ணியத்தைக்’ கொண்டு வருகிறார் யூலியா. அதுபோலவே, பெண்ணியம், தலித்தியம் போன்ற தளங்களை முன்னிறுத்தியவர் தமிழவன். ‘சாமுராய், ‘பைசாந்தியத்தில் ஒரு கொலை’ என்ற புதுத் தோரணையில் நாவல்களைப் படைத்தவர் யூலியா. தமிழவனுடைய ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ தொடங்கி, ‘ஷம்பாலா’ வரை அனைத்து நாவல்களும் சமகாலப் போக்குகளை, தமிழில் கதைகூறும் போக்குகளை உள்வாங்கி, மாற்றி எழுதப்பட்டவை.
யூலியாவின் மொழி பிரான்ஸ், இங்கிலாந்தினருடையது. சமஸ்கிருதம் போன்றது, பழைமையானது தமிழ்மொழி. யூலியாவிற்குக் கிடைத்த மொழி வாய்ப்பு, தமிழவனுக்குக் கிடைக்கவில்லை. தமிழவனால், யூலியா பெற்ற அளவு, இதனால், உலக அங்கீகாரம் பெற முடியவில்லை. அதற்கான காரணங்களை நிரப்புகிறதாக ‘இடைவெளிகள்’ படிப்பவர்களிடம் எதிர்வினையை ஏற்படுத்துகின்றன. தமிழவனின் இந்த நூல்வழி, யூலியாவின் தனித்துவ, தைரியமான குணங்களைப் படிப்பவர்கள் அறியமுடியும். முனைவர்பட்ட வாய்மொழித் தேர்வில் யூலியாவிற்கும், நெறியாளர்க்கும் முரண்பாடுகள் உண்டாகின்றன. நாவல்களைத்தான் ஆய்விற்குரிய களமாகத் தேர்ந்தெடுக்கிறார். மார்க்சியத்தை வலியுறுத்துகின்ற நெறியாளரையே, கோபமாக ஏசிவிடுகிறார். பத்திரிகை ஆசிரியரான செலினைக் காதலித்து மணம் செய்தவர், தன் கணவரிடம் அன்பாகவே வாழ்க்கை நடத்துகிறார். தன் மகனை எல்லாவிதமான மனக்கஷ்டங்களுக்கு இடையிலும் உயிர்காக்கப் போராடுகிறார். சீனாவில், பெண்களிடம் உரையாடி, பெண்ணியத்தின், புதுமை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். போப் ஏற்பாடு செய்த கூட்டத்தில் மனதிடத்துடன், சொற்பொழிவு செய்கிறார். அவருடைய நாவல்களில், சமகால மனிதர்கள், மன உணர்வுடன் கலந்த நிலையில் படைக்கப்படுகிறார்கள்.

தமிழவனின் இந்தப் புத்தகம், யூலியாவைச் சுற்றியுள்ள, மேலை நாட்டினரின் செல்நெறிகளைத் தெரியப்படுத்துவதோடு பல்கேரியா, பிரான்ஸ், தமிழ்நாடு, கர்நாடகா, மலையாளம், ஆந்திர மாநிலங்களோடு, வாசகனை இணைத்துப் பார்க்கத் தூண்டுகிறது. நேரிடையாக விளக்காமல் இடைவெளிகளை ஏற்படுத்திவிட்டு, படிப்பவர்கள், தமிழ்நாட்டின் போதனையை உணர்ந்துகொள்ள வழிசெய்கிறது. பிரான்ஸில், யூலியாவின்,
பிஎச்.டி. தலைப்பு, நெறியாளருக்கும் அவருக்குமான, உறவுநிலையை வெளிபடுத்துகிறபோது, தமிழ்நாட்டின் தமிழ் முனைவர்பட்ட ஆய்வுப் போக்குகள், நெறியாளார் – ஆய்வாளர் நிலைப்பாடுகளைச் சொல்லாமல் சொல்லி விடுகிறது. தமிழவனின் நூல் ஆய்வாளர் ஆய்வுக் காலத்தில் உதவித்தொகை, முடித்தபின் கல்விப்புலங்களில் பணி இவற்றுக்காகச் செவ்வியல் இலக்கியத் தலைப்புகளாகவே தேர்ந்தெடுக்கப் படுகின்றன. பல்கலைக்கழக ஆய்வு நிறுவனங்களில், பால்வேறுபாடு, சாதிவேறுபாடு, பொருட்புழக்கம் போன்றவை, வருத்தமளிக்கக்கூடியதே. வாய்மொழித் தேர்வில் நெறியாளரோடு, யூலியா, முரண்பட்டுப் பேசினாலும், அவர்கட்குப் பல இடங்களில் வாய்ப்பேற்படுத்துகிறார்.
அறிவு, சிந்தனை போன்றவை மதிப்புடையதாக, அங்கு கணக்கில் கொள்ளப்படும். தமிழ்நாட்டில் ‘பதவி’யை மனதில் கொண்டே, ஆசிரிய – மாணவர் நெருக்கம் முக்கிய இடம் பெறுகிறது.கர்நாடகம், மலையாள மாநிலங்களில், உயர்கல்விப்புலத்தைச் சார்ந்தவர்கள், மேலைநாடுகளிலுள்ளதுபோலவே, படைப்பாளிகளாகவும், தத்துவவாதிகளாகவும், இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் துணைவேந்தர்கள் தமிழ்த்துறைத் தலைவர்கள்-மிகப்பெரிய இடைவெளி. மரபு இலக்கியங்களில் காட்டுகிற ஈடுபாடு, தற்காலங்களில் கல்விப்புலத்தவர்கட்கு இல்லை என்று இந்த நூல் சுட்டுகிறது. மிகவும் தொன்மையான மொழி சமஸ்கிருதத்திற்கு நிகரானது தமிழ் என்று பெருமை பேசிக் கொண்டிருந்தாலும், மேல்நோக்கிப் போகாதபடி தடுக்கிற சக்தி எது? திரையரங்குகளை நோக்கிப் போக வேண்டியதில்லை.
வீட்டிற்குள்ளேயே திரைப்படங்கள் புகுந்து வெறும் பிம்பங்கள் என்று உணராதபடிக்கு, உண்மை என்று மயக்கமூட்டுகின்றன. மக்கள் சேவை என்று கூறும் அரசியல் வாழ்வை மேற்கொள்ள, திரைப்பட நடிப்பு என்பது துணையாக நிற்கிறது. பாமர மக்கள் எல்லாரும் திரைப்பட மாயையிலிருந்து வெளியேற முடியாதபடி, கண்களை மூட வைத்துவிடுகின்றன.
அமைப்பியலுக்கு அடித்தளமிட்ட சசூர் முதல், யூலியா, காயத்ரி ஸ்பைவாக், அவர்கள் சிந்தனைவாதிகளாக, படைப்பாளிகளாக இருந்தாலும் அவர்கள் வாசிக்கப்படுகிறார்கள். விவாதிக்கப்படுகிறார்கள். தமிழில் மௌனி, புதுமைப்பித்தன் போன்றோர்கூட அண்மையில் வாசிக்கிற வரிசையில் வருகிறார்கள். தமிழ் மொழியில் எதையும் பரவலாகக்கொண்டு போகிறவர்கள் கும்பல் வாசகர்கள்தாம். அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் விருதுகள் உட்படத் தீர்மானிக்கிறவர்களாகத் திகழ்கிறார்கள். தீவிரமான படைப்புகள் பரவலான கவனம் பெறாதபடி நிறையத் தடுப்புச்சுவர்கள் இருக்கின்றன.தொல்காப்பியம், சங்க இலக்கியமரபு, இவை முன் வைக்கிற படைப்பியல் முறைகள் விமரிசன நோக்குகள், தமிழவனால் மேலே கொண்டுவரப்படுகின்றன. யூலியாவின் வாழ்க்கை நிகழ்வுகளோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிற தமிழவன் தனக்குரிய தனி இயல்புகளை நூலின் இறுதியில் பேசுகின்றார். யூலியா இலக்கிய விமர்சனத்தைக் குறைத்து மன அலசல் சிகிச்சை முறைதரும் அறிவுப் பயன்பாடு தமிழ்ச் சமூகத்திற்குப் பொருந்துமா?
பல்துறை அறிவோடு தொல்காப்பியத்தையும், யூலியாவின் சிந்தனைகளையும் தமிழவன் இணைப்பது முக்கியமான செயல். யூலியா, ஐரோப்பியக் கலாச்சாரத்தின் பிரமாண்டமான கொடை, காயத்ரி ஸ்பைவாக்கையும் ஒப்பிட்டால் தமிழின் உயரத்தைக் கணக்கிட்டு விடலாம். இவை முடிவான முடிவுகளைத் தருமா? விவாதம் எழுமேயானால் அதனால் பல நல்ல விளைச்சல்கள் ஏற்படலாம்.